என்னத்த எழுதறதுன்னு ஒரு மனநிலையில் இருக்கும் போது இப்படி தொடர் பதிவு, அதிலும் சொந்தக் கதை எழுதக் கூப்பிட்டா ஈஸியாத்தான் இருக்கு. அஃப்கோர்ஸ் எழுதற எனக்கு மட்டும் தான் ஈஸி!
என் முழுப்பெயர் தீபலக்ஷ்மி. இதை இப்போதெல்லாம் தீபலட்சுமி என்றும் எழுதினால் ஏற்றுக் கொள்கிறேன். முன்பெல்லாம் பிடிக்காது.
என் அக்காவுக்கும் அண்ணனுக்கும் உண்மையில் அரிதான் அழகான பெயர்கள். காதம்பரி, ஜெயசிம்மன். நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள், உனக்கு மட்டும் ஏன் அப்படி அழகான பெயர் வைக்கலன்னு. என் அண்ணனும் அவன் பங்குக்கு முடிந்தவரை இது பற்றி வெறி கொட்டியிருக்கிறான்.
வீட்டில் கேட்ட போது நீ தீபாவளி அன்னிக்குப் பிறந்ததால் தீபான்னு வெச்சோம். லக்ஷ்மி சேத்தா இன்னும் நல்லா இருக்குமேன்னு நினைச்சோம்னு. எனக்கு என் பெயர் பற்றிப் பெருமையும் இல்லை, பெரிதாக வருத்தமும் இல்லை. என் நெருங்கிய தோழி ஜோதிலட்சுமி. அவளுக்கும் பெயரில் லட்சுமி இருப்பது பிடிக்காது. எங்கள் இருவருக்கும் ஒரு போட்டி. எந்த ஆசிரியையாவது என்னை தீபா எனறும் அவளை முழுப் பெயர் சொல்லியும் அழைத்து விட்டால் போச்சு. அவள் மூட் அவுட் ஆகி விடுவாள். இது ரிவர்சில் நடந்தால் நான் ரொம்பப் பொருட்படுத்த மாட்டேன். மீ குட் கேர்ல் நோ!?
ஆனால் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களான போது பலரும் எங்கள் பெயர்ப் பொருத்தத்தைக் குறிப்பிட்டுப் பேசும் போது இருவருக்குமே பெருமையாக இருக்கும். நாங்கள் சேர்ந்து சொந்தமாக லைபரரி வைக்க வேண்டும், ஸ்கூல் நடத்த வேண்டும் என்றெல்லாம் கனவுகளுடன் பேசிக் கொண்ட போது அதற்கு 'தீப்ஜோதி' என்று நாமகரணம் சூட்டிப் பரவசப்பட்டிருக்கிறோம்.
ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் அதிகம் படித்த காலத்தில் இங்கிலிஷ் பெயர்களின் மீது மோகம் இருந்தது. எனிட் ப்ளைடன் கதைகளில் வரும் சிறுமிகளின் பெயர்களெல்லாம் அழகாகத் தோன்றி இருக்கின்றன. பெஸ்ஸி, கோனி, ஜார்ஜினா என்ற பெயர்களெல்லாம் இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது.அதே போல் ஆர்ச்சி காமிக்ஸில் வரும் பெட்டி, வெரோநிகா.
அம்புலி மாமா கதைகளில் வரும் அழகான தமிழ்ப்பெயர்கள் மீதும் காதல் இருந்தது. வெயில்கால மதிய நேரங்களில் உட்கார்ந்து 'கதை பண்ணி' விளையாடும் போது ராஜா ராணி இளவரசிக்கெல்லாம் அழகழகாக்ப் பெயர் சூட்ட உதவியது அம்புலிமாமா கதை மாந்தர்கள் தாம்.
குழந்தைக்குத் தமிழ்ப்பெயர் தான் சூட்ட வேண்டும் என்று ஆர்வத்துடன் தேடிக் கொண்டிருந்தோம். ஆனால் நேஹா என்ற பெயருக்கு 'அன்பு' என்று அர்த்தம் இருப்பதாலும் ஏனோ ரொம்பப் பிடித்துவிட்டது.
என் சித்தப்பா தனது மூன்று மகள்களுக்கும் அழகான தமிழ்ப்பெயர் சூட்டி இருக்கிறார். பூங்குழலி (பொ.செ இன்ஸ்பிரேஷன்), வண்டார்குழலி, மற்றும் கார்குழலி.
வீட்டில் இவர்கள் முறையே அமுதா அருணா மற்றும் வனிதா. இதைத் தெரிந்து கொண்ட ஆசிரியைகள் "ஏங்க நீங்க மட்டும் வீட்ல கூப்பிட ஈஸியான பேரா வெச்சிட்டு, எங்கள இப்டி ட்ரில் வாங்குறீங்களே" என்று கமென்ட் அடித்ததுண்டு.
தன் பெயரைக் "காதுக்குள்ள ஈ" என்று சக மாணவர்கள் கேலி செய்வதாகக் கார்குழலி சொல்லிச் சிரித்ததுமுண்டு. ஆனாலும் குழலி சிஸ்டர்ஸ் பெயருக்காகவே பிரபலம் தான்.
இதையெல்லாம் பார்க்கும் போது ஊரெல்லாம் வைத்த அளவு என் பெயர் ரொம்பப் பிரபலமும் (common) அல்ல, ரொம்ப அரிதாகவும் இல்லை, அழகாகவும் இல்லை என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. ஆனாலும் தீபா என்ற என்ற பெயர்ச் சுருக்கம் எனக்குப் பிடிக்கும் தான். அதிலும் என் மீது மிக்க அன்புள்ளவர்கள் தீபூ என்று அழைப்பது மிகவும் பிடிக்கும். அப்படி என்னை அழைப்பவர்கள் ரொம்பக் கம்மி. என் ரூம்மேட் சுதா, எப்போதாவது அங்கிள், சில உறவினர்க்ள், இப்போது ஜோ! என்ன கோபமாக இருந்தாலும் தீபூ என்று அழைத்துச் சண்டை போட்டால் நான் தணிந்து விடுவேன். இந்த ரகசியம் அவருக்குப்பல சமயம் மறந்து விடுகிறது, என்ன செய்வது!
கல்லூரியில் பெரும்பாலும் நண்பர்களுக்கு நான் 'தீப்ஸ்'. அப்போது தான் ஒரு சுவாரசியமான விஷயம் கண்டுபிடித்தேன். நடந்து செல்லும் போது சில சமயம் பசங்க ஸ்பீட் ஸ்பீட் என்று கத்துவார்கள். எதுக்குடா நமக்கு இப்படி ஒரு பெயர்னு எனக்குக் குழப்பம். பிறகு தெரிந்தது Deeps ஐத் திருப்பி எழுதினால் Speed என்று. அட நம்ம பேர்ல இப்படி ஒரு விஷய்ம் இருப்பது நமக்கே இதுவரை தெரியவில்லையே என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்!
இத்துடன் என் பெயர்ப் புராணத்தை முடித்துக் கொள்கிறேன்! அழைத்த அகில்ஸுக்கு நன்றி!