Showing posts with label கோவை. Show all posts
Showing posts with label கோவை. Show all posts

Monday, February 22, 2010

ஒருநாள் பழகினும்...

என் கல்லூரிக்குச் சென்று நான் "ஞாபகம் வருதே" பாடிய கதையைச் சென்ற இடுகையில் எழுதி இருந்தேன். அதே அளவுக்கு மிக இனிமையான அனுபவம் விஜி ராம் அவர்கள் வீட்டில் கிடைத்தது.

காலையில் கோவை சென்று இறங்கியதுமே என்னை அழைத்த விஜி, "உங்க காலெஜ் ஃபங்க்ஷன் முடிஞ்சதும் ஃபோன் பண்ணுங்க, நான் வந்து அழைச்சிட்டுப் போறேன்" என்றார். 'முகவரி சொல்லுங்கள் நானே வருகிறேன்' என்றதை அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

முதல்முறையாகப் பார்க்கப் போகும் தோழியை அழைத்துச்செல்ல‌ நாலரை மணி வெயிலில்,ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு ஐந்தாறு கிலோமீட்டர் வந்ததை எண்ணி இன்னும் பிரமிப்பு விலகாமலே இருக்கிறேன்.

சிலரிடம் ஃபோனிலும் சாட்டிலும் நிறைய பேசி இருந்தாலும் முதல் முறை நேரில் பேசும் போது சிறிதளவு தயக்கம் ஏற்படும். விஜியிடம் அது இலல்வே இல்லாததால், எனக்கும் ஏற்படவில்லை.

சிறிது நேர‌த்தில் பூங்காவுக்குச் சென்ற‌ குழ‌ந்தைக‌ளை அழைத்துக் கொண்டு ராம் வ‌ந்தார். விஜியும் ராமும் உண்மையில் Made in heaven couple.

"அம்மா நான் ஊஞ்சல்லேந்து விழுந்துட்டேன்..." என்றாள் ப‌ப்பு.
"பார்க்குக்கு ஒண்ணும் ஆக‌லையேடா? அது ப‌ப்ளிக் ப்ராப்ப‌ர்ட்டி..பாத்து விளையாடும்மா..." ‍ இது தான் விஜி.
வ‌ர்ஷா அம்மாவுக்கு ஈடாக‌ப் ப‌ளிச் ப‌‌ளிச் என்று பேசிக் கொண்டிருந்தாள்.
குழ‌ந்தைக‌ளுக்குப் பொறுப்பான‌ அம்மாவாக‌ ம‌ட்டும‌ல்ல‌, ந‌ல்ல‌ தோழியாக‌வும் இருப்ப‌து எப்ப‌டி என்று விஜி க்ளாஸ் எடுக்க‌லாம். (எவ்வளவு லூட்டி அடித்தாலும் எட்ட‌ரை ம‌ணிக்குள் வீட்டுப் பாடம் முடித்து, சாப்பிட்டுத் தூங்கியும் விடுவார்களாம். என் நேஹாவை என்றைக்கு இப்ப‌டிப் ப‌ழ‌க்க‌ப் போகிறேனோ தெரிய‌வில்லை.
வீட்டுப் புறா ச‌க்தியை அலைபேசியில் அழைத்துப் பேச‌ வைத்தார். மிக‌வும் க‌ல‌க‌ல‌ப்பாக‌ப் பேசினார். வர முடியாததற்கு உண்மையிலேயெ வருத்தம் தெரிவித்தார்.

ஆற‌ரை ம‌ணிக்கு ஆரவார‌மாக‌ வ‌ந்தார் செல்வேந்திர‌ன்.உட‌ன் அவ‌ர‌து இனிய‌ தோழி கேண்டி என்கிற‌ திரு..வும். Cho chweet couple இவர்கள்.

செல்வேந்திரனை ஏனோ ரொம்பத் தலைக்கனம் பிடித்தவர் என்று எண்ணி இருந்தேன். நேரில் பார்த்துப் பேசியதும் 'ரொம்ப' அல்ல, இருக்க வேண்டிய அளவு தானென்று புரிந்தது! :)

சிறிது நேர‌த்துக்குப் பிற‌கு ச‌ஞ்ச‌ய் காந்தி வ‌ந்தார். க‌ல‌க‌ல‌ப்பு அதிக‌மாகிய‌து.
ப‌திவுல‌க‌ம் மூல‌மே நண்பர்களாக ஆன‌ இவ‌ர்க‌ளிட‌ம் என‌க்கு மிக‌வும் பிடித்த விஷ‌ய‌ம் என்ன‌வென்றால், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ சிறப்புகள் இருந்தும் சொந்தப் பெருமைக‌ளைப் பேசுப‌வ‌ர்க‌ளாக‌ இல்லாம‌ல், எந்த‌ எதிர்பார்ப்பும் இல்லாமல், ப‌ர‌ஸ்ப‌ர‌ம் அன்பையும் உற்சாக‌த்தையும் ப‌ரிமாறிக் கொள்ள‌வே ந‌ட்பு பாராட்டுகிறார்க‌ள். Hats off to them!

அர‌ட்டைக்கு இடையே விஜி அற்புத‌மாக‌ இர‌வு உண‌வும் த‌யாரித்து முடித்தார். ராம் குழந்தைகளுக்கு உணவூட்டினார், மேஜையை set செய்தார். சாப்பிட்டு முடித்ததும், விடைபெற‌ ம‌ன‌மில்லாம‌ல் பேசிக் கொண்டு நின்ற எங்களிடம்,"ப‌ஸ் காலையில‌யா" என்று கேட்டு நேர‌மான‌தை உண‌ர்த்தினார் செல்வேந்திர‌ன். பத்து மணியாகி விட்ட போதும் பஸ் கிள‌ம்பும் வ‌ரையில் கூட‌ இருந்து என்னை வ‌ழிய‌னுப்பி வைத்தார் விஜி.

என் க‌ல்லூரி ம‌ட்டும‌ல்ல, இவ‌ர்க‌ளின் அன்பும் இனி கோவையை என் ம‌ன‌தில் இருந்து என்றுமே பிரிக்க‌ முடியாத‌ ஊராக்கி விட்ட‌து.

"ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே"


பெரியோர் என்று குறிப்பிட்ட‌து க‌ண்டிப்பாக‌ என்னை அல்ல‌. அவ‌ர்க‌ளைத் தான்! :)

இன்னும் மீளாமலே...

அந்த அனுபவத்தின் பரவசம் இன்னும் தெளியவில்லை. பத்து ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த என் தோழி அன்று பார்த்ததே போல் இருந்ததையும், அவளுடன் பேசி மகிழ்ந்ததையும், இங்கு எழுதலாம்.

கல்லூரி வளாகம் முழுதும் சுற்றிப் பார்த்து அறிந்த மாற்றங்களையும், மாறாத தோற்றங்களையும் விவரிக்கலாம்.

ஆனால், உள்ளே நுழைந்தவுடன் அந்தப் பூவரச மரங்கள் உதிர்த்த மலர்களின் வாசமும், ஒருவர் மறந்து மற்றவரிடமிருந்து மீட்டெடுத்த சின்னச் சின்ன நினைவுகளின் பரவசத்தையும், மறந்தே போயிருப்பார்கள் என்று நினைத்த எங்கள் பேராசிரியர்கள் பார்த்தமாத்திரத்தில் அடையாளம் கண்டு ஆச்சரியமும் சந்தோஷமுமாய் வாஞ்சையைச் சொரிந்த கணங்களையும் அவற்றின் முழுவீச்சும் வெளிப்படும்படி என்னால் எழுதவே முடியாது.

எங்க‌ள் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளால் ம‌ட்டுமே முக்கிய‌ வ‌ள‌ர்ச்சி பெற்ற‌ பாபா ஸ்டோர்ஸ் பாபா கிஃப்ட் ஆர்டிகிள்ஸ் க‌டை யொன்றும் திற‌ந்திருந்த‌து.
ப‌ழ‌முதிர் நிலைய‌ம் இருந்த‌ இட‌த்தில் ரிலைய‌ன்ஸ் ஃப்ரெஷ் க‌டை வ‌ந்திருந்த‌து. பார்த்த‌விட‌மெங்கும் யூனிநார் விள‌ம்ப‌ர‌ங்க‌ள்.

விடுதியில்: இறுதியாண்டு மாணவியர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
பார்வையாள‌ர் கூட‌ங்க‌ள் கொசுவலைகள் அடிக்கப்பட்டு இன்ட‌ர்நெட் சென்ட‌ர் க‌ளாக‌ மாற்ற‌ப்ப‌ட்டிருந்த‌ன.

மாண‌வ‌ர் எண்ணிக்கை அதிக‌ரித்திருப்பதால் மூன்று பேர் இருந்த‌ அறையில் ஐந்து பேரும், ரீடிங் ரூம் என‌ப்ப‌டும் விஸ்தார‌மான‌ கூட‌மெங்கும் க‌ட்டில்க‌ள் போட‌‌ப்ப‌ட்டு அங்கும் முப்ப‌து மாண‌விய‌ர் த‌ங்கி இருந்த‌து க‌ஷ்டமாக‌ இருந்த‌து. இடநெருக்கடி சந்தேகத்துக்கிடமில்லாமல் இருந்தது. புதிய‌ விடுதி அறைக‌ள் க‌ட்டும் ப‌ணி விரைவில் ந‌ட‌க்க‌ப் போவ‌தாக‌க் கூறினார்க‌ள்.

எல்லோர் கையிலும் செல் ஃபோன்க‌ள் இருந்த‌ன‌. நாள்தோறும் ம‌திய‌ம் க‌டித‌ங்க‌ளும் கார்டுக‌ளும் இறைந்து கிட‌க்கும் மேஜையில் ப‌ர்மிஷ‌ன் கார்டுக‌ள் (ஊருக்குச் செல்ல‌)மட்டுமே வ‌ருவ‌தாக‌க் கூறினார்க‌ள்.

சில‌ர் அறைக‌ளில் க‌ம்ப்யூட்ட‌ரும் லேப்டாப்பும் கூட‌ வைத்திருந்த‌ன‌ர்.

எல்லா அறைக‌ளிலும் மின்விசிறி இருந்த‌து. (ஸாரி, இது ஓவர் தான், ஆனா நாங்க‌ள் ப‌டிக்கும் போது இதற்கு அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌து. சில வருடங்களுக்கு முன் யாரோ ஃபானில் தூக்கு மாட்டித் த‌ற்கொலை செய்து கொண்டார்க‌ளாம்.)

Civil: நாங்கள் படித்த காலத்தில் மதிப்புக் குறைந்திருந்த‌ பார்க்கப்பட்ட சிவில் துறை டாப் லிஸ்டில் இருந்தது. உண்மையில் இது தான் ரொம்பச் சந்தோஷமாக இருந்தது.(மேடையேறி அறிமுகப்படுத்திக் கொண்ட போது சிவில் என்றதும் கண்மணிகள் போட்ட கரகோஷமே அதற்குச் சான்று!)
ஆனால் நாங்கள் அத்துறையை விட்டு விலகி விட்டதைத் தெரிவித்த போது ஏமாற்றமடைந்தனர்.

இறுதியாண்டு சிவில் மாணவர்களில் பாதிப்பேருக்கு அதே துறையில் வேலை ஏற்கென‌வே கிடைத்திருந்த‌து. மேலும் அவ‌ர‌வ‌ர் ப‌டிக்கும் பொறியிய‌ல் (core) துறையிலேயே வேலை பார்க்கும் ஆர்வ‌ம் அதிக‌ம் உள்ள‌வ‌ர்களாக‌த் தெரிந்தார்க‌ள். த‌ய‌க்க‌மின்றி மேடையேறிப் ப‌ல‌ரும் பேசினார்க‌ள். (த‌மிழிலும் ஆங்கில‌த்திலும்) எங்க‌ள் கால‌த்தில் யாராவ‌து ஒரு சில‌ரே இத‌ற்குத் த‌யாராக‌ இருப்பார்க‌ள். அதுவும் ஆங்கில‌த்தில் சரளமாகப் பேச‌க்கூடிய‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே.


ஆர்க்கெஸ்ட்ரா: இதைப் ப‌ற்றிக் கேட்ட‌துமே ம‌ற்ற‌ மாண‌‌வ‌ர்க‌ள் உற்சாக‌மாக‌ப் பேசினார்க‌ள். ப‌ல‌ போட்டிக‌ளில் க‌ல‌ந்து கொண்ட‌தாக‌வும் எல்லாருமே ரொம்ப‌வும் திற‌மைசாலிக‌ளாக‌ இருப்ப‌தாக‌வும் சொன்னார்க‌ள். பூட்டியிருந்த‌ அந்த‌ அறைக்குள் செல்ல‌ நான் விரும்புவ‌தாக‌ச் சொன்ன‌தும் ஓடிப்போய் சாவி எடுத்து வ‌ந்து திற‌ந்த‌ன‌ர். பியானோ ம‌ட்டும் அப்ப‌டியே இருந்த‌து. நாங்க‌ள் உப‌யோகித்த‌ அந்த‌ ட்ர‌ம் செட் இல்லை. த‌ங்க‌ள் சொந்த‌ கிட்டார், ம‌ற்றும் வ‌ய‌லின் வைத்திருந்தார்க‌ள். ஏனைய கருவிகளை நிக்ழ‌ச்சிக‌ள் ந‌ட‌த்தும் போது ஓரிரு வார‌ங்க‌ளுக்கு மொத்த‌மாக வாட‌கை எடுத்துக் கொள்வ‌தாக‌க் கூறினார்க‌ள். எங்கள் ஆசைக்காகக் "கரிகாலன் காலப் போல" பாட்டையும் அழகாகப் பாடிக் காண்பித்தன‌ர்.

1970 க‌ளிலும் 80க‌ளிலும் ப‌டித்த‌வ‌ர்க‌ள் அதிக‌ எண்ணிக்கையில் வ‌ந்து அள‌வ‌ளாவிக் கொண்டிருந்த‌ போது க‌ட‌ந்த‌ சில ஆண்டுக‌ளில் ப‌டித்த‌வ‌ர்க‌ள் சொற்ப‌மான‌ எண்ணிக்கை தான். அது ரொம்ப‌வும் வெட்க‌மாக‌வும் வ‌ருத்த‌மாக‌வும் இருந்த‌து. அனைவ‌ரையும் ஒன்று திர‌ட்டி திட்ட‌மிட்டு ஒருமுறை வ‌ர‌வேண்டும் என்றி நினைத்துக் கொண்டோம்.

பெண்க‌ள் விடுதி மாலை 6.30 ம‌ணிக்குப் பூட்ட‌ப்ப‌ட்டு விடும் என்ற‌ விதியில் இம்மிய‌ள‌வும் மாற்ற‌ம் ஏற்ப‌ட‌வில்லை! அடுத்திருக்கும் வேளான் பல்கலை வளாகமே தெரியாத அளவு அடர்ந்திருக்கும் மரங்களில் நிறைய வெட்டப்பட்டிருந்தன.

சிவில் துறை என்ன‌தான் முன்னேறி இருந்தாலும் வேலைக்குத் தேர்வு செய்ய வ‌ரும் நிறுவனங்கள் இன்னும் பெண்க‌ளை உதாசீனப்படுத்துவது பத்து ஆண்டுகளாகியும் கொஞ்சமும் மாறாமல் இருப்பது நம்பவே முடியாத கொடுமை. "ABC யும் பாய்ஸ் மட்டும் தாங்கா எடுத்தாங்க. XYZ கம்பெனி எங்களை இன்டர்வ்யூவே அட்டென்ட் பண்ண விடலை" என்று அழாக்குறையாக மாணவிகள் சொன்ன போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் சொன்ன அதே வார்த்தைகள்.
இத‌ற்குக் க‌ல்லூரி நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து ஏதாவ‌து செய்ய‌ முடியுமா என்று தெரிய‌வில்லை.

மாலை நான்கு ம‌ணிவ‌ரை க‌ல்லூரியில் சுற்றி விட்டு ஒருவ‌ருக்கொருவ‌ர் விடைபெற்றோம். அத‌ன்பின் நிகழ‌ந்த‌து இன்னொரு ம‌ற‌க்க‌முடியாத‌ அனுப‌வ‌ம். முன்பின் பார்த்தறியாத ந‌ப‌ர் ஒருவ‌ரிட‌ம் ஆண்டாண்டு கால‌மாய்ப் ப‌ழ‌கிய‌தே போன்ற உள்ள‌ன்புட‌னும் உரிமையுடனும் ப‌ழ‌க‌ ஒரு சில‌ரால் தான்‌ முடியும். விஜி ராம் அவ‌ர்க‌ள் அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு த‌னிப்பிற‌வி. அவ‌ர்க‌ளைச் ச‌ந்தித்த‌து ப‌ற்றித் த‌னி இடுகையில்!

Thursday, February 18, 2010

கல்லூரிக்குப் போகிறேன்!

விடிய விடிய எங்கள் சிரிப்பையும் பேச்சையும் எதிரொலித்த விடுதி அறையையும்,
காய்ந்து போன ரொட்டிகளும் உருளைக்கிழங்கு குர்மாக்களும் மணத்த மெஸ்ஸையும்,
எங்கள் காட்டுக் காட்டுக் கத்தல்களை அஞ்சா நெஞ்சுடன் தாங்கிக் கொண்ட ஆர்க்கெஸ்ட்ராவையும்,
கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கிக் கொண்ட தேர்வுக் கூடங்களையும்,
ஏனென்றே தெரியாமல் மைதானத்தைச் த‌‌லை தெறிக்க ஓடுவது போல் என்னையும்,

இத்தனை வருடங்களாக நூறு முறையாவ‌து க‌ன‌வுக‌ளில் பார்த்திருப்பேன்.

என் பதின்ம வயதின் முக்கியமான நான்கு ஆண்டுகளை நான் கழித்த இடத்துக்குக் கடைசியாகச் சென்றது, ம‌திப்பெண் சான்றித‌ழ் வாங்கத் தான். அதன் பிறகு எத்தனையோ தீபாக்களையும் கவிதாக்களையும், பாலமுருகன், சக்திவேல்களையும் உருவாக்கி விட்டுக் கம்பீரமாய் நிற்கும் என் கல்லூரியையும் பேராசிரியர்களையும் மீண்டும் ஒரு முறை நாளை காணப் போகிறேன்.
ப‌ட‌ப‌ட‌ப்பாக‌ இருக்கிற‌து. சொல்லத் தெரியாத சிலிர்ப்பாக‌வும்!

நேஹாவை அழைத்துச் செல்ல‌ மிக‌வும் விரும்பினாலும் ந‌டைமுறைச் சிக்க‌ல்களா‌ல் முதன் முறையாக அவ‌ளை விட்டுச் செல்கிறேன். அவள் அப்பாவுக்கும் All the best சொல்லுங்கள்! :-)

Saturday, August 29, 2009

சென்னை to கோவை to சென்னை

சென்னையைப் பற்றி அவரவர் பார்வையில் மிக அழகான சித்திரங்களாகத் தீட்டியுள்ளார்கள் சந்தனமுல்லை, மாது அங்கிள், அய்யனார், மற்றும் பைத்தியக்காரன் அவர்கள்.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இந்த ஊரைப் பற்றிச் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் இவ்வளவு இருக்கிறதா என்று அதிசயிக்கத் தான் தோன்றியது.

ஏனென்றால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். பேச்சு வழக்கு, உணவு முறை, பெருமை மிக்க கோயில்கள், இடங்கள் என்று. சென்னையைப் பொறுத்தவரை மெரினா பீச், எல்.ஐ.சி என்று எண்ணற்ற monuments இருந்தாலும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்கள் ஊர்ப்பெருமை கொண்டாடுவது போல் இங்குள்ளவர்களுக்குக் கொண்டாட ஏதுமில்லை.

சிலேட்டில் அழித்து அழித்துச் சித்திரங்களைப் புதிது புதிதாகத் தீட்டுவது போல அசுர வேகத்தில் மாறியும் வளர்ந்தும் (வீங்கியும்) வரும் நகரத்தில் அங்கங்கே பொந்துகளில் வாழும் மனிதர்களுக்குச் (அவர்களும் புதிது புதிதாக முளைத்த் வண்ணம் இருக்கிறார்கள்) சொந்தம் கொண்டாடப் பெரிதாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் இங்குள்ளவர்களைப் பற்றிப் பிற ஊர்களில் என்ன அடையாளம் விழுந்திருக்கிறது, என்பதைப் புரிந்து கொள்ள எனது கோவை கல்லூரி வாழ்க்கை உதவியது.

விடுதி வாழ்க்கையில் தான் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் உண்டு. அந்த் ஊரில் வாழ்பவர்கள் எல்லாம் ஒரே மாதிரி தமிழ் பேசுவார்கள், உணவு முறை, வைக்கும் பெயர்கள்
ஏன், சில சம்யம் முக ஜாடை கூட ஒரே மாதிரி இருக்கும் என்றெல்லாம் புரிந்தது.

சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இப்படி எதுவும் கிடையாது. மாது அங்கிள் சொன்னது போல அடையாறு அண்ணா நகர் பகுதியிலிருந்து வந்தவர்களுக்கும் சைதாப்பேட்டை, திருமழிசை பகுதியிலிருந்து வந்தவர்களுக்கும் பொதுவாகப் பேசிக்கொள்ள எதுவுமே இருக்காது.

அவர்கள் கூட ”எங்க அம்மா ஊர் தஞ்சாவூர், தாத்தா உங்க ஊர் தான் – திருநெல்வேலி” என்று தங்கள வேர்களைத் தேடிச் சொந்தம் கொண்டாடத் துடிப்பவர்களாகத் தான் இருப்பார்கள்.

ரொம்பவும் மேட்டுக்குடி ஆட்களுக்குச் சென்னை அவர்கள் தரத்துக்குக் கீழே தான் தோன்றும்; எப்படா யு.எஸ் போவோம் என்று யு.எஸ் விசாவுக்காகத் தான் அவர்கள் பிறவியே எடுத்திருப்பார்கள். அதனால் அவர்கள் பேச்சும் அது பற்றித் தான் இருக்கும்.

எனக்குச் சொல்லிக் கொள்ளும் படியாக அப்படி எதுவும் இல்லை. உறவினர் வீடு என்று எந்த ஊரிலும் வீட்டிலும் தங்கிய அனுபவமும் இல்லை. (அனைவரும் இந்த அவசர ஊரிலேயே இருப்பதால் பழகும் வாய்ப்புகளே அற்றுப் போய் விட்டன கல்யாண வீடுகளில் குசலம் விசாரிக்கும் பலரை ரோட்டில் பார்த்தால் அடையாளம் கூடத் தெரியாது :o))
அக்ரஹாரங்களும், பேட்டைகளும் இரண்டுமே நல்ல பரிச்சயமாகியும் இருந்தது. அதனால் எந்த அடையாளமும் இல்லாமலே அல்லது எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்தே என்னால் இருக்க நேர்ந்தது. (கிட்டத்தட்ட ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஹென்றி போல – கொஞ்சம் ஓவர் இல்ல?!)

அனைவருடனும் பேதங்களில்லாமல் நட்பு பாராட்டுவதற்கு இந்த lack of social identity வசதியாகவே இருந்தது. வயது வளர வளர நம்மை அறியாமல் இது வெகுவாகக் குறைவது வேதனையான உண்மை தான்.

ஆனால் பொதுவாகச் சென்னை வாசிகள் என்றால் திமிர் பிடித்தவர்கள், அலட்சியமானவர்கள், மரியாதை தெரியாதவர்கள் என்ற பிம்பம் மற்ற ஊர்க்காரர்களுக்கு ஓரளவு இருந்தது.

ஒரு சம்பவம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பிராக்டிகல் வகுப்பில் lab assistant எனக்கு ஒரு செயல்முறையை விளக்கிக் காண்பித்தார். நான் பேச்சு வாக்கில் “அப்படியா ஸார்” என்றதும் பரிவுடன் பேசிக் கொண்டிருந்த அவர் முகபாவம் சட்டென்று மாறியது. கோபமாக, “எந்த ஊரு?” என்றார். ஒன்றும் புரியாமல் “மெட்ராஸ்” என்றேன். ”அதான்...மரியாதை தெரியல” என்று இளக்காரமாகக் கூறிவிட்டு அகன்று விட்டார்.

எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது. நான் என்ன தவறு செய்தேன் என்றே புரியவில்லை. பிறகு மற்றவர்கள் பேசுவதிலிருந்து தான் புரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் “ங்க” போட்டுப் பேசுவது கொங்குத் தமிழின் தனிப் பண்பு, சிறப்பு என்பதையும் அது இல்லாவிட்டால் அந்த ஊரில் மிகப் பெரிய மரியாதைக் குறைவு எனபதையும். “அப்படிங்களா” என்று பேசப் பழகிக் கொண்டேன்!

கூட்டம் நெரியும் பஸ்ஸில், படு எரிச்சலில் இருக்கும் கண்டக்டர் கூட “முன்னால போங்கம்மிணி” என்று தான் எரிந்து விழுவார். அதனால் “த சாவுகிராக்கி, ஏறு மேல” என்பதைக் கூடச் சிரிப்புடன் செல்லமாக எடுத்துக் கொள்ள முடிந்த இந்தச் சென்னைவாசிக்கு அது ராஜ மரியாதையாக இருந்தது.

வெடுக் வெடுக் கென்று மனதில் பட்டதைப் பேசக் கூடியவர்கள் கோவை வாசிகள். லேசில் சிரிக்கவும் மாட்டார்கள் இலகுவாகப் பழகவும் மாட்டார்கள். ஆனால் பழகி அன்பு பாராட்டத் தொடங்கிவிட்டால் அதில் எதிர்பார்ப்பும் இருக்காது; கொஞ்சமும் பொய்யும் இருக்காது. இதற்கு உதாரணம் என் தோழி கவிதா தேவி. முதல் வருடம் எனக்கு lab mate; பின்பு நல்ல தோழி.

பல்லடத்துக்கு அருகில் வடுகபாளையம் அவளது சொந்த ஊர்.
நெடிய ஒடிசலான தோற்றமும் கூர்மையான பார்வையும், நீண்ட பின்னலும், சீரியஸான அவளது முகமும் என்னை வெகுவாகத் தள்ளி நிறுத்தியது. சென்னைக்குரிய பெரிய நாகரிகங்கள் எதுவும் இல்லையென்றாலும், என் போனி டெயிலோ சென்னைத் தமிழோ ஆங்கிலமோ, ஏதோ ஒன்று அவளுக்கும் இலகுவாக இருந்திருக்காது. ஆனாலும் ஏதோ ஒரு புள்ளியில் மிகவும் நட்பானோம். எங்கள் வேறுபாடுகளே வெகுவாக ஒருவரை ஒருவர் ஈர்த்தது. அன்பு கொள்ளச் செய்தது. மெட்ராஸ் புள்ளைங்க்ன்னாலே என்னுமோ நினச்சிருந்தேன். நீ அப்படி இல்ல” என்று அவள் சொன்னது என்னால் மறக்க முடியாதது. அவள் பேசும் கொங்குத் தமிழ் என்னை வெகுவாகக் கவர்ந்து சிலகாலம் நானும் அப்படியே பேசித் திரிந்தேன்!

அடுத்ததாகக் கோவையின் குளிர். செப்டம்பர் மாதம் காலையில் எட்டு மணிக்குக் கூடப் பச்சைத் தண்ணீரில் குளித்தால் இரத்தம் உறைந்து விடும்.

எப்போதும் மிதமான குளிர், எண்ணற்ற மரங்கள் நிறைந்த எங்கள் கல்லூரி, மருதமலை, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் பழைய புத்தகக் கடை, டவுன் ஹால், கே.ஜி தியேட்டர், கேஜி ஹாஸ்பிட்டல், வ.உ.சி. பார்க், அன்னபூர்ணா ஓட்டல், தேங்காய் பன், மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் (how I miss it!) விற்கும் பேக்கரிகள் (எல்லா பேக்கரிகளுமே டீக்கடைகளாகவும் இருக்கும்) இவையெல்லாம் எனக்கு கோவையை என்றென்றும் மனதில் பசுமையாக வைத்திருப்பவை.

முக்கியமாக நமது பதின்பருவ காலத்தை வெகுவாகப் பாதிக்கும் எந்த ஒரு இடமுமே எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும். அந்த வகையில் என் எவர்கிரீன் கல்லூரிக்காலத்தை அடைகாத்த கோவை என்றுமே மனதுக்கினிய ஊர் தான்.