Thursday, February 25, 2010
என்னத்தச் சொல்ல!
பொன்னும் மணியும் அலங்காரம்;
தங்கத்தில பல்கட்டிச் சிரிக்கச் சிரிக்கச் சிங்காரம்.
மிரட்டி மிரட்டி மொய் வாங்கினான்
மீசைக்கார மன்னாரு;
அரட்டி அரட்டி ஆள்சேத்தான்
அருவாக்கை அய்யாவு.
ஒத்துக்கிட்ட கச்சேரியை
ஒத்தி வெச்சிட்டு ஓடிவந்து
ஒத்துக்கு ஒத்தூதினார்
ஒல்லிக்குச்சி நாயனக்கார்;
பெரிய எடத்துப் பொல்லாப்பும்
பொச்சரிப்பும் நமக்கேன்னு
பொத்திக்கிட்டு தாளம்போட்டார்
வழுக்கத் தலை தவில் வித்வான்.
அசலூர்லேந்து ஓட்டிவந்த
சண்டிக்காரக் குதிரை ஒண்ணு
ஊர்வலம் போகையில ஒருக்களிச்சுப் படுத்துக்கிச்சு;
பட்டு வேட்டி சட்டையெல்லாம் புழுதியால கறைபடிய
பொக்கைவாய்த் தாத்தாவுக்குப் பொங்கி வந்துச்சு பெருங்கொபம்.
எல்லாக்கூத்தும் ஏறக்கட்டி எண்ணி எட்டு நாளாச்சு;
அடுத்த முகூர்த்தம் தேதி குறிச்சு, பந்தக்காலும் நட்டாச்சு!
Tuesday, February 23, 2010
லூஸுப்பெண்ணே! லூஸுப்பெண்ணே!!
இதே போல் எனக்கும் தோன்றி இருக்கிறது. அவருக்கே "லூசுப்பயல்" பட்டம் கிடைக்குமென்றால், பெண்ணான எனக்கு என்ன பட்டம் கிடைக்குமென்று யோசிக்கவே பயமாக இருக்கிறது.
அலுவலகத்தில் பக்கத்து சீட்காரர் இருக்கையை விட்டு எழுந்திருக்கையில் காலில் ஏதோ ஒயர் சுற்றி நிலை குப்புறக் கீழே விழுந்தார். பதறி எழுந்தாலும் அவரைக் கை கொடுத்துத் தூக்கி விடக் கைகளுக்குத் தயக்கம் வருகிறது. அதில் நியாயமும் இருக்கிறது.
ஏன் இந்த நிலை?
ஓர் ஆண் இதைச் செய்யும் போது அவனது மனிதாபிமானம் மட்டுமே தெரிகையில் ஒரு பெண் செய்யும் போது ஆயிரம் உள்ளர்த்தங்களும் பல்வேறு எதிர்பார்ப்புகளும் கற்பனைகளும் வருவதற்கான சாத்தியங்கள் இருப்பது வேதனையான விஷயம்.
ஒரு பெண்ணின் அருகாமை (அவள் வயது, அழகு பற்றிய கணிப்பெல்லாம் அவரவர் தனிப்பட்ட விஷயம்) ஏன் ஆண்களை ஒரு தனி தளத்துக்குக் கொண்டு சென்று விடுகிறது?
பெண்கள் மனதிலும் சில தேவையில்லாத accessories உண்டு.
ஒரு பெண்ணாகத் தான் அங்கீகரிக்கப் படுவதில், அழகு ஆராதிக்கப்படுவதில், பேதையென்று பரிவு காட்டப்படுவதில், குழந்தையென்று கொஞ்சப்படுவதிலெல்லாம் அவளுக்கு ஒரு மயக்கம் இருக்கிறது.
இது இயல்பு தானே. இதில் என்ன தவறு இருக்கிறது என்று தான் நானும் நினைத்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால், உண்மையில் அவள் அறிவுக்கு உகந்ததைச் செய்யவிடாமல் தடுப்பதும், சமூகத்தில் மதிப்பான அந்தஸ்தைப் பெற முட்டுக்கட்டையாக இருப்பதும் இந்த வெட்டிப் புல்லரிப்புகள் தாம்.
மேலும் அன்பு, கருணை, இரக்கம் ஆகிய குணங்கள் எல்லாம் பெண்களுக்கு இருக்க வேண்டும் ஆனால் அது அவர்களுடைய குடும்பம் என்ற அளவில் குறுகியே இருக்க வேண்டும். (தவறாகப் புரிந்து கொள்ளப்பட நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கிறதென்று அறிந்தே இதை எழுதுகிறேன்.)
சமூகத்தைப் பொறுத்தவரை இன்றும் பெண் என்பவள் நுகரப்படவேண்டிய ஒரு பொருள். அதை விடக் கொஞ்சம் நல்லதாக யோசித்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருள். இந்தக் கண்ணோட்டம் மாறும் போது பெண்களின் மனநிலையிலும் வரவேற்கத்தக்க மாற்றங்கள் நிறைய வரும்.
Monday, February 22, 2010
ஒருநாள் பழகினும்...
காலையில் கோவை சென்று இறங்கியதுமே என்னை அழைத்த விஜி, "உங்க காலெஜ் ஃபங்க்ஷன் முடிஞ்சதும் ஃபோன் பண்ணுங்க, நான் வந்து அழைச்சிட்டுப் போறேன்" என்றார். 'முகவரி சொல்லுங்கள் நானே வருகிறேன்' என்றதை அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
முதல்முறையாகப் பார்க்கப் போகும் தோழியை அழைத்துச்செல்ல நாலரை மணி வெயிலில்,ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு ஐந்தாறு கிலோமீட்டர் வந்ததை எண்ணி இன்னும் பிரமிப்பு விலகாமலே இருக்கிறேன்.
சிலரிடம் ஃபோனிலும் சாட்டிலும் நிறைய பேசி இருந்தாலும் முதல் முறை நேரில் பேசும் போது சிறிதளவு தயக்கம் ஏற்படும். விஜியிடம் அது இலல்வே இல்லாததால், எனக்கும் ஏற்படவில்லை.
சிறிது நேரத்தில் பூங்காவுக்குச் சென்ற குழந்தைகளை அழைத்துக் கொண்டு ராம் வந்தார். விஜியும் ராமும் உண்மையில் Made in heaven couple.
"அம்மா நான் ஊஞ்சல்லேந்து விழுந்துட்டேன்..." என்றாள் பப்பு.
"பார்க்குக்கு ஒண்ணும் ஆகலையேடா? அது பப்ளிக் ப்ராப்பர்ட்டி..பாத்து விளையாடும்மா..." இது தான் விஜி.
வர்ஷா அம்மாவுக்கு ஈடாகப் பளிச் பளிச் என்று பேசிக் கொண்டிருந்தாள்.
குழந்தைகளுக்குப் பொறுப்பான அம்மாவாக மட்டுமல்ல, நல்ல தோழியாகவும் இருப்பது எப்படி என்று விஜி க்ளாஸ் எடுக்கலாம். (எவ்வளவு லூட்டி அடித்தாலும் எட்டரை மணிக்குள் வீட்டுப் பாடம் முடித்து, சாப்பிட்டுத் தூங்கியும் விடுவார்களாம். என் நேஹாவை என்றைக்கு இப்படிப் பழக்கப் போகிறேனோ தெரியவில்லை.
வீட்டுப் புறா சக்தியை அலைபேசியில் அழைத்துப் பேச வைத்தார். மிகவும் கலகலப்பாகப் பேசினார். வர முடியாததற்கு உண்மையிலேயெ வருத்தம் தெரிவித்தார்.
ஆறரை மணிக்கு ஆரவாரமாக வந்தார் செல்வேந்திரன்.உடன் அவரது இனிய தோழி கேண்டி என்கிற திரு..வும். Cho chweet couple இவர்கள்.
செல்வேந்திரனை ஏனோ ரொம்பத் தலைக்கனம் பிடித்தவர் என்று எண்ணி இருந்தேன். நேரில் பார்த்துப் பேசியதும் 'ரொம்ப' அல்ல, இருக்க வேண்டிய அளவு தானென்று புரிந்தது! :)
சிறிது நேரத்துக்குப் பிறகு சஞ்சய் காந்தி வந்தார். கலகலப்பு அதிகமாகியது.
பதிவுலகம் மூலமே நண்பர்களாக ஆன இவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ சிறப்புகள் இருந்தும் சொந்தப் பெருமைகளைப் பேசுபவர்களாக இல்லாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பரஸ்பரம் அன்பையும் உற்சாகத்தையும் பரிமாறிக் கொள்ளவே நட்பு பாராட்டுகிறார்கள். Hats off to them!
அரட்டைக்கு இடையே விஜி அற்புதமாக இரவு உணவும் தயாரித்து முடித்தார். ராம் குழந்தைகளுக்கு உணவூட்டினார், மேஜையை set செய்தார். சாப்பிட்டு முடித்ததும், விடைபெற மனமில்லாமல் பேசிக் கொண்டு நின்ற எங்களிடம்,"பஸ் காலையிலயா" என்று கேட்டு நேரமானதை உணர்த்தினார் செல்வேந்திரன். பத்து மணியாகி விட்ட போதும் பஸ் கிளம்பும் வரையில் கூட இருந்து என்னை வழியனுப்பி வைத்தார் விஜி.
என் கல்லூரி மட்டுமல்ல, இவர்களின் அன்பும் இனி கோவையை என் மனதில் இருந்து என்றுமே பிரிக்க முடியாத ஊராக்கி விட்டது.
"ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே"
பெரியோர் என்று குறிப்பிட்டது கண்டிப்பாக என்னை அல்ல. அவர்களைத் தான்! :)
இன்னும் மீளாமலே...
கல்லூரி வளாகம் முழுதும் சுற்றிப் பார்த்து அறிந்த மாற்றங்களையும், மாறாத தோற்றங்களையும் விவரிக்கலாம்.
ஆனால், உள்ளே நுழைந்தவுடன் அந்தப் பூவரச மரங்கள் உதிர்த்த மலர்களின் வாசமும், ஒருவர் மறந்து மற்றவரிடமிருந்து மீட்டெடுத்த சின்னச் சின்ன நினைவுகளின் பரவசத்தையும், மறந்தே போயிருப்பார்கள் என்று நினைத்த எங்கள் பேராசிரியர்கள் பார்த்தமாத்திரத்தில் அடையாளம் கண்டு ஆச்சரியமும் சந்தோஷமுமாய் வாஞ்சையைச் சொரிந்த கணங்களையும் அவற்றின் முழுவீச்சும் வெளிப்படும்படி என்னால் எழுதவே முடியாது.
எங்கள் கல்லூரி மாணவர்களால் மட்டுமே முக்கிய வளர்ச்சி பெற்ற பாபா ஸ்டோர்ஸ் பாபா கிஃப்ட் ஆர்டிகிள்ஸ் கடை யொன்றும் திறந்திருந்தது.
பழமுதிர் நிலையம் இருந்த இடத்தில் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடை வந்திருந்தது. பார்த்தவிடமெங்கும் யூனிநார் விளம்பரங்கள்.
விடுதியில்: இறுதியாண்டு மாணவியர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
பார்வையாளர் கூடங்கள் கொசுவலைகள் அடிக்கப்பட்டு இன்டர்நெட் சென்டர் களாக மாற்றப்பட்டிருந்தன.
மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் மூன்று பேர் இருந்த அறையில் ஐந்து பேரும், ரீடிங் ரூம் எனப்படும் விஸ்தாரமான கூடமெங்கும் கட்டில்கள் போடப்பட்டு அங்கும் முப்பது மாணவியர் தங்கி இருந்தது கஷ்டமாக இருந்தது. இடநெருக்கடி சந்தேகத்துக்கிடமில்லாமல் இருந்தது. புதிய விடுதி அறைகள் கட்டும் பணி விரைவில் நடக்கப் போவதாகக் கூறினார்கள்.
எல்லோர் கையிலும் செல் ஃபோன்கள் இருந்தன. நாள்தோறும் மதியம் கடிதங்களும் கார்டுகளும் இறைந்து கிடக்கும் மேஜையில் பர்மிஷன் கார்டுகள் (ஊருக்குச் செல்ல)மட்டுமே வருவதாகக் கூறினார்கள்.
சிலர் அறைகளில் கம்ப்யூட்டரும் லேப்டாப்பும் கூட வைத்திருந்தனர்.
எல்லா அறைகளிலும் மின்விசிறி இருந்தது. (ஸாரி, இது ஓவர் தான், ஆனா நாங்கள் படிக்கும் போது இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன் யாரோ ஃபானில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்களாம்.)
Civil: நாங்கள் படித்த காலத்தில் மதிப்புக் குறைந்திருந்த பார்க்கப்பட்ட சிவில் துறை டாப் லிஸ்டில் இருந்தது. உண்மையில் இது தான் ரொம்பச் சந்தோஷமாக இருந்தது.(மேடையேறி அறிமுகப்படுத்திக் கொண்ட போது சிவில் என்றதும் கண்மணிகள் போட்ட கரகோஷமே அதற்குச் சான்று!)
ஆனால் நாங்கள் அத்துறையை விட்டு விலகி விட்டதைத் தெரிவித்த போது ஏமாற்றமடைந்தனர்.
இறுதியாண்டு சிவில் மாணவர்களில் பாதிப்பேருக்கு அதே துறையில் வேலை ஏற்கெனவே கிடைத்திருந்தது. மேலும் அவரவர் படிக்கும் பொறியியல் (core) துறையிலேயே வேலை பார்க்கும் ஆர்வம் அதிகம் உள்ளவர்களாகத் தெரிந்தார்கள். தயக்கமின்றி மேடையேறிப் பலரும் பேசினார்கள். (தமிழிலும் ஆங்கிலத்திலும்) எங்கள் காலத்தில் யாராவது ஒரு சிலரே இதற்குத் தயாராக இருப்பார்கள். அதுவும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர்கள் மட்டுமே.
ஆர்க்கெஸ்ட்ரா: இதைப் பற்றிக் கேட்டதுமே மற்ற மாணவர்கள் உற்சாகமாகப் பேசினார்கள். பல போட்டிகளில் கலந்து கொண்டதாகவும் எல்லாருமே ரொம்பவும் திறமைசாலிகளாக இருப்பதாகவும் சொன்னார்கள். பூட்டியிருந்த அந்த அறைக்குள் செல்ல நான் விரும்புவதாகச் சொன்னதும் ஓடிப்போய் சாவி எடுத்து வந்து திறந்தனர். பியானோ மட்டும் அப்படியே இருந்தது. நாங்கள் உபயோகித்த அந்த ட்ரம் செட் இல்லை. தங்கள் சொந்த கிட்டார், மற்றும் வயலின் வைத்திருந்தார்கள். ஏனைய கருவிகளை நிக்ழச்சிகள் நடத்தும் போது ஓரிரு வாரங்களுக்கு மொத்தமாக வாடகை எடுத்துக் கொள்வதாகக் கூறினார்கள். எங்கள் ஆசைக்காகக் "கரிகாலன் காலப் போல" பாட்டையும் அழகாகப் பாடிக் காண்பித்தனர்.
1970 களிலும் 80களிலும் படித்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து அளவளாவிக் கொண்டிருந்த போது கடந்த சில ஆண்டுகளில் படித்தவர்கள் சொற்பமான எண்ணிக்கை தான். அது ரொம்பவும் வெட்கமாகவும் வருத்தமாகவும் இருந்தது. அனைவரையும் ஒன்று திரட்டி திட்டமிட்டு ஒருமுறை வரவேண்டும் என்றி நினைத்துக் கொண்டோம்.
பெண்கள் விடுதி மாலை 6.30 மணிக்குப் பூட்டப்பட்டு விடும் என்ற விதியில் இம்மியளவும் மாற்றம் ஏற்படவில்லை! அடுத்திருக்கும் வேளான் பல்கலை வளாகமே தெரியாத அளவு அடர்ந்திருக்கும் மரங்களில் நிறைய வெட்டப்பட்டிருந்தன.
சிவில் துறை என்னதான் முன்னேறி இருந்தாலும் வேலைக்குத் தேர்வு செய்ய வரும் நிறுவனங்கள் இன்னும் பெண்களை உதாசீனப்படுத்துவது பத்து ஆண்டுகளாகியும் கொஞ்சமும் மாறாமல் இருப்பது நம்பவே முடியாத கொடுமை. "ABC யும் பாய்ஸ் மட்டும் தாங்கா எடுத்தாங்க. XYZ கம்பெனி எங்களை இன்டர்வ்யூவே அட்டென்ட் பண்ண விடலை" என்று அழாக்குறையாக மாணவிகள் சொன்ன போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் சொன்ன அதே வார்த்தைகள்.
இதற்குக் கல்லூரி நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து ஏதாவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை.
மாலை நான்கு மணிவரை கல்லூரியில் சுற்றி விட்டு ஒருவருக்கொருவர் விடைபெற்றோம். அதன்பின் நிகழந்தது இன்னொரு மறக்கமுடியாத அனுபவம். முன்பின் பார்த்தறியாத நபர் ஒருவரிடம் ஆண்டாண்டு காலமாய்ப் பழகியதே போன்ற உள்ளன்புடனும் உரிமையுடனும் பழக ஒரு சிலரால் தான் முடியும். விஜி ராம் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு தனிப்பிறவி. அவர்களைச் சந்தித்தது பற்றித் தனி இடுகையில்!
Thursday, February 18, 2010
பிரியாவிடை
கீழே நின்று துப்பாக்கியால் குறி வைக்கிறாய்
சுடுவதானால்...
என் கால்களைச் சுடு;
நான் தரையிறங்கவே விரும்பவில்லை
என் கண்களைச் சுடு;
அகக்கண்ணின் வழிகாட்டலில் காற்றின் திசையறிவேன் நான்
என் வயிற்றில் சுடு;
எரியும் இதயத்தின் குருதி குடித்துப்
பசியாறும் வழியறிவேன்
என் சிறகுகளை மட்டும் சுட்டுவிடாதே...
இன்னொரு யுகம் காத்திருக்க வேண்டும் நான்.
கல்லூரிக்குப் போகிறேன்!
காய்ந்து போன ரொட்டிகளும் உருளைக்கிழங்கு குர்மாக்களும் மணத்த மெஸ்ஸையும்,
எங்கள் காட்டுக் காட்டுக் கத்தல்களை அஞ்சா நெஞ்சுடன் தாங்கிக் கொண்ட ஆர்க்கெஸ்ட்ராவையும்,
கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொண்ட தேர்வுக் கூடங்களையும்,
ஏனென்றே தெரியாமல் மைதானத்தைச் தலை தெறிக்க ஓடுவது போல் என்னையும்,
இத்தனை வருடங்களாக நூறு முறையாவது கனவுகளில் பார்த்திருப்பேன்.
என் பதின்ம வயதின் முக்கியமான நான்கு ஆண்டுகளை நான் கழித்த இடத்துக்குக் கடைசியாகச் சென்றது, மதிப்பெண் சான்றிதழ் வாங்கத் தான். அதன் பிறகு எத்தனையோ தீபாக்களையும் கவிதாக்களையும், பாலமுருகன், சக்திவேல்களையும் உருவாக்கி விட்டுக் கம்பீரமாய் நிற்கும் என் கல்லூரியையும் பேராசிரியர்களையும் மீண்டும் ஒரு முறை நாளை காணப் போகிறேன்.
படபடப்பாக இருக்கிறது. சொல்லத் தெரியாத சிலிர்ப்பாகவும்!
நேஹாவை அழைத்துச் செல்ல மிகவும் விரும்பினாலும் நடைமுறைச் சிக்கல்களால் முதன் முறையாக அவளை விட்டுச் செல்கிறேன். அவள் அப்பாவுக்கும் All the best சொல்லுங்கள்! :-)
பெண்களே! தயவு செய்து பெற்றவர் பேச்சைக் கேட்காதீர்கள்!
"ஏய் சாப்ட்டியா? அண்ணன் தட்டையும் சேர்த்து எடுத்துட்டுப் போ."
"போதும் நீ படிச்சது. இதைப் போல நல்ல வரன் இனிமே கிடைக்காது. உனக்கப்புறமும் ஒருத்தி இருக்கா கட்டிக் கொடுக்க. "
"மெட்ராஸ்ல போய் வேலை பார்க்கப் போறியா? ஒண்ணும் வேண்டாம். உனக்குச் சீதனமாக் குடுக்க நாங்க சேர்த்து வெச்சிருக்கறது போதும்."
"சதா என்ன புக் படிக்கற? போற இடத்துல சமைக்கத் தெரியலன்னு குட்டு வாங்கப் போற. வந்து இந்தப் புளியைக் கரைச்சுக் கொடு."
"உன் ஜாதகப்படி இருபத்தி ரெண்டு வயசுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணாட்டி அப்புறம் உனக்கு கல்யாணமே நடக்காதாம். அதனால இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கோ."
"அவன் எவ்ளோ நல்லவனா இருந்தாலும் சரி, உனக்குப் பிடிச்சிருக்கான்னெல்லாம் எங்களுக்குக் கவலையே இல்லை. நீ சாதி விட்டுக் கல்யாணம் பண்னனும்னு நெனச்சா நாங்க தற்கொலை பண்ணிக்குவோம்"
"என்ன எதுத்துப் பேசற? பொம்பளைப் பிள்ளைக்கு இவ்வளவு ஆங்காரம் ஆகாதுடிம்மா."
"எல்லாத்துக்கு அவன் கூடப் போட்டி போடற? அவன் ஆம்பளடி!"
"ஆம்பள துடைப்பத்தை எடுத்தா வீட்டுக்கு ஆகாது. தம்பி ரூமையும் கூட்டிச் சுத்தம் பண்ணு."
"ஹேய், தீட்டோட கிச்சனுக்குள்ள வராதே. போ கொல்லைப்பக்க ரூமுக்கு..."
ஆண்களுக்கு!
//"டேய்! பொம்மனாட்டியோட என்னடா சண்டை! பாவம் விட்டுக் கொடுத்துடு"//
வேண்டவே வேண்டாம். சண்டை போடுங்கள். :)
Tuesday, February 16, 2010
டாக்டர் ருத்ரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு - பாகம் 2
முதல் பகுதி இங்கே.
கேள்வி: ஆண் பெண் குழந்தைகள் வளர்ப்பில் நாம தான் வித்தியாசம் காட்டறோமா இல்ல அதெல்லாம் மரபணுக்களிலேயே வருவதா? இது பத்தி உங்க விளக்கம் என்ன டாக்டர்?
டாக்டர்: இதுவரைக்கும் நடத்திய பரிசோதனைகளில் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் விருப்பங்கள் வித்தியாசப்படும் என்பது தான் கணிப்பு. Even with the same set of toys, they'll have different preferences.
ஒரு ஆறு வயது ஏழு வயது ஆகும் போது நாம அவர்களை எப்படி நடத்தறோம், எந்த விதமான exposure குடுக்கறோம்ங்கறதைப் பொறுத்து அவர்களோட விருப்பங்கள் மாறலாம்.
கேள்வி: இந்த ஆண் பெண் சமத்துவம்கிறது எப்போ டாக்டர் சாத்தியமாகும்? சிலர் சொல்றாங்க, இது சாத்தியமே இல்ல. ஏதாவது ஒரு இனம் இன்னொண்ணை ஆதிக்கம் செலுத்தினாத் தான் எல்லாம் சரியா நடக்கும்னு.
டாக்டர்: கண்டிப்பா சமத்துவம் வரணும்; இப்போதைக்கு நம்ம நாட்டுல அது இல்ல. வீட்டு வேலைகளும் சமையலும் நம்ம வேலையும் தானனு (உதவி செய்றது மட்டுமில்ல) ஆண்களுக்கு எப்போ தோணுதோ அப்போ தான் வரும்.
கேள்வி: இதுக்குப் பெண்களால என்ன செய்ய முடியும்? இந்த எண்ணம் ஆண்கள் மனத்தில் வரணும்னா அவங்க எந்த விதத்துல போராடணும்?
டாக்டர்: பல காலமா அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் உரிமைக்காக்ப் போராடும் போது வேகம் வர்றது இய்ல்பு தான். ஆனா ஒரு விஷயம் கவ்னிக்கணும்.
அரசியல் புரட்சி ஏற்படணும்னா கூட மக்கள் மனதில் மாற்றம் முதல்ல வரணும். இது சமூகத்தில, குடும்பங்களில் ஏற்பட வேண்டிய புரட்சி. அதனால நிதானமா, பக்குவமா ஆண்களுக்குப் புரிதலை ஏற்படுத்தித் தான் சாதிக்க முடியும்.
கேள்வி: சரி, ஆண் குழந்தை வித்தியாசம் இருக்கு சரி But generally are we products of genes or environment? உதாரணமா, இப்போ பாரம்பரியமா ரொம்ப புத்திசாலியான பெற்றோருக்குப் பிறந்த குழந்தை ஒண்ணு சந்தர்ப்பவசமா ரொம்ப அறியாமையோட இருக்கற பெற்றோர் கிட்ட வளர்ந்தா இயற்கையா அதுக்கு இருக்கற புத்திசாலித்தனம் வெளிப்படுமா?
டாக்டர்: பிறக்கும் போது இருக்கக்கூடியது ஒரு basic capacity. ஒரு பாத்திரம் மாதிரி. அதுல நாம எவளோ போடறோம்கறதைப் பொறுத்துத் தான் அதோட வளர்ச்சி இருக்கும். அது வளர்ற சூழ்நிலையைப் பொறுத்துத் தான் அமையும்.
இயல்பான கொள்ளளவுங்கறது சில பேருக்கு அதிகம், சில பேருக்குக் குறைச்சல். குழந்தைக்கு இயல்பா எவ்வளவு கொள்ளளவு இருந்தாலும் சூழ்நிலை அமையலேன்னா வளர்ச்சி சாத்தியமில்லை.
அதே மாதிரி ஓட்டைப் பாத்திரமா இருந்தா எவ்ளோ தான் போட்டாலும் நிறையாது!
அதனால தான் சில பேர் தங்கள் குழந்தைகளை இஞ்சினியரிங் தான் படிக்கணும்னு போட்டுப் படுத்தி அவங்க ப்ரேக் டவுன ஆகறாங்க. அவங்களுக்கு அந்த விஷயத்தில aptitude ம் இருக்காது. ஆர்வமும் இருக்காது.
கேள்வி: சரி, சின்ன வயசிலயே ஒரு துறையில ஆர்வம் இருக்கா இல்லையான்னு எப்படிக் கண்டு பிடிக்கறது?
டாக்டர்: அது கஷ்டம்மா; நம்ம கல்வி முறையைப் பொறுத்த் வரைக்கும். இங்கே கல்வி முறையே ஞாபக சக்தியை முக்கியமா வெச்சுத் தானே இருக்கு. அது மாறணும் முதல்ல.
கேள்வி: இந்த left brain, right brain னு சொல்றாங்களே. சிஸ்டமாட்டிக் மூளை, க்ரியேட்டிவ் மூளை அப்படின்னு. அதை வெச்சு ஒருத்தரோட திறமையை அளவிட முடியுமா?
மூளையில நிறைய பகுதிகள் இருக்கு Fine motor areas, language areas னு லெஃப்ட் ரைட் பிரிஞ்சு தான் இருக்கு.
எல்லாராலையும் கவிதை எழுத முடியறதில்ல, அதை ரசிக்கவும் முடியறதில்ல. அந்தந்த மூளைப் பகுதி எப்படித் தூண்டப்படுதுங்கறது அப்படிங்கறதை வெச்சுத் தான், ஒரு குறிப்பிட்ட பகுதியில நியூரான்கள் எவ்வளவு செயலாக்கத்தோட இருக்குங்கறதைப் பொறுத்துத் தான் அந்த விஷயத்தில் ஈடுபாடும் திறமையும் இருக்கும்.
அப்புறம் தூண்டறதுங்கறதும் திணிக்கறது இல்ல.
ஒரு விஷயத்தைப்பத்தி ஆர்வம் உண்டாகற மாதிரி சொல்லிட்டு விடறது. அப்படி விடற அந்த இடைவெளியில தான் தான் அவங்க உள்ள வர்றாங்களா இல்ல அப்படியே ஓடிப் போயிடறாங்களான்னு தெரியும்.
மேலும் மனவியல் மருத்துவம், பரிசோதனைகள் எல்லாமே என்ன கோளாறுன்னு (abnormalities) கண்டுப்பிடிக்கறதுக்காக வடிவமைக்கப் பட்டவை தான்.
ஏதாவது தப்பா இருக்கான்னு கண்டுபிடிக்கறதுக்காக. எது ரொம்ப சரியா இருக்குன்னு கண்டுபிடிக்கறது முடியாது.
(To find out what is wrong. Not to find out which is more right!)
கேள்வி: அப்போ மனவியல் மருத்துவம் தத்துவார்த்தமானது தானா?
டாக்டர்: இலலை., அது pure science. (மூளையில) இந்தக் கெமிக்கல் கூடுது குறையுது. அதனால இந்தப் பிரச்னை; எந்த மருந்து கொடுத்தால் அது சமநிலைக்கு வரும்னு பார்த்து வைத்தியம் பண்றது தான் ஸைக்யாட்ரி. அவ்வளவு simple and straight forward. என்ன, வர்றவங்க ஒரு அன்பில பேசறாங்க. நானும் அன்பால கேட்டுக்கறேன். அதான் நேரமாகுது. இல்லனா ஜெனரல் ப்ராக்டிஸ் மாதிரி தான்; கொஞ்சம் பேசினவுடனேயே diagnosis முடிச்சிடலாம்!
கேள்வி: மனநோய் இருக்கற ஒருத்தரைப் பாத்தவுடனே கண்டுபிடிச்சிடலாமா டாக்டர்?
டாக்டர்: பார்த்தவுடனே இல்ல, பேசினவுடனே கண்டுபிடிச்சடலாம்.
நம் எண்ணங்கள் எல்லாமே, உடல்மொழியாவும் வாய்மொழியாவும் தானே வெளிப்படுது. இதுல ஒரு relevance, coherence, logic, continuity இருக்கணும். (பொருத்தமாக, தொடர்புடன், அறிவுபூர்வமாக, தொடர்ச்சியாக)
அதீதஉணர்ச்சி வெளிப்பாட்டுடன் (exaggerated) நடவடிக்கைகள், சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத பேச்சு, இதெல்லாமே இந்த வேதிப் பொருட்கள் கூடறதாலயோ குறையறதாலயோ ஏற்படலாம். மொத்தம் 116 விதமான மனநோய்கள் டாக்குமென்ட் பண்ணி இருக்கு.
ஸைக்காலஜி, ஸைக்கியாட்ரி வித்தியாசம் தெரியும்ல.
(தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தை பார்க்கவும்!)
நம்மூர்ல பொதுவா ரெண்டையும் குழப்பிக்கறாங்க. பொதுவா குடும்பத்துலயோ திருமண வாழ்க்கையிலயோ பிரச்னை இருந்தாலோ, இல்ல இப்பல்லாம் குழந்தைங்க ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு ரொம்ப அடம்பிடிக்கிறாங்க. இதெல்லாம் ஒரு ஸைக்காலஜிஸ்டே கவுன்சலிங் மூலமா சரிபண்ணிடலாம்.
ஆனா, ஒரு வேளை அப்படி சரியாகலைன்னா அந்தக் குழந்தைக்கு அடிப்படையிலேயே மூளையில ஏதோ ஒரு வேதிப் பொருளின் சமநிலை தவறி இருந்தா அதைச் சரி பண்ணறதுக்கு ஒரு மனவியல் மருத்துவர் ஸைக்க்யாட்ரிஸ்ட் தேவை.
நம்மூர்ல ஸைக்யாட்ரின்னாலே ஒரு mystic (தெய்வீகமான) பார்வை பாக்கறாங்க. குரு மாதிரி பார்க்கறது, எல்லாத்துக்கும் அவங்க கிட்ட ஆலோசனை கேக்கறது அப்படி ஆயிடுது. என் கிட்ட அது ரொம்ப அதிகம் எதிர்பார்க்கப்படுது. என்னோட தோற்றம் காரணமா இருக்கலாம்.
கேள்வி: உடல் மொழின்னு சொல்றாங்களே. அது எவ்வளவு தூரம் துல்லியமானது? அதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
டாக்டர்: I believe in it. It can be made more of a science than what it is now. சில குறிப்பான பாவனைகள், நடவடிக்கைகள் இருக்கு. காலம்காலமா இருந்துட்டு வர்ற விஷயம் இது. டார்வின் தான் முதல்ல இதை அறிவியல் பூர்வமா பார்க்க முயற்சி பண்ணவர்.
நம்ம ஊர்லயும் நாட்டியம் நாடகம் இதிலெல்லாம் பயன்படுத்தற அபிநயங்களுக்கு அடிப்படை பாடி லேங்வெஜ் தானே. மெய்ப்பாட்டியல்னு தொல்காப்பியர் சொல்லி இருக்கார். இதுவும் ஸைக்யாட்ரி மாதிரி தான். ஒரு ஆளோட அந்த நேரத்து மனநிலை (mood status) தெரிஞ்சுக்கலாமே தவிர ஒருத்தர் நல்லவரா கெட்டவரா, புத்திசாலியா முட்டளான்னெல்லாம் கண்டுபிடிக்க முடியாது.
கலை, ஓவியம், எழுத்து என்று தொடர்ந்த டாக்டரின் பேச்சு அவர் மிகவும் ரசித்த லா.ச.ரா வின் அபிதா பக்கம் சென்றது.
டாக்டர்: அதுல கதை என்று பெரிசா ஒண்ணும் இல்லை. அதன் மொழியழகுக்காகவே மயங்கிடலாம். கதை இல்லாத குறையை அந்த அற்புதமான மொழி நிறைவு செய்துடும். தமிழ் மொழியை எப்படியெல்லாம் அழகாகப் பயன்படுத்தலாம்க்றதுக்கு எடுத்துக்காட்டு லா.ச.ராவின் அபிதா.
அதனாலேயே அதை மேடை நாடகமாகப் போட்ட போது எடுபடல. மேடை நாடகத்துக்குக் கதையும் பாத்திரப்படைப்பும் ரொம்ப முக்கியம்.
(டாக்டரின் நாடக அனுபவங்களை அவரே அழகாக எழுதி இருக்கிறார்.)
கேள்வி: கனவுகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு டாக்டர்? கனவுகள் ஏன் வருது?
டாக்டர்: கனவுங்கறதே நம்மோட உள் மன ஆசைகள் அல்லது பயங்கள் தான். உறக்கத்தில் நிறைய நிலைகள் உண்டு.ஓரிரு மணி நேர ஆழ்ந்த உறக்கம், அடுத்து சில நேரம் லேசான உறக்கம் என்றுமாறி மாறி தான் வரும். உறக்கத்தில் அப்படி ஆழம் குறையும் சில நிலைகளில்தான் மூளை கனவுகளை உருவாக்குகிறது.
கனவுல நேரம் ரொம்பக் குறுகிய விஷயம். அப்புறம் குறியீடுகள். ஒருத்தருக்குப் பதிலா இன்னொருவர் அதே குணாதிசயங்களோட வரலாம்.
அப்புறம் நேற்று வந்த கனவு இன்னிக்குத் தொடர்றதும் நார்மல் தான். தூங்கற நேரம் முழுக்க கனவு வந்து அது நினைவும் இருந்தா அது தப்பு. மூளைக்கு ஓய்வில்லைன்ன்னு அர்த்தம். நார்மலா அப்படி இருக்காது.
எத்தனை கனவு கண்டாலும் கடைசியில் வர்ர கனவு மட்டும் காலையில ஞாபகம் இருக்கும். மற்றதெல்லாம் மறந்துடும். கனவு வர்ரதே தூக்கத்தில சில நிலைகள்ல தான். கண்ணிமைகள் படபடக்கறது, கருவிழி அசையறதெல்லாம் கனவு வரும்போது நடக்கும்.
கேள்வி: கனவுகளே வராம இருந்தா அது ப்ரச்னையில்லையா?
டாக்டர்: அப்படி யாருக்கும் இருக்காது. மறந்து போயிடுதுன்னு தான் அர்த்தம். அது ரொம்ப நிம்மதியான விஷயம்!
அப்புறம் கனவுகளைப் பத்தி உறுதியா எந்த ஆராய்ச்சியும் பண்ண முடியாது. கனவு வரும்போது மூளையோட செயல்பாடு என்ன மாதிரி இருக்குன்னு graph பண்ணிப் பார்க்கலாம். பொருளைப் பண்ண முடியாது.ஃப்ராய்டு எழுதினதெல்லாம் பாதி தியரி தான்.
கேள்வி: ஓருபாலின ஈர்ப்புங்கறது மனநலக் கோளாறா?
டாக்டர்: இல்லை. அதுக்காக அது இயல்பான விஷயமும் இல்லை. அதை மாற்றவும் முடியாது. சில பேர் bisexual (ஒரு பாலின ஈர்ப்பு, எதிர்பாலின ஈர்ப்பு இரண்டுமே இருத்தல்) ஆக இருக்கலாம். ஆனா முழுமையா ஹோமோ வாக இருந்தா ஒண்ணும் பண்ணறதுக்கு இல்லை.
சமூக அழுத்தங்களுக்காக அவங்க எதிர் பாலினத்தைத் திருமணம் பண்ணிக்கிட்டாலும் அதனால இரு தரப்புக்குமே கேடு தான்.
ஹோமொசெக்சுவல் ஆணால கண்டிப்பா மனைவியையும் திருப்திப் படுத்த முடியாது. குழந்தைப் பேறும் இருக்காது.
ஹோமோசெக்சுவல் ஜோடிகளுக்கு ஆண் பெண் உறவிலிருக்கும் அத்தனை உணர்வு ரீதியான அம்சங்களும் கூட ஈகோ, பொறாமை, possessivness, அப்படியே இருக்கும். ஆனா ரெண்டு பேர்ல ஒருத்தர் அதிக ஆளுமை உடையவரா இருப்பார்.
மனவியல் மருத்துவ ரீதியா இதுக்கு ஒண்ணும் பண்ண முடியாதுங்கறதுனாலேயே நான் பெரிசா இந்த விஷயத்துக்குள்ள போறதில்ல.
ஆனா ஒரு ஹோமோ உண்மையிலேயே எதிர்பாலின விருப்பமுள்ளவரா மாற விரும்பினா (அப்படி சிலர் உண்டு)அதுக்கு முயற்சி பண்ணலாம். ஆழ்நிலை உறக்கத்துக்குக் கொண்டு போய் suggestion சிகிச்சை கொடுக்கலாம். எதிர்பாலின விருப்பத்தைத் தூண்டும் வகையில் படங்களோ புத்தகங்களோ பார்க்க வைக்கலாம். இது எதுவுமே பலன் தரலைன்னா விட்டுட வேண்டியது தான்.
கேள்வி: ஓரினத் திருமணத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?
டாக்டர்: திருமணம் என்னம்மா. பிடிச்சா அவங்க தாராளமா சேர்ந்து வாழ வேண்டியது தானே. முன்னாடி இது குற்றமாவே பார்க்கப்பட்டது. இப்போ தான் அது இல்லையே.
கேள்வி: இல்லை, சட்டப்படி அங்கீகாரம் வேண்டும், குழந்தைத் தத்தெடுக்கும் உரிமை வேண்டும்னெல்லாம் இவர்களில் சிலர் போராடறாங்களே? அது சரியா? ஓரினப் பெற்றோரிடம் வளரும் குழந்தை இயல்பான வளர்ச்சி இருக்குமா? அதுக்கும் அவங்களைப் பாத்து அதே மாதிர்யான விருப்பம் வர வாய்ப்பு இருக்கா?
டாக்டர்: இல்ல, அப்படிலாம் பாத்துக் கெட்டுப் போக முடியாது. ஒரு aversion வரலாம். இயல்பான குடும்ப அமைப்பு இல்லாததுனால நிச்சயம் பாதிப்பு வர வாய்ப்பு இருக்கு.
கேள்வி: ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் பத்தி ஒரு கேள்வி. மகனுக்கு அப்பா மேல வரும் பொறாமை அல்லது வெறுப்புணர்வு மாதிரி ஒரு அப்பாவுக்கு மகன் மேல வருமா?
டாக்டர்: வெறுப்புன்னில்ல, கடந்து போன தன்னோட இளம் வயதை அவன் கிட்ட பார்த்து ஒரு ஏக்கப் பெருமூச்சு வரலாம். That is quite normal.
கேள்வி: அப்படி இல்ல, மகன் தன்னை விட உயர்வா வளர்ந்துடக் கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு அவன் வளர்ச்சியைத் தடைபண்ற அளவுக்கு இந்தக் காம்பிளக்ஸ் வருமா?
டாக்டர்: எனக்குத் தெரிஞ்சு அப்படி யாருக்கும் வந்து நான் பார்த்ததில்ல, ஆனா சாத்தியக்கூறுகள் இருக்கு.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் டாக்டரின் பொன்னான நேரத்தை விரயம் செய்து விட்டிருந்தோம்! போதுமென்று தோன்றியதால் விடைபெற எழுந்தோம்.
வீட்டிலேயே மிகப்பெரிய அறையை டாக்டர் புத்தகங்களுக்கு ஒதுக்கி இருந்தார். அதைப் பார்க்காமல் எப்படிக் கிளம்புவது?
கம்ப இராமாயணம் முதல் காஃப்கா வரை, ஓஷோ முதல் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் வரை சகலமும் இருந்த அந்த நூலகம் அவர்களின் பரந்து பட்ட ரசனைக்கும் அறிவுக்கும் சான்றாக இருந்தது. ஆனால் தான் நம்புவதும் ஆதரிப்பதும் இடது சாரி சிந்தனைகளைத் தான் என்பதை உறுதியாகக் கூறுகிறார் டாக்டர்.
அன்பளிப்பாக டாக்டர் கொடுத்த புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு மிகுந்த மன்நிறைவோடு வீடு திரும்பினோம்.
தொழில் ரீதியாகவோ, அவரது துறை சார்ந்தோ எவ்வித தகுதியும் இல்லாமல் நாங்கள் கேட்டுக் கொண்ட போதும் எங்கள் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு சம்மதித்ததோடு, பொறுமையாக எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்த டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு நன்றி என்பதை வார்ததைகளால் சொல்லி முடிக்க முடியாது.
தனது அலுவலகப் பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி எங்களுடன் அன்புடன் அளவளாவிய திருமதி. உமா ருத்ரன் அவர்களுக்கு எங்கள் அன்பும் நன்றியும்.
Sunday, February 14, 2010
மருத்துவர் ருத்ரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு
வலையுலகில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எல்லோரும் எழுதுகிறோம், வாசிக்கிறோம், அரட்டையடிக்கிறோம், விவாதம் செய்கிறோம்; ஆனால் ஒரு சிலர் இங்கே இருப்பதும் எழுதுவதும், கருத்துப் பரிமாற்றம் செய்வதும், நமக்குப் பெருமையளிப்பது மட்டுமல்ல, வலையுலகின் தரத்துக்கும் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கும்.
அப்படிப்பட்டவர்களில் டாக்டர் ருத்ரன் முக்கியமானவர்.
புகழ்மிக்க மனநல மருத்துவரான டாக்டர் ருத்ரன் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர். அவர் சிறந்த ஓவியர் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வாங்கும் மனவியல் மருத்துவப் பணிகளுக்கிடையே, ஓவியம், நாடகம், எழுத்து, குறும்பட இயக்கம், போன்ற பல துறைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுச் சாதனைகளும் புரிவதென்பது சாதாரண விஷயமல்ல.
அவரை நேரில் சந்தித்து உரையாட விரும்பி அனுமதி கேட்டோம். மறுக்காமல் ஒப்புக் கொண்ட அவர், "சரி, என்ன திடீர்னு.." என்றார்.
"உங்களைப் பேட்டி எடுக்கலாம்னு தான்." என்றேன்.
சிரித்துக் கொண்டே..."பேட்டி எல்லாம் என்னம்மா. சும்மா வாங்க அரட்டையடிக்கலாம்" என்றார். அது தான் நடந்தது!
நான்கு பேரில் இரண்டு பேர் தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியாமல் போக, நானும் முல்லையும் கடந்த வாரத்தில் ஒரு இனிய மாலையில் அவர் இல்லத்துக்குச் சென்றோம்.
டாக்டரும் அவரது மனைவி உமாவும் எங்களை அன்புடன் வரவேற்றனர். இருவருமே மிகவும் இயல்பாகவும் நட்புடனும் பேசினார்கள். திருமதி உமா பதிவுகளையெல்லாம் தவறாமல் படிப்பதாகச் சொல்லவும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சமீபத்தில் வந்த பதிவுகள், கலாட்டாக்கள், ஆயிரத்தில் ஒருவன் விமர்சனங்கள் என்று தொடர்ந்தது பேச்சு.
முல்லை நான்கு வருடங்களாகப் பதிவுலகத்தில் இருப்பதை அறிந்ததும் உமா டாக்டரிடம், "நீங்க தான் இவங்களைப் பேட்டி எடுக்கணும். She is your senior in blogging" என்று கலகலப்பைத் தொடங்கி வைத்தார்.
எங்கள் கேள்விகள் எப்படி இருந்த போதிலும் டாக்டர் சுவாரசியமாகவே பதிலளித்தார்; சொல்லி விட்டு "என்ன சரிதானா?" என்பது போல் டாக்டர் தன் மனைவியின் முகத்தைப் பார்த்ததும், அவர் "ஆமாம், எல்லாம் என்னைக் கேட்டுத் தான் செய்ற மாதிரி" என்று அவர் செல்லமாக முறைத்ததும் டாக்டரின் பதில்களுக்கு இணையாகச் சுவாரசியமாக இருந்தன!
முல்லை: தமிழ்மணத்துக்கு நீங்க எப்படி வந்தீங்க டாக்டர்?
டாக்டர்: வினவுத் தோழர்கள் தான் எனக்குத் தமிழ் மணத்தை அறிமுகப்படுத்தினாங்க. என் இடுகைகளையெல்லாம் அவங்க தான் தமிழ் மணத்துல சேர்த்து விடுவாங்க. நான் ரொம்ப நாள் எழுதாமையே இருந்தேன். என்னை எழுத வெக்கறதுக்காகவே அவங்க இதெல்லாம் செஞ்சாங்க. எழுத ஆரம்பிச்சப்பறம் நிறுத்த முடியல. Blogging is definitely addictive.அப்புறம் யார் யார் என்ன எழுதறாங்க, என்ன சொல்றாங்கன்னு பார்க்கறதுக்காகவும் வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி வர ஆரம்பிச்சேன்.
முல்லை: எழுத்தை வெச்சு எழுதறவங்களோட குணாம்சங்களைத் தெரிஞ்சுக்க முடியுமா?
டாக்டர்: ரொம்ப இல்லை. ஏன்னா எழுத்தே ஒரு performance தானே. Perform பண்ணும் போது எல்லாருமே ஏதாவது மேற்பூச்சு ஒண்ணுப் போட்டுக்கிட்டுத் தானே ஆகணும். ஆனா ideology தெரியும். எந்த மாதிரி நம்பிக்கைகள், எதைச் சார்ந்து இருக்காங்க, சுருக்கமாச் சொன்னா அவங்க mentality தெரியும். Personality பெரிசாத் தெரியாது.
நான்: நீங்க தமிழ்லயும் எழுதறீங்க ஆங்கிலத்திலும் எழுதறீங்க. இரண்டில் எது உங்களுக்கு அதிகம் பிடிச்சிருக்கு?
டாக்டர்: தமிழ்ல எழுத எனக்கு ஆர்வம் நிறைய இருந்தாலும் ஏனோ ஆங்கிலம் தான் எனக்கு ரொம்ப இயல்பான மொழி. I think in English. அதனால இங்கிலிஷ்ல எழுதறது ரொம்ப சுலபம். தமிழ்ல எழுதணும்னா அங்கிலத்தில் சிந்திக்கறத நான் மொழிபெயர்த்து எழுத வேன்டி இருக்கு. இதை வெளியில சொன்னா சரியாப் புரிஞ்சுக்காம ' என்ன நீ லண்டன்ல பொறந்தியா' அப்படிங்கற மாதிரி சொல்லலாம். ஆனா இது என்னோட இயல்பு.
இன்னும் சொல்லப் போனா, நியாயமா என்னோட தமிழ் எழுத்துக்குத் தான் அதிக வாசகர்கள் இருக்கணும்; ஊடகங்கள் மூலமா தமிழ் வாசகர்களிடையே நான் பரிச்சயம்கறதால. ஆனா என் ஆங்கில எழுத்துக்களுக்குத் தான் வாசகர்கள் அதிகமா இருக்காங்க. ஆனா கொஞ்ச நாள் நான் எழுதப் போறதில்ல.
நாங்கள்: ஏன்?
டாக்டர்: சோம்பேறித் தனம் தான்.
(சிரிப்பு)
நான்: controversies தான் காரணமா?
டாக்டர்: இல்லவே இல்லை. controversies தான் என்னை அதிகமா எழுதத் தூண்டும். சும்மா ஒரு தற்காலிக இடைவெளி.
முல்லை: அனானி கமென்டுகளைப் பத்தி என்ன நினைக்கிறீங்க. இது ஆரோக்கியமானதா?
டாக்டர்: இல்ல அது ரொம்பவும் கேடான விஷயம். அனானியா வந்து பாராட்டிட்டுப் போறவங்க ரொம்பக் கம்மி. தைரியமா விமர்சனம் பண்ண விரும்பாதவங்க தான் அனானியா வர்றாங்க. இதுல ஒரு விஷயம் கவனிக்கணும். வர்றவங்க நம்மக் கருத்தை விமர்சனம் பண்றாங்களா இல்ல தனிப்பட்ட முறையில திட்டறாங்களான்னு.
முல்லை: இல்ல, இப்ப என் பதிவில நான் சொல்ற கருத்து ஒண்ணு என் ஃப்ரெண்டுக்கு உடன்பாடில்ல. என்னோட பிரச்னை வந்துடக் கூடாதுன்னு அனானியா வந்து அதை விமர்சனம் பண்றது தப்பா?
டாக்டர்: அனானிமஸா ஒருத்தன் வந்து எனக்குக் கமென்ட் போடறான்னா அவன் என் ஃப்ரெண்டே கெடையாது! ஒரு கருத்துக்கு எதிர்கருத்து சொன்னா உடனே நட்பு முறிஞ்சுடுமோன்னு பயப்படறது பக்குவமே இல்லம்மா.
நான்: அப்போ அனானி கமென்டுகளுக்கு ஏன் பதில் சொல்லணும்? மொத்தமா தவிர்த்துடலாமே. நியாயமான கருத்தா இருந்தாலுமே அடையாளத்தோட சொல்லல இல்ல?
டாக்டர்: நியாயமா இருந்து, தனிப்பட்ட முறையில் தாக்குதல் இல்லாம யார் எதிர் கருத்து சொன்னாலும் பதில் சொல்லணும்.
முல்லை: நன்றி சொல்றது அவசியமா டாக்டர்?
டாக்டர்: சாதாரணமா யாராவது நம்மைப் பார்த்துச் சிரிச்சாவே நன்றி சொல்லணும். ஆனா பதிவுகளைப் பொறுத்தவரை இது ஒரு காமெடி சீன் மாதிரி ஆகிடுமோன்னு தோணுது. நன்றிக்கு நன்றி, நன்றி சொன்னாங்களேன்னு அடுத்த தடவையும் அவங்களை அக்நாலெட்ஜ் பண்ற மாதிரி கமெண்ட் போடணுமோன்னு தோணிடும். அதனால நான் சொல்றதில்ல. ஆனா இது அவரவரோட தனிப்பட்ட விருப்பம்.
நான்: நான் சொல்றது வழக்கமாயிடுச்சு. அதனால நிறுத்தறதாயில்ல.
டாக்டர்: ஆமாம், திடீர்னு நிறுத்தினா இப்போ உனக்கு ரொம்ப திமிராயிடுச்சோன்னு சொல்லிடுவாங்க.
(சிரிப்பு)
பிறகு பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் தமிழ்ப் பதிவுலகத்தின் ஆரம்ப நாட்கள், அப்போது யாரெல்லாம் இருந்தனர் என்று திரும்பியது.
டாக்டர்: பதிவுலகத்திலும் சாதியம், ப்ராமினிஸம், நிறைய இருக்கு. குழு மனப்பான்மை, வேறெந்தக் காரணமும் இல்லாம சாதிக்காக சப்போர்ட் பண்றது, எல்லாம் இருக்கு.
நான்: ப்ராமினிஸம்னு நீங்க எதைச் சொல்றீங்க டாக்டர்?
டாக்டர்: அது ஒரு மெண்டாலிட்டி. மத்தவங்களைப் பத்திக் கொஞ்சம் கூட அக்கறையில்லாம ஒரு behavior. Selfishness காக என்ன வேணா பண்ணலாம்ங்கறது, ஒரு ethical code of conduct இல்லாம; a feeling that they are one step above the others; ஒரு திமிர்.
நான்: சரி, இதெல்லாம் யாருக்கு வேணா இருக்கலாம்னா ஏன் அதுக்கு ப்ராமினிஸம்னு பேர் வந்தது?
டாக்டர்: அவங்க தான் பெரும்பாலும் அப்படி இருந்தாங்க; அதான்.
பிராமணர்களும் யூதர்களும் ஒரே இனம்கறது அசோகமித்திரன் தொடங்கி வச்ச கேம்.
நான்: அது உண்மையா?
டாக்டர்: இல்லம்மா... என்னமோ அவருக்கு நேரம் சரியில்லை அப்படிப் பேசிட்டார்!
(சிரிப்பலை)
டாக்டர்: உண்மையில் அப்படி ஒண்ணும் கிடையாது. ஆனா அவர் அப்படிச் சொன்னவுடனே, அவருக்கு எதிரா கண்டனங்கள்... ”அப்போ என்ன சொல்றீங்க, யூதர்கள் மாதிரியே நீங்க தான் புத்திசாலிங்களா, நாங்கல்லாம் முட்டாள்களா... ”இப்படி.
முல்லை: என் ஃப்ரெண்டு தமிழ்ச்செல்வி சொல்லுவா ப்ராமணர்கள் யூதர்கள் கிட்டேந்து வந்தவங்க தான்.. ஏன்னா கடவுள் அவங்க கிட்ட பேசாதப்போ அவங்க ஒரு யாகம் பண்ணாங்களாம். அப்போ அதுலேர்ந்து ஒரு கன்னுக்குட்டி வந்ததாம். அந்தக் கன்னுக்குட்டி தான் காமதேனுன்னு.
டாக்டர்: ஆனா, இவங்க அப்படிச் சொல்லலையே! தங்களைப் பரம்மா தலைலேந்து வந்ததால்ல சொல்லிக்கறாங்க!
(மீண்டும் சிரிப்பு)
பதிவுகள் போய்க் கொண்டிருந்த பேச்சு மெதுவாக மனவியல் பக்கம் திரும்பியது.
முல்லை: நான் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு இடுகை எழுதினேன். ஆண் பெண் குழந்தைகள் வளர்ப்பில் நாம தான் வித்தியாசம் காட்டறோம் அப்படிங்கற அர்த்தத்தில். ஆனா சில பேர் உறுதியா சொல்றாங்க அதெல்லாம் ஜீன்ஸ்லயே வர்றது அப்படின்னு. இது பத்தி உங்க விளக்கம் என்ன டாக்டர்?
(இந்தக் கேள்விக்கும் குழந்தை வளர்ப்பு, கனவுகள், ஒருபாலின ஈர்ப்பு, ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் சம்பந்தமாய் இன்னும் பல கேள்விகளுக்கும் டாக்டரின் பதில்கள் அடுத்த இடுகையில்!)
Wednesday, February 10, 2010
A few pages from my teenage diary - தொடர் பதிவு
விருப்பமிருந்தால் தொடரலாம் என்று தான் சின்ன அம்மிணி அழைத்திருந்தார். எழுத வேண்டாமென்று தான் உறுதியாக இருந்தேன். "பின் என்ன இப்போ,எழுதுவோமே" என்று தோன்றியது.
பதின்ம பருவம் என்றில்லை எப்போதும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்ததில்லை. என்றாவது Dear God என்று தொடங்கிக் கடவுளுக்குக் கடிதம்எழுதுவேன்! பிரார்த்தனை ஒன்றும் இல்லை...என் மனதின் குப்பைகள், ஆசைகள், கவலைகள், குழப்பங்கள் எல்லாவற்றையும் காகிதத்தில் கிறுக்கிய பிறகு நிம்மதியாக இருக்கும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான்எழுதுவேன்; எப்படியும் காகிதம் விரயமாகப் போகிறது... குறைந்தபட்சம் மொழியையாவது விருத்தி செய்யலாமேயென்று.
பதின்மூன்று வயது முதல் பத்தொன்பது வயது என் மனதில் முக்கியமாக இருந்த விஷயங்கள்:
படிப்பு: (வேற வழி?) இதைப் பத்திச் சொல்லப் புதுசா என்ன இருக்கு?எல்லாருக்கும் இருந்திருக்கும் பாடச்சுமையும் படபடப்பும் தான். ப்ளஸ் டூதேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.)
நன்றாகப் பாடமெடுக்கும் ஆசிரியரிடம் எப்போதும் infatuation இருக்கும். பள்ளியில் எல்லாருமே ஆசிரியைகள் தான். ஜெயா மிஸ், (முன்பே இவரைப் பற்றி எழுதி இருக்கிறேன்) +2 படிக்கும் சித்ரா மிஸ் என்ற அற்புதமான இயற்பியல் ஆசிரியை. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் அவர் மீது பயம் கலந்த மரியாதை. என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று அவரிடம் டியூஷன் படிக்கும் தோழிகள் சொல்லி அறிந்த அன்று மிகவும் பரவசப்பட்டேன்.
பிறகு +2 படிக்கும் போது சரியாக டெஸ்ட் எழுதாததால் இருபத்தைந்து 5 மார்க் கணக்குகளை பத்து முறை எழுதி வருமாறு (அடுத்த நாள் காலை ஐந்து மணிக்குள்) தண்டனை கொடுத்தார் ட்யூஷன் வாத்தியார். சாது சாமியார் போலிருந்த அவருக்குக் கோபம் வந்தால் காலி. நடுங்கிக் கொண்டே வீடு சென்று அன்றிரவு முழுதும் தூங்காமல் நானும் என் தோழியும் இம்போசிஷனை முடித்தோம். மறுநாள் காலை ஐந்து மணிக்குச் சென்று அவரிடம் கொடுத்த போது, வாங்கித் திருத்திய பின் “வெரி குட்” என்று எழுதி எங்களைப் பார்த்துச் சிரித்தார். அந்தக் கணம் முதல் என் infatuation லிஸ்டில் அவரும் அடக்கம்.
பாட்டு: இசை ரசனையும், ஒரளவு எனக்குப் பாட வரும் என்றும் உணர்ந்த பருவம் அது. அக்காவின் முயற்சியால் பாட்டு வகுப்புக்கும் சென்று கொண்டிருந்தேன். கல்லூரி ஆர்க்கெஸ்ட்ரா என் தாகத்தை ஓரளவு தணித்தது.
அம்மா: அம்மாவைப் பற்றித் தனி இடுகையே எழுதலாமென்றாலும் என்பதின்ம பருவத்தில் தான் அம்மாவுடன் மனரீதியான நெருக்கமும் அம்மா என்ற பெண்ணின் வாழ்க்கை என் மனதில் விசுவரூபமும் எடுக்கத் தொடங்கியது. அப்பாவின் இன்னொரு மனைவி (மாமி) அவர்களின் அரவணைப்பிலேயே இருந்த நான், அம்மாவிடம் அன்பிருந்தாலும் மனத்தளவில் பெரிதாக ஒட்டாமலே இருந்தேன்.
அம்மாவிடம் நெருங்கி வளர்ந்த, மாமியிடம் மரியாதை தவிர அதிகம் நெருங்காத அக்காவின் அன்பிலும் நான் நனைந்ததால் இந்தக்கண்ணுக்குத் தெரியாத திரைகள் என்னைச் சிறுவயதில் பெரிதாகப்பாதிக்கவில்லை.
அக்காவுக்குத் திருமணமாகிச் சென்றதும் தான் அம்மா தனியாக ஆனது போல் தோன்றியது.
அம்மா ரொம்பத் தைரியமான மனுஷி. யாரிடமும் எதையுமே எதிர்பார்க்காத அந்தத் தன்னம்பிக்கையும், மனைவி, தாய் என்ற ஸ்தானங்களுக்குண்டான அடிப்படை உரிமைகளைக் கூட விட்டுக் கொடுத்து ஆனால் கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள ஆர்வமும் வேறு யாரிடமும் பார்க்காத ஒன்று. எத்தனை கஷ்டங்களைச் சந்தித்திருந்தாலும், "எனக்கென்ன, என் வாழ்வுபரிபூரமணமானது. நான் மிகச் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்" என்று உண்மையிலேயே சொல்லும் என் அம்மாவை மகளாக இல்லாமல் இன்னொரு பெண்ணாக நான் பார்த்துப் பிரமிக்கிறேன்.
எல்லோரும் சொல்வது தானென்றாலும் எனக்கு மட்டுமே தெரியும், என் தாய் போல் ஒரு பெண் உலகில் இல்லை.
ஆனால் நான் அம்மாவைப் போல் இல்லை. நான் அம்மாவை நெருங்க நெருங்க, அம்மா என் மாற்றத்தை உணர்ந்து கொள்ள் வேண்டும். இத்தனை நாள் விலகி இருந்த மகள் தன்னிடம் நெருங்குவதை உணர்ந்து அதீத மகிழ்ச்சி கொண்டு என்னைக் கொண்டாட வேண்டுமென்று விரும்பினேன்; எதிர்பார்த்தேன். என்ன ஒரு பேதைமை? தாயன்பை எவ்வளவு மலிவாக நினைத்து விட்டேன்?
என்றாவது என் மீது அன்பு குறைந்திருந்தால் தானே அம்மாவுக்குத் திடீரென்று அதிகரிக்க? அம்மா subtle ஆனவர். என் போல அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரியாது; பிடிக்காது.
இது புரியாமல் வேதனைப்பட்டேன்; சண்டையிட்டேன். இயல்பாக அக்காவை நினைத்துக் கொண்டு அம்மா பேசினாலும் தாங்க முடியாமல் பொறாமைப் பட்டேன் 'அக்காவைத் தான் உனக்குப் பிடிக்கும்' என்று.இதெல்லாம் அம்மாவின் திடசித்ததுக்கு முன் எம்மாத்திரம்? ஆனாலும்எனக்காக வருந்தினார்கள். என்னைப் புரிந்து கொள்ள முயல்வதற்கு, அப்படிஒரு அவசியம் என் அம்மாவுக்கு ஏற்படுவதற்கு, என்னுடைய இந்த உணர்ச்சி வெளிப்பாடுகள் உதவின. அம்மா சிரித்துக் கொண்டே 'இந்தக் குணம் மட்டும்அப்பா மாதிரியே' என்று சொன்னதெல்லாம் அப்போது புரியவில்லை.
இந்தக் காலகட்டத்தில் தான் நான் சமையல், மற்றும் வீட்டு வேலைகளில் பங்கெடுப்பதும் நடந்தது. அம்மாவால் தனியாக முடியாது என்ற யதார்த்தம், அக்காவைப் போல் வீட்டுக்குப் பொறுப்பான பெண்ணாக இருக்க வேண்டும் என்ற உந்துதல் இரண்டுமே காரணம். அக்கா வரும்போது அம்மா நான் வேலை செய்வதைப் பற்றிச் சொல்வதைக் கேட்கும் போது ரொம்பச் சந்தோஷமாக இருக்கும்.
இதே நேரத்தில் தான் அம்மாவின் உடல்நிலையிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. வாத நோயினால் அம்மாவின் கால்களும் கை விரல்களும் வீங்கி வளையத் தொடங்கின. நான் பன்னிரன்டாம் வகுப்புககு வந்த போது அம்மா பள்ளி வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். சென்னையில் ராணி மேரிக்கல்லூரியில் கணிதம் படிக்க ஆரம்பித்த எனக்கு எதிர்பாராமல் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க நான் கோவை செல்ல வேண்டிவந்தது. விருப்பமே இல்லை எனக்கும். ஆனால் அப்பாவும் மற்றவர்களும் விரும்பியதாலும் நல்ல வாய்ப்பை விட்டு விடாதே என்று நண்பர்கள் சொன்னதாலும் கோவையில் படிக்கச் சென்றேன்.
எதிர்பாலின ஈர்ப்பு: பள்ளிப்பருவம் வரை நான் யாரையாவது ஈர்த்தேனாஎன்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்து யாரும் என்னை ஃபாலோசெய்ததும் இல்லை. செய்திருந்தாலும் அதை அறிந்திருக்கும் படியான கூறும்எனக்குக் கிடையாது. பின்னே? எனக்கே மனசில ஆயிரம் கிரஷ் இருந்தன. கமல்ஹாசன் முதல், பக்கத்து வீட்டுப் பாலகிருஷ்ணன் வரை; ஒதெல்லோ நாடகத்தில் அபாரமாக நடித்த சீனியர் மாணவனிலிருந்து இந்தி ட்யூஷனில் படித்த குறும்புக்கார மாணவன் வரை. சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது ஏதாவது பாட்டை முணுமுணுத்துக் கொண்டு அதை இவர்களில் யாராவது என்னை நினைத்துக் கொண்டு உருகி உருகிப் பாடுவதாகக் கற்பனை செய்து கொள்வது என் வழக்கம். (நான்பாடுவதாக அல்ல) பரீட்சை நேரத்தில் சமர்த்தாக இவர்களை எல்லாம் மனதில் இருந்து விரட்டி அடித்து விடுவேன். இப்படி நானுண்டு என் ‘மைல்ட் ஃபான்டஸிக்கள்’ உண்டு என்று இருந்தது தான் என் பள்ளிப் பருவக் காதல்அனுபவம்(!). வகுப்பில் சக மாணவர்கள் எல்லாம் மதிப்பெண் எதிரிகள் மட்டுமே.
கல்லூரிக் காலம் பலவகையிலும் எனக்குச் சிறந்த அனுபவங்களைத்தந்தது. படிப்பிலும், ஆட்டம், பாட்டம், பிற கலைகளில் ஆர்வமும் இருந்தது. தோழிகள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கும் அன்பும் நிறையவே இருந்தது.
எல்லாம் இருந்தாலும் பல விஷயங்களில் தெளிவும் திடசித்தமும் இல்லாததாலும், சில inferiority மற்றும் superiority complex களாலும், ஓர் ஆணின் மனதை முழுமையாக ஆக்கிரமிப்பது தான் என் ஆளுமையின் அங்கீகாரம் என்ற பக்குவமில்லாத, வெட்கப்படவேண்டிய சிந்தனை மனதின் ஓரங்களில் நீங்காமல் இருந்ததாலும், அப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்த மறு நொடியே அது சகல செல்வாக்கும் இழந்து அகம்பாவமும், குற்ற உணர்ச்சியும் கலந்த கலவையே மனதில் நிலவியதாலும் என் டீனேஜ் டயரியின் சில பக்கங்கள் கசங்கியே காணப்படுகின்றன. சுய பரிசீலனைக்காகவும், சும்மாவும் அவற்றை நான் அடிக்கடித் திரும்பிப் பார்த்துக் கொள்ளத் தயங்காவிட்டாலும், உங்களிடம் பகிர்ந்து கொள்ளுமளவு மனப்பக்குவம் எனக்கு ஏற்படவில்லை. ஏற்படும் நாளன்று எழுதலாம்.
இதுவரையில் பொறுமையோடு படித்த அன்புள்ளங்களுக்கு நன்றி!
இந்தச் சங்கிலியைத் தொடங்கி வைத்த பதிவுலகின் trend setter சந்தனமுல்லைக்கு நன்றி!
நான் இப்போது அறிந்து கொள்ள விரும்புவது இவர்களின் பதின்ம பருவ நாட்குறிப்பை:
அன்பானவர்களே, கட்டாயமில்லை...விருப்பமிருந்தால் எழுதுங்கள்!
Monday, February 8, 2010
சறுக்கு மனம்
காற்றில் மிதப்பது போல்,
எடையெல்லாம் இழந்தது போல்
தரையில் மோதிச் சிதறும் நொடி தான் உறைக்கிறது வீழ்ச்சியின் வலி!
ஆனாலும்..
யாரும் பார்க்கவில்லையே என உறுதி செய்து எழுந்து கொண்டே...
மீண்டும் இடம் பார்த்து விழவே விழைகிறது மனம்
Sunday, February 7, 2010
ஜன்னல்கள்
விசிறி மடிப்புடன் அழகாகப் பூச்சீலைகள் போர்த்தி
காற்றில் படபடக்கும் சீலைகளின் வழியே எட்டிக் கொஞ்சம் பார்க்கலாம்.
இரும்புக் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைய முடியாது.
அடர்ந்த நிறமுள்ள ஜன்னல்கள், முன் நின்றால் இருட்டாக முகம் தெரியலாம். உள் இருப்பது, ஊஹூம்!
இருக்குமிடம் தெரியாமல் ரகசியமாய்ச் சில ஜன்னல்கள்;
நீ செல்லுமிடமெல்லாம் வேவு மட்டும் பார்க்கும்.
புதிர் போலச் சில ஜன்னல்கள், ஆர்வத்தைத் தூண்டி உள்ளே இழுத்துப் போடும். விழுந்தால் எழுவதென்பதே முடியாது.
ஏதோ ஒரு சில ஜன்னல் தான் அருகே சென்றதுமே அகலத் திறக்கும். உள் இருக்கும் ஒளியை வெளியெங்கும் பரவச்செய்து, உன் முகமும் காட்டி உள்முகமும் காட்டும்.
Friday, February 5, 2010
நூற்பின்னல்
வெறுமையாக் இருந்த அதில் பூப்பின்னல் போட்டால் அழகாய் இருக்குமே என்று அவள் எம்ப்ராய்டரி போட ஆரம்பித்தாள்.
வண்ண வண்ண நூல் கோர்த்து, அழகழகான கோட்டோவியம் வரைந்து, அதன் மேல் பொறுமையாக ஊசியைச் செலுத்தி- ஒவ்வொரு விதமாக ஊசி துளைத்து வெளிவரும் போதும் ஒவ்வொரு விதமான வந்தது - மிக லாகவமாகப் போட்டுக் கொண்டிருந்தாள் பூத்தையல். அழகான வடிவம் ஒன்று முற்றுப் பெறும் நேரம் நூல் தீர்ந்து போனது. பொறுமையுடன் கத்தரித்து, முடிச்சிட்டு, மீண்டும் நூல் கோர்த்து..அப்பப்பா...ஒரு வழியாக முடித்து நிமிர்ந்த போது மூன்று மணி நேரமாகி இருந்தது. மிருதுவாக இருக்க வேண்டுமென்று ஸாடின் தையலாகவே போட்டிருந்த பூவிதழ்களைத் தடவிப் பார்த்தாள்; பெருமையும் பூரிப்புமாக இருந்தது.
அவன் பார்வை படும் இடத்தில் மடித்து வைத்தாள். பார்த்தவுடன் பூரிப்பான் என்று.
அவன் வந்தான். கைக்குட்டையை எடுத்துப் பார்த்து, என்ன இது ஒரே சிக்கலும் முடிச்சுமா? கையை வெச்சுக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டியா? இதை எப்படி உபயோகிக்கறது; உறுத்தாதா? அழகான கைக்குட்டை பாழாப்போச்சே”
கோபமும் ஏமாற்றமுமாய் வந்தது அவளுக்கு. ’சே, அவசரப்பட்டுட்டோமோ! பார்த்துப் பார்த்து செஞ்சோமே...’
பதட்டத்துடன் அருகே போனவளுக்குத் துணுக்கென்றது.
அவன் பார்த்துக் கொண்டிருந்தது எம்ப்ராய்டரியின் பின்பக்கத்தை!
அவள் ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்று விழுந்து விழுந்து சிரித்தது ஏனென்று அவனுக்குப் புரியவே இல்லை.
Wednesday, February 3, 2010
நேஹா நேரம்!
”கொச்சு...அவ் கச்சி!” (கொசு அவ் என்று கடித்ததாம்)
”எம்பு..அவ்வ் கச்சி!” (எறும்பு)
”கொச்சு பேட்டு...கொச்சு பேட்டு...” (கொசு பேட் வைத்து அடிக்க வேண்டுமாம். )
”அப்பா, எந்தி...எந்தி...” - தொடர்ந்து சரமாரியாக முதுகில் அடி.
(அப்பாடா, எனக்கு இனி வேலை மிச்சம்! )
தனியாய் அமர்ந்து விஷமம் செய்து கொண்டிருக்கும் போது அருகே போனால்..வீல் என்று ஒரு கத்தல்.
கூடவே அவசர அவசரமாய்க் கையை ஆட்டிக் கொண்டு.. “பை பை டாட்டா...”
அழுக்குத் துணிக் கூடையைத் திறந்து துணியை எடுத்து, “துணி, காய்” என்று காய வைக்கப் போகிறாள்.
”நேஹா, இது என்ன?”
”கக்காலி” (தக்காளி)
”என்னடா சாப்டே”
“பத்தச்சி” (சப்பாத்தி)
சமையலறையில் போய் சம்படங்களை உருட்டிக் கொண்டிருந்தாள்.
“நேஹா என்ன பண்ற?”
திரும்பி அழகாய்ச் சிரித்து.. “சா....ப்ட.... “
ஹையோ! என் மகளே!
அலைகள்
ஓடிச் சென்று பார்த்தால் சத்தமில்லாமல் சோப்பைத் தின்று கொண்டிருந்தது!
செல்லமாய் அடி கொடுத்து இழுத்து வந்தேன்;
சலனமின்றி அமைதியாய் இருப்பதாக நினைத்தேன்...
செல்லமாய் அல்ல, மனத்தை முரட்டுத் தனமாகத் தான் அடிக்க வேண்டி இருக்கிறது!
Tuesday, February 2, 2010
என்ன பேசுவது?
காதல் சொல்லித் தோற்றவனை
நெருங்கிப் பழகிப் பின் சண்டையிட்டுப் பிரிந்தவளை
பிரசவம் பார்த்த டாக்டரை
ரோல்மாடலாக இருந்த ஆசிரியரை
தினமும் கனவில் பார்ப்பதால்
என்றாவது சந்தித்தால் என்ன பேசுவது?
பொறந்த கதை சொல்லவா!
எப்போதும் தூய வெள்ளை சேலை தான் உடுத்துவார். நெற்றியில் பட்டையும் கொஞ்சம் உருண்ட உடம்புமாய் அசப்பில் கே.பி சுந்தராம்பாளை நினைவு படுத்துவார்.
அவர் படுத்திருக்கும் கட்டிலில் கூடத் தன் பழைய சேலைகளைக் கொண்டு தைத்த மெத்தையையும் போர்வையையும் தான் போட்டிருப்பார். அவற்றின் மென்மையான ஸ்பரிசமும் மழை நாட்களில் குளிருக்கு இதமாகப் பாட்டியுடன் ஒண்டிக் கொண்டு படுத்திருந்ததும் பசுமையான நினைவுகள்.
மிகவும் கெட்டிக்காரர், சுறுசுறுப்பானவர், தைரியசாலி, சாமர்த்தியக்காரர், ஐம்பது பேருக்கு ஒண்டியாக விருந்து சமைப்பவர், புத்தக விரும்பி என்றெல்லாம் புகழப்பட்டாலும் மகா வாயாடி வம்புச்சண்டைக்காரர் என்ற பட்டப்பெயர்களும் பாட்டிக்கு நிலவின.
எனக்கு நினைவு தெரிந்த போது பாட்டி எங்கள் வீட்டில் தான் இருந்தார். சனி ஞாயிறுகளில் சித்தப்பா வீட்டுக்குச் சென்று வருவார். நான் பிறந்த பிறகு தான் அம்மா சமையலாம். ”அதற்கு முன்பு எங்கே அடுப்படியை எனக்கு விட்டார்” என்று அம்மா அலுத்துக் கொண்டாலும் வேலைக்குப் போகும் அம்மாவுக்குப் பெரும் ஆதரவாகவே இருந்ததாகக் குறிப்பிடுவார்.
பாட்டி நன்றாகப் பாடுவார் என்றாலும் ’பாட்டி என்றால் கதை சொல்லி’ என்று கதைப்புத்தகங்கள் மூலம் புரிந்திருந்த நான் கதை சொல்லும்படி அவரை நச்சரிப்பேன்.
அப்போதெல்லாம் ஒரே ஒரு பாட்டைத் தான் பாடுவார்:
“பொறந்த கதை சொல்லவா
வளந்த கதை சொல்லவா
மதி கெட்ட மன்னனுக்கு மாலையிட்ட கதை சொல்லவா
மதியுள்ள மக்களைப் பெத்த கதை சொல்ல்வா
மதி கெட்ட மக்கள் கிட்ட மாட்டிக்கிட்ட கதை சொல்லவா”
பொதுவாக ’வளந்த கதை’ வரும் போதே ”போ பாட்டி” என்று ஓடி விடுவேன். ஒரு நாள் முழுக்கதையும் கேட்கலாமென்று,
“மதி கெட்ட மன்னனுக்கு... அந்த கதை சொல்லு” என்றேன்.
அவ்வளவு தான். இளம் வயதில் மூன்று பிள்ளைகளுடன் தன்னைத் தவிக்க விட்டு ஓடி விட்ட தாத்தாவைப் பற்றி ஒரு மூச்சு அழுது தீர்த்தார். ஏண்டா கேட்டோமென்று ஆகிவிட்டது எனக்கு. மதியுள்ள மக்கள் யாரென்றால் என் அத்தை, அப்பா, மற்றும் சித்தப்பாவாம்.
அது சரி, ”மதிகெட்ட மக்கள்னியே அது யாரு பாட்டி” என்றால்.
பழிப்பது போல் கையை முன்னே நீட்டி ரகசியமாக, ”ஹூம்.. உன் அம்மாவும் அண்ணனும் தான். என்னைப் பாடாப் படுத்தறாங்களே” என்றார். நான் ஓடிப் போய் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட்டேன். அப்புறம் வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. J
ஆனால் அது ஏதோ சண்டை போட்ட தருணம் போல. உண்மையில் அம்மாவுக்கும் பாட்டிக்கும் பரஸ்பரம் மரியாதையும் அன்பும் இருந்தன.
ஆனால் அண்ணன் இருக்கிறானே. எனக்கு அடுத்தபடி அவனிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டது பாட்டி தான். அவரது மூக்குக் கண்ணாடியை எடுத்து ஒளித்து வைத்து விடுவான். அதுவும் சரியாக வாரப்பத்திரிகை வீட்டுக்கு வரும் நாளன்று. ”அவனே! இவனே! அதுல போறவனே...இப்படியானவனே..” என்று வாய்க்கு வந்தபடி புலம்பவிட்டுப் பிறகு கொண்டு வந்து தருவான்.
அது மட்டுமல்ல.. பாட்டிக்குத் தான் முதலில் டிபனோ சாப்பாடோ தருவார் அம்மா. என் அண்ணன் எங்கிருந்தாவது வந்து விடுவான்... “ஆஹா, வெட்டு வெட்டுன்னு வெட்றியே” என்பான். ”ஊருக்கு முன்னாடி வந்து உட்காந்துகிட்டுப் பூந்து வெளயாடுற” என்று ஏதாவது சொல்வான். அம்மா எவ்வளவு திட்டினாலும் கேட்கமாட்டான்.
பாட்டிக்கு இவன் விளையாடுவது கொஞ்சமும் பிடிக்காது. திட்டிக் கொண்டே இருப்பார். ஆனாலும் அவன் தான் செல்லம். ஏதாவது வாங்கி வந்தால் முதலில் அவனுக்குத் தான் கொடுப்பார். அது ஏனென்று எனக்கும் அக்காவுக்கும் புரிந்ததே இல்லை.
ஆனால் என்னையும் அக்காவையும் கூடப் பாட்டிக்கு ரொம்பப் பிடிக்கும். அக்கா வேண்டி வேண்டிப் பிறந்த முதல் பெண் என்பதால் மகாலட்சுமி என்றும் வெகு காலம் கழித்துப் பிறந்த (கிட்டத்தட்ட எதிர்பாராமல்!) என்னைப் போனஸ் பிள்ளை என்றும் கொஞ்சுவார்.
பாட்டிக்குப் பிடிக்காத இன்னொன்றைச் செய்வதில் நானும் அண்ணனும் ஒற்றுமையாகக் கூட்டு சேர்ந்து கொள்வோம். அதாவது அவர் தூங்கும் போது முகத்தருகே ஓலை விசிறியால் வேகமாக விசிறுவது. அது தப்பென்றெல்லாம் அந்த வயதில் தெரியவில்லை; இப்போது வெட்கமாக இருக்கிறது. விழித்துக் கொண்டு கத்திக் கூப்பாடு போடுவார். ஆனால் அவர் கத்துபவராக இருந்ததனாலேயே எங்களின் இந்தச் சீண்டல்களுக்கு ஆளானாரோ என்று தோன்றுகிறது.
ஆனால் இச்செயலை நினைத்து நானும் என் அண்ணனும் விக்கி விக்கி அழுத நாளும் வந்தது. பாட்டி இறந்த போது கூடத்தில் அவரைக் கிடத்தி இருந்தனர். அப்போது ஈ, கொசுக்களை விரட்ட அருகே அமர்ந்திருந்த என்னையும் அண்ணனையும் அவ்ர் முகத்தருகே விசிறுமாறு கையில் விசிறியைக் கொடுத்தனர். அதுவரை சோகம் பெரிதாக பாதிக்காத எங்கள் குழந்தை உள்ளங்களுக்கு பீறிட்டு வந்தது அப்படி ஒரு அழுகை. என்னால் மறக்க முடியாத சம்பவம் அது.