Sunday, August 30, 2009

வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

அந்தக் காணொளியை மீண்டும் காணும் சக்தி எனக்கில்லை.
அதை இங்கே பதிவிட இதயம் பதறுகிறது.
மனிதர்கள் இனமும் டினோசர் இனம் போல் அழிந்து விடும் நாள் வராதா என்றே எண்ணத் தோன்றுகிறது மனித உடல் கொண்ட இந்தப் பிசாசுகளின் செயலைக் கண்டால்.
ஈழத்தைப் பற்றி எதையும் எழுதும் தகுதியும் துணிச்சலும் எனக்கில்லை என்றே கருதுகிறேன்.
ஆனால் கதிர் அவர்களின் பதிவில் இருந்த வேண்டுகோளின் நியாயம் மனதைச் சுடுகிறது. அதனால்....

Saturday, August 29, 2009

சென்னை to கோவை to சென்னை

சென்னையைப் பற்றி அவரவர் பார்வையில் மிக அழகான சித்திரங்களாகத் தீட்டியுள்ளார்கள் சந்தனமுல்லை, மாது அங்கிள், அய்யனார், மற்றும் பைத்தியக்காரன் அவர்கள்.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இந்த ஊரைப் பற்றிச் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் இவ்வளவு இருக்கிறதா என்று அதிசயிக்கத் தான் தோன்றியது.

ஏனென்றால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். பேச்சு வழக்கு, உணவு முறை, பெருமை மிக்க கோயில்கள், இடங்கள் என்று. சென்னையைப் பொறுத்தவரை மெரினா பீச், எல்.ஐ.சி என்று எண்ணற்ற monuments இருந்தாலும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்கள் ஊர்ப்பெருமை கொண்டாடுவது போல் இங்குள்ளவர்களுக்குக் கொண்டாட ஏதுமில்லை.

சிலேட்டில் அழித்து அழித்துச் சித்திரங்களைப் புதிது புதிதாகத் தீட்டுவது போல அசுர வேகத்தில் மாறியும் வளர்ந்தும் (வீங்கியும்) வரும் நகரத்தில் அங்கங்கே பொந்துகளில் வாழும் மனிதர்களுக்குச் (அவர்களும் புதிது புதிதாக முளைத்த் வண்ணம் இருக்கிறார்கள்) சொந்தம் கொண்டாடப் பெரிதாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் இங்குள்ளவர்களைப் பற்றிப் பிற ஊர்களில் என்ன அடையாளம் விழுந்திருக்கிறது, என்பதைப் புரிந்து கொள்ள எனது கோவை கல்லூரி வாழ்க்கை உதவியது.

விடுதி வாழ்க்கையில் தான் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் உண்டு. அந்த் ஊரில் வாழ்பவர்கள் எல்லாம் ஒரே மாதிரி தமிழ் பேசுவார்கள், உணவு முறை, வைக்கும் பெயர்கள்
ஏன், சில சம்யம் முக ஜாடை கூட ஒரே மாதிரி இருக்கும் என்றெல்லாம் புரிந்தது.

சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இப்படி எதுவும் கிடையாது. மாது அங்கிள் சொன்னது போல அடையாறு அண்ணா நகர் பகுதியிலிருந்து வந்தவர்களுக்கும் சைதாப்பேட்டை, திருமழிசை பகுதியிலிருந்து வந்தவர்களுக்கும் பொதுவாகப் பேசிக்கொள்ள எதுவுமே இருக்காது.

அவர்கள் கூட ”எங்க அம்மா ஊர் தஞ்சாவூர், தாத்தா உங்க ஊர் தான் – திருநெல்வேலி” என்று தங்கள வேர்களைத் தேடிச் சொந்தம் கொண்டாடத் துடிப்பவர்களாகத் தான் இருப்பார்கள்.

ரொம்பவும் மேட்டுக்குடி ஆட்களுக்குச் சென்னை அவர்கள் தரத்துக்குக் கீழே தான் தோன்றும்; எப்படா யு.எஸ் போவோம் என்று யு.எஸ் விசாவுக்காகத் தான் அவர்கள் பிறவியே எடுத்திருப்பார்கள். அதனால் அவர்கள் பேச்சும் அது பற்றித் தான் இருக்கும்.

எனக்குச் சொல்லிக் கொள்ளும் படியாக அப்படி எதுவும் இல்லை. உறவினர் வீடு என்று எந்த ஊரிலும் வீட்டிலும் தங்கிய அனுபவமும் இல்லை. (அனைவரும் இந்த அவசர ஊரிலேயே இருப்பதால் பழகும் வாய்ப்புகளே அற்றுப் போய் விட்டன கல்யாண வீடுகளில் குசலம் விசாரிக்கும் பலரை ரோட்டில் பார்த்தால் அடையாளம் கூடத் தெரியாது :o))
அக்ரஹாரங்களும், பேட்டைகளும் இரண்டுமே நல்ல பரிச்சயமாகியும் இருந்தது. அதனால் எந்த அடையாளமும் இல்லாமலே அல்லது எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்தே என்னால் இருக்க நேர்ந்தது. (கிட்டத்தட்ட ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஹென்றி போல – கொஞ்சம் ஓவர் இல்ல?!)

அனைவருடனும் பேதங்களில்லாமல் நட்பு பாராட்டுவதற்கு இந்த lack of social identity வசதியாகவே இருந்தது. வயது வளர வளர நம்மை அறியாமல் இது வெகுவாகக் குறைவது வேதனையான உண்மை தான்.

ஆனால் பொதுவாகச் சென்னை வாசிகள் என்றால் திமிர் பிடித்தவர்கள், அலட்சியமானவர்கள், மரியாதை தெரியாதவர்கள் என்ற பிம்பம் மற்ற ஊர்க்காரர்களுக்கு ஓரளவு இருந்தது.

ஒரு சம்பவம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பிராக்டிகல் வகுப்பில் lab assistant எனக்கு ஒரு செயல்முறையை விளக்கிக் காண்பித்தார். நான் பேச்சு வாக்கில் “அப்படியா ஸார்” என்றதும் பரிவுடன் பேசிக் கொண்டிருந்த அவர் முகபாவம் சட்டென்று மாறியது. கோபமாக, “எந்த ஊரு?” என்றார். ஒன்றும் புரியாமல் “மெட்ராஸ்” என்றேன். ”அதான்...மரியாதை தெரியல” என்று இளக்காரமாகக் கூறிவிட்டு அகன்று விட்டார்.

எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது. நான் என்ன தவறு செய்தேன் என்றே புரியவில்லை. பிறகு மற்றவர்கள் பேசுவதிலிருந்து தான் புரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் “ங்க” போட்டுப் பேசுவது கொங்குத் தமிழின் தனிப் பண்பு, சிறப்பு என்பதையும் அது இல்லாவிட்டால் அந்த ஊரில் மிகப் பெரிய மரியாதைக் குறைவு எனபதையும். “அப்படிங்களா” என்று பேசப் பழகிக் கொண்டேன்!

கூட்டம் நெரியும் பஸ்ஸில், படு எரிச்சலில் இருக்கும் கண்டக்டர் கூட “முன்னால போங்கம்மிணி” என்று தான் எரிந்து விழுவார். அதனால் “த சாவுகிராக்கி, ஏறு மேல” என்பதைக் கூடச் சிரிப்புடன் செல்லமாக எடுத்துக் கொள்ள முடிந்த இந்தச் சென்னைவாசிக்கு அது ராஜ மரியாதையாக இருந்தது.

வெடுக் வெடுக் கென்று மனதில் பட்டதைப் பேசக் கூடியவர்கள் கோவை வாசிகள். லேசில் சிரிக்கவும் மாட்டார்கள் இலகுவாகப் பழகவும் மாட்டார்கள். ஆனால் பழகி அன்பு பாராட்டத் தொடங்கிவிட்டால் அதில் எதிர்பார்ப்பும் இருக்காது; கொஞ்சமும் பொய்யும் இருக்காது. இதற்கு உதாரணம் என் தோழி கவிதா தேவி. முதல் வருடம் எனக்கு lab mate; பின்பு நல்ல தோழி.

பல்லடத்துக்கு அருகில் வடுகபாளையம் அவளது சொந்த ஊர்.
நெடிய ஒடிசலான தோற்றமும் கூர்மையான பார்வையும், நீண்ட பின்னலும், சீரியஸான அவளது முகமும் என்னை வெகுவாகத் தள்ளி நிறுத்தியது. சென்னைக்குரிய பெரிய நாகரிகங்கள் எதுவும் இல்லையென்றாலும், என் போனி டெயிலோ சென்னைத் தமிழோ ஆங்கிலமோ, ஏதோ ஒன்று அவளுக்கும் இலகுவாக இருந்திருக்காது. ஆனாலும் ஏதோ ஒரு புள்ளியில் மிகவும் நட்பானோம். எங்கள் வேறுபாடுகளே வெகுவாக ஒருவரை ஒருவர் ஈர்த்தது. அன்பு கொள்ளச் செய்தது. மெட்ராஸ் புள்ளைங்க்ன்னாலே என்னுமோ நினச்சிருந்தேன். நீ அப்படி இல்ல” என்று அவள் சொன்னது என்னால் மறக்க முடியாதது. அவள் பேசும் கொங்குத் தமிழ் என்னை வெகுவாகக் கவர்ந்து சிலகாலம் நானும் அப்படியே பேசித் திரிந்தேன்!

அடுத்ததாகக் கோவையின் குளிர். செப்டம்பர் மாதம் காலையில் எட்டு மணிக்குக் கூடப் பச்சைத் தண்ணீரில் குளித்தால் இரத்தம் உறைந்து விடும்.

எப்போதும் மிதமான குளிர், எண்ணற்ற மரங்கள் நிறைந்த எங்கள் கல்லூரி, மருதமலை, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் பழைய புத்தகக் கடை, டவுன் ஹால், கே.ஜி தியேட்டர், கேஜி ஹாஸ்பிட்டல், வ.உ.சி. பார்க், அன்னபூர்ணா ஓட்டல், தேங்காய் பன், மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் (how I miss it!) விற்கும் பேக்கரிகள் (எல்லா பேக்கரிகளுமே டீக்கடைகளாகவும் இருக்கும்) இவையெல்லாம் எனக்கு கோவையை என்றென்றும் மனதில் பசுமையாக வைத்திருப்பவை.

முக்கியமாக நமது பதின்பருவ காலத்தை வெகுவாகப் பாதிக்கும் எந்த ஒரு இடமுமே எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும். அந்த வகையில் என் எவர்கிரீன் கல்லூரிக்காலத்தை அடைகாத்த கோவை என்றுமே மனதுக்கினிய ஊர் தான்.

Wednesday, August 26, 2009

ஷார்ட் கமெர்ஷியல் ப்ரேக்!

டிவி யில் இதைக் கேட்ட மாத்திரத்தில் சேனல் மாற்றும் வழக்கம் போய் இப்போதெல்லாம் இதற்காகவே சேனல் சேனலாகத் தேடும் நிலைமையாகி விட்டது. காரணம் நேஹா.

விளம்பரங்கள் என்றால் கண் கொட்டாமல் பார்க்கிறாள்.
குழந்தைகள் நாய், பிராணிகள் வரும் விளம்பரமென்றால் கூக்குரலோடு!

சதா ஏதாவது செய்து கொண்டே இருக்கும் அவளைக் கொஞ்ச நேரம் அசர வைத்து விட்டு ஏதாவது வேலை பார்க்கவேண்டுமென்றால் ஆபத்பாந்தவர்கள் எனக்கு இந்த விளம்பரங்கள் தான்.

விளம்பரம் முடிந்து அவளுக்கு விருப்பமான பாடல்களில் ஏதாவது ஒன்றும் (அவை பற்றி வேறு ஒரு பதிவில்) வந்து விட்டால் கூடுதல் அதிர்ஷ்டம் தான்!

விளம்பரமோ இந்தப் பாடலோ முடிந்ததும் உடனே திரும்பி விடுவாள். அதற்குள் அவளைக் கண்காணிக்க ஓட வேண்டும்..
L

அதனால் சில காலமாக விளம்பரங்கள் தவிர வேறு எதுவுமே பார்க்க முடிவதில்லை. அதில் குறை ஒன்றும் இல்லை. எவ்வளவு கலையம்சத்துடன் சில விளம்பரங்கள் வருகின்றன? குழந்தைகள் அதிகமாகப் பயன்படுத்தப் படுவது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவினாலும் வெகுவாக அனைவரையும் ஈர்ப்பவை குழந்தைகள் வரும் விளம்பரங்கள் தான்.


குறிப்பாக

ரோஸி மிஸ்ஸின் குறும்புக்காரச் மாணவன் செல்ல நாயாக நடித்து அவரைச் சிரிக்கச் செய்யும் விளம்பரம்

’மிச்சம் பண்ண மூனு ரூபாயில நான் ஐஸ்கிரீம் சாப்ட்டேன்’ என்று நாக்கை நீட்டும் சுட்டிப்பெண்

நிறைய குழந்தைகள் பாடி ஆடும் எண்ணெய் விளம்பரம்

ஒரு பறவைக் கூட்டில் முட்டைகள் பொரியும் நேரம் பார்த்துத் தன் தோழர்களைச் சிறுமி அழைப்பது

டீயில் தெர்மாமீட்டர் வைத்துக் கணவன் ஏமாற்றிவிட்டதைக் கண்டுபிடித்து விடும் பெண்ணும் அவரது முக பாவமும்


எரிச்சல் வரும் விளம்பரங்களும் நிறைய உள்ளன – அவற்றில் முக்கியமானவை:

இந்தப் பானத்தைக் குடித்தால் உங்கள் குழந்தை இரட்டிப்பு வேகத்தில் வளரும்! – யார் கேட்டது? இயல்பாக வளர்ந்தால் போதாதா? எங்களுக்கு வேண்டியது நார்மல் ஆரோக்கியமான பிள்ளைகள்; கடோத்கஜன்களோ ஆறு வயது அமிதாப் பச்சன்களோ அல்ல.

சிவப்பழகு சிவப்பழகு என்று செவிப்பறை கிழியும் அளவுக்கு நாகரிகமே இல்லாமல் நடக்கும் மறைமுகமான இனவெறி வன்முறை. அதற்காக விளம்பரப் படுத்தப்படும் க்ரீம்கள், லோஷன்கள், சோப்புகள் இன்னபிற கண்றாவிகள்.
சருமம் மென்மையாக, சுருக்கங்கள் இல்லாமலிருக்க என்று மட்டும் சொன்னாலென்ன?

மாடி வீட்டு அம்மாளை விருந்துக்கு அழைத்து விட்டுத் தந்திரமாக அவரையே சமைக்கச் செய்வது.

ஒரு சோப்போ, ஷேவிங் லோஷனோ, பெர்ஃப்யூமோ பூசிக் கொண்டவுடன் ஆண்கள் அதி மன்மதர்கள் ஆகிவிடுவதாகவும் அதைத் தொடர்ந்து பெண்களை எவ்வளவு கேவலமாகக் காட்ட முடியுமோ அவ்வளவு கேவலமாகக் காட்டுவதும்..

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் என்ன மாதிரியான விளம்பரமானாலும் பெரும்பாலும் அவை மட்டுமே மனதில் நிற்கின்றன. அவை எடுத்துச் சொல்லும் பொருட்கள் மறந்துவிடுகின்றன. Purpose defeated!

Wednesday, August 19, 2009

சின்னச் சின்னக் கையாலே!

என் சிறு வயதில் வீட்டில் அம்மாவைத் தவிர என்னைக் கவனித்துக் கொள்ள என் அக்கா, அப்புறம் ஒரு மாமியும் இருந்தார்கள். இதனால் வெகு காலம் வரையில் ஒரு வேலையும் செய்யத் தெரியாமல் தான் இருந்தேன்.

எப்படி என்றால் பத்தாவது படிக்கும் வரையில் என் ஷூக்களுக்குப் பாலிஷ் கூடப் போட்டதில்லை. விட மாட்டார்கள். பிறகு திடீரென்று புத்தி வந்து கொஞ்சம் எதிர்க்க ஆரம்பித்து என் வேலைகளை நானே செய்து கொள்ளப் பழகினேன்.

ஆனால் என் அக்காவுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். பல வகையில் என்னைக் கொஞ்சிக் கெடுத்ததாகச் சொல்லப் பட்டாலும் பல விஷயங்களில் என் மண்டையில் தட்டிச் சொல்லிக் கொடுத்தவரும் அவர் தான்.

விடுமுறை நாட்களில் காலையிலேயே ஏதாவது கதைப் புத்தகமும் கையுமாக உட்காரும் என்னை “இந்த ரூமைச் சுத்திப் பாரு. இதைக் கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டு அப்புறம் அந்தச் சந்தோஷத்தோட இந்தப் புக்கைக் கையிலெடுக்கக் கூடாதா? வேலை செஞ்சோம்ற அந்தத் திருப்தியோட ஜாலியா படிக்கலாம்ல?” – இப்படி வீட்டு வேலை செய்வதில் ஆர்வமேற்படுத்தும் வகையில் அக்கா சொன்ன வார்த்தைகளை மறக்கவே முடியாது.


மேலும் அழகாக உடுத்திக் கொண்டு தேவதை போல் வெளியில் கிளம்பும் அதே அக்கா தான் வீட்டில் புடவையை
இழுத்துச் செருகிக் கொண்டு பம்பரமாக வேலை பார்ப்பாள்; தோட்டம் முழுதும் பெருக்குவது, சாக்கடை அடைத்துக் கொண்டால் தயங்காமல் சென்று குத்தி விடுவது உட்பட.

பின்பு அக்காவுக்குத் திருமணமாகிச் சென்றதும் தான் அம்மாவும் என்னிடம் சிறு சிறு வேலைகளைத் தயங்காமல் வாங்கித் தட்டிக் கொடுத்துப் பாராட்டவும் செய்யத் தொடங்கினார். வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு உரிப்பது, மிக்ஸி போட்டுத் தருவது, தேங்காய் துருவுவது, என்று விடுமுறை நாட்களில் ஏதாவது செய்யச் சொல்வார். அன்றைய சமையலில் என்னுடைய சிறு பங்கும் இருந்தது என்பது அந்தச் சிறு வயதில் மிகவும் பெருமையாக இருக்கும்.

இப்படியாக வீட்டு வேலைகளில் ஒருவாறாக ஆர்வம் வந்தது.
(தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்த காலத்தில்) இருபது குடங்கள் தண்ணீர் தூக்கி வந்து வீடெங்கும் நிரப்பி விட்டு உட்காரும் போது கிடைக்கும் நிம்மதிக்கும், வீடு முழுதும் சுத்தப்படுத்தி விட்டு நிமிரும் போது கிடைக்கும் திருப்திக்கும் ஈடாக எதையுமே சொல்ல முடியாது.

பல வீடுகளில் குழந்தைகள் படிக்கிறார்கள் என்று அம்மா அப்பாவே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து விட்டுப் பின்பு கொஞ்சம் வயதானவுடன் முடியாத போது, “ஒரு வேலை சொன்னா செய்ய மாட்டேங்குதுங்க...பெத்தவங்க கஷ்டம் தெரியாம இப்படி இருக்குதுங்களே” என்று புலம்புவதைக் கண்கூடாகக் காணலாம். ஐந்தில் வளையாதது பதினைந்தில் கூட வளைவது கடினம் தான்!

அதனால் நமது குழந்தைகளுக்கு நாம் கண்டிப்பாகச் சிறு வயதிலேயே வீட்டு வேலைகளில் பங்கெடுக்க ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் அவரவர் வேலைகளாவது.

இதில் முக்கியமான விஷயம், ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி எல்லா வேலைகளையும் பழக்கப் படுத்த வேண்டும்.

எங்கே, பெரும்பாலான வீடுகளில் நாமே அதைச் செய்வதில்லை. எல்லா விதமான வீட்டு வேலைக்கும் ஆள் வைத்துக் கொண்டு அலுவலகத்துக்குப் பறந்து விடுகிறோம். அது அவரவர் சூழ்நிலை; தவறில்லை. அப்படி இருந்தாலும் கூட, சின்னச் சின்ன வேலைகள் செய்யக் குழந்தைகளைப் பழக்கலாம்.

நீங்கள் நன்றாகக் கவனித்தால் தெரியும். இயல்பாகவே குழந்தைகள் நான்கு அல்லது ஐந்து வயதாகும் போது எல்லாவற்றையும் தானே செய்யவேண்டும் என்று விரும்புவார்கள். “நானே குளிப்பேன், நானே சாப்பிடுவேன்” இப்படி. (என் அக்கா மகன் இதை “நீயாவே குளிக்கறேன்”) என்பான். நமது அவசர வேலைகளில் இது எரிச்சல் ஏற்படுத்தும் தான். ஆனாலும் இதை இயன்றவரை வரவேற்று ஊக்கப் படுத்துதல் நல்லது என்கிறார்கள்.

அத்தோடு நாம் வீட்டைச் சுத்தப் படுத்தும் போது அவர்களை விரட்டி அடிக்காமல், அவர்கள் கையில் ஒரு சின்ன பிரஷ் கொடுத்து அவர்கள் ரூமையோ ஏன் சேர், டேபிளையாவது சுத்தப் படுத்தச் சொல்லலாம். துணி துவைக்கும் போது சின்ன கர்சீப், ஷூ லேஸ் போன்றவற்றைத் துவைக்கக் கற்றுத் தரலாம்.

குழந்தைகள் செய்த இந்தச் சிறு சிறு வேலைகளை மறக்காமல் மற்றவர் முன் பாராட்டியும் சொல்ல வேண்டும்.

(நன்றி: மிஷா)


இதனால் குழந்தைகள் ஆர்வமாக அந்த வேலைகளை மட்டுமல்ல உழைப்பின் அருமையை மதிக்கவும் கற்றுக் கொள்வார்கள்.

உடல் உழைப்பு என்பது மூளை உழைப்பை விட எந்த விதத்திலும் குறைந்ததில்லை. சொகுசான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு உடல் பருமன் அடைவது, அதைத் தொடர்ந்து வரவழைத்துக் கொள்ளும் நோய்கள், அதன் பின் மருத்துவ ஆலோசனைப் படி செய்யும் உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகள் என்று தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பரிதாப நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

உடல் உழைப்பின் அருமையையும் வீட்டு வேலைகளின் சிறப்பையும் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவோம். எந்த வேலையும் இழிவானது அல்ல என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம்.

சிறு கை அளாவிய கூழை விட ருசியானது எது? அதனால் ஒரு வேலைக்கு இரு வேலை அவர்கள் வைத்தாலும் பரவாயில்லை. அச்சின்னஞ்சிறு கைகளால் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று தான் பார்ப்போமே!

பி.கு: புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என் அக்கா மகன் நிகில் (ஏழு வயது) சென்ற கோடை விடுமுறையில் மதியம் அக்கா ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது பாத்திரங்கள் அனைத்தையும் கழுவிச் அடுப்பு மேடையையும் சுத்தம் செய்திருக்கிறான், யாரும் சொல்லாமலே!

Friday, August 14, 2009

பாரதியின் நினைவோடு...

பாரதியை நினைக்காமல் ஒரு சுதந்திர தினமும் விடிவதில்லை. ஆடுவோமோ பள்ளு பாடுவோமே என்ற பாடலைப் பள்ளியில் பாடி ஆடிய காலத்திலும் அதற்கு முன் வீட்டில் சொல்லிக் கொடுத்த போதும் கேட்ட கேள்வி: சுதந்திரம் பிறந்த போது பாரதியார் உயிரோடு இல்லையே? பின்பு எப்படி சுதந்திரம் பிறந்ததற்காக மகிழந்து இப்பாடலை எழுதினார் என்று.

பாரதியார் ஒரு அசாத்திய தீர்க்கதரிசி என்று காலத்தைத் தாண்டி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆனால் அவருக்குத் தான் எத்தகைய பேராசை?
உண்மை தான், அந்தக் காலத்தைக் காட்டிலும் பலவிதமாக நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்றாலும் இத்தனை ஆண்டுகளில் அடிப்படை பிரச்னைகள் நம் நாட்டில் இன்னும் தீர்வு காணப்படாத நிலை ஏன்? வெட்கக்கேடான பல விஷயங்கள் நாட்டில் ஊடுருவி இருப்பது ஏன்?

ஒன்றும் வேண்டாம், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடினானே அந்தப் பித்தன், உழவர்களுக்குச் சாவு மணி அடித்து விட்டுத் தொழிலைப் பரங்கியருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கிறோமே ஏன்?

இப்பாடலை ஒரு இந்தியனாவது வெட்கமில்லாமல், உண்மையான உள்ளத்துடன், கண்கள் கலங்காமல், சிறிது கசப்பு கூடத் தோன்றாமல் பாட முடியுமானால் அன்று தான் நாம் பரிபூரண சுதந்திரம் அடைந்தோம் என்று கொள்ள் முடியும் என்று தோன்றுகிறது.

ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே – பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே – நம்மை
ஏய்ப்போருக் கேவல் செய்யும் காலமும் போச்சே

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு;
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே – பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே – இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே – கெட்ட
நயவஞ்சகக் காரருக்கும் நாசம் வந்ததே

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் – வெறும்
வீணருக்கு உழைத்துடல் ஓயமாட்டோம்

நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் – பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்.


ஆனால் பாரதியை நாம் மொத்தமாக ஏமாற்றி விடவில்லை. இப்படியும் நடக்குமோ என்று இன்னொரு ஐயம் எழுந்துள்ளது அந்த அறிவுச்சுடருக்கு. கீழ்வரும் பாடல் நமக்கு எவ்வளவு தூரம் பொருத்தமாக இருக்கிறது என்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் கொடியேற்றிக் கொண்டாடுவதோடு இப்பாடலின் கருத்தை அரசியலாரும் ஒவ்வொரு குடிமகனும் நினைவிற் கொள்ள வேண்டும்.
ஆசை தான்! இல்லையா?


வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ

விண்ணிலரவிதனை விட்டுவிட் டெவரும் போய்
மின்மினி கொள்வாரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற்
கைகொட்டிச் சிரியாரோ?

வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ?

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Wednesday, August 12, 2009

பொம்மை

”ஹேய்! அருண் வாடா, உள்ள வா..”

“அம்மா, இது என் ஃப்ரெண்டு அருண். என் கூட வெளையாட வந்திருக்கான்.”

”வா தம்பி... சரி ரமேசு, பாப்பாவைப் பாத்துக்கிட்டே ரெண்டு பேரும் வெளையாடிட்டு இருங்க, நான் வேலைக்குப் போயிட்டு வந்துடறேன்.”

அந்தச் சின்ன ஓட்டு வீட்டுக்குள் தன் நண்பனை அழைத்துச் சென்றான் ரமேஷ்.

ஒரு சின்னக் கூடம், அதை ஒட்டி ஒரு சமையலறை. அதனருகே குளியலறை. அவ்வளவு தான் வீடு. கூடத்தில் தூளியில் ரமேஷின் ஒன்றரை வயது தங்கச்சிப் பாப்பா தூங்கிக் கொண்டிருந்தது.

வீட்டை வித்தியாசமாகப் பார்த்தவாறே அருண் கேட்டான் ”உங்க அப்பா எங்கடா?”

“வேலைக்கிப் போயிருக்கார்டா”

”இன்னிக்கு ஸண்டே தானடா... லீவ் இல்ல?”

“அதெல்லாம் ஆஃபிஸ்ல வேல பாக்கற உங்க அப்பாக்குத் தான். எங்க அப்பா கார்ப்பெண்டராச்சே!” சிரித்தான் ரமேஷ்.

”சரி நாம வெளையாடலாமா?”

வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்த அருணுக்கு அது கண்ணில் பட்டது.
மரத்தில் அழகாகச் செதுக்கப்பட்டு பிங்க், பச்சை என்று கண்ணைப் பறிக்கும் வர்ணங்கள் பூசப்பட்ட ஒரு வண்டி.

”என்னடா அது?”

”அதுவா! பாப்பாக்கு நடை வண்டி. எங்க அப்பாவே செஞ்சாரு. நான் கூட ஹெல்ப் பண்ணேன்.“ பெருமை பொங்கச் சொன்னான் ரமேஷ்.

ஆர்வத்துடன் அதனருகே சென்றான் அருண். தொட்டுப் பார்த்து, “நிஜம்மா உங்க அப்பாவே செஞ்சாரா.. சூப்பர்டா!” என்றான்.

இது மட்டுமில்ல, இங்க பாரு...ஷெல்பில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப்பொம்மைகளைக் காட்டினான்.

”இதெல்லாம் எங்க அம்மா செஞ்சது. அவங்களே பண்ணி சட்டையும் தெச்சுப் போட்டு விடுவாங்க. நல்லாருக்கா?”

“ரொம்ப அழகா இருக்குடா” உண்மையில் அருண் அதைப் போல் பொம்மைகளை அவன் பெற்றோர் அழைத்துச் செல்லும் எந்தக் கடையிலும் பார்த்ததில்லை.

”உனக்குப் பிடிச்சிருக்கா?”

“ரொம்ப!”

“அப்போ இந்தா, இந்த பொம்மையை எடுத்துட்டுப் போ. என்னோட கிஃப்ட்!”

“ஏய், வேனாண்டா, உங்க அம்மா வந்தாத் திட்டப் போறாங்க!”

“ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. இதை மாதிரி இன்னும் எவ்ளோ வேணும்னாலும் செஞ்சுடுவாங்க.”

கண்கள் விரிய அதை வாங்கிக் கொண்டான் அருண். “ரொம்ப தாங்க்ஸ்டா. உங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப டேலண்டட்!”

இருவரும் சிறிது நேரம் விளையாடிய பின் அருண் விடைபெற்றான்; அடுத்த ஞாயிற்றுக் கிழமை தனது வீட்டுக்கு ரமேஷை வரும்படி அழைப்பு விடுத்து விட்டு.

அடுத்த வாரம்...

“அம்மா, என் ஃப்ரெண்ட் ரமேஷ் வந்திருக்காம்மா. இது அவன் தங்கச்சி ரம்யா.”

“ஹேய் குட்டிப்பாப்பா, ஸோ ஸ்வீட். சரி எல்லாரும் இங்க ஹால்லையே விளையாடுங்க. ரூமுக்குள்ள எல்லாம் போகக் கூடாது.. அப்பா ரெஸ்ட் எடுக்கறாங்க ஒகே? மம்மி ஷாப்பிங் போயிட்டு வரேன்.” அதட்டி விட்டு வெளியே செல்ல ஆயத்தமானாள் அந்த அம்மா.

அருண் தனது விளையாட்டுப் பொருள்களை எல்லாம் கொண்டு வந்து ரமேஷை அசத்த விரும்பினான்.

”ஹேய்! இங்க பார்த்தியா, இது எங்க அப்பா சிங்கப்பூர்லருந்து வாங்கிட்டு வந்தது.”

அந்தப் பெரிய ரிமோட் கண்ட்ரோல் காரை வேகமாக இயக்கிக் காண்பித்தான் அருண்.

”நல்லா இருக்குடா. ஆனா, எங்க அம்மா வேலை செய்யற வீட்ல அந்தப் பாப்பா இதே மாதிரி வெச்சிருக்கு, பாத்திருக்கேன்.”

”அப்படியா...” சற்றே ஏமாற்றமடைந்த அருண், “இதைப் பாரு இந்த வீடியோ கேம்....இது எங்க அம்மா என்னோட பர்த்டேக்குப் பிரஸண்ட் பண்ணாங்க..”


”அட! இது கண்ணா வீட்ல நான் விளையாடி இருக்கேன். நான் தான் அவனுக்கு எல்லா லெவலும் முடிக்க ஹெல்ப் பண்ணேன். ”

”சரி விடு, இந்த பார்பி டால் செட் பாத்தியா? நான் பொண்ணா தான் பொறப்பேன்னு நெனச்சு எங்க அம்மா அந்த கலெக்‌ஷன் பூரா வாங்கி வெச்சிருக்காங்க.”

அழகழகான பார்பி என்னும் பெண் பொம்மைகள், விதவிதமான அலங்காரத்தில், டாக்டர் செட், கிட்சென் செட், என்று அதற்கேற்ற உப பொருட்களும் ஒரு தனி அலமாரியில் அடுக்கப் பட்டிருந்தன.

ரமேஷ் உண்மையிலேயே அதிசயித்தான். ”ரொம்ப அழகா இருக்குடா... இந்தப் பொம்மைக்குச் சட்டையெல்லாம் உங்க அம்மாவே தெச்சாங்களா.. சூப்பர்டா”

“அடப்போடா, இதெல்லாம் அப்படியே வாங்கினது. ரொம்ப காஸ்ட்லி. அதான் ராப்பரைப் பிரிக்காம அப்படியே ஷோகேஸ்ல வெச்சிட்டாங்க. நான் கூட வெளையாடினதே இல்ல.”

ரமேஷுக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது.

அதற்குள் அவர்கள் பின்னால் தத்தித் தத்தி வந்து விட்ட ரம்யா, அந்த பொம்மைகளைக் கை காட்டி அழத் தொடங்கினாள்.

அவளைத் தூக்கிக் கொண்ட ரமேஷ், “இந்தா பாரு, அதெல்லாம் கேக்கக் கூடாது. நல்ல பாப்பா இல்ல. நமக்கு வீட்ல பொம்மை இருக்குல்ல..” என்று சமாதானப் படுத்த ஆரம்பித்தான்.

அருணுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அந்தப் பாப்பாவுக்குப் பொம்மையைக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. அம்மாவை நினைத்துப் பயமாகவும் இருந்தது.

ஆனால் அன்று தான் ரசித்துப் பார்த்ததற்கே ரமேஷ் அவன் அம்மா செய்த பொம்மையைக் கொடுத்தனுப்பினானே.

சட்டென்று அலமாரியைத் திறந்து ஒரு பொம்மையைக் குழந்தையிடம் கொடுத்தான்.

“டேய் வேண்டாம்டா.. உங்க அம்மா திட்டுவாங்க.”

அருணுக்குச் சுருக்கென்றது. ”போடா, அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க... நீ வெச்சிக்கோடா செல்லம்” என்று பாப்பாவைக் கொஞ்சினான்.
பாப்பா அழுகையை நிறுத்து விட்டுப் பூஞ்சிரிப்புச் சிரித்தது.

********

”அருண்...எங்கே, இங்க டாக்டர் செட்ல இருந்த பார்பி எங்க காணோம்? எடுத்து விளையாடிட்டு எங்கயாச்சும் போட்டுட்டியா?”

“அம்மா.. அது வந்து... ரமேஷோட குட்டித் தங்கை அதைக் கேட்டு அழுதுச்சும்மா. அதான்.. “ என்று இழுத்தான்.

“டேய் ஃபூல்! அறிவிருக்காடா உனக்கு? அது எவ்ளோ காஸ்ட்லி தெரியுமா. ஒண்ணொண்ணும் த்ரீ ஹண்ட்ரட் பக்ஸ்! இட் வாஸ் மை ட்ரெஷர்ட் கலெக்‌ஷன்! அதை எதுக்குடா கொடுத்தே?”

“குழந்தை ரொம்ப அழுதாம்மா...”

“அழுதுச்சுன்னா நீ வெளையாடி உடைச்ச வேற ஏதாவது டாய்ஸ் கொடுத்திருக்கலாம்ல? நீ எது தந்திருந்தாலும் அவங்களுக்கு உசத்தியாத்தான் இருந்திருக்கும். ஸ்டுப்பிட்! பார்பி டாலைப் போய்..”

”அருண்..அருண்...” வாசல் பக்கம் குரல் கேட்டது.

“அம்மா, இதைக் கொண்டு கொடுத்துட்டு வரச்சொன்னாங்க ஆண்ட்டி. பாப்பா தெரியாம எடுத்துட்டு வந்துடுச்சி. நான் வரேன் ஆண்டி. வரேன் அருண்”

”ஓ, தாங்க்ஸ் பா” என்றபடி அதை வாங்கிக் கொண்டு திரும்பிய அம்மாவை அருண் பார்த்த பார்வையில் ஆயிரம் கேள்விகள் தொனித்தன. ஆனால் அது அந்த அம்மாவுக்குப் புரியுமா என்பது ஐயமே.

Thursday, August 6, 2009

ஒரு சிறிய புட்டி

விடுதி உரிமையாளனும் ஊரில் ஓரளவு பணக்காரனுமான ஜுல்ஸ் ஷிக்கோ, தனது வண்டியை மதர் மாக்லோரின் பண்ணை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு இறங்கினான்.

நாற்பது வயது இருக்கும் அவனுக்கு. நல்ல உயரம்; அதற்கேற்ற பருமன்; சிவந்த முகம். தனது குதிரையை வாயிலருகே கட்டிப் போட்டு விட்டு வந்தான். கிழவி திண்ணையில் அமர்ந்து உருளைக்கிழங்குகளைத் தோலுரித்துக் கொண்டிருந்தாள்.

மதர் மாக்லோர் என்ற அந்தக் கிழவியின் பண்ணைக்கு அருகில் தான் அவனுக்கும் கொஞ்சம் நிலம் இருந்தது. அதன் மேல் ரொம்ப நாளாக அவனுக்கு ஒரு கண். அதை வாங்கிப் போடவும் வெகு நாளாக முயற்சி செய்து வந்தான். ஆனால் கிழவியோ தனது நிலத்தை விற்கத் திட்டவட்டமாக மறுத்து விட்டாள்.

“இங்க தான் நான் பொறந்தது வளந்தது எல்லாம். என் கட்டையும் இதே இடத்தில தான் போகணும்.“ என்பது தான் அவள் சொன்னதெல்லாம். அவளுக்கு எழுபத்திரண்டு வயதிருக்கும். ரொம்ப மெலிந்து, தோல் சுருங்கி, தேகாந்திரமும் மடங்கி வற்றிய தோற்றத்துடன் இருப்பாள். ஆனாலும் நல்ல ஆரோக்கியமாகத் தான் இருந்தாள். மேலும் ஒரு சிறுமிக்குரிய சுறுசுறுப்புடன் ஏதாவது வேலை செய்து கொண்டே வளைய வருவாள்.

உள்ளே வந்த ஷிக்கோ தோழமையுடன் அவள் முதுகைத் தட்டி விட்டு அவளருகில் கிடந்த ஸ்டூலில் அமர்ந்தான்.

“எப்படி மதர் எப்போவுமே இப்படி சுறுசுறுப்பாவும் உற்சாகமாவும் இருக்குறே.. பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“நன்றி, எனக்கு ஒரு குறையுமில்ல, நீ எப்படி இருக்கே மெஸ்ஸியர் ஷிக்கோ?”

“ஓ! ரொம்ப நல்லா இருக்கேன், என்ன அப்பப்போ மூட்டு வலி தான் கொஞ்சம் தொந்தரவு கொடுக்குது. மத்தபடி ஒரு குறையுமில்ல.”

“நல்லது”

கிழவி மேலே எதுவும் பேசவில்லை. ஷிக்கோ அவள் வேலை செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முறுக்கேறிய மெல்லிய விரல்கள் நண்டின் கொடுக்குகளைப் போல உருளைக்கிழங்குகளைப் பற்றி, ஒரு பழைய கத்தியைக் கொண்டு அவற்றை லாகவமாகத் தோலுரித்து, நீர் நிரம்பிய இன்னொரு பாத்திரத்தில் எறிந்த வண்ணம் இருந்தன. வேகமாகவும் நீளநீளமாகவும் தோல்கள் உரிந்து விழுந்தன. பழக்கப்பட்ட கோழிகள் மூன்று பறந்து வந்து அவள் மடியில் குதித்துத் தோல்களைக் கவ்விக் கொண்டு தாவியோடின.

ஷிக்கோ தர்மசங்கடமாக உணர்ந்தான். ஏதோ சொல்ல வந்து முடியாமல் விழுங்குபவன் போல காணப்பட்டான்.

பின்பு அவசரமாக, “இங்கெ பாரு மதர் மாக்லோர்..”

“என்ன விஷயம்?”

“உன் பண்ணையை விக்க முடியாதுன்னு நீ உறுதியாத் தான் சொல்றியா?

”நிச்சயமா. நீ உன் மனசை மாத்திக்கோ. நான் சொன்னா சொன்னது தான். இனிமே அந்தப் பேச்சையே எடுக்காதே.“

“ரொம்ப நல்லது. நான் வேற ஒரு வழி வெச்சிருக்கேன்; நம்ம ரெண்டு பேருக்குமே சாதகமா இருக்கற மாதிரி.“

”என்ன அது?“

“அப்படிக் கேளு. நீ எனக்கு அதை விக்கிறே. ஆனாலும் நீயே வெச்சிக்கிறே; எப்படி? புரியலீல்ல, இப்ப நான் சொல்லப் போறத கவனமாக் கேளு!”

கிழவி கைவேலையை நிறுத்தி விட்டுத் தனது அடர்ந்த புருவங்களுக்கு அடியிலிருந்து அவனையே உற்று நோக்கினாள்.

அவன் சொன்னான், “அதாவது உனக்கு நான் ஒவ்வொரு மாசமும் நூற்றம்பது ஃப்ராங்குகள், அதாவது முப்பது கிரவுன்கள் கொடுப்பேன். புரியுதா, ஒவ்வொரு மாதமும் நான் இங்க வந்து உனக்கு முப்பது க்ரவுன்கள் கொடுப்பேன். வேற ஒண்ணும் உன் வாழ்க்கையில மாற்றமே இருக்காது. நீ உன் பண்ணை வீட்டுலயே இருக்கலாம். பண்ணையையும் நீயே நடத்திக்கலாம். என்னைப் பத்திக் கவலையே பட வேண்டாம். நான் குடுக்கற பணத்தை வாங்கிக்கிட்டா போதும். என்ன சரியா?”

சொல்லி விட்டு அவளைப் பார்த்து நட்புடன் சிரித்தான். (கருணை ததும்ப என்று கூடச் சொல்லலாம்!) கிழவி அவநம்பிக்கையுடனே அவனைத் திருப்பிப் பார்த்தாள். என்னவோ சூழ்ச்சி இருப்பது போல் தோன்றியது அவளுக்கு. “எல்லாம் சரி தான். ஆனா உனக்கு அந்தப் பண்ணை கிடைக்காது.”

“அதைப் பத்தியே நீ கவலைப்படாதே. கடவுள் விரும்பற வரைக்கும் நீ எவ்வளவு காலம் வாழணுமோ இங்கேயே நீ இருக்கலாம். ஒண்ணே ஒண்ணு. உன் காலத்துக்கு அப்புறம் பண்ணை எனக்குச் சேரும்படியா ஒரு வக்கீலை வெச்சு நீ உயில் எழுதித் தரணும். உனக்கோ குழந்தைகள் இல்ல. உன் சொந்தக்காரங்களோடயும் உனக்கு ஒட்டு உறவு இல்ல. அப்புறம் என்ன? நீ உயிரோட இருக்கற வரைக்கும் பண்ணை உனக்கே சொந்தம். அத்தோட நான் வேற மாசாமாசம் உனக்கு முப்பது க்ரௌன் தருவேன். உன்னைப் பொறுத்த வரைக்கும் இது லாபம் மட்டுமே.”

கிழவி வியப்படைந்தாள். என்னவோ நெருடினாலும் இந்த ஒப்பந்தம் ரொம்பவே கவர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனாலும் அவள் சொன்னாள். “ நான் உடனே ஒத்துக்க முடியாது. கொஞ்சம் யோசிக்கணும். நீ ஒரு வாரம் கழிச்சுத் திரும்பி வா. என் முடிவைச் சொல்றேன்.”

மிக்க மகிழ்ச்சியுடன் ஒரு ராஜாங்கத்தையே வென்ற அரசனைப் போல களிப்புடன் திரும்பிச் சென்றான் ஷிக்கோ.

மதர் மாக்லோர் அன்று இரவு தூங்காமல் இதைப் பற்றியே சிந்தித்தாள். அடுத்து வந்த் நான்கு நாட்களும் குழப்பமான மனநிலையிலேயே இருந்தாள். இதில் தனக்குப் பாதகமாக ஏதும் சூது இருக்குமோ என்று சிந்தித்த படியே இருந்தாள். ஆனால் மாதா மாதம் வரப்போகும் அந்த முப்பது கிரவுன்கள், வானத்திலிருந்து திடீரென்று அதிர்ஷ்டவமாகத் தனது மடியில் வீழ்வது போலத்தானே என்றும் எண்ணினாள்.

அடுத்த நாள் வக்கீலிடம் சென்று இதைப் பற்றிப் பேசினாள். அதை ஏற்றுக்கொள்ளும்படிச் சொன்ன அவர் மாதம் முப்பது கிரவுனுக்குப் பதில் ஐம்பது கிரவுன்களாகக் கேட்கும்படி அறிவுறுத்தினார். அவளது பண்ணை குறைந்தபட்சம் மதிப்பிட்டால் கூட அறுபதினாயிரம் ஃப்ராங்குகள் பெறும் என்று சுட்டிக் காட்டினார்.

”நீ இன்னும் பதினைந்து ஆண்டுகள் உயிரோடிருந்தால் கூட அவன் நாற்பத்தைந்தாயிரம் ஃப்ராங்குகள் தான் செலுத்தி இருப்பான்.”

கிழவி மாதம் ஐம்பது கிரவுன்கள் கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில் உடல் நடுங்கினாள். ஆனாலும் அவளுக்கு ஏனோ அச்சமாக இருந்தது. வெகு நேரம் வக்கீலைப் பல கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுத்தாள். இறுதியாக ஷிக்கோ கேட்டபடி உயில் எழுதுமாறு அவரைப் பணித்து விட்டு வீடு திரும்பினாள். நான்கு குடுவைகள் புதிய ஸைடர் மது அருந்தியது போல் அவளுக்குத் தலை கிறுகிறுத்தது.

அவளது முடிவை அறிந்துகொள்ள ஷிக்கோ வந்த போது ரொம்ப நேரம் ஒப்பந்தத்தை ஏற்க முடியாதது போல் பிகு செய்தாள்; உள்ளூர ஐம்பது கிரவுன்களுக்கு அவன் ஒத்துக் கொள்ளாமல் போய்விடுவானோ என்ற பயத்துடன். இறுதியாக அவன் பொறுமை இழப்பது போல் தோன்றியவுடன் தனது கோரிக்கையை முன் வைத்தாள். அவன் பெரும் வியப்படைந்தன்; மறுத்தான். அவனைச் சம்மதிக்க வைக்கும் வண்ணமாகக் கிழவி பேசத் தொடங்கினாள்.

“நான் நிச்சயமா இன்னும் அஞ்சாறு வருஷங்களுக்கு மேல உயிரோட இருக்க மாட்டேன். பாரு, எனக்கு எழுபத்தி மூணு வயசாகுது. ஆனா இந்த வயசுக்கே ரொம்ப தளர்ந்து போயிட்டேன். முந்தா நாளு கூட சாயங்காலம் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியல. போற வேளை வந்துடுச்சோன்னே நெனச்சேன்.”

ஆனாலும் ஷிக்கோ மசியவில்லை.

“அட சும்மா இரு கிழவி. நீ நல்லா குத்துக்கல்லாட்டம் இருக்கே. உனக்கு நூறாயுசு இருக்கு. என்னையும் மண்ணுக்குள்ள அனுப்பிட்டுத் தான் நீ போவே.”

அன்று நாள் முழுதும் இந்தப் பேரப் பேச்சு நடந்தது. கிழவி கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் போகவே ஷிக்கோ கடைசியில் ஐம்பது கிரவுன்கள் கொடுக்க இணங்க வேண்டியதாயிற்று. மேற்கொண்டு பத்து கிரவுன்களும் பேரத்தை முடித்ததற்காக ஒரே தடவையாகக் கேட்டு வாங்கிக் கொண்டாள் கிழவி.

மூன்று ஆண்டுகள் சென்றன. கிழவி கொஞ்சமும் உடல் தளரவில்லை. ஷிக்கோ கவலை கொள்ளத் தொடங்கினான். என்னவோ ஐம்பது ஆண்டுகளாகக் கப்பம் செலுத்தி வருவது போல் தோன்றியது அவனுக்கு. தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக, நயமாக வஞ்சிக்கப் பட்டதாக எண்ணினான். அறுவடைக்குப் பயிர் முற்றி விட்டதா என்று பார்த்து வரும் விவசாயியைப் போல, அவ்வப்போது கிழவியைச் சென்று பார்த்து வருவான். எப்போதும் அவனை ஒரு ஏளனப் பார்வையுடனேயே சந்திப்பாள் கிழவி. அது அவனை ஏமாற்றி விட்டதற்காகத் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதைப் போல் இருக்கும்.

அவள் ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் இருப்பதைக் கண்டு மனம் வெம்பித் திரும்புவான் ஷிக்கொ, “கிழட்டுப் பைத்தியமே, நீ சாகவே மாட்டியா” என்று முனகியபடி.

என்ன செய்வதென்று தெரியாமல் அவளைப் பார்த்தாலே கழுத்தை நெறித்துக் கொன்றுவிட வேண்டும் போல் வெறி கொள்ள ஆரம்பித்தான். விஷம் போல் வெறுத்தான் அவளை. தன் சொத்தைக் கொள்ளை கொண்ட திருடனை வஞ்சம் தீர்க்க நினைப்பது போல அவளைத் தீர்த்துக்கட்டுவது பற்றியே எண்ணமிடலானான்.

ஒரு நாள் அவளைப் பார்க்க வந்தான். வரும்போது இரு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று தேய்த்துக் கொண்டே வந்தான். (முதன் முதலில் இந்த யோசனையைத் தெரிவிக்க வந்த போதும் அப்படித் தான் செய்து கொண்டு இருந்தான்.)

சிறிது நேர அரட்டைக்குப் பின் சொன்னான், “ஏன் நீ என் வீட்டுப் பக்கமே வரதில்ல. எப்ரெவில் வரும் போது எங்க வீட்டுக்கு வந்து ஒரு வேளை சாப்பிட்டுப் போகலாமில்ல? ஊர்ல எல்லாரும் உனக்கும் எனக்கும் ஏதோ பகை போல பேசிக்கிறாங்க. எனக்கு அது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. உனக்கு விருந்து கொடுக்கறது ஒண்ணும் எனக்குச் சிரமமில்ல. எப்போ விருப்பமோ வா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”

மதர் மாக்லோருக்கு இந்த விஷய்த்தில் அதிக உபசாரம் தேவைப்படவில்லை. அடுத்த நாளே சந்தை நாளாக இருந்ததால், வண்டி கட்டிக் கொண்டு டவுனுக்குப் போய்விட்டு விருந்தை எதிர்பார்த்து ஷிக்கோவின் வீட்டுக்குப் போனாள்.

விடுதிக்காரன் ஷிக்கோ பெரிதும் மகிழ்ந்தான். வறுத்த கோழி, ஆட்டுக் கால் சூப், இனிப்பு புட்டிங், பன்றிக்கறி, நிறைய காய்கறிகள் என்று ராஜோபசாரத்துடன் விருந்தளித்தான். ஆனால் கிழவி என்னவோ பேருக்குக் கொறித்தாள். அவள் எப்போதுமே கொஞ்சம் சூப்பும் ரொட்டியுமாக எளிமையாக சாப்பிட்டுப் பழகியவள். ஷிக்கோவுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவளை நன்றாகச் சாப்பிடும்படி வற்புறுத்திக் கொண்டே இருந்தான். அவள் மறுத்தாள். காப்பி கூட வேண்டாமென்று விட்டாள். அதனால் அவன் கேட்டான், “அது சரி, ஆனா ஒரு சின்ன பெக் பிராந்தியோ ஒயினோ கூட குடிக்க மாட்டியா?”

“அது வந்து, பரவாயில்லன்னு தான் நினைக்கிறேன்.” என்று கிழவி தயங்கியவாறே சம்மதிப்பதற்குள் ஷிக்கோ உரக்கக் கத்தினான். “ரோஸலி, அந்தப் சூப்பர் பிரந்தியை எடுத்துட்டு வா, உனக்குத் தெரியுமே, அந்த “ஸ்பெஷல்!”

பணிப்பெண் ஒரு அழகிய நீளமான பாட்டிலைத் தட்டில் ஏந்தியபடி வந்து இரு கிளாஸ்களில் நிரப்பினாள்.

“குடிச்சுப் பாரு, பிரமாதமா இருக்கும்.”

கிழவி அதன் சுவை நெடு நேரம் நாவில் தங்கும்படியாக கொஞ்சம் கொஞ்சமாக அதைச் சீப்பிக் குடித்தாள். காலி கிளாஸைக் கீழே வைத்ததும் சொன்னாள். “ஆமாம், ரொம்பப் பிரமாதம்”

அவள் சொல்லி முடிக்கும் முன் அவளது கோப்பையை மீண்டும் நிரப்பினான் ஷிக்கோ. மறுக்க நினைத்தாலும் கிழவியால் முடியவில்லை. மீண்டும் அதை ரசித்துப் பருகினாள். இன்னும் ஒரு கோப்பை குடிக்கும் படி வேண்டினான். அவள் பிடிவாதமாக மறுக்கவும்,

“அய்யோ இது பால் மாதிரி தான். ரொம்ப இதமானது. நான் ஒரு டஜன் கிளாஸ் கூடக் குடிச்சிருக்கேன். ஒண்ணுமே ஆகாது. சும்மா தேன் மாதிரி உள்ள போகும்; தலைவலி கூட வராது. நாக்கிலயே ஆவியாகிடற மாதிரி. உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது.“

அவள் வாங்கிக் கொண்டாள்; அவளுக்கு உண்மையிலேயே ஆசையாக இருந்தது அதைக் குடிக்க. ஆனால் பாதிக்கு மேல் அவளால் குடிக்க முடியவில்லை. ஷிக்கோ ரொம்பப் பெருந்தன்மையான பாவத்துடன் சொன்னான். “இங்கெ பாரு உனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கறதால் உனக்கு ஒரு சின்ன புட்டி தர்றேன், நம்மளோட நல்ல நட்புக்கு அடையாளமா!”

அவள் அதை வாங்கிக் கொண்டு விடைபெற்றாள்; தள்ளாடியபடியே.

அடுத்த நாள் அவள் வீட்டுக்கு மறுபடியும் போனான் ஷிக்கோ, அதே போல் இன்னொரு மதுக்குடுவையுடன். அதையும் ருசிபார்க்கச் சொன்னான். பின் இருவரும் அமர்ந்து மேலும் இரண்டு மூன்று கோப்பைகள் மது அருந்தினர். போகும் போது சொன்னான், “இதோ பாரு, தீர்ந்து போனவுடன் இன்னும் வேணும்னா தாராளமா என்னைக் கேளு, ஒண்ணும் தயங்கவேண்டாம். உனக்குக் குடுக்கறதுல எனக்குச் சந்தோஷம் தான்.”

நான்கு நாட்கள் கழித்து மீண்டும் வந்தான். கிழவி வாசலில் அமர்ந்து ரொட்டியைத் துண்டு போட்டுக் கொண்டிருந்தாள். அவளருகே சென்று குனிந்து லேசாக முகர்ந்து பார்த்தான். மது நெடியடித்தது. பரம திருப்தி அடைந்தான்.

“எனக்கு ஒரு க்ளாஸ் ஸ்பெஷல் தர மாட்டியா?” அவன் கேட்டான்.

ஆளுக்கு மூன்று கிளாஸ்கள் குடித்தனர். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மதர் மாக்லோர் குடிப்பது அக்கம்பக்கத்தில் செய்தியாய்ப் பரவ ஆரம்பித்தது. கிழவி எப்படியோ தானாகவே குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விட்டதாகக் கிசுகிசுக்கத் தொடங்கினர். அடுப்பங்கரையில், தெருவோரங்களில் என எங்காவது கட்டை போல் விழுந்து கிடக்கும் அவளைத் தூக்கி வருவதும் நிகழத் தொடங்கியது.

ஷிக்கோ அவள் வீட்டுப் பக்கம் போவதையே நிறுத்திவிட்டான்.
அவ்ளைப் பற்றிய பேச்சு வந்தால் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு, “இந்த வயதில் கிழவிக்குக் குடிப்பழக்கம் ஏற்பட்டது ரொம்ப துரதிர்ஷ்டம் தான். இனிமே நிறுத்தறது முடியவே முடியாது. பாவம் சீக்கிரமே மண்டையைப் போட்டுடுவான்னு தோணுது.”

நிச்சயமாக அது தான் நடந்தது. குளிர்காலம் வந்ததும் சில நாட்களில் கிழவி இறந்து போனாள். கிறிஸ்துமஸ் சமயம் குடித்து விட்டு பனியில் மயங்கி விழுந்தவளை, அடுத்தநாள் உயிரற்ற சடலமாகக் கண்டெடுத்தார்கள்.

பண்ணையைச் சொந்தமாக்கிக் கொள்ள வந்த ஷிக்கோ சொன்னான், “முட்டாள் கிழவி. அவ மட்டும் குடிக்காம இருந்திருந்தா இன்னும் பத்து வருஷம் நல்லா இருந்திருப்பா.”

(மூலக்கதை மாப்பஸான் ஃப்ரெஞ்சில் எழுதியது. The Little Cask என்ற அதன் ஆங்கிலப் பெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.)

Monday, August 3, 2009

இடுக்கண் களைவதாம் நட்பு!

நேற்று காலை எழுந்ததும் முதல் அழைப்பு அவளது தான்.

“ஹேய் தூங்கு மூஞ்சி! இப்பத்தான் எழுந்தியா. Happy friendship day!”

“ஹேய் ஜோதி... என்ன, இப்பத் தான் உன்னைப் பாத்துட்டு வர்றேன்.”

”என்னது?”

“இல்லடி, என் கனவில வந்தே...அதை நினைச்சிக்கிட்டே வர்றேன், அதுக்குள்ள் நீ....” மேற்கொண்டு பேச முடியாமல் சிரிப்பும் ஆச்சிரியமும் சூழ்கின்றன என்னை.

“அப்படியா, என்ன கனவு சொல்லு சொல்லு!”

“ம்...சரியா ஞாபகம் இல்ல.. ஆனா ரெண்டு பேரும் பஸ்ல ஏர்றோம்... ஏதோ ஷாப்பிங் போகன்னு நினைக்கிறேன். நான் முதல்ல ஏறினப்புறம்..அய்யோ நேஹா வை கீழியே விட்டுட்டேனேன்னு நினைக்கிறேன். அப்போ நீ நேஹாவையும் தூக்கிட்டு ஓடற பஸ்ல ஏறை வர்றே. வந்து என்னை நல்லாத் திட்டற!”

“ம்க்கும்.. நல்ல கனவு போ.. சரி தான், குழந்தையை ஒழுங்காப் பாத்துக்கோடி..சரி பை.. நான் இப்போ வெளிய போறேன். ஈவினிங் ஃபோன் பண்றேன். ”

ஃபோனை வைத்த பிறகும் வெகு நேரம் அவள் நினைவு தான்.
ஜோதி. என் உயிர்த் தோழி.. யூ.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள் நாங்கள்.
அத்தனை வகுப்பிலும் முதல் ரேங்க் எடுத்தவள் அவள். (நான் என்ன எடுத்தேன் என்பது இங்கே முக்கியமில்லை! )

அற்புதமாக நடனமாடுவாள், விளையாட்டிலும் சிறந்து விளங்கினாள். சிக்கனம், நேர்மை, நேரம் தவறாமை, என பள்ளியின் உதாரண மாணவி அவள் தான். அந்தப் பரிசும் அவளையே சேர்ந்தது.

இப்படிப் பட்ட மாணவிகள் கர்வம் பிடித்தவர்களாக, பொதுவாக பலரும் விரும்பாத மாதிரி தானே இருப்பார்கள். ஜோதி அதற்கு நேரெதிர்.

ஆம், அவளும் ஐந்தாம் வகுப்பு வரை கொஞ்சம் அப்படித் தான் இருந்தாள். பின்பு தன்னைத் தானே வெகுவாக மாற்றிக் கொண்டாள். இலகுவாகப் பழகவும் விட்டுக் கொடுக்கவும் ஆரம்பித்தாள். அவளின் இந்த மாற்றங்களைக் கண்கூடாகப் பார்த்து மகிழ்ந்தவள் என்ற முறையில் அவளது சிறந்த நண்பி நான் என்று பெருமையாகக் கூறிக் கொள்கிறேன்.

ஆனாலும் அந்த அறியா வயதில் ஊரே போற்றும் படி படிப்பில் படுசுட்டியாக இருந்ததால் சற்றுத் திமிராக இருந்ததை எண்ணி இப்போதும் வெட்கப்படுகிறாள், என்னவோ அது பெரிய தவறு போல.

அதே போல், தேர்வு சமயங்களில் தன்னை விட என் படிப்பைப் பற்றி அதிகம் கவலைப்படுவாள். அவளுக்கு ஒரு எண்ணம் நான் பொறுப்பில்லாமல் மதிப்பெண்களைத் தவறவிடுவதாக. அதற்காக அவள் எடுத்துக் கொண்ட அக்கறையை என்னால் என்றும் மறக்க முடியாது.

கல்லூரி, வெவ்வேறு ஊர்களில் வேலை, திருமணம் என்று சில நாட்கள் தொடர்பு குறைந்திருந்தது. பின்பு சில ஆண்டுகளுக்கு முன்பு அவள் சென்னையிலேயே வந்து குடியேறிய பின் எங்கள் நட்பு மீண்டும் தடையின்றித் தொடர்கிறது. உண்மையில் கொடுத்து வைத்தவள் நான் தான்.

நான் கல்லூரி சேர்ந்தது வேறு ஊரில். என் குடும்பத்தாரை விட அதிகமாகக் கடிதம் எழுதியது அவள் தானென்று நினைக்கிறேன்.

அவளோடு தொடர்ந்து படிக்க முடியாமல் போனதற்கு எவ்வளவு வருந்தி இருப்பேன்!

அந்த வருத்தம் வெகுவாகப் பாதிக்காமல் மாற்ற வந்தவர்கள் தான் சுதா, சுகந்தி, பாலா.

சுதா - என் அறைத்தோழியாக முதல்நாள் அறிமுகமான போது என்னைவிட பயந்த சுபாவமாய் சின்ன உருவமாகக் குழந்தை போலிருந்தாள்.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு சில் நாட்கள் தான் முன்னதாக சேர்ந்திருந்த அவளோ கலகலப்பாகவும் தனது குழந்தைத் தனமான பேச்சாலும் எல்லாருடனும் நட்பாகி இருந்தாள்.

முதல் நாள் மாலை, வீட்டு நினைவில் அழுது கொண்டு யாருடனும் பேசாமல் இருந்த நேரம். எல்லோரும் வராந்தாவில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அறைக்குள் நுழைந்த சுதா, அன்புடன் என்னைத் தேற்றியதும் முகத்தைத் துடைத்துக் கொள்ள எனக்குக் கொடுத்த அவளது புதுத்துவாலையின் வாசமும் என் நெஞ்சை விட்டு எந்நாளும் நீங்காது.

”சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து” பாடலை ஆர்க்கெஸ்ட்ராவில் பாடியதாலோ அல்லது எப்போதும் துறு துறுவென, யாருடனும் ஒரு வார்த்தை கூடக் கடிந்தோ, வன்மத்துடனோ பேசாத அவளின் நல்லியல்பாலோ நாங்கள் அவளுக்கு வைத்த பெயர் சிட்டுக் குருவி!

இயல்பு தான் இப்படியே தவிர மேடத்துக்கு நாக்கு நீளம். லீவுக்கு வீட்டுக்குச் சென்று திரும்பும் போது நல்லா குண்டாகி வருவாள். ஹாஸ்டல் சாப்பாடு நாக்கைத் தீண்டியதுமே மெலிந்து விடுவாள்.
சுத்தம் சுத்தம் என்று அறையைச் சுத்தம் செய்து ஒழித்து வைப்பதையே தொழிலாகக் கொண்டிருப்பாள்.

நானும் சுகந்தியும் (இன்னொரு தோழி) “உனக்கு இது ஒரு மேனியா மாதிரி, சுத்தம் செய்யற வியாதி வந்திருக்கு, சீக்கிரம் ஒரு டாக்டரைப் பாரு” என்று பயமுறுத்தியதை உண்மையென நம்பி பயந்து கிடந்தாள் சில காலம்!

சிட்டுக் குருவி இப்போது தனது கூட்டில் கணவரையும் இரு சிறிய ஆண் குருவிகளையும் பொறுப்பாகப் பேணி வருகிறார்.
நேஹா பிறந்த போது சந்தித்தோம். மற்றபடி தொலைபேசியில் நலம் விசாரிப்புகளுடன் தொடர்கிறது எங்கள் நட்பு.

சுகந்தி – இவளிடம் நான் கற்றுக் கொண்டது ஏராளம். அதில் முக்கியமானது கடும் உழைப்பு. சிறு வயதிலேயே இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதாலும் பெரிய குடும்பத்தின் க்டைக்குட்டி என்பதாலும் மிகவும் செல்லமாக வளர்ந்தவள். ஆனால் படிப்பதிலும், மற்ற வேலைகள் செய்வதிலும் அப்படிச் சூட்டிகையாக வளர்ந்திருந்தாள்.

அவளைப் போல் ஒரு ரூம்மேட் அமையாதிருந்தால் நான் கல்லூரிப் படிப்பைச் சீரியஸாக எடுத்துக் கொண்டிருப்பேனா என்பது சந்தேகமே.

அதே போல் வயதுக்கு மீறிய அவளது அறிவு முதிர்ச்சியும் நிதானமும் நான் இன்று வரை வியப்பவை.
என்னுடைய நிதானமற்ற சுபாவத்தால் தடம்மாறாமல் என்னைப் பல சமயம் தடுத்தாட் கொண்டது இவளது நட்பு தான்.

பாலா என்ற பாலமுருகன் - ஆண்கள் கூட பெண்களுக்கு அற்புதமான் நண்பர்களாக இருக்க முடியும் என்று முதன் முதலில் நிரூபித்ததற்கே நான் இவருக்கு நன்றி சொல்லவேண்டும். கல்லூரி இரண்டாம் ஆண்டு தொடங்கி எனக்கு உற்ற நண்பரானவர். வகுப்பறை தவிர வேறு எங்கும் என்னைச் சந்திக்க முயன்றது கூடக் கிடையாது. அதிபுத்திசாலி. ஆனால் படு சோம்பேறி!

மிகவும் ஜாலியான பேர்வழி. எனக்கு மட்டுமல்ல, பல இனம் ஊர்களிலிருந்தும் வந்து படித்த என் வகுப்பு மாணவர்களிடையே பல வேறுபாடுகள், குழுக்கள் இருந்தன. ஆனால் வகுப்பில் அனைவருக்கும் இனிய நண்பர் பாலா தான். இவரது நட்பு முழுமையாகக் கிடைத்ததில் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.

கல்லூரி முடிந்தும் பல ஆண்டுகள் கடிதம் அல்லது இமெயில் தொடர்பு இருந்தது. பின்பு காலப் போக்கில் காரணமேயின்றி சற்றே இடைவெளி தோன்றியது.

ஆனால் நட்பின் பலம் என்னெவென்று சில வாரங்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட சோதனையின் போது புரிந்தது. மிகவும் வேதனையில் இருந்த போது என்னைத் தொடர்பு கொண்டு,

“உன் பதிவுகள் அனைத்தையும் அமைதியாகப் படித்துக் கொண்டு வருகிறேன். எதற்கும் கவலைப்ப்படாதே; மனம் தளராதே. எழுதுவதையும் நிறுத்திவிடாதே” என்ற ரீதியில் அவரது வார்த்தைகளைக் கண்டு அப்படியே உட்கார்ந்து அழுது விட்டேன்.

எதிர்பாராத நேரத்தில், வெகு நாள் தொடர்பு இல்லாமலிருந்த போதும், நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்ன மாதிரி இருந்தது. மிகப்பெரிய பலம் வந்தது. நண்பா, உனது நட்புக்குத் தலை வணங்குகிறேன்.

இன்னும்...ஸ்ரீவித்யா, அனு, ராம்கி, ராஜி, என்று இப்பதிவில் நான் சொல்லாமல் விட்ட, தனித்துவம் வாய்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள். இப்பதிவுலகம் மூலம் கிடைத்த நண்பர்கள் உட்பட. அவர்கள் அனைவர் பற்றியும் எழுத இன்றொரு நாள் போதாது. ஆனால் வேறொரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக எழுதுவேன். அன்பு, நட்பு, நேசம் என்பதைத் தவிர மனித வாழ்க்கையில் அர்த்தம் மிகுந்ததாக வேறு என்ன இருக்கிறது?

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!