Friday, December 13, 2013

நீ...



ஜெயிக்கும் போது பரவசத்திலும்
தோற்கும் போது ஆங்காரத்திலும்
மீண்டும் மீண்டும் மீளவிடாத
மாய‌ச் சுழ‌ற் சூதாட்ட‌ம்






Wednesday, December 4, 2013

இந்தியாவின் கலாசார உயரடுக்கின் பெண் வெறுப்பு (கவிதா பானோட் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

சென்றவாரம் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய விஷயம் நடந்தேறி இருக்கிறது. அதிகாரமும்  செல்வாக்கும் மிக்க தனது மேலதிகாரியை எதிர்த்துக் குரல் எழுப்பிய ஒரு பெண்ணின் துணிச்சலின் விளைவு, அதிகம் படித்த நவநாகரிகமான, நகரமயமாகிய, நுனிநாக்கில் ஆங்கிலம்பேசும் கலாசாரத்தைத் தழுவிய வர்க்கம் முதன் முறையாக, தன்னைத் தானே
உற்று நோக்கிக் கொள்ளும்படி, வெகுகாலமாகத் தான் அடைகாத்து வரும்
ஆணாதிக்கத்தையும் பெண்கள் மீதான காழ்ப்பையும் எதிர் கொள்ள நேரிட்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக இதே வர்க்கம் தான், தங்களை விட இளைத்த வர்க்கங்களிடையே நிலவும் ஆணாதிக்க மனப்பான்மையை - காவல்துறையினர், மத அடிப்படைவாதிகள், பண்படாத அரசியல்வாதிகள், உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த நடுத்தர மக்கள், அல்லது தெருவில் பெண்களிடம் வம்பிழுக்கும் காலிகள் - இவர்களையெல்லாம் ஓயாது
கண்டித்தும், ஏளனம் செய்தும், தோலுரித்துக் காட்டியும் வந்துள்ளது. ஆனால், இந்த உயர்ந்த வர்க்கத்தினரைச் சேர்ந்த ஆண்கள் ஒரு போதும் பெண்களிடத்திலான தங்களது கண்ணோட்டத்தைச் சுயபரிசீலனை செய்து கொண்டதில்லை. போலவே இவ்வர்க்கத்தின் பெண்களும் இவர்களின் ஆணாதிக்கப் பார்வையைப் பலவழிகளில் அனுமதித்து வருவதோடல்லாமல், கண்டும் காணாமலும் செல்வதுமான தங்கள் குற்றத்தை உணர்ந்ததுமில்லை.

இந்தச் சம்பவமோ அதற்கு ஷோமா சௌத்ரியின் எதிர்வினையோ எனக்குச் சிறிதும் வியப்பளிக்கவில்லை. நான் பார்த்த வரை மிகவும் முற்போக்கான, பரந்த நோக்குள்ளதாகக் கருதப்படும் ஆங்கில ஊடகங்கள், மற்றும் கலை இலக்கிய உலகில் பெண்களைப் பற்றி மிகவும் பிரச்னைக்குரிய பார்வைகள் ஆழமாகப் பதிந்திருப்பதையும், அது குறித்து எந்த ஆணோ பெண்ணோ கேள்வி எழுப்பாமலிருப்பதையும் எப்போதோ கண்டு கொண்டேன்.

ஆண் எழுத்தாளர்களின் பலரது படைப்பில் இதைக் காணலாம்.  சல்மான் ருஷ்டி முதல் இந்தத் தலைமுறையைச் சார்ந்த சமித் பாசு, பலாஷ் கிருஷ்ண மெஹ்ரோத்ரா வரை; அவர்களது பெண் பாத்திரங்கள் (நாயகிகள்) பெரும்பாலும் பக்குவப்படாத கற்பனை மிஞ்சிய உருவங்களே ஒழிய முப்பரிமாணமும் கொண்ட பெண்களாக இருப்பதில்லை. ஐம்பதுகளில்
யஷ்பால் எழுத்தில் உருவான இந்தித் திரைப்படங்களின் நாயகிகள் உருவாக்கப்பட்ட அதே கரிசனம், புரிதல், மற்றும் செறிவுடன் தங்கள் பெண் பாத்திரங்களை உருவாக்கும் இந்த ஆங்கில ஆண் எழுத்தாளர்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

பெண்கள் மீதான இவர்களது காழ்ப்பு அவர்களது முகநூல் சுவர்களில் தெறிக்கிறது; உடலுறவு பற்றிய அவர்களது நிலைச்செய்திகளில், அழகிய, பெருமைக்குரியவர்களாகக் கருதப்படும் பெண்களுடனான அவர்களது புகைப்படங்களில். அவர்கள் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்களில், விருந்துகளில், உரையாடல்களில், அலுவலகங்களில் எல்லாம் அது வெளிப்படுகிறது. ’கெட்ட பசங்க’ படிக்கும் புத்தகங்களில் கூட. பெருமதிப்பிற்குரிய எழுத்தாளரும் ஆசிரியருமான ஒருவர் தனது மாணவியையும் புகழ்வாய்ந்த பத்திரிகையாளர் கூட வேலை பார்க்கும் பெண்ணைப் பாலியல் ரீதியாகச் சீண்டியதும் இங்கே சகஜமாக நடந்துள்ளது. ஆண்கள் இதழான மேக்ஸிம் இந்தியாவுக்காக எழுதும் ஆண் எழுத்தாளர்கள் பலர் செல்வாக்குள்ள அழகுப் பெண்களைப் புகைப்படங்கள் எடுக்கும்
முகமாகத் தாங்கள் எளிதில் தொடர்பு கொள்வது பற்றிப் பீற்றிக் கொள்பவர்கள் தாம். இவர்கள் தாம் (எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வலைப்பூ எழுத்தாளர்கள்) ஆபாசக் கார்ட்டூன் மீது அரசு கொண்டு வந்த தடையை எதிர்த்துப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய வீரர்கள்.

இதைப் போல் கணக்கிலடங்கா எடுத்துக்காட்டுக்களை என்னால் தரமுடியும், எப்படி இந்த அறிவு ஜீவி ஆண்கள் பெண்களை வெறும் கண்ணுக்கழகான கைக்கடக்கமான காமப் பொருட்களாகப் பார்க்கிறார்கள் என்று. ஆம், அப்படிப்பட்ட பார்வைக்கும், அப்பொருட்களை எங்கு எப்போது விரும்பினாலும் நுகரலாம் என்ற மனப்பான்மைக்கும் வெகு தூரமில்லை; ஒரே சீரான சரிவுதான்.

இந்தச் சூழலில், இப்படிப்பட்ட ஆண்களுடன் வேலை செய்தும் வாழ்ந்தும் வருகிற நிலையில் பெண்கள் தங்கள் இயல்புக்காகவே நேசிக்கப் படுவோம் என்று எதிர்பார்க்க முடியாது. தாங்கள் செய்யும் வேலைக்காகவே மதிக்கப்படுவோம் என்றும் கருத முடியாது.

உண்மை என்னவென்றால் முன்னேறியாக வேண்டுமென்றால் மிதமான ஆணாதிக்கப் பார்வையைக் கண்டும் காணாது இருக்க வேண்டும். தங்கள் மூளைக்குள் ஒலிக்கும் அந்த முரணான குரலை அடக்கி விட்டு, தங்கள் அறிவுக்கும் திறமைக்குமான சலுகைகள் தாம் அளிக்கப்படுவதாக நம்பிக் கொள்ள வேண்டும். ஆனால், மீண்டும் மீண்டும், உடல்சார்ந்த பண்டங்களாக மட்டுமே குறுக்கப் படுகின்றனர் பெண்கள். இங்கே அப்படிப் பாதிக்கப்பட்டவரில் ஒருவர் தான் தெகல்காவின் அந்தப் பெண் ஊழியர். ஆம், திங்க் நிறுவனத்தால் (தெகல்காவுடன் சம்பந்தப்படாத) அவர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்.

பெரிய இடத்து விருந்தினர்களான டி நீரோ போன்ற ஆட்களைக் கவனித்துக் கொள்ள, விழாவைத் தொகுத்தளிக்க உதவும் அழகிய முகமாக.

இருவரும் மனமொத்து நிகழ்ந்ததாக அந்தச் சம்பவத்தைத் திருத்தி எழுத முனைந்த தேஜ்பாலின் தனிப்பட்ட இமெயிலுக்குப் பதிலிறுக்கும் விதமாக அந்தப் பெண் எழுதுகிறார் - “புயலும், இடிமேகங்களும் அல்ல, நான் எந்த அலுவலுக்காக அன்று உங்களைச் சந்தித்தேன் என்பது உங்கள் நினைவில் இருந்திருக்கக் கூடாதா என்று ஆதங்கப்படுகிறேன்...நமது உரையாடல் விளையாட்டாகவோ சரசம் நிறைந்ததாகவோ இருக்கவில்லை; நீங்கள் காமம் குறித்தும் உடலுறவு குறித்தும் பேசிக் கொண்டிருந்தீர்கள்.
ஏனென்றால் எப்போதுமே என்னிடம் அப்படிப்பட்ட பேச்சைப் பேசவே விரும்புவீர்கள்; என் வேலையைப் பற்றி அல்ல.”

ஒவ்வொரு பெண் ஊழியரும் இதைச் சந்திக்கிறார்.
நான் ஓராண்டு வெகு உற்சாகத்துடனும் கடமையுணர்ச்சியுடனும் ஓஷியன்ஸ் இலக்கிய நிறுவனத்தில் உதவியாசரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கு என் பணி முடிவுக்கு வந்த விதம் இவ்வாறானது. பிரபல நடிகரொருவர் பங்கேற்கவிருந்த அலுவலக விழாவொன்றில் மேடை மீது ஒரு
விளம்பர அட்டையைத் தாங்கியவாறே ஒய்யார வலம் வருவதற்கு என்னையும் உள்ளிட்ட ஒன்பது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எங்கள் விருப்பம் குறித்துக் கேட்கப்படக் கூட இல்லை, என்னவோ அது எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு பெருமை போல. புதிதாகச் சேர்ந்திருந்த முன்னாள் மாடல் ஒருவர் எங்களுக்கு எப்படி நடப்பது, என்ன உடுத்துவது என்றெல்லாம் கற்றுத் தருவார் என்றும் சொல்லப்பட்டது. நானும் கலை வரலாற்று நிபுணர்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்த இன்னும் இரு பெண்களும் இதற்கு மறுத்தோம்.

’நாங்கள் இதைச் செய்யமாட்டோம், இதற்காக இங்கே நாங்கள் பணிக்கமர்த்தப்படவில்லை’

என்று சுட்டிக் காட்டினோம். சினமுற்ற எங்கள் முதலாளி ’சொன்னபடி செய்யாவிட்டால் ராஜினாமா செய்துவிடுங்கள்’ என்று சீறினார். நான் ராஜினாமா செய்தேன் - எனக்கு இயன்ற அந்த வசதி பலருக்கும் இருக்காது, என்னுடன் சேர்ந்து போராடிய அவ்விரு பெண்களுக்கு உட்பட.

கலை, ஊடகம் மற்றும் பதிப்பகத் துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக தேஜ்பால் மற்றும் என் முன்னாள் முதலாளி போன்ற சக்திவாய்ந்த ஆண்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றன. அசைக்கமுடியாத ஆதிக்கம் செலுத்திவரும் இந்த கடவுளர்களின் தலைமையில் அவை சமயமரபுகள் போல் விளங்கி வருகின்றன. ஊழியர்களோ, குறிப்பாகப் பெண்கள் அவர்களைச் சுற்றி பக்தைகள் போல் வலம் வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகப் பெண்கள் தலைமைப் பொறுப்புகளை ஏற்கத் தொடங்கி இருந்தாலும் அவர்கள் ஆண்கள் சென்ற அதே பாதையைத் தான் பின்பற்றுகின்றனர்; அவர்கள் நடத்தியது
போலவே, அதே சக்தியை உள்வாங்கிக் கொண்டு; தங்கள் நிறுவனத்தின் ஏனைய பெண்களை அதே போல் குறைந்தபட்ச மரியாதையோடு.

நான் ராஜினாமா செயததைக் கேட்டு எனது உடனடி மேலதிகாரியான பெண்மணி ஒன்றுமில்லாததை நான் காரணமில்லாமல் பெரிதுபடுத்திவிட்டதாக மிகவும் கோபமடைந்தார். தனது பதினைந்து ஆண்டு பத்திரிகை மற்றும் பதிப்பகத்துறை அனுபவத்தில் இது போல் என்னவெல்லாமோ செய்து தான் முன்னிலைக்கு வரவேண்டி இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும் இச்சம்பவத்தை நான் பகிர்ந்து கொண்ட வேறொரு
பெண் பத்திரிகை ஆசிரியரோ அலட்சியமாகத் தோளைக்குலுக்கினார். ’அழகான இளம் பெண்களை’ நிறுவனங்கள் இவ்வாறு பயன்படுத்திக் கொள்வது எங்கேயும் நடப்பது தான். அவ்வளவு ஏன், தான் கூட தனது அழகைப் பயன்படுத்தித் தான் பணியாற்றும் இடங்களில் சலுகைகள் பெறத் தயங்கியதே இல்லை என்றும், முக்கியமான கூட்டங்களுக்குச் செல்லும் போது அழகாக உடையணிந்து கொண்டு போய் நினைத்ததைச் சாதித்ததுண்டு என்றும்
கூறினார். இதே ஆசிரியர் தான் சமீப காலமாக இந்தியாவுக்கு மேற்கத்திய மாடல்கள், கவர்ச்சி நடிகைகள் எழுதிய டயட் மற்றும் உடற்பயிற்சி புத்தகங்கள், மில்ஸ் அண்ட் பூன் காதல் புத்தகங்களின் இந்தியப் பதிப்புகள், மற்றும் சிக் லிட் என்று சொல்லப்படும் இளம்பெண்களைக் குறிவைக்கும் காதல் கதைகள் போன்றவற்றை இந்தியாவுக்க்க் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இங்கிருக்கும் சந்தையின் தேவையைப் பூரித்தி செய்வதாகச் சொன்னாலும், மேற்கத்திய முதலாளித்துவ மாதிரியைக் கொண்டு இந்தச் சந்தையை
உருவாக்கியதே இவர் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் தாம்.

இந்த உயரடுக்கு உலகத்தின் பிரச்னைகளில் பெரும்பங்கு வகிப்பதே கண்மூடித்தனமாக மேற்குலக நாகரிகங்களைத் தழுவும் முயற்சியில், அதன் ஆண் முதலாளித்துவத்தையும் உடல் மற்றும் பாலியல் சுதந்திரத்தை மட்டுமே குறிக்கோளான அதன் பெண்ணியச் சிந்தனைகளையும் சேர்த்துத் தழுவி, சிதைந்து போனதொரு கலாசாரத்தைத் துப்பி இருக்கிறது; இதில் பெண்கள் வெறும் போகப் பொருட்களாக மாறிப் போனது மட்டுமன்றி தாங்கள் விரும்பி போராடிய சுதந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதாக நம்பவும் ஆளாகி
இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் ஒரு குறிப்பிட்ட வர்க்கப் பெண்கள் - நகரத்தின் மேல்தட்டுப் பெண்கள் தங்களைப் பெண்ணியவாதிகளாக நம்பிக் கொண்டாலும் தாங்கள் மேலே செல்ல இயலாத முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டிருப்பதை உணரவில்லை. மாறாக, பெண்களைக் காமப் பொருட்களாகச் சித்தரிக்கும் விளம்பரங்கள் மீதான தடைகளை அகற்றக் கோரி கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். வோக், காஸ்மாபாலிடன், எல்லி, போன்ற பளபளக்கும் மேற்கத்திய ஃபேஷன் இதழ்களில் பணியாற்றுகிறார்கள்,
மாடல்களாகக் கூட; தாங்கள் பெண்ணியவாதிகள் என்று பறைசாற்றியபடியே.

மேட்டுக்குடியின் பெண்ணியப் போராட்டங்களெல்லாம் கீழ்த்தட்டு மக்களின் ஆண்களையே குறிவைக்கின்றன. ஆண் பெண் இருபாலரும் எழுதும் அப்படிப்பட்ட எழுத்துக்களிலும் பிங்க் ஜட்டி, mend the gap, slut walk, blank noise project campaigns உள்ளிட்ட போராட்டங்களிலும் நிலவும் வர்க்கக் காழ்ப்பு என்னை வருந்தச் செய்கிறது.

எளிய வர்க்கத்தினர் பல உண்மையான பிரச்னைகளைச் சந்தித்து வரும் நிலையில், இந்த மேல்தட்டு எழுத்துக்களும் போராட்டங்களும் தெருவில் போகும் அந்த நாகரிகம் குறைந்த ஏழை மனிதன் மீதிருக்கும் இவர்களது ஆழ்ந்த அச்சத்தைத் தான் வெளிப்படுத்துகிறது.  அலுவலகத்தில் மிகவும் எளிமையான, ஆங்கிலம் பேசத்தெரியாத ஒரு குமாஸ்தாவை அவனது மதஅடிப்படைவாதத்துக்காக இவர்கள் ஏளனம் செய்வதாகத் தான் அமைகிறது.
அவன் மதஅடிப்படைவாதியோ இல்லையோ அது பொருட்டில்லை.

உண்மையில் மேல்தட்டுப் பெண்களுக்கு உள்ள சக்தியையும், உழைப்பாளி மற்றும் கீழ் நடுத்தர வர்க்க ஆண்களின் மேல் இவர்களுக்குள்ள ஆதிக்கத்தையும், (தெருவில் விசிலடித்துத் திரியும் தருணங்களைத் தவிர) உணர்ந்து கொள்ள அதிகம் யாரும் முயற்சி எடுப்பதில்லை.

ஆகவே ”ஸ்லட்” (பாலியல் சுதந்திரம் பெற்ற பெண் - ஆங்கிலத்தில் மிக மரியாதைக் குறைவான சொல்) ஆகவும் ’பப்’களுக்குச் செல்வதற்கும் தங்களுக்கு வேண்டும் உரிமைக்காகவும் போராடுவது, மேற்குலகில் ஆனது போல் பெண்களுக்கு இன்னொரு சிறையாகத் தான் முடியும். - அது இன்னும்  ஆபத்தான சிறை, ஏனெனில் அங்கு பெண்கள் தாங்கள் சுதந்திரம் அடைந்து விட்டதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.

ஆணாதிக்கம், பாலியல் சில்மிஷங்கள், இவையெல்லாம் ’அறியாமையில் திளைக்கும்’ பாமர மக்களோடே சார்புபடுத்திப் பார்க்கப் படுவதால், மேல்தட்டுப் பெண்களுக்கு தாங்கள் அவமதிக்கப்படுவதையும், வன்முறைக்கு ஆளாவதையும், பாலியல் ரீதியாகத் தாக்கப்படுவதையும், பொருள்மயமாக்கப்படுவதையும், உணர முடிவதில்லை. அல்லது,
அத்தகைய சூழலில் (தங்கள் தவறுகளால்) சிக்க வைக்கப்பட்டதாக உணர்வதால் பேச இயல்வதில்லை. ஏனென்றால் இவையெல்லாம், அழகான, பண்பட்ட, பரந்த நோக்குடைய பசப்புப் பேச்சுக்களால் போர்வையிடப்பட்டிருக்கின்றன. ஆகவே, வெளிப்படையான ஆணாதிக்கத்தை விடவும், பழம்பஞ்சாங்க ஆண்களின் அடக்குமுறையை விடவும் ஆபத்தானது என்று உணரவேண்டும்.

இந்தியப் பெண்கள் தற்போது தங்கள் சுதந்திரமான ஆசைகள், அபிலாஷைகள், காதல் மற்றும் உடல்ரீதியான சுதந்திரம் குறித்தெல்லாம் சிந்திப்பதால், பொதுப்புத்தியில் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்ற பிம்பங்களெல்லாம் மாறி வருகிற இவ்வேளையில்,  அதிகாரபலம் வாய்ந்த ஆண்கள், குறிப்பாக நவநாகரிகமான மேல்தட்டுப் பிலுக்கர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள முனைகிறார்கள்.

அவர்களது செய்கைகளுக்கு நீங்கள் பணியாவிட்டால் நீங்கள் முற்போக்கானவள் இல்லை, பழமையான கட்டுப்பெட்டித் தனமானவள் என்பது தான் உங்களைச் சிக்கவைக்கும் கணக்கு. “ஒருவருக்கு மேற்பட்டவரை நீ காதலிக்கலாம்” என்றிருக்கிறார் தேஜ்பால், அப்பெண்ணிடம், கிட்டத்தட்ட ஒரு சவாலை முன்வைப்பது போல்.

காதல் இங்கு எங்கு வந்தது? ஆண்கள் பெண்களை அவர்கள் இயல்புப்படியே பார்க்க இயலாத வரை, அவர்களைத் தங்கள் சொந்த இன்பத்துகான காமப் பொருட்களாக நோக்கும் பாங்கு மாறாத வரை இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உண்மையான காதல் என்பது சாத்தியமே இல்லை.

வெளிப்படையாகப் பேசவும், தங்கள் இனத்தின் தடைகளை உடைக்கவும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் யாவையும் அவர்களைத் தங்கள் சுயவிருப்புக்காக இணங்க வைக்கவும், பின்பு அதற்கு அவர்களே காரணம் என்று சிக்கவைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தேஜ்பால் போதையேறிய தனது இமெயிலில் இவ்வாறு எழுதுகிறார்: “..அன்று நமது உரையாடல் சரசம் நிறைந்ததாக இருந்ததை நினைவு கூர்வாயாக. நாம் விளையாட்டாகவும் சரசமாகவும் காமம், உடலுறவு குறித்தும், ஒழுக்கம் என்பதன் மாயை பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். மேலும், புயல் காற்றடித்த ஒரு
நாள் மாலை, நான் இடிமேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது என்னை வந்து சந்தித்தாயே..அதையும்.”

இப்படித் தான் பெண்கள்  திறமையாகக் கையாளப்படுகிறார்கள். நடந்ததற்கு அவர்கள் தான் பொறுப்பு என்பது போலவும், எல்லாவற்றிலும் அவர்களுடைய பங்கும் இருப்பது போலவும். யாரோ ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்தால் அக்குற்றம் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் இது போன்ற சூழல்களில் பெண்கள் தாங்களும் காரணம் தானோ என்ற நினைப்பினால் பெரும்பாலும் அமைதி காத்திவிட நேர்கிறது.

ஆண் பெண் உறவுகள் மாறி வரும் கால கட்டங்களில் இது போல் இன்னும் பல
நிகழ்வுகள் அரங்கேறக் கூடும் - பெண்கள் அவற்றை உள்ளது உள்ளபடி பார்க்க
வேண்டியதும், ஆண்கள் தங்களைச் சுற்றியுள்ள பெண்களோடு எவ்விதமாகத் தங்களைப் பொருத்திப் பார்க்கிறோம் என்று ஆழ்ந்த சுயபரிசீலனை செய்து கொள்வதும் மிகவும் அவசியமாகிறது. நடந்த இந்தச் சம்பவம் நம்மை இது போன்ற முயற்சிகளுக்கு ஊக்குவிப்பதாய் அமையவேண்டும்; ஆண் பெண் உறவுகளுக்குப் புதிய நியதிகளை வரையறுக்கும் முயற்சியாய் அது அமைய வேண்டும்.

- கவிதா பானோட்
(தமிழில் தீபா)

நன்றி: www.Kafila.org
http://kafila.org/2013/12/03/the-misogyny-of-indias-cultural-elite-kavita-bhanot/

லண்டனில் பிறந்து வளர்ந்தவர் கவிதா பானோட். இந்திய-பிரிட்டிஷ் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றை இயக்குவதற்காக தில்லி வந்தவர் இந்தியாவின் முதல் இலக்கிய நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். இவரது எழுத்துக்கள் பல ஆங்கில இதழ்களிலும் தொகுப்புகளிலும்  வெளிவந்துள்ளன.





 


Monday, November 4, 2013

விஜய் சேதுபதி

வெகுநாட்கள் கழித்து நேற்று விகடன் வாங்கினேன். அட்டையில் இருந்த இந்த வாசகத்துக்காக - "விஜய் சேதுபது வின்னர் - கார்த்தி சிலிர்ப்பு"

இதழைப் புரட்டினால், சிம்புவும் தன் பேட்டியில் விஜய் சேதுபதியைச் சிலாகித்திருக்கிறார். புதிய வரவுகளில் அவர் மட்டுமே மனதில் நிற்கிறார் என்று. கார்த்தியோ “தெளிவா ஸ்க்ரிப்ட் பிடிக்கிறார்” என்று அவரது வெற்றியின் ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டது போல் பூரிக்கிறார்.

விஜய் சேதுபதி - இவரது படங்கள் வெற்றி பெறுவதன் ரகசியம் என்ன? இவரை எல்லாருக்கும் பிடிக்கும் காரணம் என்ன? அத்தனை படங்களும் வித்தியாசமான ஸ்க்ரிப்ட், புதிய இளம் இயக்குநர்கள், கண்டிராத கதை.

ஆனால் இதையே தானே தங்களது ஒவ்வொரு புதிய படத்தின் போதும் டிவி பேட்டிகளில் நமது முன்னணி நாயகர்களும் அவர்களை இயக்கிய இயக்குநர்களும் செப்பிக் கொண்டி திரிந்தார்கள்?

”இந்தப் படத்தில ரொம்ப வித்தியாசமா ஒரு ரோல் பண்ணிருக்கேன்...”

அப்படிப்பட்ட பெரிய தலைகளும் தளபதிகளும் தொடர்ந்து மண்ணைக் கவ்விக் கொண்டிருப்பது எதனால்? மக்கள் ரசனை மாறிக் கொண்டு வருகிறது, ஆரோக்கியமான மாற்றமாக அது இருக்கிறது என்று நம்பலாமா?

விஜய் சேதுபதியின் படங்களைப் பார்ப்போம். ஸ்க்ரிப்டை விடவும் அவரது பாத்திரப்படைப்புகளைப் பாருங்கள்.

மேக்கப் இல்லை, கலர் கலராய்க் காஸ்ட்யூம்கள் இல்லை, முக்கியமாக விதவிதமான ஃபாரீன் லொக்கெஷன்களில் ஹீரொயினோடு டூயட்டுகள் இல்லை. இதெல்லாம் மற்ற நாயகர்களாக் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?


பத்தடி உயரத்திலிருந்து டூப் இல்லாமல் குதிப்பதையே “ரிஸ்க்” எடுத்து நடிச்சிருக்கேன் என்று பீற்றிக் கொண்டு பேட்டி கொடுப்பவர்களுக்கு இதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ரிஸ்க் இல்லையா?
மக்கள், மாஸ் என்று மக்கள் வெறுத்துப் போகும் அளவுக்கு குப்பைகளையே வாந்தி எடுத்துக் கொண்டிருந்த நேரம் விஜய் சேதுபதி இவர்கள் எல்லாரும் வெட்கிச் சுயவிமர்சனம் செய்து கொண்டே தீர வேண்டிய வகையில் மின்னத் தொடங்கி இருக்கிறார்.

எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் ஒரு நடிகர் இந்த வித்தியாசமான முயற்சிகளைச் செய்ய முடியுமென்றால் பெற்றோர் முதுகில் சவாரி செய்தபடி, வெள்ளிக் கர்ண்டியுடன் பிறந்த நடிகர்களான, கார்த்தி, தனுஷ், சிம்பு, சூர்யா, ஜெயம் ரவி, ஜீவா போன்றோர் ஏன் செய்ய முடியாது? பதில் இது தான்...அவர்களால் முடியாது!

(தனிப்பட்ட முறையில் எனக்கு தனுஷ், ஜீவா இவர்கள் மேல் மட்டும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்கள், ம்ஹூம்!)

ஏன்? இவர்களுக்கெல்லாம் அழுக்கு லுங்கி, சவரம் செய்யாத தாடியுடன் இவர்கள் ”வித்தியாசமாக” நடித்தாலும் நாயகி ஒருத்தி அவருடன் படுப்பதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு பின்னாடியே திரிய வேண்டும். ஹீரோயிசம் காட்ட வேண்டும். ”தலைவா!” என்று மூடரசிகன் கோஷமிட்டுப் போதையேற்ற வேண்டும். அடுத்த படமே அதே ரசிகனைக் குஷிப்படுத்தும் போர்வையில், அழுக்கு இமேஜைப் போக்கிக் கொள்ளும்

வெறியுடன் பளபளப்பான உடையணிந்து நாயகியின் இடுப்பைக் கிள்ள வேண்டும். இதெல்லாம் செய்யாவிட்டால் மூச்சடைத்து இவர்களது சினிமா வாழ்க்கையே ஸ்தம்பித்து விடுமே?

(சூது கவ்வும் படத்தில் நாயகி கவர்ச்சியாகக் காட்டப்பட்டிருப்பதாகச் சிலர் வாதாடலாம். மற்ற படங்களை ஒப்பிடும் போது அவர் மிகவும் கண்ணியமாகவே குறிப்பிடப் பட்டதாகத் தான் கருத வேண்டும்.) முட்டாள்தனமான ஹீரோயிச்ங்கள் இல்லாத படங்களில் தான் நாயகிகளுக்கும் இடம் இருக்கும்.  பெண்களின் உடலை மட்டுமே பிரதானமாக விற்பனை பொருளாக்கும் நோயும் சினிமாவை விட்டு விலகும்.

விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல விஜய் சேதுபதிக்களும், பாலாஜி தரணீதரன்களும், நலன் குமாரசாமிகளும், கோகுல்களும் வர வேண்டும். மற்றவர்கள் இப்போதாவது கற்றுக் கொண்டால் மொத்தமாக எல்லாருக்கும் நல்லது; குறிப்பாக சினிமாவுக்கும் சமூகத்துக்கும்.