Wednesday, September 29, 2010
Wednesday, September 22, 2010
நேஹா நேரம்!
இப்போது நிறைய பேச ஆரம்பித்து விட்டாள். சொல்வதைப் புரிந்து கொண்டு தெளிவாகப் பதில் சொல்கிறாள். இயல்பான உரையாடலை அவளோடு நடத்த முடிகிறது; அதனால் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை. பலதை மறந்தும் விடுகிறேன். ஆனாலும் சிலவற்றைப் பதிய விரும்புகிறேன்.
***********************
தலையில் அடிபட்டுத் தையல் போட மருத்துவமனைக்குச் சென்ற போது:
வலி தாங்காமல் அழுது கொண்டே: "அழக்கோடாது..பேட் ஆபிட். பேட் ஆபிட். ஊசி வேண்டாம். சரியாப் பேயிரும்...சரியா?"
நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றடையும் வரை, நாங்களும் வருவோம் என்று சொல்லிக் கொண்டிருந்ததால், "தீபாம்மா நல்ல அம்மா. ஊசி போட வேண்டாம். "
இதெல்லாம் சுற்றி இருந்த நர்ஸ்களிடம் அவள் சொன்னதாக எங்களிடம் சொன்னது! குழந்தைக்கு அடி எப்படி இருக்கிறது என்பதை விட இதைத் தான் சுவாரசியமாக முதலில் பகிர்ந்து கொண்டனர்!
***********************
வீட்டுக்கு நான் வந்ததும் முதல் வேலையாக இப்போதெல்லாம் ஒரு பாட்டு: "என்னா வாயின்ட்டு வந்துக்கே...என்னா வாயின்ட்டு வந்துக்கே..."சாக்லெட்டுகள் வாங்கிக் கொடுப்பது எனக்குப் பிடிக்காது. அதனால் ஒரு சின்ன பலூனோ, விக்ஸ் மிட்டாயோ, லாலி பாப்போ கட்டாயம் பையில் வைத்திருக்க வேண்டி இருக்கிறது.
***********************
என்றாவது தான் வந்தவுடன் கொஞ்ச விடுகிறாள். பெரும்பாலும், "ஏய் கொஞ்சாதே, ஓடீஇருவேன்...போய் ஷாப்பிடு. குளிச்சு வா..." என்று அதிகாரம் தான்.
***********************
அவளைக் குளியலறையில் நிறுத்தி விட்டு வெந்நீர் எடுத்து வரச் சென்றேன். கொண்டு வரும் போது, "பாப்பாக்குச் சுடு தண்ணியா? இருமலுக்கு நல்லார்க்குமா??"
***********************
சமையலறையில் வந்து நின்று கொண்டு:"அம்மா என்ன செய்ற? சமையல் பண்றியா?" "சிக்கன் செய்றியா?" "அங்காயம் உரிக்கிறியா..." ரன்னிங் கமென்ட்ரி கொடுத்தாகிறது.
***********************
பால் அவளுக்குக் கலந்து கொடுத்ததும், "அம்மாக்கு?" நானும் கூட டம்ளரைக் கையில் வைத்துக் கொண்டால் தான் குடிக்கிறாள்."அம்மா, கண்ணு காமி, மூக்கு, காது"...என்று ஒவ்வொன்றாகத் தொட்டுச் செக் செய்கிறாள்.
"எல்லாம் சரியா இருக்கா?" - கேட்கிறேன்.
"ம்..பாப்பாக்கு?" என்று அவளுக்குச் செக் செய்யச் சொல்கிறாள்!
***********************
"தலை வலிக்குதா, தேச்சு விடறேன்.. சரியாப் பேயிரும், இனிமே அழாத என்ன? "
***********************
சில சமயம் ஏதாவது விஷமம் செய்யும் போதோ, எடுக்கக் கூடாதது ஏதாவது கையில் வைத்துக் கொண்டிருந்தாலோ, அருகில் சென்றால், "ஏய் வேணாம்...கிட்ட வராதே..ஒடீருவேன்!" என்று ஓடுகிறாள்.
***********************
On the downside :(: நான் ஏதாவது பாட வாய் திறந்தாலே "பாடாதே.." என்று ஒரே கத்தல். பாத்ரூமுக்குள் கூடப் பாட விடமாட்டேனென்கிறாள். கதவருகே நின்று கொண்டு "பாடாதே, பாடாதே." ஒரு நாள் அப்படிச் சொல்லி விட்டு அவளாகவே "அம்மா பாடாதே சொல்லக் கோடாது" என்றாள். நான் கொஞ்சம் மகிழ்வதற்குள் "பாடாதீங்கம்மாஆஆஆ" சொல்லணும் என்றாள்.
??!!!@#!@#
***********************
Tuesday, September 21, 2010
கண்ணாமூச்சி
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
மரத்தின் பின் நின்று 1, 2, 3 எண்ணிக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.
"ஷ்! நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்."
"அப்படியா? யாரிடமிருந்து?"
"என்னிடமிருந்தே."
"ஓ! எப்படி உன்னைக் கண்டுபிடிப்பாய்?"
"100 எண்ணி முடித்ததும் லேசாக எட்டிப் பார்ப்பேன்! பின் வெளியே வந்து விடுவேன்"
"நான் உன் கூட விளையாட வரவா?"
"ஓ! நீங்கள் அந்த மரத்தின் பின் நின்று உங்களிடமிருந்தே ஒளிந்து கொள்ளுங்கள்!" - உற்சாகமாகக் கூறினாள் சிறுமி.
Friday, September 17, 2010
குழந்தைகள்
அவர்கள் வழக்கமாகத் தூங்கப் போகும் நேரம் தாண்டி விட்டது; இருந்தாலும் ஒருவரும் தூங்கச் செல்லவில்லை. எப்படித் தூங்குவது? பெரியவர்கள் திரும்பி வந்ததும், 'அந்த வீட்டுக் குழந்தை எப்படி இருந்தது? என்ன உடை அணிந்திருந்தது? விருந்தில் என்னென்ன சாப்பிட்டார்கள்?' என்றெல்லாம் கேட்டுத் துளைக்க வேண்டாமா?
மேஜை மீது லோட்டோ சீட்டுகளும், துண்டுக் காகிதங்களும், கடலைத் தோல்களும் இறைந்து கிடக்கின்றன. மேலே ஒரு விளக்கு தொங்குகிறது. ஒவ்வொரு குழந்தையின் முன்னும் இரண்டு சீட்டுகளும், எண்களை மறைத்துக் கொள்ள சிறு கண்ணாடித் துண்டுகளும் இருக்கின்றன. மேஜையின் நடுவே ஒரு சிறு தட்டில் ஐந்து கோப்பெக்குகள்* கிடக்கின்றன.
குழந்தைகள் காசு வைத்து விளையாடுகிறார்கள். ஒரு கோபெக் தான் பணயம். ஆனால் நிபந்தனை என்னவென்றால் யாராவது அழுகுணி ஆட்டம் ஆடினால் உடனே விரட்டியடிக்கப் படுவார்கள். கூடத்தில் குழந்தைகளைத் தவிர வேறு யாருமில்லை. சமையலறையில் சமையற்காரரும் அவரது உதவியாளரும் இருக்கிறார்கள். முன்னறையில் குழந்தைகளின் பெரிய அண்ணன் வாஸ்யா, பத்தாவது படிக்கிறவன், சோஃபாவில் சோம்பிக் கொண்டு படுத்திருக்கிறான்.
குழந்தைகள் ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கிரிஷாவின் முகத்தில் தான் அதீத ஆர்வம் கொப்பளிக்கிறது. அவனுக்கு ஒன்பது வயதாகிறது. மண்டை தெரியுமளவு வெட்டப்பட்ட க்ராப் தலையும், குண்டுக் கன்னங்களும் தடித்த உதடுகளும் கொண்ட அவன் நான்காவது படிக்கிறான். அனைவரையும் விட அறிவாளியாகவும் அவன் கருதப்பட்டான். அவன் விளையாடுவது முழுக்க முழுக்கக் காசுக்காகத் தான். அந்தத் தட்டில் மட்டும் ஐந்து கோப்பெக்குகள் இல்லாவிட்டால் எப்போதோ உறங்கச் சென்றிருப்பான்.
அவனது பழுப்பு நிறக் கண்கள் பொறாமையோடு மற்றவர் கைகளிலிருக்கும் சீட்டுக்களைப் பின்தொடர்கின்றன. வேறு யாராவது ஜெயித்து விடுவார்களோ என்ற பயமும், குழப்பமும் அவனை விளையாட்டில் ஒழுங்காகக் கவனம் செலுத்த விடாமல் தடுக்கிறது. முள்ளின் மேல் அமர்ந்திருப்பவன் போல் அமைதியற்று நெளிந்து கொண்டிருக்கிறான் அவன். ஒரு விளையாட்டில் வென்று விட்டால் பேராசையுடன் கோப்பெக்குக்ளைக் கைப்பற்றிப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறான்.
அவனது எட்டு வயதுத் தங்கை ஆன்னா, கூர்மையான நாடியும் அறிவுததும்பும் கண்களும் உடையவள் அவனைப் போலவே முகம் வெளிறி இருக்கிறாள். அவளுக்குக் காசு முக்கியமில்லை. ஆனால் விளையாட்டில் தோற்று விடக் கூடாது என்பதே அவள் கவலையாக இருக்கிறது.
ஆறுவயது சோனியா, சுருண்ட தலைமுடியும், விலையுயர்ந்த பொம்மைகளில் காணப்படுவது போல் சிவந்த கன்னங்களையும் கொண்ட ஆறுவயதுச் சிறுமி, லோட்டோ விளையாடுவதில் இருக்கும் மகிழ்ச்சிக்காகவே விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் முழுமையான குதூகலம் நிறைந்திருக்கிறது. யார் வென்றாலும் அவள் சிரித்துக் கொண்டே கைதட்டிப் பாராட்டுகிறாள்.
சிறிய உருவமான அல்யோஷாவோ வெறித்த கண்களுடன் சீட்டுக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குப் பேராசையும் இல்லை, வீறாப்புமில்லை. தூங்கப் போகுமாறு யாரும் அவனை விரட்டிவிடாதவரை அவனுக்குச் சரிதான். உணச்சிகளை எளிதில் காட்டாத சிறுவன் அவன்; ஆனால் மனதளவில் கொஞ்சம் துஷ்டன் தான். விளையாடும் போதை விட குழந்தைகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டாலோ, திட்டிக் கொண்டாலோ அவனுக்கு அலாதியான உற்சாகம் ஏற்படுகிறது. மற்றவர்கள் அவன் காசுகளைத் திருடிக் கொண்டுவிடுவார்கள் என்பதற்காகவே அவன் அங்கேயே இருக்கிறான்.
சமையற்காரரின் மகனான அந்திரே, கரிய நிறமும் மெல்லிய உருவமுமான அவன் எளிய பருத்திச் சட்டையும் கழுத்தில் தாமிரத்திலான சிலுவையும் அணிந்திருந்தான். அவனுக்குக் காசிலோ வெற்றியிலோ ஆர்வமில்லை. அவன் அந்த விளையாட்டில் இருக்கும் சிக்கலான கணிதத்தில் லயித்திருக்கிறான். உலகத்தில் எத்தனை எண்கள், கணிதங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சிக்கலில்லாமல் அறிந்து கொள்வதெப்படி என்று ஏதேதோ சிந்தித்தபடி இருக்கிறான்.
சோனியாவையும் அல்யோஷாவையும் தவிர எல்லாரும் எண்களைக் கத்துகிறார்கள். உற்சாகத்தைக் கூட்டுவதற்காக அவர்கள் எண்களுக்குப் புனைப்பெயர்களும் சூட்டி உள்ளனர். எடுத்துக்காட்டாக, பதினொன்று என்ற எண்ணுக்கு "இரு குச்சிகள்", ஏழுக்கு "துடுப்பு" - இப்படியாக விளையாட்டு குதூகலமாக நடந்து கொண்டிருக்கிறது.
அந்திரே தனக்கு வந்த ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிடுவதைக் கவனிக்கிறாள் ஆன்னா. மற்றொரு சமயமானால் அவனுக்கு அதைச் சுட்டிக் காண்பித்திருப்பாள். ஆனால் அவளது கௌரவம் ஒரு கோப்பெக்காக அதோ தட்டில் கிடக்கிறது. அதனால் ஒரு வெற்றிப்புன்னகையுடன் அமைதியாக இருந்து விடுகிறாள்.
"இருபத்து மூன்று", "ஒன்பது" - கிரிஷா கத்திக் கொண்டிருக்கிறான்.
"ஏய், ஒரு வண்டு, வண்டு..." திடீரென்று சோனியா கூச்சலிடுகிறாள். மேஜை மீது ஒரு பொன்வண்டு ஊர்ந்து கொண்டிருக்கிறது.
"அதை அடிச்சுடாதீங்க பாவம். அதுக்குக் குழந்தைங்க இருக்கலாம்." தனது ஆழ்ந்த குரலில் சொல்கிறான் அல்யோஷா.
சோனியா உடனே ஆச்சரியத்துடன் அந்த வண்டைப் பார்க்கிறாள். 'இதுவே இவ்ளோ சின்னதா இருக்கே, இதோட குழந்தைங்க எவ்ளொ குட்டியா இருக்கும்?'
"நாற்பத்து மூணு" பொறுமையிழந்து கத்துகிறான் கிரிஷா. ஏற்கெனவே நாலு விளையாட்டில் ஆன்னா ஜெயித்து விட்டாள் என்று அவனுக்கு எரிச்சல்.
அப்போது சோனியா கள்ளத்தனமாகச் சிரித்தவாறே சொல்கிறாள். "நான் ஜெயிச்சுட்டேன்!" - எல்லாரும் வாட்டமடைகின்றனர்.
"இரு இரு, சரிபார்க்கணும். நீ நிஜமாவே ஜெயிச்சிருக்கியான்னு."
சோனியாவின் சீட்டுகளைக் கவனமாகப் பொறுமையுடன் சரிபார்க்கிறான் கிரிஷா. அனைவரின் ஏமாற்றத்துக்கும் ஏதுவாக அவள் அழுகுணி ஆடியிருக்கவில்லை. சரியாகவே ஜெயித்திருக்கிறாள். இன்னொரு விளையாட்டு ஆரம்பமாகிறது.
தனக்குள் பேசிக் கொள்வது போல் ஆன்னா சொல்கிறாள். "நேத்திக்கு ஸ்கூல்ல ஃபிலிப் ஒண்ணு செஞ்சான். அவன் கண் இமையைத் திருப்பி விட்டுக்கிட்டான். அப்படியே பேய் மாதிரி இருந்தான்."
"நான் கூடப் பாத்தேன். எங்க க்ளாஸ்லே ஒரு பையான் அவன் காதை மட்டும் ஆட்டிக் காட்டுவான்." "எட்டு!"
அந்திரே கிரிஷாவைப் பார்க்கிறான். "அது நான் கூடச் செய்வேனே"
"எங்கே ஆட்டிக் காட்டு பார்க்கலாம்!"
அந்திரே உடனே தன் கண்கள், உதடுகள் எல்லாவற்றையும் அஷ்ட கோணலாக்கிக் கொள்கிறான். அவன் காதும் ஆடுவதாகப் பாவித்துக் கொள்கிறான். எல்லாரும் சிரிக்கின்றனர்.
"அந்த ஃபிலிப் ரொம்ப மோசமானவன். அன்னிக்குத் திடீர்னு நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டான். நான் வெறும் ஷிம்மீஸ் தான் போட்டிருந்தேன். எனக்கு ரொம்ப வெட்கமாப் போச்சு தெரியுமா." என்று பெரியமனுஷி போல் பொருமுகிறாள் சோனியா.
"கேம்!" கத்திக் கொண்டே காசுத்தட்டைக் கைப்பற்றுகிறான் கிரிஷா. "நான் ஜெயிச்சுட்டேன். வேணும்னா சரிபாத்துக்கங்க."
அந்திரேவின் முகம் வாடுகிறது. "அப்படின்னா இனிமே நான் விளையாட முடியாது."
"ஏனோ?"
"ஏன்னா, ஏன்னா, என் கிட்ட இனிமே காசில்லை."
"காசில்லன்னா ஆட முடியாது" - கிரிஷா.
அந்திரே மீண்டும் ஒருமுறை தன் பாக்கெட்டுகளில் கைவிட்டுத் துழாவுகிறான். சில ரொட்டித் துகள்களும், பென்சில் துண்டுகளும் தவிர எதுவும் அகப்படாமல் போகவே உதட்டைப் பிதுக்குகிறான். அவன் கண்கள் நிறைந்து எக்கணமும் அழுதுவிடுவான் போலிருக்கிறது.
அவனை அப்படிக் காணச் சகிக்காத சோனியா சட்டென்று கூவுகிறாள். "நான் உனக்காகக் காசு போடறேன். ஆனா நீ ஜெயிச்சப்பறம் ஞாபகமா திருப்பித் தந்துடணும் என்ன?" மீண்டும் காசு வைத்து ஆட்டம் தொடங்குகிறது.
திடீரென்று, "எங்கேயோ மணியடிக்கிறாங்க" என்கிறாள் ஆன்னா.
எல்லாரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டுச் சன்னலை நோக்குகிறார்கள். "சும்மா, உன்னோட பிரமை"
"இந்நேரத்துல கல்லறையில தான் மணியடிப்பாங்க" - அந்திரே.
"அங்கே எதுக்கு மணியடிக்கிறாங்க?"
"திருடங்க சர்ச்சுக்குக்ள்ள நுழைஞ்சிடாம இருக்கத் தான்."
"திருடங்க எதுக்குச் சர்ச்சுக்குள்ள வருவாங்க?" கேட்கிறாள் சோனியா.
"எல்லாருக்கும் தெரியும் எதுக்குன்னு. காவல்காரனை அடிச்சுப் போடத் தான்."
ஒரு நிமிடம் அனைவரும் பயந்து போய் அமைதியாகின்றனர். பின்னர் தோள்களைக் குலுக்கிக் கொண்டு விளையாட்டைத் தொடர்கின்றனர். இம்முறை அந்திரே ஜெயித்து விடுகிறான்.
"அவன் அழுகுணி ஆட்டம் ஆடிருக்கான்" என்கிறான் அல்யோஷா.
"பொய். நான் ஏமாத்தவே இல்ல." ஆத்திரம் தாங்க முடியாமல் அல்யோஷாவை ஓங்கித் தலையில் அடிக்கிறான் அந்திரே. பதிலுக்கு அல்யோஷா அந்திரே கன்னத்தில் அறைகிறான். இருவரும் அடித்துக் கொண்டு புரள்கின்றனர். இதையெல்லாம் தாங்க முடியாத சோனியா அழத் தொடங்குகிறாள். சிறிது நேரம் கூடமே களேபரமாகிறது. அதனால் ஆட்டம் முடிந்து விட்டதென்று எண்ணிவிட வேண்டாம். இதோ ஐந்தே நிமிடங்களில்குழந்தைகள் சிரித்துக் கொண்டு முன்போல் ஒற்றுமையாக விளையாடத் தொடங்கிவிட்டார்களே! கன்னங்களில் அழுத நீர்க்கோடு கூடக் காயவில்லை. ஆனால் அவர்கள் சிரிப்புக்க்குப் பஞ்சம் வந்து விடவில்லை. அல்யோஷாவுக்குப் பரமதிருப்தி. ஒரு சண்டை போட்டாகிவிட்டது!
பெரியவன் வாஸ்யா தூக்கக்கலக்கத்துடன் அங்கே வருகிறான்.
கிரிஷாவின் பாக்கெட்டில் சில்லறைகள் குலுங்குவது கேட்கிறது. "அநியாயம் அக்கிரமம்! சின்னப் பசங்களைப் போய் எப்படிக் காசு வெச்சு விளையாட விடுறாங்க? நல்லா வளக்கறாங்கப்பா."
ஆனால் கொஞ்ச நேரம் அவர்கள் விளையாடுவதைப் பார்த்து அவனுக்கும் ஆசை வருகிறது. "நானும் ஆட வரேன் அடுத்த ஆட்டத்துக்கு."
"ஒரு கோப்பெக்கைக் கீழ வை!"
"இதோ," என்று தன் பாக்கெட்டுகளில் கை விடுகிறான். "என் கிட்டே ஒரு கோப்பெக் இல்ல. நான் ஒரு ரூபிள் வைக்கிறேன்."
"இல்ல இல்ல, ஒரு கோப்பெக் தான் வைக்கணும்."
"முட்டாள்களா! ஒரு ரூபிள் ஒரு கோப்பெக்கை விட எவ்வளவோ பெரிசு." பெரியவன் விளக்க முற்படுகிறான். "யாராவது ஜெயிச்சீங்கன்னா எனக்குச் சில்லறை கொடுங்க."
"வேணாம், நீ போயிடு."
வேறு வழியில்லாமல் வாஸ்யா எழுந்து சமையலறைக்குச் செல்கிறான்; வேலையாட்களிடம் சில்லறை வாங்கி வர. அவர்களிடமும் இல்லை.
திரும்பி வந்து கிரிஷாவிடம் சொல்கிறான். "நீ எனக்கு ஒரு ரூபிளுக்குப் பத்து கோப்பெக் தா, போதும். என்ன சரியா? பத்தே கோபெக்."
கிரிஷா அவனைச் சந்தேகத்துடன் பார்க்கிறான்; இதில் ஏதாவது சூதிருக்குமோ என்று.
"முடியாது" என்று தன் பாக்கெட்டுக்குளை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறான்.
வாஸ்யா பொறுமையிழந்து அவர்களைக் கண்டபடி திட்டுகிறான். "முட்டாள்களா! பைத்தியங்களா!"
"நான் உனக்கு ஒரு கோப்பெக் வைக்கிறேன் வாஸ்யா" மீண்டும் சோனியா தன முன்வருகிறாள். அவன் அமர்ந்து விளையாட ஆரம்பிக்கிறான்.
"ஏய் இருங்க. என்னோட ஒரு காசைக் காணோம்." திடீரென்று கலவரத்துடன் கத்துகிறான் கிரிஷா. மேஜை மேலிருந்த விளக்கை அவிழ்த்துக் கையில் வைத்துக் கொள்கிறான் கிரிஷா. அவன் அண்ணன் அதைப் பிடுங்கித் திரும்ப இருந்த இடத்தில் வைக்கிறான். அனைவரும் மேஜை மேலே கீழே என்று தேட ஆரம்பிக்கிறார்கள். ஒரு வழியாகக் காசு கிடைக்கிறது. திரும்பவும் விளையாடலாம் என்று அமர்கிறார்கள்.
"சோனியா தூங்கிட்டா" அறிவிக்கிறான் அல்யோஷா.
தன் சுருள்தலைமுடிகொண்ட தலையைக் கைக்கடியில் வைத்து, இனிமையானதொரு ஆழ்ந்த துயிலில் இருக்கிறாள் சோனியா. அனைவரும் கோப்பெக்கைத் தேடத்தொடங்கும் போதே அவள் தூங்க ஆரம்பித்திருக்க வேண்டும்.
"வா, வந்து அம்மா படுக்கையில படுத்துத் தூங்கு." அவளை எழுப்பி அழைக்கிறாள் ஆன்னா. சற்று நேரத்திலெல்லாம் அம்மாவின் படுக்கை வினோதமாகக் காட்சியளிக்கிறது. சோனியா நன்றாகத் தூங்குகிறாள்; அவளருகே அல்யோஷா குறட்டை விட்டபடி; இவர்கள் காலருகே தலை வைத்து கிரிஷாவும் ஆன்னாவும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமையற்காரியின் மகனான அந்திரேவும் அவர்களருகிலேயே தூங்குகிறான். இவரகளுக்குச் சற்றுத் தொலைவில் தரையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன அந்தக் காசுகள். அடுத்த விளையாட்டு தொடங்கும் வரை அவற்றுக்கு யாதொரு மதிப்பும் இல்லை.
குட் நைட்!
* ருஷ்ய நாணயங்கள். 1 ரூபிள் என்பது 100 கோப்பெக்குகளுக்குச் சமம்.
ஒரு கோப்பெக் என்பது ஒரு பைசாவுக்குச் சமமாகக் கொள்ளலாம்.
Monday, September 13, 2010
பாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்
இல்லை இல்லை... ஆண்களுக்குத் தான் பிரச்னை அதிகமாக இருக்கிறது. அவர்களுக்காகப் போராட யாருமே வருவதில்லை.
:((
பதிவுலக ஆண்களின் பரிதாபநிலை கண்டு ஒரு பெண்ணாக வெட்கப்படுகிறேன் என்று எழுதினால் என்னை பெண்ணாதிக்கவாதிகள் குதறிவிடுவார்கள் என்று பயப்பட்டு ஒன்றும் சொல்லாமல் போகிறேன்...
சரி, விஷயத்துக்கு வருவோம்...பாதுகாப்பாகச் chat செய்ய என்ன வழி?
10...................
9.................
8.........
7........
6......
5. கணினியை ஆஃப் செய்யுங்கள்.
4. தொலை பேசியில் மறந்து போன பழைய நண்பர்கள் எண் இருக்கும். தேடி எடுத்து மனம்விட்டுப் பேசுங்கள்.
3. மூலைத் தெருவில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் போரடித்துக் கொண்டிருப்பார். அவரிடம் சென்று chat செய்யுங்கள்.
2. அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் செல்லுங்கள்; முடிந்தால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு.
1. அவர்கள் வீட்டிலிருப்பவர்களுடன் அளவளாவுங்கள். குழந்தைகளை விளையாட விடுங்கள்.
இவைதான் எனக்குத் தெரிந்த சில பாதுகாப்பான chat வழி முறைகள். இன்னும் இருந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
Wednesday, September 8, 2010
எரின் ப்ரோக்கோவிச்
பதில் பேசாமல் எதிராளியான பெண்மணி தண்ணீர் குடிக்க எத்தனிக்கிறார்; "ஓ! அந்தத் தண்ணி உங்களுக்காகப் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டது. ஹின்க்லியிலிருந்து!" என்கிறார் எரின்! அந்தப் பெண்மணி திடுக்கிட்டுத் தண்ணீரைக் குடிக்காமல் க்ளாஸைக் கீழே வைக்கிறார்.
"எரின் ப்ரோக்கோவிச்"கள் வெற்றி பெறுவது அமெரிக்காவில் தான் போலும்.
Thursday, September 2, 2010
ஏழெட்டுத் தொப்பிகளும் பத்துச் சட்டைகளும்
நான் உள்ளே நுழைந்து அமர்வதற்குள் ஒரு நூறு வார்த்தையாவது பேசியிருப்பாள் அந்தச் சிறுமி. "ஆன்டி, உங்க பொண்ணா? ரொம்ப க்யூட்டா இருக்கா...எனக்கு இந்த மாதிரி சின்னக் குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும். விளையாடிக்கிட்டே இருப்பேன். எங்க ஸ்கூல்லயே நான் தான் ரொம்பப் பிரில்லியன்ட். என்னைத் தான் எங்க களாஸ்ல லீடர் ஆக்கி இருக்காங்க எங்க மிஸ்..."
சுவாரசியமாகவும் ஆசையாகவும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவள் அம்மாவிடம் திரும்பி, "அம்மா, நம்ப விஷயத்தை இந்த ஆன்ட்டி கிட்ட சொல்லிடலாமா....அது இல்லம்மா... அந்த இன்னொரு விஷயம்.." என்று எதையோ ரகசியமாகக் கேட்டாள்.
நம்பினால் நம்புங்கள், நான் சென்று அமர்ந்து இரண்டு நிமிடம் கூட ஆகவில்லை. அவர்களை முன்பின் பார்த்தது கூடக் கிடையாது.
அவள் அம்மாவின் முகம் அடைந்த தர்மசங்கடத்தைப் பார்த்து நான் அதை விட சங்கடத்துக்குள்ளானேன். எதையோ சொல்லிப் பேச்சை மாற்றினேன். அவள் அம்மா நன்றியுடன் ஒரு புன்னைகை பூத்தார்.
ஒரு நிமிடம் உட்காரவில்லை. அங்கு நான், அவள் அம்மா, ஒரு ஆயா மட்டும் தான் இருந்தோம். ஆனாலும் "ஆன்டி நான் டான்ஸ் ஆடிக் காட்டவா" என்று அவள் பாட்டுக்குத தொம் தொம் என்று குதித்து ஆடியதும், வந்து என் கையிலிருந்த கைப்பையை என்னைக் கேட்காமலே எடுத்துப் பார்த்ததும், நான் ஃபோன் செய்யும் போது, 'யாருக்கு ஆன்ட்டி ஃபோன் பண்றீங்க?' என்று நெருங்கி உட்கார்ந்ததும் ஏனோ கொஞ்சம் கலக்கத்தை உண்டுபண்ணியது.
நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தைகள் இப்படி இருப்பது இயல்பு தான்.ஆனால் பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி?
நான் செய்வதறியாமல் திகைத்து அவர் அம்மாவைப் பார்க்கும் போது தான் அவர் லேசாக, "ஏய், இங்கே வா" என்றாரே ஒழிய, மற்றபடி பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றே அந்தக் குழந்தைக்குப் புரியவைக்கப் படவில்லை என்பது புரிந்தது. குழந்தையின் நலனுக்காக இதைச் செய்திருக்க வேண்டியது அவசியமில்லையா?
பெரியமனுஷி போல் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவள், அவள் அம்மா, 'கொஞ்சம் இவளைப் பாத்துக்கங்க' என்று என்னிடம் விட்டுவிட்டு டாக்டரைப் பார்க்க உள்ளே சென்ற போது சின்னக் குழந்தை போல் கத்தி அழ ஆரம்பித்து விட்டாள். அதுவும் எப்படி, கண்களைக் கசக்கி வலிய வரவழைத்த ஒரு அழுகை! அதுவும் ஒரு நிமிடம் தான்.திடீரென்று கண்ணைத் துடைத்துக் கொண்டு முன்போல குதியாட்டம் போடத் துவங்கி விட்டாள்.
அவ்வப்போது, "உங்க பொண்ணு மாதிரி ஸ்மார்ட்டான ஒரு குட்டியை நான் பாத்ததே இல்லை ஆன்டி" என்று பெரிய மனுஷி போல் ஐஸ் வைக்கவும் தவறவில்லை! அடக்கமாட்டாத சிரிப்புடன், "உங்க அம்மா இப்படிக் குதிக்கக் கூடாதுன்னு சொன்னாங்க இல்ல. இங்ல வந்து பாப்பா கூட உட்காரும்மா." என்றேன்.அவள் கேட்டால் தானே? இவள் போடும் ஆட்டத்தில் ஆயாசமடைந்து நேஹாவே சமத்தாக என் மடியில் உட்கார்ந்து விட்டாள் சிறிது நேரத்துக்குப் பிறகு!
அவள் அம்மா வெளியில் வரும் போது, டாக்டர் இவள் குரலைக் கேட்டு, "யாரு உங்க பொண்ணா?" என்று கேட்டார். தன்னைப் பற்றித் தான் கேட்கிறார்கள் என்று அறிந்ததும் யாரும் அழைக்காமலே உள்ளே போனவள், பதவிசாக டாக்டர் அருகில் போய் கைகட்டி நின்று கொண்டாள். அவர்கள் கேட்டதற்குச் சமத்தாகப் பதிலளித்தவள், "தேங்க்யூ மேம்" என்றபடியே வெளியில் வந்தாள்.
உண்மையில் அந்தப் பெண் படு சுட்டி. குழந்தையிடம் அவள் கொஞ்சியதிலும் விளையாடியதிலும் உண்மையான அன்பும் தெரிந்தது. ஆனால் எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலா, இல்லை அதிகப்படி கவனம் கொடுக்கப்பட்ட காரணமா, இல்லை அதற்கு முற்றிலும் மாறான சூழலா, என்ன காரணமெனத் தெரியவில்லை. ஆனாலும் அவளது செயல்கள் அங்கு இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருந்தன.
பள்ளியில் தான் செய்த சாதனைகளைக் குழந்தைகள் பகிர்வது அழகு தான். முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் கூட சட்டென்று நெருங்கி அன்யோன்யமாவதும் சில குழந்தைகளின் அழகான இயல்பு தான். ங்க ஸ்கூல்லியே நான் தான் ப்ரில்லியன்ட், என்பதும் அவள் அம்மாவுக்கும் அவளுக்குமான ஏதோ ரகசியத்தை அப்போது தான் பார்த்த ஒருவரிடம் சொல்லட்டுமா என்றதையும் எந்த ரகத்தில் சேர்ப்பது?
உண்மையில் அவள் 'பள்ளியிலேயே ப்ரில்லியன்ட்' என்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் என் பத்து வயதில் நான் அறிமுகமற்ற யாரிடமாவது இப்படிச் சொல்லி இருந்தால் (நான் அப்படி உண்மையாகச் சொல்ல வாய்ப்பே இல்லை என்றாலும்!) என் அம்மா நன்றாகக் கொடுத்திருப்பார்கள்.
அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட பரவசமும், மகிழ்ச்சியும் நேரம் செல்லச் செல்ல சற்றே அயர்ச்சியாக மாறியது உண்மை! உங்களுக்கு என்ன தோன்றுகிறது? Am I over reacting, just because she is some stranger's kid?
இது பற்றி சிந்தித்த போது நினைவுக்கு வந்த ஒரு விஷயம்:
அதிகக் கோபம், முரட்டுத்தனம், இவையெல்லாம் பிரச்னைகள் என்பதைவிட வேறு பிரச்னைகளின் symptoms என்று தான் தோன்றுகிறது. மாற்று ஈடுபாடுகளின் மூலம் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தி விடலாம். இந்த இடுகையினைப் பாருங்கள். முரட்டுத்தனம் மிகுந்த ஒரு சிறுவனை ஒரு பள்ளியில் எப்படி மாற்றி இருக்கிறார்கள் என்று.
ஆனால் இரண்டு மூன்று வயதில் இயல்பாக இருக்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பாங்கு, எந்த இடத்திலும் தான் தான் முக்கியம் என்ற நினைப்பு இவையெல்லாம் (attention seeking) வளரவளரக் குழந்தைகளிடம் குறைய வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை புரியவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்படி இல்லையோ? Is modesty no longer a worthy virtue?
Little women என்கிற புகழ்பெற்ற நாவலில் ஒரு சம்பவம் வரும். நான்கு மகள்கள் கொண்ட அம்மா தன் சுட்டியான கடைசி மகளிடம் பேசுவதாக: "கண்ணா உனக்கு நிறைய அறிவும் திறமைகளும் இருக்கு. அதுக்காக அதையெல்லாம் எப்போதுமே எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருக்கணும்னு அவசியம் இல்லை. உன் அறிவும் திறமையும் நீ வளர்த்துகிட்டே போனா, உன் பேச்சிலயும் உன் செய்கைகளிலுமே அது இயல்பா வெளிப்படும். நீயா வெளிச்சம் போட்டுக் காட்டறது அழகில்லை" என்று. அப்போது அவளது அக்கா ஜோ (கதையின் நாயகி) சொல்வாள், "ஆமாம், உன் கிட்ட ஏழெட்டு தொப்பி, பத்து பட்டுச் சட்டைகள் இருக்குனு காமிக்க எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு போட்டுக்கிட்டு வெளிய போனா எப்படி இருக்கும்? அதே மாதிரி தான்" என்பாள்.
போட்டிகளும் விளம்பரங்களும் அதிகரித்து வரும் இன்றைய வியாபார உலகத்தில் இந்தச் சிறு அறிவுரை (piece of wisdom) செல்லாக்காசாகி விட்டதோ?