Thursday, August 6, 2009
ஒரு சிறிய புட்டி
நாற்பது வயது இருக்கும் அவனுக்கு. நல்ல உயரம்; அதற்கேற்ற பருமன்; சிவந்த முகம். தனது குதிரையை வாயிலருகே கட்டிப் போட்டு விட்டு வந்தான். கிழவி திண்ணையில் அமர்ந்து உருளைக்கிழங்குகளைத் தோலுரித்துக் கொண்டிருந்தாள்.
மதர் மாக்லோர் என்ற அந்தக் கிழவியின் பண்ணைக்கு அருகில் தான் அவனுக்கும் கொஞ்சம் நிலம் இருந்தது. அதன் மேல் ரொம்ப நாளாக அவனுக்கு ஒரு கண். அதை வாங்கிப் போடவும் வெகு நாளாக முயற்சி செய்து வந்தான். ஆனால் கிழவியோ தனது நிலத்தை விற்கத் திட்டவட்டமாக மறுத்து விட்டாள்.
“இங்க தான் நான் பொறந்தது வளந்தது எல்லாம். என் கட்டையும் இதே இடத்தில தான் போகணும்.“ என்பது தான் அவள் சொன்னதெல்லாம். அவளுக்கு எழுபத்திரண்டு வயதிருக்கும். ரொம்ப மெலிந்து, தோல் சுருங்கி, தேகாந்திரமும் மடங்கி வற்றிய தோற்றத்துடன் இருப்பாள். ஆனாலும் நல்ல ஆரோக்கியமாகத் தான் இருந்தாள். மேலும் ஒரு சிறுமிக்குரிய சுறுசுறுப்புடன் ஏதாவது வேலை செய்து கொண்டே வளைய வருவாள்.
உள்ளே வந்த ஷிக்கோ தோழமையுடன் அவள் முதுகைத் தட்டி விட்டு அவளருகில் கிடந்த ஸ்டூலில் அமர்ந்தான்.
“எப்படி மதர் எப்போவுமே இப்படி சுறுசுறுப்பாவும் உற்சாகமாவும் இருக்குறே.. பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
“நன்றி, எனக்கு ஒரு குறையுமில்ல, நீ எப்படி இருக்கே மெஸ்ஸியர் ஷிக்கோ?”
“ஓ! ரொம்ப நல்லா இருக்கேன், என்ன அப்பப்போ மூட்டு வலி தான் கொஞ்சம் தொந்தரவு கொடுக்குது. மத்தபடி ஒரு குறையுமில்ல.”
“நல்லது”
கிழவி மேலே எதுவும் பேசவில்லை. ஷிக்கோ அவள் வேலை செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முறுக்கேறிய மெல்லிய விரல்கள் நண்டின் கொடுக்குகளைப் போல உருளைக்கிழங்குகளைப் பற்றி, ஒரு பழைய கத்தியைக் கொண்டு அவற்றை லாகவமாகத் தோலுரித்து, நீர் நிரம்பிய இன்னொரு பாத்திரத்தில் எறிந்த வண்ணம் இருந்தன. வேகமாகவும் நீளநீளமாகவும் தோல்கள் உரிந்து விழுந்தன. பழக்கப்பட்ட கோழிகள் மூன்று பறந்து வந்து அவள் மடியில் குதித்துத் தோல்களைக் கவ்விக் கொண்டு தாவியோடின.
ஷிக்கோ தர்மசங்கடமாக உணர்ந்தான். ஏதோ சொல்ல வந்து முடியாமல் விழுங்குபவன் போல காணப்பட்டான்.
பின்பு அவசரமாக, “இங்கெ பாரு மதர் மாக்லோர்..”
“என்ன விஷயம்?”
“உன் பண்ணையை விக்க முடியாதுன்னு நீ உறுதியாத் தான் சொல்றியா?
”நிச்சயமா. நீ உன் மனசை மாத்திக்கோ. நான் சொன்னா சொன்னது தான். இனிமே அந்தப் பேச்சையே எடுக்காதே.“
“ரொம்ப நல்லது. நான் வேற ஒரு வழி வெச்சிருக்கேன்; நம்ம ரெண்டு பேருக்குமே சாதகமா இருக்கற மாதிரி.“
”என்ன அது?“
“அப்படிக் கேளு. நீ எனக்கு அதை விக்கிறே. ஆனாலும் நீயே வெச்சிக்கிறே; எப்படி? புரியலீல்ல, இப்ப நான் சொல்லப் போறத கவனமாக் கேளு!”
கிழவி கைவேலையை நிறுத்தி விட்டுத் தனது அடர்ந்த புருவங்களுக்கு அடியிலிருந்து அவனையே உற்று நோக்கினாள்.
அவன் சொன்னான், “அதாவது உனக்கு நான் ஒவ்வொரு மாசமும் நூற்றம்பது ஃப்ராங்குகள், அதாவது முப்பது கிரவுன்கள் கொடுப்பேன். புரியுதா, ஒவ்வொரு மாதமும் நான் இங்க வந்து உனக்கு முப்பது க்ரவுன்கள் கொடுப்பேன். வேற ஒண்ணும் உன் வாழ்க்கையில மாற்றமே இருக்காது. நீ உன் பண்ணை வீட்டுலயே இருக்கலாம். பண்ணையையும் நீயே நடத்திக்கலாம். என்னைப் பத்திக் கவலையே பட வேண்டாம். நான் குடுக்கற பணத்தை வாங்கிக்கிட்டா போதும். என்ன சரியா?”
சொல்லி விட்டு அவளைப் பார்த்து நட்புடன் சிரித்தான். (கருணை ததும்ப என்று கூடச் சொல்லலாம்!) கிழவி அவநம்பிக்கையுடனே அவனைத் திருப்பிப் பார்த்தாள். என்னவோ சூழ்ச்சி இருப்பது போல் தோன்றியது அவளுக்கு. “எல்லாம் சரி தான். ஆனா உனக்கு அந்தப் பண்ணை கிடைக்காது.”
“அதைப் பத்தியே நீ கவலைப்படாதே. கடவுள் விரும்பற வரைக்கும் நீ எவ்வளவு காலம் வாழணுமோ இங்கேயே நீ இருக்கலாம். ஒண்ணே ஒண்ணு. உன் காலத்துக்கு அப்புறம் பண்ணை எனக்குச் சேரும்படியா ஒரு வக்கீலை வெச்சு நீ உயில் எழுதித் தரணும். உனக்கோ குழந்தைகள் இல்ல. உன் சொந்தக்காரங்களோடயும் உனக்கு ஒட்டு உறவு இல்ல. அப்புறம் என்ன? நீ உயிரோட இருக்கற வரைக்கும் பண்ணை உனக்கே சொந்தம். அத்தோட நான் வேற மாசாமாசம் உனக்கு முப்பது க்ரௌன் தருவேன். உன்னைப் பொறுத்த வரைக்கும் இது லாபம் மட்டுமே.”
கிழவி வியப்படைந்தாள். என்னவோ நெருடினாலும் இந்த ஒப்பந்தம் ரொம்பவே கவர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனாலும் அவள் சொன்னாள். “ நான் உடனே ஒத்துக்க முடியாது. கொஞ்சம் யோசிக்கணும். நீ ஒரு வாரம் கழிச்சுத் திரும்பி வா. என் முடிவைச் சொல்றேன்.”
மிக்க மகிழ்ச்சியுடன் ஒரு ராஜாங்கத்தையே வென்ற அரசனைப் போல களிப்புடன் திரும்பிச் சென்றான் ஷிக்கோ.
மதர் மாக்லோர் அன்று இரவு தூங்காமல் இதைப் பற்றியே சிந்தித்தாள். அடுத்து வந்த் நான்கு நாட்களும் குழப்பமான மனநிலையிலேயே இருந்தாள். இதில் தனக்குப் பாதகமாக ஏதும் சூது இருக்குமோ என்று சிந்தித்த படியே இருந்தாள். ஆனால் மாதா மாதம் வரப்போகும் அந்த முப்பது கிரவுன்கள், வானத்திலிருந்து திடீரென்று அதிர்ஷ்டவமாகத் தனது மடியில் வீழ்வது போலத்தானே என்றும் எண்ணினாள்.
அடுத்த நாள் வக்கீலிடம் சென்று இதைப் பற்றிப் பேசினாள். அதை ஏற்றுக்கொள்ளும்படிச் சொன்ன அவர் மாதம் முப்பது கிரவுனுக்குப் பதில் ஐம்பது கிரவுன்களாகக் கேட்கும்படி அறிவுறுத்தினார். அவளது பண்ணை குறைந்தபட்சம் மதிப்பிட்டால் கூட அறுபதினாயிரம் ஃப்ராங்குகள் பெறும் என்று சுட்டிக் காட்டினார்.
”நீ இன்னும் பதினைந்து ஆண்டுகள் உயிரோடிருந்தால் கூட அவன் நாற்பத்தைந்தாயிரம் ஃப்ராங்குகள் தான் செலுத்தி இருப்பான்.”
கிழவி மாதம் ஐம்பது கிரவுன்கள் கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில் உடல் நடுங்கினாள். ஆனாலும் அவளுக்கு ஏனோ அச்சமாக இருந்தது. வெகு நேரம் வக்கீலைப் பல கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுத்தாள். இறுதியாக ஷிக்கோ கேட்டபடி உயில் எழுதுமாறு அவரைப் பணித்து விட்டு வீடு திரும்பினாள். நான்கு குடுவைகள் புதிய ஸைடர் மது அருந்தியது போல் அவளுக்குத் தலை கிறுகிறுத்தது.
அவளது முடிவை அறிந்துகொள்ள ஷிக்கோ வந்த போது ரொம்ப நேரம் ஒப்பந்தத்தை ஏற்க முடியாதது போல் பிகு செய்தாள்; உள்ளூர ஐம்பது கிரவுன்களுக்கு அவன் ஒத்துக் கொள்ளாமல் போய்விடுவானோ என்ற பயத்துடன். இறுதியாக அவன் பொறுமை இழப்பது போல் தோன்றியவுடன் தனது கோரிக்கையை முன் வைத்தாள். அவன் பெரும் வியப்படைந்தன்; மறுத்தான். அவனைச் சம்மதிக்க வைக்கும் வண்ணமாகக் கிழவி பேசத் தொடங்கினாள்.
“நான் நிச்சயமா இன்னும் அஞ்சாறு வருஷங்களுக்கு மேல உயிரோட இருக்க மாட்டேன். பாரு, எனக்கு எழுபத்தி மூணு வயசாகுது. ஆனா இந்த வயசுக்கே ரொம்ப தளர்ந்து போயிட்டேன். முந்தா நாளு கூட சாயங்காலம் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியல. போற வேளை வந்துடுச்சோன்னே நெனச்சேன்.”
ஆனாலும் ஷிக்கோ மசியவில்லை.
“அட சும்மா இரு கிழவி. நீ நல்லா குத்துக்கல்லாட்டம் இருக்கே. உனக்கு நூறாயுசு இருக்கு. என்னையும் மண்ணுக்குள்ள அனுப்பிட்டுத் தான் நீ போவே.”
அன்று நாள் முழுதும் இந்தப் பேரப் பேச்சு நடந்தது. கிழவி கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் போகவே ஷிக்கோ கடைசியில் ஐம்பது கிரவுன்கள் கொடுக்க இணங்க வேண்டியதாயிற்று. மேற்கொண்டு பத்து கிரவுன்களும் பேரத்தை முடித்ததற்காக ஒரே தடவையாகக் கேட்டு வாங்கிக் கொண்டாள் கிழவி.
மூன்று ஆண்டுகள் சென்றன. கிழவி கொஞ்சமும் உடல் தளரவில்லை. ஷிக்கோ கவலை கொள்ளத் தொடங்கினான். என்னவோ ஐம்பது ஆண்டுகளாகக் கப்பம் செலுத்தி வருவது போல் தோன்றியது அவனுக்கு. தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக, நயமாக வஞ்சிக்கப் பட்டதாக எண்ணினான். அறுவடைக்குப் பயிர் முற்றி விட்டதா என்று பார்த்து வரும் விவசாயியைப் போல, அவ்வப்போது கிழவியைச் சென்று பார்த்து வருவான். எப்போதும் அவனை ஒரு ஏளனப் பார்வையுடனேயே சந்திப்பாள் கிழவி. அது அவனை ஏமாற்றி விட்டதற்காகத் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதைப் போல் இருக்கும்.
அவள் ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் இருப்பதைக் கண்டு மனம் வெம்பித் திரும்புவான் ஷிக்கொ, “கிழட்டுப் பைத்தியமே, நீ சாகவே மாட்டியா” என்று முனகியபடி.
என்ன செய்வதென்று தெரியாமல் அவளைப் பார்த்தாலே கழுத்தை நெறித்துக் கொன்றுவிட வேண்டும் போல் வெறி கொள்ள ஆரம்பித்தான். விஷம் போல் வெறுத்தான் அவளை. தன் சொத்தைக் கொள்ளை கொண்ட திருடனை வஞ்சம் தீர்க்க நினைப்பது போல அவளைத் தீர்த்துக்கட்டுவது பற்றியே எண்ணமிடலானான்.
ஒரு நாள் அவளைப் பார்க்க வந்தான். வரும்போது இரு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று தேய்த்துக் கொண்டே வந்தான். (முதன் முதலில் இந்த யோசனையைத் தெரிவிக்க வந்த போதும் அப்படித் தான் செய்து கொண்டு இருந்தான்.)
சிறிது நேர அரட்டைக்குப் பின் சொன்னான், “ஏன் நீ என் வீட்டுப் பக்கமே வரதில்ல. எப்ரெவில் வரும் போது எங்க வீட்டுக்கு வந்து ஒரு வேளை சாப்பிட்டுப் போகலாமில்ல? ஊர்ல எல்லாரும் உனக்கும் எனக்கும் ஏதோ பகை போல பேசிக்கிறாங்க. எனக்கு அது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. உனக்கு விருந்து கொடுக்கறது ஒண்ணும் எனக்குச் சிரமமில்ல. எப்போ விருப்பமோ வா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”
மதர் மாக்லோருக்கு இந்த விஷய்த்தில் அதிக உபசாரம் தேவைப்படவில்லை. அடுத்த நாளே சந்தை நாளாக இருந்ததால், வண்டி கட்டிக் கொண்டு டவுனுக்குப் போய்விட்டு விருந்தை எதிர்பார்த்து ஷிக்கோவின் வீட்டுக்குப் போனாள்.
விடுதிக்காரன் ஷிக்கோ பெரிதும் மகிழ்ந்தான். வறுத்த கோழி, ஆட்டுக் கால் சூப், இனிப்பு புட்டிங், பன்றிக்கறி, நிறைய காய்கறிகள் என்று ராஜோபசாரத்துடன் விருந்தளித்தான். ஆனால் கிழவி என்னவோ பேருக்குக் கொறித்தாள். அவள் எப்போதுமே கொஞ்சம் சூப்பும் ரொட்டியுமாக எளிமையாக சாப்பிட்டுப் பழகியவள். ஷிக்கோவுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவளை நன்றாகச் சாப்பிடும்படி வற்புறுத்திக் கொண்டே இருந்தான். அவள் மறுத்தாள். காப்பி கூட வேண்டாமென்று விட்டாள். அதனால் அவன் கேட்டான், “அது சரி, ஆனா ஒரு சின்ன பெக் பிராந்தியோ ஒயினோ கூட குடிக்க மாட்டியா?”
“அது வந்து, பரவாயில்லன்னு தான் நினைக்கிறேன்.” என்று கிழவி தயங்கியவாறே சம்மதிப்பதற்குள் ஷிக்கோ உரக்கக் கத்தினான். “ரோஸலி, அந்தப் சூப்பர் பிரந்தியை எடுத்துட்டு வா, உனக்குத் தெரியுமே, அந்த “ஸ்பெஷல்!”
பணிப்பெண் ஒரு அழகிய நீளமான பாட்டிலைத் தட்டில் ஏந்தியபடி வந்து இரு கிளாஸ்களில் நிரப்பினாள்.
“குடிச்சுப் பாரு, பிரமாதமா இருக்கும்.”
கிழவி அதன் சுவை நெடு நேரம் நாவில் தங்கும்படியாக கொஞ்சம் கொஞ்சமாக அதைச் சீப்பிக் குடித்தாள். காலி கிளாஸைக் கீழே வைத்ததும் சொன்னாள். “ஆமாம், ரொம்பப் பிரமாதம்”
அவள் சொல்லி முடிக்கும் முன் அவளது கோப்பையை மீண்டும் நிரப்பினான் ஷிக்கோ. மறுக்க நினைத்தாலும் கிழவியால் முடியவில்லை. மீண்டும் அதை ரசித்துப் பருகினாள். இன்னும் ஒரு கோப்பை குடிக்கும் படி வேண்டினான். அவள் பிடிவாதமாக மறுக்கவும்,
“அய்யோ இது பால் மாதிரி தான். ரொம்ப இதமானது. நான் ஒரு டஜன் கிளாஸ் கூடக் குடிச்சிருக்கேன். ஒண்ணுமே ஆகாது. சும்மா தேன் மாதிரி உள்ள போகும்; தலைவலி கூட வராது. நாக்கிலயே ஆவியாகிடற மாதிரி. உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது.“
அவள் வாங்கிக் கொண்டாள்; அவளுக்கு உண்மையிலேயே ஆசையாக இருந்தது அதைக் குடிக்க. ஆனால் பாதிக்கு மேல் அவளால் குடிக்க முடியவில்லை. ஷிக்கோ ரொம்பப் பெருந்தன்மையான பாவத்துடன் சொன்னான். “இங்கெ பாரு உனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கறதால் உனக்கு ஒரு சின்ன புட்டி தர்றேன், நம்மளோட நல்ல நட்புக்கு அடையாளமா!”
அவள் அதை வாங்கிக் கொண்டு விடைபெற்றாள்; தள்ளாடியபடியே.
அடுத்த நாள் அவள் வீட்டுக்கு மறுபடியும் போனான் ஷிக்கோ, அதே போல் இன்னொரு மதுக்குடுவையுடன். அதையும் ருசிபார்க்கச் சொன்னான். பின் இருவரும் அமர்ந்து மேலும் இரண்டு மூன்று கோப்பைகள் மது அருந்தினர். போகும் போது சொன்னான், “இதோ பாரு, தீர்ந்து போனவுடன் இன்னும் வேணும்னா தாராளமா என்னைக் கேளு, ஒண்ணும் தயங்கவேண்டாம். உனக்குக் குடுக்கறதுல எனக்குச் சந்தோஷம் தான்.”
நான்கு நாட்கள் கழித்து மீண்டும் வந்தான். கிழவி வாசலில் அமர்ந்து ரொட்டியைத் துண்டு போட்டுக் கொண்டிருந்தாள். அவளருகே சென்று குனிந்து லேசாக முகர்ந்து பார்த்தான். மது நெடியடித்தது. பரம திருப்தி அடைந்தான்.
“எனக்கு ஒரு க்ளாஸ் ஸ்பெஷல் தர மாட்டியா?” அவன் கேட்டான்.
ஆளுக்கு மூன்று கிளாஸ்கள் குடித்தனர். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மதர் மாக்லோர் குடிப்பது அக்கம்பக்கத்தில் செய்தியாய்ப் பரவ ஆரம்பித்தது. கிழவி எப்படியோ தானாகவே குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விட்டதாகக் கிசுகிசுக்கத் தொடங்கினர். அடுப்பங்கரையில், தெருவோரங்களில் என எங்காவது கட்டை போல் விழுந்து கிடக்கும் அவளைத் தூக்கி வருவதும் நிகழத் தொடங்கியது.
ஷிக்கோ அவள் வீட்டுப் பக்கம் போவதையே நிறுத்திவிட்டான்.
அவ்ளைப் பற்றிய பேச்சு வந்தால் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு, “இந்த வயதில் கிழவிக்குக் குடிப்பழக்கம் ஏற்பட்டது ரொம்ப துரதிர்ஷ்டம் தான். இனிமே நிறுத்தறது முடியவே முடியாது. பாவம் சீக்கிரமே மண்டையைப் போட்டுடுவான்னு தோணுது.”
நிச்சயமாக அது தான் நடந்தது. குளிர்காலம் வந்ததும் சில நாட்களில் கிழவி இறந்து போனாள். கிறிஸ்துமஸ் சமயம் குடித்து விட்டு பனியில் மயங்கி விழுந்தவளை, அடுத்தநாள் உயிரற்ற சடலமாகக் கண்டெடுத்தார்கள்.
பண்ணையைச் சொந்தமாக்கிக் கொள்ள வந்த ஷிக்கோ சொன்னான், “முட்டாள் கிழவி. அவ மட்டும் குடிக்காம இருந்திருந்தா இன்னும் பத்து வருஷம் நல்லா இருந்திருப்பா.”
(மூலக்கதை மாப்பஸான் ஃப்ரெஞ்சில் எழுதியது. The Little Cask என்ற அதன் ஆங்கிலப் பெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.)
Sunday, July 19, 2009
பொம்மன், திம்மன், வம்பன் - குழந்தைகளுக்கு ஒரு கதை
இதன் ஆசிரியரான முல்லை தங்கராசன் என்ற மிகச்சிறந்த குழந்தை எழுத்தாளரின் திடீர் மரணத்தால் அவ்விதழ்கள் வருவதும் நின்று போயின.
இது தமிழ்க் குழந்தை இலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகி விட்டது என்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறேன்.
ஏனென்றால் என் அக்காவும் அண்ணனும் படித்துச் சேர்த்து வைத்த இதழ்களைத் தான் நான் படித்திருக்கிறேன். இப்போதெல்லாம் ஏன் அந்த இதழ் வருவதில்லை என்று கேட்ட போது அதன் ஆசிரியர் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். ரத்னபாலா இனிமேல் வரவே வராது என்பது ஒரு தனிப்பட்ட சோகமாக எங்களுக்கு இருந்தது.
முட்டாள் பட்டணம், மதியூகி மாப்பிள்ளை, ஜாம் ஜிம் ஜாக் போன்ற எண்ணற்ற கதைகளும் சித்திரக்கதைகளும் தாங்கிக் கனவுலகம் போல் வலம் வந்த அந்த இதழுக்கு ஈடாக வேறெதையுமே சொல்ல முடியாது.
குழந்தை இலக்கியமென்றால் நீதிக் கதைகள் இருந்தே ஆகவேண்டுமென்ற நியதி எல்லாம் இல்லாமல் பெரியவர்களும் ரசிக்கும் வண்ணம் அலாதியான நகைச்சுவைக் கதைகள் இடம்பெற்றிருந்தன.
எனக்கு நினைவில் நிற்கும் கதை ஒன்றை குட்டீஸ்களுக்கும் அவர்களுக்குக் கதை சொல்லும் பெற்றோருக்காகவும் தருகிறேன். இது ரத்னபாலாவில் வந்தது. எழுதியது யாரென்று உறுதியாகத் தெரியவில்லை.
மூலக்கதை இதைப்போல் பதின்மடங்கு சுவாரசியாமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். என் நினைவில் நின்ற வரை மீட்டெடுத்திருக்கிறேன்.
பொம்மன் திம்மன் வம்பன்
ஒரு ஊரில் பொம்மன், திம்மன், வம்பன் என்று மூன்று சகோதரர்கள் தங்கள் வயதான தாய் தந்தையுடன் வசித்து வந்தனர். அப்போது அவர்கள் ஊரில் திடீரென்று புயல் மழை பெய்தது. பயிர்களெல்லாம் நாசமாகிக் கடும் பஞ்சம் ஏற்பட்டது.
அப்போது பொம்மன் சொன்னான். “அப்பா, நீங்கள் பயிரிட்டதெல்லாம் நாசமாகி விட்டதே என்று வருந்தாதீர்கள். நான் பக்கத்து ஊருக்குச் சென்று ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன்.”
அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு பொம்மன் அண்டை ஊருக்குக் கால் நடையாகவே சென்று அடைந்தான். அந்த ஊரின் பண்ணையாரிடம் போய் வேலை ஏதாவது தருமாறு கேட்டான்.
அந்த ஊர்ப் பண்ணையாரோ மகாக் கஞ்சப் பேர்வழி. ஈவிரக்கம் இல்லாதவர். அவர் பொம்மனைப் பார்த்துச் சொன்னார்.
”தம்பி, உனக்கு தாராளமாக என் பண்ணையில் வேலை தருகிறேன். வேலை முடிந்ததும் சம்பளமும் சாப்பாடும் தருவேன்.
ஆனால் நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.”
“என்ன ஐயா அது?”
“எக்காரணம் கொண்டும் நீ என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது. நானும் உன்னிடம் கோபித்துக் கொள்ள் மாட்டேன். மீறி நீ என்னிடம் கோபம் கொண்டால் உன்னை வேலையை விட்டு நீக்கி விடுவேன். கூலி எதுவும் தரவும் மாட்டேன்.” என்றார்.
“நீங்கள் என்னிடம் கோபித்தால்” பொம்மன் கேட்டான்.
“அப்போது நான் உனக்கு இருபதாயிரம் ரூபாய் தருவேன்”
பொம்மனுக்கு இந்த நிபந்தனை நியாயமாகத் தோன்றியது. மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். உடனே தோட்டத்துக்குச் சென்று வேலை செய்யலானான்.
கடும் உழைப்பாளியான பொம்மன் உற்சாகமாக வேலை செய்தான். நாளெல்லாம் தோட்டத்தைச் சுத்தம் செய்தான், பாத்தி வெட்டிச் செடிகள் நட்டான், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான்.
மாலையில் மிகவும் களைத்துப் போனான். பயங்கரமாகப் பசி எடுத்தது. பண்ணையாரிடம் சென்று வேலை முடிந்தது என்று கூறிப் பசிக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்தினான்.
பண்ணையார் மலர்ந்த முகத்துடன் அவனைத் தன் பின்னால் வரும்படி அழைத்தார். தோட்டத்தின் மூலையில் ஒரு அறிவிப்புப் பலகை சாத்தி வைக்கப்பட்டிருந்தது. புன்னகையுடன் அதைச் சுட்டிக் காட்டினார். அதில்,
“பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுக்கு நாளை சம்பளமும் சாப்பாடும் கிடைக்கும்”
பொம்மனுக்குக் கோபமாக வந்தது. ஒப்பந்தத்தை எண்ணி ஒன்றும் பேசாமல் திரும்பினான். கஷ்டப்பட்டுப் பசியை அடக்கிக் கொண்டு உறங்கிப் போனான்.
மறு நாள் அதிகாலையிலேயே எழுந்து விரைவாக வேலைகளை முடித்துவிட்டு பண்ணையாரிடம் சென்று ஊதியம் கேட்டான்.
பண்ணையார் மறுபடியும் சிரித்துக் கொண்டே அதே அறிவிப்பினைக் காட்டினார்.
பொம்மன் அமைதியாகக் கேட்டான், “என்ன ஐயா இது, நேற்று தான் நாளை தருவதாகச் சொன்னீர்களே?”
அதற்குப் பண்ணையார் சொன்னார், “ஆமாம், நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு எல்லாம் என்னிடம் கிடையாது. எப்போதும் ஒரே பேச்சுத் தான்” என்று சிரித்தார்.
பொம்மனுக்குக் கோபம் பீறிட்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
மூன்றாம் நாள் வேலை முடிந்ததும் பண்ணையாரிடம் சென்றான். அன்றும் அவர் அதே பலகையைக் காட்டியதும் பொம்மனால் பொறுக்க முடியவில்லை.
“யோவ், என்ன ஆள் ஐயா நீர்? முதுகொடிய வேலை செய்பவனை இப்படி ஏமாற்றுகிறீர்? நீர் மனிதன் தானா?” என்று ஆத்திரம் தீரக் கத்தினான்.
நயவஞ்சகமான அந்தப் பண்ணையாரோ முகத்தில் புன்னகை மாறாமல், “அடடா, தம்பி பொம்மா, ஒப்பந்தத்தை மீறி விட்டாயே. என்னிடம் கோபித்துக் கொண்டு கத்தி விட்டாயே. நீ போகலாம்“ என்றார்.
அவமானமும் கோபமும் தாங்காமல், பொம்மன் ஊர் திரும்பினான். வீட்டுக்கு வந்து பெற்றோரிடமும் தம்பியரிடமும் தனக்கு நேர்ந்த அநியாயத்தைச் சொன்னான்.
அடுத்த சகோதரனான திம்மன் தான் அப்பண்ணையாரிடம் சென்று நியாயம் கேட்பதாகக் கூறிச் சென்றான். அவனையும் பண்ணையார் இதே போல ஏமாற்றி அனுப்பி விட்டார்.
இறுதியாகக் கடைக்குட்டி வம்பன் சொன்னான். “அண்ணன்மார்களே, நான் போகிறேன் அந்தப் பண்ணையாரிடம் வேலை செய்ய. அவரை என்ன செய்கிறேன் பாருங்கள்”
”அடேய் வம்பா, நீ சின்னவன். உன்னால் சும்மாவே பசி தாங்க முடியாது. வேலையும் எப்படியடா செய்வாய்? வேண்டாமடா” என்றனர் பொம்மனும் திம்மனும்.
வம்பன் அவர்களைக் கவலைப்படவேண்டாம் என்று கூறிப் புறப்பட்டான். துணைக்குத் தன் செல்ல நாயையும் அழைத்துச் சென்றான்.
பண்ணையார் வம்பனுக்கும் அதே நிபந்தனைகளைக் கூறி வேலைக்கமர்த்திக் கொண்டார்.
முதல் நாள் மாலை வேலை நேரம் முடிந்ததும் வம்பன் தன்னிடம் வருவான் என்று எதிர்பார்த்தார். அவன் வரவில்லை. அப்படியே மூன்று நாட்கள் கழிந்தன. வம்பன் அவரைப் பார்த்தால் முகம்மலர்ந்து வணங்குவதும் உற்சாகமாக வளைய வருவதுமாக இருந்தானே தவிர ஊதியமும் கேட்கவில்லை, சாப்பாடும் கேட்கவில்லை.”
அவனிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்தார். அவனைத் தேடிச் சென்ற போது தோட்டத்தில் மல்லாந்து படுத்துச் சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் வம்பன்.
“வம்பா, நீ எப்படி இத்தனை நாட்களாக ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறாய்?
பெரிதாகச் சிரித்த வம்பன், “நானா? சாப்பிடவில்லையா? நல்ல வேடிக்கை போங்கள், என்னால் ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருக்க முடியாது. மூன்று வேளையும் செட்டியார் கடையில்
மூக்குப் பிடிக்கச் சாப்பிடுகிறேனே. என் அம்மா கைப்பக்குவம் அவருக்கு அப்ப்டியே இருக்கிறது.”
“காசு...” என்று பண்ணையார் இழுக்க,
“இதோ நம் பண்ணையிலிருந்து தான் நெல் மூட்டைகளைக் கொடுத்துப் பதிலுக்குச் சாப்பாடு வாங்கிக் கொள்கிறேன். என் நாய்க்குக் கூடக் கஞ்சி ஊற்றாமல் சுடு சாதம் போடுகிறார். பாருங்கள் எப்படி வாலாட்டுகிறதென்று.” சொல்லிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டு குஷாலாகப் பாட ஆரம்பித்தான்.
பண்ணையாருக்குக் கோபத்தில் மீசை துடித்தது. சின்னப் பயல் எவ்வளவு சாதுர்யமாக நம்மை ஏமாற்றி இருக்கிறான் என்று கறுவினார். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோபப்பட்டால் இருபதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமே.
பொறுத்திருந்து தான் யோசிக்க வேண்டும் என்று திரும்பி விட்டார்.
மறு நாள் வம்பன் அவரிடம் வந்தான். “எசமான், பூங்குளம் ஊரில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டிகட்டிக் கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தான்.
பண்ணையாரும் பேராசைப்பட்டு அவனுடன் போகச் சம்மதித்தார். வம்பன் தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினான். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “டேய் மெதுவாடா மெதுவாடா”, என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.
பொழுது சாய்ந்து விட்டது. அவர்கள் கடந்து சென்ற சாலை ஓரமாக ஒரு சேற்றுக் குட்டை தென்பட்டது. அதனுள் பன்றிகள் விளையாடித் திளைத்துக் கொண்டிருந்தன.
சடக்கென்று வண்டியைச் சாய்த்தான் வம்பன்; பண்ணையார் ’தொபுக்கடீர்’ என்று குட்டையில் விழுந்தார். அவர் உடலெல்லாம் சேறு படிந்தது. அருகில் ஒரு பன்றி வேறு அவரை நோக்கி உறுமிக் கொண்டே கடிக்க வந்தது.
அவ்வளவு தான். கோபம் பொத்துக் கொண்டு, வம்பனைப் பார்த்துக் கண்டபடி ஏச ஆரம்பித்தார் பண்ணையார்.
சாலை மேலே நின்று கொண்டிருந்த வம்பன் புன்முறுவலுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான். பின் சொன்னான்.
“எசமான், ஒப்பந்தத்தை மீறிட்டீங்களே? கோபப்பட்டு என்னைத் திட்டிட்டீங்களே? எடுங்கள் ரூபாய் இருபதாயிரம்.” என்றான்.
“அதெல்லாம் ஒண்ணும் முடியாது போடா” என்றார் பண்ணையார்.
“அப்படியா. அப்போ இந்தச் சேத்துக் குட்டையிலேயே கிடங்க. இரவாகிவிட்டது, காலையில் யாராவது வந்து கை தூக்கி விடற வரைக்கும் இந்தப் பன்றிகளுடன் விளையாடிக் கொண்டிருங்கள்” என்று சிரித்தான்.
“சரி தர்றேன், கை தூக்கி விடுடா”
“ஹீம். இந்தக் கையில் பணம், இந்தக் கையால் தூக்கி விடுவேன்!” என்று கை நீட்டினான்.
வேறு வழியின்றி முனகியபடியே பணத்தை எடுத்து வம்பனிடம் கொடுத்தார் பண்ணையார்.
அவரைக் கைதூக்கி விட்டபின், வெற்றிக் களிப்புடன் பணத்துடன் தன் சொந்த ஊரை நோக்கி நடந்தான் வம்பன். அவனது செல்ல நாய் உற்சாகத்துடன் குரைத்தபடி அவனைப் பின்தொடர்ந்தது.
***************
முல்லை தங்கராசன் அவர்கள் தனியாகக் கதைகள் எழுதியும் நூல்கள் வெளியிட்டதாக ஞாபகம். அவை பற்றியும், பழைய ரத்னபாலா இதழ்கள் எங்கு கிடைக்கும் என்பது பற்றியும் யாருக்காவது தகவல் தெரிந்தால் தயவு செய்து வெளியிடவும்.
கன்னிமாரா நூலகத்தில் தேடிய போது கிடைக்கவில்லை. ரத்னபாலா பழைய இதழ்களும் அவர்களிடம் இல்லையாம்.
ஒரு பழைய மணிப்பாப்பா இதழுக்குச் சுட்டி இதோ!:
http://www.tamilcc.org/thamizham/ebooks/7/655/TM655.pdf
Friday, July 17, 2009
ஒரு சின்ன கயிறு
சிலர் மாடுகளைக் கயிறு கட்டி இழுத்து வந்தனர். அவர்களது மனைவியர் கையில் கம்புடன் அவற்றை வேகமாக நடக்கும்படி அதட்டியவாறே வந்தனர். இவர்கள் கைகளில் பெரிய பெரிய கூடைகள் வைத்திருந்தனர். அவற்றினுள்ளே இருந்து கோழிக்குஞ்சுகளும் வாத்துக்களும் தலையை நீட்டி வெளியே பார்த்தன. தங்கள் கணவன் மார்களை விட இவர்கள் உற்சாகத்துடனும் சிறு துள்ளலுடனும் நடை போட்டனர். தங்கள் மெலிந்த உடலின் மீது சின்ன சால்வையும் வெள்ளைத் தலைக் குட்டையும் அதன் மீது ஒரு தொப்பியும் அவர்கள் அணிந்திருந்தனர்.
ஒரு ட்ரக் வண்டி பலமாக ஆடிக்கொண்டே கடந்து சென்றது. அதன் உள்ளே இரு ஆண்களும் பின் புறத்தில் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். வண்டியின் ஆட்டத்தைத் தாக்குப் பிடிக்க அவள் அதன் பக்கங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
காடர்வில்லின் சந்தை நடக்கும் சதுக்கத்தில் பெரிய கூட்டம் சேர்ந்திருந்தது. மனிதர்களும் கால்நடைகளும் கலவையாக அங்கு காணப்பட்டனர். மாடுகளின் கொம்புகளும் பணக்கார விவசாயிகளின் நீளமான தொப்பிகளும் குடியானவப் பெண்களின் தலை அலங்காரங்களும் துலாம்பரமாகத் தெரிந்தன. கிறீச்சிடும் குரல்களும், நல்ல திடமான கிராமத்தானின் நெஞ்சுக்கூட்டிலிருந்து வரும் பலத்த சிரிப்பும், கட்டப்பட்ட மாடுகளின் கத்தலுமாக அங்கு பேரிரைச்சல் நிலவியது.
குதிரை லாயம், மாட்டுக் கொட்டகை, வைக்கோல் போர், வியர்வை, சாணம், என்று மனிதனோடும் அவனுடன் வாழும் மிருகங்களோடும் ஒன்றிய, அந்த எளிய கிராம மண்ணுக்கே உரிய நெடி கலந்தடித்து வீசியது.
அப்போது அங்கு மேட்டர் (maitre) ஹாஷ்கோம் என்பவர் வந்து சேர்ந்தார். மெதுவாகச் சதுக்கத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தவர் சாலையில் ஒரு சின்ன கயிறு கிடப்பதைப் பார்த்தார்.
ஒரு உண்மையான நார்மன் வாசியைப்போல சிக்கனக்காரரான அவர் பயன்பாடுள்ள எதுவுமே வீணாவதை விரும்பாமல் குனிந்து அந்தக் கயிற்றைக் கையிலெடுத்தார். வாதத்தினால் வளைந்த அவரது கால்களுக்கு அவ்வளவு குனிவதே மிகச் சிரமமாக இருந்தது. கையில் வைத்து அதைத் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருந்த போது சற்று தொலைவில் மேட்டர் மாலண்டெயின் (அவரும் கடிவாளம் செய்பவர் தான்) அவ்ரையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தார். சில நாட்களுக்கு முன்பு தான் இருவருக்கும் தொழில் ரீதியாக வாய்த்தகராறு ஏற்பட்டு பேச்சுவார்த்தை அற்றுப் போயிருந்தது.
தான் கீழே கிடக்கும் கயிறொன்றை எடுத்ததைத் தனது எதிரி பார்த்துவிட்டதால் வெட்கமடைந்த ஹாஷ்கோம் அவசரமாக அதைத் தனது சட்டைக்குள் மறைத்தார்; பின்பு காற்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார். பிறகும் கீழே தவறவிட்ட எதையோ தேடுவது போன்ற பாவனையுடன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். கால்கள் வாதத்தினால் மடங்கி வலித்தன.
சற்று நேரத்துக்கெல்லாம் இறைச்சலும் முடிவில்லா பேரங்களும் நிறைந்து பரபரப்பாக இருந்த சந்தைக்கூட்டத்தினுள் சென்று கலந்து விட்டார். பொருட்கள் வாங்க வந்த குடியானவர்களின் முகங்கள் கவலையுடனே காணப்பட்டன. திடமான முடிவெடுக்க முடியாமல், வியாபாரி ஏமாற்றிவிடுவானோ என்ற சந்தேகத்துடனே குற்றம் கண்டுபிடிக்கும் மனோ நிலையுடனே வளைய வந்தனர்.
பெண்கள் தங்கள் பெரிய கூடைகளை இறக்கி வைத்துவிட்டு அதன் முன் அப்படியே அமர்ந்து கொண்டனர். கால்கள் கட்டப்பட்டு மருண்ட பார்வையுடன் துடிதுடித்த்க் கொண்டிருந்த கோழிகளையும் வாத்துக்களையும் வெளியே எடுத்து வியாபாரம் செய்யலாயினர்.
பேரங்களைக் கேட்டுச் சலனமடையாத முகத்துடன் திடமாக விலை கூறினர், பின்பு திரும்பிச்செல்லும் வாடிக்கையாளரை ஒருவித திடீர் மனமாற்றத்துடன், “சரி தான், மேட்டர் ஆதரின்! அந்த விலைக்குக் கொடுக்கிறேன்.“ என்ற ரீதியில் கூவி அழைத்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சதுக்கம் வெறிச்சோடியது.
ஜார்டெயினின் உணவகத்தில் அந்தப் பெரிய கூடம் முழுதும் நிறைந்து மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அதன் விசாலமான முற்றத்தில் எல்லா விதமான வாகனங்களும் நின்றிருந்தன. கட்டை வண்டிகள், ட்ரக்குகள், மாட்டு வண்டிகள், அழுக்கடைந்து மஞ்சளாக, பழுதுபார்க்கப்பட்டு, ஒட்டுப் போடப்பட்டு. கைப்பிடிகள் வானை நோக்கி உயர்ந்த நிலையில் அவையும் ஓய்வெடுக்கும் நிலையில் இருந்தன.
சாப்பிடுபவர்களுக்கு எதிராகப் பெரிய குமுட்டி எரிந்து அறையை இதமாகச் சூடுபடுத்திக் கொண்டிருந்தது. அந்தக் குமுட்டியில் கோழிக் குஞ்சுகளும் புறாக்களும் ஆட்டுக்கால்களும் வாட்டப்பட்டுக் கொண்டிருந்தன. இதனால் நாவூறும் மணம் அறையெங்கும் பரவி அனைவரையும் களிப்படையச் செய்தது.
மேட்டர் ஜார்டெயினின் உணவகம் பெரும் பணக்காரர்களும் கூடி சாப்பிடும் இடமாக இருந்தது. சாப்பாட்டுத் தட்டுக்களும் ஸைடர் பானக் கோப்பைகளும் மீண்டும் மீண்டும் நிறைந்து காலியாகிக் கொண்டிருந்தன. அனைவரும் தாங்கள் அன்று வாங்கியவை விற்றவை பற்றியெல்லாம் விஸ்தாரமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
பருவம் கோதுமைப்பயிருக்கு அல்ல, பச்சைக் காய்கறிகளுக்கே சாதகமாக இருக்கிறது போன்ற நுணுக்கங்களும் அலசப்பட்டன.
திடீரென்று அக்கூடத்து வாயிலில் தண்டோரா போடப்பட்டது. உடனே பலரும் ஆர்வத்துடன் எழுந்து வாயிலுக்கு ஓடினர்.
தண்டோரா போட்டவன் தனது நடுங்கும் குரலில் தொடர்பில்லாத வாசகங்களுடன் கத்தினான். “இதனால் காடர்வில் வாழ் மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், அத்துடன் இன்று சந்தையில் கூடிய அனைவருக்கும்; பென்ஸ்வில் போகும் சாலையில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணிக்குள் ஒரு கறுப்பு லெதர் பணப்பை, ஐந்நூறு ஃப்ராங்க்குளும் சில காகிதங்களும் கொண்டது, காணாமல் போயிருக்கிறது. அதைக் கண்டு எடுத்தவர் சற்றும் தாமதிக்காமல் மேயர் அலுவலகத்திலோ, அல்லது பொருளைப் பறிகொடுத்த, மேன்வில்லைச் சேர்ந்த மேட்டர் ஃபார்ச்சூன் ஹால்புக்கொர்க்கி, அவர்களிடமோ ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இருபது ஃப்ராங்க்குகள் சன்மானம்.”
அந்த ஆள் போய்விட்டான். இன்னும் சற்று தூரத்தில் அதே தண்டோராவும் செய்தியும் மீண்டும் கேட்டன.
எல்லோரும் இதைப்பற்றிப் பேசத் தொடங்கினர். தொலைத்தவனுக்குப் பொருள் மீண்டும் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி அலசி ஆராய்ந்தனர்.
உணவு வேளை முடிந்து அனைவரும் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காவல்துறை அலுவலர் வந்து விசாரித்தார். “மேட்டர் ஹாஷ்கோம் இங்கே இருக்காரா?”
உள்ளே அமர்ந்திருந்த ஹாஷ்கோம் குரல் கொடுத்தார், “நான் இங்கே தான் இருக்கேன்.”
“மேட்டர் ஹாஷ்கோம், தயவு செஞ்சு என் கூட மேயர் அலுவலகத்துக்கு வர முடியுமா? மேயர் உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னார்.”
ஹாஷ்கோம் என்ற அந்த எளியக் குடியானவன் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தார். கையிலிருந்த பிராந்தியின் கடைசி மிடற்றை விழுங்கியபடி, முன்னெப்போதையும் விட தளர்ச்சியுடன் எழுந்து வந்தார். “வர்றேன், வர்றேன்”
மேயர் அவருக்காகக் காத்திருந்தார். அந்தப் பகுதியின் மிக முக்கியமான புள்ளி அவர். தடித்த உடலும், செருக்கும் கொண்ட அவர் டம்பமான மொழிக்கும் சொந்தக்காரர்.
“மேட்டர் ஹாஷ்கோம், இன்று காலையில் பென்ஸ்வில் செல்லும் சாலையில் நீங்கள் நின்றிருந்த போது கீழே இருந்து ஹால்புக்கொர்க்கின் பணப்பையைக் கண்டெடுத்ததாகச் சொல்லப்படுகிறீர்”
அந்தக் கிராமத்தான் வெலவெலத்துப் போனார். மேயரை நோக்கி வெறித்தபடி, “நானா? நானா? பணப்பையை எடுத்தேனா?”
“ஆமாம், நீங்க தான்.”
“என் தலை மேல சத்தியமா நான் எடுக்கலை. எனக்கு அதைப்பத்தி ஒண்ணுமே தெரியாது.”
“ஆனா நீங்க எடுத்ததைப் பாத்ததாச் சொல்றாங்களே.”
“யாரு? யாரு சொல்றாங்க?”
“மெஸ்ஸியர் மாலண்டெய்ன், கடிவாளம் செய்பவர்”
இவருக்கு இப்போது நினைவு வந்தது. கோபத்தில் முகமும் சிவந்தது.
“அட, இந்த லூஸு இதைத் தான் பார்த்தான். இதோ இந்தக் கயிறை நான் எடுத்தப்போ பாத்தான்”
பாக்கெட்டுக்குள் கைவிட்டு அந்தக் கயிற்றைத் தேடி எடுத்துக் காண்பித்தார்.
மேயர் நம்பமுடியாமல் தலையை அசைத்தார்.
“மேட்டர் ஹஷ்கோம், மெஸ்ஸியர் மேலண்டெய்ன் மாதிரி ஒரு கண்ணியமான ஆள் ஒரு கயிற்றைப் போய் பணப்பைன்னு தப்பா சொல்லுவார்னு நீங்க என்னை நம்ப வைக்க முடியாது”
ஹாஷ்கோமுக்குக் கோபம் தலைக்கேறியது. பக்கவாட்டில் திரும்பிக் காறித்துப்பிய அவர், “கடவுள் மேல் ஆணையாச் சொல்றேன். இது தான் உண்மை மேயர் ஸார். என் உயிரையே பணயம் வெச்சுச் சொல்றேன்.”
மேயர் தொடர்ந்தார். “அதை எடுத்தப்புறம் ரொம்ப நேரம் கீழே குனிஞ்சு பாத்துட்டு இருந்தீங்களாமே, ஏதாவது பண நோட்டு தவறி சிதறிடுச்சான்னு”
அந்த நல்ல மனிதனுக்கு ஆத்திரத்திலும் நடுக்கத்திலும் மூச்சடைத்தது.
“எப்படி இப்படி, எப்படி இந்த மாதிரி பொய்கள் சொல்ல முடியும், ஒரு நல்ல மனுஷனோட பெயரைக் களங்கப்படுத்த...யாரு இந்த மாதிரி செய்வாங்க”
அவர் என்ன சொல்லியும் பயனில்லை. யாரும் அவரை நம்பவில்லை. மாலண்டெய்னை அவரை நேரடியாக விசாரிக்க வைத்தனர். அப்போது இருவரும் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கடுஞ்சொற்கள் பேசிச் சண்டையிட்டனர். ஹாஷ்கோமே கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரைச் சோதனை போட்டனர். ஒன்றும் கிடைக்கவில்லை.
இறுதியாக மிகவும் குழப்பமடைந்த மேயர், அரசு தரப்பு வக்கீலைக் கலந்தாலோசித்த பின் மேற்படி விசாரணைக்கு அழைப்பதாக கூறி அவரை விடுவித்தார்.
சங்கதி ஊரெங்கும் பரவியது. மேயர் அலுவலகத்தை விட்டு வெளியேறியதுமே அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு ஆவலுடன் கேள்விகள் கேட்டுத் துளைத்தனர். ஆனால் அவர்களுக்குக் கோபமோ வெறுப்போ இல்லை. வம்பு கேட்கும் ஆவல் மட்டுமே. அவர் கயிறு கண்டெடுத்த கதையைச் சொன்னார். அவர்கள் யாரும் நம்பவில்லை. அவரைப் பார்த்துச் சிரித்தனர். அவர் தொடர்ந்து தனது நண்பர்களைக் கண்டு அதே கதையைச் சொன்னார். பார்த்தவர்களிடமெல்லாம் தன்னிலை விளக்கங்களையும் தனது நியாயங்களையும் சலிக்காமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு போனார். பாக்கெட்டுகளைத் திறந்து காண்பித்தார். “போடா லூஸுப் பயலே” என்றனர்.
யாருமே தன்னை நம்பாததால் கோபமும் விரக்தியுமடைந்த அவர் என்ன செய்வதென்றறியாமல் பிதற்றிக் கொண்டே இருந்தார்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலரை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றார். தான் கயிற்றைக் கண்டெடுத்த இடத்தைக் காண்பித்தார். திரும்பி வரும் வழியெல்லாம் தனக்கு நேர்ந்த அநியாயத்தைப் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டு வந்தார்.
மாலையில் மறுபடியும் கிராமத்துக்குள் எல்லோரிடமும் சென்று தன் மீது ஏற்பட்ட வீண்பழியைத் துடைக்க முயன்றர். எங்கு சென்றாலும் அவநம்பிக்கையே சந்தித்தார். இதனால் இரவு தூங்க முடியாமல் அவதிப்பட்டார்.
அடுத்தநாள் மதியம் ஒருமணிக்கு மிராசுதார் ஒருவனின் வேலையாள், மேரியஸ் பாமெல் என்பவன் பணப்பையைக் கண்டெடுத்து மேட்டர் ஹால்புக்கொர்க்கிடம் ஒப்படைத்து விட்டான்.
இச்செய்தியும் காட்டுத் தீ போல் பரவி ஊர்மக்கள் அனைவரையும் எட்டியது. மேட்டர் ஹாஷ்கோமிடம் முறையாகவே தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே மிகுந்த களிப்புடன் தனது சகாக்களிடம் சென்று தனது சோகக் கதையின் சந்தோஷ முடிவைப் பற்றிப் பேசலானார். வெற்றிக் களிப்பு அவர் முகத்தில் கூத்தாடியது.
“தண்டனைக்குக் கூட நான் பயப்படலை. பொய் சொல்லி வீண்பழி சுமத்திட்டாங்களேன்னு தான் ரொம்ப கஷ்டமா போச்சு. ஒரு பெரிய பொய் மூட்டையின் அடியில் அமுங்குன மாதிரி இருந்தது.”
நாளெல்லாம் தனது கதையை வருவோர் போவோரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டம் கூடும் இடமெல்லாம். ஞாயிறன்று மாதாகோயிலில், மதுக்கடையில் குடிக்க வருபவர்களிடம், என்று முகந்தெரியாதவர்களிடம் கூடச் சொல்லி மகிழ்ந்தார். அவர் மனம் இப்போது உளைச்சலற்று இருந்தது. ஆனாலும் என்னவோ ஒரு இனம்புரியா கலவரம் உள்ளே நிகழ்வது போலிருந்தது. அவர் முதுகுக்குப் பின் மக்கள் பேசுவது போல் தோன்றியது.
செவ்வாயன்று ஹாஷ்கோம் காடர்வில் சந்தைக்குச் சென்றார், முக்கியமாக தன்னைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறியத் தான்.
தனது கடையின் முன் நின்றிருந்த மாலண்டெய்ன் அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.
ஒன்றும் புரியாமல் அருகே சென்று கொண்டிருந்த குடியானவர் ஒருவரிடம் பேச்சுக் கொடுக்க முயன்றார், அவ்ரோ இவரைக் கண்டவுடன் வயிற்றில் செல்லமாகக் குத்தி விட்டு, “அடேய்! பெரிய போக்கிரி அய்யா நீர்” என்று பெரிதாகச் சிரித்தார்.
மேட்டர் ஹாஷ்கோம் பெரிதும் குழம்பினார். ஏன் தன்னைப் பார்த்து அவர் அப்படிச் சொன்னார்? வழக்கம் போல் ஜார்டெயின் உணவகத்துக்குச் சாப்பிடப் போன போது தனது கதையை மீண்டும் தொடங்கினார்.
மோன்விலியர் கிராமத்திலிருந்து வந்த குதிரைக்காரன் கத்திச் சொன்னான், “ஆமாம் ஆமாம், போதும்! உன் கயிறு கதை எங்க எல்லாருக்கும் தெரியும்”
ஹாஷ்கோம் திக்கித் திணறினார், “ஆனான் அந்தப் பணப்பை தான் கிடைச்சிடுச்சில்ல?”
அதற்கு அவன் சொன்னான், “நிறுத்துமய்யா, தொலஞ்சது ஒரு விதம், கிடைச்சது ஒரு விதம். எப்படியும் உன் கை அதில் இருக்குங்கறது நிச்சயம்.”
ஹாஷ்கோம் விக்கித்து நின்றார். அவருக்கு எல்லாம் புரிந்தது. பிடிபட்டபின் தானே அந்தப் பணப்பையை யார் மூலமாகவோ கொடுத்தனுப்பி விட்டதாக இவர்கள் எண்ணுகிறார்கள் என்று. எதிர்த்துப் பேச முயன்றார். அனைவரும் சிரிக்கத் தொட்ங்கினர். கூச்சலும் கேலியும் பொறுக்க முடியாமல் சாப்பிடாமலேயே வெளியேறினார்.
கோபமும் அவமானமும் கொப்புளிக்க, தனது புத்தி சாதுர்யத்தால் நினைத்துப் பார்க்க முடியாத கயமையின் பழிக்கு ஆளாகிவிட்டதை நினைத்து மறுகினார். அதையும் கூடப் பெருமையாகவே அவர் மீது சாத்தும் கொடிய வேடிக்கையை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கொஞ்சமும் உண்மையில்லாத அபாண்டமான அந்தப் பழியின் வலி அவரது நெஞ்சைத் துளைத்தது.
மீண்டும் தனது கதையைப் பேச ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் அதை மேலும் வளர்த்தபடி, அதிகமான உணர்ச்சிவேகத்தையும் கடுஞ்சொற்களையும் சேர்த்துக் கொண்டு பேசலானார். தனியாக இருக்கும் போது கூட பல விதமான தன்னிலை விளக்கங்களையும் என்ன சொல்லி உலகை நம்ப வைப்பது என்றுமே சிந்தித்த வண்ணம் இருந்தார். அவரது வாழ்வின் பயனே அந்தக் கயிறும் அதைச் சுற்றிய கதையும் தான் என்றானது.
”அதெல்லாம் சும்மாச் சப்பைக்கட்டு,” என்றனர் அவரது முதுகுக்குப் பின். அவர் இதை உணர்ந்தார். தனது இதயத்தையே இதற்காக நொறுக்கிக் கொண்டார். அவர்கள் கண் முன்னாலேயே மொத்தமாக உயிரும் உடலும் பழுதடைந்து கொண்டு வந்தார்.
பொழுது போகாதவர்கள் சிலர் அவரைக் கயிறு கதை சொல்லும் படி அழைப்பது வாடிக்கை ஆயிற்று. போர்முனையிலிருந்து திரும்பி வந்த முதிய சிப்பாய்களை அழைத்துக் கதை கேட்பது போல. அவர் மனம் வெதும்பினார்.
டிசம்பர் மாத இறுதியில் படுத்த படுக்கையானார்.
ஜனவரி மாதம் தொடங்கிச் சிறிது நாட்களில் மரணமடைந்தார்.
சாவுக்குப் போராடிய நிலையில் நினைவு தப்பியபோதும் அவரது குற்றமற்ற நெஞ்சம் பிதற்றிக் கொண்டே இருந்தது...”ஒரு சின்ன கயிறு, ஒரு சின்ன கயிறு தான்.. இதோ பாருங்கள் மேயர்.....”
பின் குறிப்பு: மாப்பஸான் என்ற ஃப்ரெஞ்சு எழுத்தாளரின் கதையின் தமிழாக்கம் இது.
அவரது இன்னொரு கதை இங்கே.
Tuesday, July 7, 2009
இருளும் ஒளியும்
”அபி, நான் என்ன சொல்ல வரேன்னா?”
“வேண்டாம் தொல்காப்பியன்! நீங்க எதுவும்... ”
“மூனு ரூபா மிச்சமாச்சு. ஐஸ்கிரீம் சாப்டேன்! எதை வேண்டுமானாலும்...”
"The defence allocation saw Finance Minister Pranab Mukherjee increasing the pension for retired service personnel..."
"தீதி தேரா தேவர் திவானா...”
“போன காலருக்காக ஒரு அழகான பாட்டு பாத்தாச்சு இப்போ அடுத்த....”
ப்ளிஷ்! திடீரென்று நிசப்தமும் கும்மிருட்டும் சூழ்கிறது.
”அய்யோ!”
”ப்ச்! இந்த வாரத்துல இதோட எத்தனை தடவை?”
”எப்போ வருமோ..எல்லா இடத்திலயும் போயிருக்கா பாருங்க”
அரைமணி நேரம் ஆனது.
கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வீடுகளிலும் கேட்டுகள் திறக்கப் படுகின்றன. கைகளில் விசிறிகளுடன் புழுக்கத்தைப் போக்க முயன்ற படி...
“என்ன ஸார், ஃபோன் பண்ணீங்களா எம்.இ.எஸ்ஸுக்கு?”
“எங்கே ஸார், எங்கேஜ்டா இருக்கு. எடுத்து வெச்சிட்டான் போல.”
”கேபில் ஃபால்ட்டாம் ஸார். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆவுமாம். இப்போத்தான் பண்ணிக் கேட்டேன்.”
ஆண்கள் ஒரு குழுவாய்ச் சேர்ந்து அரசியல், சினிமா, ஈ.பி காரர்களின் மெத்தனம் என்று பல துறைகளில் அரட்டையை ஆரம்பித்தார்கள்.
வீடு கட்டுவதற்காக ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணற் குவியல் மீது அமர்ந்து கூட்டத்தைத் துவக்கினர் பெண்கள். மேற்கூரிய டாபிக்குகள் தவிர குழந்தைகளின் படிப்பு, வீட்டினரின் உடல்நிலை ஆகியவையும் விசாரிக்கப்பட்டது இங்கே!
திடீரென்று கூண்டு திறக்கப்பட்ட பறவைகள் போல் உற்சாகம் தொற்றிக் கொள்ளத் தெருவில் இறங்கிய அந்தப் பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு இரவாவது பகலாவது?
விட்ட இடத்திலிருந்து தொடங்குவது போல் மும்முரமாக விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.
மண் குவியல் மேலேறி சறுக்க ஆரம்பித்தன சில வானரங்கள்.
பாண்டிக்கட்டம் வரைந்து நொண்டியடிப்பதில் ஈடுபட்டனர் இரு சிறுமிகள்.
குறுஞ்சிரிப்புடன் தாயின் இடுப்பிலிருந்து திமிறி இறங்கி அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தவழ்ந்து வந்தது சின்னக் குழந்தை ஒன்று.
“அம்மா, பாப்பாவைப் பாரும்மா, எங்க விளையாட்டைக் கெடுக்குது. தூக்கிட்டுப் போம்மா”
“அடி கழுதை. இந்த நேரத்துல என்னடி விளையாட்டு. பாப்பாவைப் பாத்துக்க” என்று அப்போது தான் மகளைக் கவனித்த மாதிரி கட்டளையிட்டு விட்டுத் திரும்ப பேச்சில் மூழ்கினார் அந்தத் தாய்.
அதற்குள் இந்தப் பக்கம் ‘தொம்’ மென்று ஒரு அம்மாவின் மேலே வந்து குதித்தார் அவரது செல்ல வானரம்.
“பிசாசே! இந்தப் பாழாப்போன கரண்ட் போனாலும் போச்சு. நமக்கு இருக்கற எரிச்சல்ல இதுங்க தொல்லை வேற..” சலித்துக் கொண்டார்.
நிலாவொளியில் அந்தத் தெருவே ஏதோ விழாக் கோலம் பூண்டது போலிருந்தது. பேச்சுச் சத்தமும், சிரிப்புச்சத்தமும், குழந்தைகளின் கூத்துக்களும்...
டிஷ்!
அணைக்கப்படாத சில டி.விக்களின் திடீர் அலறல்கள். வீடுகளில் விளக்குகள் பளிச் பளிச் சென்று எரியத் தொடங்கின.
“ஹப்பாடா” என்ற நிம்மதிப் பெரு மூச்சுக்களும் சிரிப்புக்களும். அவரவர் வீடுகளுக்குச் செல்வதற்காக எழுந்தனர்.
தொடர்ந்து சிறுவர்களும் மனமே இல்லாமல் வீட்டை நோக்கி ஓடினர்.
“வீல்” என்ற சத்தத்துடன் பேரழுகை. ஆட்கள் புடை சூழ, ஆனந்தமாகத் தெருவில் தத்தி நடை பழகிக் கொண்டிருந்த அந்தச் குழந்தைக்கு திடீரென்று இப்படி வீட்டுக்குள் திரும்ப இஷ்டமில்லை. கத்திக் கூப்பாடு போட்டது.
செல்லம் கொஞ்சி அதை ஆற்றுப்படுத்தி உள்ளே தூக்கிச் சென்ற அம்மா கதவைச் சாத்தினார்.
தெருவில் இப்போது மீண்டும் கும்மிருட்டு. நிசப்தம்.
நிலா மட்டும் தனியாக.
Thursday, June 18, 2009
’புறக்’கணிப்பு
”ஏய் கமலா இங்கே வா!”
”இன்னா ஐயிரே?”
கடுகடுவென்ற முகத்துடன், கோபத்துடன் நின்று கொண்டிருந்தார் சிவராமன்.
அதற்கெல்லாம் அசருபவளா பால்காரி கமலா. தனது டிரேட் மார்க் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி ஒய்யாரமாய் பால் வண்டியைத் தள்ளியவாறு வந்தாள்.
”அய்ய இன்னான்னு சீக்கிரம் சொல்லு. மத்த தெருவுக்கெல்லாம் போணுமில்ல..”
முஷ்டியை மடக்கி அவள் முகத்தின் முன் நீட்டி நீட்டி கர்ஜிக்கிறார் சிவராமன்.
”இரும்புக்கம்பிய எடுத்துண்டு போனது யாரு? என் ரப்பர் செருப்பைத் தூக்கிண்டு போனது யாரு? எலிப்பொறியை இழுத்துண்டு போன...”
அலட்சியமாக அவரை இடைமறித்து,
“அய்யே நிர்த்து ஐயிரே. லூஸா நீ? இன்னாமோ அடுக்கிக்கினே போற? எனுக்கின்னா தெரியும்?”
“ஏய் கமலா.. எனக்கு நல்லாத் தெரியும். காலையில பால் போட வரச்சே ஒவ்வொருத்தர் வீட்டுலயும் ஏதாவது அபேஸ் பண்றதே வேலயா போய்டுத்து உனக்கு. உன் வண்டியக் காமி. செக் பண்ணனும்”
அவ்வளவு தான். குய்யோ முறையோ என்று பெருங்குரலெடுத்து, கதவிடுக்கில் அகப்பட்ட பெருச்சாளி மாதிரி கத்த ஆரம்பிக்கிறாள் கமலா.
தெருவில் வாக்கிங் போகிறவர்கள் ஏளனமாக அவரையும் கமலாவையும் பார்க்கிறார்கள். சிவராமனுக்கு முகம் சிவந்து அவமானமாகிப் போகிறது.
”சரி சரி, வாய மூடு. இது தான் உனக்கு கடைசி வார்னிங். இனிமே எதையாச்சும் திருடினே, காலனி செக்ரட்டரி கிட்டே கம்ப்ளெயிண்ட் பண்ணி உன்னை இந்த ஏரியா பக்கமே வர விட மாட்டேன்.” சொல்ல் விட்டு குடு குடுவென ஃப்ளாட்டுக்குள் ஓடுகிறார்.
கமலா ஆரம்பித்த ஒப்பாரியைப் பாதியிலேயே முடிக்க மனமின்றி வழியெல்லாம் புலம்பிக் கொண்டே போகிறாள்.
கமலா! அந்தத் தெருவில் முப்பது வருடங்களாகப் பால் பாக்கெட் விநியோகம் செய்பவள். கறுப்பான ஒல்லியான சிறிய உருவம். பொக்கை வாய்க்குப் பொருந்தாத கறுத்த தலைக் கேசம். குறு குறுவென்று அலையும் கண்கள், கீச்சுக் குரலில் வெடுக் வெடுக்கென்ற பேச்சு. அநாயாசச் சுறு சுறுப்பு.
அடை மழை, புயல் எதற்கும் அசர மாட்டாள். ப்ளாஸ்டிக் பை எதையாவது தலையில் போர்த்திக் கொண்டு பால் போட வந்து விடுவாள்.
அவளுக்கு இரு மகன்கள். கணவன் சீக்காளி, வீட்டோடு இருக்கிறான்.இப்படிக் கஷ்டப்பட்டுத் தன் மகன்களை நன்கு படிக்க வைத்தாள். அவர்களும் டி.எம்.இ முடித்து நல்ல வேலைக்குச் சென்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். தாயின் மீது பாசத்துடனும். ஆனாலும் கமலாவுக்குப் பால் போடுவதை நிறுத்தவும் மனமில்லை. ஹாபியான இந்த அபேஸ் குணமும் விடவில்லை!
ஆம், சிவராமன் ஒன்றும் அபாண்டமாகச் சொல்லவில்லை. அவள் வண்டியை அனாமத்தாக விட்டிருக்கும் போது அதற்குள் எட்டிப் பார்த்தவர்கள் அசந்து போவார்கள். ஓட்டைக் குடை, பிய்ந்து போன செருப்பு, துணி ஹாங்கர், சாக்கடை குத்தும் இரும்புக் கம்பி, குப்பை முறம் என்று பொதுவாக வீட்டுக்கு வெளியே போட்டு வைத்திருக்கும் உபயோகமுள்ள, அற்ற பல பொருள்களின் கண்காட்சியே பார்க்கலாம்.
இதெல்லாம் தெரிந்தும் யாரும் அந்தத் தெருவில் இது வரை பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. அவள் பால் போட வரும் விடியலில் பெரும்பாலும் யாரும் விழித்திருக்க மாட்டார்கள். இன்று சிவராமன் அவளைப் பிடிப்பதற்காகவே விழித்துக் காத்திருந்தார் போலும்.
அவர் எப்போதுமே அப்படித்தான். எல்லோரிடமும் இயல்பாகப் பழகுவார். ஆனால் கொஞ்சம் வம்பு பிடித்தவர். அந்தக் காலனியில் முதலில் குடிவந்தவர். ஒரே மகள், இரண்டு மகன்கள். எல்லோரும் திருமணமாகி வெளிநாட்டில். மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்துகிறார்.வந்த புதிதில் அந்த ஏரியா பிரௌசிங் செண்டர் ஓனர் சங்கரை முடியைப் பிய்த்துக் கொள்ளும் அளவு படுத்தி எடுத்தார்.
அப்போது அவர் வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தது. இண்டெர்னெட் வசதி இல்லை. தினமும் அங்கு சென்று விடுவார். ஒன்று மகன்களுக்கோ மகளுக்கோ மெயில் அனுப்ப, இல்லை சி.டியில் பேரக் குழந்தைகள் ஃபோட்டோ ஏதாவது காப்பி செய்ய.
”கொடுங்க ஸார், காப்பி பண்ணித் தரேன்” என்று கேட்டால் ஒப்புக்கொள்ள மாட்டார். தானே செய்ய வேண்டும், ஆனால் அவன் உதவி செய்ய வேண்டும். வயதானவர்களுகே உரிய நடுக்கமும் நிதானமுமாக ஐந்து நிமிடங்களில் முடிக்கக் கூடிய வேலைக்கு அரைமணியாக்குவார். அவன் எரிச்சலடைய, இவர் கோபமடைய, ஒரு கட்டத்தில் இவர் வருவதைப் பார்த்தாலே ஒளிந்துகொள்ள ஆரம்பித்தான் அவன்.
**********”
ஐயிரே, இன்னா, பிள்ளைங்க எல்லாம் ஊருக்குப் போயிட்டாங்களா?”
”ம்? ” எங்கோ வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவர் கமலாவின் குரல் கேட்டுத் திரும்பினார்.
“ப்ச், ஆமாம், பேசாம நானும்...” வார்த்தைகள் வெளிப்படுமுன் கண்களிலிருந்து நிறுத்தமுடியாமல் நீர் தளும்பியது. சே இவள் முன் அழுவதா என்ற சிறு சுய கண்டிப்புடன் அதை அடக்க முயன்று தோற்றார்.
பால் வண்டியை ரோட்டில் விட்டு விட்டு வந்த கமலா, ”இன்னா ஸார் இது, பச்சக் குழந்தை மாதிரி அழுதுக்கினு.. அம்மா புண்ணியவதி, சும்ங்கலியாப் போய்ச் சேந்துக்கிறா. நீ இப்படி அழுது உடம்பைக் கெடுத்துக்காதே. ஆமாம் தனியாவா கீறே? சமையலுக்கு ஆள் யார்னா வோணுமா சொல்லு..."
அவர் பிள்ளைகள் ஏன் அவரை உடன் அழைத்துச் செல்லவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால் ஏனோ அதைப் பற்றி அவள் கேட்க விரும்பவில்லை.
“அதெல்லாம் வேண்டாம் கமலா. நாளைக்கு வீட்டைக் காலி பண்ணப் போறேன். அடையாறில் ஒரு ஹோம்ல எனக்கு இடம் பாத்திருக்கான் புள்ள. அங்க போயிடுவேன். இந்த வீட்டை வாடகைக்கு விடப் போறானாம்.”
“ஓமுன்னா...?” புரியாமல் இழுத்தாள்.
ஒரு வெற்றுச் சிரிப்புடன், “முதியோர் இல்லம். அது, பெரியவன் கூப்பிடத்தான் செஞ்சான். நான் அங்க போய் அவங்களுக்குத் தொந்தரவா எப்படி? மருமகளும் வேலைக்குப் போறா. இங்கயாவது, தெரிஞ்ச ஊரு. ஆனா இவ்ளோ பெரிய வீடு என் ஒருத்தனுக்கு எதுக்கு.. அதான்..” என்று பிள்ளைகளை விட்டுக் கொடுக்காமல் ஆரம்பித்தவர், ”நீ ரொம்பக் குடுத்து வெச்சவ கமலா. ”
கமலாவின் கண்களில் நீர் சுரந்தது. மௌனமாக அவரைப் பார்த்தாள்.
”அடக் கவலைய வுடு ஐயிரே. அதெல்லாம் அங்க போனீன்னா நல்லாத் தான் இருக்கும். உனக்கென்னா, நீ தான் எங்க போனாலும் வாய் பேசியே எல்லாரோடவும் ராசியாயிடுவியே” என்று இன்னும் என்னென்னவோ பேசி அவரைக் கொஞ்சம் தேற்றினாள் கமலா.
**********
வந்த ஒரு மாதத்தில் இல்ல வாழ்க்கைக்கு ஓரளவு பழகி விட்டிருந்தார் சிவராமன். அழகான பெரிய தோட்டத்துடன் அமைந்திருந்த அந்த முதியோர் இல்லம் வசதியாகவே இருந்தது. அவருக்கு ஒத்த சிந்தனையில் சில நண்பர்கள், லைப்ரரி, டி.வி, மாலையில் பஜன்ஸ், நல்ல சாப்பாடு, வாக்கிங், இண்டெர்நெட் என்று சௌகரியத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனாலும் பழைய வாழ்க்கையின் சுவடே இல்லாமல் திடீரென்று வேரோடு எங்கோ பிடுங்கி வைத்தது மாதிரி ஒரு உணர்வு. முக்கியமாகப் பேரப்பிள்ளைகளோடு விளையாடத் தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்ற கழிவிரக்கத்தைத் தவிர்க்கவே முடியவில்லை.
”மிஸ்டர் சிவராமன், உங்களுக்கு விசிட்டர்ஸ் வந்திருக்காங்க.”
யாராக இருக்கும், இன்னும் ஒரு தடவை கூட எட்டிக் பார்க்காத உள்ளூர் உறவுக்காரர்களில் ஒவ்வொருவராக நினைத்துக் கொண்டே ரிசப்ஷனை அடைந்தவருக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை.
”நல்லாருக்கீங்களா?” வழக்கமான தனது தோரணையைத் துறந்து அந்தப் புதிய சூழலில் அவரைச் சந்திக்கும் நிலைமையால் லேசான சங்கோஜச் சிரிப்புடன் நின்றிருந்தாள் கமலா. அருகில் அவள் மகன் குமார்.
”வணக்கம் சார், ரொம்ப நாளா உங்களைப் பார்க்க வரணும்னு நினைச்சிட்டிருந்தோம். இன்னிக்குத் தான் வர முடிஞ்சுது. எப்படி இருக்கீங்க சார்?” என்று புன்னகையுடன் தான் கொண்டு வந்திருந்த பழப்பையை நீட்டினான்.
தொண்டையில் ஏதோ அடைக்க, புதிதாகப் பிறந்த ஓர் உணர்வுடன், அவனை வாரி அணைத்துக் கொண்டார் சிவராமன்.
Saturday, May 30, 2009
கண்ணாடிக் காலங்கள்!
மகளிர் கல்லூரி விடுதி. மாலை ஆறு மணி.
கடைசி மாதாந்திரத் தேர்வு முடிந்திருந்த வெள்ளிக்கிழமை.
அனைத்து அறைகளும் பெண்களின் அரட்டைக் கச்சேரியில் அமளிப்பட்டுக் கொண்டிருந்தன. முதல் நாளிரவு கண்விழித்துப் படித்திருந்த ஒரு சில ”படிப்ஸ்” மட்டும் அத்தனை அமளியிலும் போர்வையை இழுத்துப் போர்த்தித் தூங்க முற்பட்டுக் கொண்டிருந்தனர்.
ஜோதியின் அறையில் வழக்கமான ஜமா சேர்ந்திருந்தது.
ஜோதி - மூன்றாம் ஆண்டு இஞ்சினியரிங் மாணவி. படிப்பு, பாட்டு, அரட்டை, இனிய சுபாவம் என்று கல்லூரியில் ஓரளவு, இல்லை நிறையவே பிரபலமானவள்.
”ஹேய்! ரோலிங் லோட்ஸ் ப்ராப்ளம் அட்டெண்ட் பண்ணிங்களாப்பா? எனக்கு ஆன்ஸர் 12 கிலோ நியூட்டன் வருது..” மூக்குக் கண்ணாடியை ஏற்றி விட்டுக்கொண்டபடி வந்தமர்ந்தாள் லதா.
“அய்யோ! இந்தப் பூச்சி தொல்லை தாங்கலப்பா! யூனிட் டெஸ்டுக்கே ஏண்டி இந்த பில்டப்பு? மேன்ஸ்... சாப்பிட ஏதாச்சும் இருக்கா? பசிக்குது."
”ஒண்னுமில்ல. கொஞ்ச நேரம் இரு, மெஸ்ஸுக்குப் போயிடலாம்”
"அய்யோ இன்னிக்கு வெள்ளிக்கிழமையா.. சப்பாத்தி மெஸ்ஸில.. உவ்வே!”
”ம்ம்கும் இப்டி தான் சொல்லுவ, ஆனா ஃபுல் கட்டு கட்டுவே. நீ வந்தாலே மெஸ்ல எல்லாரும் தெறிச்சு ஓடுறாங்க. உனக்கு சாப்பாடு போட்டு மாள.....” சொல்லி முடிக்கவில்லை. ஜெயந்தி விட்ட எத்தில் கீழே விழுந்தும் இடுப்பைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள் ரம்யா.
ஜோதிக்கு எதிலும் மனம் லயிக்கவில்லை. அந்தக் கண்கள்....அந்தப்பார்வை.
இவர்கள் எல்லாரும் அவரவர் ரூமுக்கு ஒழிந்தால் என்ன என்று ஒரு நிமிடம் தோன்றியது.
”லதாக்குட்டி.. நீ எப்படியும் ராஜகோபால் சாரோட செல்லம். உனக்கு ஃபுல் மார்க்ஸ் தான் இண்டெர்னல்ல.. கடுப்பேத்தாம உக்காருடா, ஒரு கை குறையுது பார்” சொல்லிக் கொண்டே சீட்டுக்கட்டைக் கலைத்தாள் ஜெயந்தி.
“ஹேய் ஜோதி! என்னடி ட்ரீம் அங்க? சீட்டை எடும்மா கையில... ”
“அவ இன்னும் ஷாந்தனு விட்ட லுக்கையே நெனச்சிட்டு இருக்கா போல” சொல்லி விட்டு சேர்ந்தாற்போல் ஏதோ கிசு கிசுத்து விட்டுச் சிரித்தனர் கூடப் பிறக்காத இரட்டையர் அருணாவும் ஸ்மிதாவும்.
கோபத்துடன் அவர்களை அடிக்கக் கையை ஓங்கினாலும் உள்ளுக்குள் ஜில்லென்றிருந்தது ஜோதிக்கு.
“என்னடி? ஏதோ ராங் ரூட்ல போற மாதிரி இருக்கு?” ஜோதியின் அறைத்தோழியும் ஹாஸ்டலின் சுயம்பு மாமியார் பொற்ப்பேற்றுக் கொண்டவளுமான மேனகா தொண்டையைச் செருமினாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல மேன்ஸ். இதுங்களுக்கு வேற வேலை இல்ல. ஸ்டீல் ஸ்ட்ரக்ட்சர்ஸ் நோட்ஸ் கேட்டான். கொடுத்துட்டு வந்தேன்”
“இன்னிக்குத் தான் டெஸ்டே முடிஞ்சுது, அதுக்குள்ள அவனுக்கு எதுக்கு நோட்ஸ்? ம்ஹும், எனக்கென்னவோ அவனுக்கு ஸ்டீல் ஸ்ட்ரக்ட்சர்ஸ்ல இண்ட்ரெஸ்ட் இருக்கற மாதிரி தெரியல ஜோதி.” தொடர்ந்து குபீரென்ற சிரிப்பு.
”ஆமாமாம், அவன் ரூம்மேட் கார்த்திக் கூட சொல்லிட்டு இருந்தான். உன் பேரக் கேட்டாலே உருகறானாமே பையன்! ஆனா சும்மா சொல்லக் கூடாது ஆளு செம ஸ்மார்ட்டா தான் இருக்கான்.” இது ரம்யா.
ஜோதிக்கு மறுபடியும் ஜிலீர்! “சீ! ஃபில்த்தி மைண்ட்ரி உனக்கு. அவன் பாவம் ரொம்ப இன்னசெண்ட். தமிழே தெரியாது அவனுக்கு. என் ஒருத்திக்குத் தான் எங்க க்ளாஸ்ல ஹிந்தி தெரியும். அதான்.”
“ஹேய்! சரியாப் போச்சு... கேர்ள்ஸ்! எல்லாரும் கேட்டுக்குங்க.. இங்க ஒரு விக்கெட் கூடிய சீக்கிரம் அவுட் ஆகப் போகுது. மேடம் என்னமா சப்போர்ட் பண்றா பாருங்க. மனசப் பாத்துக்கடீ!” என்று ரம்யா இழுக்க கிண்டலும் சிரிப்புகளும் ஆளாளுக்குத் தொடர்ந்தன.
அன்று மெஸ்ஸுக்குப் போகும் போதும், ஓளியும் ஒலியும் பார்க்கும் போதும், யார் கையிலோ பார்த்த ரமணிசந்திரன் நாவலை இரவல் வாங்கி ரூமுக்குத் திரும்பி வந்த போதும் அதே நினைவு தான். அந்தப் பார்வை, தோழிகளின் சீண்டல். நினைக்க நினைக்க இனித்தது. உலகப்பேரழகி போன்றதொரு கர்வம் வந்தது.
சில நாட்களுக்கு முன் யாரிடமோ கேட்டுக் கற்றுக் கொண்டு “நீ ரும்ப அழ்கா இர்க்கே” என்று அவன் கொஞ்சு தமிழில் சொன்னது நினைவுக்கு வந்தது. ரமணிசந்திரன் நாவலின் நாயகன் அவனாக நாயகி அவளாக, மனமெல்லாம் புல்லரித்தது.
திங்கட்கிழமை காலை. வழக்கமாக எட்டரை மணி வரை தூங்குபவள் ஏழரை மணிக்கெல்லாம் எழுந்து (ஸாரி அவளால் அதற்கு முன் என்றுமே முடியாது!) குளித்து, ’வாவ் ரோஸ் ஏஞ்சல் மாதிரி இருக்கேடி’ என்று தோழிகள் முன்பு பாராட்டிய ரோஸ் சுடிதார் அணிந்து, பூக்காரியிடம் பூ வேறு வாங்கி (மூன்று முழங்கள் வாங்கி இரண்டு முழங்களை ரூம்மேட்ஸுக்கு வெட்டி வைத்த பின்) வைத்துக் கொண்டாள்.
கண்ணாடியில் பல முறை பார்த்துக் கொண்ட பின், “என்னடி ரெடியா, போலாமா” என்றவளை அறைத் தோழிகள் வித்தியாசமாய்ப் பார்த்தனர்.
”ஜோதி!” குரல் கேட்டுத் திரும்பியவள், மேனகாவும் லதாவும் சீரியஸாக நின்றிருப்பதைப் பார்த்தாள். நெஞ்சில் ஒரு சின்ன திடுக். அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று யூகித்திருந்தாள். இரண்டு வருடங்களாக ஒரே அறையில் இருந்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்தவர்களாயிற்றே.
“என்ன மேன்ஸ் ”
“சொல்றேனேன்னு தப்பா நெனச்சிக்காதே. அவளும் இவளும் ஏத்தி விடறாங்கன்னு கண்டபடி மனசை அலைய விடாதேடி. அந்த ஷாந்தனு நடந்துக்கறது சரி இல்ல. இது அடானமஸ் காலேஜ். நல்ல பேரோட படிச்சு முடிக்கணும்.”
“சீ..சீ.. நான் போய் அப்படி எல்லாம் விழுவேனா. சும்மா ஜாலிக்குத் தானே ஓட்டிட்டு இருந்தாங்க. அவன் சும்மா ஃப்ரெண்டு, அவ்ளோ தான். ”
உதட்டைப் பிதுக்கிய மேனகா அதற்கு மேல் பேசவில்லை. கதவைப் பூட்டிக் கொண்டு வகுப்புக்குக் கிளம்பினார்கள்.
மூவரும் வெவ்வேறு டிபார்ட்மெண்ட். தன் வகுப்பில் நுழைந்ததுமே அவர்களை மறந்து போனாள். எங்கே அவன், ஓரக்கண்ணால் பாய்ஸ் பக்கத்தை மேய்ந்தாள். கடைசி பெஞ்சில் சாய்ந்து அமர்ந்து இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நெஞ்சு படபடக்கத் திரும்பிக் கொண்டாள். உச்சி முதல் உள்ளங்கால் முழுதும் பரவிய இரத்தம் இப்போது அவள் கன்னத்தைச் சிவக்கச் செய்து சுடிதார் கலருக்கு மாற்றிக் கொண்டிருந்தது. அதற்குள் லெக்சரர் வரவே தற்காலிகமாக மனதை மூடினாள்.
பிரேக்கில் லேடிஸ் ரூம் சென்று வர அழைத்த தோழிகளை மறுத்து விட்டு இடத்திலேயே அமர்ந்திருந்தாள். பையன்கள் கூட்டமும் குறைந்தவுடன் அவன் மெதுவாக வந்து அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தான்.
“ஹாய்.. ஜோதி.. ”
”ஹாய்..."
“இன்னிக்கு என்ன உன் பிறந்த நாளா?” ஆங்கிலத்தில் கேட்டான்.
”இல்லையே ஏன்?” அவளும் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னாள்.
“வெல்.. யு லுக் சிம்ப்லி ராவிஷிங்” (நீ சும்மா அசத்தலா இருக்க!)
”சும்மா இரு ஷாந்தனு, நீ இப்டி எல்லாம் பேறது எனக்குப் பிடிக்கல” - இது தான் அவள் சொல்லவேண்டும் என்று நினைத்தது. ஆனால் வந்ததென்னவோ... கொஞ்சலாக ஒரு “ஷட்டப்” தான்.
“நோ ரியலி. லிஸன். நான் உன் கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும். லஞ்ச் பிரேக்கில் போஸ்ட் ஆஃபிஸ்க்கு வர முடியுமா?”
நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள, “அபௌட் வாட்? எதா இருந்தாலும் இங்கயே பேசு”
“நோ ஜோதி.. ப்ளீஸ்! ஜஸ்ட் டென் மினிட்ஸ்...” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்கவும் அதற்கு மேல் அவளால் மேலோட்டமாகக் கூட மறுக்க முடியவில்லை.
‘அக்காக்குப் பிறந்த நாள். மறந்துட்டேன். ஃபோன் பண்ணி விட்டு வருகிறேன்’ என்று சாக்கு சொல்லித் தோழிகளை அனுப்பிவிட்டு வருவதற்குள் அவன் பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
”ஸாரி... லேட்டாயிடுச்சு“ என்று சிரித்தாள்.
”இட்ஸ் ஆல்ரைட். நீ வரவே மாட்டியோன்னு நெனச்சேன்” என்று பதிலுக்குச் சிரித்தான். அவன் முகத்தில் ஒரு தனிப் பரவசம். தான் தனியே பேச அழைத்து அவள் வந்து விட்டதில் அதிகபட்ச குதூகலம் தெரிந்தது அவன் முகத்தில்.
அவளுக்கு அது நேரம் வரை இருந்த பரவசம் எல்லாம் காணாமல் போயிருந்தது. கல்லூரி தபால் அலுவலக்த்தை ஒட்டிய வெராந்தாவில் மரநிழலில் நின்றிருந்தனர். வெளிப் பார்வைக்குச் சற்றே ஒதுங்கித் தான் இருந்தது என்றாலும் குறுக்கும் நெடுக்கும் போகும் பேராசிரியர்களின் சந்தேகப் பார்வையும் மாணவர்களின் கிறீச்சொலியும் அவளுக்குப் பெரிய தர்மசங்கடமாக இருந்தது.
திக்கித் திக்கித் தன் காதலை அவன் படு சீரியஸாகச் சொல்லச் சொல்ல இவளுக்கு நாவுலர்ந்து போயிற்று. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவனது குறும்புப் பார்வைக்கும் பேச்சுக்களுக்கும் பின் இத்தனை ஆழ்ந்த உணர்வுகள் இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனைச் சந்திக்கவே வந்திருக்கக் கூடாதோ என்று தோன்றியது.
”நான் எத்தனையோ ஊர்களில் தங்கி இருக்கிறேன். உன்னைப் போல் ஒரு பெண்ணை நான் இது வரை பார்த்ததேயில்லை”
கரகரப்பான குரலில் அவனது கெஞ்சல் மொழி காதுகளைச் சூடேற்றிக் கொண்டிருந்தன.
ஆனால் அதையும் மீறி ஒரு காட்சியில் மனம் பதிந்தது. தூரத்தில் மரத்தடியில் அனிதா. சுரேஷுக்காக அவள் வழக்கமாகக் காத்திருக்கும் இடம் அது தான். சற்று நேரத்தில் சுரேஷ் அவளைக் கடந்து மூன்றாவது கேட் வழியாக வெளியில் செல்வான். சற்றுப் பொறுத்து அவளும் செல்வாள். பக்கத்து காஃபி ஷாப்பில் பேசிவிட்டு லஞ்ச் முடியும் சமயம் அரக்கப் பரக்க வகுப்புக்கு ஓடி வருவார்கள். விடுமுறை நாட்களில் சினிமா, ஆழியாறு என்று எங்காவது சுற்றப் போய் விடுவார்கள். விடுதியில் பெரும்பாலும் தனியாகவே தான் இருப்பாள். எப்போதாவது அவளுடன் ஒட்டிக்கொள்ளும் குட்டிப்பிசாசு சசிப்ரியாவைத் தவிர்த்து.
டி.வி. ரூம் கலாட்டாக்கள், சீட்டுக்கச்சேரிகள், பிறந்தநாள் பார்ட்டி, டிப்பார்ட்மெண்ட் கல்ச்சுரல்கள், க்ளாஸ் டூர், கும்பலாகச் சேர்ந்து போகும் சினிமாக்கள் எதிலும் அவளைப் பார்ப்பது அரிது. பெரும்பாலும் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் சுரேஷைச் சந்திக்கச் சென்று விடுவாள். ஏனோ அவளைப் பார்த்துப் பாவமாகத் தான் இருக்கும். கல்லூரி வாழ்வின் இயல்பான அத்தனை சந்தோஷங்களையும் தவற விடுகிறாளே.
தன்னால் அது முடியுமா? ஆர்க்கெஸ்ட்ரா ஒத்திகைகள், கல்லூரிப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், தனது தோழிகள், அவர்களுடன் மணிக்கணக்காய் அரட்டை, வார இறுதியில் டே ஸ்காலர்ஸ் வீடுகளுக்குச் செல்வது இவற்றை எல்லாம் தியாகம் செய்ய முடியுமா இவனது காதலுக்காக?
சுரேஷ் கடந்து சென்றான். அவன் தலை மறைந்ததும் அனிதா யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் நோக்கிவிட்டு, அந்த மொட்டை வெயிலில் தன்னந்தனியே கல்லூரி கேட்டைத் நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
சட்டென்று எல்லாம் தெளிந்ததைப் போல் உணர்ந்தாள் ஜோதி.
தன் மனதில் இருந்தது வெறும் மயக்கம், தன் அழகையும் சுபாவத்தையும் ஒருவன் ஆராதிக்கிறான் என்ற பூரிப்பு தவிர வேறில்லை என்று புரிந்தது.
தீர்க்கமான குரலில், “ஷாந்தனு. நீ இப்படி எல்லாம் பேசுவேன்னு நான் எதிர்பார்க்கல. வேண்டாம். லெட்ஸ் பீ ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். ஊரு விட்டு ஊரு படிக்க வந்திருக்கோம். அதுவும் ப்ரொஃபஷனல் கோர்ஸ். அந்த வேலையை மட்டும் பார்ப்போம்.” சிரிப்புடன் சொல்லிவிட்டு, ”உனக்கு கோபம் இருக்கலாம். ஆனா நல்லா யோசிச்சுப் பாரு. நீ ஒண்ணும் முட்டாள் இல்ல. க்ளாஸ் டாப்பர் லிஸ்ட்ல இருக்கறவன். இப்பக் கஷ்டமா இருந்தாலும் நாளைக்கு நீயே எனக்கு நன்றி சொல்லுவே. பை ஷாந்தனு. இனிமே தனியா சந்திக்கக் கூப்பிடாதே.”
அவன் முகத்தைத் திரும்பிப் பார்க்காமலே விடுவிடுவென்று விடுதி நோக்கி நடந்தாள்.
அன்று மாலை நடந்ததையெல்லாம் மேனகாவிடமும் லதாவிடமும் மட்டும் பகிர்ந்து கொண்டாள்.
”ஹூம், பரவால்லியே. பொறுப்போட தான் நடந்துட்டிருக்க.. ஆனா நான் சொன்னதுக்காகவா? உண்மையில் உனக்கு அவன் மேல ...” குற்ற உணர்ச்சியுடன் ஆரம்பித்த மேனகாவை இடைமறித்தாள் ஜோதி.
“இல்ல மேனகா, அவன் பேசற வரைக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை. ஆனா சீரியஸா காதல் பண்ற அளவுக்கெல்லாம் அவனைப் பத்தி... இல்ல, இல்ல, என்னைப் பத்தியே எனக்கு இன்னும் சரியாத் தெரியாது.” சொல்லிவிட்டுச் சிரித்தாள் ஜோதி.
”ஹேய் ஜோதி, ஷாந்தனு ப்ரபோஸ் பண்ணானாமே.. வேண்டான்னு சொல்லிட்டியாமே... பாவண்டி.” ஜெயந்தி கவலை தோய்ந்த குரலுடன் வந்தாள்.
”ப்ச்.. ஸோ ஸேட். பாய்ஸ் ஹாஸ்டல் முழுக்க இப்போ இதான் பேச்சாம். ரொம்ப அப்செட்டா இருக்கானாம்; செந்தில் சொன்னான். ஏண்டி உனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும்னு நெனச்சோமே” பின்னாடியே ரம்யா.
“பிடிக்காதுன்னு யாரு சொன்னா? அதுக்காக...? பை த வே.. ரொம்ப கவலைப்படாதீங்க. உங்கள மாதிரி ஏத்தி விடற ஃப்ரெண்ட்ஸ் இல்லாம இருந்தாலே போதும், அவன் சீக்கிரம் நார்மலாயிடுவான். ஒரு ரம்மி போடலாமா?” சொல்லிவிட்டு மேனகாவைப் பார்த்துக் கண்ணடிக்க, குறும்புச் சிரிப்புடன் அதை ரசித்தாள் மேனகா.
பி.கு. அன்பானவர்களே, என் முதல் சிறுகதை முயற்சி! பார்த்து, ரொம்ப வலிக்காம திட்டிட்டுப் போங்க! நன்றி.