Sunday, February 14, 2010

மருத்துவர் ருத்ரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு

வலையுலகில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எல்லோரும் எழுதுகிறோம், வாசிக்கிறோம், அரட்டைய‌டிக்கிறோம், விவாதம் செய்கிறோம்; ஆனால் ஒரு சிலர் இங்கே இருப்பதும் எழுதுவதும், கருத்துப் பரிமாற்றம் செய்வதும், நமக்குப் பெருமையளிப்பது மட்டுமல்ல, வலையுலகின் தரத்துக்கும் வள‌ர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கும்.

அப்படிப்பட்டவர்களில் டாக்டர் ருத்ரன் முக்கியமானவர்.
புகழ்மிக்க மனநல மருத்துவரான டாக்டர் ருத்ரன் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர். அவர் சிறந்த ஓவியர் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வாங்கும் மனவியல் மருத்துவப் பணிகளுக்கிடையே, ஓவியம், நாடகம், எழுத்து, குறும்பட இயக்கம், போன்ற பல துறைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுச் சாதனைகளும் புரிவதென்பது சாதாரண விஷயமல்ல.

அவ‌ரை நேரில் ச‌ந்தித்து உரையாட‌ விரும்பி அனும‌தி கேட்டோம். ம‌றுக்காம‌ல் ஒப்புக் கொண்ட அவ‌ர், "ச‌ரி, என்ன‌ திடீர்னு.." என்றார்.

"உங்க‌ளைப் பேட்டி எடுக்க‌லாம்னு தான்." என்றேன்.

சிரித்துக் கொண்டே..."பேட்டி எல்லாம் என்ன‌ம்மா. சும்மா வாங்க‌ அரட்டைய‌டிக்க‌லாம்" என்றார். அது தான் ந‌ட‌ந்த‌து!
நான்கு பேரில் இர‌ண்டு பேர் த‌விர்க்க‌ முடியாத‌ கார‌ண‌ங்க‌ளால் வ‌ர‌ முடியாம‌ல் போக‌, நானும் முல்லையும் க‌ட‌ந்த‌ வாரத்தில் ஒரு இனிய மாலையில் அவர் இல்ல‌த்துக்குச் சென்றோம்.

டாக்ட‌ரும் அவ‌ர‌து ம‌னைவி உமாவும் எங்க‌ளை அன்புட‌ன் வ‌ர‌வேற்ற‌ன‌ர். இருவ‌ருமே மிகவும் இயல்பாகவும் நட்புடனும் பேசினார்கள். திருமதி உமா ப‌திவுக‌ளையெல்லாம் த‌வ‌றாம‌ல் ப‌டிப்பதாகச் சொல்லவும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சமீபத்தில் வந்த பதிவுகள், கலாட்டாக்கள், ஆயிரத்தில் ஒருவன் விமர்சனங்கள் என்று தொடர்ந்தது பேச்சு.

முல்லை நான்கு வ‌ருட‌ங்க‌ளாக‌ப் ப‌திவுல‌க‌த்தில் இருப்ப‌தை அறிந்த‌தும் உமா டாக்டரிடம், "நீங்க‌ தான் இவ‌ங்க‌ளைப் பேட்டி எடுக்க‌ணும். She is your senior in blogging" என்று க‌ல‌க‌ல‌ப்பைத் தொட‌ங்கி வைத்தார்.

எங்கள் கேள்விகள் எப்படி இருந்த போதிலும் டாக்டர் சுவாரசியமாகவே பதிலளித்தார்; சொல்லி விட்டு "என்ன சரிதானா?" என்ப‌து போல் டாக்டர் தன் மனைவியின் முகத்தைப் பார்த்த‌தும், அவர் "ஆமாம், எல்லாம் என்னைக் கேட்டுத் தான் செய்ற மாதிரி" என்று அவர் செல்லமாக முறைத்த‌தும் டாக்டரின் பதில்களுக்கு இணையாகச் சுவாரசியமாக இருந்தன!

முல்லை: த‌மிழ்ம‌ண‌த்துக்கு நீங்க‌ எப்ப‌டி வ‌ந்தீங்க‌ டாக்ட‌ர்?
டாக்ட‌ர்: வினவுத் தோழர்கள் தான் எனக்குத் த‌மிழ் ம‌ண‌த்தை அறிமுக‌ப்ப‌டுத்தினாங்க‌. என் இடுகைக‌ளையெல்லாம் அவ‌ங்க‌ தான் த‌மிழ் ம‌ண‌த்துல‌ சேர்த்து விடுவாங்க‌. நான் ரொம்ப‌ நாள் எழுதாமையே இருந்தேன். என்னை எழுத‌ வெக்கற‌துக்காக‌வே அவ‌ங்க‌ இதெல்லாம் செஞ்சாங்க. எழுத ஆரம்பிச்சப்பறம் நிறுத்த முடியல. Blogging is definitely addictive.அப்புறம் யார் யார் என்ன எழுதறாங்க, என்ன சொல்றாங்கன்னு பார்க்கறதுக்காக‌வும் வ‌லைப்ப‌திவுக‌ளுக்கு அடிக்க‌டி வ‌ர‌ ஆர‌ம்பிச்சேன்.

முல்லை: எழுத்தை வெச்சு எழுத‌ற‌வ‌ங்க‌ளோட‌ குணாம்ச‌ங்களைத் தெரிஞ்சுக்க முடியுமா?

டாக்ட‌ர்: ரொம்ப‌ இல்லை. ஏன்னா எழுத்தே ஒரு performance தானே. Perform பண்ணும் போது எல்லாருமே ஏதாவது மேற்பூச்சு ஒண்ணுப் போட்டுக்கிட்டுத் தானே ஆகணும். ஆனா ideology தெரியும். எந்த‌ மாதிரி ந‌ம்பிக்கைக‌ள், எதைச் சார்ந்து இருக்காங்க‌, சுருக்க‌மாச் சொன்னா அவ‌ங்க‌ mentality தெரியும். Personality பெரிசாத் தெரியாது.

நான்: நீங்க‌ த‌மிழ்ல‌யும் எழுத‌றீங்க‌ ஆங்கில‌த்திலும் எழுத‌றீங்க‌. இர‌ண்டில் எது உங்க‌ளுக்கு அதிக‌ம் பிடிச்சிருக்கு?

டாக்ட‌ர்: தமிழ்ல எழுத எனக்கு ஆர்வம் நிறைய இருந்தாலும் ஏனோ ஆங்கில‌ம் தான் எனக்கு ரொம்ப‌ இய‌ல்பான‌ மொழி. I think in English. அத‌னால‌ இங்கிலிஷ்ல‌ எழுத‌ற‌து ரொம்ப‌ சுல‌ப‌ம். த‌மிழ்ல‌ எழுத‌ணும்னா அங்கில‌த்தில் சிந்திக்க‌ற‌த‌ நான் மொழிபெய‌ர்த்து எழுத‌ வேன்டி இருக்கு. இதை வெளியில‌ சொன்னா சரியாப் புரிஞ்சுக்காம ' என்ன‌ நீ ல‌ண்ட‌ன்ல‌ பொற‌ந்தியா' அப்ப‌டிங்க‌ற‌ மாதிரி சொல்ல‌லாம். ஆனா இது என்னோட‌ இய‌ல்பு.

இன்னும் சொல்ல‌ப் போனா, நியாயமா என்னோட‌ த‌மிழ் எழுத்துக்குத் தான் அதிக‌ வாச‌க‌ர்க‌ள் இருக்க‌ணும்; ஊட‌க‌ங்க‌ள் மூல‌மா த‌மிழ் வாச‌க‌ர்க‌ளிடையே நான் ப‌ரிச்ச‌ய‌ம்க‌ற‌தால‌. ஆனா என் ஆங்கில‌ எழுத்துக்க‌ளுக்குத் தான் வாச‌க‌ர்க‌ள் அதிக‌மா இருக்காங்க‌. ஆனா கொஞ்ச‌ நாள் நான் எழுத‌ப் போற‌தில்ல.

நாங்க‌ள்: ஏன்?

டாக்ட‌ர்: சோம்பேறித் த‌ன‌ம் தான்.
(சிரிப்பு)

நான்: controversies தான் கார‌ண‌மா?

டாக்ட‌ர்: இல்ல‌வே இல்லை. controversies தான் என்னை அதிக‌மா எழுத‌த் தூண்டும். சும்மா ஒரு த‌ற்காலிக‌ இடைவெளி.

முல்லை: அனானி க‌மென்டுக‌ளைப் ப‌த்தி என்ன‌ நினைக்கிறீங்க‌. இது ஆரோக்கிய‌மான‌தா?

டாக்ட‌ர்: இல்ல‌ அது ரொம்ப‌வும் கேடான‌ விஷ‌ய‌ம். அனானியா வ‌ந்து பாராட்டிட்டுப் போற‌வங்க‌ ரொம்ப‌க் க‌ம்மி. தைரிய‌மா விம‌ர்ச‌ன‌ம் பண்ண‌ விரும்பாத‌வ‌ங்க‌ தான் அனானியா வ‌ர்றாங்க. இதுல‌ ஒரு விஷ‌ய‌ம் க‌வ‌னிக்க‌ணும். வ‌ர்ற‌வ‌ங்க‌ ந‌ம்ம‌க் க‌ருத்தை விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்றாங்க‌ளா இல்ல‌ த‌னிப்ப‌ட்ட‌ முறையில‌ திட்ட‌றாங்க‌ளான்னு.

முல்லை: இல்ல, இப்ப‌ என் ப‌திவில நான் சொல்ற‌ க‌ருத்து ஒண்ணு என் ஃப்ரெண்டுக்கு உட‌ன்பாடில்ல‌. என்னோட‌ பிர‌ச்னை வ‌ந்துட‌க் கூடாதுன்னு அனானியா வ‌ந்து அதை விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ற‌து த‌ப்பா?

டாக்ட‌ர்: அனானிமஸா ஒருத்தன் வந்து எனக்குக் கமென்ட் போடறான்னா அவன் என் ஃப்ரெண்டே கெடையாது! ஒரு க‌ருத்துக்கு எதிர்க‌ருத்து சொன்னா உட‌னே ந‌ட்பு முறிஞ்சுடுமோன்னு ப‌ய‌ப்ப‌ட‌ற‌து ப‌க்குவமே இல்ல‌ம்மா.

நான்: அப்போ அனானி க‌மென்டுக‌ளுக்கு ஏன் ப‌தில் சொல்ல‌ணும்? மொத்தமா தவிர்த்துடலாமே. நியாய‌மான‌ க‌ருத்தா இருந்தாலுமே அடையாள‌த்தோட‌ சொல்ல‌ல‌ இல்ல?

டாக்ட‌ர்: நியாய‌மா இருந்து, தனிப்பட்ட முறையில் தாக்குதல் இல்லாம‌ யார் எதிர் கருத்து சொன்னாலும் பதில் சொல்லணும்.

முல்லை: நன்றி சொல்றது அவசியமா டாக்டர்?

டாக்டர்: சாதாரணமா யாராவது நம்மைப் பார்த்துச் சிரிச்சாவே நன்றி சொல்லணும். ஆனா பதிவுகளைப் பொறுத்தவரை இது ஒரு காமெடி சீன் மாதிரி ஆகிடுமோன்னு தோணுது. நன்றிக்கு நன்றி, நன்றி சொன்னாங்களேன்னு அடுத்த தடவையும் அவங்களை அக்நாலெட்ஜ் பண்ற மாதிரி கமெண்ட் போடணுமோன்னு தோணிடும். அதனால நான் சொல்றதில்ல. ஆனா இது அவரவரோட தனிப்பட்ட விருப்பம்.

நான்: நான் சொல்றது வழக்கமாயிடுச்சு. அதனால நிறுத்தறதாயில்ல.

டாக்டர்: ஆமாம், திடீர்னு நிறுத்தினா இப்போ உனக்கு ரொம்ப திமிராயிடுச்சோன்னு சொல்லிடுவாங்க.

(சிரிப்பு)

பிறகு பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் தமிழ்ப் பதிவுலகத்தின் ஆரம்ப நாட்கள், அப்போது யாரெல்லாம் இருந்தனர் என்று திரும்பியது.

டாக்டர்: பதிவுலகத்திலும் சாதியம், ப்ராமினிஸம், நிறைய இருக்கு. குழு மனப்பான்மை, வேறெந்தக் காரணமும் இல்லாம சாதிக்காக சப்போர்ட் பண்றது, எல்லாம் இருக்கு.

நான்: ப்ராமினிஸம்னு நீங்க எதைச் சொல்றீங்க டாக்டர்?
டாக்டர்: அது ஒரு மெண்டாலிட்டி. மத்தவங்களைப் பத்திக் கொஞ்சம் கூட அக்கறையில்லாம ஒரு behavior. Selfishness காக என்ன வேணா பண்ணலாம்ங்கறது, ஒரு ethical code of conduct இல்லாம; a feeling that they are one step above the others; ஒரு திமிர்.

நான்: சரி, இதெல்லாம் யாருக்கு வேணா இருக்கலாம்னா ஏன் அதுக்கு ப்ராமினிஸம்னு பேர் வந்தது?

டாக்டர்: அவங்க தான் பெரும்பாலும் அப்படி இருந்தாங்க; அதான்.
பிராமணர்களும் யூதர்களும் ஒரே இனம்கறது அசோகமித்திரன் தொடங்கி வச்ச கேம்.
நான்: அது உண்மையா?
டாக்டர்: இல்லம்மா... என்னமோ அவருக்கு நேரம் சரியில்லை அப்படிப் பேசிட்டார்!

(சிரிப்பலை)

டாக்டர்: உண்மையில் அப்படி ஒண்ணும் கிடையாது. ஆனா அவர் அப்படிச் சொன்னவுடனே, அவருக்கு எதிரா கண்டனங்கள்... ”அப்போ என்ன சொல்றீங்க, யூதர்கள் மாதிரியே நீங்க தான் புத்திசாலிங்களா, நாங்கல்லாம் முட்டாள்களா... ”இப்படி.

முல்லை: என் ஃப்ரெண்டு தமிழ்ச்செல்வி சொல்லுவா ப்ராமணர்கள் யூதர்கள் கிட்டேந்து வந்தவங்க தான்.. ஏன்னா கடவுள் அவங்க கிட்ட பேசாதப்போ அவங்க ஒரு யாகம் பண்ணாங்களாம். அப்போ அதுலேர்ந்து ஒரு கன்னுக்குட்டி வந்ததாம். அந்தக் கன்னுக்குட்டி தான் காமதேனுன்னு.

டாக்டர்: ஆனா, இவங்க அப்படிச் சொல்லலையே! தங்களைப் பரம்மா தலைலேந்து வந்ததால்ல சொல்லிக்கறாங்க!

(மீண்டும் சிரிப்பு)

பதிவுகள் போய்க் கொண்டிருந்த பேச்சு மெதுவாக மனவியல் பக்கம் திரும்பியது.

முல்லை: நான் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு இடுகை எழுதினேன். ஆண் பெண் குழந்தைகள் வளர்ப்பில் நாம தான் வித்தியாசம் காட்டறோம் அப்படிங்கற அர்த்தத்தில். ஆனா சில பேர் உறுதியா சொல்றாங்க அதெல்லாம் ஜீன்ஸ்லயே வர்றது அப்படின்னு. இது பத்தி உங்க விளக்கம் என்ன டாக்டர்?

(இந்தக் கேள்விக்கும் குழந்தை வளர்ப்பு, கனவுகள், ஒருபாலின ஈர்ப்பு, ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் சம்பந்தமாய் இன்னும் பல கேள்விகளுக்கும் டாக்டரின் பதில்கள் அடுத்த இடுகையில்!)

20 comments:

gulf-tamilan said...

நல்ல கலந்துரையாடல்.டாக்டர் பதிலுக்காக எதிர்பார்க்கிறோம்.

அண்ணாமலையான் said...

gud post ..congrats

காமராஜ் said...

இது மிகப்பெரிய விஷயம் தீபா.

வலையில் நான் பார்க்கும் தளங்களில்
தட்டுப்படாத முயற்சி இது.
மிகச்சிறந்த கேள்விகளின்
துவக்கப்புள்ளி இந்த நேர்காணல்.
சாரோட பதில்கள் பலவற்றை
படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

என் தங்கையுமா ரொம்பசந்தோசமா இருக்கு.

பா.ராஜாராம் said...

ஆகா..

அருமையான முயற்சி.கேள்விகள்.பதில்கள்.

ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்றால் என்ன தீபா?

மதுரை சரவணன் said...

nalla santhippu. nalla pakirvu. vaalththukkal.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சுவாரஸ்யமான அரட்டை :)

மருத்துவர் ருத்ரன் அவர்களின் கருத்துகளை மிகவும் இரசித்தேன். அடுத்த பகுதிக்காக வெயிட்டிங் :)

அன்புடன் அருணா said...

அட! Dr.ருத்ரன் கூட கலந்துரையாடலா???ம்ம்ம் பொறாமையா இருக்குப்பா!

ராஜ நடராஜன் said...

//த‌மிழ்ல‌ எழுத‌ணும்னா அங்கில‌த்தில் சிந்திக்க‌ற‌த‌ நான் மொழிபெய‌ர்த்து எழுத‌ வேன்டி இருக்கு. இதை வெளியில‌ சொன்னா சரியாப் புரிஞ்சுக்காம ' என்ன‌ நீ ல‌ண்ட‌ன்ல‌ பொற‌ந்தியா' அப்ப‌டிங்க‌ற‌ மாதிரி சொல்ல‌லாம். ஆனா இது என்னோட‌ இய‌ல்பு.//

மருத்துவர் சொல்வது இயல்பான ஒன்று என நினைக்கிறேன்.நண்பன் ஒருவன் சென்னை மொழில நீ ரொம்ப.... நல்லவன்டாங்கிற மாதிரி வில்லத்தனம்.தமிழ் எழுத்தோ ரொம்ப சுத்தம்.ஆனால் பேசுவதும்,சிந்திப்பதும் ஆங்கிலம் மட்டுமே.வளர்ந்த முறையும்,ஆங்கிலப் பள்ளியும் காரணங்கள்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஹாய் தீபா! வலைத்தளத்த அடுத்த தளத்துக்கு நகர்த்துற நல்ல முயற்சிங்க!வாழ்க!வளர்க!

☀நான் ஆதவன்☀ said...

சுவாரஸ்யம் :) அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

என் பின்னூட்டத்துக்கு நன்றி கூறி நீங்கள் இடப்போகும் பின்னூட்டதிற்கு நன்றி :)))

☀நான் ஆதவன்☀ said...

சுவாரஸ்யம் :) அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

என் பின்னூட்டத்துக்கு நன்றி கூறி நீங்கள் இடப்போகும் பின்னூட்டதிற்கு நன்றி :)))

குடுகுடுப்பை said...

நன்று. அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுவாரசியம்


\\☀நான் ஆதவன்☀ said...

என் பின்னூட்டத்துக்கு நன்றி கூறி நீங்கள் இடப்போகும் பின்னூட்டதிற்கு நன்றி :)))//

:))))))

ஜெய்லானி said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

பகிர்வுக்கு நன்றி!

அம்பிகா said...

நல்ல கலந்துரையாடல். கேள்வி, பதிகள் அனைத்துமே சுவாரஸ்யமாய் இருந்தன. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அடுத்த இடுகையை எதிர்நோக்கி....

சந்தனமுல்லை said...

பகிர்வுக்கு நன்றி தீபா!

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்..

Radhakrishnan said...

எத்தனை எளிமையான கருத்துகளை அருமையாக பகிர்ந்து இருக்கிறார். நல்வாழ்த்துகள் தீபா, சந்தனமுல்லை. மேலும் பேட்டியைப் படிக்க ஆவல்.