Showing posts with label குழ‌ந்தைக‌ள். Show all posts
Showing posts with label குழ‌ந்தைக‌ள். Show all posts

Wednesday, July 7, 2010

சுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்

சில நாட்களுக்கு முன் தமிழ்மணத்தில் KRP Senthil பகிர்ந்த அந்த விடியோவை என்னால் ஒரே தடவையில் பார்க்க முடியவில்லை. நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. தொண்டை கிழியக் கத்திச் செத்துவிட மாட்டோமா என்றிருந்த‌து.

ஆனால் பின்னால் ஒலித்த உறுதியான குரல் காதுகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
"பல்லாயிரக்கணக்கானப் பெண் குழந்தைகளும் சிறுமிகளும் நாள் தோறும் பலாத்காரம் செய்யப்படுவதும், சிறு சலனம் கூட இல்லாமல் இது குறித்து நிலவும் பெருத்த மௌனமுமே என்னைப் பெருஞ்சினம் கொள்ள வைக்கின்றன"

அந்தக் குரலுக்குச் சொந்தமானவர்:

சுனிதா கிருஷ்ணன்
இவர் மனிதப் பிறவி தானா? பெண் தானா?
நாலாயிர‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு மேல் பாலிய‌ல் தொழில், ம‌ற்றும் க‌ட‌த்த‌லிலிருந்து காப்பாற்றியிருக்கும் இவ‌ரை என்ன‌வென்று சொல்வ‌து?

பதின்ம‌பருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான இவர் அதனால் துவண்டு விடாமல் பழகிய ரௌத்திரம் விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்திருக்கிறது!

ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? வணங்குகிறேன் சுனிதா உங்களை.

ஐந்து வயது கூட நிரம்பாத பிஞ்சுகளுக்குக் கூட நேரும் கொடுமைகளை இவர் விவரிப்பதைக் கேட்கக் கூட நம்மால் முடியவில்லை. அடி உதை, சித்ரவதை எல்லாம் தாங்கிக் கொண்டு களத்தில் நின்று போராடி இவர் மீட்ட குழந்தைகள் ஆயிரமாயிரம்.

1996 ல் இவர் தொடங்கிய‌ ப்ர‌ஜ்வாலா அமைப்பு ஐந்து முக்கிய‌ பணிக‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்துகிற‌து: த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கை, காப்பாற்றுத‌ல், ம‌றுவாழ்வு, ஒருங்கிணைப்பு, பிர‌சார‌ம்.

த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் முக்கிய‌மான‌து பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ளுக்குக் க‌ல்வி கொடுப்ப‌து. அத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளும் அதே பாதையில் சென்றுவிடாம‌ல் த‌டுப்ப‌து. ஐந்து குழ‌ந்தைக‌ளுட‌ன் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ இவ்வ‌மைப்பு இப்போது ஐயாயிர‌ம் சிறுமிகளுக்கு ம‌றுவாழ்வு அளித்துள்ள‌து.

பேருந்து மற்றும் நிலைய‌ங்க‌ளில் சோதனை நடத்தி குழ‌ந்தைக‌ள் க‌ட‌த்த‌ப் ப‌டுவதையும் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ள் அதே சுழ‌ற்சில் சிக்குவதையும் த‌டுப்பது. இவ்விடங்களில் நடத்தப்பட்ட சோதனை முல‌ம் ம‌ட்டும் 1700 சிறுமிகளும் மொத்த‌மாக‌ 3200 சிறுமிகளும் ப்ர‌ஜ்வாலா மூல‌ம் காப்பாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

அத்தொழிலிலேயே சிறுவ‌ய‌து முத‌ல் ஈடுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சிறுமிக‌ளைக் காப்பாற்றுவ‌தும் ம‌றுவாழ்வு அளிப்ப‌தும் சவாலான‌ செய‌ல் தான் என்றும் கூறுகிறார் சுனிதா. அவ‌ர்க‌ள் உண்மையில் ம‌றும‌ல‌ர்ச்சி அடைய‌ வெகுகால‌ம் ஆகிற‌தாம்.

த‌ன‌து புனித‌ப் போரில் சுனிதா ச‌ந்தித்த‌ கொடுமைக‌ளும் கொஞ்ச‌ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. க‌ட‌த்த‌ல் ர‌வுடிக‌ளிட‌மிருந்து சிறுமிக‌ளைக் காப்பாற்றப் போன‌ இட‌த்தில் வாங்கிய் ஆடி உதையால் இவ‌ர‌து வலது காது கேட்கும் திற‌னை இழ‌ந்திருக்கிற‌து. ஆனால் த‌ன‌து இழ‌ப்பு தான் காப்பாற்ற‌த் த‌வ‌றிய‌, அல்ல‌து காப்பாற்றியும் உயிர‌ழ‌ந்த‌ குழ‌ந்தைக‌ளின் இழ‌ப்புக்கு முன் ஒன்றுமில்லை என்று நெஞ்ச‌ம் உருகுகிறார் சுனிதா. (அதை என்னால் மொழிபெய‌ர்த்து எழுத‌ முடியாது. ம‌ன்னியுங்க‌ள்.)

தன் போராட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இவர் சொல்வது, ரவுடிகளிடம் அடிவாங்குவதோ, மிரட்டல்களோ இல்லை; பாதிக்கப்பட்டவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்கும் மனப்பான்மை சமூகத்தில் இல்லாதது தான், என்கிறார்.

அவர்கள் மீது பரிதாபப்படுபவர்கள் கூட, பண உதவி செய்பவர்கள்கூட தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பயப்படும் அறிவீனத்தை எண்ணி மனம் வெதும்புகிறார்.

சமூகத்தில் இந்த மனப்பான்மை இருக்கும் வரை இவர்களுக்கு மறுவாழ்வு என்பது மிகக்கடினமான ஒன்று தான் என்பது தான் இவரது ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்.

இறுதியாக‌, சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது, "சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது."

ஏதாவ‌து செய்ய‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர‌து போராட்ட‌த்துக்கு இய‌ன்ற‌வ‌ரை உத‌வுவோம். நாம் செய்ய‌க் கூடிய‌ மிக‌ச்சிறிய‌ செய‌ல் அது ம‌ட்டும் தான்.

Must Read:

http://sunithakrishnan.blogspot.com/

http://www.amazingwomenrock.com/myblog/anti-trafficking-crusader-sunitha-krishnan-fights-to-save-women-girls-in-india.html

http://www.amazingwomenrock.com/ted-talks/sunitha-krishnans-fight-against-sex-slavery.html - ம‌ன‌ம் இள‌கிய‌வ‌ர்க‌ள் இந்த விடியோவைப் பார்க்க‌வேண்டாம் என்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

பி.கு.

முதலில் இதைப் பகிர்ந்தவ‌ரை இடுகை எழுதும் போது குறிப்பிட நினைத்தும் பெயர் மறந்து விட்டது மறந்து விட்டேன். மன்னிக்கவும். சுனிதா கிருஷ்ணன் என்று தமிழ்மணத்தில் தேடியும் அவரது இடுகை கிடைக்கவில்லை.
கே. ஆர். பி. செந்தில் என்று நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி சரவணக்குமார். செந்தில் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Tuesday, May 4, 2010

லீவ் விட்டாச்சா?

ஏப்ரல் மே என்றாலே வெயிலின் கொடுமையையும் மீறி பள்ளிக் குழந்தைகளுக்கு லீவாயிற்றே என்ற சந்தோஷமும், பார்க்கும் குழந்தைகளிடமெல்லாம் "என்ன லீவ் விட்டாச்சா" என்று கேட்பதும் பதிலுக்கு அந்த உற்சாகச் சிரிப்பையும் எதிர்பார்ப்பது வழக்கமாகி விட்டது. பள்ளிப் படிப்பு கொடுமை என்று அர்த்தமில்லை.
ஆனால் இந்த கோடை விடுமுறையில் தான் குழந்தைகள் குழந்தைகளாக இருக்க முடியும்.

காலையில் எழுந்து பல் தேய்த்துக் காப்பி குடித்ததுமே விளையாட ஓடிப் போய்விட்டு மதியம் சாப்பிட அழைக்கும் வரை ஆடு ஆடென்று ஆட்டம்,

மதிய வேளையில் தூங்கும் அம்மாவுடன் ஒண்டிக்கொண்டு குண்டு கதைப்புத்தகம், ("வெயில்ல‌ வெளையாட‌ப் போக‌வேண்டாம்")

முன்மாலைப் பொழுதில் கிண‌ற்ற‌டியில், பின் வீட்டு சகாக்களுடன் சிரித்துப் போட்டி போட்டுக் கொண்டே இரும்புவாளியில் தண்ணீர் இறைத்துக் குளிய‌ல்,

ப‌க்க‌த்து வீட்டு அக்கா "வைதேகி காத்திருந்தாள்" சினிமா பாட்டுப் புத்த‌க‌ம் பார்த்து இஷ்ட‌த்துக்கும் பாட குட்டிக‌ள் எல்லோரும் அபின‌ய‌த்துட‌ன் ஆடிய‌து

எதிர்வீட்டு அண்ணன் ராணி காமிக்ஸ் ப‌டித்துக் க‌தை சொல்ல‌ சுற்றி உட்கார்ந்து ந‌டுங்கிக் கொண்டே கேட்டது

மொட்டை வெயிலில், வீட்டில் சொல்லாம‌ல் அண்ண‌னுட‌ன் சைக்கிளில் பெரிய‌ லைப்‌ர‌ரிக்குச் சென்று புத்த‌க‌ங்க‌ள் அள்ளி வ‌ந்த‌து

ஐந்தாவ‌து லீவில் முத‌ல்முறையாக சுனிதா சித்ரா அக்காக்களிடம் சீட்டு விளையாட‌க் க‌ற்றுக் கொண்டது

அந்தி சாய்ந்ததும் அக்கா கை பிடித்து வ‌ட‌ப‌ழ‌னி கோவிலுக்குச் சென்று பின் மார்க்கெட்டில் வ‌ளைய‌ல், ஹேர்கிள்ப் வாங்கிய‌து

சித்த‌ப்பா பெண்கள் வீட்டுக்கு வ‌ந்து ஓரிரு நாட்க‌ள் த‌ங்க‌ப் போகிறார்க‌ள் என்ற‌தும் சொர்க்க‌மே த‌ரையிலிற‌ங்கிய‌து போல் குதூக‌லித்தது.
(இர‌வெல்லாம் க‌தை பேசிச் சிரிக்க‌ வ‌ய‌தொத்த‌ ஆள் கிடைப்ப‌தென்றால் சும்மாவா?)

வெயிலாவ‌து ஒண்னாவது? வீட்டில் சாப்பிட, காபி குடிக்க‌ என்று தொண்டை வ‌லிக்க‌ அழைக்கும் வ‌ரை ப‌க்க‌த்து வீட்டிலோ தெருவிலோ புழுதி ப‌ற‌க்க‌ விளையாடிய‌து


ச‌ம்ம‌ர் கேம்ப், ஸ்விம்மிங் க்ளாஸ‌ஸ், சைக்கிள், பெயின்டிங் க்ளாஸ‌ஸ், பீச், சினிமா, கிஷ்கிந்தா, மாயாஜால், பாட்டு க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், கீ போர்ட் க்ளாஸ், இதற்கெல்லாம் இடையே மேற்கூறிய அவ‌ற்றை எப்ப‌டி ந‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு மீட்டுத் த‌ருவ‌து?

Wednesday, February 3, 2010

நேஹா நேரம்!

”அம்மா! தண்ணீ கொட்டீச்சி, ஏனும்..தண்ணி ஏனும்” (அவளே கொட்டி விட்டு, இன்னும் வேண்டும் என்பதற்காய்)

”கொச்சு...அவ் கச்சி!” (கொசு அவ் என்று கடித்ததாம்)

”எம்பு..அவ்வ் கச்சி!” (எறும்பு)

”கொச்சு பேட்டு...கொச்சு பேட்டு...” (கொசு பேட் வைத்து அடிக்க வேண்டுமாம். )

”அப்பா, எந்தி...எந்தி...” - தொடர்ந்து சரமாரியாக முதுகில் அடி.
(அப்பாடா, எனக்கு இனி வேலை மிச்சம்! )

தனியாய் அமர்ந்து விஷமம் செய்து கொண்டிருக்கும் போது அருகே போனால்..வீல் என்று ஒரு கத்தல்.
கூடவே அவசர அவசரமாய்க் கையை ஆட்டிக் கொண்டு.. “பை பை டாட்டா...”
அழுக்குத் துணிக் கூடையைத் திறந்து துணியை எடுத்து, “துணி, காய்” என்று காய வைக்கப் போகிறாள்.

”நேஹா, இது என்ன?”
”கக்காலி” (தக்காளி)

”என்னடா சாப்டே”
“பத்தச்சி” (சப்பாத்தி)

சமையலறையில் போய் சம்படங்களை உருட்டிக் கொண்டிருந்தாள்.

“நேஹா என்ன பண்ற?”
திரும்பி அழகாய்ச் சிரித்து.. “சா....ப்ட.... “
ஹையோ! என் மகளே!

Monday, February 2, 2009

ப‌லியாடுக‌ள்




இந்த அரசியல் கட்சிகளின் சண்டைகளில் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகப் பாதிப்படைகிறார்கள். இவர்களுக்கு எது எதில் தான் அரசியல் பண்ணுவது என்ற வரைமுறை இல்லை?
பிஞ்சுக் குழ‌ந்தைக‌ளுக்கு போலியோ தடுப்புச் சொட்டு ம‌ருந்து அளிக்கும் ப‌ணி சில காலமாகவே ந‌ம் நாட்டில் நன்றாக‌ நட‌ந்து வ‌ருகிற‌து. எந்த‌ அர‌சு ஆட்சிக்கு வ‌ந்தாலும் இத்துறையில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஆர்வ‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டு போலியோவை அற‌வே ஒழிக்க‌ச் சிற‌ந்த முறையில் பாடுப‌டுகிறார்க‌ள். இவ்வாறிருக்க‌ டிச‌ம்ப‌ர் 21 போலியோ தின‌த்த‌ன்று ஒரு பொறுப்பில்லாத‌ த‌னியார் தொலைக்காட்சி ப‌ர‌ப்பிய‌ பொய்ச் செய்தியால் (ம‌ருந்து கொடுக்க‌ப்ப‌ட்ட‌தால் ஒரு குழ‌ந்தை இற‌ந்து போன‌தாக‌)பீதி கிள‌ம்பிய‌து. பின்ன‌ர் அதன் போட்டித் தொலைக்காட்சி (அர‌சு சார்ந்த‌)அது வெறும் வதந்தி என்று ப‌டாத‌ பாடுப‌ட்டு நிரூபித்த‌து. ஆனால் இவர்களின் இந்த குடுமிபிடிச் சண்டையோடு முடிய‌வில்லை.
நேற்று (பிப்ர‌வ‌ரி 1) மீண்டும் போலியோ த‌டுப்பு தின‌ம். என்ன‌ கொடுமை...யாருக்காக‌ இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதோ அந்த‌ ஏழை எளிய‌ ம‌க்க‌ள் ப‌ய‌ந்து போய் முகாம்க‌ளைப் புற‌க்க‌ணித்துள்ள‌ன‌ர். த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுக்குப் போய் ஆயிர‌ம் ஆயிர‌மாக‌ச் செல‌வ‌ழித்து ம‌ருத்துவ‌ம் பார்க்க‌ முடியுமா அவ‌ர்க‌ளால்? அவ‌ர்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ச் செய்ய‌ப்படுகின்ற‌ ஒரு பணி, நம் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, அவர்கள் வாழ்வில் இருள் சூழாதிருக்கும் பொருட்டு ஆற்றப்படும் ஒரு நல்ல செயல் கேவ‌ல‌மான‌ அர‌சிய‌ல் பூச‌ல்க‌ளினால் க‌றைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கிற‌து.
வதந்தி பர‌ப்பிய‌ அந்த‌த் தொலைக்காட்சி மீது வ‌ழ‌க்குத் தொட‌ர‌ முடியுமா? யாராவ‌து சொல்லுங்க‌ளேன்.