Sunday, September 27, 2009
புது மொழிகள்!
அதனாலென்ன, நம் முன்னோர்களில் பெண்கள் தான் அதிக நகைச்சுவை உணர்வுடனும், பெருந்தன்மையுடனும் இருந்திருக்கிறார்கள் அதனால் அதை அனுமதித்து ரசித்தும் வந்திருக்கிறார்கள்.
இக்காலத்தில் தான் ஆண்கள் பெருமளவு பெண்களுக்குச் சம உரிமையையும் அந்தஸ்தையும் விட்டுக் கொடுத்து விட்டார்களே! பெண்ணியம் என்றும் பெண்கள் உரிமை என்றும் பேசுவதெல்லாம் தேவையே இல்லையென்பதும் சிலர் வாதமாக இருக்கிறது. அதனால் தைரியமாக ஒரு சின்ன சோதனை முயற்சி!
''கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" – இது பழசு
மண்ணானாலும் மனைவி
பின்னால் பிறந்தாலும் பொண்டாட்டி – இது புதுசு!
''அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள் - இது பழசு
''அஞ்சும் மூன்றும் உண்டானால் அரை டவுசர் பையனும் கறி சமைப்பான் - இது புதுசு!
பொம்பளை சிரிச்சா போச்சு; பொகையில விரிச்சா போச்சு - இது பழசு
ஆம்பளை உக்காந்தா போச்சு, அன்னிக்கு அடுக்களையில சமையலும் போச்சு! - இது புதுசு!
ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்; - இது பழசு
ஒய்யார ஹேர்ஸ்டைலாம், ஜெல் போட்ட முடி, உத்துப் பாத்தா டையடிச்ச
நரைச்ச முடி - இது புதுசு!
வரவர மாமியா கழுதை போல ஆனாளாம் - இது பழசு
வரவர மாமன் தான் குரங்கு போல ஆனானாம் - இது புதுசு!
...and last but not the least,
பெண்புத்தி பின் புத்தி - இது பழசு
பெண் புத்தி பொன் புத்தி
ஆண் புத்தி அரை புத்தி - இது புதுசு!
இந்தப் புதியச் சொலவடைகளை உங்கள் வீட்டில் பேச்சு வாக்கில் உதிர்த்து வாருங்கள். என்ன எதிர்வினை கிடைக்கிறது என்பதைத் தெரிவித்தால் நலம்.
(ஆனால் கடுமையான எதிர்வினைகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இடம் பொருள் ஏவல் பார்த்துச் சோதனை செய்வது உங்கள் சமர்த்து!)
Wednesday, September 23, 2009
நிறங்கள்
இருண்ட வானில் மாறி மாறி நிறத் தீற்றல்கள்
நிறபேதமற்ற விடிவெள்ளிக்காக ஏக்கத்துடன்...
Monday, September 21, 2009
ஹூம்....!
விவஸ்தை இல்லாமல் நினைவுக்கு வருகிறது
”மது அரக்கனை ஒழிப்போம்” - பேச்சுப் போட்டியில் வாங்கிய பரிசு
- நீ குடித்து வைத்த விஸ்கி க்ளாஸைக் கழுவும் போது.
Friday, September 18, 2009
ஒரு பக்கம் ரைம்ஸ்.. ஒரு பக்கம் ப்ளாக்!
ஒரு சின்ன ப்ளாஸ்டிக் பட்டையில் இரு கருநீலக் கோடுகளாகத்தான் அவளை முதலில் சந்தித்தேன்.
இப்போதானால் அவள் அப்பா பாஷையில் ”ரௌடிக்” குட்டியாக வளர்ந்து எல்லோரையும் அரட்டிக் கொண்டிருக்கிறாள்.
நேஹா!
நீ நல்ல பிள்ளையாக உன் தாத்தா பாட்டி வீட்டில் இருந்து கொள்வாய் என்று அம்மாவுக்கு நம்பிக்கை வந்து விட்டதுடா குட்டி. அதனால் அம்மா மீண்டும் வேலைக்குப் போகலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
இதோ உன்னை விட்டுச் சென்ற இந்த ஒரு வாரம், என்னவோ பலமான யோசனையுடன் இருப்பதாகவும், சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மிகவும் சமர்த்தாக இருப்பதாகவும் உனக்குச் சான்றிதழ் கொடுத்து விட்டார்கள்.
ஹீம்.. உன் அம்மா அவ்வளவு சமத்தில்லையடி! நிச்சயம் முன் போல இல்லை அலுவலுக்குச் செல்வது. அலுவலக நேரத்துக்கு அரைமணி நேரம் முன்பாக எழுந்து அவசர அவசரமாகக் கிளம்பி காலை உணவுக்கு எதையோ சாப்பிட்டு, வேலைக்குச் சென்று மாலை அடைந்து கொள்ளும் கூடு என்பதைத் தவிர வீட்டு நினைப்பே வராது.
இப்போது....
எத்தனை முறை கேட்டாலும் ”அம்ம்ம்மா” சொல்லு என்றால் ”அப்பா” தான் சொல்வது! சொல்லி விட்டு என்னைப் பார்த்துக் குறும்பாகச் சிரிப்பது;
நான் லயித்து டி.வி பார்க்கும் போது ரிமோட்டை எடுத்து ஆஃப் செய்து வீசி விட்டு வந்து என் மடியில் அமர்ந்து கொள்வது;
கொஞ்சம் தெருவில் வைத்து வேடிக்கை காட்டச் சென்றால் யாராவ்து சிறுவர்களைப் பார்த்து விட்டால் இடுப்பை விட்டு இறங்க வேண்டுமென்று அடம்பிடிப்பது;
எதற்காகவாவது சட்டை மாற்றி விட்டாலும் கைகளை ஆட்டிக் கொண்டு “டாட்டா, ஆட்டோ” சொல்வது...
சரி சமத்தா விளையாடிட்டு தானே இருக்கா என்று நான் சாப்பாட்டில் கை வைத்தவுடன், பருப்பு, உளுந்து, தண்ணீர் என்று எதையாவது தரையில் கொட்டி எனக்கு வேலை வைப்பது;
இன்னும்.. இன்னும்..இப்படி ஒரு கணமும் உன்னைப் பிரியாமல்
இதையெல்லாம் ரசித்து, உன்னுடன் போராடி, மல்லுக் கட்டி, உன்னைத் தூங்க வைத்து விட்டு ரகசியமாய், மறக்காமல் ஸ்பீக்கர்ஸை ம்யூட் பண்ணி விட்டுக் கணினியை ஆன் செய்தாலும் எப்படியோ இடையில் கூக்குரலுடன் எழுந்து விடுவது!
இதெல்லாம் அனுபவிக்க மாலை நேரங்களிலும் வாரஇறுதியிலும் மட்டுமே எனக்கு சாத்தியப்படும் என்று நினைக்கும் போதே சொல்லத் தெரியாத ஏதோ நெருடுகிறது மனதில்!
இருக்கிற கொஞ்ச நேரத்தில் மிக முக்கியமான பங்கு நேஹாவுக்கு என்பதால் பதிவுலகத்துக்கான நேரத்துக்கு இன்னும் மெனக்கெட வேண்டும். அலுவலகத்தில் சுத்தமாக முடியாது!
அதனால் முன்பு அளவுக்கு பதிவுகள் எழுத முடியுமா என்று தெரியவில்லை; ஆயினும்...
இதோ இக்கணம் செய்வது போல் நேஹாவை மடியில் இருத்திக் கொஞ்சிக் கொண்டே ஒரு விண்டோவில் ரைம்ஸ், இன்னொரு சின்ன விண்டோவில் வேர்ட், அல்லது ப்ளாக் திறந்து எழுதுவது வழக்கம் தான்.
- இப்படியெல்லாம் நீ எழுதலன்னு உன்னை யார் அடிச்சான்னு கேக்கறீங்களா? - உங்கள் அனைவரின் அன்பு தான்!
இல்லடா நேஹா?!
:-)
Thursday, September 10, 2009
பெண்ணியம் - ஒரு சிறு பார்வை
அவசரமாகப் பார்த்தால் இது குறுகிய மனப்பான்மை போலத் தோன்றும். இல்லவே இல்லை. இது ஒரு மாற்றுப் பார்வை; வரவேற்கத் தக்க பார்வை. இந்தப் பார்வைக்கு உள்ள பஞ்சம் தான் இன்னும் நம் பெண்களை இரண்டாம் நிலையிலேயே வைத்திருக்கிறது.
பெண்ணியம் என்ற வார்த்தை மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் நமக்கு ஏக குழப்பங்கள்.
ஏதோ என் மனதில் தோன்றியதை இங்கே சொல்லி இருக்கிறேன்.
படிக்கும் சூழல் கூட இல்லாமல் குறைந்த பட்ச சுதந்திரம் கூட இல்லாமல் வளர்க்கப்படும் பெண்களைப் பற்றி எனக்குப் பேசத் தெரியவில்லை. படித்த, புத்திசாலியான, தேவையான அளவு சமூக விழிப்புணர்வுள்ள இன்றைய பெண்களை நோக்கியே இப்பதிவு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். – சுருக்கமாகச் சொன்னால் அனைத்துப் பெண் பதிவர்களையும் :-)
பொதுவாக ஒரு எண்ணம் உண்டு. திருமண வாழ்க்கை சரியாக அமையாதவர்கள், ஆண்களால் பல கஷ்டங்களைச் சந்தித்தவர்கள், சமூகத்தோடு ஒத்து வாழத்தெரியாதவர்கள் - இவர்கள் தான் பெண்ணியம் பேசுவார்கள் - அல்லது ’பெண்ணியம் பேசுபவர்கள் குடும்பத்துக்கு லாயக்கல்ல’; ’நாம் என்ன தான் பேசினாலும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது’ என்று.
நிற்க. இதை ஆண்கள் பேசினால் சட்டை செய்யாமல் இருக்கலாம்; சென்ற தலைமுறையைச் சேர்ந்த அல்லது படிக்காத பெண்கள் பேசினாலும் மன்னித்து விடலாம். ஆனால் இன்றைய படித்த, புத்திசாலிப் பெண்களில் பலர் கூட, பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்தாலும் உணர்வு ரீதியாக மன ரீதியாக ஆண்களுக்கு அடுத்த இடத்தில் தான் தங்களை வைத்துக் கொள்கிறார்கள். அதனால் பெண்ணியம் என்பது குடும்பங்களில் கலகமூட்டக் கூடிய சொல்லாகவே பார்க்கப் படுகிறது. ஆனாலும் பேசவாவது செய்வோம். அதற்குத் தடை இல்லை அல்லவா?
ஆண்களால் பாதிக்கப் படும்போது பெண்களுக்கு ஒருவரோடொருவர் உணர்வு ரீதியாக உண்மையான நெருக்கம் ஏற்படுகிறது. பெண்ணியமும் தேவைப்படுகிறது.
ஆண் வேறு பெண் வேறு தான். ஆண் செய்வதையெல்லாம் பெண் செய்ய வேண்டும்; பெண் செய்வதையெல்லாம் ஆண் செய்ய வேண்டும் என்பதில்லை.
உயிரைச் சுமக்கும் பெண்ணின் உடல் போற்றத் தக்கது; பாதுகாக்கப் பட வேண்டியது.
’ஆண் பெண் சம உரிமைன்னு சொல்லிட்டு பஸ்ஸில் தனி சீட் கேட்கிறீர்களே’ என்ற விதண்டாவாதத்தை எல்லாம் ஆண்கள் முன் வைக்கக் கூடாது.
பிள்ளை பெற்று விட்டு மூன்று மாதத்திலும் மாதவிடாயின் வயிற்றுவலியைச் சுமந்து கொண்டும் பெண்கள் வேலைக்குப் பயணிக்கக் கூடும் என்பது அவர்களுக்கு ஏன் புரிவதில்லை? அதற்காக அவர்களைப் பலவீனமானவர்கள் என்று வகைப் படுத்தவேண்டாம்.
பெண்ணின் உடலுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அதீத மரியாதை தரவேண்டும். மனதையும் உணர்வுகளையும் சமமாக நடத்த வேண்டும்.
ஆனால் கொடிய வேடிக்கையாக இங்கே நடப்பதோ தலை கீழாக இருக்கிறது. பெண்களின் உடலைக் கேளிக்கைப் பொருளாகவும் அகத்தைக் குப்பைத் தொட்டியாகவுமே பாவிக்கிறது இச்சமூகம்.
இச்சமூகத்தின் தயாரிப்பான பெண் இயல்பாகவே சுயமரியாதை இல்லாதவளாகத் தான் வார்க்கப் படுகிறாள்.
அறிவும் தன்னம்பிக்கையும் கூடிய எந்தப் பெண்ணும் திருமணத்துக்குச் சம்மதிக்கும் போது தனது சுயமரியாதையை அடகு வைத்தவளாகவே ஆகி விடுகிறாள். எல்லாரும் ஏறக்குறைய அப்படித் தான் என்பதால் அது யாருக்கும் பெரிதாக்த் தெரிவதில்லை.
காதல் திருமணத்தில் கூட, காதலிக்கும் போது பெண்ணின் கடைக்கண் பார்வையை பெற படாத பாடு படும் ஆண் திருமணத்துக்குப் பிறகு அன்புக்காக ஏங்கித் தனது குடும்பத்தாருடன் போட்டி போடும் நிலைக்குத் தானே அவளை ஆளாக்குகிறான்?
மாமியார் மருமகள் சண்டைகளுக்கு மூல காரணம் பெண்களின் உளரீதியான பாதுகாப்பற்ற உணர்வு தானே? அதைச் சுரண்டியே கொழுக்கும் ஆண் வர்க்கம் தானே? அதனால் ஆண்களின் நிம்மதியும் போகிறது என்பது பக்க விளைவு தான்.
ஆனால் இவர்கள் உத்தமர்களாகவும் பெண்களால் தான் வீட்டில் இவர்கள் நிம்மதி போகிறது என்ற ஒரு பிம்பத்தையும் நமது மூளைக்குள் திணித்து வைத்திருக்கிறார்கள்.
பெண் ஒழுங்கா இருந்தால் குடும்பம் ஒழுங்கா இருக்கும், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே. பெண் நினைத்தால் எப்படிப்பட்டவனையும் திருத்தி நல்ல வாழ்க்கை வாழலாம். இவர்களைத் திருத்துவது தான் நம் வேலையா? அவரவர் தங்கள் ஒழுங்கைப் பார்த்துக் கொண்டாலே போதும்.
பல பிரச்னைகள் பெண்களுக்கு மட்டும் இரண்டு வீடு என்ற நியதியால் பிறந்தது தானோ என்று தோன்றுகிறது.
இன்றைய நிலையில் பொருளாதாரத்திலும் சம சுதந்திரம் பெற்று விட்ட போது ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ எந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தால் என்ன?
இருவரின் பெற்றோரையும் சமமாகப் பாவித்தாலென்ன?
பெண்களும் தேவையில்லாத ’நல்ல பெயர்’களுக்காகப் பெண்ணடிமைத் தனத்தைப் பூசிக் கொள்வதை விட்டொழிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, நம் தோழிகளுடன் கல்லூரிப் பருவத்தில் பேசிய புரட்சிகரமான பேச்சுக்களை நினைத்துப் பார்போம்; (விளையாட்டாகவாவது நிச்சயம் பேசி இருப்போம்.) மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கூடுமானவரை அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவோம்.
மாமியார்கள் நம்மை விடப் பாவம் என்று உணருவோம். அடுத்த தலைமுறையினரான் நமக்கு இருக்கும் ’எக்ஸ்போஷர்’ அவர்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.
அவர்கள் நம்மை மோசமாக நடத்தினாலும் கண்டு கொள்ள வேண்டாம். நாம் புதுயுகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களையும் கைப் பிடித்து அழைத்துப் போவோம் பெண்ணடிமை அற்ற சமுதாயத்துக்கு.
யார் என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. செய்ய இடம் கொடுக்காத உயரத்தில் நம்மை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
மேலும், கணவன், மாமனார் இவர்களிடம் நல்ல பெயரெடுக்க வேண்டி மாமியார் நாத்தனார்களுக்குக் குழி வெட்ட வேண்டாம்.
பதிலுக்கு அவர்களும் அதைச் செய்வார்கள் என்பது நினைவிருக்கட்டும். இத்தகைய செயல்களால் நம்மை அறியாமல் பெண்ணடிமைத் தனத்தை ஊக்குவிக்கிறோம்.
என்ன தான் சொன்னாலும் ஆண்களிடம் நல்ல பெயரெடுக்க வேண்டிப் பிற பெண்களை விட்டுக்கொடுப்பவர்களும் இருக்கத் தான் செய்வார்கள். அவர்களையும் கூட மன்னிக்கக் கற்றுக் கொள்வோம். After all, they are also products of the environment. Let’s take pride that we chose to be different!
இதில் தவறி எதிர்க்கையை ஓங்கினால் நாமும் சாக்கடைக்குள் அமிழ்ந்து விடுவோம்!அப்புறம் இதற்கு முடிவே கிடையாது.
பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்ற மிகப் பெரிய டின்னை நம் முதுகில் கட்டி விடுவார்கள்.
யோசித்தால் பெண்களைப் போல் ஒற்றுமையாக இருக்கவும் மனமொத்து அன்பு செலுத்தவும் ஆண்களுக்குத் தெரியாது.
பெரும்பாலான ஆண்களுக்கு மனம் விட்டுப் பேசிக் கொள்ளவே இடையே இரண்டு க்ளாஸ்களும் ஒரு ஃபுல்லும் தேவைப் படும்.
- விதிவிலக்குகள் எங்கேயும் உண்டு. :-) நமக்கு அப்படியா?
அதனால் நமது சிந்தனைகளையும் உணர்வுகளையும் ஆக்கிரமிக்கும் ஆண்களைச் சற்று மறப்போம்.
நமக்காகச் சிந்திப்போம். நம்மைப் பற்றிச் சிந்திப்போம். சேர்ந்து சிந்திப்போம்.
Wednesday, September 9, 2009
காதம்பரி(அம்மு) – மாதவராஜ் தம்பதியரை வாழ்த்துவோம்!
Love does not consist in gazing at each other, but looking together in the same direction.
இந்தப் பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர்கள் அம்முவும் அங்கிளும். ஒருவர் வெற்றிக்கு ஒருவர் பக்கபலமாக வாழும் இவர்களது அன்புக்கு மேலும் அர்த்தம் சேர்க்க ஜ்யோதிஷ்னா (ப்ரீதி), நிகில்குமார் என்ற இரு செல்வங்கள் உள்ளனர்.
இந்நன்னாளில் பதிவுலகத்துடன் சேர்ந்து இவர்களை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
Tuesday, September 8, 2009
ஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு!
:-)
பதிவுலகம் பற்றி யோசித்த போது...
”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
என்ற குறள் நினைவுக்கு வந்தது. அதன்படி பதிவுலகம் மூலம் நான் அடைந்த நன்மைகளையும் எண்ணற்ற இனிய அனுபவங்களையும் பகிரப் போகிறேன். :-)
பிளாக்கர் என்று ஒரு விஷயத்தை 2004 இல் அறிந்தேன். அதைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது, ஆர்வமும் இருக்கவில்லை.
2006 நவம்பரில் ஆங்கிலத்தில் ஒரு பிளாக் தொடங்கினேன். அதில் அவ்வப்போது தோன்றினால் ஏதாவது கிறுக்கி வைப்பேன்.
ஒரு பப்ளிக்கான டைரி போல் இருந்தது அது.
நண்பர்கள் யாராவது படித்து விட்டு கருத்து கூறுவார்கள். ஆனாலும் விடாமல் எழுதிக் கொண்டு தான் இருந்தேன். திரட்டிகள் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது.
பின்பு செப்டம்பர் 2008 – ல் மாதவராஜ் அங்கிள் தமிழில் வலைப்பூ துவங்கினார். ஜெட் வேகத்தில் தமிழ்ப் பதிவுலகம் பற்றி எல்லா நுணுக்கங்களையும், தகவல்களையும் தெரிந்து கொண்டதோடு இந்த அசமஞ்சத்துக்கும் (நான் தான்!) தெரிவித்து உதவினார். தமிழிலும் எழுதுமாறு என்னிடம் சொல்லி வந்தார்.
அக்டோபர் மாதத்தில் நானும் தமிழில் வலைப்பூ தொடங்கி அதற்கு ”உள்ளுவதெல்லாம்” என்று முதலில் பெயரிட்டேன்.
’உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற வள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப இருக்கவேண்டும் என்று உள்ளினேன்!
பின்பு பெயர் இன்னும் எளிமையாக இருந்தால் நல்லதென்று தோன்றியதால் “சிதறல்கள்” என்று மாற்றி விட்டேன்.
முதலில் கோபி தமிழ் கன்வெர்டர் பயன்படுத்திக் கொண்டிருந்தேன் பின்பு NHM writer பற்றிச் சொன்னவரும் அங்கிள் தான். வெகு நாள் ரொம்ப எழுதாமல் படித்துக் கொண்டு மட்டும் இருந்தேன். அங்கிள் பக்கத்தில் மட்டும் பின்னூட்டம் போடுவேன்.
ஏதாவது எழுதலாம் என்று ’உட்கார்ந்து யோசித்தால்’ ஒன்றுமே தோன்றாது. யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும் போது, குருட்டு யோசனையுடன் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது (குறிப்பாகப் பாத்திரங்கள் துலக்கும் போது!) ஏதாவது தோன்றும். அதையொட்டி இதைப் பதிவு எழுதலாமே என்றும் தோன்றும். பின்பு தொடர்ந்து கொஞ்சம் குறிப்புகள் யோசித்து விட்டு நேஹா உறங்கிய பின்னோ அவள் அப்பாவிடம் விளையாடிக் கொண்டிருக்கும் போதோ கணினியைத் தட்ட வந்து விடுவேன்! சில நாள் அவளை மடியில் வைத்தபடியே.
சின்னச் சின்னக் குழந்தைகளின் அம்மாக்கள் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் மழலையையும் கவிதையாகப் பதிப்பதைப் படித்துக் கிறங்கிப் போவேன்.
அவற்றில் எல்லாம் நானும் நேஹாவைக் காண்பதால் நேஹாவைப் பற்றி தனியாக நான் அதிகம் எழுதியதில்லை.
மார்ச், ஏப்ரல் 2009 முதல் தான் முழு ஆர்வத்துடன் எழுதத் தொடங்கினேன். பின்னூட்டம் மூலமாகப் பலரும் அறிமுகமாகினர். தமிழும் தமிழை நேசிப்பவர்களும் பதிவுகள் மூலம் பரவசமானதொரு வாசிப்பனுபவத்தை அள்ளி அள்ளி வழங்குவதைப் பார்த்துப் பிரமித்தேன்; பூரித்தேன்.
பலரது பதிவுகளைப் படித்து ரசிக்கத் தொடங்கினேன். வெளிப்படையாக மனம் திறந்து என் ரசனையையும், மகிழ்ச்சியையும் பின்னுட்டமாக இடத் தொடங்கினேன். நண்பர் வட்டம் விரிந்தது.
மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு அதைப் பற்றி இந்தப் பதிவு கூட எழுதினேன்! - தூக்கம் இழுக்கும் கண்களுக்குள்
எச்சரிக்கையும் நிதானமும் வாழ்வின் எல்லா சமயங்களிலும் கடைப் பிடிக்கவேண்டும் என்பதையும்; அதுவும் பெண்களிடம் சமூகம் அதைக் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளப் பதிவுலகம் ஒரு சின்ன வாய்ப்பை வழங்கியது. அதையும் நன்றியுடனே நினைத்துப் பார்க்கிறேன்.
தாய்மையும் குழந்தை வளர்ப்பும் ஒரு அலாதியான அனுபவம் என்றாலும் புறவாழ்க்கை என்பது ரொம்பக் குறைந்து போன இந்த ஓராண்டில் என் எண்ணங்களுக்கு வடிகாலையும் சஹிருதயர்கள் பலருடன் பழகி அளவளாவும் வாய்ப்பையும் வழங்கிய பதிவுலகத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாமல் எதையாவது எழுதலாம் என்ற ஊக்கத்தைக் கொடுத்தது, (சிறுகதை என்ற பெயரில் உங்களைப் படுத்தியது உட்பட) பதிவுலகம் தான்.
அது போலவே என் பக்கத்தைத் தொடரும் அன்புள்ளங்களுக்கும் தொடர்ந்து பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தும் நெஞ்சங்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிக்க விழைகிறேன்.
தொடர்ந்து நான் இணைத்து வரும் தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் திரட்டிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் அனுபவங்களைப் பகிர அழைத்த முல்லைக்கும் மீண்டும் என் நன்றி.
இப்போது நான் அழைக்க விரும்பும் நால்வர்:
காமராஜ் அங்கிள்
அமுதா
அமிர்தவர்ஷினி அம்மா
அய்யனார்
இத்தொடர் பதிவின் விதிமுறைகளுக்கு முல்லையின் பதிவைப் பார்க்கவும்.
Saturday, September 5, 2009
அப்பளச்சட்டியும் அறிவியல் பெயர்களும்!
என் குடும்பத்தில் நிறைய ஆசிரியர்கள் உண்டு.
என் அம்மா, அக்கா, மாமனார், நாத்தனார் எல்லோருமே அந்த தொழிலை விரும்பி பக்தியோடு ஆற்றும் ஆசிரியர்கள் என்பதில் பெருமையடைகிறேன்.
முல்லை இன்று எழுதிய பதிவைப் பார்த்ததும் நானும் என் பள்ளி ஆசிரியைகளின் நினைவுகளில் மூழ்கி விட்டேன்.
கல்லூரியில் வகுப்புகளில் ரொம்பக் கவனம் செலுத்தியதாக நினைவும் இல்லை, சுகி சார் (ரிட்டையராகி விட்டார்) தவிர எந்த புரஃபஸரும் ரொம்ப ஈர்த்ததும் இல்லை.
ஆனால் நான் எல்.கே.ஜி முதல் பத்தாவது வரை படித்த அந்தச் சிறு பள்ளியில் தரமான கல்வியும் ஒழுக்கமும் அமைய தன்னலமற்ற அதன் ஆசிரியைகளே முக்கியக் காரணம்.
ஜெயா மிஸ், ஜான்சிராணி மிஸ், லில்லி மிஸ், சரஸ்வதி மிஸ், ஒரே ஒரு வருடம் ஆங்கிலமும் சமூக அறிவியலும் எடுத்தாலும் மனதை விட்டு நீங்காத ரமோலா மிஸ், கொள்ளை அழகுக்கு மட்டுமல்லாமல் கண்டிப்புக்கும் பெயர் போன ஆஷா மிஸ்,
எல்.கே.ஜி யில் அன்புடன் அரவணைத்த விஜயலக்ஷ்மி மிஸ், இவர்களை எல்லாம் இந்த நன்னாளில் நினைத்துப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதில் ஜெயா மிஸ்ஸுக்கு எப்போதும் மனதில் ஒரு தனி இடம் உண்டு.
இரண்டாம் வகுப்பில் ஸயன்ஸ் டீச்சராக வந்தவர் ஆறாவது முதல் பயாலஜி எடுத்தார். நான்காம் வகுப்பில் மட்டும் எங்கள் வகுப்புக்கு ஆங்கிலம் எடுத்தார்.
அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அத்தனை ஆண்டுகளிலும் அவர் எந்த ஒரு மாணவருக்கும் பாரபட்சம் காட்டியதே இல்லை.
வகுப்பில் பாடத்தைத் தவிர சொந்தக் கதை, சோகக் கதை என்று வெற்று அரட்டை அடிக்கவே மாட்டார். ஆனாலும் அவரது வகுப்பு அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.
நகைச்சுவையாக அவர் மனதில் பதிய வைத்த அறிவியில் அடிப்படைகள் இன்றும் அவரைப் பல்வேறு சமயங்களில் நினைவு கூர வைக்கின்றன.
உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று - உயிரினங்களுக்கு இருக்கும் ஸைண்டிஃபிக் பெயர்கள் (செம்பருத்திக்கு Hibiscus rosa sinensis இப்படி) குறித்துப் பாடமெடுக்கும் போது அன்று வகுப்பை இப்படித் தான் தொடங்கினார்.
“உங்கள் வீட்டில் அப்பளம் பொரிக்க என்ன பாத்திரம் பயன்படுத்துவார்கள்?” என்று கேட்பார்.
ஒரு பிள்ளை எழுந்து “கடாய் மிஸ்” என்று சொல்லும்; இன்னொன்று “வாணால் மிஸ்”. இன்னொன்று “இலுப்பைச்சட்டி” என்று சொல்லும்.
”பார்த்தீர்களா, ஒரே வகுப்பில் படிக்கும் நீங்களே ஒரு பாத்திரத்துக்கு இவ்வளவு பெயர்கள் வைத்திருக்கிறீர்கள். உலகெங்கும் அறிவியலாளர்கள் ஒரு செடியையோ மிருகத்தையோ குறிப்பிட அவரவர் மொழியைப் பயன்படுத்தினால் என்ன ஆவது. அதனால் அறிவியல் பெயர்கள் அறிமுகப் படுத்தப்பட்டன” என்று கூறுவார்.
பாருங்கள், இன்று வரை என் மனதில் பதிந்திருக்கிறது. அவரது பாடத்தில் தோல்வியடையும் மாணவர்கள் வெகு குறைவு. மேலும் படங்கள் வரைந்து எந்த விஷயத்தையும் அழகாக விளக்குவார்.
இன்னொரு முக்கியமான விஷயம், நான் பார்த்து அவர் மட்டும் தான் எல்லா ஆசிரியைகளோடும் நல்ல நட்பு வைத்திருந்தார். யாரைப் பற்றியும் புறம் பேசியும் நான் பார்த்ததில்லை.
அவரது பாடம் அறிவியல் என்றாலும் ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு ஆண்டு ஆங்கிலம் எடுக்க நேர்ந்த போது அதையும் அவரது பாணியில் எங்கள் விருப்பப் பாடம் ஆக்கினார். வகுப்புக்கு வெளியில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது கூட ஆங்கில உச்சரிப்பைச் சரி படுத்தியது நினைவுக்கு வருகிறது.
அவரிடம் எனக்கு ஒரே விஷய்ம் பயம். தேர்வு எழுதும் சமயம் தண்ணீர் கேட்டால் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. ”இரண்டு மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாதா. எழுத வரும் முன் குடித்து விட்டு வர வேண்டியது தானே” என்று திட்டுவார். அதனால் அவர் கண்காணிப்பாளராக இருந்தால் கேட்கவே மாட்டோம்.
இன்னொரு முக்கியமான விஷயம். ஐந்தாவது படிக்கும் போது நானும் என் தோழியும் அவரிடம் சென்று குழந்தை பிறப்பு பற்றி கேட்ட போது எங்களைத் திட்டித் தீர்க்காமல், அவமானப் படுத்தாமல், அலட்சியமும் படுத்தாமல், அந்த வயதுக்கு எவ்வளவு சொல்லலாமோ அதை அழகாக உண்மையாகச் சொல்லிப் புரியவைத்ததை இப்போது நினைக்கும் போதும் அவருக்குச் ஸல்யூட் வைக்கத் தோன்றுகிறது.
எங்கள் பள்ளியிலேயே தலைமை ஆசிரியையாகச் சிலகாலம் பணி புரிந்து பின்பு ஒய்வு பெற்றார் என அறிந்தேன்.
ஜெயா மிஸ் அவர்களுக்கும் தன்னலமற்ற கல்விச்சேவை புரியும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
பி.கு: கல்லூரியில் பல நல்ல புரஃபஸர்கள் இருந்தார்கள். நான் தான் சரியாக அவர்கள் பாடத்தைக் கவனிக்கவில்லை. நரசிம்மன் ஸார், இராஜகோபாலன் ஸார், மீனாம்பாள் மேம், அருமைராஜ் ஸார் இவர்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
வயசாகிக் கொண்டு வருகிறதா? அது தான் மறதி! :-)
Friday, September 4, 2009
07420021555503028936 - இது தான் நான்!
என் பெயரைப் பயன்படுத்தி வக்கிரம் பிடித்த பின்னூட்டங்கள் சில வலைப்பக்கங்களில் வந்துள்ளதாக அறிகிறேன்.
தயவு செய்து என் பெயர் தாங்கி வரும் அந்தச் சுட்டியின் மீது மவுஸை வையுங்கள். கீழே ஸ்டேட்டஸ் பார் http://www.blogger.com/profile/07420021555503028936 என்று காட்டும்.
07420021555503028936 - இந்த எண் வந்தால் தான் அது என்னால் இடப்பட்ட பின்னூட்டம்.
தற்போது தவறாக வந்துள்ள பின்னூட்டங்களில் 08355111887866474837 என்று உள்ளது. இப்படி வந்தாலோ வேறு எண்கள் வந்தாலோ அது என்னால் இடப்பட்ட பின்னூட்டம் இல்லை.
மிக்க நன்றி.
தகவல் தெரிவித்த பைத்தியக்காரன் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்.
காலெஜ் ஆர்க்கெஸ்ட்ரா – நட்பும் இசையும்
ஆனால் கால பேதமின்றி சில பாடல்கள் (ப்ளாக் அண்ட் ஒயிட் படமானலும் கூட) எப்போதும் என் கல்லூரியையே நினைவு படுத்தும். இல்லைங்க, எனக்கொண்ணும் கே.பி. சுந்தராம்பாள் வயசாயிடலை.
அதற்குக் காரணம், ஆர்க்கெஸ்ட்ரா. என் கல்லூரி வாழ்க்கையில் கொஞ்சமும் மறக்க முடியாத, தனித்துவம் வாய்ந்த அனுபவங்களுக்கு எங்கள் ஆர்க்கெஸ்ட்ராவுக்குத் தான் முதலிடம்.
கல்லூரியில் நடக்கும் எந்த விழாவானாலும் (ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டும் ஒரு விழா என்ற கணக்கில் ஆறேழு விழக்கள் நடக்கும்.) எல்லா விழாவிலும் பொதுவான அம்சம் இரண்டாம் நாள் இறுதியில் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவின் இசை நிகழ்ச்சி தான்.
ராகிங் பயத்தால் முதலாண்டு மாணவர்கள் ஆர்க்கெஸ்ட்ராவில் சேர்க்கத் தடை இருந்தது. ஆனால் ஆண்டு இறுதியில் நடக்கும் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அப்படிக் கலந்து கொண்டு பரிசையும் வாங்கியும் விட்டதால் அடுத்த ஆண்டு ஆர்க்கெஸ்ட்ராவில் என்னை உடனே அழைத்துக் கொண்டார்கள்.
ஆர்க்கெஸ்ட்ரா என்றால் ரொம்பப் பெரிதாக நினைத்து விட வேண்டாம். விளையாட்டு மைதானத்தின் காலரிக்குப் பின் புறம் தாழ்வான சாய்வு கூரையுடன் எட்டடிக்கு எட்டடியாக ஒரு சின்ன இடம். அதில் ஒரு மூலையில் எங்கள் பியானோ மாஸ்டர் கீபோர்டுடன் அமர்ந்திருப்பார். அவர் வேறு யாருமில்லை என்விரான்மெண்டல் லாபில் உதவியாளர். வெளியில் இசைக்குழுக்களுக்கும் வாசிப்பவர்.
அவருக்கு அருகில் ஒரு பழைய பியானோ. அதை யாரும் வாசித்துப் பார்த்ததில்லை. பாடகிகளான நாங்கள் அதன் பின் இருக்கும் ஸ்டூல்களில் அமர்ந்து அரட்டையடிக்கவும் கோரஸ் ப்ராக்டிஸ் செய்யவுமே பயன்பட்டது.
அவ்வப்போது ஷாக் அடிக்கும் இரண்டு மூன்று மைக்குகள். ஒரு ஒரு கிடார், ஒரு ட்ரம்ஸ் கிட், ஒரு டாம்பரின். இதெல்லாம் வழிவழியாக சீனியர்ஸ் சேர்த்த சொத்து என்றறிந்தோம்.
ட்ரம்ஸ் வாசிக்கும் ரவி அண்ணா வேலை பார்த்துக் கொண்டு மாலையில் பார்ட் டைம் பி.இ படித்துக் கொண்டிருந்தவர். மறக்க முடியாத மனிதர் இவர். நாங்கள் கல்லூரியில் விழா, ரிகர்சல் இருக்கு என்று சொல்லி விட்டால் உற்சாகமாக வந்து விடுவார். அற்புதமாக ட்ரம்ஸ் வாசிப்பார். யார் என்ன பாடல் பாடினால் நன்றாக இருக்கும் என்றும் டிப்ஸ் கொடுப்பார். சீனியர்களுக்கு ஏற்படும் ஈகோ பிரச்சனைகளையும் தலையிட்டுச் சமாதானப் படுத்துபவரும் அவரே.
ராதாகிருஷ்ணன் என்பவர், அற்புதமான புல்லாங்குழல் வித்வான் என்றே சொல்லலாம். வயலினும் வாசிப்பார். கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்யும் அளவுக்கு ஞானமும் திறமையும் உள்ள இவர் எங்கள் பாடல்களின் பின்னணி இசையில் வரும் ஃப்ளூட்/வயலின் பகுதிகளை அழகாக இசைத்து மெருகேற்றுவார்.
பூ மாலையே, நறுமுகையே, பூங்கதவே பாட்ல்கள் இவரால் மிகவும் சிறப்படைந்தன. இவரது அசரவைக்கும் அந்தத் தன்னடக்கம் நட்புக்கு இவர் காட்டிய மரியாதை என்றே எனக்குத் தோன்றுகிறது.
ஆம், ஏனென்றால் கர்நாடக இசை நன்றாகத் தெரிந்த ஒரு சில மாணவர்கள் ஆர்க்கெஸ்டரா பக்கம் வராதது மட்டுமல்ல அதை மதிக்காமல் பேசியதும் உண்டு. அதனால் எங்களுக்கு நிச்சயம் இழப்பு இல்லை, நிம்மதி தான்.
எனக்குக் கர்நாடக இசையில் கொஞ்சம் பயிற்சியும் ஆர்வமும் உண்டு. அப்பாவுக்கும் அக்காவுக்கும் அதில் பெரிய ஈடுபாடு இருந்ததனால் என்னைச் சில காலம் பாட்டுக் களாஸ் அனுப்பினார்கள். பள்ளிக்கு மேல் என்னால் அதைத் தொடர இயலவில்லை.
மேலும் கர்நாடக இசை தங்களின் குடும்பச் சொத்து என்று கருதும் சிலர் (உண்மையான ஆர்வமோ ஞானமோ இல்லாமலே) அதைப் பற்றிப் பேசுவதும் என் முப்பாட்டன், ஒன்று விட்ட அத்தை எல்லாம் வித்வான்கள் என்று பெருமை பேசியதும், பிறர் கருத்தைக் காது கொடுத்துக் கேட்கக்கூட விரும்பாததனாலும் கல்லூரிப் பருவத்தில் அத்தகையோர் சகவாசத்தை வெறுத்தேன்.
சரி, ஆர்க்கெஸ்ட்ரா மேட்டருக்கு வருவோம்.
நான், சுதா, ராஜகுரு, நந்தகுமார், செந்தில், பாலாஜி, வாணி, அனுராதா இவர்கள் நிரந்தரமான பாடகர்கள். சில விழாக்களில் அந்தந்த டிபார்ட்மெண்டைச் சேர்ந்த யாராவது ஆசைப் பட்டால், ஓரளவு நன்றாகப் பாடினால் அவர்களுக்கும் ஒரு பாடல் கொடுக்கப் படும்!
இருப்பதிலேயே ஜூனியர் என்பதாலோ என்னவோ! விரைவில் நான் அங்கு எல்லோருக்கும் செல்லமாகிப் போனேன். அதனால் பொதுவாகப் பாடகிகளுக்குள் ஏற்படும் ஈகோ எல்லாம் எனக்கும் சீனியர் மாணவிகளும் இடையே கொஞ்சமும் ஏற்படவில்லை.
மேலும் தனியாக மேடையில் நின்று போட்டிக்குப் பாடும் அனுபவத்தை விட ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுவது ஒரு டீம் வொர்க் செய்த ஆனந்தத்தைத் தரும். ஒரு பாட்டு நன்றாக பாடி முடிக்கப்பட்டால் அது மேடையிலிருந்த அனைவரின் வெற்றியாகவுமே பார்க்கப்பட்டது ஆரோக்கியமான சூழ்நிலையாக இருந்தது. தனிப்பட்ட பாராட்டும் கிடைக்கும்.
ஆனால் பெண்கள் ரொம்பக் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால் ஆளுக்கு மூன்று நான்கு பாடல்கள் கிடைத்து விடும். பசங்க தான் கொஞ்சம் அடித்துக் கொள்வார்கள். “டேய்! காலேஜோட எஸ்.பி.பின்னு என்னைத் தாண்டா சொல்றாங்க. ஸோ இந்தப் பாட்டு எனக்குத் தான்.”
“தோடா..அது உன் தொப்பையப் பாத்துச் சொன்னது. ஆனா (காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு) உன்னிகிருஷ்னன் யாருன்னு எல்லாருக்குமே தெரியும்.”
இந்த ரேஞ்சுக்கு இவர்கள் அலம்பல் தாங்க முடியாது. ரெகமண்டேஷனுக்காக பியானோ மாஸ்டருக்கு ஆளாளுக்குச் சரக்கு வாங்கிக் கொடுத்துத் தாஜா செய்யப் பார்ப்பார்கள். ஆனால் அவரும் ரவி அண்ணாவும் சரியாகச் சொல்லி விடுவார்கள். அவர்கள் இல்லாமல் நோ ஆர்க்கெஸ்ட்ரா. அதனால் அவர்கள் சொல்லுக்கு எப்போதும் மதிப்பு உண்டு.
ஒரு பாடலில் மெயின் சிங்கர்ஸ் இரண்டு பேரென்றால் கோரஸ் பாட ஐந்தாறு பேர் தேவைப் படுவார்கள். நாங்கள் ரொம்பவும் என்ஜாய் செய்தது கோரஸ் ப்ராக்டிஸ் தான். அது உண்மையில் கொஞ்சம் சவாலான வேலை.
வாக்மெனில் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். பின்புலத்தில் வருகிற கோரஸில் ஆண் குரல் எது, பெண் குரல் எது, இசைக் கருவி எது என்று கண்டு பிடித்துப் பிறகு அவரவர் பங்கை நன்றாகக் கேட்டுப் பயிற்சி செய்ய வேண்டும். பாடலின் மெயின் சிங்கர்ஸ் கூட அந்தப் பாடலுக்குரிய கோரசிலும் சேர்ந்து கொள்வோம். ஆனால் இதை மாஸ்டர் தவிர்க்கச் சொல்வார்.
மறக்க முடியாத கோரஸ் அனுபவங்கள்:
மடை திறந்து - நிழல்கள்
சந்தைக்கு வந்த கிளி - தர்மதுரை
மாயா மச்சிந்த்ரா - இந்தியன்
கல்யாணம் கச்சேரி – அவ்வை சண்முகி
சொல்லாமலே – பூவே உனக்காக
பொதுவாக என் மனசு தங்கம் – முரட்டுக் காளை
பூந்தளிர் ஆட – பன்னீர் புஷ்பங்கள்
பூ பூக்கும் ஓசை – மின்சாரக் கனவு
ஊ லலல்லா - மின்சாரக் கனவு
நான் மெயின் சிங்கராகப் பாடிய பாடல்களையும் என்னால் என்றும் மறக்க முடியாது.
செம்பூவே பூவே – சிறைச்சாலை
சொல்லாமலே – பூவே உனக்காக
மாயா மச்சிந்த்ரா - இந்தியன்
சந்தைக்கு வந்த கிளி - தர்மதுரை
காதல் ஓவியம் – அலைகள் ஓய்வதில்லை
பூந்தளிர் ஆட – பன்னீர் புஷ்பங்கள்
பூ மாலையே – பகல் நிலவு
ஊலலல்லா – மின்சாரக் கனவு
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் – கந்தன் கருணை மல்லிகையே மல்லிகையே – நினைத்தேன் வந்தாய்
வான் மேகம் – புன்னகை மன்னன்
இன்னும் சில.
பூ மாலையே பாடலில் மாறி மாறி பின்னலாக வரும் சரணத்தைக் கஷ்டப்பட்டுப் பயின்றதும் பாடி முடித்ததும் எனக்கும் நந்தா அண்ணாவுக்கும் கிடைத்த பாராட்டையும் இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது.
இன்னொரு விஷயம். ஏ. ஆர். ரஹ்மான் பாடல்களைப் பாட பலருக்கும் ஆர்வம் இருந்தாலும் எங்கள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு அது முடியாது. அதற்கு என்ன செய்வோம் என்றால் பாடகர்களை மட்டும் தீவிரமாகப் பிராக்டிஸ் செய்யச் சொல்வோம். விழா நாளுக்கு முன்னதாக “கம்போஸர்” மற்றும் “எலக்ட்ரிக்” பேட் வாடகைக்கு எடுத்து விடுவோம். (அதெல்லாம் பட்ஜெட்டை எகிற வைக்கும்) கம்போஸரில் மொத்த பின்னணி இசை ட்ராக்கையும் ஒட விட்டு எங்கள் ட்ரம்ஸ் மற்றும் வாத்தியக் கலைஞர்கள் பிரமாதமாகக் ”கையசைப்பார்கள். ஆனால் இதில் பாடகர்களுக்கு ரிஸ்க். கொஞ்சமும் டைமிங் மிஸ்ஸாகாமல் பாட வேண்டும். அதுவும் த்ரில்லிங்காகத் தான் இருக்கும்.
இந்த வகையில் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட ”ஊ லலல்லா” கோரஸ் பின்னணி இசைக்குப் பொருந்தாமல் வெறும் ஊளையாகிப் போனதை மறந்து விடுவோம்!
மூன்றாம் ஆண்டு வந்ததும் பாய்ஸ் ஹாஸ்டல் ஸ்ட்ரைக் நடந்து முடிந்ததும் எல்லா விழாக்களுக்கும் தடை போடப்பட்டது. ஆர்க்கெஸ்ட்ரா மந்தமானது. வெளியில் சென்று இரண்டு போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டு பரிசு வாங்கினோம்.
இறுதி ஆண்டு. இது தான் செம காமெடி. மூன்றாம் ஆண்டில் தான் ஆர்க்கெஸ்ட்ரா நிர்வாகம் புதிய பாடகர்களைக் கண்டு கொள்வது பற்றியெல்லாம் கற்றுக் கொள்ளலாம். அந்த ஆண்டு பிசுபிசுத்துப் போனதால் இறுதி ஆண்டில் சீனியர்களான நாங்கள் கொஞ்சம் தடுமாறினோம். பாடகர்கள் தேர்வு என் தலையிலும் நிர்வாகம் ராஜகுரு தலையிலும் விழுந்தது.
ஒரு வாரம் முழுதும் மாலை ஐந்து மணிக்குத் தேர்வு நடைபெற்றது. பாட வந்தவர்கள் “நான் எப்படிப் பாடினேன்” என்று கேட்டால் எல்லாரையுமே நல்லாப் பாடினீங்க என்று தான் சொல்வேன். பின்பு மற்றவர்களிடம் கல்ந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என்ற நினைப்பில்.
இரண்டு நாட்களுக்குப் பின் ராஜகுரு கோபமாக வந்தான் என்னிடம். “நீ என்ன தான் நினைச்சிட்டிருக்க மனசுல. எவனாவது கேவலமா பாடினாலும் சூப்பரா இருக்கு, அட்டகாசமா இருக்குன்னு சொல்லி ஏத்தி விடுறியாமே?”
”அப்படில்லாம் இல்ல... மூஞ்சியில அடிச்ச மாதிரி எப்டி சொல்றது?”
“அதுக்கு? அந்த ராஜா என்னத்த பாடறான்? அவனைப் போயி நல்லாப் பாடறன்னு சொல்லி விட்டிருக்க. அவன் வந்து விடுற ரவுசு தாங்க முடியல. ’டேய் நீ எல்லாம் பாத்ரூம்ல பாடக்கூட லாயக்கில்ல டா’ ன்னு சொன்னா, ’போடா, நீ என்ன சொல்றது தீபலக்ஷ்மியே என்னை அப்படி பாடற, இப்படி பாடறன்னு என்னமா சொல்லுச்சு.. நீ போடா..உனக்குப் பொறாமை’ ன்னு சீன் விடறான். இனிமே நானே செலக்ஷன் பாத்துக்கறேன்” என்று சொன்னதும் அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் லடாய் ஆனது.
பின்பு ஒருவாறு சுமுகமாகி அந்த ஆண்டு இசை நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தினோம். அனைத்துக் கல்லூரிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு கலக்கினோம்.
ஆனால் வாங்கிய பரிசுகளை விட, அவையின் கைதட்டல்களும், மேடைக்குப் பின் படபடக்கக் காத்திருந்த நிமிடங்களூம், பாடி முடித்து வந்ததும் நண்பர்களின் மனமார்ந்த பாராட்டும், மேலும் தீவிர இசையார்வம் கொண்டவர்களுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல் அனுபவங்களும் மறக்கமுடியாத இனிய நினைவுகள்.
சேர்ந்திசை என்ற இந்த விஷயத்தினால் சொந்த விருப்பு, பெருமை இவற்றை ஒதுக்கி இசை என்னும் தேனில் நட்பு என்ற சர்க்கரையைக் கலந்து பருகியதால் ஆர்க்கெஸ்ட்ரா அனுபவங்களை என்றென்றும் தித்திக்கின்றன.
(பி.கு. பதிவு கொஞ்சம் நீ....ளம். பொறுத்தருள்க!)
Wednesday, September 2, 2009
ரொம்ப நாளைய ஏக்கம்
ஒன்று Jane Austen எழுதிய Pride and Prejudice என்ற பழைய ஆங்கில நாவலின் மறு மறு மறு வாசிப்பு. 19 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தின் மேல்தட்டு மக்களையும் குறிப்பாக இளம்பெண்களையும் அவர்களது அக வாழ்வையும் பற்றியே எழுதிய இவரது எழுத்துக்கள் ரமணிசந்திரனின் நாவல்களைத் தான் நினைவூட்டும். ஆனாலும் அழகான மொழியும் ரசமான நடையும் சுகமான வாசிப்பனுபவம் தரக்கூடியவை. Just light and luxury reading!
இன்னொரு நாவல் – இல்லை அது நாவல் இல்லை, சுயசரிதை. அதிகமாக பரபரப்புடன் பேசப்பட்ட கமலாதாஸ் அவர்களின் என் கதை.
மேலே படிக்கும் முன் ஒன்றைத் தெளிவு படுத்திவிடுகிறேன். இது அவரது நூலின் விமர்சனம் அல்ல. படிக்கும் போதும் படித்து முடித்த பின்னும் என் மனதின் உணர்வுகளைப் பதிக்கிறேன். அவ்வளவே.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனதை உருக்கும் சோகக் காவியம் என்று நினைத்துக் கொண்டு படிக்கத் தொட்ங்கினேன். ஆனால் பக்கத்துக்குப் பக்கம் சுவாரசியங்களும் ஆச்சரியங்களும் அதிர்ச்சகளும் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் செல்வச் செழிப்பு மிகுந்த நாயர் குடும்பத்தில் பிறந்த கமலா தாஸ் கல்கத்தாவில் கழித்த தனது சிறு வயது அனுபவங்களுடன் தொடங்குகிறார்.
பிரிட்டிஷ் குழந்தைகள் படிக்கும் பணக்கார ஆங்கிலப்பள்ளி ஒன்றில் படித்த போது அனுபவித்த இனவேறுபாடுகள், ஆங்கிலேய முறையில் அங்கு சில காலம் வாழ்ந்த வாழ்க்கை, பின்பு மலபாரில் நலாபட் வீட்டில் வாழ்ந்த காலத்தை விவரிக்கும் போது அந்த வீட்டின் பிரம்மாண்டம், தோட்டங்களின் அழகு, வீட்டில் தன் அண்ணனுடன் சேர்ந்து நடத்தி நடித்த மேடை நாடகங்கள், பெரும் பண்டிதரான அவரது தாத்தா, பாட்டிகள், அத்தைகள் பற்றிய வர்ணனைகள் என்று கேரளத்துக் கிராம வாழ்க்கையைக் கண் முன் நிறுத்தும் அவரது சிறு வயது நினைவுகள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன.
பின்பு இளம் பதின்ம பருவத்தில் அவர் செல்லும் கன்னியாஸ்திரிகளின் பள்ளியை நினைவு கூர்கிறார்.
அங்கிருந்து எழுதப்படும் கடிதங்கள் அனைத்தும் கன்னியாஸ்திரிகளால் எடிட் செய்யப்படும் என்பதால் வழக்கமாக சரளமாகவும் நகைச்சுவையாகவும் எழுதும் கமலா ஒழுங்குப் பிள்ளை போல கடிதம் எழுதியதை அவரது அண்ணன் கேலி செய்ததைப் படிக்கும் போது நம்மால் அந்தச் சிறுமியின் நேர்ந்த சிறு அவமானத்தை உணர முடிகிறது.
பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் கவிதைகள் புனையும் அளவுக்குத் திறமை சாலியாக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது. கேரள மண்ணுக்கே உரிய அழகும் வனப்பும் இருந்தாலும் மாநிறத்தவர் என்பதால் குடும்பத்தாரிடமே இருந்து கூட விதைக்கப் பட்ட தாழ்மை உணர்ச்சியும் வெகுவாகப் பாதித்ததாகக் குறிப்பிடுகிறார்.
அவர் வாழ்ந்த காலம், அவரது மேல் தட்டு வர்க்கம், (நடுத்தர வர்க்கம் என்று அவர் சொல்லிக் கொண்டாலும்) மொழி, ஊர், என்று எதையுமே நெருங்கித் தொடர்பு படுத்திப் பார்க்க முடியாததால் ஒரு வித அந்நியத் தன்மை ஏற்பட்டாலும் பெண்மை உணர்வுகளைச் சொல்லும் விதத்தில் நாம் அறியாமலே சில இடங்களில் உள்ளத்தைத் தொடுகிறார்.
மேலும் கணவனின் முழு அன்பு தனக்கு எப்போதுமே கிடைக்கவில்லை என்று ஏங்கியதாகச் சொன்னாலும் சில சமயங்களில் இவரது கணவர் இவரை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டதையும் ஆதுரத்துடன் இவரைப் புரிந்து கொண்டு பாதுகாப்பாக இருந்ததையும் சொல்கிறார்.
அதிகம் யோசிக்கும் பெண்ணுக்கு இச்சமூக வாழ்க்கையில் திருப்தி ஏற்படாது என்று தனது வாழ்க்கையிலிருந்தே இவர் சொல்லும் பாடத்தை மட்டுமே முழுமனதுடன் ஏற்க முடிகிறது.
கூர்மையான அறிவும், பெற்றோர்களின் தலையீடு பெரிதாகப் பாதிக்காமல் இள வயதில் கிடைத்த பரந்து பட்ட சுதந்திர அனுபவமும், வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் தாகமும் கூடிய பெண் ஒருத்தி பதினைந்து வயதில் ஏற்பட்ட பொருந்தாத திருமண வாழ்க்கையால் மனமும் உடலும் அலைக்கழிக்கப் படுவதை உண்மையுடன் அலாதியாகச் சொல்லி இருக்கிறார்.
வாசகர்களுக்குத் தன் மீது இரக்கம் ஏற்படவேண்டுமென்ற நோக்கமோ, தனது பொறுப்பற்ற பல செய்கைகளுக்குப் நியாயம் கற்பிக்கும் எண்ணமோ கமலா தாஸுக்குச் சிறிதும் இல்லை. அதனால் எனக்கும் அவர் மீது இரக்கமோ நியாயமோ தோன்றவில்லை.
அவரே சொல்லி இருப்பது போல் அவருடைய முழுப் பலமான உண்மை கதையில் தொனிக்கிறது. முற்பாகத்தில் சில இடங்களில் வெளிப்படும் மழுப்பல்கள் கூட இறுதியில் அவராலேயே விளக்கம் கொடுத்து விடப்படுவதால் மதிப்பில் உயர்ந்து தான் நிற்கிறார்.
இதை முதலில் படிக்கும் போது ஏற்படும் உணர்வுகளுக்கும் மறு வாசிப்பு செய்யும் போதோ இல்லை சில ஆண்டுகள் கழித்து இதை வாசிக்கும் போதோ ஏற்படும் உணர்வுகளுக்கும் வேறுபாடுகள் வர நிறைய வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. அதுவே ஒரு சிறந்த சுயசரிதை நூலின் வெற்றி என்று கருதுகிறேன். ஒருவரை நன்கு புரிந்து கொள்ள காலமும் ஒரு முக்கிய காரணம் அல்லவா?
My Story
Autobiography
by Kamala Das
Rs. 100
D C Books, Kottayam 686 001
Website: http://www.dcbooks.com/
Online shopping: http://www.dcbookshop.net/
e-mail: info@dcbooks.com