Tuesday, June 29, 2010

மருமகளின் டைரிக் குறிப்புகள் - தொடர் இடுகை

மாமியாரின் டைரிக் குறிப்புக‌ள் என்று வல்லிசிம்ஹன் அவர்கள் இந்த சுவாரசியமான இடுகையை எழுதி இருந்தார். அதைத் தொடர்ந்து மருமகளின் டைரிக் குறிப்புகள் என்ற அதிரடியான‌ தொடர் இடுகையைத் துவக்கி வைத்து அதில் என்னையும் கோத்து விட்டார் முல்லை!

எதெல்லாம் நல்லவிதமான காம்ப்ரமைஸ்கள்? எதெல்லாம் விட்டுக் கொடுக்கவே கூடாத உரிமைகள்? - உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு இதிலெல்லாம் இன்னும் தெளிவே வரவில்லை.

எனக்குத் தெரிந்ததெல்லாம், அன்புக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம் என்பது தான். ஆனால் எனக்கு இருந்தது அவ்வளவு கள்ளம்கபடமில்லாத நேர்மையான எண்ணமல்ல என்பது எனக்குக்கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது. மனம் எப்போதும் கணக்குப் போடும், நான் அதிகமா நீ அதிகமா என்று ஒரு தராசை வைத்து அளந்து கொண்டே இருக்கும்; அப்படி எதிர்பார்ப்புடன் விட்டுக் கொடுப்பது என்பது காதலே அல்ல என்று டாக்ட‌ர் ருத்ர‌ன் அவ‌ர்க‌ள் தனது நூலொன்றில் எழுதி இருந்ததைப் ப‌டித்த‌போது என‌க்குப் பொளேரென்று அறை வாங்கிய‌து போலிருந்த‌து. அது ந‌ம்மை நாமே ஏமாற்றிக் கொள்வ‌து போல‌ என்ப‌தை அழ‌காக்ச் சொல்லி இருந்தார். (புத்த‌க‌த்தை எடுத்து அதே வரிகளை ட்விட்ட‌ரில் கோட் செய்கிறேன்!)

நான் தான் பெரிய தியாகி போலவும் நிறைய விட்டுக் கொடுத்திருப்பதாகவும் அதற்கெல்லாம் எனக்கு மகுடம் வந்து சேராததாகவும் எண்ணிக் கொண்டிருந்தேன். அது எவ்வளவு பெரிய அறிவீனம் என்றும் கொஞ்சம் அயோக்கியத்தனம் என்றும் புரிந்தது. புரிந்தாலும் இன்னும் நான் தெளிவடைய வேண்டிய, உறுதி கொள்ள வேண்டிய, புரிந்து பக்குவமடைய விஷயங்கள் நிறைய உண்டு. இருந்தாலும் இங்கே பகிரவும் கொஞ்சம் விஷயம் இருக்கிறது!

நாங்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் சிற்சில ஊடல்கள், காம்ப்ரமைஸ்கள் நிகழத்தான் செய்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் காலப் போக்கில் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போய்விட்டது.

திருமணச் சடங்குகளிலெல்லாம் எனக்குப் பெரிதாக எந்த விருப்பு வெறுப்பும் இல்லை. நான் முக்கியமாகக் கருதிய எல்லாமே எங்கள் இருவரின் விருப்ப‌ம் போல் தான் அமைந்த‌து. திருமணம் மதுரையில் ஜோ வீட்டின் அவர்கள் முறைப்படி நடந்தது. சென்னையில் வரவேற்பு எங்கள் வீட்டு ஏற்பாட்டில். கல்யாணப் புடவையை ரொம்ப ஆடம்பரமில்லாமல் நானே தேர்ந்தெடுத்தேன். அத்தைக்கு அது வருத்தம் தான். இருமடங்கு விலையில் அவர்கள் விரும்பிய புடவையைப் பிடிவாதமாக நிராகரித்தேன்.

எனக்கும் ஜோவுக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய இருந்ததால் இருவருமே சேர்ந்து அழைக்கும் படியாக ஒரு செட் பத்திரிகைகள் அடித்தோம். அதன் பொருள் முழுக்க நானே தான் வடிவமைத்தது. ஜோ என்னிடமே விட்டு விட்டார் எழுத்து விஷயத்தையெல்லாம்.
பெயர் முதலில் வருவது பெரிய விஷயமாக நான் கருதவில்லை. ஆனாலும் மணமகள் பெயர் தான் முதலில் வர வேண்டும்; அது தான் முறை என்று ஏதோ ஜோவிடம் அடித்து விட்டதாக ஞாபகம். (அப்போது அப்பாவியாக இருந்ததால் நம்பிவிட்டார் போலும்!) என் பெற்றோர் அழைக்கும் விதமான‌ பத்திரிகையை நானும் அக்காவும் தேர்ந்தெடுத்தோம். அதனுள் வரும் பொருளை நான் எழுத அப்பா திருத்திக் கொடுத்தார். ஜோ வீட்டில் அவர்கள் உறவினருக்கென சில பத்திரிகைகள் அடித்தனர்; (இதில் மட்டும் தான் ஜோ பெயர் முதலில்.) அவற்றை நான் பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்கவில்லை.

திருமண ஏற்பாடுகளில், வீட்டுக்கு வேண்டிய சாமான்கள் வாங்குவது எல்லாமே ஜோவும் நானும் அல்லது அக்காவும் நானும் சேர்ந்து செய்ததாக ஞாபகம்.

என் மாமியார் கிராமத்தைச் சேர்ந்தவரென்றாலும் பல விஷயங்களில் நான் எதிர்பார்த்ததை விட‌ முற்போக்கானவர். என் உடைகள் விஷயத்தில் இதுவரை எந்த விமர்சனமும் வைத்ததில்லை. திருமணமான அடுத்த நாளே நகைகளைக் கழற்றி வைத்து விட்டு அவர்கள் வீட்டில் சுடிதாரில் தான் வளைய வந்தேன். தாலிக்கும் அந்த நிலை ஏற்படத்தான் ஓராண்டு ஆனது!

வீட்டு விஷ‌ய‌ங்க‌ளை நான் நிர்வ‌கிப்ப‌திலும் அவ‌ர்க‌ள் எந்த‌வித‌மான‌ விம‌ர்ச‌ன‌மும் வைத்த‌தில்லை. ஊரிலிருந்து இங்கு வ‌ரும்போது த‌ன்னாலான ஒழுங்குகளையும் வேலைக‌ளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். அதைப் பார்க்கும் போதே என‌க்குத் தெரிந்து விடும்; எது எப்ப‌டி இருக்க‌ வேண்டும் என்ப‌து. ம‌ற்ற‌ப‌டி அட்வைஸ், அதிகார‌ம் இதெல்லாம் அவ‌ருக்கு என்ன‌வென்றே தெரியாது!

ஜோ - என்ன சொல்வது? தற்பெருமையே தவறு எனும்போது என்னவனைப் பற்றி நானே புகழ்வது முறையாகாது! :)

ஆனால், யாரும் எதுவும் சொல்லாம‌லே, திணிக்காம‌லே ந‌ம‌க்கு நாமே போட்டுக் கொள்ளும் சில‌ வில‌ங்குக‌ள் இருக்க‌த் தான் செய்கின்ற‌ன‌.

நமக்கு முந்தைய தலைமுறைப் பெண்கள் ந‌ம‌க்கு அமைத்திருக்கும் முன் மாதிரிக‌ளை மீறுவ‌து என்ப‌து ந‌ம‌க்கே Taboo ஆக‌ப் ப‌டும். அவர்கள் மனதைப் புண்படுத்தாமல் நமக்கான மாற்றங்களை நிறைவேற்றிக் கொள்வது தான் மிகவும் கடினமான விஷயமாக என‌க்குத் தோன்றுகிற‌து.

குறிப்பாக‌, திருமணத்துக்குப் பிறகு ஜோவைப் பிறர் முன்னிலையில் (குறிப்பாக அவர்கள் உறவினர் மத்தியில்) "என்னங்க..." என்று மரியாதையாக அழைப்பதும் பெயர் சொல்லாமல் இருப்பதும் தான் இயல்பு மீறிய விஷயமாக இருந்தது. முதலில் அதுவும் கூட ஒரு புது விளையாட்டாக, சுவாரசியமாகத் தான் இருந்தது. எவ்வளவு நாளைக்கு? இப்போதெல்லாம் நான் மெனக்கெடுவதில்லை!


அப்புற‌ம் வீட்டு வேலைகள். ச‌மைய‌ல் செய்வது தான் இதில் பெரிய பங்கு வகிப்பது. ச‌மைய‌ல் என‌க்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌மெல்லாம் இல்லை. ஆனாலும் தின‌ப்ப‌டி ஒவ்வொரு வேளையும் என்ன ச‌மைக்க‌ வேண்டும் என்று யோசித்துச் செய்வது, ச‌மைத்து வீணான‌ ப‌தார்த்த‌ங்க‌ளை எப்ப‌டி ஒழுங்கு செய்வது, வீட்டில் என்ன இல்லை, இருக்கிறது என்று பார்த்துத் திட்ட‌மிட்டு வாங்கி வ‌ருவ‌து இதெல்லாம் ம‌லை போன்ற‌ காரிய‌மாக‌த் தான் இன்னும் இருக்கிற‌து. இதில் ஜோ பலவகையில் உதவினாலும், இதில் ஏதாவது பிசகு ஏற்பட்டால் அது என் பொறுப்பாக மட்டுமே பார்க்கப்படுவது கொஞ்சம் அநியாயம் தானே?

ஜோ தனது ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் செல‌வ‌ழிக்கும் நேர‌த்தை ஒப்பிட்டால் நான் என‌து தோழிக‌ளுட‌ன் செல‌விடும் நேர‌ம் ரொம்ப‌க் குறைவு. நேரில் சந்தித்து அளவளாவுவது என்பது பெரிய luxury!அலுவ‌ல‌க‌ம் முடிந்து நினைத்த‌ நேர‌ம் அவ‌ர் போய் ஒரு பாரில் அம‌ர்ந்து கொண்டு, "இன்னிக்கு கொஞ்ச‌ம் லேட்டாகும்டா...நீ சாப்பிட்டுத் தூங்கிடு" என்று என்னை அழைத்துச் சொல்ல முடிகிற‌து. என்னால் இப்படி ஒன்றை நினைத்துக் கூட‌ப் பார்க்க முடியுமா? இதை ஒரு குறையாகச் சொன்னால் என் பெற்றோரே கூடச்சிரிப்பார்கள்.

ஆனால் நான் தனிப்பட்ட முறையில் எங்காவது செல்ல வேண்டுமென்றால் முன் கூட்டியே திட்ட‌மிட்டு, குழ‌ந்தைக்கும் வீட்டுப் பொறுப்புக‌ளுக்கும் ஆவ‌ன‌ செய்து விட்ட‌ பிற‌கே என்னால் அந்த‌ நிகழ்ச்சியை நிம்ம‌தியுட‌ன் எதிர்பார்க்க‌ முடியும். இந்தக் கண்ணுக்குத் தெரியாத தளைகளை நினைத்தால் வ‌ரும் ஆயாச‌மே பெண்க‌ளுக்கு "ஒண்ணும் வேண்டாம், வீட்டிலிருப்ப‌தே மேல்" என்ற‌ நினைப்பை விதைத்து விடுகிற‌து போலும்.

க‌ண்ணைத் திற‌ந்து கொண்டு தான் இந்த‌க் (திருமண பந்த‌க்) கிண‌ற்றில் விழுந்தேன் என்ப‌தால் நிராசைக‌ள் ஏதும் இல்லை. Life is as good as it can be within the prescribed limits! ;-) ஆனாலும், என் மகள் (அவள் தலைமுறையும்) எனக்குக் கிடைத்ததைக் காட்டிலும் சமத்துவமான, சுதந்திரமான சமூகத்தில், குடும்ப அமைப்பில் வாழ வேண்டுமென விரும்புகிறேன். அவள் எத்தகைய பெண்ணாக இருக்க விரும்புகிறேனோ அதில் பாதியையாவது நான் அடைந்து காட்ட வேண்டாமா?

அதற்கான பாதையை அவளுக்கு அமைத்துக் கொடுக்கவேனும் நான் கஷ்டப்பட்டுச் சில உரிமைப் போராட்டங்களை என்னளவில் நிகழ்த்திக் காட்ட வேண்டிய கடமை இருக்கிறது, என்று ஆழமாக நம்புகிறேன். ஆம், வரையறைகளுக்குள் அடங்கிப் போவது எளிது. போராட்டம் என்பது தான் வலி மிகுந்தது அல்லவா?.

இப்போது தங்கள் அனுபவங்களைப் பகிர நான் அன்புடன் அழைப்பது:

தன்னைச் சுற்றியுள்ள‌ பெண்களின் அனுபவங்களையும், தனது பார்வையில் சமூகத்தையும் கூர்மையாகக் கவனித்து எழுதி வரும் அம்பிகா அவர்கள்.

'சிறுமுய‌ற்சி' என்ற‌ பெய‌ரில் பெருவிஷயங்களை அச‌த்த‌லாக‌ எழுதி வரும் முத்துலெட்சுமி அவ‌ர்க‌ள்.

Saturday, June 26, 2010

ராவணன்! ‍ அனுமாரை மிஞ்சிய கோமாளி




பார்த்தவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் எல்லாரும் எச்சரித்தும் அசராமல் இருந்தேன். எனக்கொன்றும் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. பெரிதாக மெஸெஜ் இல்லாவிட்டால் என்ன, பொழுது போக்கு அம்சம் கூடவா இவ்வளவு பெரிய மல்டிஸ்டாரரில் இல்லாமல் போகும்? பார்த்து விடுவோம் என்று போனேன்.

ஹையோ ஹையோ! இரண்டரை மணி நேரம் ஓடிய படத்தில் ஒரு காட்சி கூட மனதில் நிற்கவில்லை. பார்க்கும் போதும் படத்தோடு ஒரு காட்சியில் கூட ஒன்ற முடியவில்லை.

கதையை விடுங்கள், முடிவை விடுங்கள், மற்ற பாத்திரங்களை விடுங்கள் வீராவின் பாத்திரப்படைப்பைக் கூடவா சரியாகச் செய்யமுடியவில்லை? வீராவைப் பற்றிய விஷயங்களை நான்கைந்து காட்டு வாசிகள் வாய்வழியே புகழ வைப்பதோடு சுலபமாக முடித்துக் கொண்டார் இயக்குநர். இதனால் விக்ரம் காட்டும் உடல்மொழியும், நடிப்பும் கோமாளிக் கூத்தாகப் போய்விட்டது. பிரியாமணி வரும் இடத்தையாவது கொஞ்சம் அழுத்தமாகக் கதை சொல்லப் பயன்படுத்தி இருக்கலாம். அதுவும் இல்லை.

ஐஸ்வர்யா, ஐஸ்வர்யாவாகவே இருக்கிறார். ராகினியாக இல்லை. ஏதோ ஹிந்திப் பட ஷூட்டிங்கிற்கு இடையே விக்ரம் அவரைக் கடத்தி வந்ததாகத் தான் படுகிறது. அழகு, நடிப்பு, நடனம் எல்லாவற்றிலும் ஏமாற்றி விட்டார்.

வீரா ராகினியின் மீது மையல் கொள்வதற்கு அழுத்தமான காரணங்கள் அல்லது சூழ்நிலை ஏற்படுத்தி இருந்தால் ஏற்கும்படியாக இருந்திருக்கும். அது இல்லாமல் போகவே இந்த ராவணன் மீதும் மதிப்பு ஏற்படவில்லை.

காட்டுக்குள் கதைக்களம் ஏற்படுத்தியது அருமையான லொக்கேஷனுக்காக மட்டுமே தான் போலும். காட்டு வாழ் மக்களின் துன்பங்கள், அவர்களின் வாழ்க்கையை ஒரு காட்சியில் கூடப் படம்பிடிக்க மெனக்கெடவில்லை இயக்குநர். இப்படி ஒரு ராமன் ராவணன் கதையை எடுக்கக் காட்டுக்குள் காமிராவைத் தூக்கிக் கொண்டு போவானேன்? சிட்டியிலேயே ஒரு ஃபைவ்ஸ்டார் ஹோட்டலுக்குள் எடுத்து முடித்திருக்கலாம்.

அனுமார், ராமன், சீதை, கும்பகர்ணன் இவர்களின் பிரதிகளாகப் பாத்திரங்கள் வருவது ஒப்புக்காகவும் சிறுபிள்ளைத் தனமாகவும் இருக்கிறது. நவீன ராமாயணம், மகாபாரதம் என்று பள்ளிப்பருவத்தில் போட்ட‌ காமெடி டிராமாக்கள் இதை விட எவ்வளவோ ரசனை மிகுந்ததாக இருந்திருக்கிறது.


இசை: ‍உசுரே போகுதே பாடலைப் பெரிதும் எதிர்பார்த்தேன். ஏ. ஆர் ரஹ்மான இசையில் அது ஒன்று தான் தேறியது. அதிலும் ஏமாற்றம். கொஞ்சம் கூடச் சிரத்தையுடன் படமாக்கப் படவில்லை அந்தப் பாடல். முழுதும் வரவும் இல்லை.

விக்ரமுக்கு ஒரே ஒரு அட்வைஸ்: பெர்ஃபார்மன்ஸிக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் இனியாவது தயவு செய்து பெரிய பானர்களை விடுத்துச் திறமை மிகுந்த சின்ன இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அது தான் உங்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும் நீங்கள் செய்யக்கூடிய உபகாரம். இல்லாவிட்டால் அடுத்த மணிரத்னம் அல்லது ஷங்கர் படத்தில் அப்பா/அண்ணன் வேடம் செய்யத் தயாராகுங்கள். (ஆமாம், அவ்வளவு ஆண்டுகள் ஆகிவிடுமே)

Friday, June 25, 2010

ஒரு சிறிய புட்டி


விடுதி உரிமையாளனும் ஊரில் ஓரளவு பணக்காரனுமான ஜுல்ஸ் ஷிக்கோ, தனது வண்டியை மதர் மாக்லோரின் பண்ணை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு இறங்கினான். நாற்பது வயது இருக்கும் அவனுக்கு. நல்ல உயரம்; அதற்கேற்ற பருமன்; சிவந்த முகம். தனது குதிரையை வாயிலருகே கட்டிப் போட்டு விட்டு வந்தான். கிழவி திண்ணையில் அமர்ந்து உருளைக்கிழங்குகளைத் தோலுரித்துக் கொண்டிருந்தாள்.

மதர் மாக்லோர் என்ற அந்தக் கிழவியின் பண்ணைக்கு அருகில் தான் அவனுக்கும் கொஞ்சம் நிலம் இருந்தது. அதன் மேல் ரொம்ப நாளாக அவனுக்கு ஒரு கண். அதை வாங்கிப் போடவும் வெகு நாளாக முயற்சி செய்து வந்தான். ஆனால் கிழவியோ தனது நிலத்தை விற்கத் திட்டவட்டமாக மறுத்து விட்டாள்.

“இங்க தான் நான் பொறந்தது வளந்தது எல்லாம். என் கட்டையும் இதே இடத்தில தான் போகணும்.“ என்பது தான் அவள் சொன்னதெல்லாம். அவளுக்கு எழுபத்திரண்டு வயதிருக்கும். ரொம்ப மெலிந்து, தோல் சுருங்கி, தேகாந்திரமும் மடங்கி வற்றிய தோற்றத்துடன் இருப்பாள். ஆனாலும் நல்ல ஆரோக்கியமாகத் தான் இருந்தாள். மேலும் ஒரு சிறுமிக்குரிய சுறுசுறுப்புடன் ஏதாவது வேலை செய்து கொண்டே வளைய வருவாள்.

உள்ளே வந்த ஷிக்கோ தோழமையுடன் அவள் முதுகைத் தட்டி விட்டு அவளருகில் கிடந்த ஸ்டூலில் அமர்ந்தான்.

“எப்படி மதர் எப்போவுமே இப்படி சுறுசுறுப்பாவும் உற்சாகமாவும் இருக்குறே.. பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“நன்றி, எனக்கு ஒரு குறையுமில்ல, நீ எப்படி இருக்கே மெஸ்ஸியர் ஷிக்கோ?”

“ஓ! ரொம்ப நல்லா இருக்கேன், என்ன அப்பப்போ மூட்டு வலி தான் கொஞ்சம் தொந்தரவு கொடுக்குது. மத்தபடி ஒரு குறையுமில்ல.”
“நல்லது”

கிழவி மேலே எதுவும் பேசவில்லை. ஷிக்கோ அவள் வேலை செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முறுக்கேறிய மெல்லிய விரல்கள் நண்டின் கொடுக்குகளைப் போல உருளைக்கிழங்குகளைப் பற்றி, ஒரு பழைய கத்தியைக் கொண்டு அவற்றை லாகவமாகத் தோலுரித்து, நீர் நிரம்பிய இன்னொரு பாத்திரத்தில் எறிந்த வண்ணம் இருந்தன. வேகமாகவும் நீளநீளமாகவும் தோல்கள் உரிந்து விழுந்தன. பழக்கப்பட்ட கோழிகள் மூன்று பறந்து வந்து அவள் மடியில் குதித்துத் தோல்களைக் கவ்விக் கொண்டு தாவியோடின.

ஷிக்கோ தர்மசங்கடமாக உணர்ந்தான். ஏதோ சொல்ல வந்து முடியாமல் விழுங்குபவன் போல காணப்பட்டான்.

பின்பு அவசரமாக, “இங்கெ பாரு மதர் மாக்லோர்..”

“என்ன விஷயம்?”

“உன் பண்ணையை விக்க முடியாதுன்னு நீ உறுதியாத் தான் சொல்றியா?”

"நிச்சயமா. நீ உன் மனசை மாத்திக்கோ. நான் சொன்னா சொன்னது தான். இனிமே அந்தப் பேச்சையே எடுக்காதே."

“ரொம்ப நல்லது. நான் வேற ஒரு வழி வெச்சிருக்கேன்; நம்ம ரெண்டு பேருக்குமே சாதகமா இருக்கற மாதிரி.“

”என்ன அது?“

“அப்படிக் கேளு. நீ எனக்கு அதை விக்கிறே. ஆனாலும் நீயே வெச்சிக்கிறே; எப்படி? புரியலீல்ல, இப்ப நான் சொல்லப் போறத கவனமாக் கேளு!”

கிழவி கைவேலையை நிறுத்தி விட்டுத் தனது அடர்ந்த புருவங்களுக்கு அடியிலிருந்து அவனையே உற்று நோக்கினாள்.

அவன் சொன்னான், “அதாவது உனக்கு நான் ஒவ்வொரு மாசமும் நூற்றம்பது ஃப்ராங்குகள், அதாவது முப்பது கிரவுன்கள் கொடுப்பேன். புரியுதா, ஒவ்வொரு மாதமும் நான் இங்க வந்து உனக்கு முப்பது க்ரவுன்கள் கொடுப்பேன். வேற ஒண்ணும் உன் வாழ்க்கையில மாற்றமே இருக்காது. நீ உன் பண்ணை வீட்டுலயே இருக்கலாம். பண்ணையையும் நீயே நடத்திக்கலாம். என்னைப் பத்திக் கவலையே பட வேண்டாம். நான் குடுக்கற பணத்தை வாங்கிக்கிட்டா போதும். என்ன சரியா?”

சொல்லி விட்டு அவளைப் பார்த்து நட்புடன் சிரித்தான். (கருணை ததும்ப என்று கூடச் சொல்லலாம்!) கிழவி அவநம்பிக்கையுடனே அவனைத் திருப்பிப் பார்த்தாள். என்னவோ சூழ்ச்சி இருப்பது போல் தோன்றியது அவளுக்கு. “எல்லாம் சரி தான். ஆனா உனக்கு அந்தப் பண்ணை கிடைக்காது.”

“அதைப் பத்தியே நீ கவலைப்படாதே. கடவுள் விரும்பற வரைக்கும் நீ எவ்வளவு காலம் வாழணுமோ இங்கேயே நீ இருக்கலாம். ஒண்ணே ஒண்ணு. உன் காலத்துக்கு அப்புறம் பண்ணை எனக்குச் சேரும்படியா ஒரு வக்கீலை வெச்சு நீ உயில் எழுதித் தரணும். உனக்கோ குழந்தைகள் இல்ல. உன் சொந்தக்காரங்களோடயும் உனக்கு ஒட்டு உறவு இல்ல. அப்புறம் என்ன? நீ உயிரோட இருக்கற வரைக்கும் பண்ணை உனக்கே சொந்தம். அத்தோட நான் வேற மாசாமாசம் உனக்கு முப்பது க்ரௌன் தருவேன். உன்னைப் பொறுத்த வரைக்கும் இது லாபம் மட்டுமே.”

கிழவி வியப்படைந்தாள். என்னவோ நெருடினாலும் இந்த ஒப்பந்தம் ரொம்பவே கவர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனாலும் அவள் சொன்னாள். “ நான் உடனே ஒத்துக்க முடியாது. கொஞ்சம் யோசிக்கணும். நீ ஒரு வாரம் கழிச்சுத் திரும்பி வா. என் முடிவைச் சொல்றேன்.”

மிக்க மகிழ்ச்சியுடன் ஒரு ராஜாங்கத்தையே வென்ற அரசனைப் போல களிப்புடன் திரும்பிச் சென்றான் ஷிக்கோ.

மதர் மாக்லோர் அன்று இரவு தூங்காமல் இதைப் பற்றியே சிந்தித்தாள். அடுத்து வந்த் நான்கு நாட்களும் குழப்பமான மனநிலையிலேயே இருந்தாள். இதில் தனக்குப் பாதகமாக ஏதும் சூது இருக்குமோ என்று சிந்தித்த படியே இருந்தாள். ஆனால் மாதா மாதம் வரப்போகும் அந்த முப்பது கிரவுன்கள், வானத்திலிருந்து திடீரென்று அதிர்ஷ்டவமாகத் தனது மடியில் வீழ்வது போலத்தானே என்றும் எண்ணினாள்.

அடுத்த நாள் வக்கீலிடம் சென்று இதைப் பற்றிப் பேசினாள். அதை ஏற்றுக்கொள்ளும்படிச் சொன்ன அவர் மாதம் முப்பது கிரவுனுக்குப் பதில் ஐம்பது கிரவுன்களாகக் கேட்கும்படி அறிவுறுத்தினார். அவளது பண்ணை குறைந்தபட்சம் மதிப்பிட்டால் கூட அறுபதினாயிரம் ஃப்ராங்குகள் பெறும் என்று சுட்டிக் காட்டினார்.
"நீ இன்னும் பதினைந்து ஆண்டுகள் உயிரோடிருந்தால் கூட அவன் நாற்பத்தைந்தாயிரம் ஃப்ராங்குகள் தான் செலுத்தி இருப்பான்.”

கிழவி மாதம் ஐம்பது கிரவுன்கள் கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில் உடல் நடுங்கினாள். ஆனாலும் அவளுக்கு ஏனோ அச்சமாக இருந்தது. வெகு நேரம் வக்கீலைப் பல கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுத்தாள். இறுதியாக ஷிக்கோ கேட்டபடி உயில் எழுதுமாறு அவரைப் பணித்து விட்டு வீடு திரும்பினாள். நான்கு குடுவைகள் புதிய ஸைடர் மது அருந்தியது போல் அவளுக்குத் தலை கிறுகிறுத்தது.

அவளது முடிவை அறிந்துகொள்ள ஷிக்கோ வந்த போது ரொம்ப நேரம் ஒப்பந்தத்தை ஏற்க முடியாதது போல் பிகு செய்தாள்; உள்ளூர ஐம்பது கிரவுன்களுக்கு அவன் ஒத்துக் கொள்ளாமல் போய்விடுவானோ என்ற பயத்துடன். இறுதியாக அவன் பொறுமை இழப்பது போல் தோன்றியவுடன் தனது கோரிக்கையை முன் வைத்தாள். அவன் பெரும் வியப்படைந்தன்; மறுத்தான். அவனைச் சம்மதிக்க வைக்கும் வண்ணமாகக் கிழவி பேசத் தொடங்கினாள்.

“நான் நிச்சயமா இன்னும் அஞ்சாறு வருஷங்களுக்கு மேல உயிரோட இருக்க மாட்டேன். பாரு, எனக்கு எழுபத்தி மூணு வயசாகுது. ஆனா இந்த வயசுக்கே ரொம்ப தளர்ந்து போயிட்டேன். முந்தா நாளு கூட சாயங்காலம் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியல. போற வேளை வந்துடுச்சோன்னே நெனச்சேன்.”

ஆனாலும் ஷிக்கோ மசியவில்லை.“அட சும்மா இரு கிழவி. நீ நல்லா குத்துக்கல்லாட்டம் இருக்கே. உனக்கு நூறாயுசு இருக்கு. என்னையும் மண்ணுக்குள்ள அனுப்பிட்டுத் தான் நீ போவே.”

அன்று நாள் முழுதும் இந்தப் பேரப் பேச்சு நடந்தது. கிழவி கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் போகவே ஷிக்கோ கடைசியில் ஐம்பது கிரவுன்கள் கொடுக்க இணங்க வேண்டியதாயிற்று. மேற்கொண்டு பத்து கிரவுன்களும் பேரத்தை முடித்ததற்காக ஒரே தடவையாகக் கேட்டு வாங்கிக் கொண்டாள் கிழவி.

மூன்று ஆண்டுகள் சென்றன. கிழவி கொஞ்சமும் உடல் தளரவில்லை. ஷிக்கோ கவலை கொள்ளத் தொடங்கினான். என்னவோ ஐம்பது ஆண்டுகளாகக் கப்பம் செலுத்தி வருவது போல் தோன்றியது அவனுக்கு. தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக, நயமாக வஞ்சிக்கப் பட்டதாக எண்ணினான். அறுவடைக்குப் பயிர் முற்றி விட்டதா என்று பார்த்து வரும் விவசாயியைப் போல, அவ்வப்போது கிழவியைச் சென்று பார்த்து வருவான். எப்போதும் அவனை ஒரு ஏளனப் பார்வையுடனேயே சந்திப்பாள் கிழவி. அது அவனை ஏமாற்றி விட்டதற்காகத் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதைப் போல் இருக்கும்.

அவள் ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் இருப்பதைக் கண்டு மனம் வெம்பித் திரும்புவான் ஷிக்கொ, “கிழட்டுப் பைத்தியமே, நீ சாகவே மாட்டியா” என்று முனகியபடி.

என்ன செய்வதென்று தெரியாமல் அவளைப் பார்த்தாலே கழுத்தை நெறித்துக் கொன்றுவிட வேண்டும் போல் வெறி கொள்ள ஆரம்பித்தான். விஷம் போல் வெறுத்தான் அவளை. தன் சொத்தைக் கொள்ளை கொண்ட திருடனை வஞ்சம் தீர்க்க நினைப்பது போல அவளைத் தீர்த்துக்கட்டுவது பற்றியே எண்ணமிடலானான்.

ஒரு நாள் அவளைப் பார்க்க வந்தான். வரும்போது இரு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று தேய்த்துக் கொண்டே வந்தான். (முதன் முதலில் இந்த யோசனையைத் தெரிவிக்க வந்த போதும் அப்படித் தான் செய்து கொண்டு இருந்தான்.)

சிறிது நேர அரட்டைக்குப் பின் சொன்னான், “ஏன் நீ என் வீட்டுப் பக்கமே வரதில்ல. எப்ரெவில் வரும் போது எங்க வீட்டுக்கு வந்து ஒரு வேளை சாப்பிட்டுப் போகலாமில்ல? ஊர்ல எல்லாரும் உனக்கும் எனக்கும் ஏதோ பகை போல பேசிக்கிறாங்க. எனக்கு அது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. உனக்கு விருந்து கொடுக்கறது ஒண்ணும் எனக்குச் சிரமமில்ல. எப்போ விருப்பமோ வா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”

மதர் மாக்லோருக்கு இந்த விஷய்த்தில் அதிக உபசாரம் தேவைப்படவில்லை. அடுத்த நாளே சந்தை நாளாக இருந்ததால், வண்டி கட்டிக் கொண்டு டவுனுக்குப் போய்விட்டு விருந்தை எதிர்பார்த்து ஷிக்கோவின் வீட்டுக்குப் போனாள்.

விடுதிக்காரன் ஷிக்கோ பெரிதும் மகிழ்ந்தான். வறுத்த கோழி, ஆட்டுக் கால் சூப், இனிப்பு புட்டிங், பன்றிக்கறி, நிறைய காய்கறிகள் என்று ராஜோபசாரத்துடன் விருந்தளித்தான். ஆனால் கிழவி என்னவோ பேருக்குக் கொறித்தாள். அவள் எப்போதுமே கொஞ்சம் சூப்பும் ரொட்டியுமாக எளிமையாக சாப்பிட்டுப் பழகியவள். ஷிக்கோவுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவளை நன்றாகச் சாப்பிடும்படி வற்புறுத்திக் கொண்டே இருந்தான். அவள் மறுத்தாள். காப்பி கூட வேண்டாமென்று விட்டாள். அதனால் அவன் கேட்டான், “அது சரி, ஆனா ஒரு சின்ன பெக் பிராந்தியோ ஒயினோ கூட குடிக்க மாட்டியா?”

“அது வந்து, பரவாயில்லன்னு தான் நினைக்கிறேன்.” என்று கிழவி தயங்கியவாறே சம்மதிப்பதற்குள் ஷிக்கோ உரக்கக் கத்தினான். “ரோஸலி, அந்தப் சூப்பர் பிரந்தியை எடுத்துட்டு வா, உனக்குத் தெரியுமே, அந்த “ஸ்பெஷல்!”

பணிப்பெண் ஒரு அழகிய நீளமான பாட்டிலைத் தட்டில் ஏந்தியபடி வந்து இரு கிளாஸ்களில் நிரப்பினாள்.

“குடிச்சுப் பாரு, பிரமாதமா இருக்கும்.”

கிழவி அதன் சுவை நெடு நேரம் நாவில் தங்கும்படியாக கொஞ்சம் கொஞ்சமாக அதைச் சீப்பிக் குடித்தாள். காலி கிளாஸைக் கீழே வைத்ததும் சொன்னாள். “ஆமாம், ரொம்பப் பிரமாதம்”

அவள் சொல்லி முடிக்கும் முன் அவளது கோப்பையை மீண்டும் நிரப்பினான் ஷிக்கோ. மறுக்க நினைத்தாலும் கிழவியால் முடியவில்லை. மீண்டும் அதை ரசித்துப் பருகினாள். இன்னும் ஒரு கோப்பை குடிக்கும் படி வேண்டினான். அவள் பிடிவாதமாக மறுக்கவும்,
“அய்யோ இது பால் மாதிரி தான். ரொம்ப இதமானது. நான் ஒரு டஜன் கிளாஸ் கூடக் குடிச்சிருக்கேன். ஒண்ணுமே ஆகாது. சும்மா தேன் மாதிரி உள்ள போகும்; தலைவலி கூட வராது. நாக்கிலயே ஆவியாகிடற மாதிரி. உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது."

அவள் வாங்கிக் கொண்டாள்; அவளுக்கு உண்மையிலேயே ஆசையாக இருந்தது அதைக் குடிக்க. ஆனால் பாதிக்கு மேல் அவளால் குடிக்க முடியவில்லை. ஷிக்கோ ரொம்பப் பெருந்தன்மையான பாவத்துடன் சொன்னான். “இங்கெ பாரு உனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கறதால் உனக்கு ஒரு சின்ன புட்டி தர்றேன், நம்மளோட நல்ல நட்புக்கு அடையாளமா!”
அவள் அதை வாங்கிக் கொண்டு, தள்ளாடியபடியே விடைபெற்றாள்.

அடுத்த நாள் அவள் வீட்டுக்கு மறுபடியும் போனான் ஷிக்கோ, அதே போல் இன்னொரு மதுக்குடுவையுடன். அதையும் ருசிபார்க்கச் சொன்னான். பின் இருவரும் அமர்ந்து மேலும் இரண்டு மூன்று கோப்பைகள் மது அருந்தினர். போகும் போது சொன்னான், “இதோ பாரு, தீர்ந்து போனவுடன் இன்னும் வேணும்னா தாராளமா என்னைக் கேளு, ஒண்ணும் தயங்கவேண்டாம். உனக்குக் குடுக்கறதுல எனக்குச் சந்தோஷம் தான்.”

நான்கு நாட்கள் கழித்து மீண்டும் வந்தான். கிழவி வாசலில் அமர்ந்து ரொட்டியைத் துண்டு போட்டுக் கொண்டிருந்தாள். அவளருகே சென்று குனிந்து லேசாக முகர்ந்து பார்த்தான். மது நெடியடித்தது. பரம திருப்தி அடைந்தான்.

“எனக்கு ஒரு க்ளாஸ் ஸ்பெஷல் தர மாட்டியா?” அவன் கேட்டான்.
ஆளுக்கு மூன்று கிளாஸ்கள் குடித்தனர். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மதர் மாக்லோர் குடிப்பது அக்கம்பக்கத்தில் செய்தியாய்ப் பரவ ஆரம்பித்தது. கிழவி எப்படியோ தானாகவே குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விட்டதாகக் கிசுகிசுக்கத் தொடங்கினர். அடுப்பங்கரையில், தெருவோரங்களில் என எங்காவது கட்டை போல் விழுந்து கிடக்கும் அவளைத் தூக்கி வருவதும் நிகழத் தொடங்கியது.

ஷிக்கோ அவள் வீட்டுப் பக்கம் போவதையே நிறுத்திவிட்டான்.அவ்ளைப் பற்றிய பேச்சு வந்தால் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு, “இந்த வயதில் கிழவிக்குக் குடிப்பழக்கம் ஏற்பட்டது ரொம்ப துரதிர்ஷ்டம் தான். இனிமே நிறுத்தறது முடியவே முடியாது. பாவம் சீக்கிரமே மண்டையைப் போட்டுடுவான்னு தோணுது.”

நிச்சயமாக அது தான் நடந்தது. குளிர்காலம் வந்ததும் சில நாட்களில் கிழவி இறந்து போனாள். கிறிஸ்துமஸ் சமயம் குடித்து விட்டு பனியில் மயங்கி விழுந்தவளை, அடுத்தநாள் உயிரற்ற சடலமாகக் கண்டெடுத்தார்கள்.

பண்ணையைச் சொந்தமாக்கிக் கொள்ள வந்த ஷிக்கோ சொன்னான், “முட்டாள் கிழவி. அவ மட்டும் குடிக்காம இருந்திருந்தா இன்னும் பத்து வருஷம் நல்லா இருந்திருப்பா.”

(மூலக்கதை மாப்பஸான் ஃப்ரெஞ்சில் எழுதியது. The Little Cask என்ற அதன் ஆங்கிலப் பெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.)
இது ஒரு மீள் பதிவு

Tuesday, June 22, 2010

ஆணா பொண்ணா? கறுப்பா சிவப்பா?

மைத்துனருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. ஆரோக்கியமான அழகான பெண் குழந்தை. உற்சாக‌த்துட‌ன் ம‌கிழ்ச்சியைப் ப‌கிர்ந்து கொண்ட‌வ‌ர் சொன்னார், "ந‌ல்ல‌ வேளை, அண்ணி! எல்லாரும் ஆண் குழ‌ந்தை தாங்க‌ற‌ மாதிரி சொல்லிட்டிருந்தாங்க‌. என‌க்குப் பொண்ணு தான் வேணும்னு இருந்துச்சு" என்றார். என் வாழ்த்துக்க‌ளையும் ம‌கிழ்ச்சியையும் தெரிய‌ப் ப‌டுத்திவிட்ட‌ பின் யோசித்தேன்.

ஆமாம், நேஹா வ‌யிற்றிலிருந்த‌ போதும் இப்ப‌டித்தான். சில‌ பேர் பார்த்த‌ மாத்திர‌த்தில் ஸ்கேன் எடுத்து விடுவார்க‌ள். வ‌யிறு உருண்டு ஃபுட்பால் மாதிரி இருந்தா பைய‌னாம்! (ஏன்னா ப‌ச‌ங்க‌ தானே ஃபுட்பால் விளையாடுவாங்க‌!) படர்ந்து விரிஞ்சு இருந்தா பொண்ணாம்.

அது கூட‌ப் ப‌ர‌வாயில்லை. எத்த‌னை பேருக்கு எத்த‌னை நாள் ஆசையோ! என் முக‌ம் பார்க்க‌ ச‌கிக்கலையாம். சுண‌ங்கிப் போயி என்ன‌மோ மாதிரி இருக்காம். அப்ப‌டி இருந்தா நிச்ச‌ய‌ம் பைய‌னாம். இப்ப‌டியே ஒன்ப‌து மாச‌ம் சொல்லிட்டு வ‌ந்த‌வ‌ங்க‌ளை நேஹா பிற‌ந்த‌வுட‌னே தேடிப் போய் அடிக்க‌ணும்னு நென‌ச்சேன்! பொண்ணு பிற‌ந்த‌துக்காக‌ இல்ல‌, ரொம்ப‌த் தெரிஞ்ச‌ மாதிரி ஆருட‌ம் சொல்றேன்க‌ற‌ பேர்ல‌ இஷ்ட‌த்துக்கும் வெறி கொட்டிக்கிட்டாங்க‌ளே அதுக்குத் தான்! :)

க‌ர்ப்ப‌மா இருக்க‌ற‌ பொண்ணோட‌ வ‌யித்தைப் பாத்து "உன‌க்கு ஆண் குழ‌ந்தை" ந்னு சொல்ற‌து தான் ஆசிர்வாத‌ம்னு நினைக்க‌றாங்க‌ போல‌.இந்த‌க் கால‌த்துலையும் ஆண்குழ‌ந்தை பிற‌ந்தா தான் பெருமைன்னு நினைக்கிற‌வ‌ங்க‌ இருக்காங்க‌ன்னு தெரிஞ்ச‌ப்போ ரொம்ப‌ ஆச்ச‌ரிய‌மா இருந்துச்சு. ஆத்திர‌மெல்லாம் வ‌ர‌லை. ஏன்னா என்னைப் பொருத்த‌வ‌ரைக்கும் அவ‌ங்க‌ல்லாம் காமெடி பீஸுங்க‌ தான்!

உற‌வுக்கார‌ர்க‌ளில் ஒருத்த‌ர், ரொம்ப‌ப் ப‌டிச்சுப் பெரிய‌ ப‌த‌வியில‌ இருக்க‌ற‌வ‌ர், நேஹா பிற‌ந்த‌ப்போ, ஜோ கிட்ட‌ வ‌ந்து " க‌வ‌லைப் ப‌டாதேப்பா, அடுத்த‌ த‌ட‌வை பாத்துக்க‌லாம்" னாராம்! சந்தோஷத்துல இருந்த ஜோவுக்கு முத‌ல்ல‌ ஒண்ணுமே புரிய‌லை. புரிஞ்ச‌வுட‌னே வ‌ந்த‌து பாருங்க‌ கோப‌ம்! ஹூம்! இவங்கல்லாம் எப்பத் தான் திருந்துவாங்களோ!

அடுத்தது கலர்! காது க‌ல‌ரைத் திருப்பித் திருப்பிப் பாக்க‌ற‌து; அம்மா க‌ல‌ர் வ‌ர‌லை. அப்பா க‌ல‌ர் வ‌ர‌லைன்னு எதையாவ‌து உள‌ர்ற‌து! தாங்க‌ முடியாத‌ எரிச்ச‌ல் இது தான். ஆனா இவ‌ங்க‌ளையும் காமெடி பீஸா எடுத்துக்க‌ வேண்டிய‌து தான். ஏன்னா இதுக்கெல்லாம் கோப‌ப்ப‌ட்டா ந‌ம‌க்கும் அந்த‌ ஆத‌ங்க‌ம் இருக்குன்னு ஒத்துக்க‌றா மாதிரி!

நேஹாவைப் பாக்க வந்த ஒருத்தங்க‌ அவ‌ க‌ல‌ர் க‌ம்மின்னு ரொம்ப‌ நேர‌ம் புல‌ம்பிட்டிருந்தாங்க‌. 'ந‌ல்ல‌ வேளை அக்கா, நல்ல கலர் மட்டும் இருந்து மூஞ்சியும் முழியும் உங்களை மாதிரி இருந்திருந்தா? யோசிச்சுப் பாருங்க...' அப்படின்னு சொல்ல நினைச்சு வேண்டாம்னு விட்டுட்டேன்.

ஸோ! இனிமே உங்க நெருக்கமானவங்களுக்குக் குழ‌ந்தை பிற‌ந்த‌ செய்தியை யார் கிட்டெயாச்சும் சொல்லும் போது "குழந்தை என்ன‌ க‌ல‌ர்னு கேட்டாங்க‌ன்னா" ஸ்கின் கலர்னு சொல்லுங்க! மண்ட காயட்டும்.

Wednesday, June 16, 2010

உதிரிப்பூக்கள் 16/06/10

சமையல் தளங்கள்!
இரண்டு நாட்களாக வேறு பக்கமே பார்க்கவில்லை.
தமிழ் ஆங்கிலம், தென்னாடு, வடநாடு, சைவம், அசைவம், இத்தாலியன், சைனீஸ் என்று ஒரு சமையல் பக்கம் விடாமல் மேய்ந்து கொண்டிருக்கிறேன்.முக்கியமாக இந்தியப் பெண்களின் பக்கங்கள் தான்.
சமையல் குறிப்புகள் ஏதும் கற்கவா? இல்லை, சும்மா சப்புக் கொட்ட!

ஆனால் ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை பெண்கள், பெரும்பாலும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் எத்தனை சமையல் குறிப்புப் பக்கங்கள் வைத்திருக்கிறார்கள். சமைப்பதே கஷ்டம். அதை அழகாகச் செய்து, படங்கள் பிடித்து, குறிப்பு எழுதி வலையேற்றி...அப்பாடி!

இதில் அவ்வப்போது போட்டிகள் வேறு. Show me your breakfast event, Rice recipes challenge இத்யாதிகள்! யாராவது ஒரு பதிவர் போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும். த‌மிழில் ச‌மைய‌ல் ப‌க்க‌ங்க‌ள் வைத்திருப்ப‌வ‌ர்க‌ளும் இதைச் செய்ய‌லாமே! (சும்மா free advice!)

நேஹா!
இப்போது அநியாய‌த்துக்குப் பேசுகிறாள். யாரிட‌மிருந்து க‌ற்றுக் கொண்டு வ‌ந்தாள் என்று தெரிய‌வில்லை (பின்னே என் கிட்டேர்ந்துன்னு ஒத்துக்க‌வா போறேன்!) யாரையோ பார்த்து "எடுமை மாடே" என்று க‌த்தினாள்.
"நேஹா அப்ப‌டில்லாம் சொல்ல‌க் கூடாது, அம்மா அடிப்பேன்." - கோப‌ம் காட்டுகிறேன்.
"அம்மா...ஐ ல‌வி யூ! " உடனே சிரித்துக் கொண்டு வ‌ந்து க‌ட்டிக் கொள்கிறாள்.
போச்சுடா! எதற்காவது கொஞ்ச‌ம் கண்டித்தால் போதும், இதையே சொல்லி ஆளைக் க‌விழ்த்து விடுகிறாள்.

ராவணன்!
ரொம்ப நாள் கழித்து ஒரு பெரிய பேனர் படத்தை ஆவலுடன் எதிர்பாக்கிறேன். காரணம் விக்ரம்! ஜோ என்ன தான் விக்ரம் இமேஜை என்னிடம் உடைக்கப் பார்த்தாலும் என் ஃபேவரிட் ஹீரோ விக்ரம் தான். ஐஸ்வர்யாவும் கொள்ளை அழகாக இருக்கிறார். பாட‌ல்கள் தான் ஈர்க்கவில்லை. ஆனால் ரஹ்மானின் பல பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடித்துப் போகும். பார்ப்போம்.

ச‌ரி, தேவையில்லாம‌ இவ்ளோ பெனாத்திட்டேன். அத‌ற்குப் ப‌ரிகார‌மாக‌ இந்த நெகிழவைக்கும் தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன். ப‌ன்னிர‌ண்டு வ‌ய‌துச் சிறுவ‌ன் சிந்தித்திருப்ப‌தைப் பாருங்கள்!

http://news.rediff.com/report/2010/jun/15/twelve-yr-old-summons-anderson.htm
Please read and spread it across!

Thursday, June 10, 2010

மழையே! மழையே!!

மழையை ரசிக்காதவர்கள் உண்டா?க‌டும் புய‌ல் ம‌ழையினாலும் வெள்ள‌த்தினாலும் பாதிப்புக‌ள் ஏற்ப‌டும் போதும் ம‌ழையைச் ச‌பித்தாலும்...வெப்ப‌த்தால் வாடி வெடித்திருக்கும் பூமி முத‌ல் மழையின் ஈர‌த்தைத் தாப‌த்துட‌ன் உறிஞ்சி மேனி சிலிர்த்து மணம் வீசும் போது... ஆஹா!
ம‌ழையில் ந‌னைவ‌து: என‌க்கு ரொம்ப‌ ஆசை. ஆசை தீர‌ நிறைய‌வே ந‌னைந்திருக்கிறேன். அதுவும் பெரும‌ழையின் போது ம‌ழைத்துளிக‌ள் சுள் சுள்ளென்று ஊசி போல் உட‌லைக் குத்துவ‌தை உண‌ர்ந்திருக்கிறீர்க‌ளா? குடையின்றி முற்றாக‌ ம‌ழையில் நனையும் சுக‌த்தை அதை அனுப‌வித்தால் தான் புரியும். அலுவலுக்குச் செல்லும் அவசரத்தில் அரைகுறையாக‌ ந‌னைவ‌து தான் எரிச்ச‌ல்!

ச‌ரி, விஷயத்துக்கு வ‌ருவோம். கீழே உள்ள‌ ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து ர‌சித்த‌ பின் அவ‌ற்றுக்குப் பொருத்த‌மான, உங்கள் நினைவுக்கு ச‌ட்டென்று வ‌ரும் த‌மிழ்த் திரைப்ப‌ட‌ப் பாட‌ல்வ‌ரிகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க‌ள். மிக‌வும் சிறந்த பின்னூட்டத்துக்கு ஒரு ச‌ர்ப்ரைஸ் ப‌ரிசு காத்திருக்கிற‌து!
Ok... ஸ்டார்ட் ம்யூஸிக்!


(பி.கு: க‌விஞ‌ர்க‌ள் க‌விதை கூட‌ச் சொல்ல‌லாம். ஆனால் அவை போட்டியில் சேர்த்துக் கொள்ள‌ப் ப‌ட மாட்டா!)




































































Wednesday, June 9, 2010

கூகிள்


வேலை, படிப்பு, அன்றாட அலுவல் த‌விர

தினந்தோறும் கிறுக்குத் த‌ன‌மாய்த் தேடுவது

தொலைந்து போன‌ நினைவுக‌ளை

மீட்டெடுக்கும் வித‌மாக‌த் தேடித் தேடித் தோற்பது


எல்.கே.ஜீ யில் தூக்கி வைத்துச்

சோறூட்டிய‌ டீச்ச‌ரின் பெய‌ரை

ர‌த்ன‌பாலா பாலமித்ரா ப‌ழைய‌ இத‌ழ்க‌ள் கிடைக்கும் இட‌ங்க‌ளை

அமைதியான ஞாயிறொன்றில் தூக்கக் கலக்கத்துடன்

அம்மா ம‌டியில் ப‌டுத்துக் கொண்டே பார்த்த

சோகமான‌ ம‌ராத்திப் ப‌ட‌த்தை

'எனிமி' என்று க‌ருதிக் மல்லுக் கட்டி நின்றவன்

ஜுர‌த்தில் நான் ப‌டுத்த‌ ம‌றுநாள்

ஆளே மாறிய‌ கூச்ச‌த்துடன்

க‌ண‌க்கு நோட்ஸ் கொண்டு வந்தானே

க‌ள்ள‌மில்லா அந்த‌ பால்ய‌ சினேக‌த்தை...


Obsessed with the past என்பார்க‌ளே - அது இது தானா?

Friday, June 4, 2010

நான் அறிந்த முல்லை!



நேற்றே இந்த இடுகையை எழுத நினைத்தேன். பிர‌ச்னைக‌ள் ப‌ல‌வித‌மாய்த் திரிந்து போனதாலும், என் தனிப்பட்ட அலுவல்களாலும் இயலாமல் போனது.


நான் அறிந்த முல்லையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. முல்லையை எனக்குப் பதிவுலகம் வந்த பின் தான் பழக்கம். "தலைகுனிகிறேன்" என்ற இடுகையை நான் எழுதியதை ஒட்டி எனக்குப் பின்னூட்டமிட்டார். பின்பு ராம்சேனா பிரச்னை தொடர்பாகச் சுவாரசியமாகக் கருத்துப் பரிமாறிக் கொண்டது தான் எங்கள் முதல் உரையாடல். நாங்க‌ள் நேரில் ச‌ந்தித்த‌து வெகு சொற்ப‌மான‌ த‌ட‌வைக‌ள். நாங்க‌ள் இணைந்த‌து ஒத்த‌ சிந்த‌னைக‌ளால் அன்றி வேறு தனிப்பட்ட காரணங்களால் இல்லை.

அவரது இயல்பான எழுத்து நடையும் கூர்மையான பார்வையும் என்னை வெகுவாக வசீகரித்தது.
மேலும், ப‌திவுல‌கில் ப‌ல‌ர‌து எழுத்துக்க‌ளை (குறிப்பாகப் பெண் பதிவர்கள், புதிதாக எழுத வருபவர்கள்) "ந‌ல்லாருக்கும் ப‌டிச்சுப்பாரு" என்று என‌க்கு அறிமுக‌ப்ப‌டுத்தி வைத்த‌வ‌ர் முல்லை. அந்த‌ வ‌கையில் 'மூத்த‌ ப‌திவர்' என்ற‌ பெருமை இவ‌ருக்குச் சால‌ப் பொருந்தும். யாரைப் ப‌ற்றியும் என்னிட‌ம் அவ‌தூறாக‌ப் பேசிய‌வ‌ரில்லை.

மாத‌வ‌ராஜ் அங்கிளின் புத்த‌க‌த்தொகுப்புக்காகவும் வாடாத பக்கங்களுக்காகவும் 250க்கும் மேற்ப‌ட்ட பலதரப்பட்ட தரமான எழுத்துக்களை, புதியவர்களின் சுட்டிக‌ளை அனுப்பித் த‌ள்ளிய‌வ‌ர். "முல்லை அனுப்ப‌ற‌தை எல்லாம் த‌னியா ஒரு நாள் ப‌டிக்க‌ணும், அனுப்பி வெச்சிட்டே இருக்காங்க‌" என்பார் அங்கிள்.

எழுத்தில் சுய‌ந‌ல‌ம் சிறிதும் இல்லாத ஒருவரால் தான் இந்த அளவு மெனக்கெட்டு மற்றவர் எழுத்துக்களை அறிமுகப்படுத்த முடியும். அழுத்த‌மான‌ ச‌மூக‌ப் பார்வையுட‌ன், எழுத்தை விரும்பி நேசிக்கும், ப‌ழக‌வும் ப‌டு ஜாலியான‌வ‌ர் முல்லை. இதெல்லாம் என‌க்கு ம‌ட்டும‌ல்ல‌ அவ‌ருட‌ன் ப‌ழ‌கிய‌ பெண்க‌ள் எல்லாருக்கும் தெரியும்.

யாரைப் ப‌ற்றி அந்த இடுகை? எழுதியது யார்? - என்று எதுவும் தெரியாம‌ல், யதேச்சையாகப் பார்த்த‌மாத்திர‌த்தில் அருவருப்படைந்து ப‌திவுல‌கில் த‌ன் முத‌ல் மைன‌ஸ் ஓட்டைப் போட்டு விட்டு ந‌க‌ர்ந்தார் அம்பிகா அக்கா.

அப்படி இருக்கையில், முல்லையுட‌ன் இத்த‌னை ஆண்டுக‌ள் ப‌ழ‌கி, அவ‌ர‌து எழுத்துக்களையும் ம‌க‌ளின் செல்ல‌ப் பேச்சுக்க‌ளையும் ர‌சித்துப் பின்னூட்ட‌மிட்டு, அவ‌ர் தொட‌ங்கிய‌ அம்மாக்க‌ளின் வ‌லைப்பூக்க‌ளில் உறுப்பினராகி இடுகைக‌ள் எழுதிக் கை கோர்த்து வ‌ந்த‌ ச‌கோத‌ரிகளில் குறைந்தது நான்கைந்து பேராவது கண்டனம் தெரிவிப்பார்கள் என்று மிகவும் எதிர்பார்த்தேன்.

நான் ஏற்கனவே மோதிக் கொண்டவள் என்பதால் ரொம்பச் சொல்ல வேண்டாம், நிச்சயம் மற்ற பெண்பதிவர்கள் காட்டமாக எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று உறுதியாக நம்பினேன். ஏமாந்து போனேன். வருந்துகிறேன். யாரையும் புண்படுத்துவதோ குத்திக் காட்டுவதோ நோக்கமல்ல. ஆனால் மனதில் உள்ளதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. ஒரே ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால் அதுவே எனக்குப் போதும்.