Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Monday, September 13, 2010

பாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்

இணையம், பதிவுலகம், குழுமங்கள் என்பதெல்லாம் எந்த அளவுக்கு மனிதர்களை இணைக்கின்றனவோ அதே அளவு பிரச்னைகளையும் கொண்டு வருகின்றன‌. முகம் தெரியாத யாருடனோ chat செய்யும் போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்...

இல்லை இல்லை... ஆண்களுக்குத் தான் பிரச்னை அதிகமாக இருக்கிறது. அவர்களுக்காகப் போராட யாருமே வருவதில்லை.

:((

பதிவுலக ஆண்களின் பரிதாபநிலை கண்டு ஒரு பெண்ணாக வெட்கப்படுகிறேன் என்று எழுதினால் என்னை பெண்ணாதிக்கவாதிகள் குதறிவிடுவார்கள் என்று பயப்பட்டு ஒன்றும் சொல்லாமல் போகிறேன்...

சரி, விஷய‌த்துக்கு வருவோம்...பாதுகாப்பாகச் chat செய்ய என்ன வழி?
10...................

9.................

8.........

7........

6......

5. கணினியை ஆஃப் செய்யுங்கள்.

4. தொலை பேசியில் மறந்து போன பழைய நண்பர்கள் எண் இருக்கும். தேடி எடுத்து மனம்விட்டுப் பேசுங்கள்.

3. மூலைத் தெருவில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் போரடித்துக் கொண்டிருப்பார். அவரிடம் சென்று chat செய்யுங்கள்.

2. அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் செல்லுங்கள்; முடிந்தால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு.

1. அவர்கள் வீட்டிலிருப்பவர்களுடன் அளவளாவுங்கள். குழந்தைகளை விளையாட விடுங்கள்.

இவைதான் எனக்குத் தெரிந்த சில‌ பாதுகாப்பான chat வழி முறைகள். இன்னும் இருந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

Friday, September 18, 2009

ஒரு பக்கம் ரைம்ஸ்.. ஒரு பக்கம் ப்ளாக்!

ஒரு சின்ன ப்ளாஸ்டிக் பட்டையில் இரு கருநீலக் கோடுகளாகத்தான் அவளை முதலில் சந்தித்தேன்.

இப்போதானால் அவள் அப்பா பாஷையில் ”ரௌடிக்” குட்டியாக வளர்ந்து எல்லோரையும் அரட்டிக் கொண்டிருக்கிறாள்.

நேஹா!

நீ நல்ல பிள்ளையாக உன் தாத்தா பாட்டி வீட்டில் இருந்து கொள்வாய் என்று அம்மாவுக்கு நம்பிக்கை வந்து விட்டதுடா குட்டி. அதனால் அம்மா மீண்டும் வேலைக்குப் போகலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.


இதோ உன்னை விட்டுச் சென்ற இந்த ஒரு வாரம், என்னவோ பலமான யோசனையுடன் இருப்பதாகவும், சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மிகவும் சமர்த்தாக இருப்பதாகவும் உனக்குச் சான்றிதழ் கொடுத்து விட்டார்கள்.


ஹீம்.. உன் அம்மா அவ்வளவு சமத்தில்லையடி! நிச்சயம் முன் போல இல்லை அலுவலுக்குச் செல்வது. அலுவலக நேரத்துக்கு அரைமணி நேரம் முன்பாக எழுந்து அவசர அவசரமாகக் கிளம்பி காலை உணவுக்கு எதையோ சாப்பிட்டு, வேலைக்குச் சென்று மாலை அடைந்து கொள்ளும் கூடு என்பதைத் தவிர வீட்டு நினைப்பே வராது.

இப்போது....
எத்தனை முறை கேட்டாலும் ”அம்ம்ம்மா” சொல்லு என்றால் ”அப்பா” தான் சொல்வது! சொல்லி விட்டு என்னைப் பார்த்துக் குறும்பாகச் சிரிப்பது;


நான் லயித்து டி.வி பார்க்கும் போது ரிமோட்டை எடுத்து ஆஃப் செய்து வீசி விட்டு வந்து என் மடியில் அமர்ந்து கொள்வது;

கொஞ்சம் தெருவில் வைத்து வேடிக்கை காட்டச் சென்றால் யாராவ்து சிறுவர்களைப் பார்த்து விட்டால் இடுப்பை விட்டு இறங்க வேண்டுமென்று அடம்பிடிப்பது;

எதற்காகவாவது சட்டை மாற்றி விட்டாலும் கைகளை ஆட்டிக் கொண்டு “டாட்டா, ஆட்டோ” சொல்வது...


சரி சமத்தா விளையாடிட்டு தானே இருக்கா என்று நான் சாப்பாட்டில் கை வைத்தவுடன், பருப்பு, உளுந்து, தண்ணீர் என்று எதையாவது தரையில் கொட்டி எனக்கு வேலை வைப்பது;

இன்னும்.. இன்னும்..இப்படி ஒரு கணமும் உன்னைப் பிரியாமல்
இதையெல்லாம் ரசித்து, உன்னுடன் போராடி, மல்லுக் கட்டி, உன்னைத் தூங்க வைத்து விட்டு ரகசியமாய், மறக்காமல் ஸ்பீக்கர்ஸை ம்யூட் பண்ணி விட்டுக் கணினியை ஆன் செய்தாலும் எப்படியோ இடையில் கூக்குரலுடன் எழுந்து விடுவது!

இதெல்லாம் அனுபவிக்க மாலை நேரங்களிலும் வாரஇறுதியிலும் மட்டுமே எனக்கு சாத்தியப்படும் என்று நினைக்கும் போதே சொல்லத் தெரியாத ஏதோ நெருடுகிறது மனதில்!

இருக்கிற கொஞ்ச நேரத்தில் மிக முக்கியமான பங்கு நேஹாவுக்கு என்பதால் பதிவுலகத்துக்கான நேரத்துக்கு இன்னும் மெனக்கெட வேண்டும். அலுவலகத்தில் சுத்தமாக முடியாது!

அதனால் முன்பு அளவுக்கு பதிவுகள் எழுத முடியுமா என்று தெரியவில்லை; ஆயினும்...

இதோ இக்கணம் செய்வது போல் நேஹாவை மடியில் இருத்திக் கொஞ்சிக் கொண்டே ஒரு விண்டோவில் ரைம்ஸ், இன்னொரு சின்ன விண்டோவில் வேர்ட், அல்லது ப்ளாக் திறந்து எழுதுவது வழக்கம் தான்.

- இப்படியெல்லாம் நீ எழுதலன்னு உன்னை யார் அடிச்சான்னு கேக்கறீங்களா? - உங்கள் அனைவரின் அன்பு தான்!

இல்லடா நேஹா?!

:-)

Wednesday, September 9, 2009

காதம்பரி(அம்மு) – மாதவராஜ் தம்பதியரை வாழ்த்துவோம்!




இன்று 20 ஆவது திருமண நாள் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றனர் காதம்பராஜ் – மாதவரி - :-) இல்லை, மாதவராஜ் காதம்பரி தம்பதியர்!
வாருங்கள்; வாழ்த்துவோம்!

Love does not consist in gazing at each other, but looking together in the same direction.

இந்தப் பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர்கள் அம்முவும் அங்கிளும். ஒருவர் வெற்றிக்கு ஒருவர் பக்கபலமாக வாழும் இவர்களது அன்புக்கு மேலும் அர்த்தம் சேர்க்க ஜ்யோதிஷ்னா (ப்ரீதி), நிகில்குமார் என்ற இரு செல்வங்கள் உள்ளனர்.

இந்நன்னாளில் பதிவுலகத்துடன் சேர்ந்து இவர்களை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

Tuesday, September 8, 2009

ஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு!

இந்தப் பதிவு எழுத அழைத்த முல்லைக்கு நன்றி சொல்வதா வேண்டாமா என்று முதலில் யோசித்தேன்!
:-)

பதிவுலகம் பற்றி யோசித்த போது...

”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
என்ற குறள் நினைவுக்கு வந்தது. அதன்படி பதிவுலகம் மூலம் நான் அடைந்த நன்மைகளையும் எண்ணற்ற இனிய அனுபவங்களையும் பகிரப் போகிறேன். :-)

பிளாக்கர் என்று ஒரு விஷயத்தை 2004 இல் அறிந்தேன். அதைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது, ஆர்வமும் இருக்கவில்லை.

2006 நவம்பரில் ஆங்கிலத்தில் ஒரு பிளாக் தொடங்கினேன். அதில் அவ்வப்போது தோன்றினால் ஏதாவது கிறுக்கி வைப்பேன்.
ஒரு பப்ளிக்கான டைரி போல் இருந்தது அது.
நண்பர்கள் யாராவது படித்து விட்டு கருத்து கூறுவார்கள். ஆனாலும் விடாமல் எழுதிக் கொண்டு தான் இருந்தேன். திரட்டிகள் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது.

பின்பு செப்டம்பர் 2008 – ல் மாதவராஜ் அங்கிள் தமிழில் வலைப்பூ துவங்கினார். ஜெட் வேகத்தில் தமிழ்ப் பதிவுலகம் பற்றி எல்லா நுணுக்கங்களையும், தகவல்களையும் தெரிந்து கொண்டதோடு இந்த அசமஞ்சத்துக்கும் (நான் தான்!) தெரிவித்து உதவினார். தமிழிலும் எழுதுமாறு என்னிடம் சொல்லி வந்தார்.

அக்டோபர் மாதத்தில் நானும் தமிழில் வலைப்பூ தொடங்கி அதற்கு ”உள்ளுவதெல்லாம்” என்று முதலில் பெயரிட்டேன்.

’உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற வள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப இருக்கவேண்டும் என்று உள்ளினேன்!
பின்பு பெயர் இன்னும் எளிமையாக இருந்தால் நல்லதென்று தோன்றியதால் “சிதறல்கள்” என்று மாற்றி விட்டேன்.

முதலில் கோபி தமிழ் கன்வெர்டர் பயன்படுத்திக் கொண்டிருந்தேன் பின்பு NHM writer பற்றிச் சொன்னவரும் அங்கிள் தான். வெகு நாள் ரொம்ப எழுதாமல் படித்துக் கொண்டு மட்டும் இருந்தேன். அங்கிள் பக்கத்தில் மட்டும் பின்னூட்டம் போடுவேன்.

ஏதாவது எழுதலாம் என்று ’உட்கார்ந்து யோசித்தால்’ ஒன்றுமே தோன்றாது. யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும் போது, குருட்டு யோசனையுடன் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது (குறிப்பாகப் பாத்திரங்கள் துலக்கும் போது!) ஏதாவது தோன்றும். அதையொட்டி இதைப் பதிவு எழுதலாமே என்றும் தோன்றும். பின்பு தொடர்ந்து கொஞ்சம் குறிப்புகள் யோசித்து விட்டு நேஹா உறங்கிய பின்னோ அவள் அப்பாவிடம் விளையாடிக் கொண்டிருக்கும் போதோ கணினியைத் தட்ட வந்து விடுவேன்! சில நாள் அவளை மடியில் வைத்தபடியே.

சின்னச் சின்னக் குழந்தைகளின் அம்மாக்கள் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் மழலையையும் கவிதையாகப் பதிப்பதைப் படித்துக் கிறங்கிப் போவேன்.
அவற்றில் எல்லாம் நானும் நேஹாவைக் காண்பதால் நேஹாவைப் பற்றி தனியாக நான் அதிகம் எழுதியதில்லை.

மார்ச், ஏப்ரல் 2009 முதல் தான் முழு ஆர்வத்துடன் எழுதத் தொடங்கினேன். பின்னூட்டம் மூலமாகப் பலரும் அறிமுகமாகினர். தமிழும் தமிழை நேசிப்பவர்களும் பதிவுகள் மூலம் பரவசமானதொரு வாசிப்பனுபவத்தை அள்ளி அள்ளி வழங்குவதைப் பார்த்துப் பிரமித்தேன்; பூரித்தேன்.

பலரது பதிவுகளைப் படித்து ரசிக்கத் தொடங்கினேன். வெளிப்படையாக மனம் திறந்து என் ரசனையையும், மகிழ்ச்சியையும் பின்னுட்டமாக இடத் தொடங்கினேன். நண்பர் வட்டம் விரிந்தது.

மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு அதைப் பற்றி இந்தப் பதிவு கூட எழுதினேன்! - தூக்கம் இழுக்கும் கண்களுக்குள்

எச்சரிக்கையும் நிதானமும் வாழ்வின் எல்லா சமயங்களிலும் கடைப் பிடிக்கவேண்டும் என்பதையும்; அதுவும் பெண்களிடம் சமூகம் அதைக் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளப் பதிவுலகம் ஒரு சின்ன வாய்ப்பை வழங்கியது. அதையும் நன்றியுடனே நினைத்துப் பார்க்கிறேன்.

தாய்மையும் குழந்தை வளர்ப்பும் ஒரு அலாதியான அனுபவம் என்றாலும் புறவாழ்க்கை என்பது ரொம்பக் குறைந்து போன இந்த ஓராண்டில் என் எண்ணங்களுக்கு வடிகாலையும் சஹிருதயர்கள் பலருடன் பழகி அளவளாவும் வாய்ப்பையும் வழங்கிய பதிவுலகத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாமல் எதையாவது எழுதலாம் என்ற ஊக்கத்தைக் கொடுத்தது, (சிறுகதை என்ற பெயரில் உங்களைப் படுத்தியது உட்பட) பதிவுலகம் தான்.

அது போலவே என் பக்கத்தைத் தொடரும் அன்புள்ளங்களுக்கும் தொடர்ந்து பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தும் நெஞ்சங்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிக்க விழைகிறேன்.

தொடர்ந்து நான் இணைத்து வரும் தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் திரட்டிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என் அனுபவங்களைப் பகிர அழைத்த முல்லைக்கும் மீண்டும் என் நன்றி.

இப்போது நான் அழைக்க விரும்பும் நால்வர்:

காமராஜ் அங்கிள்
அமுதா
அமிர்தவர்ஷினி அம்மா
அய்யனார்

இத்தொடர் பதிவின் விதிமுறைகளுக்கு முல்லையின் பதிவைப் பார்க்கவும்.