Monday, May 31, 2010

ஆனி ஜைதி: Known Turf

ஆனி ஜைதி: "India's Shame" என்ற‌ த‌லைப்பில் ஃப்ரன்ட்லைன் பத்திரிகையில் ம‌ல‌ம் அள்ளுப‌வ‌ர்கள் பற்றி இவர் எழுதிய அழுத்தமான கட்டுரை தான் இவர் எழுத்தில் முதலில் வாசித்தது.
http://www.hinduonnet.com/fline/fl2318/stories/20060922005900400.htm

நாட்டில் எங்கெல்லாம் கையால் ம‌ல‌ம் அள்ளுவ‌தும் சேக‌ரிப்ப‌தும் நடைமுறையில் இருக்கிறதோ, அங்கெல்லாம் நேரில் போய் அவ‌ர்க‌ள் வாழ்க்கையைப் ப‌ட‌ம்பிடித்திருந்தார். இன்னும் எத்தனை இடங்களில் manual scavenging நடைமுறையில் இருக்கிறதென்ற உண்மை புரிந்த‌து. அவ‌மான‌மாக‌வும் இருந்த‌து.

பர‌ம்ப‌ரை ப‌ர‌ம்ப‌ரையாக‌ வேறு வேலைக்கும் செல்ல‌ முடியாம‌ல், பிடிக்காம‌லே இந்த‌த் தொழிலில் உழ‌ன்று வ‌ருப‌வ‌ர்க‌ள் ஆயிர‌மாயிர‌ம் பேர்.
சாக்க‌டை அள்ளுப‌வ‌ர்க‌ளில் நிலை இன்னும் ப‌ரிதாப‌ம். நாம் நினைத்துப் பார்க்க‌முடியாத‌ அருவ‌ருப்பைச் ச‌கித்துக் கொள்வ‌தோட‌ல்லாம‌ல் உயிருக்கும் ஆப‌த்தான‌ வேலைய‌து.

நாம் வெளியேற்றும் க‌ழிவுக‌ளைத் த‌ங்க‌ள் உயிரைக் கொடுத்துச் சுத்த‌ப்ப‌டுத்திச் சுகாதார‌மான‌ சூழ‌லை ஏற்ப‌டுத்திக் கொடுக்கும் இவ‌ர்க‌ளுக்கு நாம் கொடுக்கும் ப‌ரிசு: தீண்டாமைக் கொடுமை. உல‌க‌ம் அநியாய‌த்தின் மொத்த‌ உருவாக‌த் தான் இருக்கிற‌து.

சிறுவ‌ய‌தில் ப‌டித்த‌வொரு க‌தை நினைவுக்கு வ‌ருகிற‌து. யார் எழுதியதென்று நினைவில்லை; ஒரே ஒரு விஷயம் மட்டும் அதிர்ச்சியாய் மனதில் பதிந்திருக்கிறது: ஒரு வீட்டில் க‌ழிவ‌றைச் சுத்த‌ம் செய்ய‌ வ‌ந்த‌ முதிய பெண்ம‌ணி ஒருவர், வேலை முடிந்த‌தும் இய‌ற்கை உபாதை தாள‌முடியாம‌ல் கதவைத் தாளிட்டுக் கொண்டு அங்கேயே அம‌ர்ந்து விடுகிறார். இதைய‌றிந்த‌ வீட்டுப் பெண்ம‌ணி, க‌த்திக் கூச்ச‌ல் போட்டு...ஐயோ...

அப்போது ந‌ம்ப‌வே முடிய‌வில்லை. இப்ப‌டியெல்லாம் யாரும் இருக்க‌ மாட்டார்க‌ள் என்றே குழ‌ந்தை ம‌ன‌ம் ந‌ம்ப‌ விழைந்த‌து. ஆனி ஜைதியின் க‌ட்டுரையைப் ப‌டித்த‌ பின்பு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது.

ஃப்ர‌ன்ட்லைனுக்குப் பிற‌கு இப்போது Midday யில் பணியாற்றி வ‌ருகிறார். www.anniezaidi.com என்ற‌ இவ‌ர‌து வ‌லைப்பூவிலும் தன்னைப் பாதித்த ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌ற்றிச் சுவார‌சிய‌மாக‌ எழுதி வ‌ருகிறார். எழுத்திலும் சிந்தனைக‌ளிலும் பல இடங்களில் அருந்த‌தி ராயை நினைவுப‌டுத்துகிறார்.

ச‌மீப‌த்தில் "Known Turf" என்ற‌ த‌லைப்பில் த‌ன‌து ப‌த்திரிகையாள‌ர் அனுப‌வ‌ங்களைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
அதைப் பற்றிய குறிப்புகள் இங்கே:

http://lite.epaper.timesofindia.com/getpage.aspx?pageid=15&pagesize=&edid=&edlabel=TCRM&mydateHid=15-05-2010&pubname=&edname=&publabel=TOI

http://www.tehelka.com/story_main44.asp?filename=hub220510salt_shakers.asப்

http://pareshaan.blogspot.com/2010/04/annie-zaidi-rocks-house.html#comment-forம்

இது என்னை மிகவும் கவர்ந்த ஒரு எழுத்து ஆளுமை மற்றும் அவரது நூலின் அறிமுகம் மட்டுமே. புத்தகத்தை படித்த பின்பு அதைப் பற்றிய விரிவான பார்வையோடு வருகிறேன்.

Sunday, May 30, 2010

சாக்கடையில் நெளியும் புழுக்கள்

அவற்றுக்கு மலர்களைப் பற்றி என்ன தெரியும்?
வாசம் தான் புரியுமா?
லேசாகப் பூங்காற்று வீசினாலும் மூச்சடைத்துத் தான் போகும்.

விமர்சன ஊசிகளையும் உளிகளையும் சிற்பக்கற்கள் மீது பயன்படுத்துவோம்.
அழுகிய தக்காளிகள் ஊசி குத்தினாலும் ஊரையே நாறடிப்பவை.
ஒப்பனைகள் கலைத்து அழுகிய முகம் காட்டி அசிங்கமாய் நிற்பது தெரிகிறதா?

என்றோ தெரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள்.
இப்போது தான் தெரிந்ததா? அதிர்ச்சியாக‌ இருக்கிற‌தா? பாவம் நீங்கள்!
இன்னும் தெரிய‌வில்லையா? சீ!..புழுக்க‌ளே எட்டிப் போங்க‌ள்!!!

Thursday, May 27, 2010

ரசவாதம்

நெஞ்சுக்கூட்டிலிருந்து வறண்டு, அடித்தொண்டையைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்ட அந்த இருமல் இரவின் நிசப்தத்தில் அமானுஷ்யமாகக் கேட்டது.

சாரதா மாமிக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. மெல்ல எழுந்து கதவைத் திறந்து கொண்டு வந்தாள். அந்த நான்கடிக்கு இரண்டடி வராந்தாவில் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தான் ஆறுமுகம். பாதி இரவில் பெய்திருந்த மழையினால் காற்றும் தரையும் சில்லிட்டிருந்தது.

வெகுநேர‌ம் த‌ய‌ங்கிய‌ பின், அவ‌ன் இரும‌ல் நிற்காம‌ல் போக‌வே,
"ஏண்டாப்பா க‌ம்ப‌ளி ஏதானும் வேணுமா? இப்ப‌டிக் குளிர்ல‌ ந‌டுங்க‌றியே?
காய்ச்சலா இருக்கா?"

அவ‌னிட‌மிருந்து ப‌தில் வ‌ராம‌ல் போக‌வே உள்ளே சென்று ஒரு ப‌ழைய‌
க‌ம்ப‌ளியை எடுத்து வ‌ந்தாள். "இந்தா" என்று அவ‌ன் த‌லை மாட்டில் வைத்து விட்டு, அவ‌ன் எடுத்துப் போர்த்திக் கொள்வதை உறுதி செய்தபின் உள்ளே போனாள்.

அவ‌ள் ம‌ன‌ம் அவன் மேல் ப‌ச்சாதாப‌ப்ப‌ட்ட‌து.ஆறுமுக‌ம்! முப்பது வ‌ய‌தில் இந்த‌க் ஹ‌வுசிங் போர்டு குடித்த‌ன‌த்துக்குக் க‌ண‌வ‌னுட‌ன் வ‌ந்த போது இருவரையும் ரிக்ஷாவில் ஏற்றிக் கொண்டு ம‌யிலாப்பூர் கோவிலுக்கு அழைத்துச் சென்ற‌து முத‌ல் ரிட்டையராவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் இரண்டு கிட்னியும் ஃபெயிலியராகி அரசு மருத்துவமனையில் படுத்துக் கிடந்த கணவனை இரவெல்லாம்
விழித்துக் கூடவே இருந்து பார்த்துக் கொண்டது வரை ஆறுமுகம் அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட துணையாக இருந்திருக்கிறான் என்பதை முதன்முறையாக நினைத்துப் பார்த்தாள்.

அவ‌ளை விட‌ப் ப‌த்துவ‌ய‌து மூத்த‌வ‌னாக‌ இருந்தாலும் அவ‌ள் அவ‌னை "வாடா போடா" என்று தான் அழைப்பாள். அவ‌ன் பதிலுக்கு "அம்மா" என்று தான் அழைப்பான்.

சார‌தாவின் க‌ண‌வ‌னுக்கு முப்பது வ‌ய‌திலேயே ச‌ர்க்க‌ரை வியாதி வ‌ந்து
விட்ட‌து. அதன்பின் வ‌ரிசையாக‌ என்னென்ன‌வோ வியாதிக‌ள். அத‌ற்கேற்ற‌ ம‌ருத்துவ‌ம், ப‌ணிவிடைக‌ள் என்று ச‌ம்ப‌ள‌ம் வாங்காத‌ ந‌ர்ஸாக‌வே வாழ்க்கையைக் க‌ழித்து விட்டாள் சார‌தா.

ஆறுமுக‌ம் சின்னவயதிலேயே மனைவியை இழந்து விட்டான். இர‌ண்டு பைய‌ன்க‌ள். பெரிய‌வ‌ன் டெய்லர்; திரும‌ண‌மாகி மூன்று குழ‌ந்தைக‌ள் இருக்கிறார்க‌ள். சின்ன‌வ‌ன் தத்தாரி. ஏதோ சினிமா ந‌டிக‌ரின் ஆஸ்தான‌ ர‌சிகனாக‌ "ந‌ற்ப‌ணி" செய்து கிட‌ப்ப‌தே அவ‌ன் தொழில். இருவ‌ருமே அப்ப‌னை வ‌ந்து க‌ண்டு கொள்வ‌து கிடையாது.

ம‌றுப‌டியும் இரும‌ல் ச‌ப்த‌ம் கேட்ட‌து. மாமி அடுப்ப‌டிக்குச் சென்று
ப‌ம்ப் ஸ்ட‌வ்வை மெல்ல‌ப் ப‌ற்ற‌ வைத்தாள். சுக்குக் க‌ஷாய‌ம் போட்டுத்
தர‌லாமென்று சுடுத‌ண்ணீர் வைத்தாள்.

'கிர‌சின் தீர்றாப்ப‌ல‌ இருக்கு. காலையில ஆறுமுக‌த்தை அனுப்பி வாங்கிட்டு வ‌ர‌ச் சொல்ல‌ணும்' என்று நினைக்கும் போதே அவன் இருக்கும் நிலைமையில் திடீரென்று ஜுர‌த்தில் ப‌டுத்து விட்டால் என்ன‌ செய்வ‌து என்று யோசித்தாள்.

இதற்குள் லேசாக‌ விடிய‌த் தொட‌ங்கி இருந்த‌து. அவனுக்குக் காப்பி
கொடுக்கும் அலுமினிய‌ லோட்டாவில் க‌ஷாய‌த்தை ஊற்றி எடுத்து வெளியே வ‌ந்த‌ போது ஆறுமுக‌ம் எழுந்து உட்கார்ந்திருந்தான்.

லேசாக‌ நிம்ம‌தியுற்ற‌ சார‌தா, "இந்தா, ஆறுமுக‌ம் இந்த‌க் க‌ஷாய‌த்தைக்
குடி. பாவ‌ம், நெஞ்செல்லாம் காஞ்சு போயிருக்கும்." அவ‌ன‌ருகில் த‌ரையில் வைத்தாள்.

கொதிக்கும் அந்த‌ப் பாத்திர‌த்தைக் காய்த்துப் போன‌ உள்ள‌ங்கைக‌ளில்
அநாயாச‌மாக ஏந்தி அவ‌ன் குடிப்ப‌தைப் பார்த்தாள் சார‌தா.

"உன் ம‌க‌னோட‌ போய் இருந்துக்கோயேன். உன் ம‌ரும‌க உன‌க்கு ரெண்டு வேளை சோறு போட‌மாட்டாளா? வய‌சான‌ கால‌த்துல‌ இப்ப‌டி க‌ஷ்ட‌ப்ப‌ட‌ற‌யே" கொஞ்ச நாளாக அவனைப் பார்த்தால் பாடும் பல்லவியை மீண்டும் தொடங்கினாள்.

ஆறுமுக‌ம் ப‌தில் பேசாம‌ல் சிரித்தான். அவ‌ன் போக‌ மாட்டான் என்று
அவ‌ளுக்கும் தெரியும். அவ‌ன் போய்விட்டால் த‌ன‌க்கு யாரும் துணையில்லை என்ப‌தும் தெரியும். ஆனாலும் அதையெல்லாம் தெரிந்த‌து போல் அவளும் காட்டிக் கொள்வதில்லை, அவனும் சொல்லிக்கொள்வதில்லை.

...கம்பெனியில் சுமாரான சம்பளத்தில் வேலை பார்த்து வந்தான் சாரதாவின் கணவன்.குழ‌ந்தைக‌ள் கிடையாது. க‌ண‌வ‌னோடு வாழ்ந்த‌ கால‌த்தை விட‌க் கொடுமையான‌து அவ‌ன் பெற்றோர் உயிருட‌ன் இருந்த கால‌ங்க‌ள். பொதுவான‌ வீட்டு வேலைகள், நாத்தனார் அதிகாரங்கள், கொடுமைகளுடன் 'ம‌ல‌டி ம‌ல‌டி' என்று வாய் ஓயாம‌ல் தூற்றுவ‌தைப் பொறுக்க‌ முடியாம‌ல் ஒரு நாள் ந‌டுக்கூட‌த்தில் நின்று வெடித்தாள்.

"இதோ பாருங்கோ... நான் மாசாமாசாம் மூலையில ஒதுங்கிண்டு தான் இருக்கேன். நான் பொம்மனாட்டிங்கறதுக்கு இதுக்குமேல சர்ட்டிஃபிகேட் வேணும்னா ஆஸ்பத்திரிக்கு அழைச்சிண்டு பொய் டெஸ்ட்பண்ணுங்கோ. ஆனா அதே மாதிரி ஒரு சோதனைக்கு உங்க பிள்ளை தயாரான்னு கேளுங்க்கோ."

அவ்வளவு தான்! முக‌மெல்லாம் ஜிவுஜிவுக்க "...நாயே அவ்வளவு திமிராடி உனக்கு" என்று ஒடி வ‌ந்து அவ‌ள் நெஞ்சில் மிதித்துத் த‌ன் "ஆண்மையை" நிரூபித்தான் அவ‌ள் க‌ண‌வ‌ன். ஆனாலும் குட்டு வெளிப்ப‌ட்டு விட்ட‌பின் அவ‌ள‌து மாம‌னார் மாமியார் வாயைப் பொத்திக் கொண்டு விட்டன‌ர்.

இய‌ந்திர‌ம் போல் வாழ்க்கையை ந‌ட‌த்த‌ க‌ண‌வ‌ன் ம‌னைவி இருவருக்கும்
பரஸ்பரம் தேவையாயிருந்த‌ப‌டியால், பழக்கத்தினால் வாழ்ந்து
கொண்டிருந்தார்கள். குறிப்பாக‌ த‌ன் இடுப்புத் துணி அவிழ்ந்தாலே க‌ட்டி
விட‌க் கைக‌ள் தேடும் அள‌வு சோம்பேறியான‌ அவ‌ள் க‌ண‌வ‌ன் அவ‌ளைச் ச‌தா பேசிச் சித்ர‌வ‌தை செய்தாலும் இவ‌ளால் ஏனோ அவ‌னை விட்டு விட‌ முடிய‌வில்லை. ப‌டிப்ப‌றிவும் இல்லாத, உற‌வுக‌ளும் இல்லாத‌ நிலையில் ஒரு ஏழைப் பெண் எங்கு போக‌ முடியும் என்று நினைத்தாள்?

வீட்டில் ஊறுகாய் போட‌வும் அப்ப‌ள‌ம் வ‌டாம் இடுவ‌தையும் இத்த‌னை
வ‌ருட‌ங்க‌ளில் ஒரு நிலையான தொழிலாக ஏற்றுக் கொண்டு விட்டதால், இதோ கணவன் போன பின்னும் இடிந்து விடாமல் இரண்டு வேளை சாப்பிட முடிகிறது. அவள் மனதிலும் பலவிதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது.

சார‌தாவின் க‌ண‌வ‌ன் சீக்காளியாக‌ இருந்தாலும் ம‌காக்கொடுமைக்கார‌னாக‌
இருந்தான். ப‌டுத்த‌ ப‌டுக்கையாக‌ அவ‌ன் ஆனபின்னும் கூட நூதனமாக அவன் செய்த கொடுமைகளை எழுத முடியாது.
படுக்கையிலிருந்தபடியே கேட்கக்கூடாத வசவுகளைப் பொழிந்து கொண்டிருக்கும் கணவனை நலுங்காமல் தூக்கிச் சுத்தப் படுத்தி உடை மாற்றி விட்டுத் திரும்புவதற்குள், ஓசைப் படாமல் அந்தத் துணிகளை எடுத்துச் ச‌ல‌வை செய்து போட்டிருப்பான் ஆறுமுகம்.

"நீ ஏன் இதையெல்லாம் செய்றே" என்று கோபப்ப‌ட்டாலும் ஆஸ்ப‌த்திரி வீடு என‌ சோர்ந்து போகும் அவ‌ளுக்கு அவ‌ன் இது போல் சொல்லாம‌ல் செய்யும் எத்த‌னையோ செய‌ல்க‌ள் பேருத‌வியாக‌ இருக்கும்.

அதோ, ப‌தினைந்து வ‌ருட‌ங்க‌ளாக‌ ச‌ம‌ர்த்தாக‌ ஓடிக் கொண்டிருந்த‌ அந்த‌
கிரைண்ட‌ர் நேற்று ம‌க்க‌ர் ப‌ண்ணிய‌ போது ரிப்பேர் செய்ய‌ வ‌ருப‌வ‌ன்
கேட்கும் போது தான் நினைவு ப‌டுத்திப் பார்த்தாளே; அதை எப்போது
வாங்கினோம், என்ன‌ விலைக்கு வாங்கினோம், என்ன‌வெல்லாம் அரைத்திருக்கிறோம் என்று.
அதே போல் இய‌ந்திர‌மாய் ஆறுமுக‌ம் சுழ‌ன்று சுழ‌ன்று வேலை பார்த்த போது யோசிக்காத‌தையெல்லாம் அவ‌ன் இதோ காய்ச்ச‌லில் ப‌டுத்து விட்ட‌ பின் தான் ச‌க‌ ம‌னித‌னாக‌ அவ‌னைப் ப‌ற்றி எண்ண‌மிட‌ ஆர‌ம்பித்தாள் சார‌தா.

அவனுக்கு ஊர் சென்னையை அடுத்திருக்கும் எத்தனையோ கிராமங்களில் ஒன்று.விவசாயக் குடும்பம். தரித்திரம் துரத்தவே சென்னைக்கு வந்து ரிக்ஷா ஓட்டிப் பிழைக்கத் தொடங்கி நகரவாசியான எத்தனையோ ஏழைக் குடிமகன்களில் ஒருவன். ஆனால் கடும் உழைப்பாளி. கிராமத்தின் மண்மணம் மாறாத வெள்ளை மனசு; குடிப்பான். ஆனாலும் "குடிச்சுட்டு அம்மா வூட்ல‌ போய்ப் படுக்கக் கூடாது" என்பதில் உறுதியாக இருப்பான்.

ரிக்ஷா ஓட்டுவது மட்டுமல்லாமல் வீட்டைச் சுத்தம் செய்வது, இ.பி பில் கட்டுவது, ரேஷன் கடைக்குப் போவது என்று வீட்டின் இன்றியமையாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்களின் இயல்பு வாழ்க்கையை இலகுவாக்கினான். அவன் வாங்கி அடுக்கி வைத்தது தான் வராந்தா ஒராத்தில் இருக்கும் இந்த ரோஜாப் பூந்தொட்டிகள் எல்லாம்.

அவ‌னுக்கென்ன‌ இந்த‌ வீட்டின் மீது அப்ப‌டி ஒரு அக்க‌றை? அவ‌ள் க‌ண‌வ‌ன் நாராய‌ண‌னை ஆஃபிசுக்கு அழைத்துச் சென்று மாலை கூட்டி வ‌ருவ‌து அவ‌ன் வேலையாக‌ மாத‌ச் ச‌ம்ப‌ள‌த்துக்கு நிய‌மித்தார்க‌ள். சவாரி இல்லாத நேரமெல்லாம் அவன் அலுவலகத்துக்கு வெளியில் தான் வண்டியை நிறுத்தி விட்டுப் படுத்துக் கிடப்பான். சனிக்கிழமை ஆஸ்பத்திரிக்குப் போக, ஞாயிற்றுகிழமைகளில் வெளியில் போக, என்று பெரும்பாலும் கூடவே இருக்க ஆரம்பித்தான்.
அவனுக்கும் குடும்பம் கூட‌ இல்லாததால், இந்த ஒண்டுக் குடித்தன வராண்டாவில அவனுக்கு நிரந்தரமான இடமொன்று ஏற்பட்டிருந்தது.

'ஃப்ரென்டுன்னு சொல்வாங்களே, அந்த இலக்கணத்துக்குத் தகுந்த மாதிரி இந்த உலகத்துல முதலும் கடைசியுமா இவன் தானே இருக்கான்? உள்ளதிலேயே உசந்ததுன்னு சொல்லிக்கற நான் பொறந்த ஜாதியில ஒரு ஜென்மம் இத்தனை நாள் எனக்குத் துணைன்னு இருந்ததே, அதையும் இவனையும் ஒப்பிட்டுப் பார்த்தா? ஹூம்!'

இப்படிப்பட்ட சிந்தனைகள் முதன் முதலாக சாரதாவின் மனதில் துளிர்விட்டவுடன் கூண்டிலிருந்து வெளிப்பட்ட மிருகம் தினவு கொள்வது போல் அவ‌ள் உடம்பெல்லாம் சிலிர்த்தது.

'அவ‌னுக்குப் மகன்கள் இருந்தும் இப்ப‌டி அநாதையாக் கிட‌க்கானே?
- அநாதையா? உன‌க்குத் துணையாக‌ப் பிடிவாத‌மாய் இங்கு இருக்கும் அவ‌னை அநாதை என்கிறாயே' என்று இடித்த‌து ம‌ன‌து. க‌ண்க‌ளிலிருந்து
புத்த‌ம்புதிய‌ க‌ண்ணீர் பெருக்கெடுத்து ஓட‌ப் புது ம‌னுஷியாக‌
உண‌ர்ந்தாள் சார‌தா.

எழுந்து பரபரவென்று வேலைக‌ளை முடித்தாள். கடமையே என்று சமையலை முடித்த‌வ‌ள் வெளியில் மீண்டும் வ‌ந்து பார்த்தாள். அவ‌ன் அருகே சென்ற‌துமே காய்ச்ச‌லின் வெப்பத்தை உண‌ர‌ முடிந்த‌து. உள்ளே சென்று அல‌மாரியைத் திற‌ந்தாள். மேல் தட்டில், அது இருப்பதே மறந்து போன, திரும‌ண‌மான‌ புதிதில் அவ‌ள் அம்மா வாங்கி கொடுத்திருந்த‌ அந்த ஆறுக‌ஜ‌ம் நைல‌க்ஸ் சேலையை எடுத்தாள். மடிசாரைத் தவிர எதுவும் கட்டக் கூடாது என்று அவள் மாமியார் அதைச் சுருட்டிப் பரணில் தூக்கி எறிந்தது நினைவுக்கு வந்தது. ந‌முட்டுச் சிர்ப்பு சிரித்துக் கொண்டாள். வ‌ன்ம‌த்துட‌ன் மடிசாரைக் க‌ழ‌ற்றி எறிந்து நைல‌க்ஸ் சேலையை உடுத்தினாள்.

வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியில் விறுவிறுவென‌ ந‌ட‌ந்தாள்.
சில நிமிடங்களில் ஆட்டோவில் திரும்பி வ‌ந்தாள். ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்த ஆட்டோக்காரனின் உத‌வியுட‌ன் வ‌ண்டியில் ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டாள். துவ‌ண்ட‌ அவ‌ன் த‌லையை ம‌டியில் சாய்த்துக் கொண்டாள். மீண்டும் அதிர்ச்சியுட‌ன் திரும்பிப் பார்த்தான் ஆட்டோக்கார‌ன்.

"சீக்கிர‌ம் போப்பா..." என்றாள் இயல்பாக. ஈரம் காயாத மரங்களிலிருந்து சில்லென்று காற்று வீசியது.

"அம்மா, அன்னிக்கு நீங்களும் ராஜேஷ அம்மாவும் வித‌வைப் பென்ஷ‌ன் அப்ளை ப‌ண்ண‌னும்னு சொல்லிட்டு இருந்தீங்க‌ளே. ப‌ண்ணிட்டீங்க‌ளா." - யதார்த்தமாய்ப் பேச்சுக் கொடுத்தான் ஆட்டோக்காரன்.

"சீ, யாருக்கு வேணும் அந்த‌ப் பிச்சைக் காசு. என‌க்கு வேண்டாம்."
என்றவளின் கைகள் அநிச்சையாக ஆறுமுகத்தின் நெற்றியை வருடிக் கொண்டிருந்தன.

பி.கு:அனுராதா ரமணனின் சிறை கதையின் தாக்கம் இருப்பதாக நினைப்பவர்கள் அதற்கும் இதற்கும் இருக்கும் வேறுபாட்டை உணர்வீர்களானால் மிக்க‌ நன்றியுடையவளாவேன். :-)

Friday, May 21, 2010

யாதெனின் யாதெனின் நீங்கியான்...

சொந்தக் கதை சோகக் கதை எழுதக் கூப்பிட்டா மொத ஆளா ஓடி வந்துடுவேங்கற நம்பிக்கையோட அம்பிகா அக்கா இந்தத் தொடர்பதிவுக்குக் கூப்பிடிருக்காங்க. எழுதிடுவோமே!

விரும்பியதும் கிடைத்ததும்

படிப்பு மற்றும் வேலை விஷயத்தில் நான் என்ன விரும்பினேன்? ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்று கனவு கண்டேன். அண்டவெளியில் கோடிக்கணக்கான காலக்ஸிக்களும் கிரகங்களும் இருப்பதாகவும் பூமியை விடப் பன்மடங்கு பெரிதான கோளங்கள் சுற்றுவதாகவும் அறிந்த போது ஏற்பட்ட பிரமிப்பு அந்த ஆசையைத் தோற்றுவித்தது. நில‌வில் கால் பதியாமல் மிதந்து செல்லும் ஆராய்ச்சியாளர்களை டிவியில் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்திருக்கிறேன்.

டாக்டர், எஞ்சினிய‌ர், வெளிநாடு க‌ன‌வெல்லாம் பெரிதாக‌ இருக்க‌வில்லை.
பள்ளி இறுதி வகுப்புகளில் ப‌டிக்கும் போது, கணினிக் க‌ல்வி ஏதாவ‌து க‌ற்று ஒரு ந‌ல்ல‌ க‌ம்பெனியில் ஓரளவு கௌரவமான சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான் யதார்த்தமான‌ ஆசையாக இருந்தது.

ஆனால் உள்ளுக்குள் வேறு கனவுகளும் இருந்தன. இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும். விட்டுப் போன பாட்டுப் பயிற்சியை மீண்டும் தொடங்கி மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணற்ற கனவுகள் இருந்தன.

ஆனால் அவற்றை நிறைவேற்றப் போதுமான முயற்சியும் உத்வேகமும் ஏனோ இல்லாமல் போனது. கல்லூரியில் பேராசிரியர்களே கூட "உனக்கு கேம்பஸ்ல வேலை கிடைக்காட்டிக் கூட கவலை இல்லம்மா. நீ நிச்சயம் பாடகி ஆயிடலாம்" என்ற ரேஞ்சுக்கு ஏற்றி வைத்திருந்தார்கள். ஆனால் எனக்கு என் ஸ்டான்டர்டு தெரிந்திருந்தது. இசையில் உயரங்களை எட்ட வேண்டுமானால் குரல் மட்டும் போதாது; பல ஆண்டுகள் தொடர்ந்த முறையான உழைப்பும் பயிற்சியும் வேண்டும்.

"பெர்ஃபார்ம‌ன்ஸ்" என்பது ஹாபியாக இருக்கும் போது கிடைக்கும் தன்னிறைவும் கௌரவமும் தொழிலாக ஏற்றுக் கொள்ளும் போது கிடைக்குமா என்று ஒரு பயமும் த‌ய‌க்க‌மும் வேறு என் ம‌ன‌தைக் க‌ட்டிப் போட்ட‌து.
நாம் பாடுவ‌து ந‌ம‌க்காக‌வும் ந‌ம் அன்புக்குரிய‌வ‌ர்க‌ளுக்காக‌வும் ம‌ட்டும் இருந்தால் போதுமே என்ற‌ எண்ண‌மும் என்னை அந்த‌ப் பாதையில் அடியெடுத்து வைக்க‌ விடாம‌ல் த‌டுத்து விட்ட‌து. போயிருந்தாலும் வெற்றி கிடைத்திருக்கும் என்ப‌து நிச்ச‌ய‌ம‌ல்ல‌வே. :)

நல்ல இசையை ரசிக்கவும் அனுபவிக்கவும் நம்மால் இயல்கிறது என்பதே எவ்வளவு பெரிய சந்தோஷம் என்ற ஞானம் இப்போது வந்திருக்கிறது. வேலை முடிந்து வந்து சூப்பர் சிங்கர் ஜூனியரில் குட்டீஸ் பாடுவதைக் கேட்டால் மெய்மறந்து போகிறது. மன இறுக்கத்தை வெகுவாகத் தளர்த்த வல்லது அந்த நிகழ்ச்சி. சில குறைகளை நிவர்த்தி செய்தால் இன்னும் சிறப்பாக அமையும்.

இன்னொரு விஷயம் விரும்பியும் நடக்காமல் போனது பேராசிரியை ஆக வேண்டும் என்பது. சிவில் பொறியியல் படித்து முடித்த போது எஞ்சினியராக வேலை பார்ப்பதை விடக் கல்லூரியில் பேராசிரியையாகவே விரும்பினேன்.
ஆறுமாதம் பாலிடெக்னிக்கில் வேலை பார்த்த போது அந்த அனுப‌வம் அலாதியாக இருந்தது. நாங்கள் படித்த போது முட்டி மோதிப் பயின்ற எஞ்சினியரிங் ட்ராயிங்கை மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியாக‌ இருந்தது.

அதற்கு முந்தைய செமஸ்டர் வரை பாதிக்கும் மேல் தோல்வியுற்ற அப்பாடத்தில் அனைத்து மாணவர்களும் பிள்ளைகளும் 80க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து முழுத் தேர்ச்சியடைந்ததும் சீனியர் பேராசிரியைகள் வியந்து பாராட்டியதும் ம‌ற‌க்க‌ முடியாத‌ நினைவுக‌ள். ந‌ல்ல‌ வேலை கிடைக்க‌வில்லையே என்ற‌ குறையை ம‌ற‌க்கடித்துப் புதுத்தெம்பூட்டிய‌ ப‌ருவ‌ம் அது.

ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் சிவிலுக்கு ரொம்பவும் மதிப்பு இல்லாததால் கல்லூரிகளிலும் பேராசிரியை வேலை வாய்ப்புகள் இருக்கவில்லை. அதனால் கணனித் துறைக்குத் தடம் மாறிய கதையை ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். (கற்றது சிவில்)

பாட்டைத் தொலைத்த‌தை விட‌வும் ஏமாற்ற‌ம் ஆசிரிய‌ர் துறையைத் த‌வ‌ற‌ விட்ட‌து தான். இப்போது வேலை செய்யும் இட‌ங்க‌ளில் ஜூனியர்களுக்குப் பயிற்சி கொடுப்ப‌து போன்ற‌ ப‌ல‌ரும் விரும்பாத‌ வேலைக‌ளை அதனால் தான் விரும்பிச் செய்கிறேனோ என்ன‌வோ.

வேலை, சம்பளம், பதவி இதிலெல்லாம் பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாததாலும், கொஞ்சம் 'பேக்கு' என்று அறியப்பட்டாலும் என் மனதின் சந்தோஷமும் நிம்மதியும் எதில் இருக்கிறது என்பதில் எனக்குத் தெளிவு இருப்பதாலும், நான் விரும்பியவையே எனக்குக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானவை அன்பும் நட்பும்.

மேலும் நாம் விரும்பியதெல்லாம் கிடைத்து விடாமலிருப்பதும் ஒரு வரம் தான்! என் அம்மா சொல்லி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த குறளை இங்கு நினைவு கூர்வதை அவசியமெனக் கருதுகிறேன்.

"யாதெனின் யாதெனின் நீங்கியான் நோத‌ல்
அத‌னின் அத‌னின் இல‌ன்"


எதையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்று வருந்துகிறோமோ அவற்றுடன் சேர்ந்து வரும் துன்பங்களையும் நாம் இழக்கிறோம் என்று உணர்ந்து நிம்மதியுற வேண்டும். (இது எனது படு சுமாரான விளக்கம். பொறுத்தருள்க!)

Thursday, May 20, 2010

நேஹா நேர‌ம்!

"அம்மா ‍ போய்க் குளிச்சி.. டெச்சு மாத்தி."

மாலை அம்மா வீட்டிலிருந்து அவ‌ளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் குளித்து உடை மாற்றி வ‌ந்த‌ பின் தான் வந்து கொஞ்சுகிறாள்.

"அம்மா பச்சிக்குதும்மா..."

"இதோ ஒரு நிமிஷ‌ம்டா க‌ண்ணா" (ப‌த‌றிப் போய் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய் எடுத்து வைக்கிறேன்.)

"ல்ல‌.. டூ மினிஸ்" என்று கை காட்டி விட்டு ஓடுகிறாள். அட‌க்க‌ஷ்ட‌மே மாகி விள‌ம்ப‌ர‌ம்!

நாம், சோஃபாவில் என்று எங்கு உட்கார்ந்தாலும்
"பீஸ் எந்துக்கோங்க‌" என்று நம்மை அப்புற‌ப்படுத்தி விட்டு கையில் ஒரு புத்த‌க‌த்தோடு ஏறி உட்கார்ந்து கொள்கிறாள்.

"பாப்பா உன் சேரில உட்காரக் கூடாதா?" என்று கேட்டால்

"ம்ஹூம். .பாப்பாக்கு சோஃபா. பாப்பாக்கு சோஃபா"

அரை டிராய‌ரோ ஸ்கார்ட்டோ எதுவுமே போட்டு விட‌ முடிவ‌தில்லை. நீள‌ பேன்ட் தான் போட‌ வேண்டுமாம். குளித்து விட்டு வ‌ந்தாலே
"பான்ட்டு போட்டு, ச‌ட்டை போட்டு...பான்ட்டு போட்டு ச‌ட்டை போட்டு" - அதற்கென்று ஒரு ராக‌ம் வேறு!
"ஏன் வேற ட்ரெஸ் போட மாட்டியா?"
"ம்ஹூம்...அம்மா பேன்ட்..பாப்பாக்கு பேன்ட்" என்று என் சுடிதாரைக் காட்டுகிறாள்.

ஒரு நாள் வீட்டுக்கு வந்தபின் அவளை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று தேங்காய் வங்கினேன். அதன்பின் தினமும்,
"அம்மா! வண்டி போலாமா..? தேங்கா வாங்கி..." என்று ஒரே அட‌ம்.

இன்னும் சில‌:

"வெளிளிளிளில‌ போ..." (வெளில‌ போ.)

"ட‌கேஷி ஏன்னனனன‌னும்" - (போகோ சானலில் 'ட‌கேஷிஸ் காஸில்' வைக்க‌ வேண்டும்)

"நேஹா! என்ன‌ சாப்டே?" (வெளியில் எங்களுடன் சாப்பிட்டு விட்டு வந்த‌ அவளைத் தாத்தா கேட்டார்.

"சூப்பு, ஃபிஷ்ஷூ, இன்னோரு ஃபிஷ்ஷூ, (அது சிக்க‌ன்) மாகி" ‍ :)


ஊரிலிருந்து வ‌ந்திருக்கும் அவ‌ள் பெரிய‌ம்மா, அக்கா, அண்ண‌னோடு தான் இப்போது நாள் பூரா ஆட்டம். அது என்ன‌வோ ஆசையோடு கொஞ்சும் அவ‌ள் அக்காவோடு எல்லாவ‌ற்றுக்கும் ம‌ல்லுக்கு நிற்கிறாள். அத‌ட்டிக் கொண்டே இருக்கும் நிகிலிடம் (எட்டு வ‌ய‌து) 'நிகில‌ண்ணா நிகில‌ண்ணா' என்று ஒரே ப‌க்தி தான். அவ‌னிட‌ம் சொல்லித் தான் பால் குடிக்க‌ வைப்பது, தூங்க‌ வைப்ப‌து என்று எல்லாமும் ந‌ட‌க்கிற‌து!

அவ‌ர்க‌ள் எல்லாரும் ஊருக்குச் சென்ற பின் குழ‌ந்தை முக‌த்தைச் சில நாட்கள் எப்ப‌டிப் பார்ப்ப‌து என்றே ப‌ய‌மாக‌ இருக்கிற‌து!

Wednesday, May 12, 2010

என் முதல் பாய்ஃப்ரென்ட்!

மணி ரிக்ஷா மேன்!

நான்கு வயது முதல் பத்து வயது வரை இவரது ரிக்ஷாவில் தான் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். எட்டரை மணியாகி விட்டால் கணகணவென்று மணியடித்துக் கொண்டு வீட்டுக்கு முன் வந்து நிற்பார். அப்போது தான் என் வாயில் அக்கா இட்லியை ஊட்டிக் கொண்டிருப்பார். இந்தப் பக்கம் அப்பாவோ மாமியோ காலில் ஷூவை மாட்டி விட்டுக் கொண்டிருப்பார்கள். "லேட் ஆயிடுச்சு ரிக்ஷாமேன் திட்டப் போறார்" என்று சிடுசிடுத்துக் கொண்டிருப்பேன். (கடைக்குட்டியாகப் பிறந்ததால் சின்ன வயசில் செல்லம் கொடுத்துக் கெடுக்கப்பட்டிருந்தேன்.)

"வாம்மா வாயாடி மங்கம்மா" என்று என்னைத் தூக்கி ஏற்றி விட்டுப் பறப்பார் ரிக்ஷாமேன். எம்.ஜி.ஆரின் பரம பக்தரான அவர் கர்ண கடூரமாக "விவசாயி..." என்று பாட ஆரம்பிப்பார்.
அவ்வளவு தான் எங்கள் ஜமா ஒன்று சேர்ந்து கொண்டு அவரைக் கலாய்க்க ஆரம்பிக்கும்.பேச்சு மட்டுமல்ல; மற்ற ரிக்ஷாக்களை முந்திக் கொண்டு செல்ல வேண்டுமென்று அவர் முதுகில் சரமாரியாக அடிப்போம்.விய‌ர்வையில் ஊறித் திளைத்த‌ அவ‌ர் ச‌ட்டையின் ஈர‌ம் உள்ள‌ங்கையில் ப‌டிந்த‌தது நினைவுக்கு வ‌ருகிற‌து.

கறுப்பாக நல்ல உடற்கட்டோடு இருப்பார். அவர் முகம் களையாக இருக்கும். சிரிக்கும் போது தெரியும் அவரது வெள்ளைப் பற்களின் அழகு இப்போதும் நினைவில் இருக்கிறது.
பெரும்பாலும் சீட்டில் அம‌ர‌வே மாட்டார். பெல்லடிக்கும் முன் எங்களைப் பள்ளிக்குள் சேர்த்து விடவேண்டும் என்று மாங்கு மாங்கென்று நின்றபடியே சைக்கிள் பெட‌ல்க‌ளை மிதிப்பார்.

ஒரு பெண் அவர் சீட்டுக்குப் பின்புறம் இருக்கும் மரச்சீட்டில் (அதாவது ரிக்ஷாவின் மெயின் சீட்டுக்கு எதிர் சீட்டில்) நின்று கொண்டு அவரது தோளைப் பிடித்த படியே வரும். எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு மிகவும் பாதுகாப்பாகவே ஓட்டுவார்.எனக்கு மிகவும் பிடித்த இடம் டாப்!அதாவது மெயின் சீட்டுக்கு மெலே, பின்னம்பக்கம் பார்த்தவாறு, மடக்கி வைக்கப்பட்டிருக்கும் ரிக்ஷாவின் டாப்புக்கு இடையில் காலை விட்டுக் கொண்டு உட்காருவது! காலையில் அங்கு உட்கார மாட்டேன். வீட்டில் பார்த்தால் திட்டுவார்கள். இப்போது நினைத்தால் பயமாக இருக்கிறது. ஆனால் ரிக்ஷாவின் மிதமான வேகம் ஆபத்துக்கு இடம் கொடுக்காது.

அடை ம‌ழையானாலும் ரிக்ஷா முழுதும் க‌வ‌ர் போட்டு எங்க‌ளை ந‌னையாம‌ல் அழைத்துச் செல்வார். (மழையில் பள்ளத்தில் மாட்டிக் கொண்டு அவர் ரிக்ஷாவை இழுக்கப் பாடுபட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது.)

மேலும், எங்க‌ள் ப‌ள்ளிப் பிள்ளைக‌ளை அழைத்துக் கொண்டு ப‌க்க‌த்துப் ப‌ள்ளியிலும் அழைக்க‌ச் செல்வோம். அப்போது அங்கு காத்திருக்கும் நேர‌த்தில் ஐந்து பைசா ஆர‌ஞ்சு மிட்டாய்க‌ள் எல்லாருக்கும் வாங்கித் த‌ருவார். அத‌ற்காக‌ அவ‌ரைப் ப‌டாத‌ பாடு வேறு ப‌டுத்துவோம்.

இதையெல்லாம் எங்க‌ள் வீட்டில் சொல்ல‌வே மாட்டார். ஒரு நாள் நான் ப‌ள்ளி செல்லாத‌ போது குச்சி ஐஸ் வாங்கிக் கொடுத்த‌தாக‌ ம‌ற்ற‌ பிள்ளைக‌ள் என்னை வெறுப்பேற்றினார்க‌ள். "ரிக்ஷாமேன்! என‌க்கு..?" என்று அழுதேன். "வாங்கித் த‌ர்றேன்மா" என்று சொல்லிக் கொண்டே க‌டைசி வ‌ரை ஏமாற்றி விட்டார். என‌க்கு அடிக்க‌டி ச‌ளி ஜுர‌ம் வரும். வேண்டுமென்று தான் நான் இல்லாத‌ நாள் பார்த்து ஐஸ் வாங்கித் த‌ந்திருக்கிறாரோ என்று அப்புற‌ம் யோசித்தேன்.

லீவு நாட்களில் சம்பளம் வாங்க வீட்டுக்கு வருவார். அப்போது எனக்கு அவரைப் பார்த்து ஏகக் குஷியாகி விடும். அவர் அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது காலியாக இருக்கும் ரிக்ஷாவில் ஆசை தீர ஏறி விளையாடுவது, அவரது சீட்டில் அமர்ந்து கயிற்றில் கட்டப்பட்ட அந்த மணியை இழுத்து இழுத்து அடிப்பது என்று லூட்டியடிப்பேன்.

ரிக்ஷா ரிப்பேர் ஆன‌ நாட்க‌ளில் சைக்கிள் எடுத்துக் கொண்டு வந்து என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். மற்ற பிள்ளைகளின் வீட்டுக்கு முன்பே சென்று சொல்லி விடுவார். என்னை மட்டும் தான் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக ஞாபகம்.

சில‌ ச‌ம‌ய‌ம் அவ‌ருக்கு உட‌ம்பு முடியாத‌ போது அவ‌ர் ம‌னைவியைப் பள்ளிக்கு அனுப்பி வைப்பார். எங்க‌ள் புத்த‌க்ப் பைகளைச் சும‌ந்து கொண்டு வீட்டுக்குப் ப‌த்திர‌மாக‌ அழைத்து வ‌ர! இப்போது நினைத்தால் ரொம்பப் பெரிய விஷயமாக்த் தெரிகிறது. தொழிலாக‌ ம‌ட்டும் பார்க்காம‌ல் குழ‌ந்தைக‌ளான‌ எங்க‌ளை அக்கறையுடனும் அன்புடனும் நேசித்திருக்கிறார் என்று புரிகிறது. அவருக்கு எத்தனை குழந்தைகள் அவர்கள் எங்கு படித்தார்கள் என்பதெல்லாம் நினைவில் இல்லை. நினைக்கையில் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

ரிக்ஷாவில் மோட்டர் பொருத்த வேண்டுமென்பது அவரது நெடுநாளைய ஆசை. அப்போது மோட்டார் ரிக்ஷாக்கள் கூடுதல் மவுசைப் பெற்றிருந்தன. (ரொம்ப பெடல் மிதிக்க வேண்டாம். வேகமாகவும் போகும்.) ஆனால் நான் பார்த்தவரை அவர் அதைச் செய்யவே இல்லை.

ஏழாவது முதல் என் தோழியுடன் நடந்தே செல்ல விரும்பியதால் ரிக்ஷா வேண்டாமென்று நானே சொல்லி விட்டேன்.
பின்பு சைக்கிளில் செல்லும் போது என்றாவது எதிரில் பார்த்தால் புன்னகைப்பார். "பாத்து ஓட்டும்மா.. வாயாடி மங்கம்மா" என்பார். சில ஆண்டுகள் வரை எதார்த்தமாக கண்களில் பட்டுக் கொண்டிருந்தவர் அப்புறம் என்னவானார் என்றே தெரியவில்லை.

மோட்டார் பொருத்தியிருப்பாரா அல்லது அந்த ரிக்ஷாவை விற்று ஆட்டோ வாங்கியிருப்பாரா? அவரது குழந்தைகளை ஒரு நாளாவது அந்த் ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருப்பாரா?

Tuesday, May 4, 2010

லீவ் விட்டாச்சா?

ஏப்ரல் மே என்றாலே வெயிலின் கொடுமையையும் மீறி பள்ளிக் குழந்தைகளுக்கு லீவாயிற்றே என்ற சந்தோஷமும், பார்க்கும் குழந்தைகளிடமெல்லாம் "என்ன லீவ் விட்டாச்சா" என்று கேட்பதும் பதிலுக்கு அந்த உற்சாகச் சிரிப்பையும் எதிர்பார்ப்பது வழக்கமாகி விட்டது. பள்ளிப் படிப்பு கொடுமை என்று அர்த்தமில்லை.
ஆனால் இந்த கோடை விடுமுறையில் தான் குழந்தைகள் குழந்தைகளாக இருக்க முடியும்.

காலையில் எழுந்து பல் தேய்த்துக் காப்பி குடித்ததுமே விளையாட ஓடிப் போய்விட்டு மதியம் சாப்பிட அழைக்கும் வரை ஆடு ஆடென்று ஆட்டம்,

மதிய வேளையில் தூங்கும் அம்மாவுடன் ஒண்டிக்கொண்டு குண்டு கதைப்புத்தகம், ("வெயில்ல‌ வெளையாட‌ப் போக‌வேண்டாம்")

முன்மாலைப் பொழுதில் கிண‌ற்ற‌டியில், பின் வீட்டு சகாக்களுடன் சிரித்துப் போட்டி போட்டுக் கொண்டே இரும்புவாளியில் தண்ணீர் இறைத்துக் குளிய‌ல்,

ப‌க்க‌த்து வீட்டு அக்கா "வைதேகி காத்திருந்தாள்" சினிமா பாட்டுப் புத்த‌க‌ம் பார்த்து இஷ்ட‌த்துக்கும் பாட குட்டிக‌ள் எல்லோரும் அபின‌ய‌த்துட‌ன் ஆடிய‌து

எதிர்வீட்டு அண்ணன் ராணி காமிக்ஸ் ப‌டித்துக் க‌தை சொல்ல‌ சுற்றி உட்கார்ந்து ந‌டுங்கிக் கொண்டே கேட்டது

மொட்டை வெயிலில், வீட்டில் சொல்லாம‌ல் அண்ண‌னுட‌ன் சைக்கிளில் பெரிய‌ லைப்‌ர‌ரிக்குச் சென்று புத்த‌க‌ங்க‌ள் அள்ளி வ‌ந்த‌து

ஐந்தாவ‌து லீவில் முத‌ல்முறையாக சுனிதா சித்ரா அக்காக்களிடம் சீட்டு விளையாட‌க் க‌ற்றுக் கொண்டது

அந்தி சாய்ந்ததும் அக்கா கை பிடித்து வ‌ட‌ப‌ழ‌னி கோவிலுக்குச் சென்று பின் மார்க்கெட்டில் வ‌ளைய‌ல், ஹேர்கிள்ப் வாங்கிய‌து

சித்த‌ப்பா பெண்கள் வீட்டுக்கு வ‌ந்து ஓரிரு நாட்க‌ள் த‌ங்க‌ப் போகிறார்க‌ள் என்ற‌தும் சொர்க்க‌மே த‌ரையிலிற‌ங்கிய‌து போல் குதூக‌லித்தது.
(இர‌வெல்லாம் க‌தை பேசிச் சிரிக்க‌ வ‌ய‌தொத்த‌ ஆள் கிடைப்ப‌தென்றால் சும்மாவா?)

வெயிலாவ‌து ஒண்னாவது? வீட்டில் சாப்பிட, காபி குடிக்க‌ என்று தொண்டை வ‌லிக்க‌ அழைக்கும் வ‌ரை ப‌க்க‌த்து வீட்டிலோ தெருவிலோ புழுதி ப‌ற‌க்க‌ விளையாடிய‌து


ச‌ம்ம‌ர் கேம்ப், ஸ்விம்மிங் க்ளாஸ‌ஸ், சைக்கிள், பெயின்டிங் க்ளாஸ‌ஸ், பீச், சினிமா, கிஷ்கிந்தா, மாயாஜால், பாட்டு க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், கீ போர்ட் க்ளாஸ், இதற்கெல்லாம் இடையே மேற்கூறிய அவ‌ற்றை எப்ப‌டி ந‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு மீட்டுத் த‌ருவ‌து?