சின்னக் குழந்தை பிறந்தவுடன் வந்து பார்த்த போது,
"ஆஹா...பாப்பா ஜம்ப் பண்ணி வந்துட்டியா...வந்துட்டியா!" என்றெல்லாம் கை தட்டிக் குதூகலித்தாள்.
"பாப்பாக்கு முத்தம் குடுக்கறேன் கை புடிச்சிக்கிறேன்" என்றெல்லாம் பாசமழை பொழிந்தாள். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான்.
சில வாரங்களில் எதற்காவது பிடிவாதம் பிடித்து அழுகையில் போய்ப் பாப்பாவை அடித்து விடுவது, கையைப் பிடித்து இழுப்பது என்று செய்யத் தொடங்கினாள். ரொம்பவே பயந்து போனேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்த பழக்கம் குறைந்து வருகிறது என்றே நம்பவிரும்புகிறேன்!
ப்ளே ஸ்கூல் ரொம்பப் பிடித்து விட்டது அவளுக்கு.
"நேஹா! ஸ்கூல்ல உனக்கு யாரு ஃப்ரென்ட்ஸ்?"
"நேத்ரா, ராகவ், ம்ருத்துஞ்ஞ்ஞ்ஜெய், கனிஷ்கா..."
"ராம்?"
"ராம் பையன் புடிக்காது"
"ஏன்டா?"
"ராம் பையன் தல புட்ச்சி இழுக்க்க்க்க்க்குறான்"
"உங்க மிஸ் பேரென்ன?"
"அஞ்சும் மிஸ்..அஞ்சும் மிஸ் கிட்ட ஐ லவ் யூ சொன்னேன்."
"அம்மாவோட பொக்கிஷம் யாரு?"
"நேஹா"
"நேஹா வோட பொக்கிஷம் யாரு?"
"அம்மா"
இது அவள் நல்ல மூடில் இருந்தால் சொல்லிக் கொள்வது.
(ஓகே! ஓகே! நான் ட்ரெயினிங் கொடுத்துச் சொன்னது தான் :))
ஒரு நாள் இதைச் சொல்லிவிட்டு அவளாகவே நீள ஆரம்பித்தாள்:
"அப்பாவோட பொக்கிஷம் ஷைலா
மாது பெரியப்பாவோட பொக்கிஷம் ப்ரீத்து
அம்மு பெரிம்மாவோட பொக்கிஷம் நிகில்
டாரதி அத்தையோட பொக்கிஷம் சூர்யா"
"ஜான் மாமாவோட பொக்கிஷம்?"
"ம்...டாரதி அத்தை"
"அப்பாயியோட (அவளுடைய பாட்டி) பொக்கிஷம்?"
"ம்...நெல்சன் தாத்தா!"
என் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு,
"மாது பெரியப்பா என்னை இப்பிடித்தான் கொஞ்சினாங்க" என்றாள்.
பின்பு, "நான் ப்ரீத்துவை அடிக்கவே மாட்டேன். மாது பெரிப்பா அடிப்பாங்க."
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, "நேஹா அந்த ஊறுகாய் பாட்டிலை எடுத்துத் தாடா" என்றேன்.
கொண்டு வந்து கொடுத்தாள். திறந்து எடுத்துக் கொண்டு மூடியைக் கீழேயே வைத்தேன்.
போகிற போக்கில் "மூடி வெச்சிடு, அது கொட்டிடும்" என்றாளே பார்க்கலாம், ஜோவின் எகத்தாளப் பார்வையை என்னால் எதிர்கொள்ளவே முடியவில்லை.
"நானே நானே" மேனியா ஆரம்பித்திருக்கிறது. எதையாவது தானே செய்ய விரும்பி அதில் இத்துனூன்டு நாம் செய்து விட்டாலும், கத்திக் கூப்பாடு போடுகிறாள்.
உதாரணம்: தோசை சுட்டுக் கொடுத்து விட்டு, நேரமாகிறதே என்று அவசரமாய் ஒரு துண்டு பிய்த்து வாயில் ஊட்டப் போனால் போச்சு! ஊரே இரண்டு படுகிறது. அவளாகவே அரை மணி கழித்து காய்ந்து போன தோசையை ஊட்டிவிடச் சொல்வது வேறு கதை.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் மன்னிப்பாயா பாட்டு ரொம்பப் பிடிக்கும். சிம்பு நடித்த வேறேதோ படம் டிவியில் வந்த போது, அம்மா, "மன்னிப்பாயா மன்னிப்பாயா..." என்று கத்தியதோடு அவ்வப்போது "ஆமாம் கரெக்ட்.. கண்டுபிடிச்சிட்டேனே...." என்று கன்ஃபர்ம் வேறு செய்து கொண்டாள்.
சிம்புவை வில்லன்கள் அடித்த போது ஒரே அழுகை. "மன்னிப்பாயா அடிக்குறாங்க..." அவளுக்காக அன்றொரு நாள் சிம்பு ரசிகையாக மாறவேண்டி வந்தது!
ஸ்ரீ கோல்ட் பருப்பு வகைகளுக்கான விளம்பரம். அதில் ஒரு சிறுவன் பாக்ஸிங் பழகிக் கொண்டிருந்தான். உன்னிப்பாகக் கவனித்த அவள், "அம்மா எனக்கும் நீ ஸ்ரீ கோல்ட் பருப்பு வாங்கிக் குடுக்குவேல்ல? நானும் டிஷ்யூம் டிஷூம் பண்ணுவேன்!" குழந்தைகளை மிகச் சரியாகத் தான் டார்கெட் செய்கின்றன விளம்பரங்கள்.
அவளுக்குப் பிடித்தது எதையாவது செய்து தர ஆரம்பித்தால் ஒரே கொஞ்சல் தான். கையில் தட்டோடு சமையல் கட்டு வாசலிலேயே நிற்கிறாள்."அம்மா, பாப்கார்ன் செய்றியா, நான் இங்கியே நிக்கவா? ஸோ ஸ்வீட்மா." (ரொம்பச் சமத்தாம். உள்ளே வந்து தொந்தரவு செய்ய மாட்டாளாம்!)
அதே போல் செய்து தருவது பிடித்திருந்தால், "அம்மா, சூப்பரா இருக்கும்மா..நீயே செஞ்சியா, சான்ஸே இல்லம்மா..."