Monday, November 4, 2013

விஜய் சேதுபதி

வெகுநாட்கள் கழித்து நேற்று விகடன் வாங்கினேன். அட்டையில் இருந்த இந்த வாசகத்துக்காக - "விஜய் சேதுபது வின்னர் - கார்த்தி சிலிர்ப்பு"

இதழைப் புரட்டினால், சிம்புவும் தன் பேட்டியில் விஜய் சேதுபதியைச் சிலாகித்திருக்கிறார். புதிய வரவுகளில் அவர் மட்டுமே மனதில் நிற்கிறார் என்று. கார்த்தியோ “தெளிவா ஸ்க்ரிப்ட் பிடிக்கிறார்” என்று அவரது வெற்றியின் ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டது போல் பூரிக்கிறார்.

விஜய் சேதுபதி - இவரது படங்கள் வெற்றி பெறுவதன் ரகசியம் என்ன? இவரை எல்லாருக்கும் பிடிக்கும் காரணம் என்ன? அத்தனை படங்களும் வித்தியாசமான ஸ்க்ரிப்ட், புதிய இளம் இயக்குநர்கள், கண்டிராத கதை.

ஆனால் இதையே தானே தங்களது ஒவ்வொரு புதிய படத்தின் போதும் டிவி பேட்டிகளில் நமது முன்னணி நாயகர்களும் அவர்களை இயக்கிய இயக்குநர்களும் செப்பிக் கொண்டி திரிந்தார்கள்?

”இந்தப் படத்தில ரொம்ப வித்தியாசமா ஒரு ரோல் பண்ணிருக்கேன்...”

அப்படிப்பட்ட பெரிய தலைகளும் தளபதிகளும் தொடர்ந்து மண்ணைக் கவ்விக் கொண்டிருப்பது எதனால்? மக்கள் ரசனை மாறிக் கொண்டு வருகிறது, ஆரோக்கியமான மாற்றமாக அது இருக்கிறது என்று நம்பலாமா?

விஜய் சேதுபதியின் படங்களைப் பார்ப்போம். ஸ்க்ரிப்டை விடவும் அவரது பாத்திரப்படைப்புகளைப் பாருங்கள்.

மேக்கப் இல்லை, கலர் கலராய்க் காஸ்ட்யூம்கள் இல்லை, முக்கியமாக விதவிதமான ஃபாரீன் லொக்கெஷன்களில் ஹீரொயினோடு டூயட்டுகள் இல்லை. இதெல்லாம் மற்ற நாயகர்களாக் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?


பத்தடி உயரத்திலிருந்து டூப் இல்லாமல் குதிப்பதையே “ரிஸ்க்” எடுத்து நடிச்சிருக்கேன் என்று பீற்றிக் கொண்டு பேட்டி கொடுப்பவர்களுக்கு இதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ரிஸ்க் இல்லையா?
மக்கள், மாஸ் என்று மக்கள் வெறுத்துப் போகும் அளவுக்கு குப்பைகளையே வாந்தி எடுத்துக் கொண்டிருந்த நேரம் விஜய் சேதுபதி இவர்கள் எல்லாரும் வெட்கிச் சுயவிமர்சனம் செய்து கொண்டே தீர வேண்டிய வகையில் மின்னத் தொடங்கி இருக்கிறார்.

எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் ஒரு நடிகர் இந்த வித்தியாசமான முயற்சிகளைச் செய்ய முடியுமென்றால் பெற்றோர் முதுகில் சவாரி செய்தபடி, வெள்ளிக் கர்ண்டியுடன் பிறந்த நடிகர்களான, கார்த்தி, தனுஷ், சிம்பு, சூர்யா, ஜெயம் ரவி, ஜீவா போன்றோர் ஏன் செய்ய முடியாது? பதில் இது தான்...அவர்களால் முடியாது!

(தனிப்பட்ட முறையில் எனக்கு தனுஷ், ஜீவா இவர்கள் மேல் மட்டும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்கள், ம்ஹூம்!)

ஏன்? இவர்களுக்கெல்லாம் அழுக்கு லுங்கி, சவரம் செய்யாத தாடியுடன் இவர்கள் ”வித்தியாசமாக” நடித்தாலும் நாயகி ஒருத்தி அவருடன் படுப்பதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு பின்னாடியே திரிய வேண்டும். ஹீரோயிசம் காட்ட வேண்டும். ”தலைவா!” என்று மூடரசிகன் கோஷமிட்டுப் போதையேற்ற வேண்டும். அடுத்த படமே அதே ரசிகனைக் குஷிப்படுத்தும் போர்வையில், அழுக்கு இமேஜைப் போக்கிக் கொள்ளும்

வெறியுடன் பளபளப்பான உடையணிந்து நாயகியின் இடுப்பைக் கிள்ள வேண்டும். இதெல்லாம் செய்யாவிட்டால் மூச்சடைத்து இவர்களது சினிமா வாழ்க்கையே ஸ்தம்பித்து விடுமே?

(சூது கவ்வும் படத்தில் நாயகி கவர்ச்சியாகக் காட்டப்பட்டிருப்பதாகச் சிலர் வாதாடலாம். மற்ற படங்களை ஒப்பிடும் போது அவர் மிகவும் கண்ணியமாகவே குறிப்பிடப் பட்டதாகத் தான் கருத வேண்டும்.) முட்டாள்தனமான ஹீரோயிச்ங்கள் இல்லாத படங்களில் தான் நாயகிகளுக்கும் இடம் இருக்கும்.  பெண்களின் உடலை மட்டுமே பிரதானமாக விற்பனை பொருளாக்கும் நோயும் சினிமாவை விட்டு விலகும்.

விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல விஜய் சேதுபதிக்களும், பாலாஜி தரணீதரன்களும், நலன் குமாரசாமிகளும், கோகுல்களும் வர வேண்டும். மற்றவர்கள் இப்போதாவது கற்றுக் கொண்டால் மொத்தமாக எல்லாருக்கும் நல்லது; குறிப்பாக சினிமாவுக்கும் சமூகத்துக்கும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விஜய் சேதுபதி - வித்தியாசமான நடிப்பிற்கு பாராட்டுக்கள்... தொடர வேண்டியது முக்கியம்...