Friday, April 17, 2009

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்?

”நீங்கள் இருவரும் ஒரே நாளில் அதே நேரத்தில் ஒரே ஊரில் பிறப்பீர்கள். நீங்கள் பிறக்கும் வரை ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளலாம். பிறந்த பிறகு என்ன வாகிறது என்று பாருங்கள்.”

அவ்விரு உயிர்களும் தத்தமது தாய் வயிற்றில் சூல் கொண்டன.

சில வாரங்களுக்குப் பிறகு,
“ஹேய்! இங்கே ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கு. நான் வந்திருக்கேன்னு கொண்டாடறாங்க.”
”ஹீம்.. நான் வந்ததே இவங்களுக்கு இன்னும் தெரியலன்னு நினைக்கறேன்”

இன்னும் சில நாட்கள் செல்ல...

“ஐயோ..கொஞ்சம் எழுந்து நடக்கக் கூடாதா அம்மா... டாக்டர் பத்திரமா இருக்கச் சொன்னதுக்காக இப்படியா நாள் பூரா படுத்திருக்கணும்?”
“எனக்கு ஒரே ஆட்டமா இருக்கு. நாள் பூரா மாடி ஏறி இறங்கிட்டு இருக்கா எங்க அம்மா”

ஓரிரு மாதங்களுக்குப் பிறகு,

”எதுக்கு இப்படி சாப்டுட்டே இருக்காங்க. இனிமே எனக்குத் தர்றதெல்லாம் கொழுப்பாத் தன் சேரும்.”
“ஏய், உனக்கு எப்பவாச்சும் வயித்தைக் கிள்ளற மாதிரி லேசா வலி வர்றதுண்டா? எனக்கு தினமும் ரெண்டு மூணு தடவையாச்சும் அப்டி வருது.”

சில வாரங்களுக்குப் பிறகு,
”நான் இன்னும் தலை கீழா திரும்பவே இல்லை. என்னவா இருக்கும்னு பாக்க டாக்டர் கிட்டெ போறாங்க.”

“நான் திரும்பிட்டேன். அதனால அம்மாக்கு ரொம்ப மூச்சு வாங்குது. முன்ன மாதிரி வேலை செய்ய முடியல போல. பாவம்.”

அந்த நாளும் வந்தது
”அட! இதோ நான் வந்துட்டேன். என்னை அழகா ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டாங்களே. இது தான் பூமியா? பரவால்லியே அழகா, படு சுத்தமா இருக்கு. வெள்ளை வெளேர்னு உடுத்தி யார் இவங்க எல்லாம்? தேவதைங்க மாதிரியே...எல்லாரும் சிரிக்கறாங்க என்னைப் பார்த்து.. ஓ, நான் அழணும் இல்ல...குவாஆஆஆஆஆஆஆ!!!”


”இதோ, நானும் வந்துட்டேன். காதே கிழியற மாதிரி கத்தறாங்க அம்மா. என்ன இடம் இது. இருட்டா, குறுகலா. என்னை இந்தக் கிழவி தான் வெளிய கொண்டு வந்தாங்களா? பரவாயில்ல, எங்க அம்மா பாயில படுத்திருக்காங்க. இங்கேயும் எல்லாரும் சிரிச்சிட்டுத் தான் இருக்காங்க. நானும் அழணும்ல? குவாஆஆஆஆஆஆஆ!!”

சில ஆண்டுகளுக்குப் பிறகு,
”அர்ஜுன், வெளிய தலைய நீட்டாதே. ஜன்னலை க்ளோஸ் பண்ணு. அம்மா ஏசி போடப் போறேன். மை காட்! இன்னிக்கும் லேட்டு. பை த வே, பேச்சு போட்டிக்குத் தயார் பண்ணிட்டியா?”


”யெஸ் மம்மி. இந்தியாவில் வறுமை. அட்டகாசமான டாபிக், சூப்பரா பாய்ண்ட்ஸ் ரெடி பண்ணிட்டேன்.”
“சமத்து...” மகனின் தலையை வருடி விட்டு நேராகப் பார்த்து காரைச் செலுத்துகிறாள் அந்த அம்மா.


”டேய் ராஜா, என்னடா அங்க பராக்கு பாத்துட்டு இருக்கே? இந்தா இந்த மூட்டையை எடுத்துட்டு மூணாவது மாடிக்குப் போ”

”சரிம்மா...” சீறிச் செல்லும் அந்தக் காரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ராஜூ கைப்பிடிச் சுவர் இல்லாத அந்த மாடிப்படிகளில் லாகவமாக ஏறிச் செல்கிறான்.
Wednesday, April 15, 2009

டோட்டோ சான் - ஜன்னலில் சின்னஞ்சிறுமி


நேஹாவுக்கு இப்போது தான் ஒரு வயது ஆகிறது. ஆனால் இப்போதே அவளை எந்தப் பள்ளியில்
சேர்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டோம்!கூடுமானவரை வீட்டுக்கு அருகிலேயே இருக்க வேண்டும், தரமான கல்வியுடன் விளையாட்டு மைதானமும் இருக்கவேண்டும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டு இருக்கும் போது தான் எப்போதோ படித்த இந்தப் புத்தகம் நினைவுக்கு வந்தது. பெற்றோர்களும் முக்கியமாக ஆசிரியர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.
டோட்டோ சான் - ஜன்னலில் சின்னஞ்சிறுமி ஜப்பான் நாட்டில் இரண்டாம் உலகப் போரின் போது சிறுமியாக இருந்த டெட்சுகோ குரோயாநாகி என்பவர் தனது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியதாகத் தான் படித்த பள்ளியைப் பற்றியும் அதன்
தலைமை ஆசிரியரைப் பற்றியும் கூறியுள்ளார்.

புகழ்பெற்ற ஒரு பள்ளியிலிருந்து முதல் கிரேடிலேயே வெளியேற்றப் படும் டோட்டோ சான் என்ற சிறுமி கோபயாஷி என்பவர் நடத்தும் வித்தியாசமான பள்ளியில் சேர்க்கப் படுகிறாள்.

”டோமோயி” என்ற அந்தப் பள்ளி மற்ற பள்ளிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கைவிடப்பட்ட ரயில்பெட்டிகளில் வகுப்பறைகள், சுதந்திரமான பாடத் திட்டங்கள், ”கடல்களிலிருந்து கொஞ்சம், மலைகளிலிருந்து கொஞ்சம்” என்று சரிவிகித உணவு முறை, உடல் ஊனமுற்ற குழந்தைகள் கொண்டாடி மகிழும் வண்ணம் விளையாட்டுப் போட்டிகள், இயற்கையிலிருந்து நேரட்டியாக கற்பிக்கும் முறை, உதாரணத்துக்கு விவசாயப் பாடம் கற்பிக்க விவசாயி ஒருவரையே கௌரவ ஆசிரியராக அழைத்து வருதல், அசெம்பிளி ஹாலில் கூடாரமடித்துத் தங்கும் கேளிக்கைகள், இசையுடன் கூடிய உடற்பயிற்சி வகுப்புகள், திறந்தவெளிச் சமையல் வகுப்புகள் என்று படு எளிமையாகவும் அதே சமயம் குழந்தைகளுக்குக் குதூகலம் நிறைந்ததாகவும் விளங்குகிறது அந்தப் பள்ளி.

முந்தைய குறும்பு செய்து பள்ளியில் வகுப்பையே கெடுப்பதாகச் சொல்லி வெளியேற்றப்பட்ட டோட்டோ சான் இந்தப் பள்ளியில் உற்சாகமாகப் பள்ளி சென்று ஆர்வத்துடன் கல்வி கற்கிறாள்.


நூலிலிருந்து:
”டோட்டோ சானை விட ஒரு வகுப்பு கூடுதலாகப் படித்த ஒரு பையன் அப்பள்ளியை விட்டுச் செல்ல
நேர்ந்த போது தன் மனக் கசப்பை வெளியிட தலைமை ஆசிரியரின் முதுகில் புளி மூட்டை ஏறிக்
கொண்டு கண்களில் நீர் வழிய கைகால்கள்:ஐ உதைத்து அடம்பிடித்தான். அவன் சென்று மறையும்
வரை கால்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்ள பள்ளியைப் பிரிய மனமின்றிச் சென்றான், தலைமையாசிரியர் கண்கள் சிவக்க அழுதே விட்டார்.”

”நாம் போன தடவை போனப்ப அங்குள்ள குளத்தில் பாம்பு பார்த்தோம்” சாக்கோ சான் சொன்னாள்.

குழந்தைகள் நடந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். வானம் நீலமாக இருந்தது. காற்ரு படபடக்கும் பட்டாம்பூச்சிகளால்
நிறைந்திருந்தது. அவர்கள் பத்து நிமிடம் ந்டந்த பின்பு டீச்சர் நின்றார். சில மஞ்சள் பூக்களைக் காட்டிச் சொன்னார்,
“இந்தக் கடுகுப் பூக்களைப் பாருங்கள். பூக்கள் ஏன் பூக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?”


இப்புத்தகத்தை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று கணக்கே கிடையாது. டோட்டோசான் என்ற துடிப்பான சிறுமியின் பார்வையில் அன்பும் குழந்தைகளின் இயல்பைச் சற்றும் கெடுக்காத கல்விமுறை எவ்வளவு சிறந்தது என்பது புலனாகிறது.
டெட்சுகோ குரோயாநாகி ஜப்பான் தொலைக்காட்சியில் “டெட்சுகோ அரங்கம்” என்ற பிரபல நிகழ்ச்சி நடத்தி வந்தவர். இவரது சொந்த அனுபவமே இப்புத்தகம். நூலின் இறுதியில் தன்னுடன் படித்தவர்களையும் பேட்டி கண்டு டோமோயி பற்றிய அவர்களின் கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

ஆங்கிலத்தில் இதைப் படிக்க விரும்புவோருக்குச் சுட்டி இங்கே:http://gyanpedia.in/tft/Resources/books/Tottochan.pdf

தமிழில்:

டோட்டோ சான் - ஜன்னலில் சின்னஞ்சிறுமி

ஆசிரியர் : டெட்சுகோ குரோயாநாகி

தமிழாக்கம் : சு. வள்ளிநாயகம், சொ. பிரபாகரன்

வெளியிடு : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புதுவை அறிவியல் இயக்கத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ்
South Asian Books6/1, Thayar Sahib II LaneChennai - 600 002


Sunday, April 5, 2009

இதெல்லாம் அழகு!

(என்று என் கண்களுக்குப் படுகின்றன... உங்களுக்கு?)

காதல் வழியும் ஆணின் கண்கள்
திமிர் தெறிக்கும் பெண்ணின் கண்கள்

பெருமிதம் பொங்கும் தாயின் கண்கள்
பாசம் மின்னும் தந்தையின் கண்கள்

திருப்தியுறாத ஓவியனின் கண்கள்
கண்ணாடியை ரசிக்காத நடிகனின் கண்கள்

சற்றே பேதலித்த கவிஞனின் கண்கள்
சிந்தனை ஊறிய அறிஞனின் கண்கள்

உறக்கம் தழுவும் முதியோரின் கண்கள்
பசியாறிய உழைப்பாளியின் கண்கள்

சிறுமை கண்டு பொங்கும் கண்கள்
சிரித்து மகிழும் நட்பின் கண்கள்

கண்டிப்பும் பரிவும் சமமாய்க் கலந்த
அறிவார்ந்த ஆசானின் கண்கள்

குற்றம் உணர்ந்து வருந்தும் கண்கள்
கருணையை உணர்ந்த பிராணியின் கண்கள்

பார்க்கப் பார்க்கக் கிறங்கடிக்கும்
குறும்பு கொப்பளிக்கும் மழலையின் கண்கள்

இறுதியாக, நிச்சயமாக,

இப்பதிவைப் பொறுமையுடன் படித்த
அன்புக்குரிய உங்களின் கண்கள்

Saturday, April 4, 2009

பேஜ் த்ரீ - சினிமா


நம் நாட்டில் நிறைய நல்ல படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அவை நாடு முழுவதும் மக்களைச் சென்றடைவதில்லை. ஹாலிவுட் படங்கள் எல்லா மொழிகளிலும் வந்து மோதுகின்றன.
தெலுங்கில் எடுக்கப்பட்ட அருந்ததி என்ற பரம மசாலாப் படம் டப் செய்யப்பட்டு செம போடு போடுகிறது. நன்றாகவே ஒடிய ஆனால் நல்ல படங்கள், ஏன் டப் செய்யப்படுவதில்லை? (விருதுப் படம், கலைப் படம், ஜனரஞ்சகப் படம் என்று பிரிக்க எனக்குச் சம்மதமில்லை)

வெயில், இயற்கை, ஆட்டோகிராஃப் இவற்றை வடநாட்டில் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? அதே போல் பிற மொழிகளில் எடுக்கப்படும் நல்ல படங்கள் எத்தனை நம்மை வந்து சேர்கின்றன?நான் பார்த்து மிகவும் ரசித்து வியந்த ஒரு இந்திப் படத்தைப் பற்றிச் சொல்லலாமென்று நினைக்கிறேன். இந்தி என்றால் உடனே சிலர் முகம் சுளிப்பது தெரிகிறது. இதில் கான்களோ கபூர்களோ இல்லை. மதுர் பண்டார்கர் என்ற நம்பிக்கை தரும் இளம் இயக்குனர் எடுத்த் படம் இது. (கார்ப்பொரெட், ட்ராஃபிக் சிக்னல், ஃபாஷன் இவரது வேறு சில படங்கள்)


பேஜ் த்ரீ (2005)


பத்திரிகை உலகில் பெரிதாகச் சாதிக்கும் கனவுகளுடன் நுழையும் ஒரு இளம்பெண்ணின் பார்வையில் இந்தச் சமூகத்தின் அவலங்கள், மேல்தட்டு மக்களின் பார்ட்டி கலாசாரங்கள், போலி முகங்கள், ஊடகங்களை ஆட்டி வைக்கும் நிழல் மனிதர்கள் என்று பல்வேறு புதிய விஷயங்களை அநாயாசமாகத் தொட்டுச் செல்கிறது படம்.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த துடிப்பான புத்திசாலி இளம்பெண் மாதவி ஒரு பிரபல நாளிதழில் நிருபராகப் பணியாற்ற மும்பை வருகிறாள். விமானப் பணிப்பெண் ஒருத்தியுடன் (பேர்ல்) அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கி இருக்கும் அவளது சராசரி மும்பை வாழ்க்கைக் கலாசாரமே நம்மில் பலருக்கு அந்நியமாக இருக்கலாம், ஆனால் அப்படியும், நம் அடுத்த வீட்டுப்பெண் போன்ற பிம்பத்தைக் கொன்கொனா சென் ஷர்மா ஏற்படுத்தி மிகவும் நெருக்கமாகி விடுகிறார்.

அவருக்கு பிரபலங்கள், நகரின் முக்கிய புள்ளிகள் கலந்துகொள்ளும் பார்ட்டிகளைப் பற்றி எழுதும் ’பேஜ் த்ரீ’ வேலை தரப்படுகிறது. தன் வயதுக்கே உரிய ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் மாதவி தினமும் பார்ட்டிகளுக்குச் செல்கிறாள். எழுதுகிறாள். நிறைய பெரும் புள்ளிகளுடன் இயல்பாகப் பழகி நட்பும் ஏற்படுத்திக் கொள்கிறாள்.
அவளது தோழி ஒருத்தி (காயத்ரி) ஊரிலிருந்து நடிகையாகும் கனவுடன் வருகிறாள். அவளைத் தனக்குத் தெரிந்த நடிகரிடம் அறிமுகப் படுத்தி வைக்கிறாள் மாதவி. அவனோ அவளைத் தவறான முறையில் பயன்படுத்திப் பின்பு கைவிட்டு விடுகிறான். மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற அவளை மாதவியும் அவளது இன்னொரு அறைத் தோழியும் காப்பாற்றுகிறார்கள். கோபமடைந்த மாதவி அந்நடிகனின் செயலை அம்பலப்படுத்திக் கட்டுரை எழுதி வெளியிடுகிறாள் (ஆசிரியரின் அனுமதி இல்லாமலேயே). அது பிரச்னையாகிப் பின்பு அவனிடமே மன்னிப்பு கேட்க வைக்கப் படுகிறாள்.
சமூக சேவகி ஒருத்தி (இவளும் பெரிய புள்ளி ஒருவரி மனைவி) இறந்து போக, அதைப் பற்றி எழுதச் செல்லும் போது பெரிய புள்ளிகள் கேமராவுக்கு முன் மட்டும் அழுவதும் மற்றபடி இழவு வீட்டில் கூட பிசினஸ் பேசிக் கொள்வதையும் பார்த்து வெறுப்புற்று பேஜ் த்ரீ எழுத தான் விரும்பவில்லை என்று தெரிவிக்கிறாள். இவளது முடிவை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் குற்றப் பகுதி நிருபர் விநாயக் மானேவிடம் உதவியாளராக அனுப்புகிறார். வேண்டா வெறுப்புடன் இவளைச் சேர்த்துக் கொள்ளும் விநாயக் இவளின் ஆர்வத்தைக் கண்டு கொண்டு பின்பு தனது வேலையைக் கற்றுக் கொடுக்கிறான். எது நிஜமான ஜர்னலிசம், மக்களுக்கு உண்மையில் போய்ச்சேர வேண்டிய செய்திகளைச் சேகரிப்பது எப்படி என்று புரிய வைக்கிறான். தனக்குத் தகவல் தரும் உளவாளிகள், நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று எல்லாரிடமும் மாதவியை மதிப்புடன் அறிமுகம் செய்து வைக்கிறான். மாதவிக்கு தனது இலக்கு என்ன வென்று கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது.
ஒரு நாள் விநாயக்குடன் சேரி வாழ் மக்களைப் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் பொது அந்தப் பகுதியில் குண்டு வெடிக்கிறது. பதறியடித்துக் கொண்டு விநாயக்கும் மாதவியும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். அப்போது பத்திரிகை ஆசிரியரிடமிருந்து அவசரமாக அழைப்பு வருகிறது. பார்ட்டி ஒன்றுக்குச் சென்று வரும்படி. இவளுக்குப் பதிலாகத் தற்போது பேஜ் த்ரீ எழுதும் பெண் விடுப்பு எடுத்ததால்.
வேறு வழியின்றி அதிர்ச்சி விலகாமலே அந்தப் பார்ட்டிக்குச் செல்லும் மாதவி அங்கு நடக்கும் கூத்துக்களைச் சலனமின்றிப் பார்க்கிறாள். நடந்த குண்டு வெடிப்பைப் பற்றி அங்கு சாதாரணமான அரட்டைப் பேச்சுக்கள் நிலவுகின்றன. அப்போது தான் அங்கே அவரைப் பார்க்கிறாள். அவர் மாநகரக் காவல் துணை ஆளுநர். கையில் மதுக் கிண்ணத்துடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் அவர் ஒரு விளம்பரப் பிரியர் என்று ஏற்கனவே அறிந்தது தான். ஆனால் இன்று அவளால் சகிக்க முடியவில்லை. அவரிடம் சென்று அவரது பொறுப்பின்மையைக் குறிப்பிட்டு வெளுத்து வாங்குகிறாள். அதிர்ச்சிய்டைந்து அவளையே வெறித்துப் பார்க்கும் கூட்டத்தை அலட்சியப் படுத்தி வெளியேறுகிறாள்.
விறுவிறுப்பாகச் செல்லும் இந்தப் படத்தில் ரசிக்கவும் அட போடவும் வைக்கும் காட்சிகள் நிறைய்ய்ய. சான்றுக்கு:
யாராவது பணக்காரனைத் (வயதானவனாக இருந்தாலும் சரி) திருமணம் செய்து கொள்வதே லட்சியமாக இருக்கும், சிகரெட் பிடிக்கும், படு அலட்சிய பாவம் கொண்ட நவ நாகரிகப் பெண்ணாகக் காட்டப்படும் பேர்ல், காயத்ரி கருவும் கலைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் போது சமூகத்தின் மொத்தப் பெண் குலத்துக்காகவும் வருந்துவது போல் கதறியழும் காட்சி...
பார்ட்டி நடக்கையில் வெளியே கார் ஓட்டுநர்கள் தங்கள் முதலாளிகளின் வண்டவாளங்களைக் கிழிக்கும் வாயிலாக மேல்தட்டுக் கலாசாரத்தை இயக்குநர் செய்யும் நையாண்டி...
தனிப்பட்ட முறையில் நல்லவராகவும் இனிமையானவராகவும் ஆனால் படு யதார்த்தமான பத்திரிகையாளராகவும் உலவும் அந்த ஆசிரியர்...(பொம்மன் இரானி) அலட்டாமல் தூள் கிளப்பி இருக்கிறார்.
விநாயக்காக வரும் அதுல் குல்கர்னியைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. (ரன் படத்தில் வில்லன்) பாத்திரத்துடன் அப்படியே பொருந்திப் போகிறார்.
அப்புறம் அந்தப் போலிஸ் இன்ஸ்பெக்டராக வருபவர் ..சான்ஸே இல்லை. மற்ற படங்களில் சத்தியமாக அப்படி ஒரு முகத்தைக் கடைந்தெடுத்த பொறுக்கியாகவோ ரவுடியாகவோ தான் பார்க்கலாம். பொறுப்புள்ள போலிஸ் இன்ஸ்பெக்டர் அழகாக, பளபளக்கும் உடையில் கறுத்த மீசையுடன் லிப்ஸ்டிக் அணிந்து காட்சி அளிக்கத் தேவையில்லை என்று காட்டி இருப்பதற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.
அவரது வசனங்களில் ஒன்று:
போதைமருந்து வாங்கிய பணக்கார இளைஞன்: “ஏய்! எங்க அப்பா யாருன்னு தெரியுமா உனக்கு?”
இன்ஸ்பெக்டர்: “ஏன் உனக்கு யாருன்னு தெரியாதா? எனக்கு உங்க அப்பாவை மட்டும் இல்ல, உங்க அம்மாவையும் தெரியும். அவ இப்ப யார் கூட இருக்கான்னும், நீ ஏன் இப்படி போதை மருந்து தேடி அலையறேன்னும் தெரியும்.”(இளைஞன் கண் கலங்கித் தலை குனிகிறான்”
இன்ஸ்பெக்டர்: ”Cool dude.. it happens.. வண்டியில ஏறுப்பா!”
மாதவி சந்திக்கும் வேறு சில பிரச்னைகளும் அவசரப்பட்டு எடுத்த ஒரு முடிவு அவள் வேலைக்கே உலை வைப்பதும், அதிகம் பேசாத விநாயக் மானே அவளைச் சந்தித்து ஆறுதல் கூறி “You have to be IN the system if you want to CHANGE the system" என்று அறிவுறுத்துவதும் படத்துக்கு மேலும் வலுவூட்டும் காட்சிகள்.
ஆகக் கூடி ரொம்ப வித்தியாசமான இந்தப் படத்தை நான் மிகவும் ரசித்தேன். நீங்களும் முடிந்தால் பாருங்கள். ஆங்கில சப் டைட்டில்களுடன் சி.டி. அல்லது டி.வி.டி கிடைக்கலாம்.
பிடித்தால் சந்தோஷம். பிடிக்கவில்லை என்றால் என்னைத் திட்டாதீர்கள். :-)ஏனென்றால் எனக்கே பிடிக்காத அல்லது தேவையில்லாத ஒரு சில சிறு அம்ச்ங்கள் இருக்கத் தான் செய்கின்றன. அவற்றைப் பற்றி எதற்குப் பேசுவது என்று விட்டு விட்டேன்.
(பி.கு: இப்படம் தேசிய அளவில் சிறந்த படத்துக்காகத் தங்கத் தாமரை விருதும், திரைக்கதை மற்றும் படத்தொகுப்புக்காக வெள்ளித் தாமரை விருதும் பெற்றுள்ளது.)

Friday, April 3, 2009

13 வாரங்களும் சில பல வருடங்களும்

இது பழைய விஷயம் தான். நாம் எல்லோரும் எப்போதும் பேசிக் கிண்டலடிக்கும் விஷயம் தான். ஆனால் அப்படியும் இதற்கு இருக்கும் மவுசு குறைந்தபாடில்லையே. கூடிக் கொண்டே அல்லவா போகிறது. அனைத்து மொழிகளிலும் தயாரித்துக் குவித்த வண்ணம் இருக்கிறார்களே?
மெகா சீரியல்களைத் தான் சொல்கிறேன். முன்பெல்லாம் பெண்கள் மட்டுமே பார்த்து வந்ததாகக் கருதப்பட்டதால் மாமியார் மருமகள் பிரச்னை, கணவன் மனைவி ஊடல்கள், நாத்தனார், மைத்துனி வில்லிகள் என்று ஒரு புளித்துப் போன ட்ராக்கில் ஒரு மாதிரி ஓடிக் கொண்டிருந்தது.
இப்படி ஒரு ஐந்நூறு சீரியல்கள் எடுத்துச் சாதனை புரிந்த பின்பு இந்த சீரியல் தயாரி(தாளி)ப்பாளர்கள் கண்டு பிடித்தது என்ன தெரியுமா?
இப்போது ஆண்களும் வீட்டுப் பெண்களுடன் சேர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டனர் என்பது தான். ஆகவே ஆண் நேயர்களின் மனம் கவரும் வண்ணம் எல்லா சீரியல்களிலும் வன்முறை, கொலை, அடிதரி போன்ற மசாலா ஐட்டங்களையும் சேர்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இவ்வளவு சொல்கிறாயே ஏன் பார்க்கிறாய் எங்கிறீர்களா?நான் பார்த்த ஒரே சீரியல் ”சித்தி” அது கூட முழுவதும் பார்க்கப் பிடிக்கவில்லை. ஆனால் யார் வீட்டுக்குப் போனாலும் எந்நேரமும் ஓடுவது இந்த அழகுச் சித்திரங்கள் தானே.
வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் வீட்டில் குழந்தைகளுடன் பேசி மகிழ்வது என்று இல்லாமல் இந்தக் கொடுமைகளைப் பார்த்துத் தொலைத்து விட்டு இரவில் தூக்கம் வராமல் அவதிப் படுகிறார்கள்.
முன்னொரு காலம் இருந்தது. தூர்தர்ஷனில் 13 வாரங்களுக்கு மட்டுமே ஒளிபரப்பாகும் நல்ல தொடர்கள் வந்தன. (ரயில் ஸ்னேகம், இவளா என் மனைவி, மண்வாசனை) இந்தியில் கூட ஏராள்மான நல்ல தொடர்கள் வந்தன.

நமது நகைப்புக்கும் கேலிக்குமே ஆளான, செவ்வாய் தோறும் ஒளிபரப்பபட்ட தூர்தர்ஷன் தயாரிப்பான நாடகங்கள் கூட ரசிக்கும்படியாக இருந்தன. சிறந்த சிறுகதைகளும், நாவல்களும் தொடர்களாக்கப்பட்டன. நாம் யாராவது அவை வேண்டாம். தினந்தோறும் கழுத்தை அறுக்கும் இந்த ரம்பங்கள் வேண்டும் என்று கேட்டோமா?
சினிமாவில் இடமில்லாத இலக்கியங்களுக்குத் தொலைக் காட்சியில் நிறைய இடமிருந்தது. னல்ல படைப்பாளிகள் வந்து கொண்டிருந்த நேரமது.என்னவாயிற்று திடீரென்று? எங்கிருந்து வந்தது இந்த மெகா சீரியல் மோகம்? சாட்டிலைட் டி.வி. வந்தது முதல் ஸ்டார் டிவி போன்ற ஆங்கில சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட “போல்ட் அண்ட் பியுட்டிஃபுல்”, “சண்டா பார்பரா” போன்ற பல வருடங்களுக்கும் மேலாக ஓடிய அந்தத் தொடர்கள் தான் நம் தயாரிப்பாளர்களுக்கு பேராசை வரக் காரணமாக இருந்த முன்னோடிகள். சில வாரங்களுக்காக மட்டுமே கதை தேடி தயாரித்துச் சொற்ப காசுபார்த்து வேறொரு தயாரிப்பாளருக்கு ”ஸ்லாட்டை” விட்டுக் கொடுக்க வேண்டும்?மொத்தமாக ‘ஸ்லாட்’ புக் பண்ணி வைத்துக் கொண்டு கதை பண்ணிக் கொண்டே போகலாமே?
அந்த மேல்னாட்டு சீரியல்களை நான் பார்த்ததில்லை அதனால் அவை பற்றிய விமர்சனம் கூற நான் ஆளில்லை. ஆனால் அவை நமக்கு விளைவித்த கேடுகள் நமது மெகா சீரியல்கள்.
பல வருடங்களுக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல்களை ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? இங்கே எழுதக் கூசும் ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது.
ஏன் இந்த ஊடகங்கள் இப்படிக் குப்பைகளைத் திணிக்கிறார்கள்? இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். நிச்சயமாக. டி.ஆர்.பி ரேட்டிங் சட சட வென சரிய வேண்டும் அனைத்து மெகா சீரியல்களுக்கும். ஆனால் வீட்டில் வயதான்வர்களும் ஓய்வு பெற்றவர்களும் தான் இவற்றுக்கு முதல் ரசிகர்கள். ஆனால் அவர்களோடு சேர்ந்து மொத்தக் குடும்பமே அல்லவா பார்க்க வேண்டி இருக்கிறது?அவர்கள் கண்களை எப்படி இதன் முன்னிருந்து அகற்றுவது?யோசிப்போம்.
ஏன் இவர்கள் சீரியல்களை நாடுகிறார்கள். தனிமை. ஒதுக்கப்பட்ட உணர்வு. பேச ஆளில்லாமை. அதற்கு என்ன மருந்தோ அதைக் கொடுக்க முயல்வோம்.பல வீடுகளில் குழந்தைகள் ஒரு தீவாகவும் அவர்கள் தாத்தா பாட்டி இன்னொரு தீவாகவும் இருக்கிறார்கள். அவர்களை நாம் தான் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். ஆனால் அதைப் பற்றிப் பேச வேண்டுமானால் ஒரு தனி பதிவே போட வேண்டும். இல்லையா?

Wednesday, April 1, 2009

நானும் ஒரு பட்டாம்பூச்சி!


ஆமாம். எனக்கும் பட்டாம்பூச்சி தந்து சிறகடிக்க வைத்து விட்டார் அகநாழிகை. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான் மிகவும் ரசிக்கும் பதிவராகிய அவர் மூலமாக இவ்விருதினைப் பெறுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் ஆங்கிலத்தில் வலை பதியத் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றன. அது ஒரு மாதிரி தன்னந்தனியாக என் சிந்தனைகளுக்கு வடிகாலாகவும் எப்போதாவது யாராவது இரண்டொரு பின்னூட்டங்கள் இடும் பாலையாகவே இருந்தது.


தன்னை வலையுலகத்துக்கு நான் அழைத்து வந்ததாக திரு. மாதவராஜ் குறிப்பிட்டுள்ளார். நான் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று மட்டுமே சொன்னேன். ஆர்வத்துடன் அதில் ஈடுபட்டு, தமிழ் யூனிகோட் பதிவு, திரட்டிகள், டெம்ப்ளேட், இன்ன பிற widgets, என்று அனைத்தையும் எனக்கு அன்புடன் அறிமுகப் படுத்தித் தமிழ் வலையுலகச் சோலையில் என்னை உலவ விட்ட அவருக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.


சரி, இப்போது நான் இவ்விருதினைத் தர விரும்புவது:
யாத்ரா


http://yathrigan-yathra.blogspot.com/2009/03/blog-post_24.html
மானுட புரிதலை நோக்கி இவரது பயணம் தெளிந்த நீரோடை போன்ற கவிதைகள் வழியாகச் சென்று கொண்டிருக்கிறது.
இணைய இதழ் உயிரோசையில் இவரது பல கவிதைகள் வெளி வந்துள்ளன.மிகவும் நுட்பமான உணர்வுகளைப் ரத்தினச் சுருக்கமாகச் சொற்களில் வடிப்பது ஒரு தனிக்கலை. அது யாத்ராவுக்கு அழகாகக் கை வந்திருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்த இரண்டு (சாம்பிளுக்கு இங்கே)
இரக்கப்படாதீர்கள்

தனிமையிலேயே விட்டுவிடுங்கள்என் பேரன்பும் மரக்கிளையினின்று சுழன்றபடி உதிரும் பழுப்பு இலை போன்ற என் பிரிவும் கொன்றுவிடக்கூடும் உங்களை.


இது இன்னொரு இவள்
அழும் குழந்தையைதூக்கி கொஞ்சி ஓயப்படுத்தியபடி அது தான் நான் வந்துவிட்டேன்அல்லவா அழக்கூடாது எனவாசலுக்கு வருகிறாள், நின்றது மழை.

இவரது கவிதை மலர்களில் பட்டாம்பூச்சி ஆசையோடு அமர்ந்து தேனருந்தட்டும்.

கிருஷ்ணபிரபு

http://online-tamil-books.blogspot.com/

வலையுலகம் தந்த மிகச் சிறந்த வரம் நம் எல்லோருக்கும் எழுதும் ஆர்வமும் வாசிக்கும் ஆர்வமும் வந்தது தான். எழுதுவதற்கு இப்போதைக்கு இந்தக் களம் போதுமானதாக இருந்தாலும் வாசிப்பு மட்டும் இணையத்தோடே நின்றுவிடக் கூடாது. அதற்கு எல்லையே இல்லை.
வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தை விரிவு படுத்தும் விதமாக தன் ரசித்த பல தரப்பட நல்ல நூல்களை அறிமுகம் செய்து வைக்கிறார் கிருஷ்ணப்பிரபு. தலை சிறந்த அமெரிக்க எழுத்தாளரான சார்ல்ஸ் டிக்கன்ஸின் ஆலிவர் ட்விஸ்ட் முதல் இனப்பிரச்னை குறித்து பா. இராகவன் எழுதிய நிலமெல்லாம் இரத்தம் வரை பரந்து பட்ட பல நூல்களின் அறிமுகம் இவரது பக்கங்களில்.
”தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு”
என்ற குறளுக்கு ஏற்ப ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் சிறந்த எழுத்துக்களை வெளிக் கொணரும் என்பதில் ஐயமில்லை. வாசிக்கும் வழக்கம் இல்லாமலே சிறப்பாக எழுத வந்து விட்டவர்கள் கூட இப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நல்லது.


கோமதி

http://nilaraja.blogspot.com/
தாய்மை என்பது எவ்வளவு அற்புதமானது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஏனோ அவளைப் பற்றி அழ்காகக் கொஞ்சலாகப் பதிவெழுதுவது எனக்குக் கைகூடுவதில்லை. ஆனால் பிற அம்மாக்கள் எழுதும் தங்கள் மழலைகளின் குறும்புகளை விரும்பிப் படிப்பேன். அமித்து அம்மா, சந்தன முல்லை ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
நிலாக்காலம் அத்தகைய ஒரு ரம்மியமான பக்கம். கோமதி தன் மகள் நிலாக் குட்டியின் ஒவ்வொரு அசைவையும் அழகாகப் பதிகிறார்கள். சுகானுபாவம். தாய்மையின் விகசிப்பையும் பூரிப்பையும் அவர்களின் எழுத்துக்களில் பார்க்கும் போது ஆண்கள் பொறாமைப் படுவார்கள்! தங்களால் தாய் ஆக முடியாதே என்று!
அவருடைய குட்டி நிலா விளையாடுவதற்காக ஒரு பட்டாம்பூச்சி!


வாழ்த்துக்கள் யாத்ரா, கிருஷ்ணபிரபு, கோமதி


அப்புறம், விகடன் குழுமத்துக்கு மிக்க நன்றி. என் பதிவை “குட் ப்ளாக்” ஆக அறிவித்ததற்கு. (நேற்று home page - ல் இருந்தது. இன்று தூக்கிப் பரணில் வைத்து விட்டார்கள்.)

http://youthful.vikatan.com/youth/bcorner.asp