எல்லாரையும் நேற்று அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ஆசிரியையை மாணவன் குத்திக் கொலை செய்தது.
பிரம்பு கொண்டடித்த ஆசிரியரைக் கோபத்தில் பிரம்பைப்பிடுங்கித் திருப்பியடித்து ஓடிய குறும்புக்கார மாணவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கரும்பலகையில் கேலிச்சித்திரம் வரைந்து செய்து தங்கள் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டதை அறிந்திருக்கிறோம். அவ்வளவு ஏன், என் தோழி தன்னைத் திட்டிய, அல்லது குறைத்து மதிப்பெண் இட்ட ஆசிரியையை நாயே பேயே என்று நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பின் பக்கங்களைக் கிழித்தெறிந்து விடுவாள்.
ஆனால், இது என்ன? திட்டமிட்டுக் கத்தியை ஒளித்தெடுத்து வந்து, கெஞ்சக் கெஞ்சக் குத்திக் கொல்வது என்பது, அதுவும் 14 வயதேயான சிறுவன் செய்திருப்பது மிகுந்த அச்சமூட்டுகிறது.
நடந்தது மிகப்பெரிய அசம்பாவிதம். கொலையுண்ட ஆசிரியைக்கும் அவர்தம் குடும்பத்துக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கண்டிக்கப் போய் உயிரையே விட்ட அந்த ஆசிரியரின் நிலை பரிதாபமானது.
என் மாணவப்பருவத்தைச் சற்றே பின்னோக்கிப் பார்த்தால்...
பத்தாவது படிக்கும் போது எங்கள் வகுப்பில் கடைசியாக வரும் மாணவனுக்கு எங்கள் ஆசிரியை (அவருக்கு அறுபது வயதிருக்கும்) தனியாக அழைத்து பாடம் சொல்லிக் கொடுப்பார். எங்களையெல்லாம் படிக்கச் சொல்லிவிட்டு அவனை அமர்த்தி வைத்து மண்டையில் கொட்டிக் கொண்டிருப்பார். பிரம்பால் அடித்துத் துவைப்பார். எங்களுக்கே பாவமாக இருக்கும்.
ஆனால் தேர்வுக்கு முன் நடந்த பிரிவுபசார விருந்தில் அவன் எழுந்து பேசினான். "நான் இதுவரை ரொம்ப மோசமாகத் தான் படித்தேன். ஆனால் பொதுத்தேர்வில் நான் நிச்சயம் நல்ல மதிப்பெண் வாங்கித் தேர்ச்சியடைவேன். அதற்கு முழுக்காரணம்....மிஸ் தான்" என்றதும் அவர் அவனைக் கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டது இன்னும் என் நினைவிலிருக்கிறது.
அவ்வளவு அடியையும் மீறி எங்கோ அவர்களிடையே ஆசிரியர் மாணவர் நல்லுறவு இருந்திருக்கிறது. ஆசிரியையின் உண்மையான அக்கறையும் அதை மாணவன் புரிந்து கொண்டதற்குமான இடம் இருந்திருக்கிறது.
இதற்கு மாறான இன்னொரு நிகழ்ச்சி...எனக்கு ஒரே ஒரு ஆசிரியை மீது தான் அதிக அளவில் கோபம் வந்திருக்கிறது. மிகவும் கண்டிப்பு வாய்ந்த, - வகுப்பில் எல்லோருக்கும் பிடித்த ஆங்கில ஆசிரியை அவர். எனக்கும் ஆரம்பத்தில் அவரைப் பிடித்துத் தானிருந்தது; அவர் என் தோழியுடன் என்னை ஒப்பிட்டுப் பேசும் வரை. முதல் மதிப்பெண் வாங்கும் அவளையும் என்னையும் தேவையில்லாமல் ஒப்பிட்டு என்னை மட்டம் தட்டுவார். அதாவது நான் தலைக்கனத்தால் மதிப்பெண்களைத் தவற விடுவதாகவும், தலைக்கனமில்லாததால் என் தோழி எப்போதும் முதலாவதாக வருவதாகவும். (எனக்குத் தலைக்கனம் என்று சொன்ன ஒரே ஆசிரியையும் அவ்ர் தான்) அதுவாவது போகட்டும்,
நான் எடுத்து வைத்திருந்த குறிப்புகளைப் பார்த்து கட்டுரைப் போட்டியில் எழுதிய என் தோழிக்க்கு முதல் பரிசினையும், எனக்குத் திருடி என்றப் பட்டப்பெயரினையும் விசாரிக்காமல் அளித்த போது நொறுங்கிப் போனேன்.
நாட்கணக்கில் அவரைப் பழிதீர்ப்பது பற்றிச் சிந்தித்திருக்கிறேன். (யாருக்கும் தெரியாமல் எப்படி அவரது டூவீலரைப் பஞ்சர் செய்வது என்று). அவ்வளவு திறமை போதாததால் என் கனவு நிறைவேறாமலே போயிற்று. ஏதோ நல்ல நேரம் அவர் விரைவில் பள்ளியை விட்டுச் சென்று விட்டார்.
நான் சொல்ல வருவதென்னவென்றால் பதின்ம வயதில் இந்த ஒப்பீடு என்பதும் பக்கசார்புடன் நடத்துவது என்பதும் எந்த அளவு மன உளைச்சலைத் தரும் என்பதை லேசில் ஒதுக்கி விட முடியாது. இதை உமா மகேஸ்வரியின் கொடுமையான மரணம் நமக்கு உணர்த்தும் எத்தனையோ பாடங்களில் இதுவும் ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது.
நாளைய தலைமுறை மலர்ந்து செழிக்க வேண்டிய பள்ளி வகுப்பறைகள் கொலைக்கூடங்களாகாமல் தடுக்க வேண்டியது குறித்து அனைவருமே சிந்திக்க வேண்டும்.