Monday, July 23, 2012

A few angles of my angels!

...அவர்களின் அழகிய உலகத்தை நானே முற்றும் ஆக்கிரமித்துச் சிதைத்துவிடலாகாதே என்பதற்காகவே சற்று விலகியும் போகிறேன்.


நேஹா, ஷைலா - என் குட்டி தேவ‌தைக‌ள். அம்மா என்ற‌ மிக‌ப்பெரிய‌ பொறுப்பையும் என் த‌குதிக்கு மீறிய‌ ச‌ந்தோஷ‌த்தையும், என் பொறுமைக்கு விஞ்சிய குறும்புத் தொல்லைகளையும் அன்றாடம் அளித்துச் சோதித்துக் கொண்டிருக்கும் என் ம‌ழ‌லைக‌ள்.


நோ, நேஹாவுக்கு ம‌ழ‌லையே கிடையாது. ப‌ளிச் ப‌ளிச் சென்று அவ‌ள் பேசுவ‌தைப் பார்த்தே இளைய‌வளும் ஒன்ற‌ரை வ‌ய‌திலேயே முழு நீள‌ வாக்கிய‌ங்க‌ள் பேச‌த் தொட‌ங்கி விட்டாள்.

அவ‌ள் பேசும் அழகையும் குறும்புகளின் அழகையும் நிச்சய‌ம் எழுத்தில் வ‌டிக்க‌ முடியாது; முய‌ற்சி கூட‌ செய்ய‌ப் போவ‌தில்லை நான். :-)

வயதுக்கே உரிய பிடிவாத‌ம் அவ்வ‌ப்போது த‌லை தூக்கினாலும் பொதுவாக‌ப் புரித‌லும் பொறுமையும் கூட‌ நேஹாவுக்கு இருக்க‌த் தான் செய்கிற‌து.



மிக‌ந‌ல்ல‌ மூடில் இருந்தால், சின்ன‌வ‌ள் அடித்துவிட்டால் கூட‌, "இட்ஸ் ஓகே மா, சின்ன‌ப் பொண்ணு தானே..." பின்பு தான் தெரியும் அவள் எதற்கு இவளை அடித்தாள் என்று! ;-)



நான் மாலை வருவதற்குள் பாட்டியுடன் அமர்ந்து வீட்டுப் பாடம் எழுதி விடுகிறாள். வெள்ளிக்கிழமையன்று கடைசியில் கொஞ்சம் மட்டும், இதை அம்மாவுடன் எழுதுகிறேன் என்று வைத்து விட்டாளாம். நேற்று அதை எடுத்து வைத்து அழைத்தவுடன் அவளே அழகாக எழுதி விட்டாள். நானும் அவள் அக்காவும் அசந்து போய்ப் பாராட்டியும் ஆகி விட்டது.



இர‌வு தூங்கும் போது "நேஹா சீக்கிரம் தூங்குடா...காலையில ஸ்கூலுக்குப் போகணும்".
நேஹா; "அம்மா ஒரு விஷயம்..."
"என்னடா?"
"நான் B எழுதினது உனக்குப் பிடிச்சுதாம்மா?"
"அதுக்கென்னடா, அழகா எழுதினே. இதே மாதிரி எப்பவும் அழகா எழுதணும், படிக்கணும், என்ன? இப்போ தூங்கு"


"அம்மா...E எப்ப‌டிப் போட‌னும் தெரியுமா, ஒரு ஸ்டான்டிங் லைன், அப்புறம் ஸ்லீப்பிங் லைன், இன்னொரு ஸ்லீப்பிங் லைன், ஸ்லீப்பிங் லைன்..." என்று ஆர‌ம்பித்து R வ‌ரைக்கும் காற்றில் விரல்களை அசைத்து அழ‌காக‌ச் சொன்ன‌ போது ப‌ல‌ச‌ம‌ய‌ங்க‌ளில் தோன்றும் அதே எண்ண‌ம் த‌லை தூக்கிய‌து: "Do I really deserve such a delightful blessing?"

ம்...எழுத்துக்களை நேசிக்கத் தொடங்கி விட்டாள், விரைவிலேயே தானே வாசிக்கத் தொடங்கி விடுவாளல்லவா? :-))



X ம‌ட்டும் ஒரு ஸ்லான்டிங் லைன் ஒரு ஸ்லீப்பிங் லைன் என்று சொன்ன‌ போது திருத்த‌ முய‌ன்றேன். உட‌னே, "நோ அம்மா... இப்ப‌டித் தான். இரு, எங்க‌ மிஸ் கிட்ட‌ சொல்றேன்."

"என்ன‌ சொல்லுவே?"

"எங்க‌ அம்மாக்கு தெரிய‌ல‌...X போட‌ச் சொல்லித் தாங்க‌ன்னு சொல்வேன். அவ‌ங்க‌ ந‌ல்ல‌ மிஸ். உன‌க்குச் சொல்லித் த‌ருவாங்க‌..ஒக்கேவாம்மா?"


*********************************************************************