Friday, November 12, 2010

மாமாவின் பிறந்தநாள் விருந்து!

நான் ஒன்பதாவது படிக்கும் போது எங்கள் பள்ளியில் நடந்த ஒரு குழந்தைகள் தினத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா. ஆம், வித்தியாசம் தான். வழக்கமாக குழந்தைகள் தினமென்றால், விடுமுறை இருக்கும். முதல் நாளே மூன்று மணிக்கு மைதானத்தில் கூடுவோம். பெரிய வகுப்பு பிள்ளைகள் யாரேனும் நேருவைப் பற்றி ஆசிரியர் எழுதிக் கொடுத்ததை மனனம் செய்து மைக்கின் முன் ஒப்பிப்பார்கள். மூன்று நான்கு சமர்த்துப் பெண்கள் சேர்ந்திசை பாடுவார்கள். பின்பு தலைமை ஆசிரியையின் உரையுடன் இனிப்புகள் வழங்கப்பட்டு, ஜனகண மண பாடி முடித்து கேட் திறக்கப்பட்டவுடன் "ஹேப்பி சில்ரன்ஸ் டே, ஹேப்பி சில்ரன்ஸ் டே" என்று கத்தியபடி வெளியே ஓடிவிடுவோம்.

ஆனால் மேற்சொன்ன வருடம் எங்கள் பள்ளியில் "ஏழைகளுக்கு உணவளிக்கும் விழாவாக" நடத்த ஆசைப்பட்டார் எங்கள் பள்ளித் தாளாளர். அதற்கு Poor feeding என்று பெயரும் வழங்கி வந்தது. அதற்குக் காரணம் எங்களுக்குப் பின்னாளில் தான் புரிந்தது. தாளாளரின் மகள் தான் பள்ளியை நிர்வகித்து வந்தார். அவர் அந்த ஆண்டோடு வெளிநாட்டுக்குச் சென்று புதிய வாழ்க்கை தொடங்கும் திட்டத்திலிருந்ததால் போகும் முன் ஏதாவது 'நல்ல காரியம்' செய்யவோ அல்லது கிடைத்த நல்ல வாழ்க்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலோ இதைச் செய்ய முன்வந்திருக்கிறார் என்பது.

முதல் நாள் மாலை, ஒன்பதாவது பத்தாவது படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் சிலருடன் அருகில் இருந்த குடிசைப் பகுதிக்குச் சென்றோம்.
அங்கு ஒவ்வொரு குடிசையாகச் சென்று குழந்தைகள் இருக்கிறார்களா என்று விசாரித்து அவர்களைக் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டோம்.

பள்ளியை ஒட்டியே இருந்தாலும் அந்தக் குடிசைப் பகுதிக்குள் அதுவரை நாங்கள் சென்றதே இல்லை. சொல்லவே வேண்டாம் மழைக்காலத்தில் சென்னையில் அப்படிப்பட்ட பகுதிகள் எப்படி இருக்குமென்று.
வெள்ளை ஷூக்கள் அழுக்காகிறதே என்ற பெருங்கவலையுடனும் ஒரு வித அசூசையுடனும் சென்று குழந்தைகளை அழைத்தோம்.

அங்கிருப்பவர்களிடம் நாங்கள் பேசியது அதை விடக் கொடுமையான ஜோக்.

வயதான கிழவி ஒருவர் குடிசையில்:
"எங்க ஸ்கூல்ல குழந்தைகள் தினவிழா. உங்க வீட்டுக் குழந்தைகளை அனுப்பி வைங்க."

"குழந்தைகள் தினம்னா?"

"நேரு பிறந்த நாள்."

"நேருவா, ....ஆங்! சரி சரி."

"வரோங்க..."

"சரி, அவருக்கு எப்போ ஓட்டுப் போடனும்?"

ஙேஏஏஏஏஏஎ!!!

சில குடிசைகளில் படித்த இளைஞர்கள் இருந்தார்கள்.

"சில்ரன்ஸ் டேவாப்பா, கண்டிப்பா அனுப்பி வைக்கிறோம்" என்று வறுமையில் இருந்தாலும், அறிவிலும் நாகரிகத்திலும் யாருக்கும் குறைந்தவர்களல்ல என்று காட்டிக் கொள்ள முனைந்த அவர்களிடம் பேசும் போது அந்தப் "புவர் ஃஃபீடிங்" என்ற வார்த்தை ஏனோ மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.

முதலில் சந்தித்த அந்த மூதாட்டியைப் போல் வெகுளித்தனமாய்க் கேள்வி கேட்ட பெரியவர்களையும் குழந்தைகளையும் அதட்டி அடக்குவதையும் அவர்களுக்கு நேரு, குழந்தைகள் தினம் ஆகிய ஆகப் பெரும் விஷயங்களை விளக்கும் பொறுப்பையும் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். நாங்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தோம். ஆம், அங்கிருந்த பெரும்பாலான குழந்தைகளுக்குத் தங்கள் நேரு மாமாவைத் தெரிந்திருக்கவில்லை.

அடுத்த நாளும் வந்தது. எல்லோருக்கும் உணவு பரிமாறுவது எங்கள் வேலை தான். இரண்டு இட்லி, ஒரு வடை, சட்னி, சாம்பார், ஒரு வாழைப்பழம். இது தான் மெனு. இட்லி இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் பரிமாறக் கூடாது என்றும் சட்னி சாம்பார் எவ்வளவு வேண்டுமானாலும் ஊற்றலாம் என்றும் எங்களுக்கு அறிவுரைக்கப்பட்டது. பிறகு கூட வந்த பெரியவர்களுக்கு வேட்டி சேலை வழங்கும் வைபவம் ஆகியவை புகைப்படப் பதிவுடன் இனிதே நடந்தேறியது. (பள்ளி ஆண்டிறுதி அறிக்கையில் இவை அனைத்தும் பெருமையோடு வாசிக்கப்பட்டது. ) இவ்வாறாகத் தங்கள் உள்ளம் கவர்ந்த நேருமாமாவின் பிறந்த நாளை அக்குழந்தைகள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வீடு திரும்பினர்.

Thursday, November 4, 2010

தீபாவளி!

தீபாவ‌ளி என்றாலே சிறு வ‌ய‌து முத‌ல் தோன்றுவ‌து... அதிக‌ம் எதிர்பார்க்க‌வைத்து ஏமாற்றும் ப‌ண்டிகை என்ப‌து தான்.

இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன் ப‌ள்ளியில் தோழிக‌ளைக் க‌ட்டிய‌ணைத்து வாழ்த்துக்க‌ள் ப‌ரிமாறிக் கொள்ளும் போதும், க‌ரும்ப‌ல‌கையில் "ஹாப்பி தீபாவ‌ளி" எழுதி அழ‌க‌ழ‌காய்ப் ப‌ட‌ம் வ‌ரைந்து வைக்கும் போது உற்சாகம் பீறிடும். வ‌ழ‌க்க‌மாய்ப் ப‌ருப்பும் புளியும் கொதிக்கும் சமைய‌ல‌றை ப‌ல‌கார‌ங்க‌ளும் எண்ணெய் ஸ்ட‌வ்வுமாய்ப் புதுக்கோல‌ம் கொள்ள, அம்மாவுக்கு உத‌வும் போது பெருமித‌ம் பொங்கும். வாங்கிய‌ ஒரே புத்தாடையைப் ப‌த்து த‌ட‌வை திற‌ந்து பார்க்கும் போது ம‌ன‌ம் புல்ல‌ரிக்கும். டமால் டுமீல் வெடிச்ச‌த்த‌ங்க‌ளுட‌ன் பொழுது விடிவ‌த‌ற்க்குள் ஏனோ ப‌ண்டிகையின் மொத்த‌ க‌ளையும் வ‌டிந்து விடும்.

அதான் தீபாவ‌ளி வ‌ந்துடுச்சே..! இனி போக‌த் தானே போகுது என்று! எப்போதும் என்னிடம் ஜோராக சண்டை போடும் அண்ணனும் அவன் வெடிவெடிக்கும் அழகைப் பார்க்க, ஊதுவத்தி கொளுத்தி எடுத்து வர‌ என்று என்னிடம் எடுபிடி வேலை வாங்குவதற்காக அன்று அன்புடன் இருப்பான். அதனால் போர் தான்! :)

அக்காவும் அங்கிளும் வ‌ந்திருந்த‌ அவ‌ர்க‌ளின் த‌லை தீபாவ‌ளி தான் நாங்கள் மிக‌வும் ச‌ந்தோஷ‌மாக‌க் கொண்டாடிய‌ தீபாவ‌ளி. சிவ‌ப்பு நிற‌த்தில் என‌க்கு ஒரு "கீதாஞ்ச‌லி ட்ரெஸ்" வாங்கி வ‌ந்திருந்தார்க‌ள். ரொம்ப அழகாக இருககும். வெகு நாட்க‌ள் வ‌ரை அதை ஆசையாக‌ப் போட்டுக் கொண்டிருந்தேன்.

அத‌ற்க‌டுத்த‌ ஆண்டுகள் அவ‌ர்க‌ள் வ‌ர‌வில்லை என்ப‌தாலேயே சுர‌த்திழ‌ந்த‌து. க‌ல்லூரியில் படித்த போது முதல் ஆண்டு த‌விர‌ தீபாவ‌ளிக்கு வீட்டுக்கே வ‌ர‌ இய‌ல‌வில்லை. ச‌ரியாக‌ தீபாவ‌ளிக்கு அடுத்த‌ நாள் செம‌ஸ்ட‌ர் ப்ராக்டிக‌ல் வைத்திருப்பார்க‌ள். அத‌னால் ப‌க்க‌த்து ஊர்க‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌விர‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் விடுதியிலேயே தீபாவ‌ளியைக் க‌ழித்தோம். அதுவும் ஒரு தினுசாக‌ ந‌ன்றாகத்தா‌ன் இருந்த‌து. இறுதியாண்டு டே ஸ்கால‌ர்ஸ் வீடுக‌ளுக்குச் சென்றோம்.

வேலைக்குச் செல்ல‌த் தொட‌ங்கிய‌வுட‌ன் எந்த‌ப் ப‌ண்டிகையுமே ஒரு நாள் விடுமுறை என்பதைத் தவிர பெரிதாக‌த் தெரிய‌வில்லை. தீபாவ‌ளிக்கென்று ஆட‌ம்ப‌ர‌மாக‌ ஆடைக‌ள் வாங்குவ‌தும் அற‌வே பிடிக்காத‌ ஒன்றாகி விட்ட‌து. புதிதாக‌ ஏதாவ‌து அணியப் பிடிக்கும்; அது வ‌ழக்க‌மாக‌ அலுவ‌ல‌க‌த்துக்கு அணிகிறாற் போல் உப‌யோக‌மாக‌ இருந்தால் ச‌ரி. "இதுவா உன் தீபாவ‌ளி ட்ரெஸ்" என்ற‌ கேள்விக்குப் புனன‌கைப்ப‌து வெகு நாட்களுக்கு முன்பே ப‌ழ்க்க‌மாகி விட்ட‌து. தொலைக்காட்சிக்கு முன் உட்காரக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே நூலகத்திலிருந்து புத்த‌கங்கள் வாங்கி வந்து நிம்ம‌தியாக‌ நாள் பூராவும் ப‌டித்துக் க‌ழித்த‌ தீபாவ‌ளிக‌ள் உண்டு.
காசு கொடுத்துப் ப‌ட்டாசு வாங்கிப் ப‌ழ‌க்க‌மே இல்லை வீட்டில். சிவகாசியில் இருந்த அப்பாவின் ஆருயிர் ந‌ண்ப‌ர் தீபாவ‌ளிக்கு ஒரு வார‌ம் முன்பே பெரிய‌ ப‌ட்டாசுப் பொட்ட‌ல‌ம் ஒன்றை அன்புட‌ன் அனுப்பி விடுவார். "ப‌ட்டாஸ் அங்கிள்" என்றே சிறு வய‌தில் அவ‌ரை அழைப்போம்.நாங்க‌ள் மட்டுமே வெடித்துத் தீருவ‌தில்லை அது. வீட்டுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கும் அக்க‌ம் ப‌க்க‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் கொடுத்தும் தீர்க்க‌ வேண்டியிருக்கும். வெடிச்ச‌த்த‌ம் என‌க்குப் பிடிக்காது, வெடி வெடிக்க‌வும் ப‌யம்! ஆனால் வாண‌ங்க‌ளும் ம‌த்தாப்புக்க‌ளும் மிக‌வும் பிடிக்கும். சில‌ ஆண்டுக‌ளாக‌ அந்த‌ ஆர்வ‌மும் அற்றுப் போய் விட்ட‌து.

"பண்டிகையை வரவேற்க" என்று ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தச் சில ஆண்டுகளில் ப‌ண்டிகைகள் அழகாக அமைதியாக‌ வந்து போகின்றன. இந்தத் தீபாவளி நண்பர்களும் குழந்தைகளும், போட்ட கும்மாளங்களுடன் வீட்டிலேயே இனிமையாகக் கழிந்தது.

ஆனால் வானத்தில் பூப்பூவாய் வெடித்துச் சிதறும் வாணங்களில் மனதைப் பறி கொடுக்கையில் வெடிம‌ருந்தின் வாடையில் க‌ருகும் பிஞ்சுகளும் ப‌லியாகும் ச‌கோத‌ர‌ர்களும் நினைவுக்கு வந்து குற்றவுணர்ச்சி கொல்கிறது.
ப‌ட்டாசுக‌ளையே மொத்த‌மாக‌த் த‌டை செய்ய‌ வேண்டுமென்றெல்லாம் வைராக்கியத்துடன் எண்ணிய நினைப்புகள், ம‌த்தாப்புவைப் பார்த்துக் குதூகலிக்கும் குழ‌ந்தைகளின் சிரிப்பில் உடைந்து போவ‌து ச‌ரியா த‌வ‌றா என்று புரிய‌வில்லை. ஆனால் அப்ப‌டித் தானே நுழைகிற‌து ஒவ்வொரு வீட்டிலும் தீபாவ‌ளி?