Wednesday, December 31, 2008

அத்தாட்சி


"நான் என்னவோ வேண்டுமென்றே தொலைத்து விட்டதாகப் பழி போட்டாயே எல்லாம் இங்கே தான் இருக்கிறது. அறையைச் சுத்தம் செய்யும் போது கிடைத்தது; இந்தா." ஒரு கற்றை பழைய காகிதங்களை நீட்டினார் அவர். அதை வாங்கும் முன் அவரது மனைவியிடமருந்து பறித்துக் கொண்டாள் அங்கு வந்த அவரது மகள். "இதெல்லாம் என்ன? உங்கள் காதல் கடிதங்களா? நான் படித்து விட்டுத் தருகிறேன். வாங்கிக் கொண்டு ஓடும் மகளைச் சலனிமின்றி பார்க்கின்றனர் அந்தத் தம்பதியர். அது நாகரிகம் இல்லை என்று தடுக்க அவர்களுக்கு மனமில்லை. அவள் நினைவு தெரிந்து சண்டையும் மனக்கசப்புகளுமே பகிர்நது வந்த தாங்கள் கூட ஒரு காலத்தில் காதலித்து மகிழ்ந்து மற்ற பெற்றோரைப் போல் இருந்து இருக்கிறோம் என்று தங்கள் மகள் புரிந்து கொள்ள‌ இந்த நைந்து போன காகிதங்கள் உதவட்டுமே என்று நினைத்தார்கள் போலும்.

அவள் அக்கடிதங்களை வெகு நேரம் பிரிக்காமலே கையில் வைத்துப் பார்த்தபடி இருந்தாள். "எதுக்குத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? எப்பப் பாரு சண்டை?" என்று தனது விமர்சனங்களுக்கு எப்போதும் ஆளாகும் பெற்றவர்கள் என்றாவது ஒரு காலத்தில் மனமொத்து இருந்திருப்பார்கள் என்று அறிந்து உணர்ந்து கொள்ளும் தீராத ஏக்கம் தீரப்போகிறது என்று நினைத்து வாங்கிக் கொண்டு வந்த போது இருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்து போய் இருந்தது. அதுவும் மறுப்பேதும் சொல்லாமல் அவர்கள் அவளிடம் தந்து விட்டது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தான் என்றுமே பார்த்திராத யாரோ அந்நியரைச் சந்திக்கப் போகும் அனுபவமாகத் தோன்றியது அக்கடிதங்கள். நிமிட நேரத்தில் அவளுக்கு அக்கடிதஙளைப் படிக்கும் ஆர்வம் சுத்தமாக அற்றுப் போனது. தான் அவர்களைப் பற்றி ஒன்றுமே அறிந்திருக்கவில்லையோ என்று கூடத் தோன்றியது.அந்த‌ர‌ங்கம் புனித‌மான‌து என்ற‌ க‌தை ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.
"அம்மா! சாரிம்மா. நான் எதையும் ப‌டிக்க‌ல‌. இந்தா ப‌த்திர‌மா வெச்சுக்கோ. ஆனா என்னிக்காவ‌து தூக்கிப் போடணும்னு தோணினா என் கிட்டே குடு. உங்க‌ளுக்கு இது எப்படியோ என‌க்கு இது ரொம்ப‌ முக்கிய‌ம். என்னைப் பெற்றவ‌ர்க‌ள் ஒருவ‌ரை ஒருவ‌ர் காத‌லித்து இருக்கிற‌ர்கள் என்ப‌து என‌க்கு ரொம்ப‌ முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம்." சொல்லிவிட்டு ந‌க‌ரும் ம‌க‌ளைக் க‌ண்ணில் நீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த‌த் தாய்.

Friday, December 19, 2008

ஒரு கால் சென்டரில் ஓரிரவு

One Night @ the Call Center
இந்த‌ப் புத்த‌க‌த்தைப் ப‌ற்றி வெகு நாட்க‌ளாக‌ அறிந்திருந்தாலும் 2 நாட்க‌ளுக்கு முன்பு தான் ப‌டிக்க‌ முடிந்த‌து.
இந்தியா முழுவதும் ப‌ல்வேறு சிறு ந‌க‌ர‌ங்க‌ளில் 18 முத‌ல் 30 வ‌ய‌து வ‌ரை சுமார் 300,000 இளைஞ‌ர்க‌ள் கால்சென்டர் துறையில் ப‌ணிபுரிகிறார்க‌ள்.அமெரிக்க நுகர்வோருக்கு வாஷின் மெஷினைப் பழுது பார்க்கவும் மைக்ரோவேவ் அவ‌னை உப‌யோகிக்க‌வும் தொலைபேசியில் பொறுமையாக‌ச் சொல்லித்த‌ர‌ வேண்டியது அவ்ர்க‌ள‌து வேலை. அவ‌ர்க‌ளுக்கு இவ‌ர்க‌ள் இந்திய‌ர்க‌ள் என்ப‌து எக்கார‌ண‌ம் கொண்டும் தெரிந்து விட‌க் கூடாது. அமெரிக்க‌ப் பெய‌ர்க‌ள் வைத்துக் கோண்டு அமெரிக்க‌ ஆங்கில‌ம் பேசுவ‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், அன்னாட்டு ம‌க்க‌ளின் சின்னச் சின்னப் ப‌ண்டிகைக‌ள், லோக்க‌ல் செய்திக‌ள் ஆகிய‌வ‌ற்றிலும் அத்துப்ப‌டியாக‌ இருக்க‌ வேண்டும்.
அப்ப‌டி ஒரு கால்சென்ட‌ரில் இரவு நேர ஷிப்டில் ப‌ணிபுரியும் ஆறு ந‌ண்ப‌ர்கள், (மூன்று ஆண்க‌ளும் மூன்று பெண்க‌ளும்)அவ‌ர்க்ள‌து வாழ்வின் அவலங்கள்,அவ‌ர்க‌ள‌து கோளாறான‌ வாழ்க்கை முறை,அவர்கள் சந்திக்கும் அவமானங்கள், இவற்றில் இலகுவாகப் பயணிக்கிறது கதை. ஒரு நாள் இரவு அவர்களுக்கு வினோத‌மான் தொலைபேசி அழைப்பு வ‌ருகிற‌து. க‌ட‌வுளிட‌மிருந்து! அது அவ‌ர்களின் சிந்தனைகளிலும் செயல்களிலும் என்னவிதமான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்பதைச் சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறார் இப்புத்தகத்தை எழுதிய சேத்தன் பகத்.
சின்ன நெருடல். கதை மாந்தரை வட மாநிலங்களின் க்ள்ப் கலாசாரங்களைப் பொதுவாக நம் நாட்டு இளைஞர்களின் கலாசாரமாகப் பொதுநிலைப் படுத்தியுள்ளதை ஏற்க முடியவில்லை. அதுவும் அவர்களின் கால்சென்டர் கலாசாரத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு என்பதை ஆசிரியர் அழுத்தமாக முன்வைக்க வில்லை. இது போல் சில இடங்களில் பாத்திரங்கள் கொஞ்சம் அந்நியப்பட்டுப் பொகிறார்கள். மற்றபடி முற்போக்கு இல‌க்கிய‌ங்க‌ள் விரும்பும் வாச‌க‌ர்க‌ள் ப‌டிக்க‌ வேண்டிய‌ நூல்.
த‌மிழில் மொழிபெய‌ர்க்க‌த் த‌குந்த‌தா என்று ப‌டித்துவிட்டு (அல்ல‌து ஏற்க‌ன‌வே ப‌டித்த‌வ‌ர்க‌ள்) யாராவ‌து சொல்லுங்க‌ள்.