Friday, March 25, 2011

நமக்குச் சுதந்திரம் த‌ரும் பெண்கள்

ஆயிற்று, பேறு கால‌ விடுமுறை முடிந்து அலுவ‌ல‌க‌ம் செல்ல‌ வேண்டும். அரை நாள் ப‌ள்ளிக்குச் செல்ல‌ ஆர‌ம்பித்திருக்கும் மூன்று வ‌ய‌துக் குழ‌ந்தை, கைக்குழ‌ந்தை இர‌ண்டையும் பாதுகாப்பாக‌ விட்டுச் செல்ல‌ வேண்டும். காலையிலேயே முழு நாளைக்குமான ச‌மைய‌ல் முடித்துக் கையிலும் எடுத்துக் கொள்ள‌ வேண்டும். வேலை முடிந்து வீட்டுக்கு வ‌ந்தால் குழ‌ந்தைகளுட‌ன் நேர‌ம் செல‌விட‌ வேண்டும். இடையில் நம் ம‌ன‌த்திருப்திக்காக‌வும் ஆசைக்காக‌வும் இணைய‌த்தில் உல‌வ‌ வேண்டும். ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் பேச‌ வேண்டும். இத்தனையும் எனக்குச் சாத்தியப்படுவது யாரால் என்று நினைக்கிறீர்கள்?

படித்து வேலைக்குப் போகும் பெரும்பாலான பெண்க‌ளுக்கு அவ‌ர்க‌ள‌து க‌ண‌வ‌ர் பெற்றோரையும் விட‌ அதிக‌ அள‌வு உறுதுணையாக‌ இருப்ப‌து அவ‌ர்க‌ள் வீட்டு வேலைக்கு வ‌ரும் பெண்க‌ளே.


நாம் ந‌ம‌க்கு ர‌சனையான‌ வேலைக‌ளிலும், 'ந‌ம் திற‌மைக‌ள் வெளிப்ப‌டும்' வேலைக‌ளிலும் ஈடுப‌டுவ‌த‌ற்காக‌, ந‌ம‌து வீட்டின் ந‌ச்சுப் பிடித்த‌ வேலைக‌ளை அவ‌ர்க‌ள் வாங்கிக் கொள்கிறார்க‌ள்.

வீட்டு வேலைகளில் சரிசமமாகப் பங்கேற்கத் தயங்கும் ஆணாதிக்கம் இன்னும் ஒழியாத குடும்பச் சூழலில் நாம் ச‌ம்ப‌ள‌ம் கொடுத்து இவ‌ர்க‌ளிட‌மிருந்து வாங்கிக் கொள்வ‌து வேலைகளை மட்டுமல்ல ந‌ம‌க்கான‌ சுத்ந்திர‌த்தை. இதை நாம் உண‌ர்ந்திருக்கிறோமா என்று தெரிய‌வில்லை.

ஆயிரம் முற்போக்குக் கருத்துக்களைப் பேசியும் எழுதியும் வந்தாலும் நம் வீட்டுக்கு வேலைக்கு வருபவர்களை எப்படி நடத்துகிறோம் என்றொரு சுயபரிசீலனை செய்வது மிக அவசியம் என்று தோன்றியது.

ஆணாதிக்கத்தின் பிடியில் இருக்கும் பெண்களுக்குத் தான் ஆதிக்கம் செலுத்துவதற்குத் தேவைப்படும் நபர்களாக் இந்த வீட்டு உதவிக்கு வருபவர்கள் தான் மாட்டுகிறார்கள் போலும்; வீட்டு ஆண்களின் முன் இவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாய் இருப்பது போல்.

முந்தைய தலைமுறையைக் காட்டிலும் ஓரளவு ஆண்களுக்குச் சமமான உரிமை பெற்றிருக்கும் பெண்கள் வீட்டு வேலைக்கு வருபவர்களைக் கண்ணியத்துடன் நடத்துகிறார்கள். ஆனால் சென்ற‌ த‌லைமுறையின் அழுக்கு போகாத‌ சில‌ர் அவ‌ர்க‌ளுக்குத் த‌ரும் அறிவுரைக‌ள் இருக்கின்ற‌ன‌வே. ஐய்யோ!

என் தோழியொருத்தியின் வீட்டில் அவரது வீட்டில் வேலை செய்பவர் தேனீர் அருந்திக் கொண்டு டீவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வ‌ந்த‌ தோழியின் உற‌வுக்கார‌ப் பெண்ம‌ணி ஒருவ‌ர் அதிர்ந்து விட்டாராம். வேலை செய்யும் பெண் போன‌ பின்பு என் தோழிக்கு செம டோஸாம். "என்ன‌ இது, வேலைக்காரியை எல்லாம் வைக்க‌ வேண்டிய‌ எட‌த்துல் அவெக்க‌ணும். சோஃபால‌ உட்கார‌ வெச்சு ச‌ரிக்குச் ச‌ம‌மா பேசிக்கிட்டிருக்கியே? இப்ப‌டியெல்லாம் பண்ணா அவ‌ உன்னை ம‌திக்க‌வே மாட்டா." ?!!

தங்கள் பணத்தேவைக்காக உங்கள் வீட்டு வேலைக‌ளைப் ப‌கிர்ந்து கொள்ள‌ வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் வ‌ந்தால் தான் நீங்க‌ள் நிம்ம‌தியாக‌ வேலைக்குப் போய் உங்கள் தேவைக்காகச் ‌ச‌ம்பாதிக்க‌ முடியும். இதில் எங்கே வ‌ருகிற‌து ஏற்ற‌த் தாழ்வு? ப‌ர‌ஸ்ப‌ர‌த் தேவைக்கான‌ ஒப்ப‌ந்த‌த்தில் பொருளாதார‌த்தில் ஓங்கி இருக்கும் ஒரே கார‌ண‌த்தினால் அவ‌ர்க‌ளை ம‌னித‌ர்க‌ளாக‌க் கூட‌ ம‌திக்காத‌ ந‌ட‌த்தை எவ்வ‌ள‌வு கேவ‌ல‌மான‌து?

நான் அன்பாகத் தான் இருக்கிறேன். இரக்கம் பாராட்டுகிறேன் என்றெல்லாம் நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை. உங்கள் அன்பும் இரக்கமும் அவர்களுக்குத் தேவையில்லை. நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் என்னவிதமான மரியாதை எதிர்பார்ப்பீர்களோ அதை வழங்க வேண்டும் உங்கள் வீட்டு வேலைக்கு வருபவருக்கு.

யாரும் யார் வீட்டு வேலையையும் செய்து பிழைக்க வேண்டிய சூழல் இல்லாத, நச்சுப்பிடித்த வேலைகளுக்கெல்லாம் எந்திரங்கள் வந்துவிடும் காலம் ஒரு நாள் வரும். அதுவரை இந்தச் சூழலில் இருதரப்புக்கும் ஆதாயம் இருப்பதால் அதனை ஓரளவு நியாயமாக்கிக் கொள்ளலாமே.

த‌ங்க‌ள் வீட்டில் வேலை பார்ப்பவருடன் தாம் நல்லவிதமாகத்தான் ப‌ழ‌குவ‌தாக‌ ந‌ம்புப‌வ‌ர்க‌ள் கீழே உள்ள‌ கேள்விக‌ளுக்கு ம‌ன‌திற்குள் ப‌தில் சொல்லிச் சோதித்துக் கொள்ள‌லாம் (நானும் தான்) :

1. வீட்டின் மற்ற அறைகளை அவர்கள் சுத்தம் செய்யட்டும். கழிவ்றைகளை நீங்களே சுத்தம் செய்து கொள்கிறீர்களா?

2. சாப்பிட்ட தட்டுகளைச் சுத்தமாய் ஒழித்து ஒரு முறை நீரில் கழுவிப் போடுகிறீர்களா?

3. உங்க‌ள் ம‌னைவி அல்ல‌து க‌ண‌வ‌ர் வரவேற்பறையில் சோஃபாவில் அம‌ர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறார். வீட்டுவேலைக்கு வ‌ருப‌வ‌ர் வேலைக‌ளை முடித்து விட்டு வ‌ந்து அவ‌ர் எதிரே அம‌ர்ந்து கொள்கிறார். உங்க‌ளுக்குக் கோப‌ம் வ‌ருகிற‌தா?

4. நீங்க‌ள் அவ‌ருக்காக‌த் தேனீரோ சிற்றுண்டியோ த‌யாரித்தால் உண‌வு மேஜை மீது உட்கார‌ச் சொல்லிக் கொடுக்கிறீர்க‌ளா? (அவரே மறுத்தாலும்)

5. உங்க‌ள் குழ‌ந்தைக‌ள் அவ‌ரை மரியாதையுடன் அழைக்கிறார்க‌ளா அல்ல‌து பெய‌ர் சொல்லியா?

6. அவ‌ர்க‌ள‌து குழ‌ந்தைக‌ள் வீட்டுக்கு வ‌ந்தால் உங்க‌ள் குழந்தைகளுடன் ச‌க‌ஜ‌மாக‌ விளையாடுகிறார்களா அல்ல‌து அமைதியாக மூலையில் அம‌ர்ந்து கொள்கிறார்க‌ளா?

7. அவ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ள் என்ன‌ ப‌டிக்கிறார்க‌ள், எப்ப‌டிப் ப‌டிக்கிறார்கள் என்ப‌தில் உங்க‌ளுக்கு அக்க‌றை உண்டா?

8. வார‌ம் ஒரு நாள் விடுமுறை உண்டா அவ‌ர்க‌ளுக்கு?

9. உங்களை அவர் அம்மா/ஐயா என்று அழைக்கிறாரா பெயர் சொல்லியா?

10. இன்னும் தோன்றினால் பகிர்ந்து கொள்ளுங்கள். I want to reform myself!

Wednesday, March 23, 2011

A handful of rice (ஒரு பிடி சோறு) - க‌ம‌லா மார்க்க‌ண்டேயா

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலம். வறுமையின் கொடுமை தாங்காமல் கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி வரும் இளைஞனின் கதை.

தாமோதர் என்கிற தாதா+திருடனின் கூட்டாளியாக வாழ்வைத் தொடங்கும் அவன் ஒரு வீட்டில் திருடப் போகும் போது மாட்டிக் கொள்கிறான். அந்த வீட்டுப் பெண்ணிடம் மனதைப் பறி கொடுக்கிறான். அவள் அப்பா ஒரு தையற்காரர். துரையம்மாக்களுக்கும் நம்மூர்ச் சீமாட்டிகளுக்கும் பகட்டான ஆடைகள் தைத்துத் தருபவர். நம் நாயகன் தன் கைவரிசையால் கடவுன்களிலிருந்து உயர்ரகத் துணிவகைகளைத் திருடிக் கொண்டு வந்து தருகிறான்.

மெல்ல மெல்ல அவரது வீட்டிலும் மனதிலும் இடம்பிடித்து அவரிடமே உதவியாளராகச் சேர்கிறான். அவரது மகளையும் மணந்து கொள்கிறான். மனைவி மீது தீராத காதல் கொள்கிறான். திருமணத்துக்குப் பிறகு கடினமாக உழைக்க வேண்டும்; மிகவும் அழகானதொரு குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று கனவு காண்கிறான்.


நெருக்கடியான சமயங்களில் நட்பு ரீதியாகத் தாமோதரைச் சென்று சந்தித்தாலும், அவனது செல்வச் செழிப்பைக் கண்டு பெருமூச்செறிந்தாலும் தான் விரும்பி அமைத்துக் கொண்ட‌ வாழ்க்கை தான் சிறந்தது என்று நம்புகிறான்.


ஒரு நாள் துரைசாணிகள் வந்து போகும் ஒரு பகட்டான கடையில் தாங்கள் தைத்துக் கொடுக்கிற துணிமணிகள் 20 மடங்கு அதிக விலையுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்கிறான்.

பொறுக்கமாட்டாமல் குமுறுகிற அவனை மாமனார் அடக்குகிறார். "நாம மட்டும் விலையேத்த முடியாது. நம்மளை மாதிரி எத்தனை தையற்காரங்க இருக்காங்க" என்று. அனைவரும் சேர்ந்து சங்கம் அமைத்து விலையேற்ற வேண்டும் என்ற ரவியின் ஆலோசனையை அவர் ஆவேசத்துடன் மறுக்கிறார். "அதெல்லாம் க‌ன‌விலியும் ந‌ட‌க்காது; இப்படியெல்லாம் பேசினால் நீ சீரழிந்து போய்விடுவாய்" என்று அச்சுறுத்துகிறார்.

க‌டின‌ உழைப்பு, உற்சாக‌ம், காத‌ல், க‌ன‌வுகள், நேர்மை எல்லாம் இருந்தும் குடும்ப பாரம் அவனை அழுத்தித் தள்ளுகிறது. சமூகத்தின் முன் மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதாகத் தான் எண்ணிய மாமனார் எத்தகைய அவமானங்களையும் அநீதிகளையும் வாய்மூடிச் சகித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரின் வாடிக்கையாளர்களாகிய‌ சீமாட்டிகளின் வீடுகளுக்கும் துரைமார்களின் வீடுகளுக்கும் போகும் போது அவனுக்குப் புரிகிறது. இந்த அநீதிகளைக் கண்டு அதிர்கிறவனாகவும், கேள்வி கேட்கும் கோபக்காரனாகவும் ரவி இருக்கிறான்.


இயன்றவரை இந்தப் பிழைப்பை ஓட்டுவோம். முடியாத‌ ப‌ட்ச‌த்தில் தாமோத‌ருட‌ன் போய்ச் சேர்ந்து கொள்வோம் என்ற எண்ண‌ம் அவ‌ன் ம‌ன‌தோர‌த்தில் இருந்து வ‌ருகிற‌து.

இந்திய ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌க் கூட்டுக் குடும்ப‌த்தின் வாழ்க்கை முறை மிக‌வும் எதார்த்த‌மான‌ முறையில் க‌தையில் விரிகிற‌து. புதிதாக‌த் திரும‌ண‌மான‌வ‌ர்க‌ளுக்காகப் வாட‌கைக்குக் க‌ட்டில் எடுப்ப‌தும் ப‌த்து நாளான‌தும் அது திருப்ப‌ப்ப‌ட்டு விடுவ‌தும், ஒரே அறையின் இடையில் த‌டுப்பு அமைத்து இரு குடும்ப‌ங்க‌ள் ப‌டுத்துக் கொள்வ‌தும், வறுமை கோரத்தாண்டவம் ஆடும் போதும் வீட்டுப் பெண்கள் பலமுறை க‌ருவுறுவ‌தும் நம‌க்குப் புதிதான‌ ச‌ங்க‌திக‌ள் இல்லையென்றாலும் சம்பவங்கள் எழுதப்பட்ட‌‌ விதம் ந‌ம்மை அடித்துத் தான் போடுகிற‌து.


குறிப்பாக ரவியின் ஒன்றரை வயதுக் குழந்தை பீச்சில் சுண்டல்கார‌ரின் வேட்டியைப் பிடித்து இழுக்கும் போது ப‌ட்டாணிக் கூடை விழுந்து விடுமோ என்று அவ‌ர் ப‌த‌றுவ‌தும், அய்யோ அப்படி விழுந்து விட்டால் மொத்தத்துக்கும் காசு த‌ர‌வேண்டுமே என்று ர‌வி குழ‌ந்தையை அடித்து நொறுக்குவ‌தும்...மெலோ ட்ராமா சிறிதுமில்லாத‌ சோக‌ நாட‌க‌ம்.


மாமனாரின் இறப்புக்குப் பிறகு தொழிலில் பின்னடைவு ஏற்படுகிறது. வாடிக்கையாளர்கள் நிர்தாட்சண்யமாகக் கைவிடுகிறார்கள். அவர்கள் முன் தன்னை வாரிசாக முன்நிறுத்த மாமனார் கையாண்ட யுக்திகளெல்லாம் வீணாகிப் போன வேடிக்கையை எண்ணிப் புழுங்குகிறான் ரவி.

அதுவும் நம்மூர்ச் சீமாட்டி ஒருவர் தன் மகளின் பட்டுச் சட்டையை ஒழுங்காகத் தைக்கவில்லை என்று கத்தித் தீர்க்கிறார். "என்ன விலை தெரியுமா அந்தத் துணி? ஒரு கஜம் அம்பது ரூபாடா" என்கிறாள். ரவியின் மனம் மேலும் கசக்கிறது. அந்த ஐம்பது ரூபாயிருந்தால் தன் வீட்டில் பத்து பேர் எத்தனை நாட்களுக்குச் சாப்பிட்டிருப்போம் என்று கணக்கிடுகிறான். வந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு விழுங்குகிறான்.

'உங்களுக்கு இம்மாதிரி அழகழகான துணிகள் தைத்துத் தரும் எங்களுக்கும் அழகான மனைவி குழந்தைகள் இருப்பார்களே! இதைத் தைக்கும் போது அவர்களுக்கு இதை அணிவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை துளிக்கூட எங்கள் மனதில் வராதா? அதையெல்லாம் யோசிக்கக் கூட மாட்டீர்கள் அல்லவா? உங்களைப் பொறுத்தவரை நாங்களெல்லாம் இயந்திரங்கள். உணவு உடை தேவைகள் மட்டுமா, கோபத்தைக் காட்டும் சுதந்திரமும் கூட பணம் இருந்தால் தான் கிடைக்கும்' என்று மனம் வெம்புகிறான்.


கதையில் எதிர்பாராத திருப்பங்களோ, ரவியை ஒரு சாகச நாயகனாக நிறுவும் யுக்திகளோ இல்லை. ஆனாலும் ரவியின் பாத்திரப்படைப்பு உண்மையாகவும் நம்பிக்கை தருவதாகவும் அமைந்திருப்பதே இக்கதையின் சிறப்பு.

ஆங்கில‌ வாச‌க‌ர்க‌ளுக்கு இந்திய நடுத்தர வாழ்க்கை முறையைப் ப‌ட‌ம்பிடித்துக் காட்டுவ‌த‌ற்காக எழுதப்பட்ட புத்த‌க‌கமாகக் கருதினாலும் (தேவையே இல்லாமல் இன்செஸ்ட் சம்பவம் ஒன்று திணிக்கப்பட்டுள்ளது யாருக்காக என்று புரியவில்லை) கருத்துக்களின் வீரியத்தில் க‌ம‌லா மார்க்க‌ண்டேயா ச‌ந்தேக‌த்துக்கிட‌மின்றி ஓர் இட‌துசாரியாக‌ மிளிர்கிறார். "கௌரவமான" வாழ்க்கைக்காகப் போராடும் ரவிக்களும் நளினிக்களும் இன்னும் ஏராளம்பேர் நம்மிடையே இருக்கிறார்கள் என்ப‌தாலேயே இந்த‌க் க‌தை முக்கிய‌மாக‌ப் ப‌டுகிற‌து.

Sunday, March 6, 2011

நேஹா நேரம் (பிறந்தநாள் சிறப்பிதழ்!)

கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கிறாள். பால்கனியில் நின்று சாதம் ஊட்டும் போது ரோட்டில் போகிறவர்களை "அது யாரு, அவங்க எங்கே போறாங்க...", விளம்பரங்களைப் பார்த்து "அது என்ன இது என்ன, அவங்க என்ன பண்றாங்க..." என்பதாக ஆரம்பித்திருக்கிறது நேஹாவின் கேள்வி கேட்கும் படலம்.

புத்தகங்கள் மீது ஆசை இன்னும் போகவில்லை. பல முறை படித்த அரிச்சுவடிப் புத்தகங்களைக் கூட ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எடுத்து வைத்து படங்கள் பார்த்துப் பெயர் சொல்லி விடுகிறாள். நான் படிக்க நினைத்து அருகில் வைத்துக் கொண்டிருக்கும் புத்த்கங்களை எடுத்து அம்மா புக் படிக்கிறேன் என்பதும் அதில் அட்டையில் அவளுக்குத் தெரிந்த எழுத்துக்களைச் சொல்லிப் பார்ப்பதும் நடக்கிறது.

கோபம், பிடிவாதம், முரட்டுத்தனம் இதெல்லாம் கூடிக் கொண்டே போகிறது; எப்போது குறைய ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை.
ஏதாவது காரியம் ஆக, வேண்டுமென்றே கள்ளத்தொண்டையில், "அம்மா, சொன்ன பேச்சுக் கேக்றேம்மா..." என்று வேறு சொல்கிறாள்.

அவள் வயதுச் சிறுவர் சிறுமியர்களிடம் நட்புபாராட்ட ரொம்பவும் ஆசைப்படுகிறாள். பொது இடங்களில், கடைகளில் முன்பின் அறிமுகம் இல்லாத குழந்தைகளிடம் கூடச் சிரித்துக் கொண்டே போய்க் கையைப் பிடிக்க எத்தனிக்கிறாள். பெரியவர்கள் பாடு தான் கஷ்டம்!

மேல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர் ஒருவர் இவளைப் பார்த்து, "வாம்மா, மாமா கூட்டிட்டுப் போய் சாக்லெட் வாங்கித் தர்றேன்" என்று கூப்பிட்டிருக்கிறார். இவளோ கையை நீட்டி "ஆளையும் மண்டையும் பாரு" என்று திரும்பி விட்டாளாம். அவர் சொன்னபோது அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.

Enough in third person...!

உனக்கு அடுத்து தங்கை பிறந்ததும் உன் மீது கவனம் குறைந்து விடுமோ என்ற எண்ணத்தினாலேயே நீ இன்னும் செல்லமாகி விட்டாய் நேஹா. இதை நீ புரிந்து கொள்ளும் நாளும் வரும். ஆனால் இப்போதைக்கு உன் நடவடிக்கைகள் ஒரு சமயம் அம்பி, ஒரு சமயம் அன்னியன் ரேஞ்சுக்குத் தான் இருக்கின்றன.

நன்றியுள்ள விலங்கின் மீது என்ன பாசமோ, சில சமயம் (அன்னியன் டைம்ஸ்)சகட்டு மேனிக்கு எல்லாரையும் அதன் பெயர் சொல்லி அழைக்கிறாயே? சரி ஒரு விலங்கோடு போகிறதே என்று விட்டு விட்டேன். நல்லவேளை நீ அனிமல் ப்ளானட் இன்னும் பார்க்க ஆரம்பிக்கவில்லை.

வேடந்தாங்கல் சென்ற போது குரங்குகளைப் பார்த்துக் குதூகலித்தாய். "பெரிய குரங்கு ப்ரட்டை மோந்து பாத்து தூஊஊக்கிப் போட்டுச்சு, சின்ன குரங்கு அழக்க்கா சாப்டுச்சு" என்பதில் உனக்கு அத்தனை பரவசம். அத்தனை என்றதும் நினைவுக்கு வருகிறது.

"எத்தன வாட்டி சொல்றது நேஹா உனக்கு?" என்றால் "அத்தன வாட்டி" "எவ்ளோ வேணும்" என்றால் "அவ்ளோ வேணும்" என்கிறாய்.
ஃபோட்டோ எடுத்தால் அழகாகப் போஸ் கொடுக்கிறாள்; மேலும் நான் பாக்கணும் என்று வாங்கிப் பார்க்கிறாய். நேரங்கெட்ட நேரங்களில் த‌ன் நண்பர்கள் வீடுகளுக்குப் போக வேண்டுமென்று அடம்பிடிக்கிறாய்.

உனக்குப் பிடித்தமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, "அன்னிக்கு அந்த ப்ளாக் நாய் பாத்துட்டே சாப்டோம்ல, அது மாரி...." என்று அதை மறுபடியும் செய்ய வேண்டுமென்று கேட்கிறாய்.

ஸ்கூலுக்குப் போவதற்கு உனக்குப் பிடித்துத் தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத் தான் பிடிப்பதில்லை. " போ நான் தூங்கப் போறேன்." என்று ஆரம்பித்துத் தொடர்ந்து திட்டிக் கொண்டே தான் எழுந்திருக்கிறாய். சட்டென்று ஏதோவொரு கணத்தில் மூடு மாறி குஷியாகி விடுகிறாய். அந்தத் தருணம் எப்போதென்று தான் இன்னும் பிடிபடவில்லை எனக்கு.

வேறென்ன சொல்வது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேஹா. Thanks for everything you are going to be!