Monday, March 30, 2009

அழியாத கோலங்கள் - தொடர் பதிவு



நன்றி: திரு. மாதவராஜ் - “ஆண்கள் எல்லாம் கொடுத்து வச்சவங்க

இது பெண்களுக்கான ஆட்டம். வாங்க வாங்க!


அன்புள்ள கவிதா,


எப்படி இருக்கிறாய்? என்னடா திடீரென்று இத்தனை வருடங்கள் கழித்து இவள் கடிதம் போட்டிருக்கிறாள் என்று நீ வியப்புறுவது தெரிகிறது.
நேற்று வீட்டுப் பரண்களைச் சுத்தம் செய்தேன். பழைய ஆட்டோகிராஃப் நோட்டு கண்ணில் பட்டது. “Wish you a happy future", "Can never forget you" போன்ற யாரென்று மறந்தும் போன பல நூறு கையொப்பங்களுக்கு இடையில் நான்கு பக்கக்களுக்கு நீ உருகி உருகி எனக்கு வடித்திருந்த மடல்...

நீ அதை எப்போது எழுதினாய் என்று கூட எனக்கு நினைவிருக்கிறது. கடைசி செமஸ்டர் தேர்வுகளுக்கு முன், ஹாஸ்டல் ரீடிங் ரூமில், படிக்கிறோம் என்ற பேர்வழியில் நான் உன் மடியில் தலை வைத்துப் படுத்துப் பாடிக் கொண்டிருந்தேன். (டி.வி. ரிப்பேர். அதனால் தோழியர் ஒளி(யில்லாமல்) ஒலியும் கேட்டுக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த நேரம்.)
நீ மட்டும் அமைதியாக எழுதிக் கொண்டே இருந்தாய். எட்டிப் பார்த்தேன். ”இனிமேல் நீ என்று என் மடியில் படுத்துக் கொண்டு இப்படிப் பாடப் போகிறாய்? விடிய விடிய அரட்டை அடிக்கப் போகிறோம்? அதிகாலையில் எழுந்து அக்ரி காலேஜுக்குச் சைக்கிளில் சென்று என்விரான்மெண்டல் ப்ராஜெக்டுக்காக மாட்டுச் சாணம் அள்ளி வரப் போகிறோம்?...” இந்த ரீதியில் அந்த சிட்டுக்குருவிகளின் கிறீச்சிடல்களுக்கு மத்தியில் கனத்த மௌனத்துடன் உனக்கே உரிய நிதானத்துடன் எழுதிக்கொண்டிருந்தாய்.
அப்போது நான் கூட உன்னைக் கிண்டல் செய்தேன், ”ஏன்டி இப்படி எல்லாம் எனக்கு வரிஞ்சு வரிஞ்சு எழுதறே. நம்ம ரெண்டு பேரும் மத்தவங்க மாதிரியா. நாம் எங்க இருந்தாலும் எப்போவுமே இப்படி இணை பிரியாம இருப்போம்.” எனக்குத் தான் ப்ராக்டிகல் அறிவு என்பது இந்நாள் வரை கிடையாதே. உனக்கு அப்போதே புரிந்திருக்கிறது.


ஆச்சு பத்து வருடங்கள். உனக்குக் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உண்டு என்று அறிவேன். இன்னும் நேரில் ஒருவரைக் கூடப் பார்த்ததில்லை. என் மகள் பிறந்ததை ஃபோனில் சொன்னேன். அவள் பெயர் உனக்கு நினைவிருக்குமா என்று தெரியவில்லை. கல்லூரி விட்டு ஒரிரு வருடங்களுக்கு ஆர்வத்துடன் கடிதத் தொடர்பு இருந்தது நமக்குள். செல்ஃபோன் வந்தது. நம்பர் பரிமாறிக் கொண்டோம். அதன் பின் ‘எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்’ என்றதால் கடிதம் எழுதுவது நின்றது. செல்லில் இன்னும் உன் நம்பர் KD என்ற உன் செல்லப் பெயரில். அழுத்தத் தான் நேரம் வருவதில்லை. பேசினாலும் என்ன பேசுவது? நான் இப்போது பேசுவது என் மகளுக்கு அம்மாவாக, வைகுந்த் மற்றும் உன் இரண்டாவது மகளின் (பார், பெயர் கூட நினைவில்லை) தாயிடம். குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் நலம் இவற்றைத் தாண்டி நாம் பேசப் பொதுவாக ஒன்றுமில்லை. நாலு வார்த்தை பேசுவதற்குள் உன் மகன் காலைப் பிடித்து இழுக்கிறான். என் மகள் ஃபோனையே பிடித்து இழுக்கிறாள். அது ஒரு தனி பரவசம் தான் இல்லையா? அதனால் தான் நாம் முற்றிலும் வேறு ஆட்களாக உரு மாறி பழைய நினைவுகளை மறந்தும் போகிறோமோ?



என்றாவது நேரில் பார்த்தால் மனம் விட்டுப் பேசலாம் தான். அன்று ஹாஸ்டலில் கொட்டமடித்த அந்த இரு துடிப்பான இளம் பெண்களைப் பற்றி. அவர்களைக் கொஞ்ச நேரம் உயிர்ப்பித்துப் பார்க்கலாம். சந்திக்கலாமா?
நீ எப்போது சென்னை வருகிறாய். என்ன? அவருக்கு லீவ் கிடைக்காதா? இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு ட்ரிய்னிலோ பஸ்ஸிலோ நீ தனியாக வருவது சாத்தியமே தான். இங்கேயும் அதே தானே. குழந்தையையும் அழைத்துக் கொண்டு நான் இப்போது அங்கு வருவது எதற்கு? சந்தர்ப்பம் வரும் போது பார்க்கலாம். இப்போதைக்கு இந்தக் கடிதத்துக்குப் பதிலாவது எழுதேன்!


உன் அன்புள்ள,


மீனா


(கவிதாவாகப் பதிலெழுத நான் அழைப்பது திருமதி. சந்தனமுல்லை அவர்களை. )





Saturday, March 28, 2009

குட் டச், பேட் டச்


செய்தித்தாள்களில் சில விஷயங்கள் கண்ணில் படும் போது அடுத்தநாள் பேப்பரைக் கையிலெடுக்கவே நடுக்கமாக இருக்கிறது.. சே... மனிதர்களில் சிலர் ஏன் இப்படி மிருகங்களை விட.. (வேண்டாம் மிருகங்கள் தங்கள் இயல்பு மீறி எதுவுமே செய்வதில்லை) பிசாசுகளைப் போல் நடந்து கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைப் படிக்கும் போதெல்லாம் மூச்சடைத்துப் போகிறது. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு.
”கஜினி” படத்தில் அசின் சொல்வது போல் ’பெண்கள் எத்தனை பேருக்குத் தான் பயந்து ஓடுவது?’ அதில் இன்னொன்றும் சேர்க்க வேண்டும் கள்ளமில்லாக் குழந்தைப் பருவத்தில் கூட அவர்கள் நிம்மதியாக இருக்க இந்த சமுகம் பாதுகாப்பானதாக இல்லையே. இப்படிப் பட்டவர்களுக்கு எந்த வகையில் குரூரமானத் தண்டனை கொடுத்தாலும் தகும்.
சரி, இந்தப் பொருமல்களையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு இதைத் தடுக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைச் சிந்திப்போம்.

அதற்கு முன்: எனக்குத் தெரிந்ததை மட்டுமே இங்கே சொல்லி இருக்கிறேன். இதைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்தவர்கள், விஷயமுள்ளவர்கள் தயவு செய்து அவர்கள் கருத்தையும் சொல்லி உதவ பணிவன்புடன் வேண்டுகிறேன்.


முதலாவதாக, குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுப்போம். ஆண் பெண் இரு பால் குழந்தைகளுக்கும்.
இதைக் குழந்தை ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்கும் வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் உடலில் கைகள், கால்கள், முகம் போன்றவற்றைத் தொட்டால் “குட் டச்” என்றும் வேண்டாத இடங்களைத் தொட்டுக் காண்பித்து அவை “பேட் டச்” என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பள்ளிக்குப் போகும் குழந்தையிடம் யாராவது பேட் டச் செய்தார்களா என்று அவ்வப்போது விசாரிக்க வேண்டும். குழந்தை சொல்வதை வைத்து அவர்களைத் தனியாகக் கண்காணித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற பெற்றோரிடமும் இதைப் பற்றித் தயக்கமில்லாமல் பேசுவது நல்லது. பள்ளிகளிலும் இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.


தேவை இல்லாமல் கலவரப்படுத்துவதாக எண்ண வேண்டாம். நானும் ஒரு பெண் குழந்தைக்குத் தாய். அறியா வயதில் அவர்கள் சந்திக்கும் எந்த ஒரு அதிர்ச்சியுமே ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். அதற்காக் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் அது தகும் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.


பாலியல் வக்கிரம் கொண்டவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தும் மனவிகாரம் படைத்தவர்கள் இவர்கள் எல்லாம் தனியாகக் கோரப்பல் முளைத்து பேய் பிசாசாக இருப்பதில்லை. சாதாரணமாக ஏன் படு உயர்வான தோற்றம் கொண்டவர்களாகக் கூட இருக்க வாய்ப்புண்டு. அதற்காக நாம் கண்டவர்களை எல்லாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்க முடியுமா? நம் குழந்தைகளுக்கு நாம் சரியான வழியில் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் ரொம்ப நல்லது.


அடுத்ததாக, நம் எல்லோருக்கும் குழந்தைகளைப் பற்றி ஆயிரம் கனவுகள் உண்டு. பிரபல டென்னிஸ் வீராங்கனை ஆக்க் வேண்டும் என்பது முதல், ராக்கெட் விஞ்ஞானி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது வரை.ரொம்ப இல்லாவிட்டாலும் நாம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு முடியாமல் போன, அல்லது நம்மைப் போலவே என்று பாட்டு, டான்ஸ், ட்ராயிங் என்று ஏதாவது க்ளாஸ் அனுப்பிக் கொண்டே இருப்போம்.


அப்படி குழந்தை ஒரு நாளில் எத்தனை மணி நேரம் நம் கண்ணை விட்டு அகன்று இருக்கிறது. அந்த நேரத்தில் அவர்களைச் சந்திப்பது யார் யார் என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.



பொதுவாக இந்தக் க்ளாஸ், கோச்சிங் இவற்றைக் கொஞ்சம் கம்மி பண்ணி விட்டு கூடுமானவரை குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஓடியாடி விளையாட விடுங்கள். இடமில்லை என்ற காரணம் வேண்டாம். நிஜம்மா சொல்லுங்க, நாலு குழந்தைகள் விளையாட உங்கள் வீட்டுக்கு முன் இடமில்லாமலா இருக்கிறது?



நம் குழந்தைகள் எல்லோருமே நாம் பார்த்துப் பெருமைப்படும் விதமாக, நமக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் அற்புதமான ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போகிறார்கள். அதற்கு அவர்களுக்கு நம்மாலான சின்ன உதவியைச் செய்வோம். அவர்களின் உலகத்தைத் தள்ளியிருந்து ரசிப்போம். அவர்கள் கனவுக்குள் மூக்கை நுழைக்காமல்.


(குட் டச், பேட் டச் என்ற இந்த யுக்தி எப்போதோ ஒரு நாளிதழில் மருத்துவர் பக்கத்தில் படித்த்து.)

Friday, March 27, 2009

கனவுகளின் காதலி


தயவு செய்து என் கண்களுக்கு எதிரில் வந்து நின்று விடாதே.
நான் உனக்காகவே வைத்திருக்கும் கண்ணாடியின் முன் வந்து நில்.
அதன் மூலம் மட்டுமே உன்னைக் காண விரும்புகிறேன்.
என் கண்ணாடியில் நீ எப்போதும் அழகு.

உன் கண்ணாடியை உடைத்து உன் எதிரில் வந்து நின்றது முதல் என்னைப் பார்க்கவே மறுத்து விட்டாயே?
அந்த நிலை எனக்கு வேண்டாம். நான் உன்னைக் காண வேண்டும்.
ஆனால், தயவு செய்து என் கண்களுக்கு முன் வந்து விடாதே.

கனவுகளும் பிம்பங்களும் நாம் வாங்கி வந்த வரங்கள்.
உண்மையைத் தேடுவது வீண் வேலை.
ஓவியத்தைக் கலைத்து வெற்றுத் திரையை நோக்குவானேன்?

Tuesday, March 24, 2009

The Necklace - Part 2 (End)

“என்னம்மா, உனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கும்னு நினைச்சேன். நீ எங்கேயுமே போறதில்லயே, அதனால் இந்த விழா அழைப்பு கிடைக்க எவ்ளோ க்‌ஷ்டப்பட்டேன் தெரியுமா. எங்க இலாகாவில் எல்லா குமாஸ்தாக்களுக்கும் அழைப்பு கிடையாது. அங்கே பெரிய பெரிய ஆளெல்லாம் வருவாங்க.

பொறுமையிழந்து அவனை வெறுப்புடன் நோக்கிய அவள், “அப்ப்டி ஒரு விசேஷத்துக்கு நான் கட்டிக்கிட்டுப் போக என்ன இருக்குன்னு நினக்கிறே?”

“ஏன் நாம் நாடகத்துக்குப் போகும் போது போட்டுக்குவியே அந்த ட்ரஸ் உனக்கு ரொம்ப அழகாயிருக்கும்டா!”

அவள் அழத்தொடங்கினாள். அவன் பதறிப்போனான். “என்னடா, ஏன் அழறே சொல்லு?”

“ஒண்ணுமில்ல. நல்ல ட்ரஸ் எதுவிமில்லாம நான் வர முடியாது. அழகா ட்ரஸ் பண்ணிக்கக் கூடிய மனைவி இருக்கற உன் நண்பன் யாருக்காவது இதைக் கொடுத்துடு.”

அவன் கவலையில் ஆழ்ந்தான். “இரு மெடில்டா, ரொம்பவும் ஆடம்பரமில்லாம ஆனா நல்ல மதிப்பா ஒரு ட்ரஸ் வாங்க உனக்கு எவ்வளவு பணம் செலவாகும்? நீ டொடர்ந்து பயன்படுத்தற மாதிரி”

அவள் சற்று நேரம் சிந்தித்தாள். அவன் உடனடியாக மறுத்துவிடக் கூடாத அளவும் ஆனால் தனது தேவைகளுக்கு ஏற்றதாகவும் ஒரு தொகையைச் சொல்ல வேண்டுமே!
வெகு த்யக்கத்துடன் “என்னால சரியாச் சொல்ல முடியல. ஆனா, நானூறு ஃப்ராங்குகள் போதும்னு நினைக்கிறேன்”

அவன் கொஞ்சம் அதிர்ந்தான். அவன் ஒரு வேட்டைத் துப்பாக்கி வாங்க வேண்டுமென்று வெகு நாட்களாக விரும்பி சேர்த்து வந்த்திருந்த தொகை அவ்வளவே. ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு, “நல்லது மெடில்டா. நீ கேட்டதைத் தருகிறேன். ஆனா, நல்ல அழகான டிரஸ் வாங்கணும், என்ன”.

விழா நடைபெறும் நாளும் நெருங்கியது. அவள் ஆர்டர் கொடூத்த உடையும் தயாராகி வந்து விட்டது. இப்போது திருமதி லாய்செல்லுக்கு இன்னொரு கவலை. “இவ்வளவு அழகான உடைக்குப் பொருத்த்மா ஒரு நகை கூட என் கிட்ட இல்ல. நான் எப்படி வர முடியும்”

“ஹேய் அதனாலென்ன, அழகா பூக்கள் வாங்கி அலங்கரிச்சுக்கோ. அது தான் இப்பொ ஃபாஷன்னு நினைக்கிறேன்! “
“அதெல்லாம் நல்லா இருக்காது”

“ஹைய்யோ! நாம சரியான முட்டாள்கள். அதான் உன் தோழி மேடம். ஃபாரெஸ்டியர் இருக்காளே. அவ கிட்ட ஏதாவது இரவல் வாங்கிக்கோ. நீ அவளோட உற்ற தோழி தான் அதனால கண்டிப்பா கொடுப்பா.”

“அட ஆமாம். நல்ல ஐடியா!”

மறுநாள் தனது தோழியைப் பார்த்து நகை வாங்கி வரப் போனாள் மெடில்டா. மேடம். ஃபாரெஸ்டியர் அலமாரியைத் திறந்து ஒரு பெரிய நகைப் பெட்டியை எடுத்து மெடில்டாவின் முன் வைத்தாள். “இந்தா எது வேணுமோ எடுத்துக்கோ.”

விதவிதமான வளையல்கள், கங்கணங்கள், முத்துச் சரங்கள், தங்கச் சங்கிலிகள், அட்டிகைகள் என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பூரித்தாள் மெடில்டா. ஆனாலும், “இவ்வளவு தானா?”

“ஓ இரு வேற சில பெட்டிகளும் எடுக்கிறேன், ஒவ்வொண்ணாப் பாரு, தரேன்”.

கடைசியாக ஒரு கறுப்பு ஸாட்டின் பெட்டியில் அதைக் கண்டாள். கண்களையும் மனதையும் பறிக்கும் அழகுடன் ஒரி வைர நெக்லஸ். அதைக் கையிலெடுத்ததும் அவளுக்குக் கைகள் நடுங்கின. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. மெதுவாகத் தன் கழுத்தில் அதை அணிந்து பார்த்தாள். உடனே தோழியிடம் திரும்பி, “இதை மட்டும் எனக்கு இரவல் தர்றியா, வேற எதுவும் வேண்டாம்.”

“அதுக்கென்ன, தாராளமா”

தோழியைக் கட்டியணைத்து நன்றி கூறிவிட்டுச் சிட்டாக வீட்டுக்குப் பறந்தாள்.

விழா நாளும் வந்தது. விழாவில் மேடம். லாய்செல் நட்சத்திரமாக மின்னினாள். வந்திருந்த எல்லாப் பெண்களையும் விட அழாகானவளாகவும் நளினமாகவும் விளங்கினாள், என்று எல்லாரும் அவளைப் பற்றியே பேசினர். பெரும் புள்ளிகள் அனைவரும் அவளின் அறிமுகம் வேண்டினர். அமைச்சர் கூட அவளுக்குத் தனிக் கவனம் செலுத்தினார்.

அவள் ஆனந்தமாக நடனமாடினாள். மதுவருந்தினாள். தனது அழகின் வெற்றி தந்த போதையில் திளைத்தாள். உறங்கிக் கிடந்த ஆசைகளும் கனவுகளும் நிறைவேறிய இன்பத்தில் மெய்மறந்து போனாள்.
அதிகாலை நான்கு மணி வரை கேளிக்கைகள் நீண்டன. அவளது கணவனோ தனது நண்பர்கள சிலருடன் (இவளைப் போலவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த சில பெண்களின் கணவன்மார்கள்) நாற்காலிகளில் அமர்ந்த படியே உறங்கத் தொடங்கி இருந்தான்.

இவள் வந்ததும் “ போலாமா” என்று அவளது கம்பளி மேலாடையை அவளுக்குப் போர்த்தி விட வந்தான். மற்ற சீமாட்டிகளின் அழகிய மேலாடைகள் போலில்லாமல் அது நைந்து பழையதாகிப் போயிருந்தது, அவளது புதிய உடைக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தாமல். அதனால் அதை மறுத்தவாறே அவள் விலகி ஓடினாள்.
“ஏய், இரு, அப்படியே வெளிய போகாதே, ரொம்பக் குளிரும்.” அவன் அவள் பின்னாடியே ஓடி வந்தான். ஒரு வழியாக ஒரு வாடகைக் கோச் வண்டி பிடித்து வீடு வந்து சேர்ந்தனர்.

’ஹீம், எல்லம் முடிஞ்சுது’ உடலும் மனமும் மிகவும் சோர்ந்தாள் அவள். அவனோ, காலையில் பத்து மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டுமே என்று கவலையுற்றான்.

ஒரே ஒரு முறை தனது வெற்றிப் பிம்பத்தைப் பார்க்கும் ஆவலில், கண்ணாடி முன் நின்ற அவள் “ஆ!” வென அலறினாள்.

“என்ன, என்ன ஆச்சு?”

“நெக்சஸ், என் தோழியோட நெக்லஸ் காணோம்!”

அவளது உடையின் மடிப்புக்கள், மேலாடை, அவனது கோட் பாக்கெட்டுகள், எல்லாவற்றையும் தேடினர். ம்ஹீம். காணோம்.

“அது கோச் வண்டியில் விழுந்திருக்குமோ. வண்டி நம்பரைப் பார்த்தியா?”

“இல்ல.”

இருவரும் மிரண்டு போய் ஒருவரை ஒருவர் நோக்கினர்.

லாய்செல் மறுபடியும் உடையணிந்து கொண்டான்.

”இரு நான் போய் தெருவில் விழுந்திருக்கா பாத்துட்டு வரேன்”

“அவள் உடை மாற்றவோ வேறு எதுவும் செய்யவோ திராணியற்றுச் சிலை போல் நின்றிருந்தாள்.

ஏழு மணி வாக்கில் அவன் திரும்பி வந்தான். எங்கும் கிடைத்தபாடில்லை. மறுபடியும் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு கோச் வண்டிகளின் மையத்திலும் போய் விசர்ரித்தான்.

அவளோ நாள் முழுதும் பயமும் கலவரமுமாகக் காத்திருந்தாள். இரவு வெகு நேரம் கழித்து சோர்ந்த் முகத்துடன் வீடு திரும்பியவன் அவளை நோக்கி, “உன் தோழிக்குக் கடிதம் எழுதி நெக்லஸின் கொக்கி உடைந்து விட்டது, சரி செய்து கொண்டு தருவதாகச் சொல். நமகுக் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்”.
அவள் உடனடியாக அவன் சொல்படி செய்தாள்.

ஒரு வாரம் சென்றதும் அவர்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்தனர். தேடாத் இடமில்லை. இதற்குள் ஐந்து ஆண்டுகள் முதியவனாகத் தோற்ரம் கொண்டு விட்ட லாய்செல் தீர்க்கமாகக் கூறினான், “நாம் எப்பாடு பட்டாவது அதே போல் ஒரு நகையை வாங்கித் திருப்பிக் கொடுக்க வேண்டும்.”

மறுநாள் அந்நகைப் பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த நகை வியாபாரியிடம் சென்றனர்.

“இந்தப் பெட்டி மேல என் கடை பேரு தான் இருக்கு. ஆனா நீங்க சொல்ற மாதிரி நெக்லசை நான் விற்கல.”

ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியில் ஒரு கடையில் அச்சு அசலாக அதே போன்றதோரு நெக்லஸைப் பார்த்தார்கள். அதன் விலை நாற்பதாயிரம் ஃப்ராங்குகள். முப்பத்து ஆறாயிரத்துக்குக் கிடைக்கலாம்.

அந்தக் கடைக்காரரிடம் அதை நான்கு நாட்களுக்கு வேறு யாருக்கும் விற்காதிருக்குமாறு கெஞ்சினார்கள். மேலும் ஒரு மாதத்துக்குள் தொலைந்து போன நகை கிடைத்து விட்டால் வாங்கிய நகையைத் திருப்பிக் கொடுத்துப் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

லாய்செல்லுக்கு அவனது தந்தை விட்டுச் சென்ற பதினெட்டாயிரம் ஃப்ரங்குகள் இருந்தன. மிச்சத்தைக் கடன் தான் வாங்க வேண்டும்.
இங்கு ஒரு ஐந்நூறு, அங்கு ஒரு ஆயிரம் என்று நூறு இடங்களில் கடன் வாங்கினான். என்ன வட்டி இருந்தாலும் சளைக்காமல் ஒத்துக் கொண்டான். தன் கையெழுத்தில் தனது தலையெழுத்தையே அடகு வைத்தான், மீட்க முடியுமா என்று தெரியாமலே. எதிர்கலத்தைக் கடும் இருள் சூழ்வதை உணர முடிந்தது . ஆனால் அவன் நினைவில் நின்றதெல்லாம் அந்த நெக்லஸ், அதை வாங்க தேவைப்படும் முப்பத்து ஆறாயிரம் ஃப்ரங்குகள்.

ஒரு வழியாக மெடில்டா புதிய நெக்லஸை எடுத்துக் கொண்டு அவளது தோழியிடம் சென்ற போது, அவள் கடிந்து கொண்டாள். “எவ்வளவு நாளாச்சு. எனக்கு இடையில் எதுக்காச்சும் தேவைப்பட்டிருந்தால்?”
மெடில்டாவோ, அவள் இது வேறு நகை என்று கண்டுபிடித்து விடக் கூடாதே என்று பயந்து செத்தாள். தெரிந்தால் தன்னை என்ன நினைப்பாளோ.

இப்போது அவள் முற்றிலும் புதிய வாழ்வுக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டாள். எதிர்கொள்ளப் போகும் சவாலில் தனது பங்கைத் தைரியமாக ஆற்ற வேண்டுமென்று உணர்ந்தாள். அந்தப் பயங்கரமான கடஙளை அடைத்தாக வேண்டுமே.

அவர்கள் தாங்கள் இருந்த வீட்டை விட்டு வேறு ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் புகுந்தனர். வீட்டுப் பணிப்பெண்ணை நிறுத்டியாகி விட்டது. சகல வீட்டு வேலைகளையும் கணவனைப் பராமரிப்பதையும் ஒண்டி ஆளாகச் செய்யத் டொடங்கினாள் அவள். பத்து தேய்த்தாள். தனது அழ்கான பிங்க் நகங்களால் அண்டா குண்டாக்களைச் சுரண்டித்தேய்த்தாள். அழுக்குத் துணிகளை அவளே வெளுத்தாள். ஒவ்வொரு நாளும் நான்கு மாடி இறங்கி குப்பை கொட்டினாள். அதே போல் தண்ணிர் குடங்கள் சுமந்து நான்கு மாடி எறினாள். படு எளிமையாக உடுத்த ஆரம்பித்தாள். மளிகைக்கடையிலும் காய்கறிக்கடையிலும் கூச்சமில்லாமல் காலணாவுக்குக் கூட பேரம் பேச ஆரம்பித்தாள்.

அவள் கணவன் இரவு பகலாக உழைத்தான். சில இரவுகளில் பக்கத்துக்கு ஐந்து ”சோ”க்களுக்காகக் கூடக் கணக்கு எழுதும் வேலை செய்தான்.
இப்படியே பத்து ஆண்டுகள் கழிந்தன.

இறுதியாக எல்லாக் கடங்களும் அடைக்கப்பட்டு விட்டன. சேர்ந்திருந்த அசுரத்தனமான வட்டி முதற்கொண்டு.
மேடம். லாய்செல் இப்போது வயது முதிர்ந்தவளாகி விட்டாள். முன் போல் மென்மையாக இல்லாமல் அவள் உடல் உறுதியும், உரமும் பெற்று காட்டில் வேலை செய்யும் பெண்களை ஒத்திருந்தது. பரட்டைத் தலையும் அழுக்குப் பாவாடையும், வெயிலில் சிவந்த சருமமுமாகத் திகழ்ந்தாள். உரத்த குரலில் பேசினாள்.
எப்போதாவது சில நாட்கள் பகலில் வேலைகளெல்லாம் ஓய்ந்த பிறகு, ஞன்னலருகே அமர்ந்து அந்த அமைச்சர் வீட்டு விழாவை நினைத்துக் கொள்வாள். பேரழகாக அன்று தான் விளங்கியதும், அனைவரும் தன்னைப் புகழந்ததும் நினைவுக்கு வரும். அந்த நெக்லஸை மட்டும் அன்று அவள் தவற விடாமல் இருந்தால்? யாருக்குத் தெரியும். வாழ்க்கை தான் எவ்வளவு விந்தையானது? எப்படிப்பட்ட மாற்றங்கள் நிறைந்தது? ஒரு கண நேரப்பிசக அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டதே!

ஒரு ஞாயிறு மாலை சாம்ப்ஸ் எலிசீஸ் சாலையில் சற்று ஓய்வாக உலாவப் போனாள். அப்போது எதிரே ஒரு மெண் தனது குழந்தையுடன் வருவதைக் கண்டாள். அவள் மேடம். ஃபாரெஸ்டியர். இன்னும் அதே அழகுடன், இளமையுடன், நேர்த்தியாக உடையணிந்தபடி. அவளுடன் பேசுவதா வேண்டாமா என்று ஒரு கணம் தயங்கினாள். பின்பு சுதாரித்துக் கொண்டாள். எல்லாம் முடிந்து கடனும் அடைக்கப்பட்டு விட்டதே. எல்லாவற்றையும் அவளிடம் சொல்லி விடுவது என்று முடிவெடுத்தாள்.

அவளை நெருங்கி, “வந்தனம் ஜீன்!”

அவள் தோழிக்கு அவளை அடையாளம் தெரியவைல்லை. யாருடா இவள், ஒரு சாதரணக் குடியனவப் பெண் தன்னை இவ்வளவு நெருக்கத்துஅன் அணுகிப் பேசுவது என்று துணுக்குற்றாள். தட்டுத் தடுமாறி, “மேடம்..நீ..நீங்க யாருன்னு தெரியலையே!”

“என்னைத் தெரியல? நான் தான் மெடில்டா லாய்செல்.”

அவள் தோழி வியப்பில் கூவிவிட்டாள், “அட என் பரிதாபப் பெண்ணே! மெடில்டா..நீ எப்படி மாறி விட்டாய்?”

“ஆமாம், உன்னைக் கடைசியாகச் சந்தித்த பின் என் வாழ்வில் பல கஷ்டங்களைச் சந்தித்தேன். எல்லாம் உன்னால் தான்.”

“என்னாலேயா? என்ன சொல்கிறாய்?”

“உன்னிடம் நான் இரவல் வாங்கிய வைர நெக்லஸ நினைவிருக்கிறதா?”

“ஆமாம், நல்லா நினைவிருக்கு.”

”அதை நான் தொலைச்சிட்டேன்.

“அப்புறம் திருப்பிக் கொடுத்தியே, எப்படி?”

“அதே மாதிரி என்னொன்று வாங்கிக் கொடுத்தேன். அந்தக் கடனை அடைக்கத் தான் எங்களுக்குப் பத்து வருஷம் ஆச்சு. ஒண்ணுமில்லாத எங்களுக்கு அது கஷ்டம்னு புரியும்னு நினைக்கிறேன். ஆனா இப்போ எல்லாக் கடனும் தீர்ந்தது, நிம்மதியாவே இருக்கோம்.

மேடம் ஃபாரஸ்டியர் அவளை இடைமறித்தாள், “நீ என்ன சொல்ற? என் நெக்லஸைத் திருப்பித் தருவதற்காக ஒரு வைர நெக்லஸ் வாங்கினீர்களா?”

“ஆமாம். நீ கண்டுபிடிக்கவே இல்லியா? அப்படியே அதே மாதிரி இருந்தது இல்லியா?” சின்னப் பெருமையுடன் புன்னகைத்தாள்.

சட்டென்று நெகிழிந்து தோழியின் கரங்களை இரு கைகளாலும் பற்றிய மேடம் ஃபாரெஸ்டியர் சொன்னாள், “அய்யோ என் பாவப் பட்ட பெண்ணே! என்னோடது கண்ணாடிக் கல் நெக்லஸ். ஐந்நூறு ஃப்ரங்குகள் கூடப் பெறாது!”

Sunday, March 22, 2009

மாப்பஸான் சிறுகதைகள்

அது என்னவோ என்னை மிகவும் கவர்ந்த இலக்கிய வடிவம் சிறுகதைகள் தாம்.
நாவல்கள் படிக்கும் போது நமக்கு அதன் எல்லா அம்சங்களும் ஏற்பவையாக இருக்கும் எண்ரு சொல்லமுடியாது. ஆனால் சிறுகதை ஒரு சின்ன காட்டாறு போல நமக்குள் முழுவதுமாக நுழைந்து ஆழ்ந்த சலனங்கள் ஏற்படுத்தக் கூடியவை. மீண்டும் மீண்டும் வாசிக்கும் ஆவலைத் தூண்டுபவை.
சிறுகதைகளாலேயே எனக்குப் பிற மொழி இலக்கியத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு வந்தது. ஏனென்றால் தமிழில் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள் தங்களுக்கு முன்னோடிகளாக பிரஞ்சு மற்றும் ருஷ்ய சிறுகதை இலக்கியத்தைக் குறிப்பிட்டு சிலாகித்ததும் ஒரு காரணம். அந்த வகையில் மாபெரும் பிரஞ்சு எழுத்தாளரான மாப்பஸானின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பிரான்ஸ் நகர மேல்தட்டு மக்களின் டாம்பீக வாழ்வை நையாண்டி செய்வதிலும், சாமான்ய மக்களின் வாழ்க்கையைச் சித்திரங்களாகத் தீட்டுவதிலும் இவரது பாணி அலாதியானது.
இவரது The Necklace என்ற சிறுகதையைப் படித்தது முதல் இவரது தீவிர ரசிகை ஆனேன். இவரைப் பற்றிய சிறு குறிப்பையும் அக்கதையின் மொழியாக்கமும் இங்கே உங்களுக்காக.


மாப்பஸான்: கை டி மாப்பஸான் பிரான்ஸ் நாட்டில் டியெப்பி என்ற ஊரில் பிறந்தார். வழக்கறிஞர் கல்வி கற்ற இவர் அரசு அலுவலகம் ஒன்றில் குமாஸ்தாவகப் பத்து ஆண்டுகள் பணியற்றி வந்தார்.
இவர் முந்நூறு சிறுகதைகளும் ஆறு நாவல்களும் எழுதியுள்ளார். இவை அனைத்துமே காலத்தால் அழியாத இலக்கியச் செல்வங்களாகப் போற்றப் படுகின்றன. கதை மாந்தர்களை நுட்பமான மனித உணர்வுகளுடன் கையாள்வதும் மிகவும் யதார்த்மான கதைக் களங்களும் இவரது தனிச் சிறப்பு. மேலும் பிரபுத்துவ வாழிக்கை
உலகின் பல்வேறு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ள அவரது படைப்புக்கள் சாமான்ய மக்களையும் அவர்களது வாழ்வையும் பற்றியே இருந்தன.


தன்னுடைய காலத்தில் உலகப் புகழும் பெருஞ்செல்வமும் அடைந்த மேதை மாப்பஸானின் வாழ்வு மனநோய் பீடித்ததால் துரதிர்ஷ்டவசமாக இளம் வயதிலேயே முடிவுற்றது.
The Necklace
(குறிப்பு: மூலம் பிரஞ்சு என்பதாலும், ஆன்கில மொழியாக்கத்திலிருந்து மொழிபெயர்ப்பதாலும் உள்ள குறைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்)
அரசிகளுக்கும் சீமாட்டிகளுக்கும் நிகரான அழகும் மேட்டிமையும் கொண்டு ஆனால் ஏதோ விதிவசத்தால் ஏழைவீட்டில் பிறந்து விட்ட சில பாவப்பட்ட பெண்களில் அவளும் ஒருத்தி. சொல்லிக்கொள்லும் அளவு எந்த வசதியும் இல்லாததால், செல்வமோ செல்வக்கோ உடைய கனவான் எவனுக்கும் வாழ்க்கைப்பட முடியாமல், அரசாங்க அலுவலகக் குமாஸ்தா ஒருவனுக்கு மணமுடிக்கப்பட்டாள்.
அவள் எளிமையாகவே இருந்தாள்; அலங்காரம் செய்து கொள்ள இயலாத காரணத்தினால். ஆனால் தன்னைப் போன்ற நிலையிலுள்ள பிற பெண்கள் போலில்லாமல் சோகமாகவே இருந்தாள்.
ஏனெனில் பெண்களுக்கு சாதி, குலம், வர்க்கம் எதுவுமில்லை. அவர்களுக்கு இயல்பாக உள்ள அழகும், நடத்தையும், பாங்கும் தான் அவர்களது ஒரே சொத்து. இந்த ஒன்றே போதும் சாதாரண வீட்டுப் பெண்களைக் கூட சீமாட்டிகள் போல் காட்டுவதற்கு.


அவள் சதா வருந்தியவண்ணம் இருந்தாள்; உலகின் உள்ள சகல வசதிகளுக்கும் செல்வத்துக்கும் தகுதியானவளாகப் பிறந்து விட்டு வறுமையில் உழலும் தன் விதியை எண்ணி.
தனது சிறிய விட்டையும் அழுக்கடைந்த சுவர்களையும், வீட்டிலுள்ள எளிய பழைய சாமான்களையும் பார்த்து; இவையனைத்தும் அவளது வ்குப்பைச் சேர்ந்த வேறொரு பெண்ண்க்கு ஒரு விஷயமாகவே இருந்திருக்காது. ஆனால் இவளுக்கோ அவை வெறுப்பாகவும் சித்ரவதையாகவும் இருந்தன.
அவள் அழகிய மாளிகைகளையும் ஆடம்பரமான வீடுகளையும் பற்றிக் கனவு காண்பாள். வண்ண வண்ண விளக்குகள், பட்டுத்திரச்சீலைகள், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த மேஜைகள், நாற்காலிகள், நண்பர்களுடன் அரட்டை அடிக்கக்கூடிய டம்ப அறைகள், வீடு நிறைய வேலைக்காரர்கள், பட்லர்கள், சமுதாயத்தில் பேரும் புகழும் கொண்ட கனவான்களின் சிநேகிதம், இப்படி நிறைய.
அவள் கணவனோ மிகவும் நல்லவன். சாப்பாட்டு நேரத்தில் அவள் கொண்டு வந்து வைக்கும் எதுவானாலும் "ஆஹா! எவ்வளவு அருமையான சூப். எனக்கு மிகவும் பிடித்ததாயிற்றே இது" என்று அவளை உற்சாகப்படுத்த முயல்வான். அவளோ நவநாகரிக விருந்துகளையும் அவ்அற்ரில் பரிமாறப்படும் உயர்ரக உணவு வகைகளையும் பற்றிக் கற்பனை செய்து கொண்டிருப்பாள்.
உயர்ரக ஆடைகளோ நகைகளோ அவலிடம் ஒன்றும் இல்லை. ஆனால் அவள் ஏங்கித் தவித்தது இவற்றுக்குத்தான். தான் அது போலவெல்லாம் அணியவே பிறந்ததாக அவ்ள் நம்பினாள்.


அவளுக்கு ஒரு பணக்காரத் தோழி இருந்தாள். அவளைப் பார்த்து விட்டுத் திரும்பிய போதெல்லாம் ஏக்கமும், இயலாமையும் பெருந்துயரமுமே மேலிடுவதால் அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டாள்.
ஒரு நாள் மாலை அவளது கணவன் உற்சாகமாக வந்தான், "ஏய், இங்கே பாரேன், உனக்காக ஒன்று கொண்டு வந்திருக்கேன்!"
அவன் கையிலிருந்து அந்தக் காகித உறையை வாங்கிப் பிரித்தாள். அதனுள் இருந்த அட்டையில்:
"மாண்புமிகு கல்வி அமைச்சரிடமிருந்து அழைப்பு: திரு & திருமதி லாய்செல் அவர்களைத் திங்கள் மாலை தங்களது இல்லத்தில் ந்டைபெறும் விழைவில் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்."
அவன் மகிழ்ச்சியில் கூவப் போகிறாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க அவளோ எரிச்சலுடன் அதைத் தூக்கிப் போட்டாள்.

(மீதி நாளைக்கு!)

Friday, March 20, 2009

ஒரு நண்பனும் ஒரு தோழியும்

ஒரு வீட்டில் காலையில்:

”ஏய்! குழந்தை எப்படி அழுது பாரு. நான் எவ்வளவு நேரமா தொட்டில ஆட்டறது. அங்கே என்னடி பண்ணிட்டிருக்கே”

“ஹீம்... அது அப்பனுக்கும் தான் சமைச்சுக் கொட்டிட்டிருக்கேன். ” தொடர்ந்து முணுமுணுப்பு.

”த பாரு.. எனக்கு நேரமாச்சு. நான் குளிக்கணும்... வந்து குழந்தையைப் பாரு.”

”இவ்வளவு நேரம் கிரிக்கெட் பாத்தீல்ல? அப்ப போய் குளிச்சிருக்கலாம்ல? காலைல ஆஃபீஸ் போற நேரத்தில் கூட அந்தத் தண்டத்து முன்னடி ஏன் உட்கார்ற? நான் குழந்தையையும் தூக்கிட்டுப் போய் கிச்சன்ல நிக்க்ணுமா. ” வெடுக்கென்று குழந்தையைத் டொட்டிலிலிருந்து தூக்குகிறாள். அது வீறிட்டு அழத் தொடங்குகிறது.

”ஆரம்பிச்சிட்டியா? நீ ஒண்ணும் சமைக்க வேணாம்; காண்டீன்ல சாப்டுக்கறேன்னு சொன்னா கேக்க மாட்டேங்கற. என் உயிர வாங்கற. ”

தொடர்ந்து மேலும் சில வார்த்தைகள், கத்தல், அழுகை, கொஞ்சம் சமாதானம். ஒரு வழியாக அவன் புறப்பட்டுச் செல்கிறான்.

அலுவலகத்தில்:

”சே, தப்பு பண்ணிட்டோமோ. அவ பாவம். இத்தனை நாள் அவளும் தான் வேலைக்குப் போயிட்டிருந்தா. குழந்தைக்காக இப்ப வீட்ல இருக்கா...எவ்ளோ வேல பாக்கறா? உடம்பும் இளச்சுத் தான் போயிருக்கா. வாய் கொஞ்சம் ஜாஸ்தி தான், ஆனாலும் நம்ம கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாம். ” நினைவுகள் கோர்வையாகி ஒரு முடிவுக்கு வருவதற்குள்....

“இன்னா மச்சி..காலையிலேயே அப்செட்டா இருக்குற? ”

”ஒண்ணும் இல்லடா வீட்ல சின்ன சண்டை”.

”விடு மச்சி... என் ஒயிஃப்பும் இப்படித்தான். இவங்க்ளுக்கு எல்லாம் வேற வேலையே இல்ல. நாம் கொஞ்சம் எறங்கினா தலை மேல ஏறிடுவாங்க. “ தொடர்ந்து இவனுக்கே கோபம் வருமளவு பெண்களை இளக்காரமாகப் பேசுகிறான். இவனுக்குத் தலைவலியே வரும் போலிருக்கிறது.

’சே. நாம எவ்வளவோ பரவாயில்ல. இவன் ஒயிஃப்ப் ரொம்பப் பாவம். இவனை மாதிரி ஒருத்தன் வந்திருந்தா தெரிஞ்சிருக்கும் அவளுக்கு. கேனயன் மாதிரி இருக்கோமா நம்ம, அதான் அவளுக்குத் திமிர்.’ பழைய கோபம் மீண்டும் ஏறிக் கொள்கிறது.

வீட்டில்:

”....ரொம்ப நேரமாச்சுடி, கிளம்புறேன். எல்லாம் வீட்ல அப்படியப்படியே கெடக்கு. இந்தச் சின்னவன் வேற ஒரு மணிக்கு வந்துடுவான். ஹீம் என் கதை தான் இருக்கே தெனம் தெனம் பேசலாம். ”

”சரிக்கா வாங்க. கவல படாதீங்க. எல்லாம் சரியாகிடும். ஏய், குட்டி ஆண்டிக்கு டாட்டா சொல்லு“

கண்ணைத் துடைத்துக் கொண்டு போகும் பக்கத்து வீட்டக்காவை அனுப்பி விட்டு உள்ளே வரும் இவளின் மனதில் சின்னதாக ஒரு பூ. ’சே, அக்கா பாவம். அவங்க ஹஸ்பெண்ட் ரொம்ப மோசம். நம்ம ஆள் எவ்ளோ ஸ்வீட். நான் தான் லூஸு மாதிரி கத்தி அவரை மூட் அவுட் பண்ணிடறேன். ’ உற்சாகமாக வீட்டில் வளைய வருகிறாள். மாலை வீட்டுக்கு வரப்போகும் அவனது மனநிலை தெரியாமல்.

அடுத்த நாள் காலை...

”ஏய்....”

Wednesday, March 18, 2009

அம்மாச்சி, வெற்றிலை, பிராந்தி!

DSC00046COPY என்னைக் கவர்ந்தவர்கள் - 2

தெரசா அம்மாச்சி

என் கணவரின் அம்மாவுக்குச் சின்னம்மா. எனக்குக் குழந்தை பிறந்த மூன்றாம் நாளிலிருந்து 40 நாட்கள் வரை என்னையும் குழந்தையையும் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டவர்.

கொடைக்கானலில் தன் மகள் குடும்பத்துடன் வசித்து வருகிறார். என் நாத்தனார் குழந்தையையும் இவர் தான் இரண்டு வயது வளர்த்தார். ரொம்ப சுறுசுறுப்பானவர். அவர் எங்கு இருந்தாலும் அந்த வீட்டில் ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.

இவரைப் பற்றி என்ன விசேஷம் என்றால் இவருக்குத் தெரியாத வைத்தியமே கிடையாது. குழந்தைகளுக்குச் சளி, வயிற்றுவலி என்றால் வெற்றிலைச் சாறு, அஜீரணத்துக்குச் சீரகச் சாறு, என்று ஏதாவது வைத்துக் கொடுத்துப் பெரும்பாலும் இவரே குணப்படுத்தி விடுவார். ஆனால் டாக்டரிடம் போக வேண்டுமென்றால் தடுக்கவும் மாட்டார்.

ஒருமுறை என் நாத்தனார் தனது ஏழு மாதக் குழந்தையை இவரிடம் விட்டு விட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார். வீட்டில் வேறு யாரும் இல்லாத அந்தச் சமயத்தில் திடீரென்று குழந்தை வயிற்று வலியால் ரொம்பவும் அழுததும் வெற்றிலை இல்லாமல், வாங்கி வரவும் ஆளில்லாமல் திண்டாடியதையும், அப்போது தெருவோடு போன முன்பின் தெரியாத பெண்மணி ஒருவர் சமய்த்தில் வெற்றிலை கொடுத்து உதவியதையும், அவரைத் தான் வணங்கும் மாதாவாகவே உணர்ந்ததையும் மெய்சிலிர்க்கக் கூறுவார்.

இளம் வயதிலேயே கணவரை இழந்த இவர் கடுமையாகக் காட்டிலும் மேட்டிலும் உழைத்துத் தன் பிள்ளைகளை ஆளாக்கி இருக்கிறார். வசதியோடு இருந்த தன் தம்க்கைகளிடம் அன்பும் ஆதரவும் மட்டுமே எதிர்பார்த்ததாகவும் காலணா கடன் வாங்கியதில்லை என்றும் பெருமையோடு சொல்வார்.

கணவரைப் பற்றி ரொம்பவும் ஆர்வமாகப் பேசுவார். அவ்வளவு அன்பாக இருந்தாராம் இவரிடம். பிள்ளைப் பேறு காலத்தில் இவருக்காகச் சமைத்து வைப்பது, வீட்டு வேலைகள் செய்வது, இவரின் உடல் தேற வேண்டுமென்று பிராந்தி வாங்கித் தருவது (மாமியாருக்குத் தெரியாமல்! ) என்று அந்தக் காலத்து மனிதர் ஒருவர் பெண்மையை இந்த அளவுக்கு மதிப்பவராக இருந்திருப்பது வியக்க வைக்கிறது. (சாரி, பிராந்தி வாங்கித் தந்ததற்காகச் சொல்லவில்லை)

அழகாக மிமிக்ரி செய்வார். பல ஊர்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் கொடைக்கானலைச் சுற்றிப் பார்க்க வரும் பெண்கள் பேசுவதையும் நடந்து கொள்வதையும் கதை கதையாக அவ்ர்கள் மாதிரியே நடித்துக் காட்டுவார்.

அம்மாச்சி you are cho chweet!

Tuesday, March 17, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்

சில நாட்களுக்கு முன் இந்தத் தலைப்பில் அருமையாக எழுதி தொடங்கி வைத்து யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று குறிப்பிட்டு இருந்தார், அமிர்தவர்ஷினி அம்மா.  அதனால் என் பதிவு இதோ!

1. மோகன்

எங்கள் வீட்டில் அப்பாவுக்கு உதவியாளராக இருந்தவர்.  அவருக்கென்று குடும்பம் இல்லை. தம்பி குடும்பம் தான் இருந்தது.  நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என் அப்பாவிடம் வேலை பார்த்து வந்தார். அவருக்குச் சம்பளமெல்லாம் கிடையாது. எங்கள் வீட்டில் ஒருவ்ராக இருந்து கொண்டு எல்லா வேலைகளும் செய்தார்.

வெடவெடவென்று வெகு ஒல்லியான உருவம். வெண்ணிற தலை முடியும் தாடியும், கழுத்தில் சில ஜெப மாலைகள் என்று  ஒரு ரிஷி போலவே இருப்பார்.

கடை கண்ணிக்குப் போய் வருவது, டெலிபோன், எலக்ட்ரிசிட்டி பில் கட்டுவது, பாங்குக்குப் போவது, இது போன்ற வழக்கமான வேலைகள் தவிர ஒரு காலகட்டத்தில் அப்பாவின் துணிகளைத் துவைப்பது, தண்ணீர் தட்டுப்பாடு இருந்த போது நாலு தெரு தள்ளிப் போய் குடங்களில் தண்ணீர் பிடித்து வருவது உட்பட மாடாக உழைத்திருக்கிறார்.

எங்கள் வீட்டுக்கு மட்டுமல்ல, எங்கள் தெருவில் பல வீடுகளில் பில் கட்டுவது வங்கிக்குப் போவது போன்ற பல வேலைகளுக்கு இவரை நம்பி இருந்தனர். பதிலுக்கு அவர்கள் எது கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கிக் கொள்வார்.

ஆனால் குசும்பும் கொஞ்சமும் குறையாதவர். குறிப்பாக என்னைச் சீண்டிக் கோபப்படுத்துவது அவருக்கு மிகவும் பிடிக்கும்.   எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். எங்கிருந்தோ ஒரு கறுப்பு நாய்க்குட்டி ஒன்றைக் கொண்டு வந்தார்.  அது என்னவென்று நான் கேட்க ”இது முயல் குட்டி, வளர்ந்த பின்பு தான் முயல் மாதிரி அழகாக  இருக்கும். ” என்று சொல்லிவிட்டார்.  நானும் அக்கம்பக்கத்து சிறுவர்களை ”முயல்குட்டியை”ப் பார்க்க அழைத்து அசட்டுப்பட்டம் கட்டிக் கொண்டேன்.

அந்த நாய்க்குட்டி பத்து வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்தது. இவருக்குத் தான் அது மிகவும் செல்லம்.

எப்போதாவது சில நாட்கள் தண்ணியைப் போட்டு விட்டு மொட்டைமாடியில் போய்ப் படுத்துக் கொண்டு பாட ஆரம்பிப்பார்.  அதுவும் சின்ன வயதில் தான் மதிக்காமல் போய்விட்ட தன் அம்மாவை நினைத்துக் கொண்டு.  அது தான் கொஞ்சம் தாங்க முடியாது. அப்பா போய் அதட்டிய பிறகே கச்சேரி நிற்கும்.

எது எப்படியோ, குழந்தைகளான எங்கள் மீது ரொம்பப் பாசம் வைத்திருந்தார்.  வீட்டுக்கு வருபவர்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்தால் எங்களைப் பற்றித் தான் ஆசையோடு பேசிக் கொண்டிருப்பார்.

பத்து வருடங்களுக்கு முன் உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் போய் விட்டது. கண் பார்வையும் போய் சிகிச்சை பலனளிக்காமல் காலமாகி விட்டார்.  அவரைப் போல் ஒரு மனிதரை இனி பார்க்கவே முடியாது.

(அவருடம் எடுத்த போட்டோ ஒன்று உள்ளது.  தேடி எடுத்து இப்பதிவில் போடுகிறேன். )

Friday, March 13, 2009

மிஷாவும் நானும்

என் சிறு வயது எண்ணற்ற கனவுகளில் இதுவும் ஒன்று! சோவியத் யூனியனுக்கு ஒருமுறையாவது சென்று வருவது. அது கனவு மட்டும் அல்ல, என் வாழ்க்கையின் தீர்மானம் என்றே நினைக்கும் படி வளர்க்கப்பட்டிருந்தேன்.



என் பெற்றோருக்கு சொவியத் யூனியன் மீது அப்படியொரு பக்தி இருந்தது. வீட்டில் நிறைய பேசுவார்கள் அந்நாட்டைப் பற்றி. எப்பேர்ப்பட்ட புரட்சியின் விளைவு அது என்றும், குழந்தைகளுக்கும் உழைப்பளிகளுக்கும் பெண்களுக்கும் அது எப்படி ஒரு சுவர்க்க பூமியாக விளங்குகிறதென்றும், இந்தியாவுக்கு அது எவ்வளவு உதவிகளும் நேசக்கரஙளும் நீட்டி இருக்கிறதென்றும் இப்படி நிறைய. ஒலிம்பிக்ஸில் சோவியத் யூனியன் தங்கம் வென்றால் இந்தியாவே வென்றது போல் மகிழ்வோம்.


குழந்தைகளுக்கென பெரிய பெரிய எழுத்தில், அளவில் கலர் கலராகப் படம் போட்டு கதைப் புத்தகங்கள் வெளியிட்டது சோவியத் பதிப்பகங்கள் தாம். எங்கள் பள்ளி சின்ன பள்ளி. ஆண்டு விழா, விளையாட்டு விழா என்றால் இந்தப் புத்தகங்கள் தான் நிறய பரிசாகத் தருவார்கள். (விலையும் ரொம்பக் குறைவாக இருக்கும்)

இது போதாதென்று மிஷா என்றொரு குழந்தைகள் மாத‌ இத‌ழ் வ‌ந்து கொண்டு இருந்த‌து. ஆஹா! எவ்வ‌ள‌வு அழ‌கிய‌ வெண்ணெய் போன்ற‌ காகித‌தில் முழுக்க‌ முழுக்க‌ வ‌ண்ண‌ப் ப‌ட‌ங்க‌ளும் க‌தைக‌ளும் துணுக்குகளும், ப‌ட‌க்க‌தைக‌ளும் நிறைந்த‌ அருமையான‌ இத‌ழ‌ அது. அப்ப‌டி ஒரு குழ‌ந்தைக‌ள் இத‌ழை நான் இன்று வ‌ரை பார்க்க‌வில்லை. (உங்க‌ள் யாருக்கேனும் நினைவிருக்கிற‌தா மிஷாவை?)என் அம்மா ஓராண்டு முழுதும் வ‌ந்த‌ இதழ்களைப் பைண்டு செய்து வைத்தார்க‌ள். அதைப் பொக்கிஷ‌மாக‌ப் பாதுகாத்து வ‌ருகிறேன்.

திடீரென்று ஒரு நாள் ப‌ள்ளியிலிருந்து வ‌ந்த‌ போது வீடு இடி விழுந்த‌ மாதிரி இருந்த‌து. சோவிய‌த் யூனிய‌ன் உடைந்த‌து என்ற‌ செய்தி ப‌ர‌வி இருந்த‌து. அந்த‌ வ‌ய‌தில் அத‌ன் பின்ன‌ணியில் இருக்கும் அர‌சிய‌ல் எல்லாம் புரிய‌வில்லை என்றாலும் (இப்போ ம‌ட்டும் என்ன‌ வாழுதாம்)ரொம்ப அதிர்ச்சியாக இருந்த‌து. சோவிய‌த் யூனிய‌ன் என்ற‌ அமைப்பு இனி இல்லை. ரூபிளின் ம‌திப்பு இந்திய‌ ரூபாயை விட‌க் குறைந்து விட்ட‌து என்ப‌தெல்லா‌ம் ச‌கிக்க‌ முடியாத‌ சோக‌மாக‌ இருந்த‌து. என் க‌ன‌வு தேச‌த்துக்கு என்ன‌வாயிற்று?



இதில் என்னால் புரிந்து கொள்ள‌வே முடியாத‌ ஒன்று உண்டென்றால் சோவிய‌த் யூனிய‌ன் மீது அள‌வு க‌ட‌ந்த‌ ந‌ம்பிக்கையும் ம‌திப்புன் வைத்திருந்த‌ சில‌ர் சிறிது நாட்க‌ளிலேயே அமெரிக்கா ப‌க்க‌ம் சாய்ந்து விட்ட‌து தான். உயிர் ந‌ண்ப‌ன் நோய்வாய்ப்ப‌ட்டு இற‌ந்த‌தும் "அவ‌ன் இற‌ப்பான் என்று என‌க்குமுன் கூட்டியே தெரியும் அந்த‌ அல்பாயுசை ம‌ற‌ந்து விட்டு இந்த‌ப் ப‌யில்வானோடு சினேகித‌ம் வைத்துக் கொள்" என்று கூறுவ‌து போல் இருந்த‌து சில‌ரின் பேச்சு. அதைத் தான் என்னால் ச‌கித்துக் கொள்ள‌வே முடிய‌வில்லை.


மிஷா என்ற அந்தக் குட்டிக் கரடி இன்னும் என் க‌ன‌வுக‌ளில் வ‌ருகிற‌து. என் ம‌க‌ளின் ம‌க‌ளுட‌ன் விளையாட‌ வ‌ருவேன் என்று சொல்லுகிற‌து. :-)

Monday, March 9, 2009

என் மகளின் முதல் பிறந்தநாள்!

விழா இனிதே ந‌ட‌ந்து முடிந்த‌து. நானும் அவ‌ள் அப்பாவும் எங்க‌ள் வீட்டில் ந‌ட‌த்தும் முத‌ல் விழா எனப‌தால் பொறுப்பும் பெருமித‌மும் கூடுத‌ல் ச‌ந்தோஷ‌த்தைத் த‌ந்த‌து.
மூன்று வார‌ங்க‌ளுக்கு முன்பே திட்டமிட்டு வேலைக‌ளைத் தொட‌ங்கி விட்டோம். ஒன்றுக்கு இர‌ண்டு ப‌ட்டுப் பாவாடைக‌ள் அமை‌ந்து விட்ட‌ன‌ குட்டிக்கு. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வித‌மாக‌ அவ‌ளுக்குத் தைத்துப் போட்டுப் பார்ப்பதற்குள் டெய்ல‌ர் அக்காவுக்கு செல்லமாகி விட்டாள். "உங்க அம்மா தனக்குச் சட்டை தைக்கிறதுக்குக் கூட இவ்வளவு ந‌டை ந‌ட‌ந்த‌தில்ல‌டீ!"

வீட்டைச் சுத்த‌ப்ப‌டுத்துவ‌து, ஒழுங்குப‌டுத்துவ‌து போன்ற‌ எங்களுக்கு அறவே பிடிக்காத வேலைக‌ள் கூட‌ நேஹா பிற‌ந்தநாளை ஒட்டி செய்யும் போது சுவார‌சிய‌மாக‌ இருந்த‌து. அவள் தாத்தா பாட்டி பெரியம்மா, அக்கா, அண்ணா எல்லாரும் ஊரிலிருந்து வந்தார்கள் . மேலும் அழைத்திருந்த நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே அட்டென்டன்ஸ் கொடுத்து மிகவும் சிறப்பாக ந்டத்திக் கொடுத்து விட்டார்கள். ஆனால் கொஞ்ச‌ நேர‌ம் சிரித்து அழகாகப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்துக்கு மேல் அழுது கத்த ஆரம்பித்து விட்டாள். இத்தனைக்கும் கூட்டம் ரொம்பவும் இல்லை. நானும் அவளும் மட்டுமே இருக்கும் வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் ஆட்கள் தூக்கவும் கொஞ்சவும் வருவதைப் பார்த்து மிரண்டு விட்டாள். அவள் அவ்வளவு அழுது பார்த்ததே இல்லை. (ஒரே ஒரு முறை கதவிடுக்கில் கை விரல் மாட்டிய சமயம் தவிர). பிறகு இரவு திரும்பவும் கலகலப்பாகி விளையாடத் தொடங்கி விட்டாள்.

இந்த விழா ஏற்பாடு செய்ததில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்: எங்க‌ள் தெருவில் ப‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ள் இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் ஒன்று சேர்ந்து விளையாடி பார்த்த‌தேயில்லை. அனைவ‌ரும் அவ‌ர‌வ‌ர் வீட்டில் டி.வி.ஹோம்வொர்க் என அடைந்து கிட‌க்கிறார்க‌ள் போலும். இவ‌ர்க‌ள் ஒருவ‌ருக்கொருவ‌ர் அறிமுக‌மாகிப் ப‌ழ‌க‌ ஒரு வா‌ய்ப்பாக‌ அமைந்த‌து.

கடந்த‌ ஓராண்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. ஏழு வ‌ருட‌ங்க‌ளாக‌ப் பார்த்துக் கொண்டிருந்த‌ வேலையை என் செல்ல‌த்துக்காகத் துறந்தேன். (குடும்பத்தில் வேறு யாரும் குழந்தையைப் பார்த்துக் கொள்ள இயலாத சூழ்நிலையில் இருப்பதால், கொஞ்சம் அவள் வளர்ந்ததும் வேலைக்கு மீண்டும் சென்று விடலாம் என்ற நம்பிக்கை இருப்பதால்) தூக்க‌ம் தொலைத்த‌ எத்த‌னையோ இர‌வுகளை, அவ‌ளின் ஒவ்வொரு அசைவையும், வளர்ச்சியையும் அருகிருந்து பார்த்த‌ ப‌க‌ல் பொழுதுக‌ள் ஈடு செய்த‌ன‌.

ஆனாலும் சில‌ நேர‌ம் த‌லை காட்டும் சுய‌ இர‌க்க‌மும், சோர்வும் அவ‌ள‌து அழ‌கிய‌ குறுஞ் சிரிப்பில், சின்ன‌ஞ்சிறு விர‌ல்க‌ளின் இத‌மான‌ ஸ்ப‌ரிச‌த்தில், இன்னும் இன்னும் எத்த‌னையோ சொல்லி மாளா இன்பங்களில் ச‌ட்டென‌ மறைந்ததுண்டு! அவ‌ள் வ‌ந்த பிற‌கு தான் உண்மையில் என்னையே நான் புரிந்து கொள்ள‌வும் அவ‌ள் பொருட்டு என் எத்த்னையோ குறைக‌ளைக் களை‌ந்து சீராக்கிக் கொள்ள‌ முய‌ல‌வும் ஒரு ப‌க்குவ‌ம் வ‌ந்திருக்கிற‌து. மேலும், இத்தனை வருடங்களாக Taken for granted ஆகப் பார்த்த அம்மாவை ஒரு புதிய‌ க‌ண்ணோட்ட‌த்தில் பார்க்க‌ வைத்தாள். நேஹா! நான் உன்னை வ‌ள‌ர்ப்ப‌து இருக்க‌ட்டும் நீ இன்னும் எத்த‌னையோ வித‌த்தில் என்னைப் புதிது புதிதாக‌ வார்க்க‌ப் போகிறாய் என்றே தோன்றுகிறது. நன்றி க‌ண்ணே!