
பார்த்தவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் எல்லாரும் எச்சரித்தும் அசராமல் இருந்தேன். எனக்கொன்றும் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. பெரிதாக மெஸெஜ் இல்லாவிட்டால் என்ன, பொழுது போக்கு அம்சம் கூடவா இவ்வளவு பெரிய மல்டிஸ்டாரரில் இல்லாமல் போகும்? பார்த்து விடுவோம் என்று போனேன்.
ஹையோ ஹையோ! இரண்டரை மணி நேரம் ஓடிய படத்தில் ஒரு காட்சி கூட மனதில் நிற்கவில்லை. பார்க்கும் போதும் படத்தோடு ஒரு காட்சியில் கூட ஒன்ற முடியவில்லை.
கதையை விடுங்கள், முடிவை விடுங்கள், மற்ற பாத்திரங்களை விடுங்கள் வீராவின் பாத்திரப்படைப்பைக் கூடவா சரியாகச் செய்யமுடியவில்லை? வீராவைப் பற்றிய விஷயங்களை நான்கைந்து காட்டு வாசிகள் வாய்வழியே புகழ வைப்பதோடு சுலபமாக முடித்துக் கொண்டார் இயக்குநர். இதனால் விக்ரம் காட்டும் உடல்மொழியும், நடிப்பும் கோமாளிக் கூத்தாகப் போய்விட்டது. பிரியாமணி வரும் இடத்தையாவது கொஞ்சம் அழுத்தமாகக் கதை சொல்லப் பயன்படுத்தி இருக்கலாம். அதுவும் இல்லை.
ஐஸ்வர்யா, ஐஸ்வர்யாவாகவே இருக்கிறார். ராகினியாக இல்லை. ஏதோ ஹிந்திப் பட ஷூட்டிங்கிற்கு இடையே விக்ரம் அவரைக் கடத்தி வந்ததாகத் தான் படுகிறது. அழகு, நடிப்பு, நடனம் எல்லாவற்றிலும் ஏமாற்றி விட்டார்.
வீரா ராகினியின் மீது மையல் கொள்வதற்கு அழுத்தமான காரணங்கள் அல்லது சூழ்நிலை ஏற்படுத்தி இருந்தால் ஏற்கும்படியாக இருந்திருக்கும். அது இல்லாமல் போகவே இந்த ராவணன் மீதும் மதிப்பு ஏற்படவில்லை.
காட்டுக்குள் கதைக்களம் ஏற்படுத்தியது அருமையான லொக்கேஷனுக்காக மட்டுமே தான் போலும். காட்டு வாழ் மக்களின் துன்பங்கள், அவர்களின் வாழ்க்கையை ஒரு காட்சியில் கூடப் படம்பிடிக்க மெனக்கெடவில்லை இயக்குநர். இப்படி ஒரு ராமன் ராவணன் கதையை எடுக்கக் காட்டுக்குள் காமிராவைத் தூக்கிக் கொண்டு போவானேன்? சிட்டியிலேயே ஒரு ஃபைவ்ஸ்டார் ஹோட்டலுக்குள் எடுத்து முடித்திருக்கலாம்.
அனுமார், ராமன், சீதை, கும்பகர்ணன் இவர்களின் பிரதிகளாகப் பாத்திரங்கள் வருவது ஒப்புக்காகவும் சிறுபிள்ளைத் தனமாகவும் இருக்கிறது. நவீன ராமாயணம், மகாபாரதம் என்று பள்ளிப்பருவத்தில் போட்ட காமெடி டிராமாக்கள் இதை விட எவ்வளவோ ரசனை மிகுந்ததாக இருந்திருக்கிறது.
இசை: உசுரே போகுதே பாடலைப் பெரிதும் எதிர்பார்த்தேன். ஏ. ஆர் ரஹ்மான இசையில் அது ஒன்று தான் தேறியது. அதிலும் ஏமாற்றம். கொஞ்சம் கூடச் சிரத்தையுடன் படமாக்கப் படவில்லை அந்தப் பாடல். முழுதும் வரவும் இல்லை.
விக்ரமுக்கு ஒரே ஒரு அட்வைஸ்: பெர்ஃபார்மன்ஸிக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் இனியாவது தயவு செய்து பெரிய பானர்களை விடுத்துச் திறமை மிகுந்த சின்ன இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அது தான் உங்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும் நீங்கள் செய்யக்கூடிய உபகாரம். இல்லாவிட்டால் அடுத்த மணிரத்னம் அல்லது ஷங்கர் படத்தில் அப்பா/அண்ணன் வேடம் செய்யத் தயாராகுங்கள். (ஆமாம், அவ்வளவு ஆண்டுகள் ஆகிவிடுமே)