Showing posts with label சமுகம். Show all posts
Showing posts with label சமுகம். Show all posts

Tuesday, March 17, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்

சில நாட்களுக்கு முன் இந்தத் தலைப்பில் அருமையாக எழுதி தொடங்கி வைத்து யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று குறிப்பிட்டு இருந்தார், அமிர்தவர்ஷினி அம்மா.  அதனால் என் பதிவு இதோ!

1. மோகன்

எங்கள் வீட்டில் அப்பாவுக்கு உதவியாளராக இருந்தவர்.  அவருக்கென்று குடும்பம் இல்லை. தம்பி குடும்பம் தான் இருந்தது.  நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என் அப்பாவிடம் வேலை பார்த்து வந்தார். அவருக்குச் சம்பளமெல்லாம் கிடையாது. எங்கள் வீட்டில் ஒருவ்ராக இருந்து கொண்டு எல்லா வேலைகளும் செய்தார்.

வெடவெடவென்று வெகு ஒல்லியான உருவம். வெண்ணிற தலை முடியும் தாடியும், கழுத்தில் சில ஜெப மாலைகள் என்று  ஒரு ரிஷி போலவே இருப்பார்.

கடை கண்ணிக்குப் போய் வருவது, டெலிபோன், எலக்ட்ரிசிட்டி பில் கட்டுவது, பாங்குக்குப் போவது, இது போன்ற வழக்கமான வேலைகள் தவிர ஒரு காலகட்டத்தில் அப்பாவின் துணிகளைத் துவைப்பது, தண்ணீர் தட்டுப்பாடு இருந்த போது நாலு தெரு தள்ளிப் போய் குடங்களில் தண்ணீர் பிடித்து வருவது உட்பட மாடாக உழைத்திருக்கிறார்.

எங்கள் வீட்டுக்கு மட்டுமல்ல, எங்கள் தெருவில் பல வீடுகளில் பில் கட்டுவது வங்கிக்குப் போவது போன்ற பல வேலைகளுக்கு இவரை நம்பி இருந்தனர். பதிலுக்கு அவர்கள் எது கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கிக் கொள்வார்.

ஆனால் குசும்பும் கொஞ்சமும் குறையாதவர். குறிப்பாக என்னைச் சீண்டிக் கோபப்படுத்துவது அவருக்கு மிகவும் பிடிக்கும்.   எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். எங்கிருந்தோ ஒரு கறுப்பு நாய்க்குட்டி ஒன்றைக் கொண்டு வந்தார்.  அது என்னவென்று நான் கேட்க ”இது முயல் குட்டி, வளர்ந்த பின்பு தான் முயல் மாதிரி அழகாக  இருக்கும். ” என்று சொல்லிவிட்டார்.  நானும் அக்கம்பக்கத்து சிறுவர்களை ”முயல்குட்டியை”ப் பார்க்க அழைத்து அசட்டுப்பட்டம் கட்டிக் கொண்டேன்.

அந்த நாய்க்குட்டி பத்து வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்தது. இவருக்குத் தான் அது மிகவும் செல்லம்.

எப்போதாவது சில நாட்கள் தண்ணியைப் போட்டு விட்டு மொட்டைமாடியில் போய்ப் படுத்துக் கொண்டு பாட ஆரம்பிப்பார்.  அதுவும் சின்ன வயதில் தான் மதிக்காமல் போய்விட்ட தன் அம்மாவை நினைத்துக் கொண்டு.  அது தான் கொஞ்சம் தாங்க முடியாது. அப்பா போய் அதட்டிய பிறகே கச்சேரி நிற்கும்.

எது எப்படியோ, குழந்தைகளான எங்கள் மீது ரொம்பப் பாசம் வைத்திருந்தார்.  வீட்டுக்கு வருபவர்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்தால் எங்களைப் பற்றித் தான் ஆசையோடு பேசிக் கொண்டிருப்பார்.

பத்து வருடங்களுக்கு முன் உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் போய் விட்டது. கண் பார்வையும் போய் சிகிச்சை பலனளிக்காமல் காலமாகி விட்டார்.  அவரைப் போல் ஒரு மனிதரை இனி பார்க்கவே முடியாது.

(அவருடம் எடுத்த போட்டோ ஒன்று உள்ளது.  தேடி எடுத்து இப்பதிவில் போடுகிறேன். )