Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Monday, June 29, 2009

அம்மா எழுதிய பாட்டு!

ஆரா அமுதே அருமருந்தே

அம்பிகையே அருள் மீனாட்சி

காரார் குழலி கருங்கண்ணி

களி நடமிடுவாய் என் மனதில்!


சீரார் பொன்னே சிறப்பே புகழே

சிந்தை இனிக்கும் சிவசக்தி

பேரார் பெரியோர் போற்றும் அழகி

எழில் நடமிடுவாய் என் மனதில்!


தேனே பாலே கற்கண்டே

திகட்டாச் சுவையே திரவியமே

மானே மணியே மரகதமே

மகிழ் நடமிடுவாய் என் மனதில்!

வானே வயிரக் குன்றே ஒளியே

வளர் புகழுடையாய் மீனாட்சி

கோனே கொடியே கோபுர விளக்கே

குதி நடமிடுவாய் என் மனதில்!


பூவே பூவின் மணமே பொறையே

புகழ் வளமுடையாய் மீனாட்சி

தாயே சேயே தவழ்வெண் ணிலவே

தனி நடமிடுவாய் என் மனதில்!


இது என் அம்மா நான் குழந்தையாக இருந்த போது என்னைத் தொட்டிலில் இட்டுப் பாடிய பாடல். அவர்களே இயற்றியது. நேஹா வயிற்றில் இருக்கும் போது இப்பாடல் வரிகளைக் கேட்டு எழுதிக் கொண்டேன். அவள் பிறந்தது முதல் தூங்க வைக்க இந்தப் பாடல் தான் அதிகமாகப் பாடுவது.

மிக எளிய வார்த்தைகள் தான். ஆனால் நானும் இளவயதில் கேட்டுக் கண்ணயர்ந்த பாடல் என்பதாலோ, அந்த வார்த்தைகளில் ஒரு இனம் புரியாத மன அமைதி கிட்டுவதினாலோ தெரியாது, நேஹா இதன் மூன்றாவது சரணத்துக்குள் சொக்கி விழுந்து விடுவாள்!

அம்மா ரொம்ப் சென்டிமென்டல் எல்லாம் கிடையாது. ஆனால் சில மாதங்களுக்கு முன் என் வீட்டில் வந்து தங்கி இருந்த போது நான் இப்பாடலைப் பாடி நேஹாவைத் தூங்க வைப்பது பார்த்து அவர்கள் முகத்தில் தெரிந்த பூரிப்பு! ரொம்ப ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தார்கள்.


கிட்டத் தட்ட ”நீலக்கடலின் ஓரத்தில்” என்ற பழைய பாட்டின் மெட்டில் பாடவேண்டும். கொஞ்சம் மெட்டு இடிக்கும் போது உங்கள் வசதிக்கேற்ப வார்த்தைகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். :-)