Wednesday, December 30, 2009

உதிரிப்பூக்கள் - 31/12/09

ஊருக்குப் போய் விட்டு வ‌ந்தோம். ஆஹா, ஏழு நாட்க‌ள் சென்னையை முற்றிலும் ம‌ற‌ந்து வேறொரு உல‌க‌த்தில் இருந்து விட்டு வ‌ந்த‌து போலிருந்த‌து.

ஒன்றும் பெரிதாக‌ இல்லை. குடும்ப‌த்தில் ஒவ்வொரு வேளையும் அனைவ‌ரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்ட‌து, அர‌ட்டை அடித்த‌து, குழ‌ந்தைக‌ளின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் குடும்பமே க‌வ‌னித்து ம‌கிழ்ந்த‌து, வாச‌ல் தெளித்துக் கலர் கோல‌ம் போட்ட‌து, அத்தை அதிர‌ச‌ம் சுட உத‌வியாக‌ மாவு த‌ட்டிக் கொடுத்த‌து, அவ்வளவு ஏன், மொட்டைமாடியில் காய்ந்த‌ துணிக‌ளை அவ‌ச‌ர‌மில்லாம‌ல், காற்று வாங்கிக் கொண்டே ம‌டித்த‌து கூட‌ பேரின்ப‌மாக‌ இருந்த‌து.

நேஹாவை அவளது தாத்தா, பாட்டி, அத்தை, மாமா , சித்தி, சித்தப்பா, அத்தாச்சி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, அக்கா, அண்ணா, என்று உறவுகளின் அன்பில் நனைய விட்டதும், அவ‌ள் எல்லாரையும் முறை சொல்லி அழைக்கப் பழகிவிட்டதும் சொல்லிலட‌ங்கா சந்தோஷங்கள்! தரையிலிறங்கியாயிற்று இன்று! ஹூம்!

புத்தகக் கண்காட்சி
ஆவ‌லுட‌ன் எதிர்ப்பார்க்கிறேன் . முத‌ல் முறை நான் சென்ற‌து அக்காவுட‌ன் தான். அக்கா ப‌டித்த‌ க‌ல்லூரியில் தான் அப்போது கண்காட்சி ந‌ட‌க்கும். எட்டு வ‌ய‌தான் என்னை அழைத்துச் சென்று ப‌ழ‌னிய‌ப்பா பிர‌தர்ஸ் ஸ்டாலில் கதைப்புத்த‌க‌ங்க‌ள் வாங்கிக் கொடுத்து (”எல்லாத்தையும் வீட்டுக்குப் போன‌வுட‌னே ப‌டிச்சுத் தீர்த்துடாதே. ஒவ்வொண்னா மெதுவா ப‌டி!”) கேன்டீனில் ஐஸ்க்ரீமும் ம‌சாலா தோசையும் வாங்கிக் கொடுத்த‌து நினைவுக்கு வ‌ருகிற‌து.
ப‌ள்ளியிலிருந்து ஒரு முறை சென்றிருந்தோம்; க‌ண்காட்சி திற‌ப்பு விழாவில் சேர்ந்திசை பாடுவதற்காக. "உண்மை அழ‌கு" என்ற பாட‌ல். பின்ன‌ணி இசையோடு பாட‌ல் முழுதும் நினைவிருக்கிற‌து. அப்போது செயின்ட் எப்பாஸ் ப‌ள்ளியில் நட‌ந்த‌து. பிற‌கு ப‌ல‌ ஆண்டுக‌ள் செல்ல‌ இய‌ல‌வில்லை. 2003க்குப் பின் தொடர்ந்து சென்றேன். க‌ட‌ந்த‌ இரு ஆண்டுக‌ளாக‌ மீண்டும் இடைவெளி.

இந்த ஆண்டு ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரின் ப‌டைப்புக்க‌ள் வெளிவ‌ருவ‌தில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். படைப்பாளிகளாகப் பரிணமித்திருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்க‌ள்!
ஒவ்வொருமுறையும் கை நிறைய‌ புத்த‌க‌ங்க‌ளோடு தான் திரும்ப‌ வேண்டுமென்று நினைப்பேன். ஆனால் தேன் குடத்தினுள் விழுந்து மயங்கிய‌ வண்டு கணக்காய், கடல் போல் குவிந்த புத்தகங்களைப் பார்த்துப் பிரமித்து விட்டு வீட்டுக்கு வ‌ந்த‌தும், இவ்வ‌ள‌வு தானா வாங்கினோம் என்று ஏக்க‌ம‌டைவேன். இம்முறை அதை மாற்ற‌ வேண்டும்!

கார்க்கியின் தாய்
இந்த‌ நாவலை ebookகாக‌ ப் ப‌டித்து முடித்து வெகு நாட்க‌ளாகின்ற‌ன‌. ப‌கிர‌த்தான் ‌சமய‌ம் கிடைக்க‌வில்லை. படித்து முடித்த கையோடு ஆங்கிலத்தில் ஒரு பதிவு எழுதினேன். அந்த இளைஞர்களைப் பற்றிப் படிக்கையில் பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அவர்கள் எத்தகைய உலகத்துக்காகப் போராடினார்களோ அது இன்னமும் நிறைவேறவில்லை. ஆனாலும் போராடுவ‌தற்கும் புரட்சிக்குமான‌ இட‌ம் சிறிதும் இல்லாமல் இன்றைய ச‌முதாய‌ம் மழுங்கடிக்கப் ப‌ட்டுள்ள‌தோ என்று ம‌ன‌ம் வெதும்புகிற‌து.
ராதிகா (தாய்), பா.விஜ‌ய் (பாவ ‌ல்) ந‌டிக்க‌ க‌லைஞ‌ர் எழுதிய‌ தாய் காவிய‌ம் திரைப்ப‌ட‌மாக‌ வெளிவ‌ர‌ப்போவ‌தாக‌ இணைய‌ செய்திக‌ள் அறிவிக்கின்ற‌ன‌. பார்ப்போம்!

இன்னொரு புதிய ஆண்டு
Roller coaster ride என்பார்க‌ளே அதைப் போல் தான் இருநத‌து க‌ட‌ந்த‌ ஆண்டு! ப‌ல‌வித‌மான‌ புது அனுப‌வ‌ங்க‌ள். முக்கியமாக என் மகள் நேஹா நடக்கத் தொடங்கியதும் பேசத்துவங்கியதும் இந்த ஆண்டில் தான்! அது போதாதா இவ்வாண்டின் முழு நிறைவுக்கு? :)
நானும் ப‌திவெழுத‌ வ‌ந்து ஓராண்டு நிறைவுறுகிற‌து. இன்னும் எதையும் ஒழுங்காக‌ எழுத வில்லையென்றாலும், த‌மிழ் வாசிப்பை மீண்டும் உயிர்ப்பித்ததற்கும், அற்புத‌மான நட்புகள் கிடைத்ததற்கும் ப‌திவுல‌க‌ம் தான் கார‌ண‌ம். ந‌ன்றி ப்லாக்க‌ர்.காம்!

அனைவ‌ருக்கும் ம‌ன‌ம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!

Sunday, November 29, 2009

வற்றாத கிணறும் அதே போன்ற மனிதர்களும்!


கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் குளிப்பது போல் ஒரு காட்சி டி.வியில் வந்தது. இது போல் குளித்த அனுபவம் இருக்கிறதா என்று நானும் ஜோவும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டோம்.
சென்னையில் கோடை வந்தாலே ப்ளாஸ்டிக் குடமும் கையுமாய் அலைந்த காலங்களின் சூடு கூட முன்னொரு காலத்தின் பசுமையான நினைவுகளை உறிஞ்சிவிடவில்லை.

சிறுவயதில் கோடை விடுமுறையில் நாளெல்லாம் புழுதியிலும் மண்ணிலும் ஆசை தீர விளையாடிய பின் அந்தி சாயும் நெரத்தில் வாளி வாளியாய்க் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் குளித்த அனுபவங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தோம்.
ஹூம்.. பேசி முடித்து நேஹாவைப் பார்த்த போது தான் உறைத்தது. கிணறு என்பது அவளுக்கெல்லாம் காணக் கிடைக்காத ஒரு அரிய பொருளாகி விடுமல்லவா?


கிணறு என்றவுடன் எங்கள் பக்கத்து வீடு தான் நினைவுக்கு வரும். என் விளையாட்டுத் தோழியின் வீடு அது. சிறுவயதில் விடுமுறை நாட்களில் சாப்பிடவும் தூங்கவும் தவிர எந்நேரமும் அவர்கள் வீட்டிலேயே தான் இருப்பேன். அவர்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தனர். என் தோழியின் சித்தி பிள்ளைகள் தவிர அத்தை பிள்ளைகளும் விடுமுறை என்றால் வந்து விடுவார்கள். ஒரே விளையாட்டுத் தான். அப்புறம் எனக்கு மட்டும் வீட்டில் கால் தங்குமா என்ன?


அவர்கள் வீட்டில் வெகு காலத்துக்கு (2000 ஆண்டு வரை என்று நினைக்கிறேன்.) மோட்டாரும் குழாய் வசதிகளும் கிடையாது. ஒரே ஒரு கிணறு தான் உண்டு. வாளியால் இறைத்துத் தான் குளிப்பது, துணிதுவைப்பது, பாத்திரம் துலக்குவது, எல்லாமே. கார்ப்பரேஷன் தண்ணீருக்கு மட்டும் பின்னர் ஒரு அடிபம்ப் பொருத்தினார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், தெருவில் ஏனைய வீடுகளில் எல்லாம் மோட்டர் போட்டு அவரவர் கிணறுகளை வற்ற வைத்து விட்டோம். பற்றாக்குறைக்கு போர் போட்டு அதுவும் தண்டமாகத் தான் இருந்தது. ஆனால் இவர்கள் வீட்டுக் கிணறு மட்டும் இறைக்க இறைக்க ஊறும் அமுதசுரபியாக இருந்தது. யார் வந்து கேட்டாலும் தட்டாமல் தண்ணீர் தந்து உதவும் மனமும் அவர்களுக்கு இருந்தது.

கடும்உழைப்பு, எளிமை, ஒற்றுமை, அளவற்ற அன்பு என்று பல அரிய குணங்களின் எடுத்துக்காட்டு மட்டுமல்ல கருவூலமாகத் திகழ்பவர்கள் அந்த வீட்டு அங்கிளும் ஆண்டியும். பெரம்பூரில் ஐசிஎஃப் இல் வேலை பார்த்த அங்கிள் தினமும் ஆறு மணிக்கு வேலைக்குக் கிளம்புவார். அவரை அந்நேரத்துக்கு வேலைக்கு அனுப்பும் வகையில் ஆண்ட்டி எழுந்திருப்பது நான்கு மணிக்கு!

ஓய்வு நேரத்திலும் சும்மா இல்லாமல் கடை கண்ணிக்குப் போய் வருவது, வீட்டைச் சுற்றித் தோட்டம் போட்டு அதைக் கொத்திக் கொண்டிருப்பது, வீட்டில் பழுதடைந்த சாமான்களைத் தானே சரி செய்வது என்று சுறுசுறுப்பாகவே இருப்பார் அந்த அங்கிள். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது.

இன்னொரு விஷயம், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை சைக்கிள் தான் அவரது வாகனம். அப்புறம் தான் ஒரு டி.வி.எஸ் 50 வாங்கினார்.
பிள்ளைகள் எல்லாரும் சைக்கிள்களை மறந்து ஸ்கூட்டி, கார் என்று மாறி விட்டனர். ஆனாலும் இவர் பக்கத்தில் கடைத்தெருவுக்குப் போக வர, அவர்கள் கை விட்ட லேடி பேர்ட் சைக்கிளைத் தான் எடுத்துச் செல்வார். அந்த எளிமை அவரது தனித்துவம். அவரைப் பார்க்கும் போதெல்லாம் அந்த எளிமையைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பேன்.

ஆண்டியும் அன்பு செலுத்துவதில் அலாதியானவர். நான் கல்லூரியில் படித்த் போது செமஸ்டர் லீவுக்கு வந்திருந்தேன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பத்து நாட்கள் முன்னதாகவே புறப்பட்டுச் செல்ல வேண்டி வந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஒரு பலகாரத்தை, முன்கூட்டியே எனக்காகச் செய்து கட்டிக் கொடுத்தார்கள் அனுவும் ஆண்டியும். என்னால் மறக்கவே முடியாத செயல் அது.

என் திருமணத்துக்குப் பின்பு அதே தெருவில் வேறு வீட்டில் ஜோவும் நானும் இருக்கிறோம். ஒரு வாரத்துக்கு முன் இரவு பத்து மணிக்கு ஆண்ட்டி வீட்டுக்கு வந்தார். ”காஸ் சிலிண்டர் இருக்காம்மா? தீர்ந்து விட்டது. புக் பண்ணி இரண்டு வாரம் ஆகிறது என்றார்”

அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அப்போது தான் வந்திருந்தது. பழைய சிலிண்டர் தீரவும் எங்களுக்கு இன்னும் நாள் இருந்தது. ஜோவும் அங்கிளும் எடுத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் வைத்து விட்டனர்.

சரியாக நான்கு நாட்களில் ஆண்ட்டியும் அங்கிளும் புது சிலிண்டரொன்றைத் தூக்கிக் கொண்டு வீட்டுக் கதவைத் தட்டினார்கள். பதறிப் போய் அவர்களைக் கடிந்து கொண்டேன். வேண்டிய போது நாங்களே வந்து எடுத்து வந்திருப்போம், இப்போது என்ன அவசரம் என்று.
”சின்னக் குழந்தையை வைத்திருக்கிறாய். திடீரென்று தீர்ந்து போனால் என்ன செய்வாய்” என்றார்கள். மேலும் சமயத்துக்குத் தந்ததாகச் சொல்லி நன்றி சொன்னவர்களை இடைமறித்து ஊருக்கெல்லாம் ஓடோடி உதவும் அவர்களுக்கு அந்தச் சின்ன உதவி செய்ய முடிந்தது எங்களுக்குத் தான் மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது என்றேன்.

இன்னும் எவ்வளவோ எழுதலாம், இது போல் தூய்மையான அன்பினால் நம் மனதில் உயர்ந்தவர்களைப் பற்றி. கையில் தான் வலிமை வேண்டும்!

Tuesday, November 24, 2009

வலி!




”எனக்குக் கண்வலி… என் கண்களைப் பார்க்காதே”
”பார்ப்பேன்! உன் வலி எனக்கும் வரட்டும்.”
சிவந்து வீங்கிய கண்ணில் அப்போது
நீரை விட அதிகமாய்க் காதல் வழிந்ததால்...
பார்க்க முடியவில்லை!

Sunday, November 22, 2009

A slice of life...

அலுவலகத்தில் அநியாயத்துக்கு வேலை. தினமும் கிட்டத்தட்ட பத்து மணி நேரத்துக்கு வேலை பார்க்க வேண்டி இருக்கிறது.

வேலை சுவாரசியமாக இருந்தாலும் சின்ன இடைவெளி கூட இல்லாமல் என்ன இது என்று ஒரு சலிப்பு வருகிறது. வீட்டுக்கு வரும் போது மணி எட்டரை ஆகி விடுகிறது. நல்லவேளை நேஹா இன்னும் ராக்கோழியாக இருப்பது ஒரு வகையில் நிம்மதி தான்! பன்னிரண்டரை வரை அவளோடு விளையாடிய பிறகு ஒரு மணி வாக்கில் தான் தூங்குகிறாள்.

சரி சனி ஞாயிறாவது குழந்தையுடன் முழுநேரமும் இருக்கலாமென்றால் கடந்த இரு வாரங்களாக சனிக்கிழமையும் வேலை வைத்து அழைத்து விட்டார்கள். மற்ற நாட்கள் வேலைக்குப் போகும் போது அழாத நேஹா சனிக்கிழமை அன்று எப்படியோ வித்தியாசத்தை உணர்ந்து முகம் சுணங்கினாள். அது தான் தாங்கவே முடியவில்லை.


நேஹா!

பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு அரிய பொக்கிஷமாகவே தான் குழந்தையை ஓராண்டு வரை கருதி வந்தேன். இப்போது தான் அவள் ஒரு ”தனி கேரக்டராக” தனது குறும்புகளாலும், மழலைப் பேச்சுகளாலும் உருவெடுப்பதை நன்றாக உணர்கிறேன்!

விளம்பரங்கள் வந்தால் கண்கொட்டாமல் பார்ப்பதை நிறுத்தி விட்டாள். அதற்குப் பதிலாக விளம்பரத்தின் முதல் ஃப்ரேமிலேயே அடுத்து வரப்போவதைச் சொல்லிவிட்டு நகர்கிறாள்.

ஆனால் பாடல்கள் இன்னும் விரும்பிப் பார்க்கிறாள். அவளுக்குப் பிடித்த பாடல்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

மேல் வீட்டுப் பையன் (மூன்று வயது) வந்திருந்தான். பிஸ்கட் தின்று கொண்டிருந்த் நேஹா டப்பாவை அவளே திறந்து நான்கு பிஸ்கட்டுகளை அவன் கையில் கொடுத்தாள். அவன் அம்மா பதறி “அவனுக்கு வயிற்றுப் போக்கு, வேண்டாம் என்று அவனிடமிருந்து வாங்கி என் கையில் கொடுத்து விட்டார்கள்.
அழுகையென்றால் அப்படி ஒரு அழுகை. அந்தச் சிறுவன் அல்ல; நேஹா தான். ஒரே ஒரு பிஸ்கட்டையாவது அவன் கையில் கொடுத்த பிறகே அடங்கினாள். யம்மா. முடியலம்மா!

காய் வாங்கச் செல்லும் போது உடன் அழைத்துச் சென்றால் நமக்கு முன் “எவ்ளோ” என்று கேட்டாகிறது.
தக்காளியை எடுத்து ”மம் மம்.. ஆ” என்று நம் வாயில் வைக்கிறாள்! காய்காரர் ஒரு மாதிரி பார்த்தார். ஏதோ நான் தான் ட்ரெய்னிங் கொடுத்தது போல்... நேரம்!

ஒன் டூ த்ரீ ஃபோர் ஃபைவ் சிக்ஸ், அவள் இஷ்டத்துக்கு வரிசை மாற்றி ராகம் போட்டுச் சொல்கிறாள்.
இது அவளது பாட்டியும் அவளைப் பார்த்துக் கொள்ள வரும் அக்காவும் சொன்னது. ஹூம்.. அது ஒரு சின்ன நெருடல் எனக்கு. முதலில் நான் பார்க்காமல் (கேட்காமல்) போய்விட்டேனே என்று!

Thursday, November 19, 2009

தீபாவளி - தொடர் பதிவு!

ராஜாராம் அவர்கள் என்னை இத்தொடர் பதிவுக்கு அழைத்து இப்போது மறந்தே போயிருப்பார்.

ஏற்கனவே தீபாவளி பற்றி எழுதி விட்டதால் கொஞ்சம் இடைவெளி விடலாமென்று நினைத்து, பிறகு ரொம்பத் தாமத்மாகி விட்டது! மன்னிக்கவும் ஸார்! உங்கள் அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி!

1. உங்களை பற்றி ஒரு சிறு குறிப்பு?

தீபா. நேஹாவின் தாய். அன்புக்கு நான் அடிமை! கொஞ்சம் கிறுக்கு.....வேன்னு சொல்ல வந்தேன், ப்ளாக்ல. நீங்க வேற எதுவும் நினைச்சுடாதீங்க!


2. தீபாவளி என்றதும் உங்கள் நினைவுக்கு வரும்(மறக்க முடியாத) ஒரு சம்பவம்?

எட்டாவது படிக்கும் போது புஸ்வாணம் வெடித்துக் கை புண்ணானது.


3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

சென்னையில்.

4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

It's a serious business affair! துணிக்கடைகளுக்கு, நகைக்கடைகளுக்கு, மற்றும் ஊடகங்களுக்கு!

5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

தீபாவளிக்கென்று வாங்கவில்லை. புதிது இருந்தது.


6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

கேசரியும் வடையும்.


7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள்?

நாங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றோம். நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர்!


9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

இந்த நாள் என்று குறிப்பிட்டுச் செய்ததில்லை.

10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
நானே ரொம்ப லேட்டு. அதனால் யாரையும் அழைக்கவில்லை!

:-)

Monday, November 16, 2009

வாடா கோமாளி!

ஒரு நாட்டுப்புறப் பாடல்!

வெதை வெதைக்கணும் வெதை வெதைக்கணும் வாடா கோமாளி!
வெதை வெதைச்சா கோழி கிண்டும் போடா நா மாட்டேன்

கோழி கிண்டுனா வேலி போடலாம் வாடா கோமாளி
வேலி போட்டா மேலு வலிக்கும் போடா நா மாட்டேன்

மேலு வலிச்சா வென்னி வெச்சுத் தர்றேன் வாடா கோமாளி
வென்னி வெச்சுக் குளிச்சா வவுறு பசிக்கும் போடா நா மாட்டேன்

வவுறு பசிச்சா சோறு போடறேன் வாடா கோமாளி
சோறு தின்னா விக்கலெடுக்கும் போடா நா மாட்டேன்

விக்கலெடுத்தா தண்ணி தர்றேன் வாடா கோமாளி
தண்ணி குடிச்சா பொறைக்கு ஏறும் போடா நா மாட்டேன்

பொறைக்கு ஏறுனா தலையில தட்டறேன் வாடா கோமாளி
தலையில தட்டுனா செத்துப் போவேன் போடா நா மாட்டேன்
*****************
இது எப்போதோ சிறு வயதில் ஒரு புத்தகத்தில் படித்து அண்ணன் சொல்லிக் கொடுத்த பாட்டு! ரொம்பப் பிடித்துப் போனதால் மறக்கவே இல்லை!

Saturday, November 14, 2009

மழை...பள்ளி...அப்பா!

எல்லோரையும் போல எனக்கும் சிறுவயது முதலே மழையில் நனைய கொள்ளை ஆசை. அதைவிட மழை நீர் தேங்கி இருக்கும் தெருக்களில் காலை அளைந்து கொண்டு வருவதென்றால்... ரொம்ம்ம்ம்ம்ப இஷ்டம்!

ஆனால் நான் குழந்தையாய் இருந்த போது இளம்பிள்ளைகளுக்கு வரும் காச நோய் வந்து படாத பாடு பட்டுப் பிழைத்தேனாம். இரண்டு மாதங்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஊசி போட்டுக் கொள்ள வேண்டி வந்தது. அப்பாவோ அக்காவோ அழைத்துச் செல்வார்கள்.

ஆனால் என் மழை ஆசையெல்லாம் அப்பாவால் நிராசை ஆகிவிடும். மழை வந்தால் பள்ளிக்கு அனுப்புவதில் அப்பா ரொம்ப சிரத்தையுடன் இருப்பார். தப்பித் தவறிக் கூட மழையில் நனைந்து விடாதவாறு ஏற்பாடு செய்துவிடுவார்.

பள்ளி விட்டு வரும் போதாவது மழையில் நனைந்து கொண்டு வரலாம் என்று நினைப்பேன். வழக்கமாகச் செல்லும் ரிக்‌ஷாக்காரர் வராவிட்டால் மற்ற பிள்ளைகளுடன் நனைந்து கொண்டு வரலாம் என்று ஆசையோடு இருப்பேன். ஆனால் அப்பாவோ மோகனைக் குடையுடன் அனுப்பிவிடுவார்.

ஆங்காரமும் அழுகையுமாய் வரும். மோகன் அவர்கள் மிகவும் கண்டிப்பு. குடையை விட்டுக் கொஞ்சம் நகர்ந்தாலும் அதட்டுவார். மீறினால் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து விடுவார். அப்பா அடிக்கவே மாட்டார்; ஆனாலும் ரொம்பப் பயம் இருந்தது எங்களுக்கு!

நான்காவது படித்த போது மழைக்காலத்தில் ஒரு நாள்.
மாதத்தேர்வு (தமிழ் என்று நினைக்கிறேன்) முடிந்த மதிய நேரம்.
ரிக்‌ஷாக்காரர் வரவில்லை. ஆச்சரியத்திலும் ஆச்சரியம் மோகனும் வரவில்லை. குடையுடன் என்னை அழைத்துப் போக வந்தது அப்பா!
வராத அப்பா வந்தது சந்தோஷமாக இருந்தாலும், மோகனையாவது அப்படி இப்படி ஏமாற்றி விட்டுக் குட்டைத் தண்ணியில் காலை அளையலாம். அப்பாவாச்சே... வாலைச் சுருட்டிக்கிட்டுப் போக வேண்டியது தான் என்று நினைத்தேன்.

அமைதியாக நடந்து கொண்டிருந்த போது வெள்ளக்காடாக நிரம்பியிருந்த ஒரு தெருவுக்குள் திரும்பவேண்டி வந்தது. பெருமூச்சுடன் அதைப் பார்த்த நான் அப்பா நம்மைத் திருப்பி வேறு பக்கமாகத் தான் அழைத்துப் போகப் போகிறார் என்று நின்று அவர் முகத்தைப் பார்த்தேன்!

என்ன அதிசயம்! என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே “தண்ணியில ஜல் ஜல்னு போலாமா” என்று கேட்டு, வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டார். எனக்குக் குஷி தாங்க முடியவில்லை. ஏன் நிற்கிறேன்? அப்பா மனம் மாறுவதற்குள் காலை வீசி வீசி தண்ணீரில் நடக்கலானேன். தேர்வு எழுதியது பற்றி, பள்ளியில் என்ன நடந்தது பற்றி என்று என்னென்னவோ கேட்டார்; நானும் தண்ணியில் நடக்கும் சந்தோஷத்தில் உற்சாகமாகப் பேசிக் கொண்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்து உடை மாற்றிக் கொண்ட பின்னும் வெகு நேரமான பின்னும் சில்லென்ற அந்தத் தண்ணிரின் ஸ்பரிசம் காலிலும் அப்பாவுடன் கும்மாளமடித்துக் கொண்டு வந்த அந்த கணங்கள் மனதையும் நனைத்துக் கொண்டிருந்தன.

கண்டிப்பான அப்பா, ஏராளமான விஷயங்களில் புரிபடாத அப்பா, எத்தனையோ விஷயங்களில் இலகுவாகப் பழக முடியாத அப்பாவாக இருந்தாலும் அன்று ஒரு நாள் என் குழந்தை உள்ளத்தைப் புரிந்து நடந்த அந்தச் சிறிய ஆனால் அரிய செய்கையை என்னால் என்றுமே மறக்க முடியாது.

தொடர் பதிவு என்று போட்டுப் பெயரிட்டு அழைக்கத் தோன்றவில்லை. விருப்பமுள்ளவர்கள் தங்கள் இளம் வயது மழைக்காலத்தில் இது போன்ற மறக்க முடியாத அனுபவங்களைப் பகிருங்களேன். சுவாரசியமாக இருக்கும்!

Friday, November 6, 2009

நாய்க்குட்டி!

(இது குழந்தைகளுக்கான கதை தான். பெரியவர்களும் படிக்கலாம்!)

”டேய், டேய், வேணாண்டா, பாவம் டா…”

”போம்மா, அது என் கூட எப்பிடி வெளையாடுது பாரு...”

மகேஷுக்கு ஏகக் கொண்டாட்டம் தான். அந்தச் சிறிய நாய்க்குட்டியை அவன் படுத்திய பாடுகளை அஞ்சலைக்குப் பார்க்க முடியவில்லை.

அழகான நாய் அது. வெண்பழுப்பு நிறத்தில் பளபளவென்று கருவண்டுக் கண்களோடு பொம்மை போல் இருந்தது. பள்ளி விட்டு வரும்போது எங்கிருந்தோ தூக்கிக் கொண்டு வந்திருந்தான்.

பாலை ஊத்தும்மா, சோறு போடும்மா என்று முதல் நாள் அவன் பண்ணிய அலம்பல் தாங்கவில்லை.

அதன் பிறகு மெல்ல தன் வாலை அவிழ்த்து விட்டான். சும்மாவா அந்த ஏரியாவில் அறுந்த வால் என்று பெயர் வைத்திருந்தார்கள் அவனுக்கு?

அதைத் தூக்கிக் கொண்டு போய் தண்ணி டாங்கின் மேடையில் உட்கார வைத்து விடுவான். சின்னக் குட்டியான அது இறங்க அஞ்சிச் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிப்பான்.

ஒரு துளி டூத்பேஸ்டை எடுத்து அதன் மூக்கின் மேல் வைப்பான். அது நாக்கை நீட்டி நீட்டி நக்க முயன்று சோர்ந்து தரையில் விழுந்து பிறாண்டும்.

”அம்மா, அம்மா, இங்க வந்து பாரேன்.” வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பான்.

அக்கா தூங்கிக் கொண்டு இருக்கும் போது பொத்தென்று அவள் மீது போட்டு அலறி ஓட வைப்பான்.

எவ்வளவு திட்டினாலும் அடித்தாலும் கேட்க மாட்டான்.
சில சமயம் அவனைப் பார்த்தாலே வாலைக் கால்களுக்கிடையில் ஒடுக்கிக் கொண்டு போக ஆரம்பித்தது.

அம்மாவுக்கு அதைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஆசையாக வளர்ப்பான் என்று விட்டால் அந்த வாயில்லா ஜீவனை இந்தப் பாடு படுத்துகிறானே என்று.
*******************

”மகேஷ் அம்மா!”

“யாரு?”

“நான் தாம்மா வர்ஷினி அம்மா”

“ஓ, நீங்களா, வாங்க வாங்க”

“பரவாயில்ல இருக்கட்டும். இந்த நாய்க்குட்டி ஏது?”

“அதுவா, என் பையன் தான் எங்கிருந்தோ தூக்கிட்டு வந்தான். பாடா படுத்தறான். யாராவது கேட்டா குடுத்துடலாம்னு இருக்கேன்.”

“ரொம்ப நல்லதாப் போச்சு. என் பொண்ணு இதைப் பாத்துட்டு இதே மாதிரி நாய் வேணும்னு கேட்டு அழுதா. உங்க கிட்ட கேக்கலாம்னு வந்தேன்.“

”இதையே எடுத்துக்கிட்டுப் போங்க. நல்லாயிருப்பீங்க. அந்தத் துஷ்டப்பயகிட்டேந்து தப்பிச்ச மாதிரி இருக்கும்.”

“எம்பொண்ணு ஆசையாப் பாத்துக்கும்.“ என்றபடி நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டாள் அந்த அம்மாள்.

**************

”அம்மா, மணி எங்கேம்மா?”

”ஆங்?”

“மணிம்மா, மணி நாய்க்குட்டி...எங்கேம்மா? வீட்டுக்கு வந்ததுலேர்ந்து தேடிட்டே இருக்கேன்” குரல் கம்மியது

இவனிடம் சொல்ல வேண்டாமென்று நினைத்த் அம்மா, “தெரியலடா உன் தொல்லை தாங்காம ஓடிப் போயிடுச்சு போல.”

அம்மாவை முறைத்து விட்டு வெளியில் போனான்.

இருட்டிய பின்பும் வெகு நேரம் கழித்துத் தான் திரும்பி வந்தான்.

“டேய், எங்கடா போனே? படிக்காம ஊரச்சுத்திட்டு வரியா? உங்கப்பா வரட்டும். தோலை உரிக்கச் சொல்றேன்.”
என்றவாறே திரும்பிப் பார்த்த அம்மா திடுக்கிட்டாள்.
அழுதழுது வீங்கிய முகமும் சோர்ந்து போன நடையுமாய் வந்து அமர்ந்தான் மகேஷ்.

“என்னடா கண்ணா, ஏண்டா இப்படி இருக்கே? என்ன ஆச்சு?”

“அம்மா, மணி என்னை விட்டுட்டு ஏன்மா போனான்? நான் நல்ல பையன் இல்லியா?“ என்று விசும்பியவனை அம்மா பதறி அணைத்துக் கொண்டாள்.

அழுது கொண்டே தூங்கிப் போனான் மகேஷ்.

’காலையில் அவன் எழுந்திருக்கறதுக்குள்ள வர்ஷினி அம்மா கிட்ட கெஞ்சி நாய்க்குட்டியைத் திரும்ப கொண்டாந்துடணும்’ என்று நினைத்துக் கொண்டாள் அம்மா.

இரவு இடி இடித்து மழை பெய்தது. குளிரில் சுருண்டு படுத்திருந்த மகேஷ் தூக்கத்தில் ”மணி, மணி” என்றவாறே உளறிக் கொண்டிருந்தான்.

*************

“அம்மா, அம்மா, இங்க வந்து பாரேன். யார் வந்திருக்கான்னு?”

மகேஷின் கூக்குரலைக் கேட்டு விழித்தாள் அம்மா. அதற்குள் வவ் வவ் என்று பரிச்சயமான அந்தச் செல்லக் குரலும் சேர்ந்து வந்தது.

”ராத்திரியே வந்து நம்ம வீட்டு வாசலோரமா ப்டுத்திருந்திச்சும்மா.
காலையில என்னைப் பாத்தவுடனே குஷியா வாலாட்டிக்கிட்டு வந்துடுச்சி. மழையில நல்லா நனைஞ்சிருக்கு. அதுக்கு சூடா பால் கொண்டு வாம்மா!”

“என் செல்ல மணி! பட்டு மணி” என்று உற்சாகமாய் நாயைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தவனைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா.

***********

மறு நாள்...

“அம்மா இங்கே பாரேன்...”

“மணீ....ஜம்ப்!!!”

மணி தண்ணி டாங்கின் மேடையிலிருந்து அழகாய் டைவ் அடித்து ஓடி வந்தது.

அம்மா அதிசயமாய்ப் பார்த்தாள்; சந்தோஷமாகவும்!

Monday, November 2, 2009

சிரிப்பு!

Sense of humor!

சிரிக்க‌ச் சிரிக்க‌ப் பேசுவ‌தும் எழுதுவ‌தும் ஒரு அலாதியான‌ க‌லை. வெகு சில‌ருக்கே இல‌குவாக‌க் கைவ‌ரும் இக்க‌லையை நான் வெகுவாக‌ ர‌சிக்கிறேன்.

இதில் ப‌ல‌வ‌கைக‌ள் உண்டு. சிரிக்க‌ வைக்க‌ வேண்டும் என்று வ‌லிந்து வார்த்தைக‌ளையும் பாவ‌னைக‌ளையும் வ‌ர‌வ‌ழைத்துக் கொண்டு சிலர் பேசுவார்கள்; எழுதுவார்கள். முத‌லில் ஒரிரு முறை சிர்ப்பு வ‌ரும். பிற‌கு ச‌லித்து விடும். (தொழில் ரீதியான சிரிப்பாளர்கள் விதிவிலக்கு! )


நாம் சிரிக்கும் வ‌ரை அது ந‌கைச்சுவையாக‌ இருந்த‌து என்ற‌ உண‌ர்வே இல்லாம‌ல் சில‌ர் அடிக்கும் க‌மென்டுக‌ளே என்னைப் பெரிதும் க‌வ‌ர்கின்ற‌ன‌. இத்தகையவ்ர்கள் சீரிய‌ஸாக‌ முக‌த்தை வைத்துக் கொண்டு சீரியஸாக‌வே ஏதாவ‌து பேசினாலும் ந‌ம‌க்குச் ச‌ட்டென்று சிரிப்பு வ‌ந்து விடும். இய‌ல்பான‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌கைச்சுவை தான் என் சாய்ஸ்.


ந‌கைச்சுவை உண‌ர்வு என்றால் சிரிக்க‌ வைப்ப‌து ம‌ட்டுமே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சில‌ருக்குச் சிரிக்க‌ வைப்ப‌தில் ஆர்வ‌ம் இருக்கும். அடுத்த‌வ‌ர் பேச்சை ர‌சித்துச் சிரிக்க‌ மாட்டார்க‌ள். அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு நல்ல ந‌கைச்சுவை உண‌ர்வே கிடையாது என்பேன். அத்த‌கைய‌வ‌ர்களைக் கண்டால் பெரும்பாலும் ஒதுங்கி விடுவேன்.
தனக்குச் சிரிக்க‌ வைக்க‌த் தெரியாவிட்டாலும் அடுத்த‌வ‌ர் பேச்சில் ம‌கிழ்ந்து ர‌சித்துச் சிரிப்பது, ஒரு சூழ்நிலையில் உள்ள நகைச்சுவையை முதலில் கண்டுப்பிடிப்பதும் தான் sense of humor என்பதன் உண்மையான பொருள். பிறரைத் தவிர்த்து தன்னைத் தானே கிண்டலடிப்பது தான் இதில் மிக முக்கியமான அம்சம்.

எந்த‌ ஒரு பிர‌ச்னையையும் ப‌த‌ட்ட‌மில்லாம‌ல் இல‌குவாக‌க் கையாள்வ‌து, எதிராளி கோப‌த்தைக் க‌க்கினாலும் அச‌ராம‌ல் எள்ள‌லுட‌ன் ப‌திலிறுப்ப‌து, அப்ப‌டி ஒரு ப‌திலைக் கேட்ட‌வுட‌ன் ச‌ட்டென்று கோப‌ம் ம‌ற‌ந்து சிரித்து விடுவ‌து, இது எல்லாமே ந‌கைச்சுவை உண‌ர்வில் அட‌ங்கும்.


காலை நேர அவ‌சர‌த்தில் சின்ன‌ச் சின்ன‌ சிடுசிடுப்புக்க‌ளுக்கிடையில் மின்ன‌ல் கீற்றுப் போல‌ ஏதோ ஒரு வார்த்தையும் பாவ‌னையும் ச‌ட்டென்று சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்து ம‌ன‌தை லேசாக்கிவிடும். அந்த‌ நேர‌ம், அந்த‌ச் சிரிப்பு ம‌ட்டும் வ‌ரா விட்டால் நாளெல்லாம் ஒரு உறுத்த‌ல் ம‌ன‌தில் இருந்து எல்லா வேலைக‌ளையுமே பாதிக்க‌க் கூடும்.

இந்த‌ ஒரு அம்ச‌ம் தான் என்னைப் பொறுத்த‌வ‌ரை மணவாழ்க்கையில் மிக‌ மிக‌ முக்கிய‌மான‌து. To be able to laugh at yourself and make the other person laugh. க‌ண‌வ‌ன் ம‌னைவி ஒருவ‌ரை ஒருவ‌ர் நையாண்டி செய்ய‌லாம். உண்மையான‌ அன்பு என்னும் அஸ்திவார‌ம் இருக்கும் போது ம‌ற்ற‌வ‌ர் ம‌ன‌து புண்ப‌டும் அபாயமே இருக்காது.

அந்த‌ நையாண்டியில் அன்பு இருக்கும், ம‌றைமுக‌மான‌ பெருமை இருக்கும், அன்பில் மொத்த‌மாக‌ ச‌ர‌ண‌டைந்த‌த‌ன் குறிப்பும் இருக்கும்.
கோபமாக ஏதாவது முனகி விட்டாலும் கூட, கடைசியில் ஏதாவது வேடிக்கையாய்ப் பேசிவிட்டு "என் சோக‌க் க‌தையைக் கேட்டா ம‌ட்டும் எப்ப‌டிப் பொங்கிப் பொங்கிச் சிரிப்பு வ‌ருது பாரு இவ‌ளுக்கு!" என்ற வார்த்தைகளுக்குப் பின் உண்மையிலேயே சிரிப்பு பொத்துக் கொண்டு வ‌ரும். அத‌ன் பின் எங்கே கோப‌ப்ப‌ட‌?

ஜோவும் நானும் சண்டை போட்டு விட்டு ஒருவரோடு ஒருவர் பேசாமல் டிவி பார்த்துக் கொண்டிருப்போம். வடிவேலு காமெடி சீன் அல்லது சூழலுக்குப் பொருத்தமாக ஏதேனும் வசனம் வ‌ந்தால், யார் முத‌லில் சிரிப்ப‌து என்ற‌ சொல‌லாத‌ போட்டி ந‌ட‌க்கும். பெரும்பாலும் நான் தான் தோற்று விடுவேன். அதில் இருவ‌ருக்குமே வெற்றி தான்.
"உள்ளதிலேயே ரோஷ‌ங்கெட்ட‌ உற‌வுன்னா அது புருஷ‌ன் பொண்டாட்டி உற‌வு தான்" என்று வேதாந்த‌த்துட‌ன் ச‌மாதான‌ம‌டைந்த‌ நாட்க‌ள் ஏராள‌ம்!

பி.கு: இப்படி சிரிப்பாய்ச் சிரிக்கும் போது, ரொம்பப் புரிந்தது போல் கைதட்டிக் கொண்டு, உடம்பையே ஆட்டிக் கொண்டு நேஹாவும் அழகாய்ச் சேர்ந்து கொள்கிறாள்.
அவ நல்லாப் பேச ஆரம்ப்பிக்கும் போது இருக்கு எங்களுக்கு
:-)

Sunday, November 1, 2009

பிடித்தவர்; பிடிக்காதவர் - தொடர் விளையாட்டு

பிடித்தவர் பிடிக்காதவர் தலைப்பில் எழுதச் சொல்லி அழைத்திருக்கிறார் மாதவராஜ் அங்கிள்.

அவரே சொல்லி இருப்பது போல் இது ஒரு குழந்தைத் தனமான விளையாட்டுத் தான். ஆனால் குழந்தைத் தனங்களை மீட்டெடுக்கும் எந்த ஒரு செயலுமே எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் என்னைக் கேட்ட போது உடனே சம்மதித்து விட்டேன்!

ஒருவரைப் பிடிக்கக் கூடப் பெரிதாகக் காரணம் இல்லாமல் போகலாம். ஆனால் பிடிக்காமல் போக நிச்சயம் மனதிற்குள்ளாவது ஆழ்ந்த காரணம் இருக்கும்.
அதைச் சொல்ல வைப்பது தான் இந்த விளையாட்டின் வெற்றி.


எனக்குப் பொதுவாக strong likes and dislikes உண்டு.
(But no preconceived prejudices. And I definitely do not hate anybody in cold blood. :-) )

பிரபலங்களைப் பொறுத்தவரை strong likes and dislikes கிடையாது. மனதில் உடனே தோன்றுபவர்களைத் தான் இங்கே எழுதுகிறேன். உதாரணமாக நான் ரொம்ப மதிக்கின்ற, என்றுமே பிடித்த நடிகை என்று யோசித்தால் மனோரமா தான். ஆனால் சட்டென்று தமன்னாவின் துறுதுறு முகம் வருகிறது. அதனால் இப்போதைக்குத் தமன்னா தான்!

1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: பெருந்தலைவர் காமராஜர்.
பிடிக்காதவர்: சுப்ரமணியம் சுவாமி

2. எழுத்தாளர்
பிடித்தவர்: தமிழ்ச்செல்வன்
பிடிக்காதவர்: தேவிபாலா (தெரியாமல் சில கதைகள் படித்துத் தலைவலியில் அவஸ்தைப் பட்டிருக்கிறேன்)

3. கவிஞர்:
பிடித்தவர்: பாரதியார்
பிடிக்காதவர்: வாலி

4. இயக்குனர்:
பிடித்தவர்: பாலுமகேந்திரா
பிடிக்காதவர்: எஸ் பி முத்துராமன்

5. நடிகர்:
பிடித்தவர்: விக்ரம்
பிடிக்காதவர்: அஜீத்

6. நடிகை:
பிடித்தவர்: தமன்னா
பிடிக்காதவர்: த்ரிஷா

7 . இசையமைப்பாளர்:
பிடித்தவர்: How to name him? The one and only maestro!
பிடிக்காதவர்: இந்த நகை ஸ்டாண்ட் மாதிரி ஒருவர் வருவாரே சில்க் ஜிப்பா எல்லாம் போட்டுக் கொண்டு, (சங்கர்) கணேஷ்

8. பாடகர்:
பிடித்தவர்: ஹரிசரண்
பிடிக்காதவர்: ஷங்கர் மகாதேவன்

9. பாடகி:
பிடித்தவர்: என்றும் என்றென்றும், குரலிலும் குழந்தைச் சிரிப்பிலும் வசியப்படுத்தும் சித்ரா.. சித்ரா... சித்ரா
பிடிக்காதவர்: அனுராதா ஸ்ரீராம்

10. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: கிரிக்கெட் ஆடாத அனைத்து விளையாட்டுக் காரர்களும்
பிடிக்காதவர்: கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அனைவரும்! :)

ஆட்டத்தைத் தொடர நான் அன்புடன் அழைப்பது:

சென்ஷி

ஆயில்யன்

சின்ன அம்மிணி

ராப்

பி.கு: மன்னிக்கவும். விதிகளை எழுத மறந்து விட்டேன். விதிமுறைகளுக்குத் தொடரின் முதல் பதிவைப் பார்க்கவும்.

Sunday, October 25, 2009

இதெல்லாம் என்னைக்குத் தான் ஒழியுமோ!

வரதட்சணை.

எனக்குச் சில விஷயங்கள் புரிவதே இல்லை. அதில் ஒன்று:
அருமை பெருமையாய் மகளைப் பெற்று வளர்த்து விட்டு, தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுதும் கொட்டிக் கொடுத்து அவளை எவனோ ஒரு கோயான் தலையில் கட்டிவிட்டுப் (படிப்பு, நல்லவேலை, சொத்து சுகம் என்று ஆயிரம் காரணங்களுக்காக; அது பொய்யா உண்மையா என்று கூட சரியாகத் தெரியாமல்) பின்பு மகள் கஷ்டப்படும் போது தலையில் கை வைத்துக் கொள்கிறார்களே இந்தப் பெற்றோர்களை என்னவென்று சொல்வது?

இவர்கள் சொல்படி கேட்டுச் சமர்த்தாக இருந்தது தான் அப்பெண்ணின் தவறா?

பக்கத்துத் தெருவுக்குக் கூட அண்ணன் தம்பி துணையில்லாமல் என் மகள் போக மாட்டாள் என்று பொத்திப் பொத்தி வளர்த்து விட்டு எவனோ ஒரு ______ நம்பி அவளது வாழ்நாளையே மேளதாளத்துடன் ஒப்படைக்கிறீர்களே? உங்களை எல்லாம்...........
வேண்டாம்!

வரதட்சணை கொடுக்காமல் மகளைக் கட்டிவைத்தால் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் மரியாதை இருக்காது என்று ஏன் நினைக்கிறார்கள்? இது அபத்தமில்லையா?

சரி, பொருளாதாரச் சமன்பாடு அவ்வளவு முக்கியமென்றால் பெண்ணை நன்றாகப் படிக்க வைத்து சொந்தக் காலில் நிற்க வையுங்கள்.
ஆனால் அப்படிப் பட்ட பெண்களாவது வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக நிற்க வேண்டும்.

”நாங்கள் வானில் பறந்தாலும், உயரங்களைத் தொட்டாலும் திருமணம் என்று வந்தால் வீட்டினர் சொல்படி தான் கேட்போம், எங்கள் ஜாதியில் ஜாதகம் பார்த்து அப்பா அம்மா சொல்ற ஆளைத் தான் கட்டிக்குவோம்” என்று சொல்வதில் இவர்களுக்கு இருக்கும் பெருமை எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை.

சரி, பெற்றோர் மனம் இணங்கத் திருமணம் செய்து கொள்வது நல்ல விஷயம் தான். எல்லாரும் காதலித்துத் திருமணம் செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. குறைந்த பட்சம், இந்த ஜாதி, ஜாதகம் இதெல்லாம் பார்க்க வேண்டாம் என்றாவது பெற்றோரிடம் சொல்லலாம் இல்லையா?

ஜோசியம், ஜாதகம், இதெல்லாம் எவ்வளவு அபத்தம் என்று புரிந்தாலும், ஒரேயடியாக விட்டொழிக்காமல் ஓரளவுக்குப் பார்த்தல் பரவாயில்லை, அதிகமானால் தான் தவறு என்று சப்பைக் கட்டுக்களுடன் ஊறுகாயைப் போலவாவது ஏன் இன்னும் தொட்டுக் கொண்டிருக்கிறோம்? அது கெட்டுப் போய் நாறுவது தெரியவில்லையா?

அடிப்படை உரிமையையே விட்டுக் கொடுத்து விட்டு, பின்னாளில் கஷ்டப்பட்டு நஷ்டப்படும் போது வாய்கிழிய உரிமைப் போராட்டம் பேசி என்ன பயன்?

எப்படியும் திருமணம் என்று வந்தபின் ஆணும் பெண்ணும் ஓரளவு போராடித் தான் ஆக வேண்டும். அது யாராலும் உங்கள் மீது திணிக்கப் படவில்லை. உங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை நீங்களே தீர்மானித்தீர்கள் என்ற திருப்தியை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

சுருங்கச் சொன்னால், திருமணத்துக்குத் தயாராக இருக்கிறீர்களா? கிணற்றில் விழுவதென்று தீர்மானித்து விட்டீர்கள். குறைந்த பட்சம் கண்ணைத் திறந்து கொண்டு, அடி கிடி படாமல், பாழும் கிணறாக இல்லை என்று தெரிந்து கொண்டு விழுங்கள்.

(தோழி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தனது வாழ்க்கை தான் நினைத்த படி அமையாமல் போனதற்குத் தனது அருமைத் தந்தை தான் காரணம் என்று அவர் சொல்லி வருந்தினார். மகள் மீது உயிரையே வைத்திருக்கும் அந்தத் தந்தையைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவே இந்தப் பதிவு.)

Saturday, October 24, 2009

அன்பைப் பகிர ஒரு வாய்ப்பு...

அளித்த முல்லைக்கு மனமார்ந்த நன்றிகள்.














Scrumptious blog விருதை இவர் எனக்குத் தந்து சில நாட்களாகின்றன. முன்னம் ஒரு முறை சுவாரசிய வலைப்பதிவு விருது தந்த போது அதைப் பதிவிடவும் பகிரவும் வாய்ப்பு அமையவில்லை. அதற்கும் சேர்த்துப் பன்மடங்கு உவகையுடன் இந்த விருதை இப்போது நான் கொடுக்க விரும்புவது:

நேசமித்ரன் - நேசமும் நேட்டிவிட்டியும் நீங்காமல் நிறைந்திருக்கும் கவிதைகளுக்காக!

அய்யனார் - எழுத்தில் வெளிப்படும் அறச்சீற்றத்துக்காக!

ஆசிப்மீரான் - வாஞ்சையான நெல்லை மொழியில் இவர் எழுதும் எதற்காகவும்!

அமிர்தவர்ஷினி அம்மா - அமித்துவுக்கு மட்டுமல்ல தனது கதை மாந்தர்களுக்கும் காட்டும் தாயன்புக்காகவும், படிப்பவர் மனதோடு சட்டென்று நெருங்கி வசியப்படுத்தும் எழுத்து வன்மைக்காகவும்!

செந்தில்வேலன் - ”பயனில சொல்லாமை” என்பதற்கு ஏற்ப, அனைவருக்கும் பயனுள்ள சிறந்த பல தகவல்களுடன் ஒவ்வொரு பதிவையும் எழுதும் பாங்குக்காக

காமராஜ் - சமூக சிந்தனை மிளிரும் மிகச்சில சிறந்த பதிவுகளுள் முக்கியமான ”அடர்கருப்பு” க் காக

அன்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
:)

Monday, October 19, 2009

ஜாதீ!

அலுவலகத்தில் உணவு இடைவேளை.

"ஹேய் ஷைனி, இது கண்டா..ஈ ஓணத்தினு..." ஒன்றாய் கூடி கொஞ்சு மலையாளத்தில் அரட்டை ஒரு புறம்.

"ஹேய், இன்னிக்குத் தான்யா தெரிஞ்சுது, நம்ப பி.எம் மும் "....." தான்; க்ரேட். என‌க்கு அப்ரெய்ச‌ல் ப்ராப்ள‌ம் இல்லை! நீ தான் பாவம்!...ஹீ ஹி.. ஜ‌ஸ்t ஜோக்கிங் யார்!"


"ஹலோ! டேய், வ‌ச‌ந்த் மெயில் ப‌ண்ணிருக்கான்டா‌.. ஆன்சைட்ல‌ இன்னும் ரென்டு பேர் வேணுமாம். என்னையும் ரெக்கமென்ட் பண்ணி இருக்கான்....
ஆமாம் ம‌ச்சான், அவ‌ன் எங்காளுங்க‌ தான்."...

தெளிந்த குளத்தில் கல்லெறிந்தது போல் ஏதேதோ தோன்ற‌, தனியளாய் விடப்பட்டது போல் உணர்ந்தேன்.
நான் என்ன‌ ஜாதியில் பிற‌ந்தேன் என்று நினைவு கூர்ந்து யாரையாவ‌து அதில் தெரியுமா என்று யோசித்து முடிப்ப‌த‌ற்குள், என்மீது எனக்கே வெறுப்பு வந்து அடிநாக்கில் கசந்தது. "சீ " என்று உர‌க்க‌க் க‌த்தி விட்டேன். த‌லையை உத‌றிக் கொண்டு போய் சிங்கில் காறித் துப்பி விட்டு வ‌ந்தேன்.

"என்ன... என்ன ஆச்சு?" என்று ப‌தறினார்கள்;

"ஒண்ணுமில்ல, சாப்பாட்டில‌ முடி" என்று சிரித்தேன்.

தீபாவ‌ளி!

தீபாவ‌ளி என்றாலே சிறு வ‌ய‌து முத‌ல் தோன்றுவ‌து... அதிக‌ம் எதிர்பார்க்க‌வைத்து ஏமாற்றும் ப‌ண்டிகை என்ப‌து தான்.

இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன் ப‌ள்ளியில் தோழிக‌ளைக் க‌ட்டிய‌ணைத்து வாழ்த்துக்க‌ள் ப‌ரிமாறிக் கொள்ளும் போதும், க‌ரும்ப‌ல‌கையில் "ஹாப்பி தீபாவ‌ளி" எழுதி அழ‌க‌ழ‌காய்ப் ப‌ட‌ம் வ‌ரைந்து வைக்கும் போது உற்சாகம் பீறிடும். வ‌ழ‌க்காமாய்ப் ப‌ருப்பும் புளியும் கொதிக்கும் சமைய‌ல‌றை ப‌ல‌கார‌ங்க‌ளும் எண்ணெய் ஸ்ட‌வ்வுமாய்ப் புதுக்கோல‌ம் கொள்ள, அம்மாவுக்கு உத‌வும் போது பெருமித‌ம் பொங்கும். வாங்கிய‌ ஒரே புத்தாடையைப் ப‌த்து த‌ட‌வை திற‌ந்து பார்க்கும் போது ம‌ன‌ம் புல்ல‌ரிக்கும். டமால் டுமீல் வெடிச்ச‌த்த‌ங்க‌ளுட‌ன் பொழுது விடிவ‌த‌ற்க்குள் ஏனோ ப‌ண்டிகையின் மொத்த‌ க‌ளையும் வ‌டிந்து விடும்.

அதான் தீபாவ‌ளி வ‌ந்துடுச்சே..! இனி போக‌த் தானே போகுது என்று!எப்போதும் என்னிடம் ஜோராக சண்டை போடும் அண்ணனும் அவன் வெடிவெடிக்கும் அழகைப் பார்க்க, ஊதுவத்தி கொளுத்தி எடுத்து வர‌ என்று என்னிடம் எடுபிடி வேலை வாங்குவதற்காக அன்று அன்புடன் இருப்பான். அதனால் போர் தான்! :)

அக்காவும் அங்கிளும் வ‌ந்திருந்த‌ அவ‌ர்க‌ளின் த‌லை தீபாவ‌ளி தான் நாங்கள் மிக‌வும் ச‌ந்தோஷ‌மாக‌க் கொண்டாடிய‌ தீபாவ‌ளி. சிவ‌ப்பு நிற‌த்தில் என‌க்கு ஒரு "கீதாஞ்ச‌லி ட்ரெஸ்" வாங்கி வ‌ந்திருந்தார்க‌ள். ரொம்ப அழகாக இருககும். வெகு நாட்க‌ள் வ‌ரை அதை ஆசையாக‌ப் போட்டுக் கொண்டிருந்தேன்.

அத‌ற்க‌டுத்த் ஆண்டுகள் அவ‌ர்க‌ள் வ‌ர‌வில்லை என்ப‌தாலேயே சுர‌த்திழ‌ந்த‌து. க‌ல்லூரியில் படித்த போது முதல் ஆண்டு த‌விர‌ தீபாவ‌ளிக்கு வீட்டுக்கே வ‌ர‌ இய‌ல‌வில்லை. ச‌ரியாக‌ தீபாவ‌ளிக்கு அடுத்த‌ நாள் செம‌ஸ்ட‌ர் ப்ராக்டிக‌ல் வைத்திருப்பார்க‌ள். அத‌னால் ப‌க்க‌த்து ஊர்க‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌விர‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் விடுதியிலேயே தீபாவ‌ளியைக் க‌ழித்தோம். அதுவும் ஒரு தினுசாக‌ ந‌ன்றாகத்தா‌ன் இருந்த‌து. இறுதியாண்டு டே ஸ்கால‌ர்ஸ் வீடுக‌ளுக்குச் சென்றோம்.

வேலைக்குச் செல்ல‌த் தொட‌ங்கிய‌வுட‌ன் எந்த‌ப் ப‌ண்டிகையுமே ஒரு நாள் விடுமுறை என்பதைத் தவிர பெரிதாக‌த் தெரிய‌வில்லை. தீபாவ‌ளிக்கென்று ஆட‌ம்ப‌ர‌மாக‌ ஆடைக‌ள் வாங்குவ‌தும் அற்வே பிடிக்காத‌ ஒன்றாகி விட்ட‌து. புதிதாக‌ ஏதாவ‌து அணியப் பிடிக்கும்; அது வ‌ழக்க‌மாக‌ அலுவ‌ல‌க‌த்துக்கு அணிகிறாற் போல் உப‌யோக‌மாக‌ இருந்தால் ச‌ரி. "இதுவா உன் தீபாவ‌ளி ட்ரெஸ்" என்ற‌ கேள்விக்குப் புனன‌கைப்ப‌து வெகு நாட்களுக்கு முன்பே ப‌ழ்க்க‌மாகி விட்ட‌து. தொலைக்காட்சிக்கு முன் உட்காரக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே நூலகத்தில்கிருந்து புத்த‌கங்கள் வாங்கி வந்து நிம்ம‌தியாக‌ நாள் பூராவும் ப‌டித்துக் க‌ழித்த‌ தீபாவ‌ளிக‌ள் உண்டு.

காசு கொடுத்துப் ப‌ட்டாசு வாங்கிப் ப‌ழ‌க்க‌மே இல்லை வீட்டில். சிவகாசியில் இருந்த அப்பாவின் ஆருயிர் ந‌ண்ப‌ர் தீபாவ‌ளிக்கு ஒரு வார‌ம் முன்பே பெரிய‌ ப‌ட்டாசுப் பொட்ட‌ல‌ம் ஒன்றை அன்புட‌ன் அனுப்பி விடுவார். "ப‌ட்டாஸ் அங்கிள்" என்றே சிறு வ‌ய்தில் அவ‌ரை அழைப்போம்.நாங்க‌ள் மட்டுமே வெடித்துத் தீர்வ‌தில்லை அது. வீட்டுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கும் அக்க‌ம் ப‌க்க‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் கொடுத்தும் தீர்க்க‌ வேண்டியிருக்கும்.
வெடிச்ச‌த்த‌ம் என‌க்குப் பிடிக்காது, வெடி வெடிக்க‌வும் ப‌ய‌ம். !ஆனால் வாண‌ங்க‌ளும் ம‌த்தாப்புக்க‌ளும் மிக‌வும் பிடிக்கும். சில‌ ஆண்டுக‌ளாக‌ அந்த‌ ஆர்வ‌மும் அற்றுப் போய் விட்ட‌து.

"பண்டிகையை வரவேறக" என்று ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தச் சில ஆண்டுகளில் ப்ண்டிகைகள் அழகாக அமைதியாக் வந்து போகின்றன. இந்தத் தீபாவளி நண்பர்களும் குழந்தைகளும், போட்ட கும்மாளங்களுடன் வீட்டிலேயே இனிமையாகக் கழிந்தது.

ஆனால் வானத்தில் பூப்பூவாய் வெடித்துச் சிதறும் வாணங்களில் மனதைப் பறி கொடுக்கையில் வெடிம‌ருந்தின் வாடையில் க‌ருகும் பிஞ்சுகளும் ப‌லியாகும் ச‌கோத‌ர‌ர்களும் நினைவுக்கு வந்து குற்றவுணர்ச்சி கொல்கிறது.

ப‌ட்டாசுக‌ளையே மொத்த‌மாக‌த் த‌டை செய்ய‌ வேண்டுமென்றெல்லாம் வைராக்கியத்துடன் எண்ணிய நினைப்புகள், ம‌த்தாப்புவைப் பார்த்துக் குதூகலிக்கும் குழ‌ந்தைகளின் சிரிப்பில் உடைந்து போவ‌து ச‌ரியா த‌வ‌றா என்று புரிய‌வில்லை.
ஆனால் அப்ப‌டித் தானே நுழைகிற‌து ஒவ்வொரு வீட்டிலும் தீபாவ‌ளி?

Thursday, October 8, 2009

கனவு

நான் வீசியெறிந்த மாவிதை வேர் பிடித்து நின்றது;
கனிகளும் தந்தது; வெயிலுக்கு ஒதுங்கிய எனக்கு நிழலும் தந்தது
கறைபட்ட நினைவுகளைக் கழுவும் ரசவாதம் - கனவு

Sunday, October 4, 2009

அம்மாவின் பிறந்த நாள்!

பிறந்த நாள் என்பது எல்லாருக்குமே மனதுக்கினிய நாள் தான். என்னதான் ’என்ன் பெரிய பிறந்த நாள், it’s just another day, அதெல்லாம் பெரிசா கண்டுக்கறது கிடையாது’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், கொண்டாடுகிறோமோ இல்லையோ,
அன்றைய தினம் நண்பர்களும் அன்புக்குரியவர்களும் நம்மை வாழ்த்தும் போது கிடைக்கிற மகிழ்ச்சியே அலாதி தான்.

ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு நம்மை இவ்வுலகுக்குக் கொண்டு வந்தவர்களின் பிறந்த நாள் தெரியும், அல்லது தெரிந்தாலும் நினைவிருக்கும்? (அவர்களின் திருமண நாள் கூட நினைவில் இருக்கும்.)

இன்று அம்மாவுக்குப் பிறந்த நாள் என்று எழுதும் போதே உண்மையில் இந்தத் தேதி தானா என்றவொரு ஐயமும் மனதில் தோன்றுகிறது.

வீட்டில் ஒவ்வொருவர் பிறந்த நாளையும் நினைவில் வைத்துப் பாயசத்துடன் விருந்து சமைத்து மகிழ்விக்கும் அம்மா தனது பிறந்த நாள் என்னவென்பதை வெகு நாட்கள் குழப்பத்திலேயே வைத்திருந்தார்.

அக்டோபர் 15 என்று தான் முதலில் ஞாபகம். பின்பு ஏதோ பழைய சான்றிதழ்களைக் கண்டெடுத்தபோது அக்டோபர் நான்கு என்று இருந்தது. எப்படி இருந்தாலும் அம்மா பிறந்த நாளை அம்மா மட்டும் அல்ல, வீட்டில் அனைவருமே எளிதாக மறந்து விடுவது தான் வழக்கமாகிறது.

அப்பா பிறந்த நாளில் அப்பாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்து அவரை வாழ்த்துவது வழக்கம். அதுவும் ஏப்ரல் மாதம், கோடை விடுமுறையில் வரும் என்பதால் அப்பா பிறந்த நாள் என்றாலே சிறு வயது முதல் வீடே களைகட்டும் குதூகலமான நாளாக மனதில் பதிந்திருக்கிறது. அது எவ்வளவு சந்தோஷமோ அதே சமயம் அம்மா பிறந்த நாளைக் குறைந்த பட்சம் பிள்ளைகளான நாங்க்ளாவது ஒழுங்காக நினைவு கூர்கிறோமா என்றால் இல்லை என்பது தான் வேதனையான உண்மை.

’அம்மாவுக்கு அதெல்லாம் பிடிக்காது. அம்மா அதையெல்லாம் பொருட் படுத்த மாட்டார்கள்’ என்று நாம் சமாதானம் கொள்ளலாம். அது உண்மையும் கூட. ஆனாலும் நினைவு வைத்திருந்து ஒரு முறை வாழ்த்துச் சொல்லிப் பாருங்களேன்.
அந்தத் தாயுள்ளம் எப்படி பூரித்து மகிழும் என்பதை.

வெட்கச் சிரிப்புடன் அன்று நாளெல்லாம், “எனக்கே நினைவில்ல... இந்தப் புள்ள ஞாபகமா ஃபோன் பண்ணுது” என்று பிறரிடம் சொல்லி மகிழும் போது நமக்குப் புரியும் எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று!

பலர் வீட்டில் அப்பாக்களுக்கும் கூட இதே நிலை தான் இருக்கும்.

அதனால் இப்பதிவைப் படிப்பவர்கள் இதுவரை இல்லாவிடினும் இனி உங்கள் அம்மா அப்பா பிற்ந்த நாளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தத் தேதியில் சென்று அவர்களிடம் செல்லம் கொஞ்சிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

(பி.கு: தவறாமல் அப்பா அம்மா பிறந்த நாளை நினைவு வைத்து அவர்களை மகிழ்விக்கும் நல்ல பிள்ளைகளுக்குச் சிறப்பு பாராட்டுக்கள். அவர்கள் தங்கள் அனுப்வங்களைப் பகிரும் படியும் கேட்டுக் கொள்கிறேன்)

Thursday, October 1, 2009

வறட்சி

தளும்பித் தளும்பி வழிந்த பாத்திரம் அது...
மூட முடியாமல், தீரவே தீராதோ எனும்படியாக
என்றோ ஒரு நாள் தடாலென்று கவிழ்ந்தது...
மிச்சம் மீதி இருந்ததும் இன்னொரு பொழுதில் காய்ந்து போனது
வாசமாவது மிஞ்சட்டும் என்று மூடி மூடி வைக்கிறேன்

கூத்தாடி

இருபதடி உயரத்தில் கயிற்றின் மீது நடந்தான்;

வாய் பிளந்து அதிசயித்தது

உடலை மடக்கி மடக்கிக் கரணம் அடித்தான்;

கை தட்டி மகிழ்ந்தது

முகத்தை அஷ்ட கோணலாக்கி ஏதேதோ பேசினான்;

வாய் விட்டுச் சிரித்து ரசித்தது - அதில் பொன்னும் ம‌ணியும் சித‌றின‌

போதையில் கிறுகிறுத்தான்;

உடல் இருபதடி, மனம் இருநூறடி சென்றது - கால் ச‌றுக்கிய‌து

ஆட்டமெல்லாம் முடிந்து ஊர்செல்லும் முன் ஒரே முறை அதைக் காண‌ விரும்பினான்;

நாலே நாலு கிடைத்தது - அதுவும் கூலிக்கு

Sunday, September 27, 2009

புது மொழிகள்!

காலம்காலமாகப் பெண்களைக் கிண்டலடித்து ஏராளமான பழமொழிகளும் சொலவடைகளும் நம் நாட்டில் புழக்கத்திலுள்ளன.

அதனாலென்ன, நம் முன்னோர்களில் பெண்கள் தான் அதிக நகைச்சுவை உணர்வுடனும், பெருந்தன்மையுடனும் இருந்திருக்கிறார்கள் அதனால் அதை அனுமதித்து ரசித்தும் வந்திருக்கிறார்கள்.

இக்காலத்தில் தான் ஆண்கள் பெருமளவு பெண்களுக்குச் சம உரிமையையும் அந்தஸ்தையும் விட்டுக் கொடுத்து விட்டார்களே! பெண்ணியம் என்றும் பெண்கள் உரிமை என்றும் பேசுவதெல்லாம் தேவையே இல்லையென்பதும் சிலர் வாதமாக இருக்கிறது. அதனால் தைரியமாக ஒரு சின்ன சோதனை முயற்சி!

''கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" – இது பழசு

மண்ணானாலும் மனைவி
பின்னால் பிறந்தாலும் பொண்டாட்டி
– இது புதுசு!

''அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள் - இது பழசு

''அஞ்சும் மூன்றும் உண்டானால் அரை டவுசர் பையனும் கறி சமைப்பான் - இது புதுசு!

பொம்பளை சிரிச்சா போச்சு; பொகையில விரிச்சா போச்சு - இது பழசு

ஆம்பளை உக்காந்தா போச்சு, அன்னிக்கு அடுக்களையில சமையலும் போச்சு! - இது புதுசு!

ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்; - இது பழசு

ஒய்யார ஹேர்ஸ்டைலாம், ஜெல் போட்ட முடி, உத்துப் பாத்தா டையடிச்ச
நரைச்ச முடி
- இது புதுசு!

வரவர மாமியா கழுதை போல ஆனாளாம் - இது பழசு
வரவர மாமன் தான் குரங்கு போல ஆனானாம் - இது புதுசு!

...and last but not the least,

பெண்புத்தி பின் புத்தி - இது பழசு

பெண் புத்தி பொன் புத்தி
ஆண் புத்தி அரை புத்தி
- இது புதுசு!

இந்தப் புதியச் சொலவடைகளை உங்கள் வீட்டில் பேச்சு வாக்கில் உதிர்த்து வாருங்கள். என்ன எதிர்வினை கிடைக்கிறது என்பதைத் தெரிவித்தால் நலம்.

(ஆனால் கடுமையான எதிர்வினைகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இடம் பொருள் ஏவல் பார்த்துச் சோதனை செய்வது உங்கள் சமர்த்து!)

Wednesday, September 23, 2009

நிறங்கள்

விடியல் இன்னும் வரவில்லை...
இருண்ட‌ வானில் மாறி மாறி நிற‌த் தீற்ற‌ல்கள்
நிற‌பேத‌ம‌ற்ற‌ விடிவெள்ளிக்காக‌ ஏக்க‌த்துட‌ன்...

Monday, September 21, 2009

ஹூம்....!

விவஸ்தை இல்லாமல் நினைவுக்கு வருகிறது
”மது அரக்கனை ஒழிப்போம்” - பேச்சுப் போட்டியில் வாங்கிய பரிசு

- நீ குடித்து வைத்த விஸ்கி க்ளாஸைக் கழுவும் போது.

Friday, September 18, 2009

ஒரு பக்கம் ரைம்ஸ்.. ஒரு பக்கம் ப்ளாக்!

ஒரு சின்ன ப்ளாஸ்டிக் பட்டையில் இரு கருநீலக் கோடுகளாகத்தான் அவளை முதலில் சந்தித்தேன்.

இப்போதானால் அவள் அப்பா பாஷையில் ”ரௌடிக்” குட்டியாக வளர்ந்து எல்லோரையும் அரட்டிக் கொண்டிருக்கிறாள்.

நேஹா!

நீ நல்ல பிள்ளையாக உன் தாத்தா பாட்டி வீட்டில் இருந்து கொள்வாய் என்று அம்மாவுக்கு நம்பிக்கை வந்து விட்டதுடா குட்டி. அதனால் அம்மா மீண்டும் வேலைக்குப் போகலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.


இதோ உன்னை விட்டுச் சென்ற இந்த ஒரு வாரம், என்னவோ பலமான யோசனையுடன் இருப்பதாகவும், சூழ்நிலையைப் புரிந்து கொண்டு மிகவும் சமர்த்தாக இருப்பதாகவும் உனக்குச் சான்றிதழ் கொடுத்து விட்டார்கள்.


ஹீம்.. உன் அம்மா அவ்வளவு சமத்தில்லையடி! நிச்சயம் முன் போல இல்லை அலுவலுக்குச் செல்வது. அலுவலக நேரத்துக்கு அரைமணி நேரம் முன்பாக எழுந்து அவசர அவசரமாகக் கிளம்பி காலை உணவுக்கு எதையோ சாப்பிட்டு, வேலைக்குச் சென்று மாலை அடைந்து கொள்ளும் கூடு என்பதைத் தவிர வீட்டு நினைப்பே வராது.

இப்போது....
எத்தனை முறை கேட்டாலும் ”அம்ம்ம்மா” சொல்லு என்றால் ”அப்பா” தான் சொல்வது! சொல்லி விட்டு என்னைப் பார்த்துக் குறும்பாகச் சிரிப்பது;


நான் லயித்து டி.வி பார்க்கும் போது ரிமோட்டை எடுத்து ஆஃப் செய்து வீசி விட்டு வந்து என் மடியில் அமர்ந்து கொள்வது;

கொஞ்சம் தெருவில் வைத்து வேடிக்கை காட்டச் சென்றால் யாராவ்து சிறுவர்களைப் பார்த்து விட்டால் இடுப்பை விட்டு இறங்க வேண்டுமென்று அடம்பிடிப்பது;

எதற்காகவாவது சட்டை மாற்றி விட்டாலும் கைகளை ஆட்டிக் கொண்டு “டாட்டா, ஆட்டோ” சொல்வது...


சரி சமத்தா விளையாடிட்டு தானே இருக்கா என்று நான் சாப்பாட்டில் கை வைத்தவுடன், பருப்பு, உளுந்து, தண்ணீர் என்று எதையாவது தரையில் கொட்டி எனக்கு வேலை வைப்பது;

இன்னும்.. இன்னும்..இப்படி ஒரு கணமும் உன்னைப் பிரியாமல்
இதையெல்லாம் ரசித்து, உன்னுடன் போராடி, மல்லுக் கட்டி, உன்னைத் தூங்க வைத்து விட்டு ரகசியமாய், மறக்காமல் ஸ்பீக்கர்ஸை ம்யூட் பண்ணி விட்டுக் கணினியை ஆன் செய்தாலும் எப்படியோ இடையில் கூக்குரலுடன் எழுந்து விடுவது!

இதெல்லாம் அனுபவிக்க மாலை நேரங்களிலும் வாரஇறுதியிலும் மட்டுமே எனக்கு சாத்தியப்படும் என்று நினைக்கும் போதே சொல்லத் தெரியாத ஏதோ நெருடுகிறது மனதில்!

இருக்கிற கொஞ்ச நேரத்தில் மிக முக்கியமான பங்கு நேஹாவுக்கு என்பதால் பதிவுலகத்துக்கான நேரத்துக்கு இன்னும் மெனக்கெட வேண்டும். அலுவலகத்தில் சுத்தமாக முடியாது!

அதனால் முன்பு அளவுக்கு பதிவுகள் எழுத முடியுமா என்று தெரியவில்லை; ஆயினும்...

இதோ இக்கணம் செய்வது போல் நேஹாவை மடியில் இருத்திக் கொஞ்சிக் கொண்டே ஒரு விண்டோவில் ரைம்ஸ், இன்னொரு சின்ன விண்டோவில் வேர்ட், அல்லது ப்ளாக் திறந்து எழுதுவது வழக்கம் தான்.

- இப்படியெல்லாம் நீ எழுதலன்னு உன்னை யார் அடிச்சான்னு கேக்கறீங்களா? - உங்கள் அனைவரின் அன்பு தான்!

இல்லடா நேஹா?!

:-)

Thursday, September 10, 2009

பெண்ணியம் - ஒரு சிறு பார்வை

நண்பியிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். எனக்குப் பெண்ணிய எண்ணங்களுடன் எழுதும் யாரையும் பிடிக்கும் என்று.

அவசரமாகப் பார்த்தால் இது குறுகிய மனப்பான்மை போலத் தோன்றும். இல்லவே இல்லை. இது ஒரு மாற்றுப் பார்வை; வரவேற்கத் தக்க பார்வை. இந்தப் பார்வைக்கு உள்ள பஞ்சம் தான் இன்னும் நம் பெண்களை இரண்டாம் நிலையிலேயே வைத்திருக்கிறது.

பெண்ணியம் என்ற வார்த்தை மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் நமக்கு ஏக குழப்பங்கள்.

ஏதோ என் மனதில் தோன்றியதை இங்கே சொல்லி இருக்கிறேன்.

படிக்கும் சூழல் கூட இல்லாமல் குறைந்த பட்ச சுதந்திரம் கூட இல்லாமல் வளர்க்கப்படும் பெண்களைப் பற்றி எனக்குப் பேசத் தெரியவில்லை. படித்த, புத்திசாலியான, தேவையான அளவு சமூக விழிப்புணர்வுள்ள இன்றைய பெண்களை நோக்கியே இப்பதிவு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். – சுருக்கமாகச் சொன்னால் அனைத்துப் பெண் பதிவர்களையும் :-)

பொதுவாக ஒரு எண்ணம் உண்டு. திருமண வாழ்க்கை சரியாக அமையாதவர்கள், ஆண்களால் பல கஷ்டங்களைச் சந்தித்தவர்கள், சமூகத்தோடு ஒத்து வாழத்தெரியாதவர்கள் - இவர்கள் தான் பெண்ணியம் பேசுவார்கள் - அல்லது ’பெண்ணியம் பேசுபவர்கள் குடும்பத்துக்கு லாயக்கல்ல’; ’நாம் என்ன தான் பேசினாலும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது’ என்று.

நிற்க. இதை ஆண்கள் பேசினால் சட்டை செய்யாமல் இருக்கலாம்; சென்ற தலைமுறையைச் சேர்ந்த அல்லது படிக்காத பெண்கள் பேசினாலும் மன்னித்து விடலாம். ஆனால் இன்றைய படித்த, புத்திசாலிப் பெண்களில் பலர் கூட, பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்தாலும் உணர்வு ரீதியாக மன ரீதியாக ஆண்களுக்கு அடுத்த இடத்தில் தான் தங்களை வைத்துக் கொள்கிறார்கள். அதனால் பெண்ணியம் என்பது குடும்பங்களில் கலகமூட்டக் கூடிய சொல்லாகவே பார்க்கப் படுகிறது. ஆனாலும் பேசவாவது செய்வோம். அதற்குத் தடை இல்லை அல்லவா?

ஆண்களால் பாதிக்கப் படும்போது பெண்களுக்கு ஒருவரோடொருவர் உணர்வு ரீதியாக உண்மையான நெருக்கம் ஏற்படுகிறது. பெண்ணியமும் தேவைப்படுகிறது.

ஆண் வேறு பெண் வேறு தான். ஆண் செய்வதையெல்லாம் பெண் செய்ய வேண்டும்; பெண் செய்வதையெல்லாம் ஆண் செய்ய வேண்டும் என்பதில்லை.

உயிரைச் சுமக்கும் பெண்ணின் உடல் போற்றத் தக்கது; பாதுகாக்கப் பட வேண்டியது.

’ஆண் பெண் சம உரிமைன்னு சொல்லிட்டு பஸ்ஸில் தனி சீட் கேட்கிறீர்களே’ என்ற விதண்டாவாதத்தை எல்லாம் ஆண்கள் முன் வைக்கக் கூடாது.

பிள்ளை பெற்று விட்டு மூன்று மாதத்திலும் மாதவிடாயின் வயிற்றுவலியைச் சுமந்து கொண்டும் பெண்கள் வேலைக்குப் பயணிக்கக் கூடும் என்பது அவர்களுக்கு ஏன் புரிவதில்லை? அதற்காக அவர்களைப் பலவீனமானவர்கள் என்று வகைப் படுத்தவேண்டாம்.

பெண்ணின் உடலுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அதீத மரியாதை தரவேண்டும். மனதையும் உணர்வுகளையும் சமமாக நடத்த வேண்டும்.

ஆனால் கொடிய வேடிக்கையாக இங்கே நடப்பதோ தலை கீழாக இருக்கிறது. பெண்களின் உடலைக் கேளிக்கைப் பொருளாகவும் அகத்தைக் குப்பைத் தொட்டியாகவுமே பாவிக்கிறது இச்சமூகம்.

இச்சமூகத்தின் தயாரிப்பான பெண் இயல்பாகவே சுயமரியாதை இல்லாதவளாகத் தான் வார்க்கப் படுகிறாள்.

அறிவும் தன்னம்பிக்கையும் கூடிய எந்தப் பெண்ணும் திருமணத்துக்குச் சம்மதிக்கும் போது தனது சுயமரியாதையை அடகு வைத்தவளாகவே ஆகி விடுகிறாள். எல்லாரும் ஏறக்குறைய அப்படித் தான் என்பதால் அது யாருக்கும் பெரிதாக்த் தெரிவதில்லை.

காதல் திருமணத்தில் கூட, காதலிக்கும் போது பெண்ணின் கடைக்கண் பார்வையை பெற படாத பாடு படும் ஆண் திருமணத்துக்குப் பிறகு அன்புக்காக ஏங்கித் தனது குடும்பத்தாருடன் போட்டி போடும் நிலைக்குத் தானே அவளை ஆளாக்குகிறான்?

மாமியார் மருமகள் சண்டைகளுக்கு மூல காரணம் பெண்களின் உளரீதியான பாதுகாப்பற்ற உணர்வு தானே? அதைச் சுரண்டியே கொழுக்கும் ஆண் வர்க்கம் தானே? அதனால் ஆண்களின் நிம்மதியும் போகிறது என்பது பக்க விளைவு தான்.

ஆனால் இவர்கள் உத்தமர்களாகவும் பெண்களால் தான் வீட்டில் இவர்கள் நிம்மதி போகிறது என்ற ஒரு பிம்பத்தையும் நமது மூளைக்குள் திணித்து வைத்திருக்கிறார்கள்.
பெண் ஒழுங்கா இருந்தால் குடும்பம் ஒழுங்கா இருக்கும், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே. பெண் நினைத்தால் எப்படிப்பட்டவனையும் திருத்தி நல்ல வாழ்க்கை வாழலாம். இவர்களைத் திருத்துவது தான் நம் வேலையா? அவரவர் தங்கள் ஒழுங்கைப் பார்த்துக் கொண்டாலே போதும்.

பல பிரச்னைகள் பெண்களுக்கு மட்டும் இரண்டு வீடு என்ற நியதியால் பிறந்தது தானோ என்று தோன்றுகிறது.


இன்றைய நிலையில் பொருளாதாரத்திலும் சம சுதந்திரம் பெற்று விட்ட போது ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ எந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தால் என்ன?
இருவரின் பெற்றோரையும் சமமாகப் பாவித்தாலென்ன?

பெண்களும் தேவையில்லாத ’நல்ல பெயர்’களுக்காகப் பெண்ணடிமைத் தனத்தைப் பூசிக் கொள்வதை விட்டொழிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, நம் தோழிகளுடன் கல்லூரிப் பருவத்தில் பேசிய புரட்சிகரமான பேச்சுக்களை நினைத்துப் பார்போம்; (விளையாட்டாகவாவது நிச்சயம் பேசி இருப்போம்.) மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கூடுமானவரை அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவோம்.

மாமியார்கள் நம்மை விடப் பாவம் என்று உணருவோம். அடுத்த தலைமுறையினரான் நமக்கு இருக்கும் ’எக்ஸ்போஷர்’ அவர்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.

அவர்கள் நம்மை மோசமாக நடத்தினாலும் கண்டு கொள்ள வேண்டாம். நாம் புதுயுகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களையும் கைப் பிடித்து அழைத்துப் போவோம் பெண்ணடிமை அற்ற சமுதாயத்துக்கு.

யார் என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. செய்ய இடம் கொடுக்காத உயரத்தில் நம்மை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

மேலும், கணவன், மாமனார் இவர்களிடம் நல்ல பெயரெடுக்க வேண்டி மாமியார் நாத்தனார்களுக்குக் குழி வெட்ட வேண்டாம்.
பதிலுக்கு அவர்களும் அதைச் செய்வார்கள் என்பது நினைவிருக்கட்டும். இத்தகைய செயல்களால் நம்மை அறியாமல் பெண்ணடிமைத் தனத்தை ஊக்குவிக்கிறோம்.

என்ன தான் சொன்னாலும் ஆண்களிடம் நல்ல பெயரெடுக்க வேண்டிப் பிற பெண்களை விட்டுக்கொடுப்பவர்களும் இருக்கத் தான் செய்வார்கள். அவர்களையும் கூட மன்னிக்கக் கற்றுக் கொள்வோம். After all, they are also products of the environment. Let’s take pride that we chose to be different!

இதில் தவறி எதிர்க்கையை ஓங்கினால் நாமும் சாக்கடைக்குள் அமிழ்ந்து விடுவோம்!அப்புறம் இதற்கு முடிவே கிடையாது.
பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்ற மிகப் பெரிய டின்னை நம் முதுகில் கட்டி விடுவார்கள்.

யோசித்தால் பெண்களைப் போல் ஒற்றுமையாக இருக்கவும் மனமொத்து அன்பு செலுத்தவும் ஆண்களுக்குத் தெரியாது.
பெரும்பாலான ஆண்களுக்கு மனம் விட்டுப் பேசிக் கொள்ளவே இடையே இரண்டு க்ளாஸ்களும் ஒரு ஃபுல்லும் தேவைப் படும்.
- விதிவிலக்குகள் எங்கேயும் உண்டு. :-) நமக்கு அப்படியா?

அதனால் நமது சிந்தனைகளையும் உணர்வுகளையும் ஆக்கிரமிக்கும் ஆண்களைச் சற்று மறப்போம்.

நமக்காகச் சிந்திப்போம். நம்மைப் பற்றிச் சிந்திப்போம். சேர்ந்து சிந்திப்போம்.

Wednesday, September 9, 2009

காதம்பரி(அம்மு) – மாதவராஜ் தம்பதியரை வாழ்த்துவோம்!




இன்று 20 ஆவது திருமண நாள் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றனர் காதம்பராஜ் – மாதவரி - :-) இல்லை, மாதவராஜ் காதம்பரி தம்பதியர்!
வாருங்கள்; வாழ்த்துவோம்!

Love does not consist in gazing at each other, but looking together in the same direction.

இந்தப் பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர்கள் அம்முவும் அங்கிளும். ஒருவர் வெற்றிக்கு ஒருவர் பக்கபலமாக வாழும் இவர்களது அன்புக்கு மேலும் அர்த்தம் சேர்க்க ஜ்யோதிஷ்னா (ப்ரீதி), நிகில்குமார் என்ற இரு செல்வங்கள் உள்ளனர்.

இந்நன்னாளில் பதிவுலகத்துடன் சேர்ந்து இவர்களை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

Tuesday, September 8, 2009

ஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு!

இந்தப் பதிவு எழுத அழைத்த முல்லைக்கு நன்றி சொல்வதா வேண்டாமா என்று முதலில் யோசித்தேன்!
:-)

பதிவுலகம் பற்றி யோசித்த போது...

”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
என்ற குறள் நினைவுக்கு வந்தது. அதன்படி பதிவுலகம் மூலம் நான் அடைந்த நன்மைகளையும் எண்ணற்ற இனிய அனுபவங்களையும் பகிரப் போகிறேன். :-)

பிளாக்கர் என்று ஒரு விஷயத்தை 2004 இல் அறிந்தேன். அதைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது, ஆர்வமும் இருக்கவில்லை.

2006 நவம்பரில் ஆங்கிலத்தில் ஒரு பிளாக் தொடங்கினேன். அதில் அவ்வப்போது தோன்றினால் ஏதாவது கிறுக்கி வைப்பேன்.
ஒரு பப்ளிக்கான டைரி போல் இருந்தது அது.
நண்பர்கள் யாராவது படித்து விட்டு கருத்து கூறுவார்கள். ஆனாலும் விடாமல் எழுதிக் கொண்டு தான் இருந்தேன். திரட்டிகள் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது.

பின்பு செப்டம்பர் 2008 – ல் மாதவராஜ் அங்கிள் தமிழில் வலைப்பூ துவங்கினார். ஜெட் வேகத்தில் தமிழ்ப் பதிவுலகம் பற்றி எல்லா நுணுக்கங்களையும், தகவல்களையும் தெரிந்து கொண்டதோடு இந்த அசமஞ்சத்துக்கும் (நான் தான்!) தெரிவித்து உதவினார். தமிழிலும் எழுதுமாறு என்னிடம் சொல்லி வந்தார்.

அக்டோபர் மாதத்தில் நானும் தமிழில் வலைப்பூ தொடங்கி அதற்கு ”உள்ளுவதெல்லாம்” என்று முதலில் பெயரிட்டேன்.

’உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற வள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப இருக்கவேண்டும் என்று உள்ளினேன்!
பின்பு பெயர் இன்னும் எளிமையாக இருந்தால் நல்லதென்று தோன்றியதால் “சிதறல்கள்” என்று மாற்றி விட்டேன்.

முதலில் கோபி தமிழ் கன்வெர்டர் பயன்படுத்திக் கொண்டிருந்தேன் பின்பு NHM writer பற்றிச் சொன்னவரும் அங்கிள் தான். வெகு நாள் ரொம்ப எழுதாமல் படித்துக் கொண்டு மட்டும் இருந்தேன். அங்கிள் பக்கத்தில் மட்டும் பின்னூட்டம் போடுவேன்.

ஏதாவது எழுதலாம் என்று ’உட்கார்ந்து யோசித்தால்’ ஒன்றுமே தோன்றாது. யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும் போது, குருட்டு யோசனையுடன் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது (குறிப்பாகப் பாத்திரங்கள் துலக்கும் போது!) ஏதாவது தோன்றும். அதையொட்டி இதைப் பதிவு எழுதலாமே என்றும் தோன்றும். பின்பு தொடர்ந்து கொஞ்சம் குறிப்புகள் யோசித்து விட்டு நேஹா உறங்கிய பின்னோ அவள் அப்பாவிடம் விளையாடிக் கொண்டிருக்கும் போதோ கணினியைத் தட்ட வந்து விடுவேன்! சில நாள் அவளை மடியில் வைத்தபடியே.

சின்னச் சின்னக் குழந்தைகளின் அம்மாக்கள் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் மழலையையும் கவிதையாகப் பதிப்பதைப் படித்துக் கிறங்கிப் போவேன்.
அவற்றில் எல்லாம் நானும் நேஹாவைக் காண்பதால் நேஹாவைப் பற்றி தனியாக நான் அதிகம் எழுதியதில்லை.

மார்ச், ஏப்ரல் 2009 முதல் தான் முழு ஆர்வத்துடன் எழுதத் தொடங்கினேன். பின்னூட்டம் மூலமாகப் பலரும் அறிமுகமாகினர். தமிழும் தமிழை நேசிப்பவர்களும் பதிவுகள் மூலம் பரவசமானதொரு வாசிப்பனுபவத்தை அள்ளி அள்ளி வழங்குவதைப் பார்த்துப் பிரமித்தேன்; பூரித்தேன்.

பலரது பதிவுகளைப் படித்து ரசிக்கத் தொடங்கினேன். வெளிப்படையாக மனம் திறந்து என் ரசனையையும், மகிழ்ச்சியையும் பின்னுட்டமாக இடத் தொடங்கினேன். நண்பர் வட்டம் விரிந்தது.

மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு அதைப் பற்றி இந்தப் பதிவு கூட எழுதினேன்! - தூக்கம் இழுக்கும் கண்களுக்குள்

எச்சரிக்கையும் நிதானமும் வாழ்வின் எல்லா சமயங்களிலும் கடைப் பிடிக்கவேண்டும் என்பதையும்; அதுவும் பெண்களிடம் சமூகம் அதைக் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளப் பதிவுலகம் ஒரு சின்ன வாய்ப்பை வழங்கியது. அதையும் நன்றியுடனே நினைத்துப் பார்க்கிறேன்.

தாய்மையும் குழந்தை வளர்ப்பும் ஒரு அலாதியான அனுபவம் என்றாலும் புறவாழ்க்கை என்பது ரொம்பக் குறைந்து போன இந்த ஓராண்டில் என் எண்ணங்களுக்கு வடிகாலையும் சஹிருதயர்கள் பலருடன் பழகி அளவளாவும் வாய்ப்பையும் வழங்கிய பதிவுலகத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாமல் எதையாவது எழுதலாம் என்ற ஊக்கத்தைக் கொடுத்தது, (சிறுகதை என்ற பெயரில் உங்களைப் படுத்தியது உட்பட) பதிவுலகம் தான்.

அது போலவே என் பக்கத்தைத் தொடரும் அன்புள்ளங்களுக்கும் தொடர்ந்து பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தும் நெஞ்சங்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிக்க விழைகிறேன்.

தொடர்ந்து நான் இணைத்து வரும் தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் திரட்டிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என் அனுபவங்களைப் பகிர அழைத்த முல்லைக்கும் மீண்டும் என் நன்றி.

இப்போது நான் அழைக்க விரும்பும் நால்வர்:

காமராஜ் அங்கிள்
அமுதா
அமிர்தவர்ஷினி அம்மா
அய்யனார்

இத்தொடர் பதிவின் விதிமுறைகளுக்கு முல்லையின் பதிவைப் பார்க்கவும்.

Saturday, September 5, 2009

அப்பளச்சட்டியும் அறிவியல் பெயர்களும்!

சிறுவயதில் என் வருங்காலக் கனவு ஆசிரியை ஆவது தான்.
என் குடும்பத்தில் நிறைய ஆசிரியர்கள் உண்டு.
என் அம்மா, அக்கா, மாமனார், நாத்தனார் எல்லோருமே அந்த தொழிலை விரும்பி பக்தியோடு ஆற்றும் ஆசிரியர்கள் என்பதில் பெருமையடைகிறேன்.

முல்லை இன்று எழுதிய பதிவைப் பார்த்ததும் நானும் என் பள்ளி ஆசிரியைகளின் நினைவுகளில் மூழ்கி விட்டேன்.

கல்லூரியில் வகுப்புகளில் ரொம்பக் கவனம் செலுத்தியதாக நினைவும் இல்லை, சுகி சார் (ரிட்டையராகி விட்டார்) தவிர எந்த புரஃபஸரும் ரொம்ப ஈர்த்ததும் இல்லை.

ஆனால் நான் எல்.கே.ஜி முதல் பத்தாவது வரை படித்த அந்தச் சிறு பள்ளியில் தரமான கல்வியும் ஒழுக்கமும் அமைய தன்னலமற்ற அதன் ஆசிரியைகளே முக்கியக் காரணம்.

ஜெயா மிஸ், ஜான்சிராணி மிஸ், லில்லி மிஸ், சரஸ்வதி மிஸ், ஒரே ஒரு வருடம் ஆங்கிலமும் சமூக அறிவியலும் எடுத்தாலும் மனதை விட்டு நீங்காத ரமோலா மிஸ், கொள்ளை அழகுக்கு மட்டுமல்லாமல் கண்டிப்புக்கும் பெயர் போன ஆஷா மிஸ்,
எல்.கே.ஜி யில் அன்புடன் அரவணைத்த விஜயலக்‌ஷ்மி மிஸ், இவர்களை எல்லாம் இந்த நன்னாளில் நினைத்துப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதில் ஜெயா மிஸ்ஸுக்கு எப்போதும் மனதில் ஒரு தனி இடம் உண்டு.
இரண்டாம் வகுப்பில் ஸயன்ஸ் டீச்சராக வந்தவர் ஆறாவது முதல் பயாலஜி எடுத்தார். நான்காம் வகுப்பில் மட்டும் எங்கள் வகுப்புக்கு ஆங்கிலம் எடுத்தார்.

அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அத்தனை ஆண்டுகளிலும் அவர் எந்த ஒரு மாணவருக்கும் பாரபட்சம் காட்டியதே இல்லை.

வகுப்பில் பாடத்தைத் தவிர சொந்தக் கதை, சோகக் கதை என்று வெற்று அரட்டை அடிக்கவே மாட்டார். ஆனாலும் அவரது வகுப்பு அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.

நகைச்சுவையாக அவர் மனதில் பதிய வைத்த அறிவியில் அடிப்படைகள் இன்றும் அவரைப் பல்வேறு சமயங்களில் நினைவு கூர வைக்கின்றன.

உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று - உயிரினங்களுக்கு இருக்கும் ஸைண்டிஃபிக் பெயர்கள் (செம்பருத்திக்கு Hibiscus rosa sinensis இப்படி) குறித்துப் பாடமெடுக்கும் போது அன்று வகுப்பை இப்படித் தான் தொடங்கினார்.

“உங்கள் வீட்டில் அப்பளம் பொரிக்க என்ன பாத்திரம் பயன்படுத்துவார்கள்?” என்று கேட்பார்.
ஒரு பிள்ளை எழுந்து “கடாய் மிஸ்” என்று சொல்லும்; இன்னொன்று “வாணால் மிஸ்”. இன்னொன்று “இலுப்பைச்சட்டி” என்று சொல்லும்.

”பார்த்தீர்களா, ஒரே வகுப்பில் படிக்கும் நீங்களே ஒரு பாத்திரத்துக்கு இவ்வளவு பெயர்கள் வைத்திருக்கிறீர்கள். உலகெங்கும் அறிவியலாளர்கள் ஒரு செடியையோ மிருகத்தையோ குறிப்பிட அவரவர் மொழியைப் பயன்படுத்தினால் என்ன ஆவது. அதனால் அறிவியல் பெயர்கள் அறிமுகப் படுத்தப்பட்டன” என்று கூறுவார்.

பாருங்கள், இன்று வரை என் மனதில் பதிந்திருக்கிறது. அவரது பாடத்தில் தோல்வியடையும் மாணவர்கள் வெகு குறைவு. மேலும் படங்கள் வரைந்து எந்த விஷயத்தையும் அழகாக விளக்குவார்.

இன்னொரு முக்கியமான விஷயம், நான் பார்த்து அவர் மட்டும் தான் எல்லா ஆசிரியைகளோடும் நல்ல நட்பு வைத்திருந்தார். யாரைப் பற்றியும் புறம் பேசியும் நான் பார்த்ததில்லை.

அவரது பாடம் அறிவியல் என்றாலும் ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு ஆண்டு ஆங்கிலம் எடுக்க நேர்ந்த போது அதையும் அவரது பாணியில் எங்கள் விருப்பப் பாடம் ஆக்கினார். வகுப்புக்கு வெளியில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது கூட ஆங்கில உச்சரிப்பைச் சரி படுத்தியது நினைவுக்கு வருகிறது.
அவரிடம் எனக்கு ஒரே விஷய்ம் பயம். தேர்வு எழுதும் சமயம் தண்ணீர் கேட்டால் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. ”இரண்டு மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாதா. எழுத வரும் முன் குடித்து விட்டு வர வேண்டியது தானே” என்று திட்டுவார். அதனால் அவர் கண்காணிப்பாளராக இருந்தால் கேட்கவே மாட்டோம்.

இன்னொரு முக்கியமான விஷயம். ஐந்தாவது படிக்கும் போது நானும் என் தோழியும் அவரிடம் சென்று குழந்தை பிறப்பு பற்றி கேட்ட போது எங்களைத் திட்டித் தீர்க்காமல், அவமானப் படுத்தாமல், அலட்சியமும் படுத்தாமல், அந்த வயதுக்கு எவ்வளவு சொல்லலாமோ அதை அழகாக உண்மையாகச் சொல்லிப் புரியவைத்ததை இப்போது நினைக்கும் போதும் அவருக்குச் ஸல்யூட் வைக்கத் தோன்றுகிறது.
எங்கள் பள்ளியிலேயே தலைமை ஆசிரியையாகச் சிலகாலம் பணி புரிந்து பின்பு ஒய்வு பெற்றார் என அறிந்தேன்.

ஜெயா மிஸ் அவர்களுக்கும் தன்னலமற்ற கல்விச்சேவை புரியும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும்

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

பி.கு: கல்லூரியில் பல நல்ல புரஃபஸர்கள் இருந்தார்கள். நான் தான் சரியாக அவர்கள் பாடத்தைக் கவனிக்கவில்லை. நரசிம்மன் ஸார், இராஜகோபாலன் ஸார், மீனாம்பாள் மேம், அருமைராஜ் ஸார் இவர்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
வயசாகிக் கொண்டு வருகிறதா? அது தான் மறதி! :-)

Friday, September 4, 2009

07420021555503028936 - இது தான் நான்!

வலையுலக அன்பர்களுக்கு,

என் பெயரைப் பயன்படுத்தி வக்கிரம் பிடித்த பின்னூட்டங்கள் சில வலைப்பக்கங்களில் வந்துள்ளதாக அறிகிறேன்.
தயவு செய்து என் பெயர் தாங்கி வரும் அந்தச் சுட்டியின் மீது மவுஸை வையுங்கள். கீழே ஸ்டேட்டஸ் பார் http://www.blogger.com/profile/07420021555503028936 என்று காட்டும்.

07420021555503028936 - இந்த எண் வந்தால் தான் அது என்னால் இடப்பட்ட பின்னூட்டம்.

தற்போது தவறாக வந்துள்ள பின்னூட்டங்களில் 08355111887866474837 என்று உள்ளது. இப்படி வந்தாலோ வேறு எண்கள் வந்தாலோ அது என்னால் இடப்பட்ட பின்னூட்டம் இல்லை.

மிக்க நன்றி.

தகவல் தெரிவித்த பைத்தியக்காரன் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்.

காலெஜ் ஆர்க்கெஸ்ட்ரா – நட்பும் இசையும்

பழைய பாடல்களைக் கேட்கும் போது நம் எல்லாருக்குமே அந்தந்த காலத்தில் நமது அனுபவங்களும் நினைவுக்கு வரும். ”இந்தப் பாட்டு நான் ஸ்கூல்ல படிச்சிட்டிருக்கும் போது செம ஹிட். இந்தப் படப் பாட்டு தான் என் கல்யாண மண்டபத்தில நாள் பூரா அலறிட்டு இருந்தது....” இப்படி நிறைய.

ஆனால் கால பேதமின்றி சில பாடல்கள் (ப்ளாக் அண்ட் ஒயிட் படமானலும் கூட) எப்போதும் என் கல்லூரியையே நினைவு படுத்தும். இல்லைங்க, எனக்கொண்ணும் கே.பி. சுந்தராம்பாள் வயசாயிடலை.

அதற்குக் காரணம், ஆர்க்கெஸ்ட்ரா. என் கல்லூரி வாழ்க்கையில் கொஞ்சமும் மறக்க முடியாத, தனித்துவம் வாய்ந்த அனுபவங்களுக்கு எங்கள் ஆர்க்கெஸ்ட்ராவுக்குத் தான் முதலிடம்.

கல்லூரியில் நடக்கும் எந்த விழாவானாலும் (ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டும் ஒரு விழா என்ற கணக்கில் ஆறேழு விழக்கள் நடக்கும்.) எல்லா விழாவிலும் பொதுவான அம்சம் இரண்டாம் நாள் இறுதியில் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவின் இசை நிகழ்ச்சி தான்.

ராகிங் பயத்தால் முதலாண்டு மாணவர்கள் ஆர்க்கெஸ்ட்ராவில் சேர்க்கத் தடை இருந்தது. ஆனால் ஆண்டு இறுதியில் நடக்கும் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அப்படிக் கலந்து கொண்டு பரிசையும் வாங்கியும் விட்டதால் அடுத்த ஆண்டு ஆர்க்கெஸ்ட்ராவில் என்னை உடனே அழைத்துக் கொண்டார்கள்.

ஆர்க்கெஸ்ட்ரா என்றால் ரொம்பப் பெரிதாக நினைத்து விட வேண்டாம். விளையாட்டு மைதானத்தின் காலரிக்குப் பின் புறம் தாழ்வான சாய்வு கூரையுடன் எட்டடிக்கு எட்டடியாக ஒரு சின்ன இடம். அதில் ஒரு மூலையில் எங்கள் பியானோ மாஸ்டர் கீபோர்டுடன் அமர்ந்திருப்பார். அவர் வேறு யாருமில்லை என்விரான்மெண்டல் லாபில் உதவியாளர். வெளியில் இசைக்குழுக்களுக்கும் வாசிப்பவர்.

அவருக்கு அருகில் ஒரு பழைய பியானோ. அதை யாரும் வாசித்துப் பார்த்ததில்லை. பாடகிகளான நாங்கள் அதன் பின் இருக்கும் ஸ்டூல்களில் அமர்ந்து அரட்டையடிக்கவும் கோரஸ் ப்ராக்டிஸ் செய்யவுமே பயன்பட்டது.

அவ்வப்போது ஷாக் அடிக்கும் இரண்டு மூன்று மைக்குகள். ஒரு ஒரு கிடார், ஒரு ட்ரம்ஸ் கிட், ஒரு டாம்பரின். இதெல்லாம் வழிவழியாக சீனியர்ஸ் சேர்த்த சொத்து என்றறிந்தோம்.

ட்ரம்ஸ் வாசிக்கும் ரவி அண்ணா வேலை பார்த்துக் கொண்டு மாலையில் பார்ட் டைம் பி.இ படித்துக் கொண்டிருந்தவர். மறக்க முடியாத மனிதர் இவர். நாங்கள் கல்லூரியில் விழா, ரிகர்சல் இருக்கு என்று சொல்லி விட்டால் உற்சாகமாக வந்து விடுவார். அற்புதமாக ட்ரம்ஸ் வாசிப்பார். யார் என்ன பாடல் பாடினால் நன்றாக இருக்கும் என்றும் டிப்ஸ் கொடுப்பார். சீனியர்களுக்கு ஏற்படும் ஈகோ பிரச்சனைகளையும் தலையிட்டுச் சமாதானப் படுத்துபவரும் அவரே.

ராதாகிருஷ்ணன் என்பவர், அற்புதமான புல்லாங்குழல் வித்வான் என்றே சொல்லலாம். வயலினும் வாசிப்பார். கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்யும் அளவுக்கு ஞானமும் திறமையும் உள்ள இவர் எங்கள் பாடல்களின் பின்னணி இசையில் வரும் ஃப்ளூட்/வயலின் பகுதிகளை அழகாக இசைத்து மெருகேற்றுவார்.
பூ மாலையே, நறுமுகையே, பூங்கதவே பாட்ல்கள் இவரால் மிகவும் சிறப்படைந்தன. இவரது அசரவைக்கும் அந்தத் தன்னடக்கம் நட்புக்கு இவர் காட்டிய மரியாதை என்றே எனக்குத் தோன்றுகிறது.


ஆம், ஏனென்றால் கர்நாடக இசை நன்றாகத் தெரிந்த ஒரு சில மாணவர்கள் ஆர்க்கெஸ்டரா பக்கம் வராதது மட்டுமல்ல அதை மதிக்காமல் பேசியதும் உண்டு. அதனால் எங்களுக்கு நிச்சயம் இழப்பு இல்லை, நிம்மதி தான்.

எனக்குக் கர்நாடக இசையில் கொஞ்சம் பயிற்சியும் ஆர்வமும் உண்டு. அப்பாவுக்கும் அக்காவுக்கும் அதில் பெரிய ஈடுபாடு இருந்ததனால் என்னைச் சில காலம் பாட்டுக் களாஸ் அனுப்பினார்கள். பள்ளிக்கு மேல் என்னால் அதைத் தொடர இயலவில்லை.

மேலும் கர்நாடக இசை தங்களின் குடும்பச் சொத்து என்று கருதும் சிலர் (உண்மையான ஆர்வமோ ஞானமோ இல்லாமலே) அதைப் பற்றிப் பேசுவதும் என் முப்பாட்டன், ஒன்று விட்ட அத்தை எல்லாம் வித்வான்கள் என்று பெருமை பேசியதும், பிறர் கருத்தைக் காது கொடுத்துக் கேட்கக்கூட விரும்பாததனாலும் கல்லூரிப் பருவத்தில் அத்தகையோர் சகவாசத்தை வெறுத்தேன்.

சரி, ஆர்க்கெஸ்ட்ரா மேட்டருக்கு வருவோம்.
நான், சுதா, ராஜகுரு, நந்தகுமார், செந்தில், பாலாஜி, வாணி, அனுராதா இவர்கள் நிரந்தரமான பாடகர்கள். சில விழாக்களில் அந்தந்த டிபார்ட்மெண்டைச் சேர்ந்த யாராவது ஆசைப் பட்டால், ஓரளவு நன்றாகப் பாடினால் அவர்களுக்கும் ஒரு பாடல் கொடுக்கப் படும்!

இருப்பதிலேயே ஜூனியர் என்பதாலோ என்னவோ! விரைவில் நான் அங்கு எல்லோருக்கும் செல்லமாகிப் போனேன். அதனால் பொதுவாகப் பாடகிகளுக்குள் ஏற்படும் ஈகோ எல்லாம் எனக்கும் சீனியர் மாணவிகளும் இடையே கொஞ்சமும் ஏற்படவில்லை.

மேலும் தனியாக மேடையில் நின்று போட்டிக்குப் பாடும் அனுபவத்தை விட ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுவது ஒரு டீம் வொர்க் செய்த ஆனந்தத்தைத் தரும். ஒரு பாட்டு நன்றாக பாடி முடிக்கப்பட்டால் அது மேடையிலிருந்த அனைவரின் வெற்றியாகவுமே பார்க்கப்பட்டது ஆரோக்கியமான சூழ்நிலையாக இருந்தது. தனிப்பட்ட பாராட்டும் கிடைக்கும்.


ஆனால் பெண்கள் ரொம்பக் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால் ஆளுக்கு மூன்று நான்கு பாடல்கள் கிடைத்து விடும். பசங்க தான் கொஞ்சம் அடித்துக் கொள்வார்கள். “டேய்! காலேஜோட எஸ்.பி.பின்னு என்னைத் தாண்டா சொல்றாங்க. ஸோ இந்தப் பாட்டு எனக்குத் தான்.”
“தோடா..அது உன் தொப்பையப் பாத்துச் சொன்னது. ஆனா (காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு) உன்னிகிருஷ்னன் யாருன்னு எல்லாருக்குமே தெரியும்.”

இந்த ரேஞ்சுக்கு இவர்கள் அலம்பல் தாங்க முடியாது. ரெகமண்டேஷனுக்காக பியானோ மாஸ்டருக்கு ஆளாளுக்குச் சரக்கு வாங்கிக் கொடுத்துத் தாஜா செய்யப் பார்ப்பார்கள். ஆனால் அவரும் ரவி அண்ணாவும் சரியாகச் சொல்லி விடுவார்கள். அவர்கள் இல்லாமல் நோ ஆர்க்கெஸ்ட்ரா. அதனால் அவர்கள் சொல்லுக்கு எப்போதும் மதிப்பு உண்டு.

ஒரு பாடலில் மெயின் சிங்கர்ஸ் இரண்டு பேரென்றால் கோரஸ் பாட ஐந்தாறு பேர் தேவைப் படுவார்கள். நாங்கள் ரொம்பவும் என்ஜாய் செய்தது கோரஸ் ப்ராக்டிஸ் தான். அது உண்மையில் கொஞ்சம் சவாலான வேலை.

வாக்மெனில் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். பின்புலத்தில் வருகிற கோரஸில் ஆண் குரல் எது, பெண் குரல் எது, இசைக் கருவி எது என்று கண்டு பிடித்துப் பிறகு அவரவர் பங்கை நன்றாகக் கேட்டுப் பயிற்சி செய்ய வேண்டும். பாடலின் மெயின் சிங்கர்ஸ் கூட அந்தப் பாடலுக்குரிய கோரசிலும் சேர்ந்து கொள்வோம். ஆனால் இதை மாஸ்டர் தவிர்க்கச் சொல்வார்.

மறக்க முடியாத கோரஸ் அனுபவங்கள்:

மடை திறந்து - நிழல்கள்
சந்தைக்கு வந்த கிளி - தர்மதுரை
மாயா மச்சிந்த்ரா - இந்தியன்
கல்யாணம் கச்சேரி – அவ்வை சண்முகி
சொல்லாமலே – பூவே உனக்காக
பொதுவாக என் மனசு தங்கம் – முரட்டுக் காளை
பூந்தளிர் ஆட – பன்னீர் புஷ்பங்கள்
பூ பூக்கும் ஓசை – மின்சாரக் கனவு
ஊ லலல்லா - மின்சாரக் கனவு

நான் மெயின் சிங்கராகப் பாடிய பாடல்களையும் என்னால் என்றும் மறக்க முடியாது.

செம்பூவே பூவே – சிறைச்சாலை
சொல்லாமலே – பூவே உனக்காக
மாயா மச்சிந்த்ரா - இந்தியன்
சந்தைக்கு வந்த கிளி - தர்மதுரை
காதல் ஓவியம் – அலைகள் ஓய்வதில்லை
பூந்தளிர் ஆட – பன்னீர் புஷ்பங்கள்
பூ மாலையே – பகல் நிலவு
ஊலலல்லா – மின்சாரக் கனவு
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் – கந்தன் கருணை மல்லிகையே மல்லிகையே – நினைத்தேன் வந்தாய்
வான் மேகம் – புன்னகை மன்னன்
இன்னும் சில.

பூ மாலையே பாடலில் மாறி மாறி பின்னலாக வரும் சரணத்தைக் கஷ்டப்பட்டுப் பயின்றதும் பாடி முடித்ததும் எனக்கும் நந்தா அண்ணாவுக்கும் கிடைத்த பாராட்டையும் இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது.

இன்னொரு விஷயம். ஏ. ஆர். ரஹ்மான் பாடல்களைப் பாட பலருக்கும் ஆர்வம் இருந்தாலும் எங்கள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு அது முடியாது. அதற்கு என்ன செய்வோம் என்றால் பாடகர்களை மட்டும் தீவிரமாகப் பிராக்டிஸ் செய்யச் சொல்வோம். விழா நாளுக்கு முன்னதாக “கம்போஸர்” மற்றும் “எலக்ட்ரிக்” பேட் வாடகைக்கு எடுத்து விடுவோம். (அதெல்லாம் பட்ஜெட்டை எகிற வைக்கும்) கம்போஸரில் மொத்த பின்னணி இசை ட்ராக்கையும் ஒட விட்டு எங்கள் ட்ரம்ஸ் மற்றும் வாத்தியக் கலைஞர்கள் பிரமாதமாகக் ”கையசைப்பார்கள். ஆனால் இதில் பாடகர்களுக்கு ரிஸ்க். கொஞ்சமும் டைமிங் மிஸ்ஸாகாமல் பாட வேண்டும். அதுவும் த்ரில்லிங்காகத் தான் இருக்கும்.

இந்த வகையில் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட ”ஊ லலல்லா” கோரஸ் பின்னணி இசைக்குப் பொருந்தாமல் வெறும் ஊளையாகிப் போனதை மறந்து விடுவோம்!

மூன்றாம் ஆண்டு வந்ததும் பாய்ஸ் ஹாஸ்டல் ஸ்ட்ரைக் நடந்து முடிந்ததும் எல்லா விழாக்களுக்கும் தடை போடப்பட்டது. ஆர்க்கெஸ்ட்ரா மந்தமானது. வெளியில் சென்று இரண்டு போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டு பரிசு வாங்கினோம்.

இறுதி ஆண்டு. இது தான் செம காமெடி. மூன்றாம் ஆண்டில் தான் ஆர்க்கெஸ்ட்ரா நிர்வாகம் புதிய பாடகர்களைக் கண்டு கொள்வது பற்றியெல்லாம் கற்றுக் கொள்ளலாம். அந்த ஆண்டு பிசுபிசுத்துப் போனதால் இறுதி ஆண்டில் சீனியர்களான நாங்கள் கொஞ்சம் தடுமாறினோம். பாடகர்கள் தேர்வு என் தலையிலும் நிர்வாகம் ராஜகுரு தலையிலும் விழுந்தது.

ஒரு வாரம் முழுதும் மாலை ஐந்து மணிக்குத் தேர்வு நடைபெற்றது. பாட வந்தவர்கள் “நான் எப்படிப் பாடினேன்” என்று கேட்டால் எல்லாரையுமே நல்லாப் பாடினீங்க என்று தான் சொல்வேன். பின்பு மற்றவர்களிடம் கல்ந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என்ற நினைப்பில்.

இரண்டு நாட்களுக்குப் பின் ராஜகுரு கோபமாக வந்தான் என்னிடம். “நீ என்ன தான் நினைச்சிட்டிருக்க மனசுல. எவனாவது கேவலமா பாடினாலும் சூப்பரா இருக்கு, அட்டகாசமா இருக்குன்னு சொல்லி ஏத்தி விடுறியாமே?”


”அப்படில்லாம் இல்ல... மூஞ்சியில அடிச்ச மாதிரி எப்டி சொல்றது?”

“அதுக்கு? அந்த ராஜா என்னத்த பாடறான்? அவனைப் போயி நல்லாப் பாடறன்னு சொல்லி விட்டிருக்க. அவன் வந்து விடுற ரவுசு தாங்க முடியல. ’டேய் நீ எல்லாம் பாத்ரூம்ல பாடக்கூட லாயக்கில்ல டா’ ன்னு சொன்னா, ’போடா, நீ என்ன சொல்றது தீபலக்‌ஷ்மியே என்னை அப்படி பாடற, இப்படி பாடறன்னு என்னமா சொல்லுச்சு.. நீ போடா..உனக்குப் பொறாமை’ ன்னு சீன் விடறான். இனிமே நானே செலக்‌ஷன் பாத்துக்கறேன்” என்று சொன்னதும் அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் லடாய் ஆனது.

பின்பு ஒருவாறு சுமுகமாகி அந்த ஆண்டு இசை நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தினோம். அனைத்துக் கல்லூரிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு கலக்கினோம்.
ஆனால் வாங்கிய பரிசுகளை விட, அவையின் கைதட்டல்களும், மேடைக்குப் பின் படபடக்கக் காத்திருந்த நிமிடங்களூம், பாடி முடித்து வந்ததும் நண்பர்களின் மனமார்ந்த பாராட்டும், மேலும் தீவிர இசையார்வம் கொண்டவர்களுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல் அனுபவங்களும் மறக்கமுடியாத இனிய நினைவுகள்.

சேர்ந்திசை என்ற இந்த விஷயத்தினால் சொந்த விருப்பு, பெருமை இவற்றை ஒதுக்கி இசை என்னும் தேனில் நட்பு என்ற சர்க்கரையைக் கலந்து பருகியதால் ஆர்க்கெஸ்ட்ரா அனுபவங்களை என்றென்றும் தித்திக்கின்றன.

(பி.கு. பதிவு கொஞ்சம் நீ....ளம். பொறுத்தருள்க!)

Wednesday, September 2, 2009

ரொம்ப நாளைய ஏக்கம்

வெகு நாட்களாக எதுவும் படிக்கவில்லையே என்ற ஏக்கம் தீர இந்த வாரம் இரண்டு நாவல்கள் படித்து முடித்தேன்.
ஒன்று Jane Austen எழுதிய Pride and Prejudice என்ற பழைய ஆங்கில நாவலின் மறு மறு மறு வாசிப்பு. 19 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தின் மேல்தட்டு மக்களையும் குறிப்பாக இளம்பெண்களையும் அவர்களது அக வாழ்வையும் பற்றியே எழுதிய இவரது எழுத்துக்கள் ரமணிசந்திரனின் நாவல்களைத் தான் நினைவூட்டும். ஆனாலும் அழகான மொழியும் ரசமான நடையும் சுகமான வாசிப்பனுபவம் தரக்கூடியவை. Just light and luxury reading!

இன்னொரு நாவல் – இல்லை அது நாவல் இல்லை, சுயசரிதை. அதிகமாக பரபரப்புடன் பேசப்பட்ட கமலாதாஸ் அவர்களின் என் கதை.

மேலே படிக்கும் முன் ஒன்றைத் தெளிவு படுத்திவிடுகிறேன். இது அவரது நூலின் விமர்சனம் அல்ல. படிக்கும் போதும் படித்து முடித்த பின்னும் என் மனதின் உணர்வுகளைப் பதிக்கிறேன். அவ்வளவே.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனதை உருக்கும் சோகக் காவியம் என்று நினைத்துக் கொண்டு படிக்கத் தொட்ங்கினேன். ஆனால் பக்கத்துக்குப் பக்கம் சுவாரசியங்களும் ஆச்சரியங்களும் அதிர்ச்சகளும் தந்திருக்கிறார் நூலாசிரியர்.

பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் செல்வச் செழிப்பு மிகுந்த நாயர் குடும்பத்தில் பிறந்த கமலா தாஸ் கல்கத்தாவில் கழித்த தனது சிறு வயது அனுபவங்களுடன் தொடங்குகிறார்.
பிரிட்டிஷ் குழந்தைகள் படிக்கும் பணக்கார ஆங்கிலப்பள்ளி ஒன்றில் படித்த போது அனுபவித்த இனவேறுபாடுகள், ஆங்கிலேய முறையில் அங்கு சில காலம் வாழ்ந்த வாழ்க்கை, பின்பு மலபாரில் நலாபட் வீட்டில் வாழ்ந்த காலத்தை விவரிக்கும் போது அந்த வீட்டின் பிரம்மாண்டம், தோட்டங்களின் அழகு, வீட்டில் தன் அண்ணனுடன் சேர்ந்து நடத்தி நடித்த மேடை நாடகங்கள், பெரும் பண்டிதரான அவரது தாத்தா, பாட்டிகள், அத்தைகள் பற்றிய வர்ணனைகள் என்று கேரளத்துக் கிராம வாழ்க்கையைக் கண் முன் நிறுத்தும் அவரது சிறு வயது நினைவுகள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன.

பின்பு இளம் பதின்ம பருவத்தில் அவர் செல்லும் கன்னியாஸ்திரிகளின் பள்ளியை நினைவு கூர்கிறார்.
அங்கிருந்து எழுதப்படும் கடிதங்கள் அனைத்தும் கன்னியாஸ்திரிகளால் எடிட் செய்யப்படும் என்பதால் வழக்கமாக சரளமாகவும் நகைச்சுவையாகவும் எழுதும் கமலா ஒழுங்குப் பிள்ளை போல கடிதம் எழுதியதை அவரது அண்ணன் கேலி செய்ததைப் படிக்கும் போது நம்மால் அந்தச் சிறுமியின் நேர்ந்த சிறு அவமானத்தை உணர முடிகிறது.

பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் கவிதைகள் புனையும் அளவுக்குத் திறமை சாலியாக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது. கேரள மண்ணுக்கே உரிய அழகும் வனப்பும் இருந்தாலும் மாநிறத்தவர் என்பதால் குடும்பத்தாரிடமே இருந்து கூட விதைக்கப் பட்ட தாழ்மை உணர்ச்சியும் வெகுவாகப் பாதித்ததாகக் குறிப்பிடுகிறார்.

அவர் வாழ்ந்த காலம், அவரது மேல் தட்டு வர்க்கம், (நடுத்தர வர்க்கம் என்று அவர் சொல்லிக் கொண்டாலும்) மொழி, ஊர், என்று எதையுமே நெருங்கித் தொடர்பு படுத்திப் பார்க்க முடியாததால் ஒரு வித அந்நியத் தன்மை ஏற்பட்டாலும் பெண்மை உணர்வுகளைச் சொல்லும் விதத்தில் நாம் அறியாமலே சில இடங்களில் உள்ளத்தைத் தொடுகிறார்.

மேலும் கணவனின் முழு அன்பு தனக்கு எப்போதுமே கிடைக்கவில்லை என்று ஏங்கியதாகச் சொன்னாலும் சில சமயங்களில் இவரது கணவர் இவரை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டதையும் ஆதுரத்துடன் இவரைப் புரிந்து கொண்டு பாதுகாப்பாக இருந்ததையும் சொல்கிறார்.

அதிகம் யோசிக்கும் பெண்ணுக்கு இச்சமூக வாழ்க்கையில் திருப்தி ஏற்படாது என்று தனது வாழ்க்கையிலிருந்தே இவர் சொல்லும் பாடத்தை மட்டுமே முழுமனதுடன் ஏற்க முடிகிறது.

கூர்மையான அறிவும், பெற்றோர்களின் தலையீடு பெரிதாகப் பாதிக்காமல் இள வயதில் கிடைத்த பரந்து பட்ட சுதந்திர அனுபவமும், வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் தாகமும் கூடிய பெண் ஒருத்தி பதினைந்து வயதில் ஏற்பட்ட பொருந்தாத திருமண வாழ்க்கையால் மனமும் உடலும் அலைக்கழிக்கப் படுவதை உண்மையுடன் அலாதியாகச் சொல்லி இருக்கிறார்.

வாசகர்களுக்குத் தன் மீது இரக்கம் ஏற்படவேண்டுமென்ற நோக்கமோ, தனது பொறுப்பற்ற பல செய்கைகளுக்குப் நியாயம் கற்பிக்கும் எண்ணமோ கமலா தாஸுக்குச் சிறிதும் இல்லை. அதனால் எனக்கும் அவர் மீது இரக்கமோ நியாயமோ தோன்றவில்லை.

அவரே சொல்லி இருப்பது போல் அவருடைய முழுப் பலமான உண்மை கதையில் தொனிக்கிறது. முற்பாகத்தில் சில இடங்களில் வெளிப்படும் மழுப்பல்கள் கூட இறுதியில் அவராலேயே விளக்கம் கொடுத்து விடப்படுவதால் மதிப்பில் உயர்ந்து தான் நிற்கிறார்.

இதை முதலில் படிக்கும் போது ஏற்படும் உணர்வுகளுக்கும் மறு வாசிப்பு செய்யும் போதோ இல்லை சில ஆண்டுகள் கழித்து இதை வாசிக்கும் போதோ ஏற்படும் உணர்வுகளுக்கும் வேறுபாடுகள் வர நிறைய வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. அதுவே ஒரு சிறந்த சுயசரிதை நூலின் வெற்றி என்று கருதுகிறேன். ஒருவரை நன்கு புரிந்து கொள்ள காலமும் ஒரு முக்கிய காரணம் அல்லவா?

My Story
Autobiography
by Kamala Das
Rs. 100

D C Books, Kottayam 686 001

Website: http://www.dcbooks.com/
Online shopping: http://www.dcbookshop.net/
e-mail: info@dcbooks.com

Sunday, August 30, 2009

வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

அந்தக் காணொளியை மீண்டும் காணும் சக்தி எனக்கில்லை.
அதை இங்கே பதிவிட இதயம் பதறுகிறது.
மனிதர்கள் இனமும் டினோசர் இனம் போல் அழிந்து விடும் நாள் வராதா என்றே எண்ணத் தோன்றுகிறது மனித உடல் கொண்ட இந்தப் பிசாசுகளின் செயலைக் கண்டால்.
ஈழத்தைப் பற்றி எதையும் எழுதும் தகுதியும் துணிச்சலும் எனக்கில்லை என்றே கருதுகிறேன்.
ஆனால் கதிர் அவர்களின் பதிவில் இருந்த வேண்டுகோளின் நியாயம் மனதைச் சுடுகிறது. அதனால்....

Saturday, August 29, 2009

சென்னை to கோவை to சென்னை

சென்னையைப் பற்றி அவரவர் பார்வையில் மிக அழகான சித்திரங்களாகத் தீட்டியுள்ளார்கள் சந்தனமுல்லை, மாது அங்கிள், அய்யனார், மற்றும் பைத்தியக்காரன் அவர்கள்.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இந்த ஊரைப் பற்றிச் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் இவ்வளவு இருக்கிறதா என்று அதிசயிக்கத் தான் தோன்றியது.

ஏனென்றால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். பேச்சு வழக்கு, உணவு முறை, பெருமை மிக்க கோயில்கள், இடங்கள் என்று. சென்னையைப் பொறுத்தவரை மெரினா பீச், எல்.ஐ.சி என்று எண்ணற்ற monuments இருந்தாலும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்கள் ஊர்ப்பெருமை கொண்டாடுவது போல் இங்குள்ளவர்களுக்குக் கொண்டாட ஏதுமில்லை.

சிலேட்டில் அழித்து அழித்துச் சித்திரங்களைப் புதிது புதிதாகத் தீட்டுவது போல அசுர வேகத்தில் மாறியும் வளர்ந்தும் (வீங்கியும்) வரும் நகரத்தில் அங்கங்கே பொந்துகளில் வாழும் மனிதர்களுக்குச் (அவர்களும் புதிது புதிதாக முளைத்த் வண்ணம் இருக்கிறார்கள்) சொந்தம் கொண்டாடப் பெரிதாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் இங்குள்ளவர்களைப் பற்றிப் பிற ஊர்களில் என்ன அடையாளம் விழுந்திருக்கிறது, என்பதைப் புரிந்து கொள்ள எனது கோவை கல்லூரி வாழ்க்கை உதவியது.

விடுதி வாழ்க்கையில் தான் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் உண்டு. அந்த் ஊரில் வாழ்பவர்கள் எல்லாம் ஒரே மாதிரி தமிழ் பேசுவார்கள், உணவு முறை, வைக்கும் பெயர்கள்
ஏன், சில சம்யம் முக ஜாடை கூட ஒரே மாதிரி இருக்கும் என்றெல்லாம் புரிந்தது.

சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இப்படி எதுவும் கிடையாது. மாது அங்கிள் சொன்னது போல அடையாறு அண்ணா நகர் பகுதியிலிருந்து வந்தவர்களுக்கும் சைதாப்பேட்டை, திருமழிசை பகுதியிலிருந்து வந்தவர்களுக்கும் பொதுவாகப் பேசிக்கொள்ள எதுவுமே இருக்காது.

அவர்கள் கூட ”எங்க அம்மா ஊர் தஞ்சாவூர், தாத்தா உங்க ஊர் தான் – திருநெல்வேலி” என்று தங்கள வேர்களைத் தேடிச் சொந்தம் கொண்டாடத் துடிப்பவர்களாகத் தான் இருப்பார்கள்.

ரொம்பவும் மேட்டுக்குடி ஆட்களுக்குச் சென்னை அவர்கள் தரத்துக்குக் கீழே தான் தோன்றும்; எப்படா யு.எஸ் போவோம் என்று யு.எஸ் விசாவுக்காகத் தான் அவர்கள் பிறவியே எடுத்திருப்பார்கள். அதனால் அவர்கள் பேச்சும் அது பற்றித் தான் இருக்கும்.

எனக்குச் சொல்லிக் கொள்ளும் படியாக அப்படி எதுவும் இல்லை. உறவினர் வீடு என்று எந்த ஊரிலும் வீட்டிலும் தங்கிய அனுபவமும் இல்லை. (அனைவரும் இந்த அவசர ஊரிலேயே இருப்பதால் பழகும் வாய்ப்புகளே அற்றுப் போய் விட்டன கல்யாண வீடுகளில் குசலம் விசாரிக்கும் பலரை ரோட்டில் பார்த்தால் அடையாளம் கூடத் தெரியாது :o))
அக்ரஹாரங்களும், பேட்டைகளும் இரண்டுமே நல்ல பரிச்சயமாகியும் இருந்தது. அதனால் எந்த அடையாளமும் இல்லாமலே அல்லது எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்தே என்னால் இருக்க நேர்ந்தது. (கிட்டத்தட்ட ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஹென்றி போல – கொஞ்சம் ஓவர் இல்ல?!)

அனைவருடனும் பேதங்களில்லாமல் நட்பு பாராட்டுவதற்கு இந்த lack of social identity வசதியாகவே இருந்தது. வயது வளர வளர நம்மை அறியாமல் இது வெகுவாகக் குறைவது வேதனையான உண்மை தான்.

ஆனால் பொதுவாகச் சென்னை வாசிகள் என்றால் திமிர் பிடித்தவர்கள், அலட்சியமானவர்கள், மரியாதை தெரியாதவர்கள் என்ற பிம்பம் மற்ற ஊர்க்காரர்களுக்கு ஓரளவு இருந்தது.

ஒரு சம்பவம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பிராக்டிகல் வகுப்பில் lab assistant எனக்கு ஒரு செயல்முறையை விளக்கிக் காண்பித்தார். நான் பேச்சு வாக்கில் “அப்படியா ஸார்” என்றதும் பரிவுடன் பேசிக் கொண்டிருந்த அவர் முகபாவம் சட்டென்று மாறியது. கோபமாக, “எந்த ஊரு?” என்றார். ஒன்றும் புரியாமல் “மெட்ராஸ்” என்றேன். ”அதான்...மரியாதை தெரியல” என்று இளக்காரமாகக் கூறிவிட்டு அகன்று விட்டார்.

எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது. நான் என்ன தவறு செய்தேன் என்றே புரியவில்லை. பிறகு மற்றவர்கள் பேசுவதிலிருந்து தான் புரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் “ங்க” போட்டுப் பேசுவது கொங்குத் தமிழின் தனிப் பண்பு, சிறப்பு என்பதையும் அது இல்லாவிட்டால் அந்த ஊரில் மிகப் பெரிய மரியாதைக் குறைவு எனபதையும். “அப்படிங்களா” என்று பேசப் பழகிக் கொண்டேன்!

கூட்டம் நெரியும் பஸ்ஸில், படு எரிச்சலில் இருக்கும் கண்டக்டர் கூட “முன்னால போங்கம்மிணி” என்று தான் எரிந்து விழுவார். அதனால் “த சாவுகிராக்கி, ஏறு மேல” என்பதைக் கூடச் சிரிப்புடன் செல்லமாக எடுத்துக் கொள்ள முடிந்த இந்தச் சென்னைவாசிக்கு அது ராஜ மரியாதையாக இருந்தது.

வெடுக் வெடுக் கென்று மனதில் பட்டதைப் பேசக் கூடியவர்கள் கோவை வாசிகள். லேசில் சிரிக்கவும் மாட்டார்கள் இலகுவாகப் பழகவும் மாட்டார்கள். ஆனால் பழகி அன்பு பாராட்டத் தொடங்கிவிட்டால் அதில் எதிர்பார்ப்பும் இருக்காது; கொஞ்சமும் பொய்யும் இருக்காது. இதற்கு உதாரணம் என் தோழி கவிதா தேவி. முதல் வருடம் எனக்கு lab mate; பின்பு நல்ல தோழி.

பல்லடத்துக்கு அருகில் வடுகபாளையம் அவளது சொந்த ஊர்.
நெடிய ஒடிசலான தோற்றமும் கூர்மையான பார்வையும், நீண்ட பின்னலும், சீரியஸான அவளது முகமும் என்னை வெகுவாகத் தள்ளி நிறுத்தியது. சென்னைக்குரிய பெரிய நாகரிகங்கள் எதுவும் இல்லையென்றாலும், என் போனி டெயிலோ சென்னைத் தமிழோ ஆங்கிலமோ, ஏதோ ஒன்று அவளுக்கும் இலகுவாக இருந்திருக்காது. ஆனாலும் ஏதோ ஒரு புள்ளியில் மிகவும் நட்பானோம். எங்கள் வேறுபாடுகளே வெகுவாக ஒருவரை ஒருவர் ஈர்த்தது. அன்பு கொள்ளச் செய்தது. மெட்ராஸ் புள்ளைங்க்ன்னாலே என்னுமோ நினச்சிருந்தேன். நீ அப்படி இல்ல” என்று அவள் சொன்னது என்னால் மறக்க முடியாதது. அவள் பேசும் கொங்குத் தமிழ் என்னை வெகுவாகக் கவர்ந்து சிலகாலம் நானும் அப்படியே பேசித் திரிந்தேன்!

அடுத்ததாகக் கோவையின் குளிர். செப்டம்பர் மாதம் காலையில் எட்டு மணிக்குக் கூடப் பச்சைத் தண்ணீரில் குளித்தால் இரத்தம் உறைந்து விடும்.

எப்போதும் மிதமான குளிர், எண்ணற்ற மரங்கள் நிறைந்த எங்கள் கல்லூரி, மருதமலை, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் பழைய புத்தகக் கடை, டவுன் ஹால், கே.ஜி தியேட்டர், கேஜி ஹாஸ்பிட்டல், வ.உ.சி. பார்க், அன்னபூர்ணா ஓட்டல், தேங்காய் பன், மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் (how I miss it!) விற்கும் பேக்கரிகள் (எல்லா பேக்கரிகளுமே டீக்கடைகளாகவும் இருக்கும்) இவையெல்லாம் எனக்கு கோவையை என்றென்றும் மனதில் பசுமையாக வைத்திருப்பவை.

முக்கியமாக நமது பதின்பருவ காலத்தை வெகுவாகப் பாதிக்கும் எந்த ஒரு இடமுமே எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும். அந்த வகையில் என் எவர்கிரீன் கல்லூரிக்காலத்தை அடைகாத்த கோவை என்றுமே மனதுக்கினிய ஊர் தான்.

Wednesday, August 26, 2009

ஷார்ட் கமெர்ஷியல் ப்ரேக்!

டிவி யில் இதைக் கேட்ட மாத்திரத்தில் சேனல் மாற்றும் வழக்கம் போய் இப்போதெல்லாம் இதற்காகவே சேனல் சேனலாகத் தேடும் நிலைமையாகி விட்டது. காரணம் நேஹா.

விளம்பரங்கள் என்றால் கண் கொட்டாமல் பார்க்கிறாள்.
குழந்தைகள் நாய், பிராணிகள் வரும் விளம்பரமென்றால் கூக்குரலோடு!

சதா ஏதாவது செய்து கொண்டே இருக்கும் அவளைக் கொஞ்ச நேரம் அசர வைத்து விட்டு ஏதாவது வேலை பார்க்கவேண்டுமென்றால் ஆபத்பாந்தவர்கள் எனக்கு இந்த விளம்பரங்கள் தான்.

விளம்பரம் முடிந்து அவளுக்கு விருப்பமான பாடல்களில் ஏதாவது ஒன்றும் (அவை பற்றி வேறு ஒரு பதிவில்) வந்து விட்டால் கூடுதல் அதிர்ஷ்டம் தான்!

விளம்பரமோ இந்தப் பாடலோ முடிந்ததும் உடனே திரும்பி விடுவாள். அதற்குள் அவளைக் கண்காணிக்க ஓட வேண்டும்..
L

அதனால் சில காலமாக விளம்பரங்கள் தவிர வேறு எதுவுமே பார்க்க முடிவதில்லை. அதில் குறை ஒன்றும் இல்லை. எவ்வளவு கலையம்சத்துடன் சில விளம்பரங்கள் வருகின்றன? குழந்தைகள் அதிகமாகப் பயன்படுத்தப் படுவது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவினாலும் வெகுவாக அனைவரையும் ஈர்ப்பவை குழந்தைகள் வரும் விளம்பரங்கள் தான்.


குறிப்பாக

ரோஸி மிஸ்ஸின் குறும்புக்காரச் மாணவன் செல்ல நாயாக நடித்து அவரைச் சிரிக்கச் செய்யும் விளம்பரம்

’மிச்சம் பண்ண மூனு ரூபாயில நான் ஐஸ்கிரீம் சாப்ட்டேன்’ என்று நாக்கை நீட்டும் சுட்டிப்பெண்

நிறைய குழந்தைகள் பாடி ஆடும் எண்ணெய் விளம்பரம்

ஒரு பறவைக் கூட்டில் முட்டைகள் பொரியும் நேரம் பார்த்துத் தன் தோழர்களைச் சிறுமி அழைப்பது

டீயில் தெர்மாமீட்டர் வைத்துக் கணவன் ஏமாற்றிவிட்டதைக் கண்டுபிடித்து விடும் பெண்ணும் அவரது முக பாவமும்


எரிச்சல் வரும் விளம்பரங்களும் நிறைய உள்ளன – அவற்றில் முக்கியமானவை:

இந்தப் பானத்தைக் குடித்தால் உங்கள் குழந்தை இரட்டிப்பு வேகத்தில் வளரும்! – யார் கேட்டது? இயல்பாக வளர்ந்தால் போதாதா? எங்களுக்கு வேண்டியது நார்மல் ஆரோக்கியமான பிள்ளைகள்; கடோத்கஜன்களோ ஆறு வயது அமிதாப் பச்சன்களோ அல்ல.

சிவப்பழகு சிவப்பழகு என்று செவிப்பறை கிழியும் அளவுக்கு நாகரிகமே இல்லாமல் நடக்கும் மறைமுகமான இனவெறி வன்முறை. அதற்காக விளம்பரப் படுத்தப்படும் க்ரீம்கள், லோஷன்கள், சோப்புகள் இன்னபிற கண்றாவிகள்.
சருமம் மென்மையாக, சுருக்கங்கள் இல்லாமலிருக்க என்று மட்டும் சொன்னாலென்ன?

மாடி வீட்டு அம்மாளை விருந்துக்கு அழைத்து விட்டுத் தந்திரமாக அவரையே சமைக்கச் செய்வது.

ஒரு சோப்போ, ஷேவிங் லோஷனோ, பெர்ஃப்யூமோ பூசிக் கொண்டவுடன் ஆண்கள் அதி மன்மதர்கள் ஆகிவிடுவதாகவும் அதைத் தொடர்ந்து பெண்களை எவ்வளவு கேவலமாகக் காட்ட முடியுமோ அவ்வளவு கேவலமாகக் காட்டுவதும்..

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் என்ன மாதிரியான விளம்பரமானாலும் பெரும்பாலும் அவை மட்டுமே மனதில் நிற்கின்றன. அவை எடுத்துச் சொல்லும் பொருட்கள் மறந்துவிடுகின்றன. Purpose defeated!

Wednesday, August 19, 2009

சின்னச் சின்னக் கையாலே!

என் சிறு வயதில் வீட்டில் அம்மாவைத் தவிர என்னைக் கவனித்துக் கொள்ள என் அக்கா, அப்புறம் ஒரு மாமியும் இருந்தார்கள். இதனால் வெகு காலம் வரையில் ஒரு வேலையும் செய்யத் தெரியாமல் தான் இருந்தேன்.

எப்படி என்றால் பத்தாவது படிக்கும் வரையில் என் ஷூக்களுக்குப் பாலிஷ் கூடப் போட்டதில்லை. விட மாட்டார்கள். பிறகு திடீரென்று புத்தி வந்து கொஞ்சம் எதிர்க்க ஆரம்பித்து என் வேலைகளை நானே செய்து கொள்ளப் பழகினேன்.

ஆனால் என் அக்காவுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். பல வகையில் என்னைக் கொஞ்சிக் கெடுத்ததாகச் சொல்லப் பட்டாலும் பல விஷயங்களில் என் மண்டையில் தட்டிச் சொல்லிக் கொடுத்தவரும் அவர் தான்.

விடுமுறை நாட்களில் காலையிலேயே ஏதாவது கதைப் புத்தகமும் கையுமாக உட்காரும் என்னை “இந்த ரூமைச் சுத்திப் பாரு. இதைக் கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டு அப்புறம் அந்தச் சந்தோஷத்தோட இந்தப் புக்கைக் கையிலெடுக்கக் கூடாதா? வேலை செஞ்சோம்ற அந்தத் திருப்தியோட ஜாலியா படிக்கலாம்ல?” – இப்படி வீட்டு வேலை செய்வதில் ஆர்வமேற்படுத்தும் வகையில் அக்கா சொன்ன வார்த்தைகளை மறக்கவே முடியாது.


மேலும் அழகாக உடுத்திக் கொண்டு தேவதை போல் வெளியில் கிளம்பும் அதே அக்கா தான் வீட்டில் புடவையை
இழுத்துச் செருகிக் கொண்டு பம்பரமாக வேலை பார்ப்பாள்; தோட்டம் முழுதும் பெருக்குவது, சாக்கடை அடைத்துக் கொண்டால் தயங்காமல் சென்று குத்தி விடுவது உட்பட.

பின்பு அக்காவுக்குத் திருமணமாகிச் சென்றதும் தான் அம்மாவும் என்னிடம் சிறு சிறு வேலைகளைத் தயங்காமல் வாங்கித் தட்டிக் கொடுத்துப் பாராட்டவும் செய்யத் தொடங்கினார். வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு உரிப்பது, மிக்ஸி போட்டுத் தருவது, தேங்காய் துருவுவது, என்று விடுமுறை நாட்களில் ஏதாவது செய்யச் சொல்வார். அன்றைய சமையலில் என்னுடைய சிறு பங்கும் இருந்தது என்பது அந்தச் சிறு வயதில் மிகவும் பெருமையாக இருக்கும்.

இப்படியாக வீட்டு வேலைகளில் ஒருவாறாக ஆர்வம் வந்தது.
(தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்த காலத்தில்) இருபது குடங்கள் தண்ணீர் தூக்கி வந்து வீடெங்கும் நிரப்பி விட்டு உட்காரும் போது கிடைக்கும் நிம்மதிக்கும், வீடு முழுதும் சுத்தப்படுத்தி விட்டு நிமிரும் போது கிடைக்கும் திருப்திக்கும் ஈடாக எதையுமே சொல்ல முடியாது.

பல வீடுகளில் குழந்தைகள் படிக்கிறார்கள் என்று அம்மா அப்பாவே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து விட்டுப் பின்பு கொஞ்சம் வயதானவுடன் முடியாத போது, “ஒரு வேலை சொன்னா செய்ய மாட்டேங்குதுங்க...பெத்தவங்க கஷ்டம் தெரியாம இப்படி இருக்குதுங்களே” என்று புலம்புவதைக் கண்கூடாகக் காணலாம். ஐந்தில் வளையாதது பதினைந்தில் கூட வளைவது கடினம் தான்!

அதனால் நமது குழந்தைகளுக்கு நாம் கண்டிப்பாகச் சிறு வயதிலேயே வீட்டு வேலைகளில் பங்கெடுக்க ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் அவரவர் வேலைகளாவது.

இதில் முக்கியமான விஷயம், ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி எல்லா வேலைகளையும் பழக்கப் படுத்த வேண்டும்.

எங்கே, பெரும்பாலான வீடுகளில் நாமே அதைச் செய்வதில்லை. எல்லா விதமான வீட்டு வேலைக்கும் ஆள் வைத்துக் கொண்டு அலுவலகத்துக்குப் பறந்து விடுகிறோம். அது அவரவர் சூழ்நிலை; தவறில்லை. அப்படி இருந்தாலும் கூட, சின்னச் சின்ன வேலைகள் செய்யக் குழந்தைகளைப் பழக்கலாம்.

நீங்கள் நன்றாகக் கவனித்தால் தெரியும். இயல்பாகவே குழந்தைகள் நான்கு அல்லது ஐந்து வயதாகும் போது எல்லாவற்றையும் தானே செய்யவேண்டும் என்று விரும்புவார்கள். “நானே குளிப்பேன், நானே சாப்பிடுவேன்” இப்படி. (என் அக்கா மகன் இதை “நீயாவே குளிக்கறேன்”) என்பான். நமது அவசர வேலைகளில் இது எரிச்சல் ஏற்படுத்தும் தான். ஆனாலும் இதை இயன்றவரை வரவேற்று ஊக்கப் படுத்துதல் நல்லது என்கிறார்கள்.

அத்தோடு நாம் வீட்டைச் சுத்தப் படுத்தும் போது அவர்களை விரட்டி அடிக்காமல், அவர்கள் கையில் ஒரு சின்ன பிரஷ் கொடுத்து அவர்கள் ரூமையோ ஏன் சேர், டேபிளையாவது சுத்தப் படுத்தச் சொல்லலாம். துணி துவைக்கும் போது சின்ன கர்சீப், ஷூ லேஸ் போன்றவற்றைத் துவைக்கக் கற்றுத் தரலாம்.

குழந்தைகள் செய்த இந்தச் சிறு சிறு வேலைகளை மறக்காமல் மற்றவர் முன் பாராட்டியும் சொல்ல வேண்டும்.

(நன்றி: மிஷா)


இதனால் குழந்தைகள் ஆர்வமாக அந்த வேலைகளை மட்டுமல்ல உழைப்பின் அருமையை மதிக்கவும் கற்றுக் கொள்வார்கள்.

உடல் உழைப்பு என்பது மூளை உழைப்பை விட எந்த விதத்திலும் குறைந்ததில்லை. சொகுசான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு உடல் பருமன் அடைவது, அதைத் தொடர்ந்து வரவழைத்துக் கொள்ளும் நோய்கள், அதன் பின் மருத்துவ ஆலோசனைப் படி செய்யும் உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகள் என்று தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பரிதாப நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

உடல் உழைப்பின் அருமையையும் வீட்டு வேலைகளின் சிறப்பையும் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவோம். எந்த வேலையும் இழிவானது அல்ல என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம்.

சிறு கை அளாவிய கூழை விட ருசியானது எது? அதனால் ஒரு வேலைக்கு இரு வேலை அவர்கள் வைத்தாலும் பரவாயில்லை. அச்சின்னஞ்சிறு கைகளால் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று தான் பார்ப்போமே!

பி.கு: புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என் அக்கா மகன் நிகில் (ஏழு வயது) சென்ற கோடை விடுமுறையில் மதியம் அக்கா ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது பாத்திரங்கள் அனைத்தையும் கழுவிச் அடுப்பு மேடையையும் சுத்தம் செய்திருக்கிறான், யாரும் சொல்லாமலே!

Friday, August 14, 2009

பாரதியின் நினைவோடு...

பாரதியை நினைக்காமல் ஒரு சுதந்திர தினமும் விடிவதில்லை. ஆடுவோமோ பள்ளு பாடுவோமே என்ற பாடலைப் பள்ளியில் பாடி ஆடிய காலத்திலும் அதற்கு முன் வீட்டில் சொல்லிக் கொடுத்த போதும் கேட்ட கேள்வி: சுதந்திரம் பிறந்த போது பாரதியார் உயிரோடு இல்லையே? பின்பு எப்படி சுதந்திரம் பிறந்ததற்காக மகிழந்து இப்பாடலை எழுதினார் என்று.

பாரதியார் ஒரு அசாத்திய தீர்க்கதரிசி என்று காலத்தைத் தாண்டி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆனால் அவருக்குத் தான் எத்தகைய பேராசை?
உண்மை தான், அந்தக் காலத்தைக் காட்டிலும் பலவிதமாக நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்றாலும் இத்தனை ஆண்டுகளில் அடிப்படை பிரச்னைகள் நம் நாட்டில் இன்னும் தீர்வு காணப்படாத நிலை ஏன்? வெட்கக்கேடான பல விஷயங்கள் நாட்டில் ஊடுருவி இருப்பது ஏன்?

ஒன்றும் வேண்டாம், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடினானே அந்தப் பித்தன், உழவர்களுக்குச் சாவு மணி அடித்து விட்டுத் தொழிலைப் பரங்கியருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கிறோமே ஏன்?

இப்பாடலை ஒரு இந்தியனாவது வெட்கமில்லாமல், உண்மையான உள்ளத்துடன், கண்கள் கலங்காமல், சிறிது கசப்பு கூடத் தோன்றாமல் பாட முடியுமானால் அன்று தான் நாம் பரிபூரண சுதந்திரம் அடைந்தோம் என்று கொள்ள் முடியும் என்று தோன்றுகிறது.

ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே – பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே – நம்மை
ஏய்ப்போருக் கேவல் செய்யும் காலமும் போச்சே

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு;
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே – பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே – இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே – கெட்ட
நயவஞ்சகக் காரருக்கும் நாசம் வந்ததே

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் – வெறும்
வீணருக்கு உழைத்துடல் ஓயமாட்டோம்

நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் – பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்.


ஆனால் பாரதியை நாம் மொத்தமாக ஏமாற்றி விடவில்லை. இப்படியும் நடக்குமோ என்று இன்னொரு ஐயம் எழுந்துள்ளது அந்த அறிவுச்சுடருக்கு. கீழ்வரும் பாடல் நமக்கு எவ்வளவு தூரம் பொருத்தமாக இருக்கிறது என்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் கொடியேற்றிக் கொண்டாடுவதோடு இப்பாடலின் கருத்தை அரசியலாரும் ஒவ்வொரு குடிமகனும் நினைவிற் கொள்ள வேண்டும்.
ஆசை தான்! இல்லையா?


வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ

விண்ணிலரவிதனை விட்டுவிட் டெவரும் போய்
மின்மினி கொள்வாரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற்
கைகொட்டிச் சிரியாரோ?

வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ?

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Wednesday, August 12, 2009

பொம்மை

”ஹேய்! அருண் வாடா, உள்ள வா..”

“அம்மா, இது என் ஃப்ரெண்டு அருண். என் கூட வெளையாட வந்திருக்கான்.”

”வா தம்பி... சரி ரமேசு, பாப்பாவைப் பாத்துக்கிட்டே ரெண்டு பேரும் வெளையாடிட்டு இருங்க, நான் வேலைக்குப் போயிட்டு வந்துடறேன்.”

அந்தச் சின்ன ஓட்டு வீட்டுக்குள் தன் நண்பனை அழைத்துச் சென்றான் ரமேஷ்.

ஒரு சின்னக் கூடம், அதை ஒட்டி ஒரு சமையலறை. அதனருகே குளியலறை. அவ்வளவு தான் வீடு. கூடத்தில் தூளியில் ரமேஷின் ஒன்றரை வயது தங்கச்சிப் பாப்பா தூங்கிக் கொண்டிருந்தது.

வீட்டை வித்தியாசமாகப் பார்த்தவாறே அருண் கேட்டான் ”உங்க அப்பா எங்கடா?”

“வேலைக்கிப் போயிருக்கார்டா”

”இன்னிக்கு ஸண்டே தானடா... லீவ் இல்ல?”

“அதெல்லாம் ஆஃபிஸ்ல வேல பாக்கற உங்க அப்பாக்குத் தான். எங்க அப்பா கார்ப்பெண்டராச்சே!” சிரித்தான் ரமேஷ்.

”சரி நாம வெளையாடலாமா?”

வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்த அருணுக்கு அது கண்ணில் பட்டது.
மரத்தில் அழகாகச் செதுக்கப்பட்டு பிங்க், பச்சை என்று கண்ணைப் பறிக்கும் வர்ணங்கள் பூசப்பட்ட ஒரு வண்டி.

”என்னடா அது?”

”அதுவா! பாப்பாக்கு நடை வண்டி. எங்க அப்பாவே செஞ்சாரு. நான் கூட ஹெல்ப் பண்ணேன்.“ பெருமை பொங்கச் சொன்னான் ரமேஷ்.

ஆர்வத்துடன் அதனருகே சென்றான் அருண். தொட்டுப் பார்த்து, “நிஜம்மா உங்க அப்பாவே செஞ்சாரா.. சூப்பர்டா!” என்றான்.

இது மட்டுமில்ல, இங்க பாரு...ஷெல்பில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப்பொம்மைகளைக் காட்டினான்.

”இதெல்லாம் எங்க அம்மா செஞ்சது. அவங்களே பண்ணி சட்டையும் தெச்சுப் போட்டு விடுவாங்க. நல்லாருக்கா?”

“ரொம்ப அழகா இருக்குடா” உண்மையில் அருண் அதைப் போல் பொம்மைகளை அவன் பெற்றோர் அழைத்துச் செல்லும் எந்தக் கடையிலும் பார்த்ததில்லை.

”உனக்குப் பிடிச்சிருக்கா?”

“ரொம்ப!”

“அப்போ இந்தா, இந்த பொம்மையை எடுத்துட்டுப் போ. என்னோட கிஃப்ட்!”

“ஏய், வேனாண்டா, உங்க அம்மா வந்தாத் திட்டப் போறாங்க!”

“ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. இதை மாதிரி இன்னும் எவ்ளோ வேணும்னாலும் செஞ்சுடுவாங்க.”

கண்கள் விரிய அதை வாங்கிக் கொண்டான் அருண். “ரொம்ப தாங்க்ஸ்டா. உங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப டேலண்டட்!”

இருவரும் சிறிது நேரம் விளையாடிய பின் அருண் விடைபெற்றான்; அடுத்த ஞாயிற்றுக் கிழமை தனது வீட்டுக்கு ரமேஷை வரும்படி அழைப்பு விடுத்து விட்டு.

அடுத்த வாரம்...

“அம்மா, என் ஃப்ரெண்ட் ரமேஷ் வந்திருக்காம்மா. இது அவன் தங்கச்சி ரம்யா.”

“ஹேய் குட்டிப்பாப்பா, ஸோ ஸ்வீட். சரி எல்லாரும் இங்க ஹால்லையே விளையாடுங்க. ரூமுக்குள்ள எல்லாம் போகக் கூடாது.. அப்பா ரெஸ்ட் எடுக்கறாங்க ஒகே? மம்மி ஷாப்பிங் போயிட்டு வரேன்.” அதட்டி விட்டு வெளியே செல்ல ஆயத்தமானாள் அந்த அம்மா.

அருண் தனது விளையாட்டுப் பொருள்களை எல்லாம் கொண்டு வந்து ரமேஷை அசத்த விரும்பினான்.

”ஹேய்! இங்க பார்த்தியா, இது எங்க அப்பா சிங்கப்பூர்லருந்து வாங்கிட்டு வந்தது.”

அந்தப் பெரிய ரிமோட் கண்ட்ரோல் காரை வேகமாக இயக்கிக் காண்பித்தான் அருண்.

”நல்லா இருக்குடா. ஆனா, எங்க அம்மா வேலை செய்யற வீட்ல அந்தப் பாப்பா இதே மாதிரி வெச்சிருக்கு, பாத்திருக்கேன்.”

”அப்படியா...” சற்றே ஏமாற்றமடைந்த அருண், “இதைப் பாரு இந்த வீடியோ கேம்....இது எங்க அம்மா என்னோட பர்த்டேக்குப் பிரஸண்ட் பண்ணாங்க..”


”அட! இது கண்ணா வீட்ல நான் விளையாடி இருக்கேன். நான் தான் அவனுக்கு எல்லா லெவலும் முடிக்க ஹெல்ப் பண்ணேன். ”

”சரி விடு, இந்த பார்பி டால் செட் பாத்தியா? நான் பொண்ணா தான் பொறப்பேன்னு நெனச்சு எங்க அம்மா அந்த கலெக்‌ஷன் பூரா வாங்கி வெச்சிருக்காங்க.”

அழகழகான பார்பி என்னும் பெண் பொம்மைகள், விதவிதமான அலங்காரத்தில், டாக்டர் செட், கிட்சென் செட், என்று அதற்கேற்ற உப பொருட்களும் ஒரு தனி அலமாரியில் அடுக்கப் பட்டிருந்தன.

ரமேஷ் உண்மையிலேயே அதிசயித்தான். ”ரொம்ப அழகா இருக்குடா... இந்தப் பொம்மைக்குச் சட்டையெல்லாம் உங்க அம்மாவே தெச்சாங்களா.. சூப்பர்டா”

“அடப்போடா, இதெல்லாம் அப்படியே வாங்கினது. ரொம்ப காஸ்ட்லி. அதான் ராப்பரைப் பிரிக்காம அப்படியே ஷோகேஸ்ல வெச்சிட்டாங்க. நான் கூட வெளையாடினதே இல்ல.”

ரமேஷுக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது.

அதற்குள் அவர்கள் பின்னால் தத்தித் தத்தி வந்து விட்ட ரம்யா, அந்த பொம்மைகளைக் கை காட்டி அழத் தொடங்கினாள்.

அவளைத் தூக்கிக் கொண்ட ரமேஷ், “இந்தா பாரு, அதெல்லாம் கேக்கக் கூடாது. நல்ல பாப்பா இல்ல. நமக்கு வீட்ல பொம்மை இருக்குல்ல..” என்று சமாதானப் படுத்த ஆரம்பித்தான்.

அருணுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அந்தப் பாப்பாவுக்குப் பொம்மையைக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. அம்மாவை நினைத்துப் பயமாகவும் இருந்தது.

ஆனால் அன்று தான் ரசித்துப் பார்த்ததற்கே ரமேஷ் அவன் அம்மா செய்த பொம்மையைக் கொடுத்தனுப்பினானே.

சட்டென்று அலமாரியைத் திறந்து ஒரு பொம்மையைக் குழந்தையிடம் கொடுத்தான்.

“டேய் வேண்டாம்டா.. உங்க அம்மா திட்டுவாங்க.”

அருணுக்குச் சுருக்கென்றது. ”போடா, அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க... நீ வெச்சிக்கோடா செல்லம்” என்று பாப்பாவைக் கொஞ்சினான்.
பாப்பா அழுகையை நிறுத்து விட்டுப் பூஞ்சிரிப்புச் சிரித்தது.

********

”அருண்...எங்கே, இங்க டாக்டர் செட்ல இருந்த பார்பி எங்க காணோம்? எடுத்து விளையாடிட்டு எங்கயாச்சும் போட்டுட்டியா?”

“அம்மா.. அது வந்து... ரமேஷோட குட்டித் தங்கை அதைக் கேட்டு அழுதுச்சும்மா. அதான்.. “ என்று இழுத்தான்.

“டேய் ஃபூல்! அறிவிருக்காடா உனக்கு? அது எவ்ளோ காஸ்ட்லி தெரியுமா. ஒண்ணொண்ணும் த்ரீ ஹண்ட்ரட் பக்ஸ்! இட் வாஸ் மை ட்ரெஷர்ட் கலெக்‌ஷன்! அதை எதுக்குடா கொடுத்தே?”

“குழந்தை ரொம்ப அழுதாம்மா...”

“அழுதுச்சுன்னா நீ வெளையாடி உடைச்ச வேற ஏதாவது டாய்ஸ் கொடுத்திருக்கலாம்ல? நீ எது தந்திருந்தாலும் அவங்களுக்கு உசத்தியாத்தான் இருந்திருக்கும். ஸ்டுப்பிட்! பார்பி டாலைப் போய்..”

”அருண்..அருண்...” வாசல் பக்கம் குரல் கேட்டது.

“அம்மா, இதைக் கொண்டு கொடுத்துட்டு வரச்சொன்னாங்க ஆண்ட்டி. பாப்பா தெரியாம எடுத்துட்டு வந்துடுச்சி. நான் வரேன் ஆண்டி. வரேன் அருண்”

”ஓ, தாங்க்ஸ் பா” என்றபடி அதை வாங்கிக் கொண்டு திரும்பிய அம்மாவை அருண் பார்த்த பார்வையில் ஆயிரம் கேள்விகள் தொனித்தன. ஆனால் அது அந்த அம்மாவுக்குப் புரியுமா என்பது ஐயமே.

Thursday, August 6, 2009

ஒரு சிறிய புட்டி

விடுதி உரிமையாளனும் ஊரில் ஓரளவு பணக்காரனுமான ஜுல்ஸ் ஷிக்கோ, தனது வண்டியை மதர் மாக்லோரின் பண்ணை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு இறங்கினான்.

நாற்பது வயது இருக்கும் அவனுக்கு. நல்ல உயரம்; அதற்கேற்ற பருமன்; சிவந்த முகம். தனது குதிரையை வாயிலருகே கட்டிப் போட்டு விட்டு வந்தான். கிழவி திண்ணையில் அமர்ந்து உருளைக்கிழங்குகளைத் தோலுரித்துக் கொண்டிருந்தாள்.

மதர் மாக்லோர் என்ற அந்தக் கிழவியின் பண்ணைக்கு அருகில் தான் அவனுக்கும் கொஞ்சம் நிலம் இருந்தது. அதன் மேல் ரொம்ப நாளாக அவனுக்கு ஒரு கண். அதை வாங்கிப் போடவும் வெகு நாளாக முயற்சி செய்து வந்தான். ஆனால் கிழவியோ தனது நிலத்தை விற்கத் திட்டவட்டமாக மறுத்து விட்டாள்.

“இங்க தான் நான் பொறந்தது வளந்தது எல்லாம். என் கட்டையும் இதே இடத்தில தான் போகணும்.“ என்பது தான் அவள் சொன்னதெல்லாம். அவளுக்கு எழுபத்திரண்டு வயதிருக்கும். ரொம்ப மெலிந்து, தோல் சுருங்கி, தேகாந்திரமும் மடங்கி வற்றிய தோற்றத்துடன் இருப்பாள். ஆனாலும் நல்ல ஆரோக்கியமாகத் தான் இருந்தாள். மேலும் ஒரு சிறுமிக்குரிய சுறுசுறுப்புடன் ஏதாவது வேலை செய்து கொண்டே வளைய வருவாள்.

உள்ளே வந்த ஷிக்கோ தோழமையுடன் அவள் முதுகைத் தட்டி விட்டு அவளருகில் கிடந்த ஸ்டூலில் அமர்ந்தான்.

“எப்படி மதர் எப்போவுமே இப்படி சுறுசுறுப்பாவும் உற்சாகமாவும் இருக்குறே.. பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“நன்றி, எனக்கு ஒரு குறையுமில்ல, நீ எப்படி இருக்கே மெஸ்ஸியர் ஷிக்கோ?”

“ஓ! ரொம்ப நல்லா இருக்கேன், என்ன அப்பப்போ மூட்டு வலி தான் கொஞ்சம் தொந்தரவு கொடுக்குது. மத்தபடி ஒரு குறையுமில்ல.”

“நல்லது”

கிழவி மேலே எதுவும் பேசவில்லை. ஷிக்கோ அவள் வேலை செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முறுக்கேறிய மெல்லிய விரல்கள் நண்டின் கொடுக்குகளைப் போல உருளைக்கிழங்குகளைப் பற்றி, ஒரு பழைய கத்தியைக் கொண்டு அவற்றை லாகவமாகத் தோலுரித்து, நீர் நிரம்பிய இன்னொரு பாத்திரத்தில் எறிந்த வண்ணம் இருந்தன. வேகமாகவும் நீளநீளமாகவும் தோல்கள் உரிந்து விழுந்தன. பழக்கப்பட்ட கோழிகள் மூன்று பறந்து வந்து அவள் மடியில் குதித்துத் தோல்களைக் கவ்விக் கொண்டு தாவியோடின.

ஷிக்கோ தர்மசங்கடமாக உணர்ந்தான். ஏதோ சொல்ல வந்து முடியாமல் விழுங்குபவன் போல காணப்பட்டான்.

பின்பு அவசரமாக, “இங்கெ பாரு மதர் மாக்லோர்..”

“என்ன விஷயம்?”

“உன் பண்ணையை விக்க முடியாதுன்னு நீ உறுதியாத் தான் சொல்றியா?

”நிச்சயமா. நீ உன் மனசை மாத்திக்கோ. நான் சொன்னா சொன்னது தான். இனிமே அந்தப் பேச்சையே எடுக்காதே.“

“ரொம்ப நல்லது. நான் வேற ஒரு வழி வெச்சிருக்கேன்; நம்ம ரெண்டு பேருக்குமே சாதகமா இருக்கற மாதிரி.“

”என்ன அது?“

“அப்படிக் கேளு. நீ எனக்கு அதை விக்கிறே. ஆனாலும் நீயே வெச்சிக்கிறே; எப்படி? புரியலீல்ல, இப்ப நான் சொல்லப் போறத கவனமாக் கேளு!”

கிழவி கைவேலையை நிறுத்தி விட்டுத் தனது அடர்ந்த புருவங்களுக்கு அடியிலிருந்து அவனையே உற்று நோக்கினாள்.

அவன் சொன்னான், “அதாவது உனக்கு நான் ஒவ்வொரு மாசமும் நூற்றம்பது ஃப்ராங்குகள், அதாவது முப்பது கிரவுன்கள் கொடுப்பேன். புரியுதா, ஒவ்வொரு மாதமும் நான் இங்க வந்து உனக்கு முப்பது க்ரவுன்கள் கொடுப்பேன். வேற ஒண்ணும் உன் வாழ்க்கையில மாற்றமே இருக்காது. நீ உன் பண்ணை வீட்டுலயே இருக்கலாம். பண்ணையையும் நீயே நடத்திக்கலாம். என்னைப் பத்திக் கவலையே பட வேண்டாம். நான் குடுக்கற பணத்தை வாங்கிக்கிட்டா போதும். என்ன சரியா?”

சொல்லி விட்டு அவளைப் பார்த்து நட்புடன் சிரித்தான். (கருணை ததும்ப என்று கூடச் சொல்லலாம்!) கிழவி அவநம்பிக்கையுடனே அவனைத் திருப்பிப் பார்த்தாள். என்னவோ சூழ்ச்சி இருப்பது போல் தோன்றியது அவளுக்கு. “எல்லாம் சரி தான். ஆனா உனக்கு அந்தப் பண்ணை கிடைக்காது.”

“அதைப் பத்தியே நீ கவலைப்படாதே. கடவுள் விரும்பற வரைக்கும் நீ எவ்வளவு காலம் வாழணுமோ இங்கேயே நீ இருக்கலாம். ஒண்ணே ஒண்ணு. உன் காலத்துக்கு அப்புறம் பண்ணை எனக்குச் சேரும்படியா ஒரு வக்கீலை வெச்சு நீ உயில் எழுதித் தரணும். உனக்கோ குழந்தைகள் இல்ல. உன் சொந்தக்காரங்களோடயும் உனக்கு ஒட்டு உறவு இல்ல. அப்புறம் என்ன? நீ உயிரோட இருக்கற வரைக்கும் பண்ணை உனக்கே சொந்தம். அத்தோட நான் வேற மாசாமாசம் உனக்கு முப்பது க்ரௌன் தருவேன். உன்னைப் பொறுத்த வரைக்கும் இது லாபம் மட்டுமே.”

கிழவி வியப்படைந்தாள். என்னவோ நெருடினாலும் இந்த ஒப்பந்தம் ரொம்பவே கவர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனாலும் அவள் சொன்னாள். “ நான் உடனே ஒத்துக்க முடியாது. கொஞ்சம் யோசிக்கணும். நீ ஒரு வாரம் கழிச்சுத் திரும்பி வா. என் முடிவைச் சொல்றேன்.”

மிக்க மகிழ்ச்சியுடன் ஒரு ராஜாங்கத்தையே வென்ற அரசனைப் போல களிப்புடன் திரும்பிச் சென்றான் ஷிக்கோ.

மதர் மாக்லோர் அன்று இரவு தூங்காமல் இதைப் பற்றியே சிந்தித்தாள். அடுத்து வந்த் நான்கு நாட்களும் குழப்பமான மனநிலையிலேயே இருந்தாள். இதில் தனக்குப் பாதகமாக ஏதும் சூது இருக்குமோ என்று சிந்தித்த படியே இருந்தாள். ஆனால் மாதா மாதம் வரப்போகும் அந்த முப்பது கிரவுன்கள், வானத்திலிருந்து திடீரென்று அதிர்ஷ்டவமாகத் தனது மடியில் வீழ்வது போலத்தானே என்றும் எண்ணினாள்.

அடுத்த நாள் வக்கீலிடம் சென்று இதைப் பற்றிப் பேசினாள். அதை ஏற்றுக்கொள்ளும்படிச் சொன்ன அவர் மாதம் முப்பது கிரவுனுக்குப் பதில் ஐம்பது கிரவுன்களாகக் கேட்கும்படி அறிவுறுத்தினார். அவளது பண்ணை குறைந்தபட்சம் மதிப்பிட்டால் கூட அறுபதினாயிரம் ஃப்ராங்குகள் பெறும் என்று சுட்டிக் காட்டினார்.

”நீ இன்னும் பதினைந்து ஆண்டுகள் உயிரோடிருந்தால் கூட அவன் நாற்பத்தைந்தாயிரம் ஃப்ராங்குகள் தான் செலுத்தி இருப்பான்.”

கிழவி மாதம் ஐம்பது கிரவுன்கள் கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில் உடல் நடுங்கினாள். ஆனாலும் அவளுக்கு ஏனோ அச்சமாக இருந்தது. வெகு நேரம் வக்கீலைப் பல கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுத்தாள். இறுதியாக ஷிக்கோ கேட்டபடி உயில் எழுதுமாறு அவரைப் பணித்து விட்டு வீடு திரும்பினாள். நான்கு குடுவைகள் புதிய ஸைடர் மது அருந்தியது போல் அவளுக்குத் தலை கிறுகிறுத்தது.

அவளது முடிவை அறிந்துகொள்ள ஷிக்கோ வந்த போது ரொம்ப நேரம் ஒப்பந்தத்தை ஏற்க முடியாதது போல் பிகு செய்தாள்; உள்ளூர ஐம்பது கிரவுன்களுக்கு அவன் ஒத்துக் கொள்ளாமல் போய்விடுவானோ என்ற பயத்துடன். இறுதியாக அவன் பொறுமை இழப்பது போல் தோன்றியவுடன் தனது கோரிக்கையை முன் வைத்தாள். அவன் பெரும் வியப்படைந்தன்; மறுத்தான். அவனைச் சம்மதிக்க வைக்கும் வண்ணமாகக் கிழவி பேசத் தொடங்கினாள்.

“நான் நிச்சயமா இன்னும் அஞ்சாறு வருஷங்களுக்கு மேல உயிரோட இருக்க மாட்டேன். பாரு, எனக்கு எழுபத்தி மூணு வயசாகுது. ஆனா இந்த வயசுக்கே ரொம்ப தளர்ந்து போயிட்டேன். முந்தா நாளு கூட சாயங்காலம் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியல. போற வேளை வந்துடுச்சோன்னே நெனச்சேன்.”

ஆனாலும் ஷிக்கோ மசியவில்லை.

“அட சும்மா இரு கிழவி. நீ நல்லா குத்துக்கல்லாட்டம் இருக்கே. உனக்கு நூறாயுசு இருக்கு. என்னையும் மண்ணுக்குள்ள அனுப்பிட்டுத் தான் நீ போவே.”

அன்று நாள் முழுதும் இந்தப் பேரப் பேச்சு நடந்தது. கிழவி கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் போகவே ஷிக்கோ கடைசியில் ஐம்பது கிரவுன்கள் கொடுக்க இணங்க வேண்டியதாயிற்று. மேற்கொண்டு பத்து கிரவுன்களும் பேரத்தை முடித்ததற்காக ஒரே தடவையாகக் கேட்டு வாங்கிக் கொண்டாள் கிழவி.

மூன்று ஆண்டுகள் சென்றன. கிழவி கொஞ்சமும் உடல் தளரவில்லை. ஷிக்கோ கவலை கொள்ளத் தொடங்கினான். என்னவோ ஐம்பது ஆண்டுகளாகக் கப்பம் செலுத்தி வருவது போல் தோன்றியது அவனுக்கு. தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக, நயமாக வஞ்சிக்கப் பட்டதாக எண்ணினான். அறுவடைக்குப் பயிர் முற்றி விட்டதா என்று பார்த்து வரும் விவசாயியைப் போல, அவ்வப்போது கிழவியைச் சென்று பார்த்து வருவான். எப்போதும் அவனை ஒரு ஏளனப் பார்வையுடனேயே சந்திப்பாள் கிழவி. அது அவனை ஏமாற்றி விட்டதற்காகத் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதைப் போல் இருக்கும்.

அவள் ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் இருப்பதைக் கண்டு மனம் வெம்பித் திரும்புவான் ஷிக்கொ, “கிழட்டுப் பைத்தியமே, நீ சாகவே மாட்டியா” என்று முனகியபடி.

என்ன செய்வதென்று தெரியாமல் அவளைப் பார்த்தாலே கழுத்தை நெறித்துக் கொன்றுவிட வேண்டும் போல் வெறி கொள்ள ஆரம்பித்தான். விஷம் போல் வெறுத்தான் அவளை. தன் சொத்தைக் கொள்ளை கொண்ட திருடனை வஞ்சம் தீர்க்க நினைப்பது போல அவளைத் தீர்த்துக்கட்டுவது பற்றியே எண்ணமிடலானான்.

ஒரு நாள் அவளைப் பார்க்க வந்தான். வரும்போது இரு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று தேய்த்துக் கொண்டே வந்தான். (முதன் முதலில் இந்த யோசனையைத் தெரிவிக்க வந்த போதும் அப்படித் தான் செய்து கொண்டு இருந்தான்.)

சிறிது நேர அரட்டைக்குப் பின் சொன்னான், “ஏன் நீ என் வீட்டுப் பக்கமே வரதில்ல. எப்ரெவில் வரும் போது எங்க வீட்டுக்கு வந்து ஒரு வேளை சாப்பிட்டுப் போகலாமில்ல? ஊர்ல எல்லாரும் உனக்கும் எனக்கும் ஏதோ பகை போல பேசிக்கிறாங்க. எனக்கு அது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. உனக்கு விருந்து கொடுக்கறது ஒண்ணும் எனக்குச் சிரமமில்ல. எப்போ விருப்பமோ வா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”

மதர் மாக்லோருக்கு இந்த விஷய்த்தில் அதிக உபசாரம் தேவைப்படவில்லை. அடுத்த நாளே சந்தை நாளாக இருந்ததால், வண்டி கட்டிக் கொண்டு டவுனுக்குப் போய்விட்டு விருந்தை எதிர்பார்த்து ஷிக்கோவின் வீட்டுக்குப் போனாள்.

விடுதிக்காரன் ஷிக்கோ பெரிதும் மகிழ்ந்தான். வறுத்த கோழி, ஆட்டுக் கால் சூப், இனிப்பு புட்டிங், பன்றிக்கறி, நிறைய காய்கறிகள் என்று ராஜோபசாரத்துடன் விருந்தளித்தான். ஆனால் கிழவி என்னவோ பேருக்குக் கொறித்தாள். அவள் எப்போதுமே கொஞ்சம் சூப்பும் ரொட்டியுமாக எளிமையாக சாப்பிட்டுப் பழகியவள். ஷிக்கோவுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவளை நன்றாகச் சாப்பிடும்படி வற்புறுத்திக் கொண்டே இருந்தான். அவள் மறுத்தாள். காப்பி கூட வேண்டாமென்று விட்டாள். அதனால் அவன் கேட்டான், “அது சரி, ஆனா ஒரு சின்ன பெக் பிராந்தியோ ஒயினோ கூட குடிக்க மாட்டியா?”

“அது வந்து, பரவாயில்லன்னு தான் நினைக்கிறேன்.” என்று கிழவி தயங்கியவாறே சம்மதிப்பதற்குள் ஷிக்கோ உரக்கக் கத்தினான். “ரோஸலி, அந்தப் சூப்பர் பிரந்தியை எடுத்துட்டு வா, உனக்குத் தெரியுமே, அந்த “ஸ்பெஷல்!”

பணிப்பெண் ஒரு அழகிய நீளமான பாட்டிலைத் தட்டில் ஏந்தியபடி வந்து இரு கிளாஸ்களில் நிரப்பினாள்.

“குடிச்சுப் பாரு, பிரமாதமா இருக்கும்.”

கிழவி அதன் சுவை நெடு நேரம் நாவில் தங்கும்படியாக கொஞ்சம் கொஞ்சமாக அதைச் சீப்பிக் குடித்தாள். காலி கிளாஸைக் கீழே வைத்ததும் சொன்னாள். “ஆமாம், ரொம்பப் பிரமாதம்”

அவள் சொல்லி முடிக்கும் முன் அவளது கோப்பையை மீண்டும் நிரப்பினான் ஷிக்கோ. மறுக்க நினைத்தாலும் கிழவியால் முடியவில்லை. மீண்டும் அதை ரசித்துப் பருகினாள். இன்னும் ஒரு கோப்பை குடிக்கும் படி வேண்டினான். அவள் பிடிவாதமாக மறுக்கவும்,

“அய்யோ இது பால் மாதிரி தான். ரொம்ப இதமானது. நான் ஒரு டஜன் கிளாஸ் கூடக் குடிச்சிருக்கேன். ஒண்ணுமே ஆகாது. சும்மா தேன் மாதிரி உள்ள போகும்; தலைவலி கூட வராது. நாக்கிலயே ஆவியாகிடற மாதிரி. உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது.“

அவள் வாங்கிக் கொண்டாள்; அவளுக்கு உண்மையிலேயே ஆசையாக இருந்தது அதைக் குடிக்க. ஆனால் பாதிக்கு மேல் அவளால் குடிக்க முடியவில்லை. ஷிக்கோ ரொம்பப் பெருந்தன்மையான பாவத்துடன் சொன்னான். “இங்கெ பாரு உனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கறதால் உனக்கு ஒரு சின்ன புட்டி தர்றேன், நம்மளோட நல்ல நட்புக்கு அடையாளமா!”

அவள் அதை வாங்கிக் கொண்டு விடைபெற்றாள்; தள்ளாடியபடியே.

அடுத்த நாள் அவள் வீட்டுக்கு மறுபடியும் போனான் ஷிக்கோ, அதே போல் இன்னொரு மதுக்குடுவையுடன். அதையும் ருசிபார்க்கச் சொன்னான். பின் இருவரும் அமர்ந்து மேலும் இரண்டு மூன்று கோப்பைகள் மது அருந்தினர். போகும் போது சொன்னான், “இதோ பாரு, தீர்ந்து போனவுடன் இன்னும் வேணும்னா தாராளமா என்னைக் கேளு, ஒண்ணும் தயங்கவேண்டாம். உனக்குக் குடுக்கறதுல எனக்குச் சந்தோஷம் தான்.”

நான்கு நாட்கள் கழித்து மீண்டும் வந்தான். கிழவி வாசலில் அமர்ந்து ரொட்டியைத் துண்டு போட்டுக் கொண்டிருந்தாள். அவளருகே சென்று குனிந்து லேசாக முகர்ந்து பார்த்தான். மது நெடியடித்தது. பரம திருப்தி அடைந்தான்.

“எனக்கு ஒரு க்ளாஸ் ஸ்பெஷல் தர மாட்டியா?” அவன் கேட்டான்.

ஆளுக்கு மூன்று கிளாஸ்கள் குடித்தனர். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மதர் மாக்லோர் குடிப்பது அக்கம்பக்கத்தில் செய்தியாய்ப் பரவ ஆரம்பித்தது. கிழவி எப்படியோ தானாகவே குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விட்டதாகக் கிசுகிசுக்கத் தொடங்கினர். அடுப்பங்கரையில், தெருவோரங்களில் என எங்காவது கட்டை போல் விழுந்து கிடக்கும் அவளைத் தூக்கி வருவதும் நிகழத் தொடங்கியது.

ஷிக்கோ அவள் வீட்டுப் பக்கம் போவதையே நிறுத்திவிட்டான்.
அவ்ளைப் பற்றிய பேச்சு வந்தால் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு, “இந்த வயதில் கிழவிக்குக் குடிப்பழக்கம் ஏற்பட்டது ரொம்ப துரதிர்ஷ்டம் தான். இனிமே நிறுத்தறது முடியவே முடியாது. பாவம் சீக்கிரமே மண்டையைப் போட்டுடுவான்னு தோணுது.”

நிச்சயமாக அது தான் நடந்தது. குளிர்காலம் வந்ததும் சில நாட்களில் கிழவி இறந்து போனாள். கிறிஸ்துமஸ் சமயம் குடித்து விட்டு பனியில் மயங்கி விழுந்தவளை, அடுத்தநாள் உயிரற்ற சடலமாகக் கண்டெடுத்தார்கள்.

பண்ணையைச் சொந்தமாக்கிக் கொள்ள வந்த ஷிக்கோ சொன்னான், “முட்டாள் கிழவி. அவ மட்டும் குடிக்காம இருந்திருந்தா இன்னும் பத்து வருஷம் நல்லா இருந்திருப்பா.”

(மூலக்கதை மாப்பஸான் ஃப்ரெஞ்சில் எழுதியது. The Little Cask என்ற அதன் ஆங்கிலப் பெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.)