ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலின் முக்கிய அம்சங்களின் வாயிலாக, தனியார்மயம், நாட்டின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல், நுகர்வுக்கலாசாரத்தின் இன்னொரு கோரமான முகம் ஆகியவற்றை அவருக்கே உரிய இயல்பான பாணியில் அநாயாசமாகச் சொல்லி இருக்கிறார் முல்லை.
அவருக்கு முன்பாக சிறு முயற்சி முத்துலெட்சுமி சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் என்பது இயற்கை வளமாக இல்லாமல் மாநகராட்சி தரும் ஒரு செயற்கை வளமாக இருப்பதும், வராத நாட்களில் படும் திண்டாட்டங்களையும், குழாயைத் திறந்ததும் வரும் காலங்களில் அசட்டையாக இருக்கும் போக்கையும் கண்டித்து "Never take water for granted" என்ற கருத்தை அழுத்தமாக வைத்திருக்கிறார்.
உண்மை தான். நகர்ப்புறங்களில் பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் கார்ப்பரேஷன் தண்ணீர் தான். குடிப்பதற்கு மட்டுமல்லாமல் எல்லா வேலைகளுக்கும் இந்தத் தண்ணீரைத் தான் உபயோகிக்க வேண்டியிருக்கிறது. வேறெந்த நீர்வரத்தும் இல்லை. பல்விளக்கக் கூட தண்ணீரில்லாமல் லாரித் தண்ணீரை எதிர்பார்த்துக் குடங்களோடு சாலையில் தவம் கிடந்த காலத்தில் காப்பாற்றிய நீர் சிக்கன ஒழுக்கத்தை சம்ப் கட்டித் தண்ணீர் விழ ஆவன செய்து விட்ட நிலையில் தவறவிட்டுவிடுகிறோம்.
அப்படியும் சில நாள் தண்ணீர் வரவில்லையென்றால் தனியார் தண்ணீர் சப்ளைகளுக்கு ஃபோன் செய்து ஒரு டாங்குக்கு ஐநூறு முதல் அறுநூறு ரூபாய் வரை கொடுத்து வாங்கி நிரப்பிக் கொள்ளப் பழகி விட்டோம்.
இன்னும் சிலர், மாநகராட்சி வைத்திருக்கும் பொதுத்தொட்டிகளுக்கு நிரப்பத் தண்ணீர் எடுத்துச்செல்லும் லாரிகளை மடக்கி, நூறொ இருநூறோ லஞ்சம் கொடுத்து அதை வீடுகளில் வாங்கி விட்டுக் கொள்கிறோம்.
காசில்லையென்றால் குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்காது என்பது எவ்வளவு கொடூரமான விஷயம்?
தனியார்மயம் நம்மை அச்சுறுத்திச் செல்வது இப்படி ஒரு பயங்கரத்தை நோக்கித் தான்.
2000 ல் போலிவியா நாட்டைச் சேர்ந்த கோகபாம்பாவில் நடந்தது இது தான். உலகத்தின் குபேரர்களான உலகவங்கி தன்னிடம் 25 மில்லியன் டாலர் கடனுக்காகக் கையேந்தி நின்ற பொலிவியன் அரசிடம் அதன் நீர்வளத்தின் தனியார் உரிமையைக் கேட்டு வாங்கியது.
மோசமான நிர்வாகம், நிதிப்பற்றாக்குறை, ஊழல்கள் காரணமாக பொலிவிய அரசின் நீர் விநியோகம் மோசமாகச் செயல்பட்டு வந்ததாக இதற்குக் காரணங்கள் சொல்லப்பட்டன. இருபது வருடங்களாக உலகவங்கியின் கடனாளியாக இருந்து ரயில்வே, தொலைதொடர்புத் துறை, ஹைட்ரோகார்பன் ஆலைகள் உட்பட பல்வேறு துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்த்து விட்ட பொலிவிய அரசு பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் கடைசி வீழ்ச்சியாக இதற்கும் சம்மதித்தது.
அமெரிக்காவின் பெச்டெல் (Bechtel) நிறுவனத்தின் துணைநிறுவனமான அக்வாஸ் டெல் துனாரி (Aguas del Tunari) என்கிற தனியார் நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது. நாற்பது ஆண்டுகாலத்துக்குத் குடிநீர், மின்சாரம், மற்றும் விவசாயப்பாசனத்துக்கும் நீர் வழங்க வேண்டுமாய் ஒப்பந்தம் போடப்பட்டது.
கான்ட்ராக்ட் கைக்குக் கிடைத்த மறுகணம் குடிநீர்வரி மும்மடங்காக உயர்த்தப்பட்டது - முந்தைய அரசு கான்ட்ராக்ட் நிறுவனம் சேர்த்து வைத்த கடன்களை அடைக்க வேண்டி இருப்பதான சப்பைக்கட்டுடன்.
ஒரே நாளில், ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தண்ணீர் என்பது கிடைத்தற்கரிய பொருளாகிப் போனது. அவ்வளவு தான். மக்கள் தெருவில் இறங்கிப் போராடத்துவங்கினர்.
போக்குவரத்து வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. பொலிவிய சர்வாதிகாரி அதிபர், போலிஸ் தடியடி கொண்டு போராட்டங்களை ஒடுக்கப் பார்த்தார். இந்தக் கொடூரச்செயலால் நுற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர். ஆறு பேர் உயிரிழந்தனர். இரு குழந்தைகள் பார்வையிழந்தனர். ஆனாலும் மக்களுக்கு வேறு வழியிருக்கவிலை. தொடர்ந்து போராடி பெச்டெல் நிறுவனத்தை ஓட்டமெடுக்கச் செய்தனர். தற்போது அந்நிறுவனம் பொலிவிய அரசை நச்சரித்து நஷ்ட ஈடு பெறப் போராடி வருகிறது.
மக்கள் சக்தியால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு இதற்கு மேல் வேறென்ன ஆதாரம் வேண்டும்?
ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட கோகபாம்பாவால் சாதிக்க முடிந்ததை நம் பெருநகரங்களால் சாதிக்க முடியாதது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும்.
“ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய் - அதைக்
காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லிக் காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்”
என்ற பண்டைப் பாடலை இன்றும் பாடித்திரியும் நிலையில் உலகமயமாக்கல் நம்மை வைத்திருக்கிறது. வெள்ளரிக்காயுடன் திருப்தியடையும் விஷயமா அது?
வேலை வாய்ப்பு என்ற சிறு எலும்புத்துண்டைக் காரணம் காட்டி நமது நிலத்தடி நீரைச் சுரண்டி, நமக்கே பல மடங்கு விலைக்கு விற்கும் முதலாளிகளின் சாமர்த்தியத்தையும் அதற்குப் பட்டுக் கம்பளம் விரித்துத் தரும் நமது மக்களாட்சிப் பிரதிநிதிகளையும் அடையாளம் கண்டு கொள்வோம்.
இப்படியே போனால் நல்ல காற்றைக் கூட விதவிதமான சைசில் பலூன்களில் அடைத்து, சுவாசித்துப் புத்துணர்ச்சி பெறுங்கள் என்று விளம்பரம் செய்யும் நிலை வரலாம்.
போபால் பயங்கரத்துக்கு எதிராக நம் நாடு எடுத்த முயற்சி என்ன? பல்லாயிரக்கணக்கன உயிர்களை ஒரே இரவில் கொன்றழித்த யூனியன் கார்பைடு நிறுவன முதலாளி வாரன் ஆண்டர்சன் சுதந்திர மனிதனாய் சுகபோகியாய் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறான். கோல்ஃப் க்ளப்புக்கு அவன் கட்டும் ஆண்டுச்சந்தா மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த நஷ்ட ஈட்டுப் பணத்தை விடப் பன்மடங்கு அதிகமாம்!
அது மட்டுமல்ல அக்கொடிய விஷவாயு அம்மக்களின் மரபணுக்களைச் சிதைத்திருப்பதால் சந்ததி சந்ததியாகக் குறையுடனும் அங்க ஊனங்களுடனும் குழந்தைகள் பிறக்கிறார்
கள்.
"இப்பூவுலகை நாம் நமது முன்னோர்களிடமிருந்து கொடையாகப் பெறவில்லை. நமது சந்ததியினரிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறோம்."
அவர்களுக்கு நாம் தரக்கூடிய பரிசு இது தானா?
Disclaimer: இதுவரை எந்தத் தொடர் இடுகைக்கும் இவ்வளவு மெனக்கெட்டு முயற்சி எடுத்ததில்லை. முக்கியமான பல விஷயங்களை அறிந்து கொள்ள ஏதுவாய் அமைந்தது இந்த முயற்சி.
இவ்விடுகையை எழுத அழைத்த முல்லைக்கும், முத்துலெட்சுமிக்கும் முக்கியமாக இதைத் தொடங்கி வைத்த மரவளம் வின்சென்ட் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மேலும் விரும்புபவர் யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று அன்புடன் அழைக்கிறேன்.
நன்றி:
விக்கிப்பீடியா
The algebra of infinite justice – Arundhati Roy
http://www.worldwaterday.org/