Wednesday, November 9, 2011
நேஹா நேரம் (after a long break!)
Very very moody these days. தினமும் வருகிற எதிர்வீட்டு ஆன்டியை ஒரு நேரம் போ போ என்கிறாள். இன்னொரு நேரம் "ஐலவ்யூ ஆன்ட்டி" என்று கட்டிக் கொள்கிறாள்.
அவள் ஏதாவது ரசிக்கிற மாதிரி சொல்லிவிட்டாலோ செய்து விட்டாலோ நாம் ஏதாவது சொல்வதற்குள், ஒரு குறும்புப் பார்வையுடன் "ப்ரில்லியன்ட்", "அமேசிங்", "ரொம்ப ஓவர்" என்று எதையாவது சொல்லிக் கொள்கிறாள்.
சார்ட் வொர்க் செய்யப் பிடித்திருக்கிறது. சார்ட்டையும் வாட்டர் கலர் பாக்ஸையும் கொடுத்து விட்டால் ஒரு அரைமணி நேரம் நிம்மதி.
குட்டிப்பாப்பாவைச் சீண்டுவது அதிகமாகி விட்டது. அதே போல் கொஞ்சுவதும். (இரண்டுக்கும் பொம்மைகளைப் பரஸ்பரம் பிடுங்குவது, அம்மா மடியில் ஏறிக் கொள்வது என்று எல்லாவற்றிலும் போட்டி தொடங்கிவிட்டது. கூடியவிரைவில் இளையவள் முந்தி விடுவாள் என்றும் தோன்றுகிறது.) ஆனாலும் தினமும் தூங்கும் போதும் பள்ளிக்குப் புறப்படும்போதும் எவ்வளவு தாமதமாகி விட்டாலும் சரி, "ஷைலாக்கு முத்தம் குடுக்கணும்" என்று தந்து விட்டால் தான் ஆயிற்று.
"இனிமே இப்படிப் பண்ணா குட்டிப்பாப்பாவை பக்கத்து வீட்ல கொடுத்துடுவேன்" என்ற மிரட்டலுக்கு மட்டும் இன்னும் பணிகிறாள். மற்ற அதட்டல் மிரட்டலுக்கெல்லாம் பளிச் பளிச் பல்பு தான். ("ஓகே, எனக்கென்ன போச்சு!" "இல்ல, நான் பேட் கேர்ல் தான்.")
"நம்ம ரென்டு பேரும் சேர்ந்து அம்மாவைப் படுத்தலாமா?"
"ஷைலா நீயும் சாப்பிடாதே."
"நாங்க தூங்கவே மாட்ட்ட்டோம். ஆட்டம் போடப் போறோம்"
இதெல்லாம், "நீ சமத்தா இருந்தா தானே உன் தங்கச்சியும் உன்னை மாதிரியே இருப்பா" என்ற அதிபுத்திசாலித்தனமான(!) வினையின் அதிரடி எதிர்வினைகள்.
"சாமின்னா என்னடா?"
"ஜீஸஸ்" (உபயம்: மாமியாரின் திடீர் விசிட்!)
"சாமி என்னடா பண்ணும்?"
"ஒண்ணுமே பண்ணாது"
"உனக்கு சாமி பிடிக்குமா பேய் பிடிக்குமா?"
கண்கள் விரிய "பேய்!" (காஞ்சனா கொஞ்சம் பார்த்த எஃபெக்ட்!)
முன்யோசனை இருக்கிறது. That's saying a lot, for being my daughter! ;-) அவளையும் அழைத்துக் கொண்டு வெளியில் செல்லும் போது வண்டியெடுக்கும் முன் கேட் திறந்திருக்கிறதா என்று பார்க்காமல் கேட்டினருகே வந்தவுடன் அவளை இறங்கச் சொல்லிவிட்டு கேட்டைத் திறந்தேன். சிலநாட்களுக்குப் பின் ஒரு நாள் வண்டி எடுத்தபோது அவளே சென்று பார்த்து "கேட் திறந்திருக்கும்மா" என்றாள்.
ஒரு நாள் கலந்து வைத்த காப்பி ஒன்று மேசை மீதிருந்தது. நான் பார்த்து விட்டு ப்ரியாவிடம், "ஏன் ப்ரியா காலையில் எழுந்து இன்னும் குடிக்கலை. எப்போ கலந்து கொடுத்தேன். காப்பி கூடக் குடிக்காம என்ன பண்றே.." என்று அர்ச்சனை ஆரம்பித்தேன். (ப்ரியா என் அத்தையின் பேத்தி. அவள் தான் இப்போது குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறாள்) சமர்த்தாகப் பள்ளிக்குத் தயாராகி நான் வருவதற்காகக் காத்திருந்த நேஹா அங்கு வந்தாள். காப்பியைப் பார்த்துவிட்டு, "அம்மா! இது உன்தும்மா...ப்ரியா அப்பவே குடிச்சிட்டாம்மா..குடிச்சிட்டுச் சீக்கிரம் குளிக்கப் போம்மா" என்றாள். அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது! ப்ரியா என்னைப் பார்த்த பார்வையின் அனலையும் மீறி ஏனோ உச்சி குளிர்ந்தது!
ஒரு மாதமாக ஊரிலில்லாத அப்பாவை மிஸ் பண்ணினாலும் முதலில் அவ்வளவாகக் காட்டிக் கொள்ளவில்லை. சரி குழந்தை பழகிவிட்டாள் என்று நினைத்திருந்தேன். அன்றொரு நாள் அவர் அழைத்த போது இவளைக் கூப்பிட்டுப் பேசச் சொன்னேன். வெடித்து அழுதவள் என்னைக் கட்டிக் கொண்டு பிடிவாதமாகப் பேச மறுத்துவிட்டாள். Stunned!
சின்னதாக இருப்பதால் குழந்தைகள் சின்ன விஷயங்களா என்ன? இல்லவே இல்லை!
Saturday, October 29, 2011
முகில் பூக்கள்
ஆம், மழை எப்போதையும் விட அழகாய்த் தெரிகிறது பிகு சரவணனின் முகில்பூக்களை வாசித்த பிறகு.
இக்கவிதைகளில் அழகு கொஞ்சுகிறது; உண்மையும் மிளிர்கிறது. கவிதைக்குப் பொய் அழகு என்பதை உடைத்தெறிகிறது எளிமையும் உண்மையும் கம்பீரமாய் நடைபயிலும் இக்கவிதைகள்.
கவிதை என்றாலே அலர்ஜி, யாருக்கும் புரியாமல் எழுதுவது தான் கவிதை, மடக்கி மடக்கி எதையோ எழுதி விட்டுக் கவிதை என்கிறார்கள் என்று கவிதைகள் குறித்த எதிர்மறையான பார்வை கொண்டோர் எல்லாம் இவரது கவிதைகளைப் படித்தால் கவிதைக் காதலர்களாகி விடுவது நிச்சயம்.
எல்லாமே நேரடிக் கவிதைகள். ஆனாலும் மீள்வாசிப்பில் பல கவிதைகளில் பலவிதமான மறைபொருள்களும் உருவகங்களும் தெரியவரும்போது சிலிர்ப்பான அனுபவமாக இருக்கிறது.
இயந்திரமயமாகிப் போன இப்பிளாஸ்டிக் உலகத்தில், பல்வேறு தர்க்கங்களும் வேறுபாடுகளும் நிறைந்த இணைய இலக்கியச் சூழலில், தான் மெய்மறந்து ரசிக்கும் இயற்கையையும் குறிப்பாய் மழையையும் விதவிதமாய் வியந்தோதிக் கொண்டிருப்பது பைட் பைப்பர் ஹார்மோனிகா வாசித்துக் கொண்டு செல்வது போல் அலாதியான அனுபவமாக இருக்கிறது.
ரொம்பவும் பிடித்துப் போன சில இங்கே உங்களுக்காக:
பெய்கிறது மழை
அசைந்து
நடந்து பின்
களம் புகும்
கம்பீர யானையாய்
பெய்கிறது மழை.
சாரலாய்
தூறலாய்
பெருமழையாய்.
சிணுங்கிப் பூக்கும் அன்பு
மழையில் உயிர்க்கும்
தொட்டாற் சிணுங்கி
மழைக்கும் சிணுங்கும்
வழித்துணை
யாருமில்லாமல்
தொடங்கிய பயணத்தில்
அந்த அழகிய ஊரில்
பெய்யத் தொடங்கிய மழை
வீடு வரை வந்தது
இசைக் குறிப்புகள்
கடந்து போன
நாட்களில் தொலைந்த
இசைக் குறிப்புகளை
பாடிக் காட்டுகிறது
அந்தக் குயில்
நிறைய, இன்னும் நிறைய எதிர்பார்க்க வைக்கும் அற்புதமான எழுத்து.
முகில் பூக்கள்
பி.கு. சரவணன்
தகிதா பதிப்பகம்
Sunday, August 28, 2011
'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.
யார் செத்தால் என்ன, எங்கே குண்டு வெடித்தால் என்ன, எல்லாமே நாளிதழில் இன்னொரு செய்திதான் என்றிருப்பவர்களுக்கு செங்கொடியின் தியாகம் முட்டாள்தனமாகத் தெரிவதில் வியப்பென்ன?
என்ன ஆயிற்று நமக்கு? கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டால் 'போரில் சாவு சகஜம்', தூக்குக்கயிற்றில் நிரபராதிகள் தொங்கினால், 'அரசியலில் இதெல்லாம் சகஜம்', விவசாயிகள் பசிக் கொடுமையினால் தற்கொலை செய்து கொண்டால், 'ஏழைகளுக்கு இதெல்லாம் சகஜம்', தலித் பெண்களை ஊரே சேர்ந்து கற்பழித்துக் கொன்றால், 'சாதிக்கலவரத்தில் இதெல்லாம் சகஜம்'.
தான் உயிராக நினைக்கும் கொள்கை/கோரிக்கைக்காக ஒரு போராளி உயிர் துறந்தால் அது முட்டாள் தனம்! என்று 'ஜஸ்ட் லைக் தட்' கடந்து போகும் நாம் தான், கோடிஸ்வரக் கோமாளி நடிகன் ஒருவன் உடல்நிலை பாதிக்கப்பட்டால் 'தலைவா,...இறைவா' என்று கண்ணிர் சிந்தி ஊர்வலம்
போகத் தயாராக இருக்கிறோம். உடம்பு நோகாமல் வீட்டுக்கு முன் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு ஊழலுக்கு எதிராய்ப் பெரும் புரட்சி செய்து விட்டதாய்ப் பெருமை கொள்கிறோம்.
செங்கொடி மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பார், வறுமை/கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்றும் ஆயிரம் காரணங்கள் வரத் தொடங்கும். முத்துக் குமாரின் மரணத்தையும் கொச்சைப் படுத்தியவர்கள் தானே நாம்?
சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்பவர்களையும் கேலிசெய்து இழிவு படுத்துவது வெகுகாலமாக நடப்பது தான். இவ்வாறாகத் தனது உணர்ச்சிகளை மரத்துப் போன நிலையில் வைத்திருப்பது மாற்றங்களை விரும்பாத சோம்பேறிச் சமூகத்துக்கும் அதன் ஊடகங்களுக்கும் வசதியாக இருக்கிறது.
இப்பேர்ப்பட்டவர்களையும் தங்கள் மரணத்தினால் தட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததும், எத்தனையோ காலம் எழுச்சி மிக்க போராட்ட வாழ்வு வாழ்ந்து பல சாதனைகள் செய்திருக்கக் கூடிய உன் இன்னுயிரை உணர்ச்சி வேகத்தில் மாய்த்துக் கொண்டதும், இமாலயத் தவறு தான். ஆனாலும் சகோதரி, நீ முட்டாள் அல்ல; அதுவும் அரசியல்வாதிகளிடமும் அதிகாரவர்க்கத்திடமும் தொடர்ந்து கேவலமாய் ஏமாந்து கொண்டிருக்கும் எங்களை விட நீ முட்டாள் அல்ல; நிச்சயமாய் அல்ல.
செங்கொடிகள் தீக்கிரையானாலும் மடிந்து மக்கிப் போவதில்லை.
Monday, August 1, 2011
நேஹாவுடனான அவர்களின் நேரம்
அதற்குள் கடைக்குப் பின்னாலிருந்து மேலும் இரு பெண்கள் வந்து அதே போல் கேட்டு விட்டுப் போனார்கள். முதலில் பார்த்த பெண் தொடர்ந்தார்: "சனி ஞாயிறாச்சும் நேஹாவைக் கூட்டிட்டு வாங்கக்கா.. நேத்திக்குச் சாப்பிடும் போது கூட அவளைப் பத்தித் தான் பேசிட்டு இருந்தோம். அவ வந்துட்டுப் போனா அன்னிக்கு நாள் கொஞ்சம் நல்லா இருக்கு, இல்லாட்டி எங்களுக்கு இங்கே பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கும்" என்றாள்.
எனக்கு ஏனோ கண்ணில் சட்டென நீர் கோத்துக் கொண்டது. வீட்டுக்கு விரைந்துவிட்டேன்.
"ஹை! பாப்பா உன் பேர் என்ன?...பாப்பா ட்ரெஸ் நல்லாருக்கே..தலை தான் கொஞ்சம் கலைஞ்சிருக்கு."
"போ! உன் தல தான் நல்லாவேல்ல..." என்று அவர்கள் எதிர்பாராமல் நேஹா சொன்னதை அடுத்து அங்கே பலத்த சிரிப்பு. அது முதல் அவள் அந்தப் பெண்களுடன் நட்பாகினாள். அங்கு போனாலே அவர்கள் முறை வைத்துக் கொண்டு வந்து தூக்கிச் சென்று விடுவார்கள். அவர்களுக்குள் போட்டி வேறு. ஏனென்றால் வேலையை விட்டு விட்டு ரொம்ப நேரம் ஒரு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்க முடியாதே.
இதற்கிடையில் என்ன சத்தம் என்று பார்க்க வந்த சூப்பர்வைஸர் பெண்மணியையும் "ஹேய் நேஹா, இங்கபாரு மேடம் கூட உன் ஃபேன் ஆகிட்டாங்க" என்று கலாய்த்தபடி சூழலைச் சகஜமாக்கி விடுவார்கள்.
இது நேஹா என்ற என் குழந்தையைப் பற்றிய பெருமைக்காகச் சொல்லவில்லை. ஒரு மூன்றுவயதுக் குழந்தையின் பத்துநிமட வரவுக்காகவும் பேச்சுக்காகவும் இந்த அளவு ஏங்கிப் போகும் அளவுக்கு அவர்களின் வேலை இயந்திரகதியாகவும் சோர்வளிப்பதாகவும் இருக்கிறதா?
உட்காரவோ அலைபேசவோ கூட அனுமதியில்லாமல், "அரிசி எங்கே புளி எங்கே, டாய்லெட் கிளீனர் இருக்கா" போன்ற அலுப்பூட்டும் கேள்விகளையே இடமும் வலமும் சந்தித்தபடி இருக்கும் அந்தப் பெண்கள் எப்போதாவது வந்து வம்பிழுக்கும் பரிச்சயமான குழந்தையின் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்பதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?
மாலையில் மெனக்கெட்டு ஒரு பட்டியல் தயாரித்து, 'இதெல்லாம் இன்னிக்கே வேணும்' என்று ஜோவுடன் நேஹாவைக் கடைக்கு அனுப்பிவைத்தேன்.
Saturday, July 9, 2011
வாத்தும் மீனும்...
வெளியேறிய வாத்துக்கோ
கரையின் வெம்மை பொசுக்கியது
நீரின்றியமையாத மீனோ
சேற்றுக்குள் அமுங்கியது
வட்டமிடும் கழுகுக்கும் மீன்பிடி வலைகளுக்கும்
இரண்டுமே இரையல்ல, உயிர் தானென்பது புரியுமா?
Monday, June 13, 2011
குல்மோஹர் பூவும் தென்னங்குறும்பியும்
"அனு, அனு, அனூஊஊ"
"ஏ அனும்மா...தீபா விளிக்கின்னு."
"அனு, அனு, அனூஊஊ!"
"ஏ..தோ வரேன்பா இரு"
"சீக்கிரம் வா விளையாடலாம்!"
ஓடி வந்த அனு வீட்டுக் கேட்டையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இரு வீடுகளுக்கிடையே பேருக்கு இருந்த கம்பி வேலியின் பெரிய ஓட்டை வழியே நுழைந்து இந்தப்பக்கம் வந்து விட்டாள். (காம்பவுண்ட் சுவர்களெல்லாம் அரிது அப்போது.)
"கேக் பண்ணி விளையாடலாமா?"
"ஓ!"
"சரி போய் ஒரு சர்ட்டை எடுத்துட்டு வா!"
"சட்டையா அது எதுக்கு?, ம்...சரி" வேகமாக உள்ளே ஓடியவள் வீட்டில் அம்மாவைப் பிடுங்கி ஒரு பழைய சட்டையைக் கொண்டு வருகிறாள்.
"அய்யோ! சர்ட்டை, சர்ட்டை...தேங்காய் உடைச்சா கிடைக்குமே..."
"ஓ! கொட்டாங்குச்சியா? அப்படிச் சொல்ல வேண்டியது தானே?"
ஒரு வழியாகக் கொட்டாங்குச்சி ஒன்றைத் தேடி, வீட்டு முன்புறம் களிமண்ணில் தண்ணீர் ஊற்றிக் குழைத்துக் கொட்டாங்குச்சி அச்சைக் கொண்டு விதவிதமாய்க் கேக்குகள். பின்பு அதில் கனகாம்பரம், நந்தியாவட்டைப் பூ கொண்டு அலங்காரங்கள். தீக்குச்சி தான் மெழுகுவர்த்தி. வீட்டு வராந்தா பூரா களிமண் திட்டாக அழுக்கு. அவர்கள் உடைகளிலும் தான்.
சமையல் பண்ணலாமா? களிமண் சாதம், கூழாங்கல் பிரியாணி, பச்சை இலை காய்கறிகள், செங்கல் பொடி அரைத்துக் குழம்பு. இந்தச் செங்கல்பொடியை மட்டும் நாளெல்லாம் அரைத்துக் கொண்டிருப்பார்கள். யார் அதிகம் அரைக்கிறார்கள் என்று போட்டி வேறு.
எங்கிருந்தோ வந்து விடுவார்கள் தம்பி வானரங்கள். "நாங்க சாப்பிட்டுப் பாக்கிறோம்... நிஜமாகவே வாயில் வைத்துச் சுவைத்துத் "அய்யோஒ தூ தூ" என்று துப்புவார்கள். இதற்கு அப்படி ஒரு சிரிப்பு, துரத்திக் கொண்டு அடிக்க ஓடுவது...
அடிபட்ட அணிலொன்றைப் பிடித்துக் கொண்டு வந்து அதைப் படுத்திய பாடு. "அதை விட்டுடுங்கடா, பாவம்" ன்னு எவ்வளவு சொன்னாலும் கேட்கவில்லை. இங்க்ஃபில்லரில் அதற்குப் பாலூட்டுவது, பழம் கொடுப்பது என்று இவர்களின் உற்சாக வைத்தியத்தில் அது விரைவில் குணமாகி ஓடிப் போய்விட்டது.
கிணற்றடியில் அடிமுதல் கிளைகள் பரப்பி நின்ற கொய்யா மரம். அனு நிஜமாகவே நன்றாக மரமேறுவாள். ஆளுக்கொரு கிளையில் அமர்ந்து கொண்டு ஏதாவது விளையாட்டு.
பாண்டிக் கட்டம் போட்டு நொண்டியடித்து விளையாடுவது. பாண்டிச்சில்லுக்கு ஒரு அஞ்சாறு சில்லு வைத்திருப்பது. அவரவர் அதிர்ஷ்டச் சில்லு கொண்டு தான் விளையாடுவது.
குல்மோஹர் பூக்களின் மொட்டுக்களை உரித்து அந்த இதழ்களை ஐந்து விரல்களிலும் நகம் போல் ஒட்டிக் கொள்வது... (சரியாக ஐந்து இதழ்கள் தான் இருக்கும் அதில்) ஆஹா!
தென்னங்குறும்பியில் ஈர்க் குச்சி குத்தி வண்டி, பம்பரம், செய்வது அதையே ஸ்ட்ராவாக வைத்து இளநீர் விற்பது...
இதெல்லாம் விரைவில் போரடித்து விடும். அப்புறம் இருக்கவே இருக்கு ஓடிப் பிடித்து விளையாடுவதில் ஓராயிரம் வகைகள். கண்ணா மூச்சி, கல்லா மண்ணா, லாக் அன்ட் கீ, நொண்டியடிப்பது, காலைத் தொட்டுப் பிடிப்பது, சங்கிலியாகச் சேர்த்துக் கொண்டி பிடித்து விளையாடுவது ...ஒவ்வொரு விளையாட்டிலும் எத்தனை வகைகள்?
ஊரிலிருந்து வருபவர்கள் "இதை நாங்க எப்படி விளையாடுவோம் தெரியுமா" என்று ஆரம்பித்துச் சொல்லிக் கொடுப்பது அந்தப் புதியவருக்கு இருக்கும் வரவேற்பைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்கவோ படும்!
கண்ணாமூச்சி என்றால் கையில் மண் குவித்து அதில் ஒரு பூவையோ கல்லையோ நட்டு வைத்து, அவர் கண்ணைமூடி வீட்டைச் சுற்றிச் சுற்றி எங்கெங்கோ அழைத்துச் சென்று ஒரு இடத்தில் மண்ணைக் கொட்டச் சொல்ல வேண்டும். பின்பு மீண்டும் கண்ணைமூடி அழைத்து வந்து வேறோரிடத்தில் விட்டு விட வேண்டும். இப்போது மண்ணைக் கொட்டிய இடத்தைக் கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும். (இது நாங்கள் அதிகம் விளையாடாத, எனக்கு ரொம்பப் பிடித்த விளையாட்டு!)
உட்கார்ந்து விளையாடுவதென்றால் கருங்கல் பொறுக்கி, சிமென்டுத் தரையில் ஓரத்தையெல்லாம் தேய்த்து மழமழவென்றாக்கி, அஞ்சு கல் விளையாடுவது...
குச்சிகளைப் பொறுக்கிக் கலைத்துப் போட்டு அசையாமல் எடுப்பது.
இது தவிர கதைகள் சொல்லி மகிழ்வது. விளையாட்டுகளில் பின் தயங்கினாலும் அம்புலிமாமா, ரத்னபாலா என்று கதைப் புத்தகங்கள் அதிகம் படிப்பவர்களுக்குத் மவுசு கூடுவது இப்போது தான்! :-)
ஆச்சு, பொழுதாகி விட்டது. குளிக்க வேண்டும். கிணற்றடிக்குப் போய்க் கயிற்று வாளியைத் தொப்பென்று கிணற்றில் போட்டு, 'ப்ளக்' என்ற சத்தத்துடன் வாளி நிரம்புகிறது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கயிற்றை இழுப்பதற்குள் உள்ளங்கை சிவந்து வலிக்கிறது. வாளியைக் கைப்பிடித்து இழுத்து மேலே கொட்டிக் கொள்ளும் போது...ஆஹா!
குழந்தைகளின் பாதங்களிலும் கைநகங்களில் உறைந்து போன களிமண் கரைந்து வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டே அந்திச் சூரியன் விடைபெறுகிறது.
இன்று...
இருந்த கொஞ்சம் கல்லும் மண்ணும் கான்க்ரீட் கலவையில் சேரப் போய்விட்டன. மரங்கள் எல்லாம் ஃப்ளாட்டுகள் கட்ட வழிவிட்டு பூமிக்குள் பதுங்கி மக்கிவிட்டன. கூடுகட்டக் குச்சிகளில்லாமல் குருவிகளே காணாமல் போய்விட்டன.
அனுவுக்கு இருமகள்கள். தீபாவுக்கும் அப்படியே. இருவரும் இன்றும் அருகருகே தான் வசிக்கிறார்கள். குழந்தைகள் டிஸ்கவரி சானலில் "அணிலையும் குல்மோஹர் பூவையும் கண்டு "இது என்னம்மா?" என்று அதிசயித்துக் கொண்டிருக்கிறார்கள்.
(பி.கு: அலுவலகத்தில் இருந்தபோது நேஹா நினைவு வந்தது. கொஞ்ச நேரம் டிவி பார்த்த பிறகு பாட்டியுடன் ஏதாவது கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருப்பாள். அப்போது தோன்றியது, இதே வயதில் நம்ம என்ன பண்ணிட்டிருந்தோம்?)
Friday, June 10, 2011
எம்.எஃப்.ஹுஸைன்
இந்தப் பெயர் முதலில் தெரியவந்தது 1995 இல் ஹம் ஆப்கே ஹை கோன் ஹிந்தித் திரைப்படம் வெளிவந்தபோது தான். குமுதமோ விகடனோ நினைவில்லை, அதில் இந்த எண்பது வயது ஓவியர் மாதுரியின் தீவிர ரசிகராக அந்தப் படத்தை நாற்பது தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறார் என்றும், கூட்டம் கூட்டமாக இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு தியேட்டர்களில் அந்தப் படத்தைக் கண்டு மகிழ்கிறார் என்றும் எழுதி இருந்தார்கள். கூடவே அந்தப் படத்தில் மாதுரி வரும் காட்சிகளை அவர் வரைந்திருந்த ஓவியங்களையும் வெளியிட்டிருந்தார்கள். வேடிக்கையாக இருந்தது.
ஹூம்...அப்படி ஒரு கோமாளியாக மட்டும் அவர் இருந்திருந்தால் அவரை இந்நாடு மதித்திருக்கும். விளம்பரப்பிரியராக மட்டுமே அவர் இருந்திருந்தால் அவருக்குப் பேரும் புகழும் கிடைத்திருக்கும்.
அரசியலில் சேர்ந்து கோடிக் கணக்காய் ஊழல் செய்திருந்தால் கூட திஹார் ஜெயிலில் சகல வசதிகளுடன் கூடிய சொகுசு அறை கிடைத்திருக்கும்.
தலித் பெண்களைக் கிராமத்தோடு சென்று கற்பழித்துக் கொன்றிருந்தால் கூட நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்க மேலும் கீழும் யோசித்திருக்கும்.
அவ்வளவு ஏன், குஜராத்தைப் பிணக்காடாக்கிய 'நரவேட்டை'மோடியைக் கடவுளாக உருவகித்து வரைந்திருந்தால் (நிர்வாணமாகவே) அவரைக் கொண்டாடி ரதயாத்திரை எடுத்திருப்பார்களே?
ஆனால் எய்ட்ஸே அண்டாத இப்புனித தேசத்தில், பச்சிளம் பெண் குழந்தைகளுக்குக் கூடப் பரிபூரண பாதுகாப்பு சுதந்திரமும் இருக்கும் இப்புண்ணிய பூமியில் கோயில் சிற்பங்களில் காணாத நிர்வாணத்தை, நீலப்படங்களில் இல்லாத ஆபாசத்தை வரைந்துவிட்டாரே!
உருவமற்ற, உயிரற்ற, கற்பனைப் பாத்திரத்தை (ஆம், கடவுள் தான்) நிர்வாணமாக 'அவர்' வரையலாமா? அவர் 'வேறு' அல்லவா? 100 வயதை எட்டப் போகும் ஒரு கலைஞனுக்குச் சொந்தமண்ணில் உயிர்விடக்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.
காவிக் கறைபடிந்த கோரப்பற்களின் நிழல் கவிந்து கிடக்கிறது இம்மண்ணின் மீது.
ஆழ்ந்த அஞ்சலிகள்.
Thursday, May 26, 2011
நேஹா நேரம்!
கண்களைச் சிமிட்டித் தலையை ஆட்டி "நல்லப் பழக்கம்"
என்னது?
"ஹிஹி...கெட்டப்பழக்கம்மா"
மாடி வீட்டு ஆன்டிக்கு காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரது மகனிடம் அவர் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த நேஹா அமைதியாக எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் போனதும், கவலை தோய்ந்த முகத்துடன்,
"அம்மா, ஆன்ட்டிக்கு என்னம்மா ஆச்சு?"
"கால்ல அடிபட்டிருக்குடா"
"ரொம்ப வலிக்குமா?"
"ஆமாண்டா, கட்டு போட்டு ஊசி போடுவாங்க, சரியாயிடும்"
"இப்ப எங்க இருக்காங்க?"
"ஹாஸ்பிடல்ல.."
"ம்...ஹாஸ்டபல் பேர் என்ன? நாம போயிப் பாக்கலாமா?"
:)
நல்ல மூடில் இருந்தால், அவளைச் செய்யக் கூடாது என்று தடுத்து வைத்திருக்கும் வேலைகளை நாம் செய்யும் போது,
"எனக்கு இப்ப தெரியாதும்மா, பெரிய பொண்ணானவுடனே நானும் செய்வேன்." என்று சொல்லிக் கொள்கிறாள். இதில் ஸ்கூட்டர் ஓட்டுவது, கத்தியை உபயோகிப்பது, குழந்தையை குளிப்பாட்டுவது உட்பட பல அடக்கம்.
அலுவலகத்துக்குக்க் கிளம்பும் போது கேட்டருகே நின்று கொண்டு இருந்தாள். ஹெல்மெட்டை மறந்து விட்டு மீண்டும் ஓடி வந்தேன். அய்யோ குழந்தை நாம் திரும்பி வந்து விட்டதாக ஏமாந்து விடப் போகிறதே என்ற பயம் வேறு. ஆனால் "ஹெல்மெட் மறந்துட்டியாம்மா? ஹையோ ஹையோ! என்றபடி ஓடிச் சென்று எடுத்து வந்ததுடன் "போட்டுக்கிட்டுப் போம்மா, விழுந்துடப் போகுது!"
பெரியவர்களுக்கெல்லாம் மரியாதை கொடுத்துப் பேசுவது என்ற பேச்சே இல்லை. :( (உண்மையில் ரொம்பக் கவலையாக இருக்கிறது எனக்கு.)
ஆனால் ஒன்பது வயதாகும் என் அக்கா மகனை, "நிகிலண்ணா, இங்கே உட்காருங்க" என்பதும், அவனை யாராவது அதட்டினால் அவர்களுக்கு வசை மாரி பொழிவதும் தாங்க முடியவில்லை.
ஆனால் ஒரு முறை அவனை அதட்டிக் கொண்டிருந்த அவனது அக்காவை எதிர்த்து ஏதோ சொன்னான். உடனே இவள்,
"டேய் நிகில், மரியாதையாப் பேசுடா."
ஒரு நாள் பக்கத்து ஃப்ளாட் காரரிடம் ஏதோ பேசச் சென்றிருந்தார் ஜோ. உண்மையில் எனக்குத் தெரியவில்லை. "அப்பா எங்கே" என்று கேட்டவளிடம், "தெரியாதுடா, பக்கத்துல தான் எங்கயாச்சும் போயிருப்பாரு. என் கிட்ட சொல்லிட்டுப் போகல" என்று தான் சொன்னேன்.
ஜோ உள்ளே நுழைந்தது தான் தாமதம், "அப்பா! ஏன்பா அம்மாவை விட்டுட்டுப் போனீங்க. கூடக் கூட்டிட்டுப் போலாம்ல? பாவம் அம்மா!" இந்தப் பில்டப்பெல்லாம் நான் சொல்லித் தரவில்லை என்று ஜோவை நம்ப வைக்கப் படாத பாடு பட்டேன்.
அவளுக்குப் பிடித்த பாடல்களை மனப்பாடம் ஆகும் வரை என்னைப் பாடச் சொல்லிக் கேட்கிறாள். ஓரளவு வார்த்தைகளும் ராகமும் பிடிபட்டவுடன், "நீ பாடாதேம்மா, நானே பாடறேன்!" என்று சொல்லி விட்டு என்னை விட நன்றாகவே பாடுகிறாள். So her claim is justified. :)
Monday, May 16, 2011
மீட்சி
ஏதோ சிந்தனையின் இடையினிலே இடறியது
செதுக்காத சொற்கள், சமனில்லா வரிகள்...
முற்றுப் பெறவில்லை, முடியவும் வழியில்லை
ஆனாலும்...
எழுத வைத்த கணம் வந்து மின்னல் போல் வெட்டியது
சுருக்கங்கள் நீவி எடுத்து நினைவடுக்கில் சேமித்தேன்.
Friday, April 15, 2011
சின்னக் குயிலுக்கு...
Friday, March 25, 2011
நமக்குச் சுதந்திரம் தரும் பெண்கள்
Wednesday, March 23, 2011
A handful of rice (ஒரு பிடி சோறு) - கமலா மார்க்கண்டேயா
ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலம். வறுமையின் கொடுமை தாங்காமல் கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி வரும் இளைஞனின் கதை.
தாமோதர் என்கிற தாதா+திருடனின் கூட்டாளியாக வாழ்வைத் தொடங்கும் அவன் ஒரு வீட்டில் திருடப் போகும் போது மாட்டிக் கொள்கிறான். அந்த வீட்டுப் பெண்ணிடம் மனதைப் பறி கொடுக்கிறான். அவள் அப்பா ஒரு தையற்காரர். துரையம்மாக்களுக்கும் நம்மூர்ச் சீமாட்டிகளுக்கும் பகட்டான ஆடைகள் தைத்துத் தருபவர். நம் நாயகன் தன் கைவரிசையால் கடவுன்களிலிருந்து உயர்ரகத் துணிவகைகளைத் திருடிக் கொண்டு வந்து தருகிறான்.
மெல்ல மெல்ல அவரது வீட்டிலும் மனதிலும் இடம்பிடித்து அவரிடமே உதவியாளராகச் சேர்கிறான். அவரது மகளையும் மணந்து கொள்கிறான். மனைவி மீது தீராத காதல் கொள்கிறான். திருமணத்துக்குப் பிறகு கடினமாக உழைக்க வேண்டும்; மிகவும் அழகானதொரு குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று கனவு காண்கிறான்.
நெருக்கடியான சமயங்களில் நட்பு ரீதியாகத் தாமோதரைச் சென்று சந்தித்தாலும், அவனது செல்வச் செழிப்பைக் கண்டு பெருமூச்செறிந்தாலும் தான் விரும்பி அமைத்துக் கொண்ட வாழ்க்கை தான் சிறந்தது என்று நம்புகிறான்.
ஒரு நாள் துரைசாணிகள் வந்து போகும் ஒரு பகட்டான கடையில் தாங்கள் தைத்துக் கொடுக்கிற துணிமணிகள் 20 மடங்கு அதிக விலையுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்கிறான்.
பொறுக்கமாட்டாமல் குமுறுகிற அவனை மாமனார் அடக்குகிறார். "நாம மட்டும் விலையேத்த முடியாது. நம்மளை மாதிரி எத்தனை தையற்காரங்க இருக்காங்க" என்று. அனைவரும் சேர்ந்து சங்கம் அமைத்து விலையேற்ற வேண்டும் என்ற ரவியின் ஆலோசனையை அவர் ஆவேசத்துடன் மறுக்கிறார். "அதெல்லாம் கனவிலியும் நடக்காது; இப்படியெல்லாம் பேசினால் நீ சீரழிந்து போய்விடுவாய்" என்று அச்சுறுத்துகிறார்.
கடின உழைப்பு, உற்சாகம், காதல், கனவுகள், நேர்மை எல்லாம் இருந்தும் குடும்ப பாரம் அவனை அழுத்தித் தள்ளுகிறது. சமூகத்தின் முன் மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதாகத் தான் எண்ணிய மாமனார் எத்தகைய அவமானங்களையும் அநீதிகளையும் வாய்மூடிச் சகித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரின் வாடிக்கையாளர்களாகிய சீமாட்டிகளின் வீடுகளுக்கும் துரைமார்களின் வீடுகளுக்கும் போகும் போது அவனுக்குப் புரிகிறது. இந்த அநீதிகளைக் கண்டு அதிர்கிறவனாகவும், கேள்வி கேட்கும் கோபக்காரனாகவும் ரவி இருக்கிறான்.
இயன்றவரை இந்தப் பிழைப்பை ஓட்டுவோம். முடியாத பட்சத்தில் தாமோதருடன் போய்ச் சேர்ந்து கொள்வோம் என்ற எண்ணம் அவன் மனதோரத்தில் இருந்து வருகிறது.
இந்திய நடுத்தர வர்க்கக் கூட்டுக் குடும்பத்தின் வாழ்க்கை முறை மிகவும் எதார்த்தமான முறையில் கதையில் விரிகிறது. புதிதாகத் திருமணமானவர்களுக்காகப் வாடகைக்குக் கட்டில் எடுப்பதும் பத்து நாளானதும் அது திருப்பப்பட்டு விடுவதும், ஒரே அறையின் இடையில் தடுப்பு அமைத்து இரு குடும்பங்கள் படுத்துக் கொள்வதும், வறுமை கோரத்தாண்டவம் ஆடும் போதும் வீட்டுப் பெண்கள் பலமுறை கருவுறுவதும் நமக்குப் புதிதான சங்கதிகள் இல்லையென்றாலும் சம்பவங்கள் எழுதப்பட்ட விதம் நம்மை அடித்துத் தான் போடுகிறது.
குறிப்பாக ரவியின் ஒன்றரை வயதுக் குழந்தை பீச்சில் சுண்டல்காரரின் வேட்டியைப் பிடித்து இழுக்கும் போது பட்டாணிக் கூடை விழுந்து விடுமோ என்று அவர் பதறுவதும், அய்யோ அப்படி விழுந்து விட்டால் மொத்தத்துக்கும் காசு தரவேண்டுமே என்று ரவி குழந்தையை அடித்து நொறுக்குவதும்...மெலோ ட்ராமா சிறிதுமில்லாத சோக நாடகம்.
மாமனாரின் இறப்புக்குப் பிறகு தொழிலில் பின்னடைவு ஏற்படுகிறது. வாடிக்கையாளர்கள் நிர்தாட்சண்யமாகக் கைவிடுகிறார்கள். அவர்கள் முன் தன்னை வாரிசாக முன்நிறுத்த மாமனார் கையாண்ட யுக்திகளெல்லாம் வீணாகிப் போன வேடிக்கையை எண்ணிப் புழுங்குகிறான் ரவி.
அதுவும் நம்மூர்ச் சீமாட்டி ஒருவர் தன் மகளின் பட்டுச் சட்டையை ஒழுங்காகத் தைக்கவில்லை என்று கத்தித் தீர்க்கிறார். "என்ன விலை தெரியுமா அந்தத் துணி? ஒரு கஜம் அம்பது ரூபாடா" என்கிறாள். ரவியின் மனம் மேலும் கசக்கிறது. அந்த ஐம்பது ரூபாயிருந்தால் தன் வீட்டில் பத்து பேர் எத்தனை நாட்களுக்குச் சாப்பிட்டிருப்போம் என்று கணக்கிடுகிறான். வந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு விழுங்குகிறான்.
'உங்களுக்கு இம்மாதிரி அழகழகான துணிகள் தைத்துத் தரும் எங்களுக்கும் அழகான மனைவி குழந்தைகள் இருப்பார்களே! இதைத் தைக்கும் போது அவர்களுக்கு இதை அணிவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை துளிக்கூட எங்கள் மனதில் வராதா? அதையெல்லாம் யோசிக்கக் கூட மாட்டீர்கள் அல்லவா? உங்களைப் பொறுத்தவரை நாங்களெல்லாம் இயந்திரங்கள். உணவு உடை தேவைகள் மட்டுமா, கோபத்தைக் காட்டும் சுதந்திரமும் கூட பணம் இருந்தால் தான் கிடைக்கும்' என்று மனம் வெம்புகிறான்.
கதையில் எதிர்பாராத திருப்பங்களோ, ரவியை ஒரு சாகச நாயகனாக நிறுவும் யுக்திகளோ இல்லை. ஆனாலும் ரவியின் பாத்திரப்படைப்பு உண்மையாகவும் நம்பிக்கை தருவதாகவும் அமைந்திருப்பதே இக்கதையின் சிறப்பு.
ஆங்கில வாசகர்களுக்கு இந்திய நடுத்தர வாழ்க்கை முறையைப் படம்பிடித்துக் காட்டுவதற்காக எழுதப்பட்ட புத்தககமாகக் கருதினாலும் (தேவையே இல்லாமல் இன்செஸ்ட் சம்பவம் ஒன்று திணிக்கப்பட்டுள்ளது யாருக்காக என்று புரியவில்லை) கருத்துக்களின் வீரியத்தில் கமலா மார்க்கண்டேயா சந்தேகத்துக்கிடமின்றி ஓர் இடதுசாரியாக மிளிர்கிறார். "கௌரவமான" வாழ்க்கைக்காகப் போராடும் ரவிக்களும் நளினிக்களும் இன்னும் ஏராளம்பேர் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதாலேயே இந்தக் கதை முக்கியமாகப் படுகிறது.