வாஞ்சையோடு மடியில் இருத்தி, வாத்சல்யம் ததும்பும் குரலில் கதை சொல்லும் பாட்டி தாத்தாக்களை நினைவு படுத்தும் நடை கு. அழகிரிசாமியினுடையது.
இவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று என்னிடம் இருக்கிறது. எத்தனை முறை படித்திருப்பேன் என்று கணக்கே கிடையாது. இன்று அதைக் கையிலெடுத்த போது அதைப் பற்றிப் பகிரலாமே என்று தோன்றியது.
மிக இயல்பான எளிமையான நடை. கதை மாந்தர்களும், கதைக்களமும் கூட எதார்த்தத்தை ஒட்டியே இருக்கும். ஆனால் நெஞ்சைத் தொடும் நுட்பமான விஷயங்களும் எழுதுவார். நகைச்சுவை மிளிரும் வண்ணம் நையாண்டியாகவும் எழுதுவார்.
”சிதம்பர நினைவுகள்” இல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சொன்னது நினைவுக்கு வருகிறது - “மனிதனின் யோக்யதையை நிர்ணயிப்பது கண்டிப்பாக அவனுடைய படிப்போ பாண்டித்யமோ அல்ல. பணம், அதிகாரம், பெண் ஆகிய தொன்மங்களின் மீது அவன் எடுக்கும் நிலைப்பாடு மட்டுமே”
இதில் இன்னொன்றும் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். அது, குழந்தைகள். (சொந்தக் குழந்தைகள் அல்ல.) மற்றவர் குழந்தைகளிடம், அவர்கள் பெற்றோரோ வேறு யாருமோ அருகில் இல்லாத போது நாம் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பது நமது மனப்பண்பைப் பெரிதும் கணிக்கும் ஒரு விஷயம்.
அழகிரிசாமி, அந்த வகையில் மிகச்சிறந்த பண்பாளர் என்பது அன்பளிப்பு என்ற கதையின் மூலம் புலனாகிறது.
எல்லாக் குழந்தைகளிடம் அதீதப் பிரியமாகவே இருக்கும் இவர் தன் மீதுள்ள அளவற்ற அன்பினால் தொல்லை செய்யும் ஒரு சிறுவனைப் பற்றிச் சொல்கிறார்.
“என்னுடைய முயற்சி இல்லாமல், என்னால் மட்டுமே ஓர் உயிர் சந்தோஷமும் திருப்தியும் கொள்ள முடிகிறது என்றால், அதை எந்தச் சமயத்திலும் தடுக்கக் கூடாது; தடுக்க முயலுவது அமானுஷிகத் தனம்...”
ராஜா வந்திருக்கிறார் என்பது அற்புதமான கதை. குழந்தைகள் உலகத்தை அதனுள்ளேயே போய் விவரிப்பது எல்லாருக்கும் கைவராத ஒன்று. குழந்தைகள் விளையாடும் “தற்பெருமை” விளையாட்டையும் அவர்களின் சிந்தனைகளையும் இயல்பாகப் படம் பிடித்திருக்கிறார். மேலும் மூன்று குழந்தைகளுடன் வறுமையில் வாழும் தாய் ஒருத்தியின் உள்ளம் எவ்வளவு செம்மையுடன் இருக்கிறது என்பதையும் மிக அழகாகக் காட்டி இருக்கிறார்.
ஏமாற்றம், ஞாபகார்த்தம் இரண்டும் இளமை ததும்பும் அழகிய காதல் கதைகள்.
இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இவ்விரண்டு கதைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை. இவ்விரண்டிலும் தான் தாம் எப்பேர்ப்பட்ட நகைச்சுவையாளர் என்பதை வெளிப்படுத்துகிறார்.
இரண்டு பெண்கள் கதையில் திருமணமாகாத ஒரு சராசரி இளைஞனின் மன ஓட்டங்களையும் நடவடிக்கைகளையும் சித்தரித்திருப்பது காலத்துக்கும் பொருந்தும்!
”மதுரையிலிருந்து திடீரென்று சென்னைக்கு என்னை மாற்றி விட்டார்கள். மனித வாழ்க்கைக்கு மதுரையென்றாலும் ஒன்று தான் சென்னையென்றாலும் ஒன்று தான். மதுரையிலும் வீட்டு வாடகை அதிகம்; சென்னையிலும் வீட்டு வாடகை அதிகம். மதுரையிலும் பொறாமைக்காரர்கள் உண்டு; சென்னையிலும் பொறாமைக்காரர்கள் உண்டு. மதுரையிலும் அயல் வீட்டுப் பெண்களோடு பிரமச்சாரிகள் பேசக்கூடாது; சென்னையிலும் அயல் வீட்டுப் பெண்களோடு பிரமச்சாரிகள் பேசக்கூடாது.”
இரண்டு ஆண்கள் கதையில் ’அல்காப் பேர்வழியாகிய’ தன் மாமாவைப் பற்றி நாயகன் சொல்கிறான்.
”...ஒரு நாள் அவர் மிகுந்த கோபாவேசத்துடன் அடிக்கக் கூடாத ஒரு சாமானை எடுத்து என் மாமாவின் முகத்தில் அடித்து விட்டார். அதனால் வலி ஏற்படாவிட்டாலும் நிச்சயம் அவமானம் ஏற்படும். ஆனால், என் மாமாவுக்கோ இரண்டும் ஏற்படவில்லை. பெரியவர் பார்த்தார். அதற்கு மறுநாளே சாப்பாடு போட முடியாதென்று பிடரியைப் பிடித்துத் தள்ளி விட்டார். உடனே மாமா தம் தங்கை வீட்டுக்கு, அதாவது எங்கள் வீட்டுக்கு வந்ர்க்ய் சேர்ந்தார். என் தாயார் ஒரு பைத்தியம்; தகப்பனாரோ ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய பைத்தியம். அதனால் “ஐயோ பாவம்” என்று மாமா மீது இரக்கம் காட்டி...”
சிரிக்க மட்டுமல்லாது சிந்திக்கவும் வைக்கும், மறக்க முடியாத வார்த்தையாடல்கள் இவரது தனிச்சிறப்பு என்றே கருதுகிறேன்.
நான் படித்ததிலே இவரது “காற்று” என்ற ஒரு சிறுகதை தான் சோகத் தன்மை வாய்ந்தது. நகர வாழ்க்கையில் ஒண்டுக்குடித்தனத்தில் வசிக்கும் சிறுமியொருத்திக்குச் சில்லென்று வீசும் காற்று கூட கிடைக்கப் பெறாத அரிய விஷயமாகிப் போவதை மனம் பதைக்கும் சோகத்துடன் சொல்லி இருப்பார். இந்த அவலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது என்பது எவ்வளவு வேதனை?
என்னிடம் இருப்பது 1952 இல் வெளிவந்த பழைய பதிப்பு. (பதிப்பகத்தின் பெயர் சக்தி காரியாலயம் என்று போட்டிருக்கிறது!)
தற்போது வானதி பதிப்பகம், சாகித்ய அகாதெமி ஆகியவை இவரது எழுத்துக்களையும் உயிர்மை இவரது கடிதங்களையும் வெளியிட்டுள்ளதாக அறிகிறேன்.