Showing posts with label அங்காடித் தெரு. Show all posts
Showing posts with label அங்காடித் தெரு. Show all posts

Thursday, April 15, 2010

கதைகளைப் பேசும் விழியருகே...

அங்காடித் தெரு...எல்லாரும் சென்று சிக்கி மீண்டு கொண்டிருந்த நேரத்தில் போய்ச் சிக்கிக் கொண்டேன். இன்னும் மீள‌ முடியாம‌ல் அங்கேயே உழ‌ன்று கொண்டிருக்கிறேன்.

ஒரு படத்துக்குச் சென்று டிக்கெட் இல்லை ஹவுஸ் ஃபுல் என்று சொன்னதற்காக முதன் முதலில் மகிழ்ந்தது இதற்குத் தான்! ஆம், முதல் நாள் போய்க் கேட்ட போது "பையா" க்கு வேணா இருக்கு. அங்காடித் தெரு இரண்டு நாளைக்கு ஃபுல்." என்று சொன்ன போது ஏமாற்றத்தையும் மீறி ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. யதார்த்தமான நல்ல படத்துக்கு மக்கள் அங்கீகாரம் அதிகரித்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்? அடுத்த நாள் இரவுக் காட்சிக்குத் தான் செல்ல முடிந்தது.

ப‌ட‌த்தைப் ப‌ற்றிய‌ விமர்சனமோ என் பார்வையோ எழுத என்னால் முடியாது. அதிர்ச்சி க‌ல‌ந்த‌ உண‌ர்வுக‌ளின் க‌ல‌வை ம‌னதை அந்த‌ப் ப‌க்குவ‌த்துக்குக் கொண்டு வ‌ர‌வில்லை. சுற்றி உள்ள வாழ்க்கையையே முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க வைத்த படத்தைத் தள்ளி நின்று எந்தப் பார்வை கொண்டு பார்ப்பது? எனக்கெல்லாம் இப்படிப்பட்ட படைப்புகள் பலவிதத்தில் பாடங்கள். பாடங்களை விமர்சிப்பதை விடவும அவற்றிலிருந்து ஏதாவது கற்க முடிந்தால் நலம்.

ஆனால் இசையைப் பொறுத்த‌வ‌ரை ம‌ட்டும் சொல்லக் கொஞ்சம் இருக்கிற‌து.
மூன்று பாட‌ல்க‌ள் போட்டி போட்டுக் கொண்டு ம‌ன‌தை ஆக்கிர‌மிக்கின்ற‌ன‌.

1. கதைகளைப் பேசும் விழியருகே - எப்போது கேட்டாலும் அற்புதமான அந்த ஒவ்வொரு காட்சியும் ம‌ன‌தில் திரையோடிக் க‌ண்க‌ளின் ஓர‌ம் க‌ரிக்கிற‌து.

2. உன் பேரைச் சொல்லும் போதே ‍- ஆஹா... ! சொல்ல‌ ஒன்றும் இல்லை. Wonderful rendering by Shreya Goshal and Haricharan.
இவ‌ர்க‌ள் இருவ‌ரையுமே என‌க்கு ரொம்ப‌வும் பிடிக்கும். வேற்று மொழிப் பாட‌கர்க‌ளில் த‌மிழைத் த‌மிழாக‌ப் பாடும் ஒரே பாட‌கி ஷ்ரேயா கோஷ‌ல் தான். அற்புதமான குரலும் திறமையும் ஒரு புறம்; மேலும் ஒரு மொழி தெரியாவிட்டாலும் அதன் ஜீவன் சிதையாமல் கற்றுக் கொண்டு பாடும் அவ‌ர‌து அந்த‌ சின்சியாரிடிக்கு Hats Off!

ஹ‌ரிச‌ரண்: காத‌ல் ப‌ட‌த்தில் பாடிய‌து முத‌லே இவ‌ர் all time favorite ஆகி விட்டார். எத்தனையோ பாடகர்கள் பெருகி விட்டாலும் உண‌ர்ச்சி, பாடலின் பாவ‌ம் உண‌ர்ந்து பாடுவ‌தில் இவ‌ருக்கு நிகர் இவர் தான். (உனக்கென இருப்பேன் ‍- காதல், தொட்டுத் தொட்டு என்னை ‍- காதல், சரியா தவறா ‍- கல்லூரி.)

3. அவ‌ள் அப்ப‌டி ஒன்றும் அழ‌கில்லை - ர‌ம்மிய‌மான‌ தாலாட்டைப் போல் இருக்கிற‌து. ஓகே!

இந்த அளவுக்குச் சிலாகித்துப் பின்னணி இசையைச் சொல்ல முடியவில்லை. உண்மையிலேயே பல இடங்களில் காட்சியுடன் ஒன்றுவதைத் தடுக்கும் வகையில் உறுத்தியது. அதனாலேயே அதன் பிழை கவனத்தையும் ஈர்த்தது.

கனியும் லிங்குவும் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார்கள். மறக்கவே முடியாத பாத்திரப்படைப்பு. உயிர் கொடுத்த அஞ்சலிக்கும் மகேஷுக்கும்.. ஓஹோ! பிரமிக்க வைக்கும் நடிப்பு.
மாரிமுத்து வாக வந்த் "பாண்டி" அடேயப்பா... இவருக்குள் இத்தனை திறமையா? Overall, brilliant cast.

(பி.கு 1: ராம‌னாத‌ன் தெருவுக்குச் சென்று அந்த‌ மெஸ் இருக்கிற‌தா என்றும் அதைப் பார்வையிட‌ வேண்டும் என்றும் தோன்றிக் கொண்டே இருக்கிற‌து. செய்வேனா என்று தெரியவில்லை.

பி.கு 2:
எத‌ற்காக‌ இந்த‌த் த‌லைப்பு என்று கேட்ப‌வ‌ர்க‌ள் இங்கே செல்ல‌வும்:
http://www.youtube.com/watch?v=tBkmKr0iVQk

இறுதியாக, நன்றி வசந்தபாலன்! மிக்க நன்றி.