Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Friday, April 9, 2010

எலிஃபென்ட் சாமியும் தாடி தாத்தாவும்

என் நாத்தனார் மகள் படு சுட்டி. ஒன்றரை வயதில் பேசத் தொடங்கிய அவள் மூன்று வயதுக்குள் நீட்டி முழக்கிப் பாட்டி கணக்காய்ப் பேசத் தொடங்கி விட்டாள். ஊருக்குப் போகும் போது அவள் வீட்டில் இருந்தால் பொழுது போவதே தெரியாது.

அவளது அம்மாச்சி (என் மாமியார்) பேசுவதைக் கேட்பது போலவே இருக்கும் பாவமும், பெரியமனுஷத்தனமும்.
அவள் பேசியதையெல்லாம் எழுத வேண்டுமென்றால் தனிப்பதிவே போட வேண்டும். முன்பொரு முறை போட்டும் இருக்கிறேன். இப்போது விஷயம் அதுவல்ல.

கடவுள் பக்தி அதிகம் உள்ள என் மாமியார் அவளுக்கு நிறைய ஜெபங்களூம் தோத்திரங்களும் சொல்லிக் கொடுத்திருந்தார். மேலும் "தற்குறிப்பேற்ற அணி" யாகக் குழந்தைக்கு இயற்கையிலேயே கடவுள் பக்தி அதிகம் எனவும் சொல்லி ம‌கிழ்வ‌து அவ‌ர்க‌ள் வ‌ழ‌க்க‌ம்.

ஒரு நாள் எல்லாரும் அம‌ர்ந்திருக்கத் தான் சொல்லிக் கொடுத்த‌ ஜெப‌ங்க‌ளையெல்லாம் வ‌ரிசையாக‌ச் சொல்ல‌ச் சொன்னார்க‌ள். அவ‌ள் அழ‌காக‌ ம‌ழ‌லைக் குர‌லில் சொல்லிக் கொண்டிருந்த‌தை எல்லாரும் ர‌சித்துக் கொண்டிருந்தோம். அத்தை மட்டும் க‌ண்க‌ள் மூடி ஜெபிக்க‌வே தொட‌ங்கி விட்டார்க‌ள். இறுதியாக‌ "ம‌ன்மத‌ராசா ம‌ன்ம‌த‌ராசா..." என்று அதே சிரத்தை‌யுட‌ன் குழ‌ந்தை பாட‌வும் ப‌த‌றிப் போய் அதை அத‌ட்டி உட்கார‌ வைத்தார்க‌ள்.

எல்லாருக்கும் சிரிப்புத் தாங்க‌ வில்லை. சுட்டித் தனமான குழந்தை எதைச் சொல்லிக் கொடுத்தாலும் பார்த்தாலும் பிடித்துக் கொண்டு அழகாகச் சொல்கிறது. அதன் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுங்கள் என்று சமாதானப் படுத்தினோம்.

நான் குழ‌ந்தையாக‌ இருந்த‌ போதும் இப்ப‌டித் தான் அண்ண‌னும் அக்காவும் சொல்கிறார்க‌ள் என்று ஆவேச‌த்துட‌ன் நானும் க‌ந்த‌ர் ச‌ஷ்டிக் க‌வ‌ச‌ம் முழ்தும் க‌ஷ்ட‌ப்பட்டு வாசித்து முடிப்பேன். என் அம்மாவும் "பொண்ணுக்கு என்ன‌ ப‌க்தி" என்று ம‌கிழ்ந்திருக்க‌க் கூடும். ப‌க்த‌ துருவ‌ மார்க்க‌ண்டேய‌ன் ப‌ட‌ம் பார்த்து விட்டு வ‌ந்த போதோ, ஞாயிற்றுக் கிழ‌மை வீட்டில் "க‌ந்த‌ன் க‌ருணை" பார்த்த‌ போதோ ப‌க்தி பீறிட்டு ம‌ன‌தில் எழுந்த‌தை நானும் உண‌ர்ந்திருக்கிறேன்.

அது ம‌ட்டும‌ல்ல, மூன்றாவது படிக்கும் போது புனித‌ வெள்ளிய‌ன‌று "தேவ‌ மைந்த‌ன் போகின்றான்" பாட்டை ஒளியும் ஒலியும் ‍இல் பார்த்து விட்டுக் க‌த‌றிக் க‌த‌றி அழுததும் அத‌ற்காக‌ அண்ண‌னும் அக்காவும் என்னை ஓட்டித் த‌ள்ளிய‌தும் நான் ம‌ற‌க்க‌ விரும்பும் த‌ர்ம‌ச‌ங்க‌ட‌ங்க‌ள்.

வீட்டில் பெரிதாக‌ப் பூசை, விர‌த‌ம் என்றெல்லாம் எதுவும் இல்லை. அமாவாசை, கிருத்திகை, ச‌ஷ்டி இத்யாதிக‌ள் பார்க்கும் வ‌ழ‌க்க‌மெல்லாம் அம்மாவுக்கு இருந்த‌தில்லை. மாலையில் தின‌மும் சாமி விள‌க்கேற்றுவார்க‌ள்.ப‌ண்டிகைக‌ள் வ‌ந்தால் சாமி ப‌ட‌ங்க‌ளுக்குப் பூ போட்டு, ப‌டைய‌ல் வைத்துக் க‌ற்பூர‌ம் காட்டுவார்க‌ள். ச‌னிக்கிழ‌மைக‌ளில் காக்காவுக்குச் சாத‌ம் வைப்பார்க‌ள். அவ்வ‌ள‌வு தான்.

நானும் பெரிதாக‌ப் ப‌க்தி என்றும் இல்லாம‌ல், நாத்திக‌மென்றும் இல்லாம‌ல் கோயிலுக்கெல்லாம் போய் வ‌ந்து கொண்டு தானிருந்தேன்.எங்க‌ள் க‌ல்லூரிக்க‌ருகிலும் ஒரு பிள்ளையார் கோயில் இருந்த‌து. அதற்குப் பேரே செம‌ஸ்ட‌ர் பிள்ளையார் கோயில். ஏனென்றால் ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் காத்தாடும் அந்தக் கோவிலில் செம‌ஸ்ட‌ர் ச‌ம‌ய‌ம் கால் வைக்க‌ முடியாத் அள‌வு கூட்ட‌ம் அம்மும்.

அதே போல் மார்க‌ழி மாத‌ங்க‌ளில் காலையில் ஐந்து ம‌ணிக்குப் போனால் ச‌ர்க்க‌ரைப் பொங்க‌ல் பிர‌சாத‌ம் தொன்னையில் த‌ருவார்க‌ள். ஓரிரு முறை சென்று வாங்கிய‌தாக‌ ஞாப‌க‌ம். (காலை உண‌வுக்கு மெஸ்ஸுக்குப் போய் அழ‌ வேண்டாமே!)

ரொம்ப‌ எரிச்ச‌ல் வ‌ந்த‌து எத‌னாலென்றால் கூட்டம்; ஜ‌ன‌ நெருக்க‌டி. விசேஷ நாட்க‌ளில் கோவில் ப‌க்க‌ம் எட்டிக் கூட‌ப் பார்க்க‌ மாட்டேன்.‌
பூசாரிக‌ளின் அத‌ட்ட‌லும் அர்ச்ச‌னைத் த‌ட்டுக‌ளில் போட‌ப்படும் காசுக்கேற்ப‌ த‌ரும் ம‌ரியாதையும், பொது வ‌ழி சிற‌ப்பு வ‌ழி என்று பிரித்து வைத்து ர‌க‌வாரியாக‌ப் பிசின‌ஸ் செய்வ‌தும் கோவில் வ‌ழிபாடுக‌ள் மீது முத‌ல் அவ‌ந‌ம்பிக்கை ஏற்ப‌ட‌ச்செய்த‌து.

கடவுள் பக்தி அதிகமிருக்கும் சிலர் (எம்மதமாக இருந்தாலும்) பேசுவதில் ஒரு மேட்டிமைத் தனமும் Self righteousness ம் இருப்பதையும் உணர முடிந்தது. (சிறு வய‌தில் இப்ப‌டிப் பேசுப‌வ‌ர்க‌ளைப் பார்த்தால் ஒரு தாழ்வு ம‌ன‌ப்பான்மை தோன்றும். நாம் இப்ப‌டியெல்லாம் சாமி கும்பிடுவ‌தில்லையே, ந‌ம‌க்கு இந்த‌ அள‌வு ப‌க்தி இல்லையே என்று.)

எனக்கொரு தோழி இருந்தாள். நன்றாகப் படித்து நல்ல வேலையிலும் இருந்தாள். வயதும் அப்போது இருபத்திரண்டோ மூன்றோ தான். கல்யாணமாகவில்லை என்று அவளை அவள் பெற்றோர் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை. 'வெள்ளிக் கிழமையா? ஒரே வேளை சாப்பிட்டு விரதம் இரு. திங்கட்கிழமையா? சோமவார விரதம் இரு. அஞ்சு விரல்லயும் அதிர்ஷ்டக் கல் மோதிரம் மாட்டு. பிரதோஷமா? சாயங்காலம் வேலை முடிஞ்சு எவ்ளோ நேரமானாலும் சரி, கோவிலுக்குப் போயிட்டு வா.'
பிரதோஷமென்றால் சிவன் கோவிலில் கூட்டம் கேட்கவே வேண்டாம். கூட்டத்தில் சென்று இடிபட்டு நசுங்கி, அதன் பின் பஸ் பிடித்து வீட்டுக்குச் செல்வதற்குள் அவள் விழி பிதுங்கி விடும். ஒரே ஒரு நாள் அவளுக்காகத் துணைக்குச் சென்று படாத பாடு பட்டேன்.

இது போன்ற சம்பவங்களால் பொதுவாக‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் மீதும், வ‌ழிபாடுக‌ளின் மீதும் கொஞ்ச‌ கொஞ்ச‌மாக‌ அசிர‌த்தை ஏற்ப‌ட‌ ஆர‌ம்பித்த‌து. க‌ட‌வுள் ப‌க்திக்கும் ம‌த‌வெறிக்கும் இடையே பெரிதாக‌ வேறுபாடில்லை என்று ம‌த‌க்க‌ல‌வ‌ர‌ங்க‌ளும் கொடூர‌ங்க‌ளும் ந‌ம்ப‌ வைத்த‌ன‌. (இது என் ஆழமான ந‌ம்பிக்கை ‍ அவ்வ‌ள‌வு தான்.)

மேலும், "நட்ட கல்லைத் தெய்வமென்று..." போன்ற பாடல்களும், அபு பென் ஆதம் கதைகளும், முற்போக்குச் சிந்தனையுள்ளவர்கள் பேச்சிலும் எழுத்திலும் (மதமென்பது மக்களுக்குக் கொடுக்கப் பட்ட அபினி) நாட்டமேற்பட்டதும் கூடக் காரணமாக இருக்கலாம்.
ஓஷோவின் discource களையும் ஆவலுடன் கேட்க ஆரம்பித்திருந்தேன். போதாதா? Life is a better word than God என்ற அவரது வாசகம் மனதில் ஆழமாகப் பதிந்தது.

ஒன்று, இதையெல்லாம் நம்ப வேண்டும். இல்லை கடவுளை நம்ப வேண்டும். இரண்டுக்கும் இடையில் இருக்க முடியாது என்று தீர்மானம் ஏற்பட்டது.
கோவிலுக்குப் போவ‌தில்லை. சாமி கும்பிடுவ‌து என்றொரு வ‌ழ‌க்க‌ம் என்றுமே ஒழுங்காக‌ இருந்த‌தில்லை. இதனாலெல்லாம் பெரிதாக‌ எந்த‌ மாற்ற‌மும் ஏற்ப‌ட‌வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான் திரும‌ண‌ம் செய்து கொண்ட‌து வேற்று ம‌த‌த்த‌வ‌ரை. அவ‌ரும் என்னைப் போல‌வே தான்; மதச் சம்பிரதாயங்களுக்கும் கற்பிக்கப்பட்ட புனிதங்களுக்கும் பின்னால் இருக்கும் போலித் தனங்களை உணர்ந்து வெறுத்தவர். இருவ‌ரும் எந்த‌ வ‌ழிபாட்டுத் த‌ல‌த்துக்கும் செல்வ‌தில்லை. எல்லாப் பண்டிகைகளையும் எந்தவிதமான பூசை வழிபாடுகள் இல்லாமலும் கொண்டாடப் பழகி விட்டோம். இருந்தாலும் திரும‌ண‌மான பின்பு சில‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளுக்கு உட்ப‌ட‌வேண்டி இருந்த‌து. பிற‌கு இருதரப்பினரும் எங்க‌ளைப் ப‌ற்றிப் புரிந்து கொண்டு விட்டார்க‌ள். வ‌ருத்த‌ம் தான் ஆனாலும் எங்கள் சுதந்திரத்தில் பெரிதாக‌த் த‌லையிடுவ‌தில்லை.

நான் மிகவும் மதிப்பவர்கள் நிறைய பேர், அறிவிலும் தெளிவிலும் பன்மடங்கு உயர்ந்திருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருப்பதையும் காண்கிறேன். கடவுள் மறுப்பு என்பது அறிவார்ந்த செயலென்றால் உலகில் மிகப்பெரிய அறிவாளிகள் அனைவரும் நாத்திகர்கள் அல்லவே! வாழ்க்கையில் புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று. நான் கொண்டிருப்பது கடவுள் மறுப்பு என்பதை விடக் கடவுள் வழிபாட்டு மறுப்பு. இது என்னளவில் சரி. அவ்வளவு தான்.

கடவுள் நம்பிக்கை என்பதையெல்லாம் தாண்டி சில பழக்கங்களை (திருமணமானவர்கள் வீட்டுக்கு வந்து விடை பெறும் போது குங்குமம் கொடுப்பது, இளம் பெண்கள் இருக்கும் வீட்டுக்குப் பூ வாங்கிச் செல்வது) போன்றவற்றை விட மனமில்லை; விடுவதாகவும் இல்லை! அவையெல்லாம் காரணமே இல்லாமல் பிடித்துத் தான் இருக்கின்றன‌.

நேஹாவும் மிக‌ச் சுத‌ந்திர‌மாக‌த் திரிகிறாள். இயேசு ப‌ட‌த்தைப் பார்த்தால் "தாத்தா தாடி" என்றும் பிள்ளையார் ப‌ட‌த்தைப் பார்த்தால் "எலிஃபென்ட்" என்றும் சொல்கிறாள். தாத்தா பாட்டிக‌ள் "அப்ப‌டிச் சொல்ல‌க் கூடாது... சாமி சொல்லு" என்று சொன்னாலும் நாங்கள் த‌டுப்ப‌தில்லை. நம்மை விட நிச்சயம் அறிவும் தெளிவுடனும் இருக்கப் போகும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அவள் தனது விருப்ப‌த்தைத் தானே தேர்வு செய்ய‌ட்டுமே. அப்ப‌டி என்ன‌ பெரிய‌ விஷ‌ய‌ம் இது?

எல்லாருக்குள்ளும் ஏதாவ‌து ச‌ம‌ய‌ம் இப்ப‌டி ஒரு ம‌னப்போராட்ட‌ம் வ‌ந்திருக்கலாம்; அல்லது இவ்விதமான குழப்பங்களுக்கெல்லாம் இடமில்லாத வகையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கலாம். என்னவாக இருப்பினும் அவர்கள் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன்.

அவ்விதம்‌ நான் அழைக்க‌ விரும்புவ‌து:

அண்ணாம‌லையான்
தமிழ்நதி
நாஸியா
ம‌யில் விஜி
ச‌ந்த‌ன‌முல்லை
ராகவ‌ன்