Thursday, July 30, 2009

”நான் உன்னை மாதிரி இருந்தப்போ…”

குழந்தைகளுக்குக் கதை கேட்கப் பிடிக்கும் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. ஆனால் நாம் சின்ன வயதில் செய்த குறும்புகள், அப்போது நடந்தவை இதை எல்லாம் சுவாரசியமாகச் சொன்னால் இன்னும் ரொம்பப் பிடிக்கும்.

நம் சிறு வயதில் நம் வீட்டில் கூட இப்படி நமக்குக் கதைகள் சொல்லி இருப்பார்கள். ”நான் சின்னப் பொண்ணா இருக்கும் போது உங்க பாட்டி...” என்றும், ”உங்க அப்பாவும் உன்னை மாதிரி தான்” என்று தொடங்கி உங்கள் பாட்டிகளும் சொன்ன சுவாரசியமான சம்பவங்களை நீங்கள் மறந்திருக்கவே மாட்டீர்கள்.

என் சிறு வயதில் When Daddy was a little boy என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். அதன் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் ராஸ்கின் தனது ஆறு வயது மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது அவளைக் களிப்படையச் செய்ய தனது குழந்தைப் பருவச் சம்பவங்களை நகைச்சுவையாகக் கூற ஆரம்பித்ததாகவும் அதை அவள் வெகுவாக ரசித்து மகிழ்ந்ததால் அதையே நூல் வடிவில் கொண்டு வந்ததாகவும் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.

எப்போதும் தங்களையே கவனித்துக் கொண்டு தங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அப்பா அம்மாவும் ஒரு காலத்தில் தங்களைப் போலவே குழந்தைகளாக இருந்திருப்பார்கள்;
குறும்புகள், சண்டைகள், அசட்டுத்தனங்கள் நிரம்பியவர்களாகவும், அதற்காகத் திட்டும் தண்டனைகளும் கூடப் பெற்றிருப்பார்கள் என்பதும் குழந்தைகள் அறிந்து கொள்வது அவர்களுக்குச் சுவாரசியமானது மட்டுமல்ல அவசியமானதும் கூட என்கிறார் திரு. ராஸ்கின்.

ரொட்டி சாப்பிட மறுத்த தன்னை வழிக்குக் கொண்டு வர தனது பாட்டி ஒரு வாரம் ரொட்டியே சாப்பிட வேண்டாம் என்று அறிவித்ததும் எப்படி மகிழ்ந்தார் என்றும் மூன்றாம் நாள் உடல் சோர்ந்து பசி மேலிட ரொட்டியைத் திருடித் தின்றது உட்பட இந்தப் புத்தகத்தில் பல நகைச்சுவையான, சிந்திக்க வைக்கும் விஷயங்கள் உள்ளன.

அதே போல் தன்னைப் பற்றி சொல்ல எதுவும் தோன்றாவிட்டால் பிற அப்பா, அம்மாக்கள், அதாவது தனது நண்பர்கள், குழந்தையின் சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, என்று யாரைப் பற்றியும் நல்ல கதைகள் சொல்லலாம்.

ஹாரிபாட்டர் கதையில் ஹாரியின் தலைமை ஆசிரியர் சொல்வார்; ”Old men are guilty if they forget what it was to be young” என்று. அது சத்தியமான வார்த்தை.
எனவே நாமும் நமது குழந்தைப்பருவத்தை நினைவு கூர்ந்து நம் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வோம். அது நிச்சயம் நமக்கும் நம் குழ்ந்தைகளுக்குமான புரிதலையும் பிணைப்பையும் பலப்படுத்தும்.

Sunday, July 19, 2009

பொம்மன், திம்மன், வம்பன் - குழந்தைகளுக்கு ஒரு கதை

ரத்னபாலா மணிப்பாப்பா என்ற இரு சிறுவர் இதழ்கள் நினைவிருக்கிறதா? அவற்றை வாசித்த எவருக்கும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடாது. செல்லம் அவர்களின் அழகு ஓவியங்களும், வண்ணப் படங்களும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் கதைகளுமாகக் குழந்தை இலக்கியத்தின் பொக்கிஷமாகத் திகழந்தவை அவை.

இதன் ஆசிரியரான முல்லை தங்கராசன் என்ற மிகச்சிறந்த குழந்தை எழுத்தாளரின் திடீர் மரணத்தால் அவ்விதழ்கள் வருவதும் நின்று போயின.

இது தமிழ்க் குழந்தை இலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகி விட்டது என்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறேன்.

ஏனென்றால் என் அக்காவும் அண்ணனும் படித்துச் சேர்த்து வைத்த இதழ்களைத் தான் நான் படித்திருக்கிறேன். இப்போதெல்லாம் ஏன் அந்த இதழ் வருவதில்லை என்று கேட்ட போது அதன் ஆசிரியர் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். ரத்னபாலா இனிமேல் வரவே வராது என்பது ஒரு தனிப்பட்ட சோகமாக எங்களுக்கு இருந்தது.

முட்டாள் பட்டணம், மதியூகி மாப்பிள்ளை, ஜாம் ஜிம் ஜாக் போன்ற எண்ணற்ற கதைகளும் சித்திரக்கதைகளும் தாங்கிக் கனவுலகம் போல் வலம் வந்த அந்த இதழுக்கு ஈடாக வேறெதையுமே சொல்ல முடியாது.

குழந்தை இலக்கியமென்றால் நீதிக் கதைகள் இருந்தே ஆகவேண்டுமென்ற நியதி எல்லாம் இல்லாமல் பெரியவர்களும் ரசிக்கும் வண்ணம் அலாதியான நகைச்சுவைக் கதைகள் இடம்பெற்றிருந்தன.


எனக்கு நினைவில் நிற்கும் கதை ஒன்றை குட்டீஸ்களுக்கும் அவர்களுக்குக் கதை சொல்லும் பெற்றோருக்காகவும் தருகிறேன். இது ரத்னபாலாவில் வந்தது. எழுதியது யாரென்று உறுதியாகத் தெரியவில்லை.

மூலக்கதை இதைப்போல் பதின்மடங்கு சுவாரசியாமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். என் நினைவில் நின்ற வரை மீட்டெடுத்திருக்கிறேன்.

பொம்மன் திம்மன் வம்பன்

ஒரு ஊரில் பொம்மன், திம்மன், வம்பன் என்று மூன்று சகோதரர்கள் தங்கள் வயதான தாய் தந்தையுடன் வசித்து வந்தனர். அப்போது அவர்கள் ஊரில் திடீரென்று புயல் மழை பெய்தது. பயிர்களெல்லாம் நாசமாகிக் கடும் பஞ்சம் ஏற்பட்டது.

அப்போது பொம்மன் சொன்னான். “அப்பா, நீங்கள் பயிரிட்டதெல்லாம் நாசமாகி விட்டதே என்று வருந்தாதீர்கள். நான் பக்கத்து ஊருக்குச் சென்று ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன்.”

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு பொம்மன் அண்டை ஊருக்குக் கால் நடையாகவே சென்று அடைந்தான். அந்த ஊரின் பண்ணையாரிடம் போய் வேலை ஏதாவது தருமாறு கேட்டான்.

அந்த ஊர்ப் பண்ணையாரோ மகாக் கஞ்சப் பேர்வழி. ஈவிரக்கம் இல்லாதவர். அவர் பொம்மனைப் பார்த்துச் சொன்னார்.

”தம்பி, உனக்கு தாராளமாக என் பண்ணையில் வேலை தருகிறேன். வேலை முடிந்ததும் சம்பளமும் சாப்பாடும் தருவேன்.
ஆனால் நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.”

“என்ன ஐயா அது?”

“எக்காரணம் கொண்டும் நீ என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது. நானும் உன்னிடம் கோபித்துக் கொள்ள் மாட்டேன். மீறி நீ என்னிடம் கோபம் கொண்டால் உன்னை வேலையை விட்டு நீக்கி விடுவேன். கூலி எதுவும் தரவும் மாட்டேன்.” என்றார்.

“நீங்கள் என்னிடம் கோபித்தால்” பொம்மன் கேட்டான்.

“அப்போது நான் உனக்கு இருபதாயிரம் ரூபாய் தருவேன்”

பொம்மனுக்கு இந்த நிபந்தனை நியாயமாகத் தோன்றியது. மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். உடனே தோட்டத்துக்குச் சென்று வேலை செய்யலானான்.

கடும் உழைப்பாளியான பொம்மன் உற்சாகமாக வேலை செய்தான். நாளெல்லாம் தோட்டத்தைச் சுத்தம் செய்தான், பாத்தி வெட்டிச் செடிகள் நட்டான், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான்.
மாலையில் மிகவும் களைத்துப் போனான். பயங்கரமாகப் பசி எடுத்தது. பண்ணையாரிடம் சென்று வேலை முடிந்தது என்று கூறிப் பசிக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்தினான்.

பண்ணையார் மலர்ந்த முகத்துடன் அவனைத் தன் பின்னால் வரும்படி அழைத்தார். தோட்டத்தின் மூலையில் ஒரு அறிவிப்புப் பலகை சாத்தி வைக்கப்பட்டிருந்தது. புன்னகையுடன் அதைச் சுட்டிக் காட்டினார். அதில்,

“பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுக்கு நாளை சம்பளமும் சாப்பாடும் கிடைக்கும்”

பொம்மனுக்குக் கோபமாக வந்தது. ஒப்பந்தத்தை எண்ணி ஒன்றும் பேசாமல் திரும்பினான். கஷ்டப்பட்டுப் பசியை அடக்கிக் கொண்டு உறங்கிப் போனான்.

மறு நாள் அதிகாலையிலேயே எழுந்து விரைவாக வேலைகளை முடித்துவிட்டு பண்ணையாரிடம் சென்று ஊதியம் கேட்டான்.
பண்ணையார் மறுபடியும் சிரித்துக் கொண்டே அதே அறிவிப்பினைக் காட்டினார்.

பொம்மன் அமைதியாகக் கேட்டான், “என்ன ஐயா இது, நேற்று தான் நாளை தருவதாகச் சொன்னீர்களே?”

அதற்குப் பண்ணையார் சொன்னார், “ஆமாம், நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு எல்லாம் என்னிடம் கிடையாது. எப்போதும் ஒரே பேச்சுத் தான்” என்று சிரித்தார்.

பொம்மனுக்குக் கோபம் பீறிட்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

மூன்றாம் நாள் வேலை முடிந்ததும் பண்ணையாரிடம் சென்றான். அன்றும் அவர் அதே பலகையைக் காட்டியதும் பொம்மனால் பொறுக்க முடியவில்லை.

“யோவ், என்ன ஆள் ஐயா நீர்? முதுகொடிய வேலை செய்பவனை இப்படி ஏமாற்றுகிறீர்? நீர் மனிதன் தானா?” என்று ஆத்திரம் தீரக் கத்தினான்.

நயவஞ்சகமான அந்தப் பண்ணையாரோ முகத்தில் புன்னகை மாறாமல், “அடடா, தம்பி பொம்மா, ஒப்பந்தத்தை மீறி விட்டாயே. என்னிடம் கோபித்துக் கொண்டு கத்தி விட்டாயே. நீ போகலாம்“ என்றார்.

அவமானமும் கோபமும் தாங்காமல், பொம்மன் ஊர் திரும்பினான். வீட்டுக்கு வந்து பெற்றோரிடமும் தம்பியரிடமும் தனக்கு நேர்ந்த அநியாயத்தைச் சொன்னான்.

அடுத்த சகோதரனான திம்மன் தான் அப்பண்ணையாரிடம் சென்று நியாயம் கேட்பதாகக் கூறிச் சென்றான். அவனையும் பண்ணையார் இதே போல ஏமாற்றி அனுப்பி விட்டார்.

இறுதியாகக் கடைக்குட்டி வம்பன் சொன்னான். “அண்ணன்மார்களே, நான் போகிறேன் அந்தப் பண்ணையாரிடம் வேலை செய்ய. அவரை என்ன செய்கிறேன் பாருங்கள்”

”அடேய் வம்பா, நீ சின்னவன். உன்னால் சும்மாவே பசி தாங்க முடியாது. வேலையும் எப்படியடா செய்வாய்? வேண்டாமடா” என்றனர் பொம்மனும் திம்மனும்.

வம்பன் அவர்களைக் கவலைப்படவேண்டாம் என்று கூறிப் புறப்பட்டான். துணைக்குத் தன் செல்ல நாயையும் அழைத்துச் சென்றான்.

பண்ணையார் வம்பனுக்கும் அதே நிபந்தனைகளைக் கூறி வேலைக்கமர்த்திக் கொண்டார்.

முதல் நாள் மாலை வேலை நேரம் முடிந்ததும் வம்பன் தன்னிடம் வருவான் என்று எதிர்பார்த்தார். அவன் வரவில்லை. அப்படியே மூன்று நாட்கள் கழிந்தன. வம்பன் அவரைப் பார்த்தால் முகம்மலர்ந்து வணங்குவதும் உற்சாகமாக வளைய வருவதுமாக இருந்தானே தவிர ஊதியமும் கேட்கவில்லை, சாப்பாடும் கேட்கவில்லை.”

அவனிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்தார். அவனைத் தேடிச் சென்ற போது தோட்டத்தில் மல்லாந்து படுத்துச் சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் வம்பன்.

“வம்பா, நீ எப்படி இத்தனை நாட்களாக ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறாய்?

பெரிதாகச் சிரித்த வம்பன், “நானா? சாப்பிடவில்லையா? நல்ல வேடிக்கை போங்கள், என்னால் ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருக்க முடியாது. மூன்று வேளையும் செட்டியார் கடையில்
மூக்குப் பிடிக்கச் சாப்பிடுகிறேனே. என் அம்மா கைப்பக்குவம் அவருக்கு அப்ப்டியே இருக்கிறது.”
“காசு...” என்று பண்ணையார் இழுக்க,

“இதோ நம் பண்ணையிலிருந்து தான் நெல் மூட்டைகளைக் கொடுத்துப் பதிலுக்குச் சாப்பாடு வாங்கிக் கொள்கிறேன். என் நாய்க்குக் கூடக் கஞ்சி ஊற்றாமல் சுடு சாதம் போடுகிறார். பாருங்கள் எப்படி வாலாட்டுகிறதென்று.” சொல்லிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டு குஷாலாகப் பாட ஆரம்பித்தான்.

பண்ணையாருக்குக் கோபத்தில் மீசை துடித்தது. சின்னப் பயல் எவ்வளவு சாதுர்யமாக நம்மை ஏமாற்றி இருக்கிறான் என்று கறுவினார். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோபப்பட்டால் இருபதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமே.

பொறுத்திருந்து தான் யோசிக்க வேண்டும் என்று திரும்பி விட்டார்.

மறு நாள் வம்பன் அவரிடம் வந்தான். “எசமான், பூங்குளம் ஊரில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டிகட்டிக் கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தான்.

பண்ணையாரும் பேராசைப்பட்டு அவனுடன் போகச் சம்மதித்தார். வம்பன் தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினான். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “டேய் மெதுவாடா மெதுவாடா”, என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.

பொழுது சாய்ந்து விட்டது. அவர்கள் கடந்து சென்ற சாலை ஓரமாக ஒரு சேற்றுக் குட்டை தென்பட்டது. அதனுள் பன்றிகள் விளையாடித் திளைத்துக் கொண்டிருந்தன.

சடக்கென்று வண்டியைச் சாய்த்தான் வம்பன்; பண்ணையார் ’தொபுக்கடீர்’ என்று குட்டையில் விழுந்தார். அவர் உடலெல்லாம் சேறு படிந்தது. அருகில் ஒரு பன்றி வேறு அவரை நோக்கி உறுமிக் கொண்டே கடிக்க வந்தது.

அவ்வளவு தான். கோபம் பொத்துக் கொண்டு, வம்பனைப் பார்த்துக் கண்டபடி ஏச ஆரம்பித்தார் பண்ணையார்.

சாலை மேலே நின்று கொண்டிருந்த வம்பன் புன்முறுவலுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான். பின் சொன்னான்.

“எசமான், ஒப்பந்தத்தை மீறிட்டீங்களே? கோபப்பட்டு என்னைத் திட்டிட்டீங்களே? எடுங்கள் ரூபாய் இருபதாயிரம்.” என்றான்.

“அதெல்லாம் ஒண்ணும் முடியாது போடா” என்றார் பண்ணையார்.

“அப்படியா. அப்போ இந்தச் சேத்துக் குட்டையிலேயே கிடங்க. இரவாகிவிட்டது, காலையில் யாராவது வந்து கை தூக்கி விடற வரைக்கும் இந்தப் பன்றிகளுடன் விளையாடிக் கொண்டிருங்கள்” என்று சிரித்தான்.

“சரி தர்றேன், கை தூக்கி விடுடா”

“ஹீம். இந்தக் கையில் பணம், இந்தக் கையால் தூக்கி விடுவேன்!” என்று கை நீட்டினான்.

வேறு வழியின்றி முனகியபடியே பணத்தை எடுத்து வம்பனிடம் கொடுத்தார் பண்ணையார்.

அவரைக் கைதூக்கி விட்டபின், வெற்றிக் களிப்புடன் பணத்துடன் தன் சொந்த ஊரை நோக்கி நடந்தான் வம்பன். அவனது செல்ல நாய் உற்சாகத்துடன் குரைத்தபடி அவனைப் பின்தொடர்ந்தது.
***************

முல்லை தங்கராசன் அவர்கள் தனியாகக் கதைகள் எழுதியும் நூல்கள் வெளியிட்டதாக ஞாபகம். அவை பற்றியும், பழைய ரத்னபாலா இதழ்கள் எங்கு கிடைக்கும் என்பது பற்றியும் யாருக்காவது தகவல் தெரிந்தால் தயவு செய்து வெளியிடவும்.

கன்னிமாரா நூலகத்தில் தேடிய போது கிடைக்கவில்லை. ரத்னபாலா பழைய இதழ்களும் அவர்களிடம் இல்லையாம்.


ஒரு பழைய மணிப்பாப்பா இதழுக்குச் சுட்டி இதோ!:
http://www.tamilcc.org/thamizham/ebooks/7/655/TM655.pdf

Friday, July 17, 2009

ஒரு சின்ன கயிறு

காடர்வில் கிராமத்தில் அன்று சந்தை நாள். குடியானவர்கள் தத்தம் மனைவியருடன் ஊர் மத்தியில் இருந்த சதுக்கத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். கடும் உழைப்பினால் முறுக்கேறி மடங்கிய அவர்களது நீண்ட கால்கள் மெல்ல மெல்ல நடை போட்டன. விறைப்பாக கஞ்சி போடப்பட்ட அவர்களது மேற்சட்டைகள் காற்றில் பலூன் போலப் புடைத்து அவர்களைத் தூக்கிச் செல்வது போன்ற பிரமையை ஏற்படுத்தின. தொலைவிலிருந்து பார்த்தால் ஒவ்வொரு பலூனிலிருந்தும் தலை, கை கால்கள் முளைத்தது போல் இருந்தது.

சிலர் மாடுகளைக் கயிறு கட்டி இழுத்து வந்தனர். அவர்களது மனைவியர் கையில் கம்புடன் அவற்றை வேகமாக நடக்கும்படி அதட்டியவாறே வந்தனர். இவர்கள் கைகளில் பெரிய பெரிய கூடைகள் வைத்திருந்தனர். அவற்றினுள்ளே இருந்து கோழிக்குஞ்சுகளும் வாத்துக்களும் தலையை நீட்டி வெளியே பார்த்தன. தங்கள் கணவன் மார்களை விட இவர்கள் உற்சாகத்துடனும் சிறு துள்ளலுடனும் நடை போட்டனர். தங்கள் மெலிந்த உடலின் மீது சின்ன சால்வையும் வெள்ளைத் தலைக் குட்டையும் அதன் மீது ஒரு தொப்பியும் அவர்கள் அணிந்திருந்தனர்.

ஒரு ட்ரக் வண்டி பலமாக ஆடிக்கொண்டே கடந்து சென்றது. அதன் உள்ளே இரு ஆண்களும் பின் புறத்தில் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். வண்டியின் ஆட்டத்தைத் தாக்குப் பிடிக்க அவள் அதன் பக்கங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

காடர்வில்லின் சந்தை நடக்கும் சதுக்கத்தில் பெரிய கூட்டம் சேர்ந்திருந்தது. மனிதர்களும் கால்நடைகளும் கலவையாக அங்கு காணப்பட்டனர். மாடுகளின் கொம்புகளும் பணக்கார விவசாயிகளின் நீளமான தொப்பிகளும் குடியானவப் பெண்களின் தலை அலங்காரங்களும் துலாம்பரமாகத் தெரிந்தன. கிறீச்சிடும் குரல்களும், நல்ல திடமான கிராமத்தானின் நெஞ்சுக்கூட்டிலிருந்து வரும் பலத்த சிரிப்பும், கட்டப்பட்ட மாடுகளின் கத்தலுமாக அங்கு பேரிரைச்சல் நிலவியது.

குதிரை லாயம், மாட்டுக் கொட்டகை, வைக்கோல் போர், வியர்வை, சாணம், என்று மனிதனோடும் அவனுடன் வாழும் மிருகங்களோடும் ஒன்றிய, அந்த எளிய கிராம மண்ணுக்கே உரிய நெடி கலந்தடித்து வீசியது.

அப்போது அங்கு மேட்டர் (maitre) ஹாஷ்கோம் என்பவர் வந்து சேர்ந்தார். மெதுவாகச் சதுக்கத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தவர் சாலையில் ஒரு சின்ன கயிறு கிடப்பதைப் பார்த்தார்.

ஒரு உண்மையான நார்மன் வாசியைப்போல சிக்கனக்காரரான அவர் பயன்பாடுள்ள எதுவுமே வீணாவதை விரும்பாமல் குனிந்து அந்தக் கயிற்றைக் கையிலெடுத்தார். வாதத்தினால் வளைந்த அவரது கால்களுக்கு அவ்வளவு குனிவதே மிகச் சிரமமாக இருந்தது. கையில் வைத்து அதைத் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருந்த போது சற்று தொலைவில் மேட்டர் மாலண்டெயின் (அவரும் கடிவாளம் செய்பவர் தான்) அவ்ரையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தார். சில நாட்களுக்கு முன்பு தான் இருவருக்கும் தொழில் ரீதியாக வாய்த்தகராறு ஏற்பட்டு பேச்சுவார்த்தை அற்றுப் போயிருந்தது.

தான் கீழே கிடக்கும் கயிறொன்றை எடுத்ததைத் தனது எதிரி பார்த்துவிட்டதால் வெட்கமடைந்த ஹாஷ்கோம் அவசரமாக அதைத் தனது சட்டைக்குள் மறைத்தார்; பின்பு காற்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார். பிறகும் கீழே தவறவிட்ட எதையோ தேடுவது போன்ற பாவனையுடன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். கால்கள் வாதத்தினால் மடங்கி வலித்தன.

சற்று நேரத்துக்கெல்லாம் இறைச்சலும் முடிவில்லா பேரங்களும் நிறைந்து பரபரப்பாக இருந்த சந்தைக்கூட்டத்தினுள் சென்று கலந்து விட்டார். பொருட்கள் வாங்க வந்த குடியானவர்களின் முகங்கள் கவலையுடனே காணப்பட்டன. திடமான முடிவெடுக்க முடியாமல், வியாபாரி ஏமாற்றிவிடுவானோ என்ற சந்தேகத்துடனே குற்றம் கண்டுபிடிக்கும் மனோ நிலையுடனே வளைய வந்தனர்.

பெண்கள் தங்கள் பெரிய கூடைகளை இறக்கி வைத்துவிட்டு அதன் முன் அப்படியே அமர்ந்து கொண்டனர். கால்கள் கட்டப்பட்டு மருண்ட பார்வையுடன் துடிதுடித்த்க் கொண்டிருந்த கோழிகளையும் வாத்துக்களையும் வெளியே எடுத்து வியாபாரம் செய்யலாயினர்.

பேரங்களைக் கேட்டுச் சலனமடையாத முகத்துடன் திடமாக விலை கூறினர், பின்பு திரும்பிச்செல்லும் வாடிக்கையாளரை ஒருவித திடீர் மனமாற்றத்துடன், “சரி தான், மேட்டர் ஆதரின்! அந்த விலைக்குக் கொடுக்கிறேன்.“ என்ற ரீதியில் கூவி அழைத்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சதுக்கம் வெறிச்சோடியது.

ஜார்டெயினின் உணவகத்தில் அந்தப் பெரிய கூடம் முழுதும் நிறைந்து மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அதன் விசாலமான முற்றத்தில் எல்லா விதமான வாகனங்களும் நின்றிருந்தன. கட்டை வண்டிகள், ட்ரக்குகள், மாட்டு வண்டிகள், அழுக்கடைந்து மஞ்சளாக, பழுதுபார்க்கப்பட்டு, ஒட்டுப் போடப்பட்டு. கைப்பிடிகள் வானை நோக்கி உயர்ந்த நிலையில் அவையும் ஓய்வெடுக்கும் நிலையில் இருந்தன.

சாப்பிடுபவர்களுக்கு எதிராகப் பெரிய குமுட்டி எரிந்து அறையை இதமாகச் சூடுபடுத்திக் கொண்டிருந்தது. அந்தக் குமுட்டியில் கோழிக் குஞ்சுகளும் புறாக்களும் ஆட்டுக்கால்களும் வாட்டப்பட்டுக் கொண்டிருந்தன. இதனால் நாவூறும் மணம் அறையெங்கும் பரவி அனைவரையும் களிப்படையச் செய்தது.

மேட்டர் ஜார்டெயினின் உணவகம் பெரும் பணக்காரர்களும் கூடி சாப்பிடும் இடமாக இருந்தது. சாப்பாட்டுத் தட்டுக்களும் ஸைடர் பானக் கோப்பைகளும் மீண்டும் மீண்டும் நிறைந்து காலியாகிக் கொண்டிருந்தன. அனைவரும் தாங்கள் அன்று வாங்கியவை விற்றவை பற்றியெல்லாம் விஸ்தாரமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
பருவம் கோதுமைப்பயிருக்கு அல்ல, பச்சைக் காய்கறிகளுக்கே சாதகமாக இருக்கிறது போன்ற நுணுக்கங்களும் அலசப்பட்டன.

திடீரென்று அக்கூடத்து வாயிலில் தண்டோரா போடப்பட்டது. உடனே பலரும் ஆர்வத்துடன் எழுந்து வாயிலுக்கு ஓடினர்.


தண்டோரா போட்டவன் தனது நடுங்கும் குரலில் தொடர்பில்லாத வாசகங்களுடன் கத்தினான். “இதனால் காடர்வில் வாழ் மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், அத்துடன் இன்று சந்தையில் கூடிய அனைவருக்கும்; பென்ஸ்வில் போகும் சாலையில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணிக்குள் ஒரு கறுப்பு லெதர் பணப்பை, ஐந்நூறு ஃப்ராங்க்குளும் சில காகிதங்களும் கொண்டது, காணாமல் போயிருக்கிறது. அதைக் கண்டு எடுத்தவர் சற்றும் தாமதிக்காமல் மேயர் அலுவலகத்திலோ, அல்லது பொருளைப் பறிகொடுத்த, மேன்வில்லைச் சேர்ந்த மேட்டர் ஃபார்ச்சூன் ஹால்புக்கொர்க்கி, அவர்களிடமோ ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இருபது ஃப்ராங்க்குகள் சன்மானம்.”

அந்த ஆள் போய்விட்டான். இன்னும் சற்று தூரத்தில் அதே தண்டோராவும் செய்தியும் மீண்டும் கேட்டன.

எல்லோரும் இதைப்பற்றிப் பேசத் தொடங்கினர். தொலைத்தவனுக்குப் பொருள் மீண்டும் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி அலசி ஆராய்ந்தனர்.

உணவு வேளை முடிந்து அனைவரும் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காவல்துறை அலுவலர் வந்து விசாரித்தார். “மேட்டர் ஹாஷ்கோம் இங்கே இருக்காரா?”

உள்ளே அமர்ந்திருந்த ஹாஷ்கோம் குரல் கொடுத்தார், “நான் இங்கே தான் இருக்கேன்.”

“மேட்டர் ஹாஷ்கோம், தயவு செஞ்சு என் கூட மேயர் அலுவலகத்துக்கு வர முடியுமா? மேயர் உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னார்.”

ஹாஷ்கோம் என்ற அந்த எளியக் குடியானவன் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தார். கையிலிருந்த பிராந்தியின் கடைசி மிடற்றை விழுங்கியபடி, முன்னெப்போதையும் விட தளர்ச்சியுடன் எழுந்து வந்தார். “வர்றேன், வர்றேன்”

மேயர் அவருக்காகக் காத்திருந்தார். அந்தப் பகுதியின் மிக முக்கியமான புள்ளி அவர். தடித்த உடலும், செருக்கும் கொண்ட அவர் டம்பமான மொழிக்கும் சொந்தக்காரர்.

“மேட்டர் ஹாஷ்கோம், இன்று காலையில் பென்ஸ்வில் செல்லும் சாலையில் நீங்கள் நின்றிருந்த போது கீழே இருந்து ஹால்புக்கொர்க்கின் பணப்பையைக் கண்டெடுத்ததாகச் சொல்லப்படுகிறீர்”

அந்தக் கிராமத்தான் வெலவெலத்துப் போனார். மேயரை நோக்கி வெறித்தபடி, “நானா? நானா? பணப்பையை எடுத்தேனா?”

“ஆமாம், நீங்க தான்.”

“என் தலை மேல சத்தியமா நான் எடுக்கலை. எனக்கு அதைப்பத்தி ஒண்ணுமே தெரியாது.”

“ஆனா நீங்க எடுத்ததைப் பாத்ததாச் சொல்றாங்களே.”

“யாரு? யாரு சொல்றாங்க?”

“மெஸ்ஸியர் மாலண்டெய்ன், கடிவாளம் செய்பவர்”

இவருக்கு இப்போது நினைவு வந்தது. கோபத்தில் முகமும் சிவந்தது.

“அட, இந்த லூஸு இதைத் தான் பார்த்தான். இதோ இந்தக் கயிறை நான் எடுத்தப்போ பாத்தான்”

பாக்கெட்டுக்குள் கைவிட்டு அந்தக் கயிற்றைத் தேடி எடுத்துக் காண்பித்தார்.

மேயர் நம்பமுடியாமல் தலையை அசைத்தார்.

“மேட்டர் ஹஷ்கோம், மெஸ்ஸியர் மேலண்டெய்ன் மாதிரி ஒரு கண்ணியமான ஆள் ஒரு கயிற்றைப் போய் பணப்பைன்னு தப்பா சொல்லுவார்னு நீங்க என்னை நம்ப வைக்க முடியாது”

ஹாஷ்கோமுக்குக் கோபம் தலைக்கேறியது. பக்கவாட்டில் திரும்பிக் காறித்துப்பிய அவர், “கடவுள் மேல் ஆணையாச் சொல்றேன். இது தான் உண்மை மேயர் ஸார். என் உயிரையே பணயம் வெச்சுச் சொல்றேன்.”

மேயர் தொடர்ந்தார். “அதை எடுத்தப்புறம் ரொம்ப நேரம் கீழே குனிஞ்சு பாத்துட்டு இருந்தீங்களாமே, ஏதாவது பண நோட்டு தவறி சிதறிடுச்சான்னு”

அந்த நல்ல மனிதனுக்கு ஆத்திரத்திலும் நடுக்கத்திலும் மூச்சடைத்தது.

“எப்படி இப்படி, எப்படி இந்த மாதிரி பொய்கள் சொல்ல முடியும், ஒரு நல்ல மனுஷனோட பெயரைக் களங்கப்படுத்த...யாரு இந்த மாதிரி செய்வாங்க”

அவர் என்ன சொல்லியும் பயனில்லை. யாரும் அவரை நம்பவில்லை. மாலண்டெய்னை அவரை நேரடியாக விசாரிக்க வைத்தனர். அப்போது இருவரும் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கடுஞ்சொற்கள் பேசிச் சண்டையிட்டனர். ஹாஷ்கோமே கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரைச் சோதனை போட்டனர். ஒன்றும் கிடைக்கவில்லை.

இறுதியாக மிகவும் குழப்பமடைந்த மேயர், அரசு தரப்பு வக்கீலைக் கலந்தாலோசித்த பின் மேற்படி விசாரணைக்கு அழைப்பதாக கூறி அவரை விடுவித்தார்.

சங்கதி ஊரெங்கும் பரவியது. மேயர் அலுவலகத்தை விட்டு வெளியேறியதுமே அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு ஆவலுடன் கேள்விகள் கேட்டுத் துளைத்தனர். ஆனால் அவர்களுக்குக் கோபமோ வெறுப்போ இல்லை. வம்பு கேட்கும் ஆவல் மட்டுமே. அவர் கயிறு கண்டெடுத்த கதையைச் சொன்னார். அவர்கள் யாரும் நம்பவில்லை. அவரைப் பார்த்துச் சிரித்தனர். அவர் தொடர்ந்து தனது நண்பர்களைக் கண்டு அதே கதையைச் சொன்னார். பார்த்தவர்களிடமெல்லாம் தன்னிலை விளக்கங்களையும் தனது நியாயங்களையும் சலிக்காமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு போனார். பாக்கெட்டுகளைத் திறந்து காண்பித்தார். “போடா லூஸுப் பயலே” என்றனர்.

யாருமே தன்னை நம்பாததால் கோபமும் விரக்தியுமடைந்த அவர் என்ன செய்வதென்றறியாமல் பிதற்றிக் கொண்டே இருந்தார்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலரை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றார். தான் கயிற்றைக் கண்டெடுத்த இடத்தைக் காண்பித்தார். திரும்பி வரும் வழியெல்லாம் தனக்கு நேர்ந்த அநியாயத்தைப் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டு வந்தார்.

மாலையில் மறுபடியும் கிராமத்துக்குள் எல்லோரிடமும் சென்று தன் மீது ஏற்பட்ட வீண்பழியைத் துடைக்க முயன்றர். எங்கு சென்றாலும் அவநம்பிக்கையே சந்தித்தார். இதனால் இரவு தூங்க முடியாமல் அவதிப்பட்டார்.

அடுத்தநாள் மதியம் ஒருமணிக்கு மிராசுதார் ஒருவனின் வேலையாள், மேரியஸ் பாமெல் என்பவன் பணப்பையைக் கண்டெடுத்து மேட்டர் ஹால்புக்கொர்க்கிடம் ஒப்படைத்து விட்டான்.

இச்செய்தியும் காட்டுத் தீ போல் பரவி ஊர்மக்கள் அனைவரையும் எட்டியது. மேட்டர் ஹாஷ்கோமிடம் முறையாகவே தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே மிகுந்த களிப்புடன் தனது சகாக்களிடம் சென்று தனது சோகக் கதையின் சந்தோஷ முடிவைப் பற்றிப் பேசலானார். வெற்றிக் களிப்பு அவர் முகத்தில் கூத்தாடியது.

“தண்டனைக்குக் கூட நான் பயப்படலை. பொய் சொல்லி வீண்பழி சுமத்திட்டாங்களேன்னு தான் ரொம்ப கஷ்டமா போச்சு. ஒரு பெரிய பொய் மூட்டையின் அடியில் அமுங்குன மாதிரி இருந்தது.”

நாளெல்லாம் தனது கதையை வருவோர் போவோரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டம் கூடும் இடமெல்லாம். ஞாயிறன்று மாதாகோயிலில், மதுக்கடையில் குடிக்க வருபவர்களிடம், என்று முகந்தெரியாதவர்களிடம் கூடச் சொல்லி மகிழ்ந்தார். அவர் மனம் இப்போது உளைச்சலற்று இருந்தது. ஆனாலும் என்னவோ ஒரு இனம்புரியா கலவரம் உள்ளே நிகழ்வது போலிருந்தது. அவர் முதுகுக்குப் பின் மக்கள் பேசுவது போல் தோன்றியது.

செவ்வாயன்று ஹாஷ்கோம் காடர்வில் சந்தைக்குச் சென்றார், முக்கியமாக தன்னைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறியத் தான்.

தனது கடையின் முன் நின்றிருந்த மாலண்டெய்ன் அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.
ஒன்றும் புரியாமல் அருகே சென்று கொண்டிருந்த குடியானவர் ஒருவரிடம் பேச்சுக் கொடுக்க முயன்றார், அவ்ரோ இவரைக் கண்டவுடன் வயிற்றில் செல்லமாகக் குத்தி விட்டு, “அடேய்! பெரிய போக்கிரி அய்யா நீர்” என்று பெரிதாகச் சிரித்தார்.

மேட்டர் ஹாஷ்கோம் பெரிதும் குழம்பினார். ஏன் தன்னைப் பார்த்து அவர் அப்படிச் சொன்னார்? வழக்கம் போல் ஜார்டெயின் உணவகத்துக்குச் சாப்பிடப் போன போது தனது கதையை மீண்டும் தொடங்கினார்.

மோன்விலியர் கிராமத்திலிருந்து வந்த குதிரைக்காரன் கத்திச் சொன்னான், “ஆமாம் ஆமாம், போதும்! உன் கயிறு கதை எங்க எல்லாருக்கும் தெரியும்”

ஹாஷ்கோம் திக்கித் திணறினார், “ஆனான் அந்தப் பணப்பை தான் கிடைச்சிடுச்சில்ல?”

அதற்கு அவன் சொன்னான், “நிறுத்துமய்யா, தொலஞ்சது ஒரு விதம், கிடைச்சது ஒரு விதம். எப்படியும் உன் கை அதில் இருக்குங்கறது நிச்சயம்.”

ஹாஷ்கோம் விக்கித்து நின்றார். அவருக்கு எல்லாம் புரிந்தது. பிடிபட்டபின் தானே அந்தப் பணப்பையை யார் மூலமாகவோ கொடுத்தனுப்பி விட்டதாக இவர்கள் எண்ணுகிறார்கள் என்று. எதிர்த்துப் பேச முயன்றார். அனைவரும் சிரிக்கத் தொட்ங்கினர். கூச்சலும் கேலியும் பொறுக்க முடியாமல் சாப்பிடாமலேயே வெளியேறினார்.

கோபமும் அவமானமும் கொப்புளிக்க, தனது புத்தி சாதுர்யத்தால் நினைத்துப் பார்க்க முடியாத கயமையின் பழிக்கு ஆளாகிவிட்டதை நினைத்து மறுகினார். அதையும் கூடப் பெருமையாகவே அவர் மீது சாத்தும் கொடிய வேடிக்கையை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கொஞ்சமும் உண்மையில்லாத அபாண்டமான அந்தப் பழியின் வலி அவரது நெஞ்சைத் துளைத்தது.

மீண்டும் தனது கதையைப் பேச ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் அதை மேலும் வளர்த்தபடி, அதிகமான உணர்ச்சிவேகத்தையும் கடுஞ்சொற்களையும் சேர்த்துக் கொண்டு பேசலானார். தனியாக இருக்கும் போது கூட பல விதமான தன்னிலை விளக்கங்களையும் என்ன சொல்லி உலகை நம்ப வைப்பது என்றுமே சிந்தித்த வண்ணம் இருந்தார். அவரது வாழ்வின் பயனே அந்தக் கயிறும் அதைச் சுற்றிய கதையும் தான் என்றானது.

”அதெல்லாம் சும்மாச் சப்பைக்கட்டு,” என்றனர் அவரது முதுகுக்குப் பின். அவர் இதை உணர்ந்தார். தனது இதயத்தையே இதற்காக நொறுக்கிக் கொண்டார். அவர்கள் கண் முன்னாலேயே மொத்தமாக உயிரும் உடலும் பழுதடைந்து கொண்டு வந்தார்.

பொழுது போகாதவர்கள் சிலர் அவரைக் கயிறு கதை சொல்லும் படி அழைப்பது வாடிக்கை ஆயிற்று. போர்முனையிலிருந்து திரும்பி வந்த முதிய சிப்பாய்களை அழைத்துக் கதை கேட்பது போல. அவர் மனம் வெதும்பினார்.

டிசம்பர் மாத இறுதியில் படுத்த படுக்கையானார்.

ஜனவரி மாதம் தொடங்கிச் சிறிது நாட்களில் மரணமடைந்தார்.
சாவுக்குப் போராடிய நிலையில் நினைவு தப்பியபோதும் அவரது குற்றமற்ற நெஞ்சம் பிதற்றிக் கொண்டே இருந்தது...”ஒரு சின்ன கயிறு, ஒரு சின்ன கயிறு தான்.. இதோ பாருங்கள் மேயர்.....”

பின் குறிப்பு: மாப்பஸான் என்ற ஃப்ரெஞ்சு எழுத்தாளரின் கதையின் தமிழாக்கம் இது.

அவரது இன்னொரு கதை இங்கே.

Monday, July 13, 2009

உள்ளிருந்து ஒலிக்கும் இசை

நம் எல்லோரையுமே இசை ஏதோ ஒரு வகையில் தன் வசப்படுத்தக் கூடியது தான். சிலருக்கு எப்போதுமே பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கப் பிடிக்கும். காலை எழுந்தவுடன், வேலை செய்யும் போது, பயணம் செய்யும் போது, என்று.

சிலருக்கு ஓய்வாகத் தனிமையில் இருக்கும் போது காதோடு மட்டும். சிலருக்கு ஊருக்கே கேட்கும் படி அலற வைத்து கூடவே தன்னை மறந்து ஆடவும் பிடிக்கும்.
அதே போல் இசையில் பல்லாயிரக்கணக்கான வகைகளும் உண்டு.

இருந்தாலும் எண்ணற்ற தமிழர்களைப் போல் நானும் இந்திய, தமிழ்ச் சினிமா இசையின் தீவிர ரசிகை.

சில பாடல்கள் முதல் தடவை கேட்கும் போதே மனதை வெகுவாகக் கொள்ளை கொள்ளும். சில பாடல்கள் கேட்கக் கேட்கப் பித்துப் பிடிக்க வைக்கும்.

ஆனால் வெகு சில பாடல்கள் தாம் நமது மனதின் அலைகள் வெளியே வந்து உலவுவது போல, அவற்றுக்கு நாமே இசை உருவம் கொடுத்தது போல, ஆழ்ந்த தியானத்துக்கு இட்டுச்செல்வது போல, உயிரைத் தட்டி எழுப்புவது போல நம் ஆன்மாவுடன் இரண்டறக் கலந்து விடும்.

பாடலின் வார்த்தைகளும் இதற்கு சில நேரம் முக்கியக் காரணமாக இருக்கலாம்; ஆனால் புரியாத மொழியிலும் கூட இந்த விந்தை நிகழ்வது சாத்தியமே!

இதில் மகா வித்தகர் இசைஞானி இளையராஜா அவர்கள்.
அவரது இசையில் என்னுள் அவ்வப்போது ஒலிக்கும் பாடல்கள் இவை.உங்களுக்குள்ளும் நிச்சயம் ஒலித்திருக்கும். முடிந்தால் கேட்டு ரசியுங்கள்.

இளங்காத்து வீசுதே - பிதாமகன்

ஓம் சிவோஹம் - நான் கடவுள்

கொடியில மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்

புன்னகை மன்னன் தீம் இசை

ஓம் நமஹ - இதயத்தைத் திருடாதே

என் வானிலே - ஜானி

Tuesday, July 7, 2009

இருளும் ஒளியும்

இரவு ஒன்பதே கால் மணி. தெருவே வெறிச்சோடிக் கிடக்கிறது. வீடுகளில் டிவி சப்தம் சாப்பாட்டுத் தட்டுக்களின் சப்தம் தவிர வேறொன்றும் அதிகமாக இல்லை.

”அபி, நான் என்ன சொல்ல வரேன்னா?”
“வேண்டாம் தொல்காப்பியன்! நீங்க எதுவும்... ”

“மூனு ரூபா மிச்சமாச்சு. ஐஸ்கிரீம் சாப்டேன்! எதை வேண்டுமானாலும்...”

"The defence allocation saw Finance Minister Pranab Mukherjee increasing the pension for retired service personnel..."

"தீதி தேரா தேவர் திவானா...”

“போன காலருக்காக ஒரு அழகான பாட்டு பாத்தாச்சு இப்போ அடுத்த....”

ப்ளிஷ்! திடீரென்று நிசப்தமும் கும்மிருட்டும் சூழ்கிறது.

”அய்யோ!”

”ப்ச்! இந்த வாரத்துல இதோட எத்தனை தடவை?”

”எப்போ வருமோ..எல்லா இடத்திலயும் போயிருக்கா பாருங்க”

அரைமணி நேரம் ஆனது.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வீடுகளிலும் கேட்டுகள் திறக்கப் படுகின்றன. கைகளில் விசிறிகளுடன் புழுக்கத்தைப் போக்க முயன்ற படி...

“என்ன ஸார், ஃபோன் பண்ணீங்களா எம்.இ.எஸ்ஸுக்கு?”

“எங்கே ஸார், எங்கேஜ்டா இருக்கு. எடுத்து வெச்சிட்டான் போல.”

”கேபில் ஃபால்ட்டாம் ஸார். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆவுமாம். இப்போத்தான் பண்ணிக் கேட்டேன்.”

ஆண்கள் ஒரு குழுவாய்ச் சேர்ந்து அரசியல், சினிமா, ஈ.பி காரர்களின் மெத்தனம் என்று பல துறைகளில் அரட்டையை ஆரம்பித்தார்கள்.

வீடு கட்டுவதற்காக ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணற் குவியல் மீது அமர்ந்து கூட்டத்தைத் துவக்கினர் பெண்கள். மேற்கூரிய டாபிக்குகள் தவிர குழந்தைகளின் படிப்பு, வீட்டினரின் உடல்நிலை ஆகியவையும் விசாரிக்கப்பட்டது இங்கே!

திடீரென்று கூண்டு திறக்கப்பட்ட பறவைகள் போல் உற்சாகம் தொற்றிக் கொள்ளத் தெருவில் இறங்கிய அந்தப் பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு இரவாவது பகலாவது?

விட்ட இடத்திலிருந்து தொடங்குவது போல் மும்முரமாக விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.

மண் குவியல் மேலேறி சறுக்க ஆரம்பித்தன சில வானரங்கள்.
பாண்டிக்கட்டம் வரைந்து நொண்டியடிப்பதில் ஈடுபட்டனர் இரு சிறுமிகள்.

குறுஞ்சிரிப்புடன் தாயின் இடுப்பிலிருந்து திமிறி இறங்கி அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தவழ்ந்து வந்தது சின்னக் குழந்தை ஒன்று.

“அம்மா, பாப்பாவைப் பாரும்மா, எங்க விளையாட்டைக் கெடுக்குது. தூக்கிட்டுப் போம்மா”

“அடி கழுதை. இந்த நேரத்துல என்னடி விளையாட்டு. பாப்பாவைப் பாத்துக்க” என்று அப்போது தான் மகளைக் கவனித்த மாதிரி கட்டளையிட்டு விட்டுத் திரும்ப பேச்சில் மூழ்கினார் அந்தத் தாய்.

அதற்குள் இந்தப் பக்கம் ‘தொம்’ மென்று ஒரு அம்மாவின் மேலே வந்து குதித்தார் அவரது செல்ல வானரம்.

“பிசாசே! இந்தப் பாழாப்போன கரண்ட் போனாலும் போச்சு. நமக்கு இருக்கற எரிச்சல்ல இதுங்க தொல்லை வேற..” சலித்துக் கொண்டார்.

நிலாவொளியில் அந்தத் தெருவே ஏதோ விழாக் கோலம் பூண்டது போலிருந்தது. பேச்சுச் சத்தமும், சிரிப்புச்சத்தமும், குழந்தைகளின் கூத்துக்களும்...

டிஷ்!
அணைக்கப்படாத சில டி.விக்களின் திடீர் அலறல்கள். வீடுகளில் விளக்குகள் பளிச் பளிச் சென்று எரியத் தொடங்கின.

“ஹப்பாடா” என்ற நிம்மதிப் பெரு மூச்சுக்களும் சிரிப்புக்களும். அவரவர் வீடுகளுக்குச் செல்வதற்காக எழுந்தனர்.
தொடர்ந்து சிறுவர்களும் மனமே இல்லாமல் வீட்டை நோக்கி ஓடினர்.

“வீல்” என்ற சத்தத்துடன் பேரழுகை. ஆட்கள் புடை சூழ, ஆனந்தமாகத் தெருவில் தத்தி நடை பழகிக் கொண்டிருந்த அந்தச் குழந்தைக்கு திடீரென்று இப்படி வீட்டுக்குள் திரும்ப இஷ்டமில்லை. கத்திக் கூப்பாடு போட்டது.

செல்லம் கொஞ்சி அதை ஆற்றுப்படுத்தி உள்ளே தூக்கிச் சென்ற அம்மா கதவைச் சாத்தினார்.

தெருவில் இப்போது மீண்டும் கும்மிருட்டு. நிசப்தம்.
நிலா மட்டும் தனியாக.

Thursday, July 2, 2009

”ஆப்பிள் பாட்டுப் பாடும்மா”

உன் பேரு என்னம்மா?

”லாவண்யா”

வயசு?

“சிக்ஸ் இயர்ஸ்”

“என்ன பாட்டுப் பாடப்போறே?”

“உம்...உம்ம்...” கண்ணை உருட்டி யோசிக்கிறது குழந்தை.
”ஆப்பிள் பாட்டு!”

”சரி, நீயே ஆப்பிள் மாதிரி அழகா இருக்கே! பாடு பாடு”

அந்தக் குழந்தை என்ன பாடப் போகிறாள் என்று ஆவலுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

முக்கல் முனகல்களுடன் ஒரு ஹம்மிங்கைத் தொடர்ந்து, வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்ட ஒரு கள்ளத் தொண்டையில் பாடிய பாடல் “என் செல்லப் பேரு ஆப்பிள் நீ சைஸாக் கடிச்சுக்கோ...”

உடம்பெல்லாம் ஏதோ கூசப் படக்கென்று ஆஃப் செய்தேன் டி.வியை. ஆத்திரமாக வந்தது. ஏன் இவ்வளவு சுரணை கெட்டுப் போய் விட்டோம் நாம்?
அந்தக் குழந்தையின் அம்மா அப்பாவுக்கு வெட்கமாக இல்லையா தங்கள் குழந்தை இப்படி மட்டமான இச்சையைத் தூண்டும் ஒரு பாடலை உலகம் முழுதும் பார்க்கும்படி பாட விடுவதற்கு?

ஆமாம், அவ்வகையான பாடல்கள் வருகின்றன. இழவு, வந்து விட்டுப் போகட்டும். நீங்களும் உங்கள் குழந்தைகள் தூங்கியபின் மிட்நைட் மசாலாவில் கண்டு களியுங்கள். யார் வேண்டாமென்கிறார்கள். ஆனால் நாள் முழுதும் டி.வியில் இப்படிப்பட்ட பாடல்கள் ஒளிபரப்பாகின்றன. நாமும் குழந்தைகளோடு சேர்ந்து பார்க்கிறோம். அதைக் கேட்டு அர்த்தம் புரியாமல் அவர்கள் மழலையில் பாடுவதை ரசிக்கிறோம்.

சிலர் சில நேரம், “ஏய்! அடி வாங்குவே, அந்தப் பாட்டெல்லாம் பாடக் கூடாது” என்று போகிற போக்கில் அதட்டுவதையும் பார்க்கிறோம். இது மிகச் சாதாரணமான, நாம் தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. கொஞ்சம் மெனக்கெட்டால் தவிர்க்கலாம். அது வேறு விஷயம்.

ஆனால் ஒரு போட்டி நிகழ்ச்சியில் குழந்தையை இப்படி ஒரு பாடல் பாடச் சொல்லி மேடையேற்றிவிட்ட பெற்றோரை நினைத்தால் கண் மண் தெரியாமல் கோபம் வருகிறது.

ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் இப்படிப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு அதீதப் போட்டி மனப்பான்மையை விதைப்பதும், தேவையில்லாத டென்ஷனை ஏற்படுத்துவது, அதிகமான புகழுக்கு அவர்களைச் சிறுவயதிலேயே (அவர்களால் புரிந்து கொள்ளக் கூட இயலாத வயதில்) ஆட்படுத்துவதும் அவர்களைத் துன்புறுத்தும் செயல் தான் என்று ஒரு பக்கம் பேசிவந்தாலும்,
இளம் வயதிலேயே அற்புதமான திறமையுள்ளவர்கள் இனம்கண்டு பட்டைதீட்டப் படுவதால் அவர்களுக்குச் சரியான பாதை அமைவதும் எளிதாகிறது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் குறைந்தது பத்துப் பன்னிரண்டு வயதாவது இருக்க வேண்டும் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு.

சென்ற ஆண்டு கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ் என்ற சிறுவர்கள் ஒரு பாட்டுப் போட்டியில் தங்களது பாட்டுத் திறத்தால் உலகத் தமிழர்களைக் கட்டிப்போட்டதை மறக்க முடியாது. அப்படிப்பட்ட ரத்தினங்கள் இளம்வயதிலேயே கண்டெடுக்கப்பட்டது பாராட்ட வேண்டிய விஷயம் தான். ஆனால் அவர்களுக்குப் பதின்மூன்று பதினான்கு வயது. நன்றாகவே விவரம் தெரிந்து வாலிப வயதை நெருங்குபவர்களாக இருந்ததால் பிரச்னை இல்லை. ஆபாசமான பாடல்கள் எதையும் இவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பாடியதாகவும் நினைவில்லை. ஆறு வயது ஏழு வயது பிஞ்சுகளுக்கு என்ன தெரியும். அவர்களை ஏன் இப்படி வதைக்க வேண்டும்?

இன்னொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அலுவலக்த்திலிருந்து சுற்றுலா போன போது பஸ்ஸில் பாட்டுக்குப் பாட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஏதோ ஒரு எழுத்து வந்த போது என் அருகில் இருந்த பெண் ஒருவர் காது கூசும் வார்த்தைகள் கொண்ட் ஒரு பாடலைச் சத்தமாகக் கைதட்டிக் கொண்டு பாட ஆரம்பித்தார். என்னையும் சேர்ந்து கொள்ளுமாறு ஊக்கம் வேறு. யார் முகத்திலும் எந்தச் சலனமும் இல்லை. நான் மெதுவாக அவர் காதில், ”என்ன இது, வேற பாட்டே கிடைக்கலியா என்று சிரித்துக் கொண்டே கேட்ட போது,” நான் ஏதோ தப்பாகக் கேட்டு விட்ட மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, “வாட் இஸ் திஸ் யார்!, இட்ஸ் ஜஸ்ட் ஃபார் ஃபன்! ஏன் சீரியசாகணும். யார் வார்த்தைகளைப் பாக்கறாங்க இங்கே. ட்யூன் நல்லா இருக்கு. அவ்ளோ தானே?”

அந்தப் பாடலின் தரக்குறைவு அவரைக் கொஞ்சமும் பாதிக்காமல் வாய்விட்டு அனைவரின் முன்னும் பாடும் அவரது மெத்தனத்துக்கு என்ன் காரணம்? என்ன விளக்கம் சொன்னாலும் அது சரியாகுமா? என்னால் குழம்பாமலிருக்க முடியவில்லை.

எனக்கென்னவோ, அந்த ஆப்பிள் குழந்தை வளர்ந்த பின் அந்த வீடியோவைப் பார்த்தால் தன்னை அவமானப் படுத்தியதற்காக அதன் அம்மா அப்பாவை ஒரு வழி பண்ணி விடும் என்று தோன்றுகிறது. ஆனால், யார் கண்டது, அது தன் குழந்தையை இன்னும் மோசமான பாடலை அங்க அசைவுகளுடன் பாடத் தயார் செய்து கொண்டும் இருக்கலாம்!

விவஸ்தை கெட்டவர்களாக ஆகிக் கொண்டு இருக்கிறோம்.

Wednesday, July 1, 2009

நகைப்புக்காக அல்ல!

கழுத்தை அடைத்து, கிட்டத் தட்ட துப்பட்டாவைப் போல் படர்ந்து இருக்கும் நெக்லஸ்கள், உடைந்த கைக்குப் போடப்படும் மாவுக்கட்டு சைஸில் கங்கணங்கள், அக்குபங்சர் செய்தது போல் காதில் துளி இடம் விடாமல் குத்தி அதில் வளையங்கள் என்று நகைக்கடை விளம்பர மாடல்கள் வருவதைப் பார்த்தாலே மூச்சு முட்டுகிறது. என்ன தான் தங்கம் விலை விஷம் போல் ஏறினாலும் நகைக்கடைகளில் கூட்டமும் குறைவதில்லை, பெண்களின் நகை மோகமும் விடுவதில்லை.

சரி விடுங்கள், விசேஷங்களுக்கு, சுபகாரியங்களின் போது பெண்கள் நன்றாக உடுத்தி நகைகள் அணிவது ஓ.கே. வீட்டில் இருக்கும் போது கூட கழுத்தில் கையில், காலில் என்று நகைகள் ஸ்டாண்டாக எப்படி இருப்பது?

எப்படித்தான் நமது பெண்கள் எப்போதும் வளையல் அணிந்த கையோடு இருக்கிறார்கள்? அதுவும் அத்தோடு சமையல் செய்வது மிகவும் சிரமம். தங்கமோ வேறு உலோகமோ என்றால் கையில் சூடு படும். ப்ளாஸ்டிக் கண்ணாடி வகையறா வென்றால் ஆபத்துக்கள் சொல்லவே வேண்டாம்! இந்த லட்சணத்தில், வீட்டு ஆண்பிள்ளைகளுக்கு உணவு பரிமாறும் போது கைகள் மொட்டையாக இருக்கக் கூடாது, ஒரு வளையாவது அணிந்திருக்க வேண்டும் என்று என் பாட்டி கூறுவார். ஹீம்!

என்னால் வளையல் போட்டுக்கொண்டு எந்த காலத்திலும் எந்த வேலையுமே செய்ய முடிந்ததில்லை. பள்ளி செல்லும் காலத்தில் வளை அணிந்த கரத்தை மேஜை மீது வைத்து எழுதும் போது அழுத்தி வலிக்கும். நல்லவேளை நான் ஐந்தாவது படிக்கும் போது எங்கள் பள்ளியில் எல்லா வகையான நகைகளுக்கும் தடை போடப்பட்டது. நிம்மதி!


கல்லூரியிலும் அதே கதை. வேலைக்குச் செல்லும் போதும் வளை அணிந்த கையால் கீ போர்டில் டைப் செய்வது கூட எனக்குக் கஷ்டம். ஆனால் புறப்படும் முன் அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் சில சமயம் அணிந்ததுண்டு. அணிந்து சென்றபின் கீ போர்டின் மீது கழற்றி வைத்து விட்டு வேலை பார்ப்பதற்கு ஏன் அணிய வேண்டும் என்று அதையும் விட்டு விட்டேன்!

என் திருமணம் வரையில் தங்க நகைகள் என்று பார்த்தால் ஒரு மெல்லிய சங்கிலியும் ஒரிரு வளையல்களும் தான் என்னிடம் இருந்தன. என் அப்பா நகைகள் வாங்கிச் சேர்த்து வைப்பதை அறவே வெறுத்தார். அவருக்கு Hats off!
திருமணத்தின் போது சமூகத்தோடு ஒத்துப் போவதற்காக நகைகள் வாங்க வேண்டி இருந்தன. அவற்றை ஒரு சேமிப்பாக மட்டுமே கருதுகிறோம்!

திருமணத்துக்குப் பின் நான் சந்தித்த மிகப் பெரும் சோதனை இது தான். தாலி என்ற பெயரில் கனமான சங்கிலி ஒன்றைக் கழுத்தில் மாட்டி விட்டனர். தாலி என்ற அந்தச் சிறு பதக்கமோ கூர்மையாக ஏதோ ஆயுதம் வடிவில் செய்யப்பட்டிருந்தது. இது ஏதடா வம்பு! இதை என்னால் சில மணி நேரங்கள் கூடக் கழுத்தில் போட்டிருக்க முடியாதே, எப்படி இதைக் காலம் பூராச் சுமக்கிறார்கள் என்று மலைத்தேன். என் மாமியாரும் நாத்தனாரும் அதே போன்ற தாலி தான் அணிந்திருந்தனர். என் அம்மா கல்யாணத்தன்று போடப்பட்ட தாலிச் சங்கிலியை இன்று வரை எக்காரணம் கொண்டும் கழற்றியதில்லை, என்பதெல்லாம் தெரிந்திருந்தாலும் அப்போது புதிதாக நினைவு வந்து தலை சுற்றியது.

எனக்கு மே மாதம் கல்யாணம். திருமணம் முடிந்து வீட்டுக்கு மதியம் வந்த போதே மாலையோடு சேர்ந்து தாலியும் கழுத்தில் கசகசக்க ஆரம்பித்தது. மற்ற நகைகளை எல்லாம் ஒரு வித வன்மத்தோடு கழற்றி எறிந்தேன். இதைக் கழற்றி வைக்கவும் கைகள் துறுதுறுத்த போதிலும் தயங்கினேன். செண்டிமெண்ட் எதுவும் எனக்கும் இல்லை. அதை அணிவித்தவருக்கும் இல்லை. மற்றவர்களுக்கு அநியாயத்துக்கு இருக்கிறதே. அவர்கள் மனதை வந்த அன்றே புண்படுத்துவானேன் என்று தான்.

அடுத்து வந்த நாட்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. நான் பொதுவாக வீட்டில் வளையல் கொலுசு கூட அணிவதில்லை. கழுத்தில் மெல்லிய சங்கிலி மட்டுமே. அதற்கு மேல் என்னால் சுமக்க முடியாது. தனிக்குடித்தனம் வந்தவுடன் முதல் வேலையாகத் தாலியைக் கழற்றி ஒரு பெட்டியில் பத்திரப்படுத்தினேன். மாமியார் வீட்டிலிருந்து யாராவது வரும் போது அணிவது; மற்றபடி அதற்கு விடை கொடுப்பது என்று சில காலம் இருந்தேன்.

ஒரு முறை வீட்டில் ஏதோ விசேஷம் என்று உறவினர் எல்லாரும் கூடியிருந்த சமயம். நான் வேலையோடு வேலையாக எங்கோ கழற்றி வைத்திருந்த தாலியை என் ஐந்து வயது அக்கா மகன் கழுத்தில் மாட்டிக் கொண்டு கூடத்தில் போய் நின்று விட்டான்! எல்லோரும் சிரித்து அடங்கியபின், என் மாமியார் சொன்னார், “இந்தாம்மா, நீ போட்டுக்காட்டியும் பரவாயில்ல, யார் கண்ணிலும் படாமல் பத்திரமாக வாவது வைத்துக் கொள் என்று!” அப்பாடா, அவருக்கும் ஒரு Hats off!

அதே போல் கொலுசு. என்ன விதமான கொலுசாக இருந்தாலும் ஈரம் இருக்கும் போது அரிக்கத் தொடங்கிவிடும். நாற்காலியில் கூடச் சம்மணம் போட்டு உட்கார்வது என் வழக்கம். அப்போது மற்ற காலின் மீது பட்டு உறுத்தும். அதனால் கொலுசுக்கும் குட்பை!

அடுத்து மெட்டி! ஐயோ... பெண்கள் நிம்மதியாகத் தூங்கக் கூடாது என்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதோ இந்த நகையும் அலங்காரங்களும்! ஒரு முறை தூங்கும் போது போர்வையில் சிக்கிக் கொண்டு விரல் பிசகப் பார்த்தது எனக்கு. இன்னும் சில சங்கடங்களால் ஒரு சுபயோக சுபதினத்தில் அதற்கும் விடை கொடுத்தாகி விட்டது.


ஒரேயடியாக நகைகளை வெறுக்கிறேன் என்று சொல்ல முடியாது. அழகுபடுத்திக் கொள்ள எந்தப் பெண்ணுக்குத்தான் ஆசை இருக்காது. (இல்லாத ஒரு சில அபூர்வப் பெண்களுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்!) வெளியில் செல்லும் போது, அழகாக உடுத்திக் கொள்ளும் போது அதற்கேற்ற நகைகள் (தங்கம் தான் என்றில்லை) அணிந்தால் பார்க்க நன்றாகத் தான் இருக்கும். அதுவும் எளிமையாக யார் கண்ணையும் உறுத்தாமல் இருந்தால் நம் மீது மதிப்பு கூடத் தான் செய்யும்!

அதை விட்டு விட்டு குடும்ப கௌரவத்துக்காக, வீண் பெருமைக்காக என்று எந்நேரமும் சில பவுன்களைக் கழுத்திலும் கையிலும் சுமக்க வேண்டும் என்று என்ன இருக்கிறது? சொந்த ஆசையினாலோ நிர்பந்தத்தினாலோ சில பெண்கள் இப்படித் திரிவது உண்மை.

ஆனால் ஒரு குன்றுமணி நகை கூடக் கனவாக ஏங்கும் பெண்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள் என்பதும் நாம் வாங்கித் தேவையில்லாமல் பூட்டி வைக்கும் ஒவ்வொரு நகைக்கும் தங்கம் விலை ஒவ்வொரு படியாக ஏறும் என்பதும் நினைவில் கொண்டால் கொஞ்சம் இந்த மோகம் மட்டுப்படும் என்பது என் கருத்து!