Tuesday, April 5, 2016

ஜே.என்.யூ சர்ச்சை: ___ ஜே என் யூ மாணவர்கள் தேசவிரோதிகள் என்பது விதண்டாவாதம்; சுதந்திர சமூகத்தில் அதற்கு இடமில்லை

Translated from:
அயோக்கியர்களின் இறுதியான புகலிடம் தேசபக்தி. ஜே‍என்யூவில் இடம் பெற்ற "தேச விரோத" முழக்கங்களுக்கு எதிராகக் கிளம்பும் கூச்சல்கள் இந்திய‌ அரசியல்வாதிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மத்தியில் எத்தனை அயோக்கியர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்பதைத் தான் காட்டுகிறது. ஒரே ஒரு கருத்தியலின் அடிப்படையில் தான் ஒரு நாடு முழுதும் அமைய வேண்டும் என்பதும் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் தேச விரோதம் என்பது அறிவுபூர்வமாக அபத்தமானதும் படுமோசமான ஆதிக்கவாதமும் ஆகும்.
ஜே.என்.யூவில் போராடும் மாணார்கள் மக்பூல் பட் அஃப்சல் குரு ஆகியோரைத் தியாகிகளாகவும் இந்திய நீதித்துறையை விமர்சித்தும் குரலெழுப்பி இருக்கிறார்கள். சிலர் காஷ்மீரின் தன்னாட்சிக்கும் சிலர் நாட்டின் இறையாண்மைக்கும் எதிராகவே கூடக் முழக்கமிட்டிருக்கிறார்கள்.
துப்பாக்கிகளும் முழக்கங்களும்
அதனால் என்னவாம்?
இம்மாணவர்களின் முழக்கங்களை நீங்கள் எதிர்க்கலாம். ஆனால் உலகில் எங்கு எப்போது மாணவர்கள் அரசுக்குக் கட்டுப்பட்டு அதற்கு இயைந்ததை மட்டுமே ஒத்தூதுபவர்களாக இருந்துள்ளனர்?
ஜனநாயகமான எந்தவொரு சமுதாயத்திலும் மாணவர்கள் அனைத்து விதமான தீவிர எதிர்ப்புக் கருத்துகளையும் ஏற்றிருக்கிறார்கள்; அதற்கு அவர்களுக்கு முழுச்சுதந்திரமும் இருத்தல் வேண்டும். அப்போது தான் அவை சுதந்திரமான சமுதாயங்கள்.
கட்டுப்பாடான சமூகங்களின் விஷயம் வேறு. தியானமென் சதுக்கத்தில் போராடிய மாணவர்களையும் கம்யூனிஸ்ட் சீனாவும் தாஹ்ரீர் சதுக்கப் போராட்டத்தை எகிப்தும் அடக்குமுறை செய்தன. ஆனால் வியட்நாம் போருக்கு எதிராகப் போராடியதில் முதன்மையானவர்கள் அமெரிக்க மாணவர்கள் தாம். அரசு முன்வைத்த நாட்டுப் பற்றுக் கருத்தை அவர்கள் உறுதியாக நிராகரித்தனர்.
அவர்களது கருத்துகளுடன் மாறுபட்டவர்கள் கூட அவர்களது எதிர்ப்பு உரிமையைக் கேள்விக்குள்ளாக்கவில்லை.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட ஒரு நிறுவனம் தான். இருந்தும் 1933 இல் ஆக்ஸ்ஃபோர்டு சங்கம் "அரசுக்காகவும் மன்னருக்காகவும் எந்தவிதத்திலும் இக்கல்வி நிறுவனம் போராடுவதற்கில்லை" என்ற தீர்மானத்தின் மேல் விவாதம் நடத்தியது. இதற்கு ஆதரவாக 275 வாக்குகளும் எதிராக 153 வாக்குகளும் பதிவாயின. இந்தப் புகழ்வாய்ந்த‌ ஆக்ஸ்ஃபோர்டு தீர்மானம் பிற்பாடு மான்செஸ்டர் மற்றும் க்ளாஸ்கோவ் பல்கலைக்கழக மாணவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரிட்டன் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவர்கள் முட்டாள்கள் கோழைகள் தேசவிரோதிகள் மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் என்று பலவிதமாகவும் தூற்றப்பட்டார்கள்.
ஆயினும் அவர்களைத் தேசவிரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்வது பற்றிய சிந்தனை எழவேயில்லை. இதிலிருந்தே நமது என்.டி.ஏ அரசின் தேசவிரோதம் பற்றிய புரிதலின் கோணம் விளங்குகிறது. இதை விடக் கொடுமை என்னவென்றால் ஊடக நட்சத்திரத் தொகுப்பாளர்கள் மாணவர்களைப் பார்த்துக் கோபத்துடன் "என்ன தைரியமிருந்தால் நாட்டை உடைக்கப் பார்ப்பாய்" என்று கத்துவது. சுதந்திர சமுதாயம் என்பதன் அரிச்சுவடி கூடத் தெரியாத அறியாமையில் கிடக்கிறார்கள்.
ஸ்காட்லாந்து தேசிய கட்சி இங்கிலாந்திலிருந்து பிரிந்து தனி ஸ்காட் நாடு அமைக்க முனைகிறது. அக்கட்சித் தலைவர்கள் தேசத் துரோகத்துக்காகக் கைது செய்யப்படுகிறார்களா? சமுதாயத்தில் மரியாதைக்குரிய இடமும், தங்கள் கோரிக்கைக்காக ஒரு வாக்கெடுப்பையும் பெற்றிருக்கிறார்கள். விரைவிலேயே இன்னொன்றும் கிடைக்கப் பெற இருக்கிறார்கள்.
வெல்ஷ் தேசியாவாதிகளும் இதே போல் தனி வெல்ஷ் நாட்டைக் கோருகிறார்கள். இவர்களையெல்லாம் கைது செய்வதை யாரும் நினைத்தும் பார்ப்பதில்லை.
கனடாவில் கபெக் தேசியக் கட்சி வெகு காலமாய் கபெக் மாகாணத்துக்குத் சுயாட்சி வேண்டிப் போராடி வருவதைத் தேசத் துரோகமாக அன்றி, நியாயமான ஜனநாயகமான கோரிக்கையாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.
ஸ்பெயினில் காடலோனியா மாநிலத்தின் செல்வாக்கு மிகுந்த பிரிவினைவாத சக்திகள் 2015 மாநிலத் தேர்தலில் 47.8 சதவீத வாக்குகள் வென்றன. ஸ்பானிஷ் அரசு காடலன் பிரிவினைக்கு எதிரானது என்ற போதும் போராடுபவர்களைக் கைது செய்வதில்லை. பிரெஞ்சு அரசாங்கம் கார்ஷியன் பிரிவினைவாதிகளைச் சிறையில் அடைக்கவில்லை. இவ்வாறாகப் பட்டியல் நீளுகிறது. சுதந்திரமான ஜனநாயக சமுதாயத்தில் வன்முறையில் ஈடுபடாத பிரிவினைவாதிகள் சிறைப்படுத்தப் படுவதில்லை.
இந்தியா இதைச் செய்கிறது. இதனால் இந்தியா ஜனநாயகச் சமூகமாக இருக்க விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது. இல்லையென்றால் ஏன்?
அகிம்சா வழியில் போராடும் காடல்ன் பிரிவினைவாதிகளைச் சகித்துக் கொள்ளும் ஸ்பெயின், வடக்கே ஆயுதமேந்தித் தனி பாஸ்க் நாட்டுக்காகப் போராடும் தீவிரவாதிகளை ஆயுதங்கள் கொண்டே அடக்கிவருகிறது. ஸ்காட்லாந்து தேசியக் கட்சியைச் சட்டபூர்வமாக்கிய பிரிட்டன், அயர்லாந்து குடியரசுப் படையைத் தகர்க்கிறது. சுதந்திர (ஜனநாயக) சமுதாயங்கள் வன்முறையைத் தூண்டுபவர்களைத் தீவிரமாக அடக்கும் அதே நேரம், பிரிவினைவாதம் உட்பட, புரட்சிகரமான மாற்றங்களுக்காக அமைதி வழியில் போராடுபவர்களைச் சட்டபூரவமாக அனுமதிக்கின்றன.
மக்பூல் பட்டைக் கொலைக் குற்றத்துக்காகத் தூக்கிலிடச் சட்டத்தில் அனுமதி உண்டு, ஆனால் கோஷங்கள் இட்டதற்காக ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவரைச் சிறையிலடைக்க இல்லை.
தமிழ்நாட்டுப் புரட்சி பாடகர் ஒருவர், கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராகக் கேலிச்சித்திரம் வரைந்தவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவ்வளவு ஏன், ஒரு முகநூல் பதிவுக்கு 'லைக்' இட்டவர்கள் என்று பலரும் இந்தியத் தேசவிரோதச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.
என்னைக் கேட்டால், இவை அனைத்தும் தாம் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய மக்கள் விரோதச் செயல்கள். தேச விரோதம் என்பதற்கான அரசாங்கத்தின் விளக்கத்தை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்.
1971 இல், பாகிஸ்தான் இராணுவத் தாக்குதலை ஒட்டி பல்லாயிரக்கணக்கான வங்காளதேச மக்கள் இந்தியாவுக்கு வந்து தஞ்சமடைந்தார்கள்.இந்தியப் பத்திரிகைத் தகவல் அலுவலகம் மேற்கு வங்கத்தில் இருந்த அகதிகள் முகாமுக்குப் பத்திரிகையாளர்களை அனுப்பி வைத்தது. டைம்ஸ் பத்திரிகையின் சார்பில் அக்குழுவில் நானும் இருந்தேன். ஆனால் PIB நான் நாட்டுக்கு விரோதமான கேள்விகள் கேட்டதாக டைம்ஸுக்குப் புகார் செய்தது.
நான் என் ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. PIB எங்களைக் கேட்கத் தூண்டிய கேள்விகள், "பாகிஸ்தான் இராணுவம் கொடுமை செய்ததா?", "இந்தியாவுக்கு வந்ததற்காக நன்றியும் மகிழ்ச்சன்ியும் அடைகிறீர்களா" போன்றவை.
நானோ அகதிகளை அனுமதித்ததன் காரணாமாக உள்நாட்டு மக்களிடம் அதிருப்தி நிலவுகின்றதா, இந்து முஸ்லீம் பிரச்னைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதா, மேலும் அகதிகள் தங்கள் முகாம்களை விட்டுக் கொல்கத்தாவை ஆக்கிரமிக்கும் வாய்ப்புண்டா என்று கேட்டிருந்தேன்.
இந்த வினாக்கள் என்னைத் துரோகியாக அடையாளப் படுத்தி விட்டன போலும். டைம்ஸ் பத்திரிகை நல்ல பிள்ளையாக‌ எனது பேட்டியை வெளியிடாமல் விட்டு விட்டது. பின்பு இரு மாதங்களுக்குப் பிறகு அரசு போர்க்கால நிருபர்களுக்கானதொரு பயிற்சியைப் பத்திரிகையாளர்களுக்கு நடத்தியது; பாகிஸ்தானுடன் போர் மூண்ட சமயம் அது. டைம்ஸ் சார்பாக அப்பயிற்சிக்கு நான் நியமிக்கப் பட்ட போது சந்தேகத்துக்குரிய தேசவிரோதி என்று கூறி அரசாங்கம் என்னை நிராகரித்தது.
அப்போதிருந்து எந்த அடிப்படையில் நாட்டுப் பற்றாளர் என்றும் மக்கள் விரோதி என்றும் தரம் பிரிக்கிறார்கள் என்று அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள், நட்சத்திர ஊடகவியலாளர்கள் என்று அனைத்துத் தரப்பினர் மீதும் கோபத்துடன் வினவி வருகிறேன். தேசபக்தி என்பது அயோக்கியர்களின் இறுதிப் புகலிடம் மட்டுமல்ல, முதல் முகமூடியும் அதுவே.

சபிக்கப்பட்ட தேவதை


பித்தேறிய‌ அழுத்தத்தில் ஓடுகின்ற‌ குருதி, 
ரணங்களின் பாரத்தில் துடிக்கின்ற‌ இதயம்,
கைக்கிளை நினைவுகளில் புடைத்து நிற்கும் நரம்புகள், 
சிறுநொடிப் பார்வையில் செயலிழக்கும் நாடி,
அத்தனையும் சமநிலை, அவளுடலகராதியில்;
உயிர் தீண்டும் காதலொன்றை வேண்டாது பெறுகையில்,
நிலை குலைந்து மூச்சு முட்டித் திண்டாடி விடுகிறாள்;
தருவதில் செழிக்கும் உயிர் பெறுவதில் சிதைகிறது;
உன்மத்தக் கூத்தாடி ஊடல் கொண்டு போராடி,
வந்ததைக் கொன்றொழித்து இன்னுயிர் மீள்கிறாள்!