Monday, December 13, 2010
கந்தர்வன் கதைகள்
Saturday, December 11, 2010
பாரதீ! உன் நினைவாக...
கிழவனுடைய
அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும்,
இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இருதயமும்,
தேவர்களே - எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க!
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள்த் தின்ன தகாதென்று
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்வது நிறைவு பெறும்வணம்
துன்ப மினில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது தீயது நாமறியோம்! அன்னைநல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசிவாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்துநரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!"
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ ! - மாயையே !
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீசித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் - மாயையே !
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே ! - இந்தத்
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய் ! - மாயையே !
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப
மாயையே ! - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ ? - மாயையே !
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே !
என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையே ! - இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண் - மாயையே !
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே !
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ
விண்ணிலரவிதனை விட்டுவிட் டெவரும் போய் மின்மினி கொள்வாரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பாரோ?
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ?
வந்தே மாதரம் என்று வணங்கியபின் மாயத்தை வணங்குவாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ?
Thursday, December 9, 2010
சைக்கிள்...
Friday, November 12, 2010
மாமாவின் பிறந்தநாள் விருந்து!
Saturday, November 6, 2010
Thursday, November 4, 2010
தீபாவளி!
இரண்டு நாட்களுக்கு முன் பள்ளியில் தோழிகளைக் கட்டியணைத்து வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளும் போதும், கரும்பலகையில் "ஹாப்பி தீபாவளி" எழுதி அழகழகாய்ப் படம் வரைந்து வைக்கும் போது உற்சாகம் பீறிடும். வழக்கமாய்ப் பருப்பும் புளியும் கொதிக்கும் சமையலறை பலகாரங்களும் எண்ணெய் ஸ்டவ்வுமாய்ப் புதுக்கோலம் கொள்ள, அம்மாவுக்கு உதவும் போது பெருமிதம் பொங்கும். வாங்கிய ஒரே புத்தாடையைப் பத்து தடவை திறந்து பார்க்கும் போது மனம் புல்லரிக்கும். டமால் டுமீல் வெடிச்சத்தங்களுடன் பொழுது விடிவதற்க்குள் ஏனோ பண்டிகையின் மொத்த களையும் வடிந்து விடும்.
அதான் தீபாவளி வந்துடுச்சே..! இனி போகத் தானே போகுது என்று! எப்போதும் என்னிடம் ஜோராக சண்டை போடும் அண்ணனும் அவன் வெடிவெடிக்கும் அழகைப் பார்க்க, ஊதுவத்தி கொளுத்தி எடுத்து வர என்று என்னிடம் எடுபிடி வேலை வாங்குவதற்காக அன்று அன்புடன் இருப்பான். அதனால் போர் தான்! :)
அக்காவும் அங்கிளும் வந்திருந்த அவர்களின் தலை தீபாவளி தான் நாங்கள் மிகவும் சந்தோஷமாகக் கொண்டாடிய தீபாவளி. சிவப்பு நிறத்தில் எனக்கு ஒரு "கீதாஞ்சலி ட்ரெஸ்" வாங்கி வந்திருந்தார்கள். ரொம்ப அழகாக இருககும். வெகு நாட்கள் வரை அதை ஆசையாகப் போட்டுக் கொண்டிருந்தேன்.
அதற்கடுத்த ஆண்டுகள் அவர்கள் வரவில்லை என்பதாலேயே சுரத்திழந்தது. கல்லூரியில் படித்த போது முதல் ஆண்டு தவிர தீபாவளிக்கு வீட்டுக்கே வர இயலவில்லை. சரியாக தீபாவளிக்கு அடுத்த நாள் செமஸ்டர் ப்ராக்டிகல் வைத்திருப்பார்கள். அதனால் பக்கத்து ஊர்களில் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் விடுதியிலேயே தீபாவளியைக் கழித்தோம். அதுவும் ஒரு தினுசாக நன்றாகத்தான் இருந்தது. இறுதியாண்டு டே ஸ்காலர்ஸ் வீடுகளுக்குச் சென்றோம்.
வேலைக்குச் செல்லத் தொடங்கியவுடன் எந்தப் பண்டிகையுமே ஒரு நாள் விடுமுறை என்பதைத் தவிர பெரிதாகத் தெரியவில்லை. தீபாவளிக்கென்று ஆடம்பரமாக ஆடைகள் வாங்குவதும் அறவே பிடிக்காத ஒன்றாகி விட்டது. புதிதாக ஏதாவது அணியப் பிடிக்கும்; அது வழக்கமாக அலுவலகத்துக்கு அணிகிறாற் போல் உபயோகமாக இருந்தால் சரி. "இதுவா உன் தீபாவளி ட்ரெஸ்" என்ற கேள்விக்குப் புனனகைப்பது வெகு நாட்களுக்கு முன்பே பழ்க்கமாகி விட்டது. தொலைக்காட்சிக்கு முன் உட்காரக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே நூலகத்திலிருந்து புத்தகங்கள் வாங்கி வந்து நிம்மதியாக நாள் பூராவும் படித்துக் கழித்த தீபாவளிகள் உண்டு.
காசு கொடுத்துப் பட்டாசு வாங்கிப் பழக்கமே இல்லை வீட்டில். சிவகாசியில் இருந்த அப்பாவின் ஆருயிர் நண்பர் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே பெரிய பட்டாசுப் பொட்டலம் ஒன்றை அன்புடன் அனுப்பி விடுவார். "பட்டாஸ் அங்கிள்" என்றே சிறு வயதில் அவரை அழைப்போம்.நாங்கள் மட்டுமே வெடித்துத் தீருவதில்லை அது. வீட்டுக்கு வருபவர்களுக்கும் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கும் கொடுத்தும் தீர்க்க வேண்டியிருக்கும். வெடிச்சத்தம் எனக்குப் பிடிக்காது, வெடி வெடிக்கவும் பயம்! ஆனால் வாணங்களும் மத்தாப்புக்களும் மிகவும் பிடிக்கும். சில ஆண்டுகளாக அந்த ஆர்வமும் அற்றுப் போய் விட்டது.
"பண்டிகையை வரவேற்க" என்று ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தச் சில ஆண்டுகளில் பண்டிகைகள் அழகாக அமைதியாக வந்து போகின்றன. இந்தத் தீபாவளி நண்பர்களும் குழந்தைகளும், போட்ட கும்மாளங்களுடன் வீட்டிலேயே இனிமையாகக் கழிந்தது.
ஆனால் வானத்தில் பூப்பூவாய் வெடித்துச் சிதறும் வாணங்களில் மனதைப் பறி கொடுக்கையில் வெடிமருந்தின் வாடையில் கருகும் பிஞ்சுகளும் பலியாகும் சகோதரர்களும் நினைவுக்கு வந்து குற்றவுணர்ச்சி கொல்கிறது.
பட்டாசுகளையே மொத்தமாகத் தடை செய்ய வேண்டுமென்றெல்லாம் வைராக்கியத்துடன் எண்ணிய நினைப்புகள், மத்தாப்புவைப் பார்த்துக் குதூகலிக்கும் குழந்தைகளின் சிரிப்பில் உடைந்து போவது சரியா தவறா என்று புரியவில்லை. ஆனால் அப்படித் தானே நுழைகிறது ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளி?
Sunday, October 24, 2010
என்ன கொடுமை ஸார் இது?
இந்துக்கள் நம்புவதாலேயே ராமர் பிறந்த இடமென்று அறிவித்தது.
இப்போது மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விடுவார்கள் என்று பயந்து வரதட்சணை கொடுத்தால் அது குற்றமல்ல என்கிறது. இதில் எது மிகப்பெரிய அபத்தம் என்று பட்டிமன்றமே நடத்தலாம் போல.
இதே நிலை தொடர்ந்தால் என்ன ஆவது? யோசித்துப் பார்க்கலாமா?
1. கொலை மிரட்டலுக்குப் பணிந்து லஞ்சம் கொடுக்கலாம்.
2. ஆட்டோ அனுப்புவேன் என்று அச்சுறுத்தினால் கஞ்சா கடத்தலாம்
3. அட, உன் பிள்ளைக்கு ஸ்கூலில் அட்மிஷன் கிடையாது என்று பயமுறுத்தினால் ஊழலுக்குத் துணை போகலாம்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாமே?
வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற சட்டமே எழுத்தளவில் தான் இருக்கிறது. அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கே நமது பலவீனமான சமுதாயத்தால் முடியவில்லை. ஏற்கெனவே ஆயிரம் ஓட்டை உடைசல்கள் இருக்கும் சட்டத்தை இப்படி நெளித்து விட்டால் என்ன ஆவது?
Thursday, October 21, 2010
XX, XY and A,B,C,D... தொடர்பதிவு
பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதில் எனக்கு இரண்டு கருத்தே கிடையாது. மேலும், 'அது சரி தான். அதற்காக அவர்கள் வீட்டுக் கடமைகளை மறுத்துவிடக் கூடாது. வீட்டிலிருந்தபடியே காளான் வளர்க்கலாம், ஊறுகாய் போடலாம், கன்ஸல்டிங் செய்யலாம். நாளெல்லாம் வீட்டை மறந்து வேலையில் இருந்தால் வீடும் குழந்தைகளும் என்னவாகும்?' என்ற வாதத்திலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.
பெண்களின் வாழ்க்கையைத் திருமணம் என்ற சூதாட்டத்தை நம்பிப் பலியாக்குவதைத் தடுக்கும் ஒரே வழி அவர்களைச் சொந்தக் கால்களில் நிற்க வைப்பது தான். அது எப்படி என்பது அவர்கள் விருப்பத்துக்கேற்ற விஷயம். அதில் தலையிட்டு 'நீ இது தான் செய்யணும் செய்யக் கூடாதுன்னு' சொல்வதெல்லாம் அதிகப் பிரசங்கித் தனம். அப்படிப் பேசுவதாக இருந்தால் யாரும் பி.டி. உஷாவைப் பற்றியும் சுனிதா வில்லியம்ஸைப் பற்றியும் வாய் திறக்கக் கூடாது!
ஆனால் பெண்கள் வேலைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கும் மற்ற எல்லா அகக்காரணிகளையும் புறக்காரணிகளையும் நீக்கிவிட்டாலும் குழந்தைப் பேறும் வளர்ப்பும் பெரும் சவாலாக நிற்பதை மறுக்க முடியாது. இது ஏதோ பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட handicap போல் பார்ப்பது தான் இதற்குக் காரணம்.
எதுடா சாக்கு, கொஞ்சம் முளைத்த சிறகை வெட்டலாம் என்பது போல் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு வரும் பெண்களை மீண்டும் கொண்டு போய்ப் பொந்துகளில் அடைக்கத் தான் இது மிகவும் சக்திவாய்ந்த விஷயமாகப் பலராலும் பயன்படுத்தப்படுகிறது.
தன் குழந்தைகளைப் பற்றி ஒரு தாய்க்கு இல்லாத அக்கறை யாருக்கு இருக்க முடியும்? பத்து மாதம் படாத பாடு பட்டுச் சுமந்து தரும் பொக்கிஷத்துக்குத் தங்கள் இனிஷியலை மட்டும் பந்தாவாக வைத்துக் கொள்ளும் ஆண்கள் இனியாவது அதற்கு முழுத் தகுதியுடையவர்களாக உங்களை ஆக்கிக் கொள்ளுங்களேன்!
யோசித்துப் பாருங்கள், வீட்டுக்கு வருமானம் ஈட்டுவதில் பெண்களும் பங்கெடுக்கத் தொடங்கிப் பல தலைமுறைகள் ஆகிவிட்டன. ஆனால் இன்று வரை எத்தனை ஆண்கள் மனமுவந்து வீட்டுப் பொறுப்பில் பங்கெடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்?
உங்களுக்கு மிக முக்கியமான குழந்தைச் செல்வத்தை ஈட்டித் தருவதில் பெரும்பங்கு ஆற்றுவது பெண்கள் தான். அதற்காக அவர்களை நீங்கள் கொண்டாட வேண்டுமா அல்லது அதையே காரணம் காட்டி அவர்கள் வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமா?
("அவளை யாரு வேலைக்குப் போகச் சொல்றா? அதுக்கு அவசியமே இல்ல. திமிரெடுத்துப் போனா, கஷ்டப்பட வேண்டியது தான்." என்று சொல்பவர்களுக்கு என்ன சொல்வது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. நல்ல பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! :D )
வேலைக்குச் செல்வதில் உள்ள சுதந்திரத்தையும் தன்மதிப்பையும் உணர்ந்த பெண்கள், அதில் திருமணத்துக்குப் பிறகு அதிருப்தி அடைகிறார்கள், வீட்டிலிருக்கும் பெண்களைப் பார்த்து ஏங்குகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் அதிகப்படியான பொறுப்புகளை வீட்டிலும் சுமக்க வேண்டி வருவதும், கொஞ்சமும் ஒத்துழைப்பு அளிக்காத (ஆணாதிக்க) குடும்பச் சூழலும் தானே ஒழிய வேறெதுவும் இல்லை.
குழந்தை பிறந்து சில காலம் வரை தாயின் அதிகபட்சக் கவனம் அதற்குத் தேவைப்படுவது உண்மை தான். ஆனால் பிறகு தாய் தந்தை இருவருமே குழந்தை நலனில் பங்கெடுக்க வேண்டும். இந்த மனப்பான்மை மாறாதவரை மணமுறிவுகள் அதிகரிப்பதும் குடும்ப அமைதி குலைவதும் தடுக்க முடியாத ஒன்றாகிவிடும். எச்சரிக்கை! இந்தப் போக்கால் பாதிக்கப்படப் போவது பெண்கள் மட்டுமல்ல.
நம் குழந்தைகள் நலன் என்பது வீட்டுக்குள் பெண் என்பவள் மட்டுமே சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம் அல்ல; அது ஒரு சமூகம் சார்ந்த நலனாகப் பார்க்கும் காலம் வந்தாலொழிய பெண் சுதந்திரம் அடைய அவளது தாய்மை உணர்வே தடையாக இருக்கும் (பரிதாப) நிலை தொடரத்தான் செய்யும்.
உதாரணமாக, பெண்களுக்கு சரிசமமான வேலை வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்குக்ம் ஐடி கம்பென்கிகளையும், ஐடி பார்க்குகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். பல்லாயிரம் சதுர அடிப்பரப்பில் புட் கோர்ட்டுகள், ஜிம்கள், பார்லர்கள், காஃபி ஷாப்புகள் என்று வசதிகள் நிறைந்திருக்கும் (வீட்டுக்கே போக வேண்டாம். இளைப்பாறி விட்டு வந்து வேலையைத் தொடருங்கள்!!) எத்தனை பார்க்குகளில் குழந்தைகள் காப்பகங்கள் இருக்கின்றன? இந்த நடைமுறை வசதி ஏற்பட்டால் குழந்தைகளைக் காட்டிப் பெண்களின் வேலைக்கும் சுதந்திரத்துக்கும் தடை போட முடியாது. அப்பாவும் அம்மாவும் முறை வைத்து அலுவலகத்துக்குப் பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு செல்லலாம்!
ஆனால் புகை பிடிக்கக் கூடத் தனிக் கூடங்கள் அமைக்கும் கரிசனம் காப்பகங்கள் அமைக்க ஏன் இருப்பதில்லை? There is no human face in this industrialization. It's all just a facade. (ஓகே ஓகே!. எனக்குத் தெரியாத ஏரியாவுக்குள்ள நான் ரொம்பப் போகல.)
ஆக, இது சமூகப் பிரச்னையாக இல்லாமல் தனிப்பட்ட பிரச்னையாகவே பார்க்கப்படுவதால் அவரவர் மனதிற்கேற்ற முடிவுகளைத் தான் எடுக்க வேண்டி வருகிறது.
இங்கு முல்லை சொன்னதை மீண்டும் நினைவு கூர்கிறேன். //வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.// நிச்சயமாக.
ஆகவே இன்றைய இரண்டுங்கெட்டான் சூழலில் சிக்கித் தவிக்கும் சராசரிப் பெண் என்ற முறையில் நிறைய காம்ப்ரமைஸ் செய்தாலும், முடிந்தவரை கலகம் செய்து போராடி எனக்குப் பிடித்ததைச் செய்து கொண்டு வருவதே என்னாலான புரட்சி!
இதற்கு மேல் எனக்கு இதைப் பற்றித் தெளிவாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. மற்றவர்களின் இடுகைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Monday, October 18, 2010
ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம்!
நேஹாவை நேற்று பள்ளியில் சேர்த்து விட்டு வந்தோம்.சென்ற மாதமே சேர்த்துவிட விரும்பினேன். ஆனால் அடுத்தமாதம் விஜயதசமியோடு தான் சேர்க்கை நடக்கும் என்று சொல்லி விட்டார்கள்.அவளும் ஒரு மாதமாக அந்தப் பள்ளியின் பெயரைக் கூறிச் சேரப்போவதாக எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருப்பாள்.
நேற்றுப் போய் பணம் கட்டி விட்டு அவர்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் பூர்த்தி செய்து, சொன்ன விதிமுறைகளுக்கெல்லாம் சிறிது நேரம் மண்டையை ஆட்டிக் கொண்டிருந்து விட்ட பின் குழந்தைகளையும் பெற்றோரையும் ஆக்டிவிட்டி ரூமுக்கு அழைத்துச் சென்றார்கள்.
நான்கு பேர் அமரக்கூடிய தாழ்வான மேஜை நாற்காலிகள் ஆங்காங்கே போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோரையும் ஒரு மேஜையைச் சுற்றி அமரச் செய்து, வண்ணம் தீட்டும் புத்தகம் ஒன்றைக் கொடுத்து வர்ணம் தீட்டச் சொன்னார்கள்.
சில குழந்தைகள் சமர்த்தாகச் செய்ய ஆரம்பித்தன. நேஹா வயதுடைய ஒரு சிறுமி அழகாக கோடுகளுக்குள் சொன்னபடி தீட்டிக் கொண்டிருந்தாள்.
நேஹா என்ன செய்யப் போகிறாள் என்று ஆர்வமும் படபடப்பும் வந்தது எனக்கு. அவளை அழைத்து அமரச் சொல்லித் தேடினேன். பார்த்தால், அங்கு கரும்பலகையருகே நின்று கொண்டு சாக்பீஸால் கிறுக்கிக் கொண்டிருந்தாள். யார் கூப்பிட்டாலும் வரவே இல்லை. அழைப்பவர்களுக்கு சரமாரியான வசவு வேறு. :(
அவளைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த இன்னொரு சிறுவனும் எழுந்து போய் கிறுக்கத் தொடங்கி விட்டான். அவனிடம், "நீ ஏ எழுது, நான் பி எழுதறேன். ஏய், இந்தப் பக்கம் இல்ல, அங்க போய் எழுது" என்று கட்டளைகள் தூள் பறந்தன. " ஆசிரியை எவ்வளவு அன்புடன் அழைத்தும் "ம் வரமாட்டேன்.. போ!" எங்கள் மேஜைஅருகே வரவும் இல்லை அந்தப் புத்தகத்தைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. என்ன வளர்த்திருக்கிறார்கள் என்று நினைத்திருப்பார்களோ? :-(
கொஞ்ச நேரம் கழித்து வந்தாள். அவளாகவே கூட இருந்த சிறுமியைப் பார்த்து "உன் பேர் என்ன, என் பேர் நேஹா" என்றாள். பொதுவாக அங்கிருந்த குழந்தைகளுடன் பேசவும் விளையாடவும் விரும்பினாள். பெரியவர்களை மதிக்கவே இல்லை. தர்மசங்கடத்துடன் அழைத்து வந்தோம். அவள் அப்பா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக்குத் தான் இவள் எப்படிப் பள்ளியில் ஒழுங்காக இருப்பாளா, டோட்டோ சான் மாதிரி விரட்டப்பட்டு விடுவாளா என்றெல்லாம் விபரீதக் கற்பனை வளர்ந்தது.
இன்று முதல் நாள். காலையில் எழுப்பிக் குளிக்க வைத்து, எப்படியோ ஒரு தோசை சாப்பிட வைத்து அழைத்துச் சென்றோம். புறப்படும் முன் அவளுக்கு வாங்கி இருந்த பை, ஸ்னாக்ஸ் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்தாயிற்றா என்று நூறு முறை கேட்டுச் செக் செய்து கொண்டாள்.
அந்தத் தெருவுக்குள் நுழையும் போதே பிஞ்சுகளின் அழுகுரல்கள் காதைக் கிழித்தன. அந்தப் பெரிய கறுப்பு கேட்டுக்கு இந்தப் பக்கம் ஒரு நான்கைந்து அம்மாக்கள் தவிப்புடன் நின்று கேட்டில் இருந்த சின்ன இடைவெளி வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்திலெல்லாம் கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் தர்மசங்கடம், கொஞ்சம் வேதனை,அதையும் மீறி சேய்ப்பறவைக்கு முதல் சிறகு முளைத்து விட்ட ஒரு வகையான ஏக்கம் கலந்த நிம்மதி என்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உணர்ச்சிக் கலவை தென்பட்டது. எனக்கும் தான்!
நேஹாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றோம். அங்கு கண்ட காட்சி!மூன்று ஆசிரியர்கள், மூன்று காப்பாளர்கள், அனைவரும் இடுப்பிலொன்றும் கையிலொன்றுமாய் அழும் குழந்தைகளைச் சமாதானப்படுத்தும் பிரம்மபிரயத்தனத்தில் இருந்தார்கள். குழந்தைகளைவிட இவர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அதுவரை அழாதவள் எங்கே இந்தக் களேபரத்தைப் பார்த்து அழத்தொடங்கிவிடுவாளோ என்று பயந்தேன்.
அதற்குள் அவளை வந்து வாங்கிக் கொண்ட ஆசிரியை 'குழந்தையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வேகமாக வெளியே சென்று விடுங்கள்' என்று எங்களைக் கிட்டத் தட்ட கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவைத் தாழிட்டுவிட்டார்கள். ஏனென்றால் லேசாகக் கதவு திறந்தாலும் பட்டாம்பூச்சிகள் வெளியே பறந்து விடத் தயாராக இருந்தன.
ஆனாலும் பட்டாம்பூச்சிகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிய பெரிய திறந்தவெளியும் காற்றோட்டமான கூடங்களும் அங்கு இருந்தததால் (ஏசி இல்லை!) எனக்கு அந்தப் பள்ளி பிடித்துத் தான் இருந்தது.
முதல் ஒரு வாரம் ஒரு மணிநேரம் மட்டும் விட்டு விட்டு வந்து அழைத்துச் செல்லச் சொல்லி இருந்தார்கள். நான் அலுவலகம் செல்லும் போது என்னைப் பிரிந்து இருந்து பழக்கம் தான் என்பதால் அவள் அழமாட்டாள் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் முதல் முறை முன்பின் அறியாதாவர்களிடம் விட்டு வந்ததால் கொஞ்சம் ஒரு மாதிரியாகவும் இருந்தது.
பத்தரை மணிக்கு நாங்கள் (நாளை முதல் அவளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரப்போகும் அகிலா அக்காவும் நானும்) சென்ற போது பெரும்பாலான பிள்ளைகள் அழைத்துச் செல்லப் பட்டு இருந்தார்கள். "நேஹா எங்கே" என்று கேட்ட போது, சிரித்துக் கொண்டே வ்ந்த ஒரு ஆசிரியா, "நேஹா அழவே இல்லை. ரொம்ப எஞ்சாய் பண்ணினா. என்ன, அவளுக்கு நீங்க குடுத்த் ஸ்ந்னாக்ஸைத் தவிர எல்லார் ஸ்னாக்ஸையும் வாங்கிச் சாப்பிட்டா." என்றார். அசடு வழிந்து கொண்டே "ஹி ஹீ." என்றேன்.மனதிற்குள் "அதுக்குள்ளே மானததை வாங்கிட்டாளே...வாடி, உனக்கு இருக்கு" என்று கறுவிக் கொண்டேன்.
புதுவிதமாய் ஒரு அனுபவம் வாய்த்த சந்தோஷத்துடன் வெளியே வந்தவள்எங்களைப் பார்த்தவுடன் ஓடியெல்லாம் வரவில்லை. வழக்கம் போல் "என்ன வாயின்ட்டு வந்துக்கே" என்றாள். பின், "ஜூலா கொஞ்ச நேரம் வெளையாடிட்டு வரேன்" என்று வெளியிலிருந்த் ஊஞ்சலிலும் சீசாவிலும் அமர்ந்து விளையாடினாள். அங்கிருந்து அழைத்து வரத்தான் கொஞ்சம் பாடுபட்டோம்.
இன்று இப்படி. இனி வரும் நாட்கள் எப்படியோ! அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும். யாரையும் தொந்தரவு செய்து புகார் வாங்காமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசையாக இருக்கிறது.
Tuesday, October 12, 2010
நான் தம்மடிக்கிற ஸ்டைலப் பாத்து...
ரோட்டோரமாக வெட்டியாக நின்று போகிற வருகிற பெண்களைக் கவர்வதற்காகப் பிலிம் காட்டுவார்களே, அதுவல்ல. சீரியஸாக ஏதாவது வேலை செய்து கொண்டே, (அல்லது புத்தகம் படித்துக் கொண்டு, எழுதிக் கொண்டு) சிகரெட் பிடிப்பதைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும்.
வீட்டில் மோட்டார் ரிப்பேர் பார்க்க, ப்ளம்பிங் வேலை செய்ய ஒருவர் வருவார். அவர் வாயில் எப்போதும் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும். வேலையினூடே சிகரெட்டைத் தன் அசிஸ்டென்டிடம் கொடுத்து விட்டு, அவ்வப்போது திரும்பிப் பார்க்காமல் கை நீட்டி வாங்கிக் கொள்வார். அந்தச் செய்கையை ஏனோ ரொம்ப ரசித்திருக்கிறேன்.
என் வீட்டில் எல்லா ஆண்களுமே (except Joe) இந்த விஷயத்தில் கெட்டுக் குட்டிச் சுவரான தண்ணி தெளிச்சு விட்ட கேஸ்கள் தான். அதுவும் நம் அபிமானப் பதிவர் இருக்கிறாரே, ஆண்டு தோறும் கடமை தவறாமல் என் அக்காவின் பிறந்த நாளன்று இந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்துவார்!
அப்பா சிகரெட்டாகப் பிடித்துப் பார்த்ததில்லை. பைப்பில் புகையிலை போட்டுப் பிடிப்பார். ஆனால் எனக்கு பைப்பை விட விரல்களினூடே மெல்லிசாய்ப் புகை கசியும் சிகரெட் மீது தான் ஈர்ப்பு!
வளர்ந்ததும் பெண்ணாகி விடுவோம், நமக்கென்று வேறு வரையறைகள் இருக்கும் என்றெல்லாம் உணராத பருவம் அது. சயின்டிஸ்டாக வேண்டும் என்ற கனவு இருந்த போது கூட, தாடியும் கண்ணாடியுமாக என்னை உருவப்படுத்திப் பார்த்துக் கொண்ட ஞாபகம் வருகிறது! அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் நாமும் சிகரெட் பிடிக்கலாம் என்றே கனவு கண்டு கொண்டிருந்தேன்.
கல்லூரியில் எப்போதும் ரேனால்ட்ஸ் பேனாவை வாயில் வைத்து ஸ்டைல் காட்டிக் கொண்டிருந்த எனக்கு, ஒரு பிறந்த நாளன்று நண்பர்கள் சிகரெட்டும் திப்பெட்டியும் பரிசளித்ததும், நானும் வீம்புக்கு வகுப்பறையிலேயே அதைப் பற்ற வைத்ததும் பயந்து அவர்கள் ஓட்டமெடுத்ததும் நினைவுக்கு வருகிறது. ஆனால் எனக்குச் சரியாகப் பிடிக்கத் தெரியவில்லை. கசக்கி எறிந்து விட்டேன்.
பிறகு அறிவு கொஞ்சம் வளர்ந்த பின், சிகரெட்டால் விளையும் கேடுகள், சீர் குலைந்த குடும்பங்கள், முக்கியமாய்ச் சதா சிகரெட் பிடித்து டிபி வந்து இறந்த எத்தனையோ பேரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு சிகரெட் மீது தீரா வெறுப்பு வந்தது உண்மை. குடிப்பதை விட மோசமாகவும் வேகமாகவும் ஆட்கொள்ளும் பழக்கம் இது என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
இருந்தாலும் புகையிலைக்குப் பதிலாக, வேறேதாவது, புகையாக உடலுள்ளே சென்றால் நன்மை அளிக்கக் கூடிய மூலிகை சிகரெட் தயாரிக்கலாம் தானே?அப்படி சிகரெட்டுகள் வரும் நாளில் பெண்கள் கூட ஸ்டைலாகப் புகை பிடித்துக் கொண்டு பாடலாம்..."நான் தம்மடிக்கிற ஸ்டைலப் பாத்து தனசேகர் விரும்புச்சு..."
Tuesday, October 5, 2010
எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
----------------------------------------------
ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.
தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''
படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!
ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...
வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?
நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.
மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?
ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.
சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.
படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.
தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!
"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!
- சமஸ்
Wednesday, September 29, 2010
Wednesday, September 22, 2010
நேஹா நேரம்!
இப்போது நிறைய பேச ஆரம்பித்து விட்டாள். சொல்வதைப் புரிந்து கொண்டு தெளிவாகப் பதில் சொல்கிறாள். இயல்பான உரையாடலை அவளோடு நடத்த முடிகிறது; அதனால் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை. பலதை மறந்தும் விடுகிறேன். ஆனாலும் சிலவற்றைப் பதிய விரும்புகிறேன்.
***********************
தலையில் அடிபட்டுத் தையல் போட மருத்துவமனைக்குச் சென்ற போது:
வலி தாங்காமல் அழுது கொண்டே: "அழக்கோடாது..பேட் ஆபிட். பேட் ஆபிட். ஊசி வேண்டாம். சரியாப் பேயிரும்...சரியா?"
நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றடையும் வரை, நாங்களும் வருவோம் என்று சொல்லிக் கொண்டிருந்ததால், "தீபாம்மா நல்ல அம்மா. ஊசி போட வேண்டாம். "
இதெல்லாம் சுற்றி இருந்த நர்ஸ்களிடம் அவள் சொன்னதாக எங்களிடம் சொன்னது! குழந்தைக்கு அடி எப்படி இருக்கிறது என்பதை விட இதைத் தான் சுவாரசியமாக முதலில் பகிர்ந்து கொண்டனர்!
***********************
வீட்டுக்கு நான் வந்ததும் முதல் வேலையாக இப்போதெல்லாம் ஒரு பாட்டு: "என்னா வாயின்ட்டு வந்துக்கே...என்னா வாயின்ட்டு வந்துக்கே..."சாக்லெட்டுகள் வாங்கிக் கொடுப்பது எனக்குப் பிடிக்காது. அதனால் ஒரு சின்ன பலூனோ, விக்ஸ் மிட்டாயோ, லாலி பாப்போ கட்டாயம் பையில் வைத்திருக்க வேண்டி இருக்கிறது.
***********************
என்றாவது தான் வந்தவுடன் கொஞ்ச விடுகிறாள். பெரும்பாலும், "ஏய் கொஞ்சாதே, ஓடீஇருவேன்...போய் ஷாப்பிடு. குளிச்சு வா..." என்று அதிகாரம் தான்.
***********************
அவளைக் குளியலறையில் நிறுத்தி விட்டு வெந்நீர் எடுத்து வரச் சென்றேன். கொண்டு வரும் போது, "பாப்பாக்குச் சுடு தண்ணியா? இருமலுக்கு நல்லார்க்குமா??"
***********************
சமையலறையில் வந்து நின்று கொண்டு:"அம்மா என்ன செய்ற? சமையல் பண்றியா?" "சிக்கன் செய்றியா?" "அங்காயம் உரிக்கிறியா..." ரன்னிங் கமென்ட்ரி கொடுத்தாகிறது.
***********************
பால் அவளுக்குக் கலந்து கொடுத்ததும், "அம்மாக்கு?" நானும் கூட டம்ளரைக் கையில் வைத்துக் கொண்டால் தான் குடிக்கிறாள்."அம்மா, கண்ணு காமி, மூக்கு, காது"...என்று ஒவ்வொன்றாகத் தொட்டுச் செக் செய்கிறாள்.
"எல்லாம் சரியா இருக்கா?" - கேட்கிறேன்.
"ம்..பாப்பாக்கு?" என்று அவளுக்குச் செக் செய்யச் சொல்கிறாள்!
***********************
"தலை வலிக்குதா, தேச்சு விடறேன்.. சரியாப் பேயிரும், இனிமே அழாத என்ன? "
***********************
சில சமயம் ஏதாவது விஷமம் செய்யும் போதோ, எடுக்கக் கூடாதது ஏதாவது கையில் வைத்துக் கொண்டிருந்தாலோ, அருகில் சென்றால், "ஏய் வேணாம்...கிட்ட வராதே..ஒடீருவேன்!" என்று ஓடுகிறாள்.
***********************
On the downside :(: நான் ஏதாவது பாட வாய் திறந்தாலே "பாடாதே.." என்று ஒரே கத்தல். பாத்ரூமுக்குள் கூடப் பாட விடமாட்டேனென்கிறாள். கதவருகே நின்று கொண்டு "பாடாதே, பாடாதே." ஒரு நாள் அப்படிச் சொல்லி விட்டு அவளாகவே "அம்மா பாடாதே சொல்லக் கோடாது" என்றாள். நான் கொஞ்சம் மகிழ்வதற்குள் "பாடாதீங்கம்மாஆஆஆ" சொல்லணும் என்றாள்.
??!!!@#!@#
***********************
Tuesday, September 21, 2010
கண்ணாமூச்சி
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
மரத்தின் பின் நின்று 1, 2, 3 எண்ணிக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.
"ஷ்! நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்."
"அப்படியா? யாரிடமிருந்து?"
"என்னிடமிருந்தே."
"ஓ! எப்படி உன்னைக் கண்டுபிடிப்பாய்?"
"100 எண்ணி முடித்ததும் லேசாக எட்டிப் பார்ப்பேன்! பின் வெளியே வந்து விடுவேன்"
"நான் உன் கூட விளையாட வரவா?"
"ஓ! நீங்கள் அந்த மரத்தின் பின் நின்று உங்களிடமிருந்தே ஒளிந்து கொள்ளுங்கள்!" - உற்சாகமாகக் கூறினாள் சிறுமி.
Friday, September 17, 2010
குழந்தைகள்
அவர்கள் வழக்கமாகத் தூங்கப் போகும் நேரம் தாண்டி விட்டது; இருந்தாலும் ஒருவரும் தூங்கச் செல்லவில்லை. எப்படித் தூங்குவது? பெரியவர்கள் திரும்பி வந்ததும், 'அந்த வீட்டுக் குழந்தை எப்படி இருந்தது? என்ன உடை அணிந்திருந்தது? விருந்தில் என்னென்ன சாப்பிட்டார்கள்?' என்றெல்லாம் கேட்டுத் துளைக்க வேண்டாமா?
மேஜை மீது லோட்டோ சீட்டுகளும், துண்டுக் காகிதங்களும், கடலைத் தோல்களும் இறைந்து கிடக்கின்றன. மேலே ஒரு விளக்கு தொங்குகிறது. ஒவ்வொரு குழந்தையின் முன்னும் இரண்டு சீட்டுகளும், எண்களை மறைத்துக் கொள்ள சிறு கண்ணாடித் துண்டுகளும் இருக்கின்றன. மேஜையின் நடுவே ஒரு சிறு தட்டில் ஐந்து கோப்பெக்குகள்* கிடக்கின்றன.
குழந்தைகள் காசு வைத்து விளையாடுகிறார்கள். ஒரு கோபெக் தான் பணயம். ஆனால் நிபந்தனை என்னவென்றால் யாராவது அழுகுணி ஆட்டம் ஆடினால் உடனே விரட்டியடிக்கப் படுவார்கள். கூடத்தில் குழந்தைகளைத் தவிர வேறு யாருமில்லை. சமையலறையில் சமையற்காரரும் அவரது உதவியாளரும் இருக்கிறார்கள். முன்னறையில் குழந்தைகளின் பெரிய அண்ணன் வாஸ்யா, பத்தாவது படிக்கிறவன், சோஃபாவில் சோம்பிக் கொண்டு படுத்திருக்கிறான்.
குழந்தைகள் ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கிரிஷாவின் முகத்தில் தான் அதீத ஆர்வம் கொப்பளிக்கிறது. அவனுக்கு ஒன்பது வயதாகிறது. மண்டை தெரியுமளவு வெட்டப்பட்ட க்ராப் தலையும், குண்டுக் கன்னங்களும் தடித்த உதடுகளும் கொண்ட அவன் நான்காவது படிக்கிறான். அனைவரையும் விட அறிவாளியாகவும் அவன் கருதப்பட்டான். அவன் விளையாடுவது முழுக்க முழுக்கக் காசுக்காகத் தான். அந்தத் தட்டில் மட்டும் ஐந்து கோப்பெக்குகள் இல்லாவிட்டால் எப்போதோ உறங்கச் சென்றிருப்பான்.
அவனது பழுப்பு நிறக் கண்கள் பொறாமையோடு மற்றவர் கைகளிலிருக்கும் சீட்டுக்களைப் பின்தொடர்கின்றன. வேறு யாராவது ஜெயித்து விடுவார்களோ என்ற பயமும், குழப்பமும் அவனை விளையாட்டில் ஒழுங்காகக் கவனம் செலுத்த விடாமல் தடுக்கிறது. முள்ளின் மேல் அமர்ந்திருப்பவன் போல் அமைதியற்று நெளிந்து கொண்டிருக்கிறான் அவன். ஒரு விளையாட்டில் வென்று விட்டால் பேராசையுடன் கோப்பெக்குக்ளைக் கைப்பற்றிப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறான்.
அவனது எட்டு வயதுத் தங்கை ஆன்னா, கூர்மையான நாடியும் அறிவுததும்பும் கண்களும் உடையவள் அவனைப் போலவே முகம் வெளிறி இருக்கிறாள். அவளுக்குக் காசு முக்கியமில்லை. ஆனால் விளையாட்டில் தோற்று விடக் கூடாது என்பதே அவள் கவலையாக இருக்கிறது.
ஆறுவயது சோனியா, சுருண்ட தலைமுடியும், விலையுயர்ந்த பொம்மைகளில் காணப்படுவது போல் சிவந்த கன்னங்களையும் கொண்ட ஆறுவயதுச் சிறுமி, லோட்டோ விளையாடுவதில் இருக்கும் மகிழ்ச்சிக்காகவே விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் முழுமையான குதூகலம் நிறைந்திருக்கிறது. யார் வென்றாலும் அவள் சிரித்துக் கொண்டே கைதட்டிப் பாராட்டுகிறாள்.
சிறிய உருவமான அல்யோஷாவோ வெறித்த கண்களுடன் சீட்டுக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குப் பேராசையும் இல்லை, வீறாப்புமில்லை. தூங்கப் போகுமாறு யாரும் அவனை விரட்டிவிடாதவரை அவனுக்குச் சரிதான். உணச்சிகளை எளிதில் காட்டாத சிறுவன் அவன்; ஆனால் மனதளவில் கொஞ்சம் துஷ்டன் தான். விளையாடும் போதை விட குழந்தைகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டாலோ, திட்டிக் கொண்டாலோ அவனுக்கு அலாதியான உற்சாகம் ஏற்படுகிறது. மற்றவர்கள் அவன் காசுகளைத் திருடிக் கொண்டுவிடுவார்கள் என்பதற்காகவே அவன் அங்கேயே இருக்கிறான்.
சமையற்காரரின் மகனான அந்திரே, கரிய நிறமும் மெல்லிய உருவமுமான அவன் எளிய பருத்திச் சட்டையும் கழுத்தில் தாமிரத்திலான சிலுவையும் அணிந்திருந்தான். அவனுக்குக் காசிலோ வெற்றியிலோ ஆர்வமில்லை. அவன் அந்த விளையாட்டில் இருக்கும் சிக்கலான கணிதத்தில் லயித்திருக்கிறான். உலகத்தில் எத்தனை எண்கள், கணிதங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சிக்கலில்லாமல் அறிந்து கொள்வதெப்படி என்று ஏதேதோ சிந்தித்தபடி இருக்கிறான்.
சோனியாவையும் அல்யோஷாவையும் தவிர எல்லாரும் எண்களைக் கத்துகிறார்கள். உற்சாகத்தைக் கூட்டுவதற்காக அவர்கள் எண்களுக்குப் புனைப்பெயர்களும் சூட்டி உள்ளனர். எடுத்துக்காட்டாக, பதினொன்று என்ற எண்ணுக்கு "இரு குச்சிகள்", ஏழுக்கு "துடுப்பு" - இப்படியாக விளையாட்டு குதூகலமாக நடந்து கொண்டிருக்கிறது.
அந்திரே தனக்கு வந்த ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிடுவதைக் கவனிக்கிறாள் ஆன்னா. மற்றொரு சமயமானால் அவனுக்கு அதைச் சுட்டிக் காண்பித்திருப்பாள். ஆனால் அவளது கௌரவம் ஒரு கோப்பெக்காக அதோ தட்டில் கிடக்கிறது. அதனால் ஒரு வெற்றிப்புன்னகையுடன் அமைதியாக இருந்து விடுகிறாள்.
"இருபத்து மூன்று", "ஒன்பது" - கிரிஷா கத்திக் கொண்டிருக்கிறான்.
"ஏய், ஒரு வண்டு, வண்டு..." திடீரென்று சோனியா கூச்சலிடுகிறாள். மேஜை மீது ஒரு பொன்வண்டு ஊர்ந்து கொண்டிருக்கிறது.
"அதை அடிச்சுடாதீங்க பாவம். அதுக்குக் குழந்தைங்க இருக்கலாம்." தனது ஆழ்ந்த குரலில் சொல்கிறான் அல்யோஷா.
சோனியா உடனே ஆச்சரியத்துடன் அந்த வண்டைப் பார்க்கிறாள். 'இதுவே இவ்ளோ சின்னதா இருக்கே, இதோட குழந்தைங்க எவ்ளொ குட்டியா இருக்கும்?'
"நாற்பத்து மூணு" பொறுமையிழந்து கத்துகிறான் கிரிஷா. ஏற்கெனவே நாலு விளையாட்டில் ஆன்னா ஜெயித்து விட்டாள் என்று அவனுக்கு எரிச்சல்.
அப்போது சோனியா கள்ளத்தனமாகச் சிரித்தவாறே சொல்கிறாள். "நான் ஜெயிச்சுட்டேன்!" - எல்லாரும் வாட்டமடைகின்றனர்.
"இரு இரு, சரிபார்க்கணும். நீ நிஜமாவே ஜெயிச்சிருக்கியான்னு."
சோனியாவின் சீட்டுகளைக் கவனமாகப் பொறுமையுடன் சரிபார்க்கிறான் கிரிஷா. அனைவரின் ஏமாற்றத்துக்கும் ஏதுவாக அவள் அழுகுணி ஆடியிருக்கவில்லை. சரியாகவே ஜெயித்திருக்கிறாள். இன்னொரு விளையாட்டு ஆரம்பமாகிறது.
தனக்குள் பேசிக் கொள்வது போல் ஆன்னா சொல்கிறாள். "நேத்திக்கு ஸ்கூல்ல ஃபிலிப் ஒண்ணு செஞ்சான். அவன் கண் இமையைத் திருப்பி விட்டுக்கிட்டான். அப்படியே பேய் மாதிரி இருந்தான்."
"நான் கூடப் பாத்தேன். எங்க க்ளாஸ்லே ஒரு பையான் அவன் காதை மட்டும் ஆட்டிக் காட்டுவான்." "எட்டு!"
அந்திரே கிரிஷாவைப் பார்க்கிறான். "அது நான் கூடச் செய்வேனே"
"எங்கே ஆட்டிக் காட்டு பார்க்கலாம்!"
அந்திரே உடனே தன் கண்கள், உதடுகள் எல்லாவற்றையும் அஷ்ட கோணலாக்கிக் கொள்கிறான். அவன் காதும் ஆடுவதாகப் பாவித்துக் கொள்கிறான். எல்லாரும் சிரிக்கின்றனர்.
"அந்த ஃபிலிப் ரொம்ப மோசமானவன். அன்னிக்குத் திடீர்னு நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டான். நான் வெறும் ஷிம்மீஸ் தான் போட்டிருந்தேன். எனக்கு ரொம்ப வெட்கமாப் போச்சு தெரியுமா." என்று பெரியமனுஷி போல் பொருமுகிறாள் சோனியா.
"கேம்!" கத்திக் கொண்டே காசுத்தட்டைக் கைப்பற்றுகிறான் கிரிஷா. "நான் ஜெயிச்சுட்டேன். வேணும்னா சரிபாத்துக்கங்க."
அந்திரேவின் முகம் வாடுகிறது. "அப்படின்னா இனிமே நான் விளையாட முடியாது."
"ஏனோ?"
"ஏன்னா, ஏன்னா, என் கிட்ட இனிமே காசில்லை."
"காசில்லன்னா ஆட முடியாது" - கிரிஷா.
அந்திரே மீண்டும் ஒருமுறை தன் பாக்கெட்டுகளில் கைவிட்டுத் துழாவுகிறான். சில ரொட்டித் துகள்களும், பென்சில் துண்டுகளும் தவிர எதுவும் அகப்படாமல் போகவே உதட்டைப் பிதுக்குகிறான். அவன் கண்கள் நிறைந்து எக்கணமும் அழுதுவிடுவான் போலிருக்கிறது.
அவனை அப்படிக் காணச் சகிக்காத சோனியா சட்டென்று கூவுகிறாள். "நான் உனக்காகக் காசு போடறேன். ஆனா நீ ஜெயிச்சப்பறம் ஞாபகமா திருப்பித் தந்துடணும் என்ன?" மீண்டும் காசு வைத்து ஆட்டம் தொடங்குகிறது.
திடீரென்று, "எங்கேயோ மணியடிக்கிறாங்க" என்கிறாள் ஆன்னா.
எல்லாரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டுச் சன்னலை நோக்குகிறார்கள். "சும்மா, உன்னோட பிரமை"
"இந்நேரத்துல கல்லறையில தான் மணியடிப்பாங்க" - அந்திரே.
"அங்கே எதுக்கு மணியடிக்கிறாங்க?"
"திருடங்க சர்ச்சுக்குக்ள்ள நுழைஞ்சிடாம இருக்கத் தான்."
"திருடங்க எதுக்குச் சர்ச்சுக்குள்ள வருவாங்க?" கேட்கிறாள் சோனியா.
"எல்லாருக்கும் தெரியும் எதுக்குன்னு. காவல்காரனை அடிச்சுப் போடத் தான்."
ஒரு நிமிடம் அனைவரும் பயந்து போய் அமைதியாகின்றனர். பின்னர் தோள்களைக் குலுக்கிக் கொண்டு விளையாட்டைத் தொடர்கின்றனர். இம்முறை அந்திரே ஜெயித்து விடுகிறான்.
"அவன் அழுகுணி ஆட்டம் ஆடிருக்கான்" என்கிறான் அல்யோஷா.
"பொய். நான் ஏமாத்தவே இல்ல." ஆத்திரம் தாங்க முடியாமல் அல்யோஷாவை ஓங்கித் தலையில் அடிக்கிறான் அந்திரே. பதிலுக்கு அல்யோஷா அந்திரே கன்னத்தில் அறைகிறான். இருவரும் அடித்துக் கொண்டு புரள்கின்றனர். இதையெல்லாம் தாங்க முடியாத சோனியா அழத் தொடங்குகிறாள். சிறிது நேரம் கூடமே களேபரமாகிறது. அதனால் ஆட்டம் முடிந்து விட்டதென்று எண்ணிவிட வேண்டாம். இதோ ஐந்தே நிமிடங்களில்குழந்தைகள் சிரித்துக் கொண்டு முன்போல் ஒற்றுமையாக விளையாடத் தொடங்கிவிட்டார்களே! கன்னங்களில் அழுத நீர்க்கோடு கூடக் காயவில்லை. ஆனால் அவர்கள் சிரிப்புக்க்குப் பஞ்சம் வந்து விடவில்லை. அல்யோஷாவுக்குப் பரமதிருப்தி. ஒரு சண்டை போட்டாகிவிட்டது!
பெரியவன் வாஸ்யா தூக்கக்கலக்கத்துடன் அங்கே வருகிறான்.
கிரிஷாவின் பாக்கெட்டில் சில்லறைகள் குலுங்குவது கேட்கிறது. "அநியாயம் அக்கிரமம்! சின்னப் பசங்களைப் போய் எப்படிக் காசு வெச்சு விளையாட விடுறாங்க? நல்லா வளக்கறாங்கப்பா."
ஆனால் கொஞ்ச நேரம் அவர்கள் விளையாடுவதைப் பார்த்து அவனுக்கும் ஆசை வருகிறது. "நானும் ஆட வரேன் அடுத்த ஆட்டத்துக்கு."
"ஒரு கோப்பெக்கைக் கீழ வை!"
"இதோ," என்று தன் பாக்கெட்டுகளில் கை விடுகிறான். "என் கிட்டே ஒரு கோப்பெக் இல்ல. நான் ஒரு ரூபிள் வைக்கிறேன்."
"இல்ல இல்ல, ஒரு கோப்பெக் தான் வைக்கணும்."
"முட்டாள்களா! ஒரு ரூபிள் ஒரு கோப்பெக்கை விட எவ்வளவோ பெரிசு." பெரியவன் விளக்க முற்படுகிறான். "யாராவது ஜெயிச்சீங்கன்னா எனக்குச் சில்லறை கொடுங்க."
"வேணாம், நீ போயிடு."
வேறு வழியில்லாமல் வாஸ்யா எழுந்து சமையலறைக்குச் செல்கிறான்; வேலையாட்களிடம் சில்லறை வாங்கி வர. அவர்களிடமும் இல்லை.
திரும்பி வந்து கிரிஷாவிடம் சொல்கிறான். "நீ எனக்கு ஒரு ரூபிளுக்குப் பத்து கோப்பெக் தா, போதும். என்ன சரியா? பத்தே கோபெக்."
கிரிஷா அவனைச் சந்தேகத்துடன் பார்க்கிறான்; இதில் ஏதாவது சூதிருக்குமோ என்று.
"முடியாது" என்று தன் பாக்கெட்டுக்குளை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறான்.
வாஸ்யா பொறுமையிழந்து அவர்களைக் கண்டபடி திட்டுகிறான். "முட்டாள்களா! பைத்தியங்களா!"
"நான் உனக்கு ஒரு கோப்பெக் வைக்கிறேன் வாஸ்யா" மீண்டும் சோனியா தன முன்வருகிறாள். அவன் அமர்ந்து விளையாட ஆரம்பிக்கிறான்.
"ஏய் இருங்க. என்னோட ஒரு காசைக் காணோம்." திடீரென்று கலவரத்துடன் கத்துகிறான் கிரிஷா. மேஜை மேலிருந்த விளக்கை அவிழ்த்துக் கையில் வைத்துக் கொள்கிறான் கிரிஷா. அவன் அண்ணன் அதைப் பிடுங்கித் திரும்ப இருந்த இடத்தில் வைக்கிறான். அனைவரும் மேஜை மேலே கீழே என்று தேட ஆரம்பிக்கிறார்கள். ஒரு வழியாகக் காசு கிடைக்கிறது. திரும்பவும் விளையாடலாம் என்று அமர்கிறார்கள்.
"சோனியா தூங்கிட்டா" அறிவிக்கிறான் அல்யோஷா.
தன் சுருள்தலைமுடிகொண்ட தலையைக் கைக்கடியில் வைத்து, இனிமையானதொரு ஆழ்ந்த துயிலில் இருக்கிறாள் சோனியா. அனைவரும் கோப்பெக்கைத் தேடத்தொடங்கும் போதே அவள் தூங்க ஆரம்பித்திருக்க வேண்டும்.
"வா, வந்து அம்மா படுக்கையில படுத்துத் தூங்கு." அவளை எழுப்பி அழைக்கிறாள் ஆன்னா. சற்று நேரத்திலெல்லாம் அம்மாவின் படுக்கை வினோதமாகக் காட்சியளிக்கிறது. சோனியா நன்றாகத் தூங்குகிறாள்; அவளருகே அல்யோஷா குறட்டை விட்டபடி; இவர்கள் காலருகே தலை வைத்து கிரிஷாவும் ஆன்னாவும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமையற்காரியின் மகனான அந்திரேவும் அவர்களருகிலேயே தூங்குகிறான். இவரகளுக்குச் சற்றுத் தொலைவில் தரையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன அந்தக் காசுகள். அடுத்த விளையாட்டு தொடங்கும் வரை அவற்றுக்கு யாதொரு மதிப்பும் இல்லை.
குட் நைட்!
* ருஷ்ய நாணயங்கள். 1 ரூபிள் என்பது 100 கோப்பெக்குகளுக்குச் சமம்.
ஒரு கோப்பெக் என்பது ஒரு பைசாவுக்குச் சமமாகக் கொள்ளலாம்.
Monday, September 13, 2010
பாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்
இல்லை இல்லை... ஆண்களுக்குத் தான் பிரச்னை அதிகமாக இருக்கிறது. அவர்களுக்காகப் போராட யாருமே வருவதில்லை.
:((
பதிவுலக ஆண்களின் பரிதாபநிலை கண்டு ஒரு பெண்ணாக வெட்கப்படுகிறேன் என்று எழுதினால் என்னை பெண்ணாதிக்கவாதிகள் குதறிவிடுவார்கள் என்று பயப்பட்டு ஒன்றும் சொல்லாமல் போகிறேன்...
சரி, விஷயத்துக்கு வருவோம்...பாதுகாப்பாகச் chat செய்ய என்ன வழி?
10...................
9.................
8.........
7........
6......
5. கணினியை ஆஃப் செய்யுங்கள்.
4. தொலை பேசியில் மறந்து போன பழைய நண்பர்கள் எண் இருக்கும். தேடி எடுத்து மனம்விட்டுப் பேசுங்கள்.
3. மூலைத் தெருவில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் போரடித்துக் கொண்டிருப்பார். அவரிடம் சென்று chat செய்யுங்கள்.
2. அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் செல்லுங்கள்; முடிந்தால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு.
1. அவர்கள் வீட்டிலிருப்பவர்களுடன் அளவளாவுங்கள். குழந்தைகளை விளையாட விடுங்கள்.
இவைதான் எனக்குத் தெரிந்த சில பாதுகாப்பான chat வழி முறைகள். இன்னும் இருந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
Wednesday, September 8, 2010
எரின் ப்ரோக்கோவிச்
பதில் பேசாமல் எதிராளியான பெண்மணி தண்ணீர் குடிக்க எத்தனிக்கிறார்; "ஓ! அந்தத் தண்ணி உங்களுக்காகப் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டது. ஹின்க்லியிலிருந்து!" என்கிறார் எரின்! அந்தப் பெண்மணி திடுக்கிட்டுத் தண்ணீரைக் குடிக்காமல் க்ளாஸைக் கீழே வைக்கிறார்.
"எரின் ப்ரோக்கோவிச்"கள் வெற்றி பெறுவது அமெரிக்காவில் தான் போலும்.
Thursday, September 2, 2010
ஏழெட்டுத் தொப்பிகளும் பத்துச் சட்டைகளும்
நான் உள்ளே நுழைந்து அமர்வதற்குள் ஒரு நூறு வார்த்தையாவது பேசியிருப்பாள் அந்தச் சிறுமி. "ஆன்டி, உங்க பொண்ணா? ரொம்ப க்யூட்டா இருக்கா...எனக்கு இந்த மாதிரி சின்னக் குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும். விளையாடிக்கிட்டே இருப்பேன். எங்க ஸ்கூல்லயே நான் தான் ரொம்பப் பிரில்லியன்ட். என்னைத் தான் எங்க களாஸ்ல லீடர் ஆக்கி இருக்காங்க எங்க மிஸ்..."
சுவாரசியமாகவும் ஆசையாகவும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவள் அம்மாவிடம் திரும்பி, "அம்மா, நம்ப விஷயத்தை இந்த ஆன்ட்டி கிட்ட சொல்லிடலாமா....அது இல்லம்மா... அந்த இன்னொரு விஷயம்.." என்று எதையோ ரகசியமாகக் கேட்டாள்.
நம்பினால் நம்புங்கள், நான் சென்று அமர்ந்து இரண்டு நிமிடம் கூட ஆகவில்லை. அவர்களை முன்பின் பார்த்தது கூடக் கிடையாது.
அவள் அம்மாவின் முகம் அடைந்த தர்மசங்கடத்தைப் பார்த்து நான் அதை விட சங்கடத்துக்குள்ளானேன். எதையோ சொல்லிப் பேச்சை மாற்றினேன். அவள் அம்மா நன்றியுடன் ஒரு புன்னைகை பூத்தார்.
ஒரு நிமிடம் உட்காரவில்லை. அங்கு நான், அவள் அம்மா, ஒரு ஆயா மட்டும் தான் இருந்தோம். ஆனாலும் "ஆன்டி நான் டான்ஸ் ஆடிக் காட்டவா" என்று அவள் பாட்டுக்குத தொம் தொம் என்று குதித்து ஆடியதும், வந்து என் கையிலிருந்த கைப்பையை என்னைக் கேட்காமலே எடுத்துப் பார்த்ததும், நான் ஃபோன் செய்யும் போது, 'யாருக்கு ஆன்ட்டி ஃபோன் பண்றீங்க?' என்று நெருங்கி உட்கார்ந்ததும் ஏனோ கொஞ்சம் கலக்கத்தை உண்டுபண்ணியது.
நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தைகள் இப்படி இருப்பது இயல்பு தான்.ஆனால் பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி?
நான் செய்வதறியாமல் திகைத்து அவர் அம்மாவைப் பார்க்கும் போது தான் அவர் லேசாக, "ஏய், இங்கே வா" என்றாரே ஒழிய, மற்றபடி பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றே அந்தக் குழந்தைக்குப் புரியவைக்கப் படவில்லை என்பது புரிந்தது. குழந்தையின் நலனுக்காக இதைச் செய்திருக்க வேண்டியது அவசியமில்லையா?
பெரியமனுஷி போல் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவள், அவள் அம்மா, 'கொஞ்சம் இவளைப் பாத்துக்கங்க' என்று என்னிடம் விட்டுவிட்டு டாக்டரைப் பார்க்க உள்ளே சென்ற போது சின்னக் குழந்தை போல் கத்தி அழ ஆரம்பித்து விட்டாள். அதுவும் எப்படி, கண்களைக் கசக்கி வலிய வரவழைத்த ஒரு அழுகை! அதுவும் ஒரு நிமிடம் தான்.திடீரென்று கண்ணைத் துடைத்துக் கொண்டு முன்போல குதியாட்டம் போடத் துவங்கி விட்டாள்.
அவ்வப்போது, "உங்க பொண்ணு மாதிரி ஸ்மார்ட்டான ஒரு குட்டியை நான் பாத்ததே இல்லை ஆன்டி" என்று பெரிய மனுஷி போல் ஐஸ் வைக்கவும் தவறவில்லை! அடக்கமாட்டாத சிரிப்புடன், "உங்க அம்மா இப்படிக் குதிக்கக் கூடாதுன்னு சொன்னாங்க இல்ல. இங்ல வந்து பாப்பா கூட உட்காரும்மா." என்றேன்.அவள் கேட்டால் தானே? இவள் போடும் ஆட்டத்தில் ஆயாசமடைந்து நேஹாவே சமத்தாக என் மடியில் உட்கார்ந்து விட்டாள் சிறிது நேரத்துக்குப் பிறகு!
அவள் அம்மா வெளியில் வரும் போது, டாக்டர் இவள் குரலைக் கேட்டு, "யாரு உங்க பொண்ணா?" என்று கேட்டார். தன்னைப் பற்றித் தான் கேட்கிறார்கள் என்று அறிந்ததும் யாரும் அழைக்காமலே உள்ளே போனவள், பதவிசாக டாக்டர் அருகில் போய் கைகட்டி நின்று கொண்டாள். அவர்கள் கேட்டதற்குச் சமத்தாகப் பதிலளித்தவள், "தேங்க்யூ மேம்" என்றபடியே வெளியில் வந்தாள்.
உண்மையில் அந்தப் பெண் படு சுட்டி. குழந்தையிடம் அவள் கொஞ்சியதிலும் விளையாடியதிலும் உண்மையான அன்பும் தெரிந்தது. ஆனால் எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலா, இல்லை அதிகப்படி கவனம் கொடுக்கப்பட்ட காரணமா, இல்லை அதற்கு முற்றிலும் மாறான சூழலா, என்ன காரணமெனத் தெரியவில்லை. ஆனாலும் அவளது செயல்கள் அங்கு இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருந்தன.
பள்ளியில் தான் செய்த சாதனைகளைக் குழந்தைகள் பகிர்வது அழகு தான். முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் கூட சட்டென்று நெருங்கி அன்யோன்யமாவதும் சில குழந்தைகளின் அழகான இயல்பு தான். ங்க ஸ்கூல்லியே நான் தான் ப்ரில்லியன்ட், என்பதும் அவள் அம்மாவுக்கும் அவளுக்குமான ஏதோ ரகசியத்தை அப்போது தான் பார்த்த ஒருவரிடம் சொல்லட்டுமா என்றதையும் எந்த ரகத்தில் சேர்ப்பது?
உண்மையில் அவள் 'பள்ளியிலேயே ப்ரில்லியன்ட்' என்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் என் பத்து வயதில் நான் அறிமுகமற்ற யாரிடமாவது இப்படிச் சொல்லி இருந்தால் (நான் அப்படி உண்மையாகச் சொல்ல வாய்ப்பே இல்லை என்றாலும்!) என் அம்மா நன்றாகக் கொடுத்திருப்பார்கள்.
அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட பரவசமும், மகிழ்ச்சியும் நேரம் செல்லச் செல்ல சற்றே அயர்ச்சியாக மாறியது உண்மை! உங்களுக்கு என்ன தோன்றுகிறது? Am I over reacting, just because she is some stranger's kid?
இது பற்றி சிந்தித்த போது நினைவுக்கு வந்த ஒரு விஷயம்:
அதிகக் கோபம், முரட்டுத்தனம், இவையெல்லாம் பிரச்னைகள் என்பதைவிட வேறு பிரச்னைகளின் symptoms என்று தான் தோன்றுகிறது. மாற்று ஈடுபாடுகளின் மூலம் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தி விடலாம். இந்த இடுகையினைப் பாருங்கள். முரட்டுத்தனம் மிகுந்த ஒரு சிறுவனை ஒரு பள்ளியில் எப்படி மாற்றி இருக்கிறார்கள் என்று.
ஆனால் இரண்டு மூன்று வயதில் இயல்பாக இருக்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பாங்கு, எந்த இடத்திலும் தான் தான் முக்கியம் என்ற நினைப்பு இவையெல்லாம் (attention seeking) வளரவளரக் குழந்தைகளிடம் குறைய வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை புரியவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்படி இல்லையோ? Is modesty no longer a worthy virtue?
Little women என்கிற புகழ்பெற்ற நாவலில் ஒரு சம்பவம் வரும். நான்கு மகள்கள் கொண்ட அம்மா தன் சுட்டியான கடைசி மகளிடம் பேசுவதாக: "கண்ணா உனக்கு நிறைய அறிவும் திறமைகளும் இருக்கு. அதுக்காக அதையெல்லாம் எப்போதுமே எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருக்கணும்னு அவசியம் இல்லை. உன் அறிவும் திறமையும் நீ வளர்த்துகிட்டே போனா, உன் பேச்சிலயும் உன் செய்கைகளிலுமே அது இயல்பா வெளிப்படும். நீயா வெளிச்சம் போட்டுக் காட்டறது அழகில்லை" என்று. அப்போது அவளது அக்கா ஜோ (கதையின் நாயகி) சொல்வாள், "ஆமாம், உன் கிட்ட ஏழெட்டு தொப்பி, பத்து பட்டுச் சட்டைகள் இருக்குனு காமிக்க எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு போட்டுக்கிட்டு வெளிய போனா எப்படி இருக்கும்? அதே மாதிரி தான்" என்பாள்.
போட்டிகளும் விளம்பரங்களும் அதிகரித்து வரும் இன்றைய வியாபார உலகத்தில் இந்தச் சிறு அறிவுரை (piece of wisdom) செல்லாக்காசாகி விட்டதோ?
Sunday, August 29, 2010
யாரிடம் சொல்லி அழ?
அசையாமல் அது நின்றிருந்த கோலமும், குச்சிபோல் நேராக இருந்த அதன் கால்களும், ஏதோ அரையணாவுக்குக் கிடைக்கும் பொம்மைக் குதிரையோ எனும்படியான தோற்றத்தைக் கொடுத்தது. குதிரையும் ஏதோ பலமான யோசனையில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றியது. ஆம், ஏர் கலப்பைகளிடமிருந்தும், நன்கு பரிச்சயமான வயல்வெளிகளிலிருந்தும் பிரிக்கப்பட்டு, கூச்சலும் குழப்பமும் நிறைந்த இந்தக் கொடூரமான நகரவெளியில், யந்திர மனிதர்களுக்கிடையே எறியப்பட்டால், மிருகங்கள் கூட கனத்த மௌனத்துடன் யோசனையில் ஆழ்ந்து விடக்கூடும்.
வெகு நேரமாக ஐயோனாவும் அவன் குதிரையும் அப்படியே இருந்தார்கள். மாலை மயங்கும் போதே அவர்கள் இங்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு சவாரி கூட வரவில்லை. ஆனால் இப்போது அந்தி சாயத் தொடங்கி விட்டது. இருளின் அடர்த்தியில் தெருவிளக்குகள் பளிச்சென்று எரியத்துவங்கின; சாலையில் நடமாட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது.
"ஹேய், குதிரை வண்டி, பஜாருக்கு வருமா?" ஒரு அதட்டலான குரல் வண்டிக்காரனின் காதில் விழுந்தது.
அவசரமாக எழுந்தவன் பனி மூடிய தன் கண்ணிமைகளின் வழியாகப் பார்த்தான்; இராணுவ அதிகாரி ஒருவன் கோட்டும் தொப்பியும் அணிந்து மிடுக்காக நின்று கொண்டிருந்தான்.
"என்னா தூங்க்குறியா? பஜாருக்குப் போகணும்யா" என்றான் அவன் மீண்டும்.
வண்டிக்காரன் ஒன்றும் பேசாமல் தலையாட்டி விட்டு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான். பனித்துகள்கள் நாலாபக்கமும் சிதறின. குதிரை வேண்டாவெறுப்பாக எழுந்து நடக்கத் தொடங்கியது.
"யோவ், எங்கய்யா போறே? ஓரமாப் போய்யா" எதிரே வந்த ஒருவன் திட்டி விட்டுப் போவது லேசாகக் கேட்டது. உடனே வண்டியிலிருந்தவனும் கத்தினான். "வண்டி ஓட்டத்தெரியுமாய்யா உனக்கு? ஒழுங்காப் போய்யா..."
வண்டிக்காரன் குழப்பமும் பதற்றமுமாக குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான். வண்டி தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த இன்னொரு வண்டிக்காரனும் இவனை நாராசமாகத் திட்டிவிட்டுக் கடந்தான். இன்னொரு நடைபாதை வாசியும் சடாலென்று நகர்ந்து இவனைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றான்.
"பொறுக்கிப் பயலுக..வேணும்னே நம்மளை விழவெக்கிறதுக்காக இதெல்லாம் பண்ணுவானுங்க..." மிலிட்டரிக்காரன் பின்னாலிருந்து முணுமுணுத்தது கேட்டது.
வண்டிக்காரன் திரும்பி ஏதோ சொல்ல நினைத்தான். ஆனால் அவனிடமிருந்து வெளிப்பட்டது ஒரு மெல்லிய விசும்பல் மட்டுமே.
"என்னய்யா?" அதட்டினான் மிலிட்டரிக்காரன்.
அவன் ஒரு கைத்த சிரிப்புடன் வறண்ட தொண்டையிலிருந்து அந்த வார்த்தைகளைக் கஷ்டப்பட்டு உதிர்த்தான்: " எம்மகன், எம்மகன் போனவாரம் இறந்து போயிட்டான் சார்."
"ஹும்ம்..எப்படி இறந்தான்?"
அவன் தன் உடலை முழுதும் திருப்பி மிலிட்டரிக்காரனைப் பார்த்து, "ஏன்னு யாருக்கு சார் தெரியும்; அவனுக்குக்க் காய்ச்சல் வந்துது. மூணு நாள் ஆஸ்பத்திரியிலயே கெடந்தான்; போயிட்டான், எல்லாம் ஆண்டவன் சித்தம்."
அப்போது ஒரு இருண்ட திருப்பத்திலிருந்து மீண்டும் ஒரு குரல்:
"டேய் சாவு கிராக்கி, எங்கெடா போறே? ரோட்டைப் பாத்து வண்டிய ஓட்டு."
உடனே மிலிட்டரிக் காரனும், "ஆமா, நேராப் பாத்து வண்டிய ஓட்டு. இந்த மாதிரி நீ போனா விடிஞ்சுடும். உம்! சீக்கிரம் சீக்கிரம்"
வண்டிக்காரன் பெருமூச்சுடன் திரும்பி உட்கார்ந்தான். அவ்வப்போது திரும்பிப் பார்த்தான். ஆனால் அந்த மிலிட்டரிக்காரனோ கண்களை இறுக்கி மூடியபடி, இவனிடம் தான் பேச்சுக்கொடுக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தும் வகையில் அமர்ந்திருந்தான்.
பஜாரில் மிலிட்டரிக்காரனை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் அமைதியாக வண்டிக்குள் சுருண்டு உட்கார்ந்தான் வண்டிக்காரன். ஒரு மணி நேரம் போயிருக்கும்...இரண்டு மணி நேரம்...
அப்போது மூன்று வாலிபர்கள் வந்தார்கள். இருவர் ஒல்லியாக உயரமாக இருந்தனர். மூன்றாமவன் குள்ளமாகச் சற்றுக் கூன் முதுகுடன் இருந்தான்.
"ப்ரிட்ஜ் ஹோட்டலுக்குப் போகணும்; நாங்க மூணுபேர். இருபது கோபெக். ஓகேவா?"
வண்டிக்காரன் பதில்பேசாமல் குதிரையைக் கிளப்பினான். இருபது கோபெக் என்பது ரொம்பக் குறைவு தான். ஆனால் அவனுக்கு இப்போது ஐந்து கோபெக் கிடைத்தாலும் ஒரு முழு ரூபிளே கிடைத்தாலும் அதெல்லாம் பொருட்டில்லை. யாராவது சவாரிக்கு வரவேண்டும்; அவ்வளவு தான்.
அந்த மூன்று இளைஞர்களும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் கெட்ட வார்த்தைகள் பேசிக் கொண்டும் வண்டியில் ஏறினர். இப்போது யார் பின்னால் அமர்வது, யார் வண்டிக்காரனுடன் நின்று கொண்டு வருவது என்ற சர்ச்சை கிளம்பியது. இறுதியில் குள்ளமாக இருப்பதனால் கூனுடையவனே நிற்பது என்று முடிவானது.
அவனோ வண்டிக்காரனிடம் எரிந்து விழுந்தான். "என்ன நிக்கிறே. சீக்கிரம் போய்த்தொலை. இது என்ன தொப்பிய்யா போட்டிருக்கே. கண்ராவியா இருக்கு."
"ஹீ..ஹீ, அது சும்மாய்யா..." சிரித்தான் வண்டிக்காரன்.
"சரி சரி..போ. என்ன இவ்ளோ மெதுவாப் போறே. உன் முதுகுல ஒண்ணு குடுக்கவா?"
பின்னாலிருந்த ஒருவன் சொன்னன், "தலை ரொம்ப வலிக்குது. நேத்து நானும் வாஸ்காவும் நாலு பாட்டில் பிராந்தி அடிச்சோம்."
"எப்படிரா இப்படி அள்ளி வுடரே? நீயாவது நாலு பாட்டிலாவது..." சிரித்தான் இன்னொருவன்.
"டேய், சத்தியமாடா..." ரோஷமானான் முதலாமவன்.
வண்டிக்காரன் இவர்களின் உரையாடலை ரசித்துச் சிரித்தான், "கவலையில்லாத சின்னப் பசங்க..."
உடனே குள்ளமானவன் கத்தினான். "யோவ், வேகமாப் போய்யா...இப்படியா குதிரைக்கு வலிக்காம் ஓட்டுவே? நல்லா சாட்டைய வீசி அடிய்யா..."
இவனது வசவில் அவனது நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். தன்னை அவர்கள் திட்டத் திட்ட, வண்டிக்காரனின் மனம் லேசாகியது. தனது கொடுமையான தனிமை கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து அவர்கள் யாரோ ஒரு பெண்ணைப் பற்றிச் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
பேச்சில் ஒரு சின்ன இடைவெளிக்குக் காத்திருந்த வண்டிக்காரன் திரும்பிப் பார்த்துச் சொன்னான்," என்மகன் செத்துப் போயிட்டான்யா.."
"ஹூம்..நம்ம எல்லாரும் ஒரு நாள் சாகத் தான் போறோம்..." அசுவாரசியமாகப் பதிலளித்தான் அவனுடன் நின்றிருந்தவன். உடனேயே, "ம்..ம்.. சீக்கிரம் போ. டேய், எவ்வளோ நேரம் தாண்டா நான் இவன் கூட நெருக்கியடிச்சிக்கிட்டு நிக்கிறது. எப்போடா போய்ச் சேருவோம்?"
"அவன் முதுகுல ஒண்ணு போட்டா சரியாப் போகும்." சிரித்தனர் மற்ற இருவரும்.
"யோவ் கெழவா, கேட்டியா. உன்னோட வண்டியில வரதுக்கு நாங்க நடந்தே போயிருக்கலாம். சீக்கிரம் போய்யா." நிஜமாகவே அவன் முதுலில் ஒரு தட்டு தட்டினான் கூட இருந்தவன்.
"யோவ், உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சாய்யா? பொண்டாட்டி புள்ள இருக்கா?" பின்னாலிருந்த ஒருவன் கேட்டான்.
"எனக்கா? ஹும்ம் இருக்கா சுடுகாட்டுல. அவளும் என் மகனும். அய்யோ..என்ன கொடுமை! நான் உயிரோட இருக்க, எம்மவன் போயிட்டான்யா...சாவு தப்பான கதவைத் தட்டிடுச்சே..."
வண்டிக்காரன் இது தான் சமயமென்று தன் மகன் இறந்த கதையைச் சொல்வதற்காகத் திரும்பினான். ஆனால் அதே கணம், அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதாக ஒருவன் அறிவிக்கவே, மூவரும் "அப்பாடா வென்று பெருமூச்சு விட்டபடி வண்டியிலிருந்து குதித்தனர். இருபது கோப்பெக்குக்ளை வண்டிக்காரனிடம் வீசிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினர்.
அவர்கள் போய் வெகு நேரமாகியும் வண்டிக்காரன் காசைக் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் சென்று மறைந்த திக்கையே வெறித்தபடி இருந்தான்.
மீண்டும் அவன் தனியனானான். வெறுமையும் அமைதியும் அவனைச் சூழ்ந்தது. ஏக்கமும் தவிப்புமாகச் சுற்றும் முற்றும் பார்த்தான். பல ஆயிரம் பேர் குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்லும் இந்தச் சாலையில் அவன் பேசுவதைக் கேட்க ஒருவர் கூட இல்லையா? ஆனால் அந்த மாநகரமோ அவனது துயரத்தைப் பற்றிய பிரக்ஞையே இன்றிப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
அவன் மனப்பாரம் அதிகரித்துக் கொண்டே போனது. அப்போது மட்டும் அவன் இதயம் வெடித்துச் சிதறி இருந்தால் அவன் நெஞ்சில் இருந்த சோகம் அந்த ஊரையே முழ்கடித்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. சிறிது நேரத்துக்குக்குப் பிறகு ஒரு போர்ட்டர் அங்கு வந்தான்.
அவனிடம் பேசலாமென்று, "தம்பி மணி என்னப்பா" என்றான்.
"பத்தாகப் போகுது. இன்னும் இங்கெ என்ன பண்றே.. போ போ..." என்று விட்டு அவன் தன் நடையைத் தொடர்ந்தான்.
மெல்ல வண்டியைச் செலுத்தத் தொடங்கினான். அவன் நெஞ்சில் தேங்கி இருந்த சோகத்தைத் தாங்கவியலாமல் அவன் உடல் மேலும் வளைந்தது. பயங்கரமாகத் தலை வலித்தது. அவ்னால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. இனிமேலும் மனிதர்களுக்காகக் காத்திருப்பதில் பயனில்லை என்று புரிந்தது.
"ஷெட்டுக்கே போயிடலாம், வா", குதிரையைத் திருப்பினான்.
அரை மணி நேரம் கழித்து அவன் குதிரை வண்டிக்காரர்கள் தங்கும் ஷெட்டில் அடுப்பின் முன்னால் அமர்ந்திருக்கிறான். பெஞ்சுகளின் மேல், தரையின் மேல், அடுப்புப் பரணின் மேல் என்று அங்கங்கு பல வண்டிக்காரர்கள் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார்கள்.
அறை முழுதும் நைத்துப் போன வாடை வீசியது. தாடையைச் சொறிந்து கொண்டே தூங்குபவர்களைப் பார்த்தான்.
"ஹூம் தவிடு வாங்கக் கூட இன்னிக்குக் காசு கிடைக்கல. ரொம்பக் கஷ்டமா இருக்கு. சே...தன் வேலையை ஒழுங்கா செய்யத் தெரிஞ்சவனுக்கு, வயிறாரச் சாப்பாடு இருக்கிறவனுக்கு, குதிரைக்கு ஒழுங்காத் தீனிகுடுக்க முடிஞ்சவனுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. "
அப்போது மூலையில் படுத்திருந்த ஒரு இளம் வண்டிக்காரன் எழுந்து இருமிக் கொண்டே தண்ணீர்த் தொட்டியை நோக்கிச் சென்றான். அள்ளி அள்ளித் தண்ணீர் குடித்தான்.
"என்ன, ரொம்பத் தாகமா?" இவன் அவனைப் பார்த்துக் கேட்டான்.
"ம்..ஆமாம்."
"குடி குடி. இருமலுக்கு நல்லது. சரி, இங்கெ கேளேன், என் மகன்..என் மகன் இறந்துட்டான்யா இந்த வாரம். ஆஸ்பத்திரியில. திடீர்னு...கொடுமை தெரியுமா.."
சொல்லி விட்டுத் தன் வார்த்தைகள் அவனிடம் எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறதென்று பார்த்தான். அவனோ அதற்குள் படுத்துத் தூங்கிவிட்டிருந்தான். கிழவன மறுமடியும் முகத்தைச் சொறிந்து கொண்டு பெருமூச்செறிந்தான். யாரிடமாவது பேச வேண்டுமென்று அளவற்ற தாகம் ஏற்பட்டது அவனுக்கு; சற்று முன் அந்த இளைஞனுக்கு ஏற்பட்டக் குடிநீர் தாகத்தைப் போல.
இதோ, அவன் மகன் இறந்து ஒரு வாரமாகப் போகிறது. இன்னும் யாரிடமும் அதைப் பற்றி அவன் துக்கம் தீரப் பேசியாகவில்லை. அவனுக்கு உணர்ச்சிததும்ப அதைப் பற்றிப் பேச வேண்டியிருந்தது. எப்படி அவன் மகன் நோய்வாய்ப்பட்டான், எப்படியெல்லாம் கஷ்டப்பட்டான், சாகும் முன் என்ன பேசினான், எப்படிச் செத்துப் போனான்...எல்லாம்.
அவனது இறுதி ஊர்வலம், ஆஸ்பத்திரிக்குப் போய் அவன் அணிந்திருந்த உடைகளை எடுத்து வந்தது, எல்லாவற்றையும் பற்றிப் பேச வேண்டும் போலிருந்தது. அவனது ஒரே மகள் அனிஸ்யா கிராமத்தில் இருக்கிறாள். அவளைப் பற்றியும் யாரிடமாவது பேச வேண்டும். ஆம், அவனுக்குப் பேச ஏராளமாய் இருந்தன. யாராவது பெருமூச்சுடன், அவன் புலம்பல்களுக்கு ஈடுகொடுத்துக் கேட்க வேண்டும்.
பெண்களிடம் பேசுவது இன்னும் நன்றாக இருக்கும்; ஆனால் பெண்கள் பாவம், சில சமயம் முதல் வார்த்தையிலெயே கண்ணீர் சிந்தத் தொடங்கி விடுவார்கள்.
"வெளிய போய்க் குதிரையைப் பார்க்கலாம். தூக்கத்துக்கென்ன; மெதுவா வந்து தூங்கிக்கிட்டா போச்சு..." தனக்குள் பேசியவாறே வெளியே சென்றான்.
கோட்டை மாட்டிக் கொண்டு குதிரை லாயத்துக்குச் சென்று தன் குதிரையருகே போய் நின்று கொண்டான். குதிரைக்கு வாங்க வேண்டிய தவிடு பற்றி, வைக்கோல் பற்றி, பனி அதிகமாகப் பெய்வதைப் பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தான். தனியாக இருக்கும் போது அவனால் தன் மகனைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. யாராவது அருகில் இருந்தால் அதைப் பற்றிப் பேசலாம் என்று தோன்றியதே தவிர தனிமையில் அந்நினைவுகள் அவனைத் தாங்கவொண்ணா வேதனைக்குள்ளாக்கின.
"வைக்கல் திங்கிறியா?" இருளில் பளபளத்த தன் குதிரையின் கண்களைப் பார்த்துக் கேட்டான்." "நல்லா தின்னு...தவிடு வாங்கத் தான் காசில்ல. வைக்கலயாச்சும் நல்லா தின்னு. ஹும்! என்ன பண்றது. எனக்கு வயசாயிப் போச்சு. முன்ன மாதிரி வண்டியோட்ட முடியல. என் மகன் இருந்திருந்தா நல்ல வண்டிக்காரனா இருந்திருப்பான். அவன் வாழ்ந்திருக்கணும்..."
சில கணங்கள் மௌனத்துக்குப் பின் தொடர்ந்தான்,
"ஆமாம்மா, நம்ம பையன் போயிட்டான்மா, என்னைத் தனியா விட்டுட்டு. எந்தக் காரணமுமே இல்லாம திடீர்னு செத்துப் போயிட்ட்டான்மா. இதோ பாரு, உனக்கு ஒரு குதிரைக் குட்டிப் பிறந்து அதுக்கு நீ தாயா இருந்திருந்தேன்னு வெச்சுக்கோ...ஒரு நா திடீர்னு உன் குட்டி இறந்து போச்சுன்னா உனக்கு எப்படி இருக்கும்? சொல்லு...ரொம்ப வருத்தமா இருந்திருக்கும்ல?"
அவன் குதிரை வைக்கலை மென்றபடியே தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது. அவனை நெருங்கி அவன் கைகளில் தன் மூக்கைத் தேய்த்தது. அதன் சூடான சுவாசம் கைகளில் பட்டதும் அவனுக்கு நெஞ்சமெல்லாம் சிலிர்த்தது. சட்டென்று உடைந்து குதிரையிடம் தன் துக்கமெல்லாம் சொல்லி அழத் தொடங்கினான்.
********************************************************************************
பின் குறிப்பு:
சென்ற முறை பேச்சாளர் என்ற தலைப்பில் செக்காவ் கதையைத் தமிழாக்கம் செய்த போது செகாவ் கதைகளை ஏற்கனவே தமிழறிஞர்கள் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்களே, நீங்கள் மீண்டும் செய்வதனால் என்ன பயன் என்று ஒருவர் என்று கேட்டிருந்தார். அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை இங்கே தருகிறேன்.
நான் ஆங்கிலத்தில் தான் இக்கதைகளைப் படித்திருக்கிறேன். தமிழில் பிறமொழி எழுத்தாளர்களின் எந்தெந்தக் கதைகள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது. அப்படி தமிழில் படித்த கதையை நான் மீண்டும் செய்ய மாட்டேன்.
நான் முதலில் செய்த போது அதற்கு வரவேற்பு இருந்ததாலும் சிலர் அப்போது தான் இக்கதைகளைப் படிப்பதாகவும் கூறவே அவ்வப்போது செய்து வருகிறேன்.
மேலும் ஒரு படைப்பை மொழியாக்கம் செய்யும் போது அதற்கு மூலப்படைப்பிலிருந்து மொழியாக்கம் செய்தவர்கள் பற்றிய குறிப்புகளையும் தர வேண்டும் என்றும் ஒரு கருத்து வந்தது.
செய்தால் சிறப்பாகத் தான் இருக்கும். நான் இணையத்திலிருந்து ஆங்கில மொழியாக்கத்தை எடுத்திருக்கிறேன். மொழியாக்கம் செய்தவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.
மேலும், நண்பர்களின் ஆசைக்காகவும், என் சுயதிருப்திக்காகவும், பயிற்சிக்காகவும் மட்டுமே இதைச் செய்கிறேன். வியாபார ரீதியாக மொழியாக்கம் செய்யும் பட்சத்தில் நிச்சயம் இந்த விதிமுறைகள் பின்பற்றப் படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.
புரிதலுக்கு மிக்க நன்றி. எனது புரிதலில் ஏதாவது தவறிருப்பின் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.
Friday, August 27, 2010
முடிவுறாத கனவு...
அதை விடு. உனக்கு நினைவிருக்கிறதா அந்த நாள்? ஒரு பதினெட்டு வயதுக் குழந்தையின் இதயத்தை ஒரு பதினேழு வயதுக் குழந்தை குத்திக் கிழித்த அந்த நாள். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு தான் கள்ளம் கபடமில்லாமல் அன்பு பெருகி வழிந்து கொண்டிருந்தது இரு உள்ளங்களிலும்.
நாம் ஒருவரையொருவர் பார்த்தாலே பரவசம் கொள்ளத் தொடங்கினோம். என் லேப் நோட்டில் ரீடிங் எழுதிய உன் அழகான கையெழுத்தும் நான் உனக்கு எழுதிக் கொடுத்த அசைன்மென்டும் பரஸ்பரம் விலை மதிப்பில்லாத சொத்தாகின. நட்பா, ப்ரியமா, காதலா, "ம்...சீக்கிரம் முடிவெடு ஏதாவது ஒன்று" என்று அவசரத்துக்குள் நம்மைத் தள்ளியது எது?
ஆளுக்கு ஒன்றாக, எப்படியும் தவறாகத் தேர்ந்தெடுத்ததில் சிதறிப் போனது அந்த அழகான நாட்கள். நாம் அதுவரை பார்த்தறிந்தவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ, இம்மாதிரியான சூழலில் மற்றவர்கள் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்குச் சொல்லப் பட்டிருந்ததோ அப்படி மாறத் தொடங்கினோம்.
Monday, August 23, 2010
சோறு வடிக்கிற ராச்சியம்
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
இந்த நூலை வெகு நாட்கள் கழித்து மறுவாசிப்பு செய்தேன்.எத்தனை முறை படித்தாலும் மனதில் நின்றது வெளிப்பாடு ம் வீட்டின் மூலையில் ஒரு சமையலறையும் தான்.
முதல் கதை ஆசிரியரின் சொல்வழி வெளிப்படுகிறது. கிராமப்புறத்தில் வீட்டுப் பெண்களின் வாழ்க்கைமுறை பற்றிய ஆராய்ச்சிக்காக ஆசிரியை இரு வீடுகளுக்குச் செல்கிறார்.
வீட்டை விட்டு வெளியில் எங்கும் போகாத, "சோறு வடிக்கிற ராச்சியந்தான்" என்று பெருமை பேசுகிற, "சமுத்திரம் பார்க்கணும்" என்கிற ரகசியக் காதலைத் தனக்குள் வைத்துப் புழுங்கிய, சில கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் திருச்செந்தூர் கடற்கரைக்குச் செல்ல ஆசைப்பட்டு அப்படி அடம்பிடிக்கும் போதெல்லாம் புருசனிடம் அடி வாங்குவதை மிக இயல்பாகப் பகிர்ந்து கொள்கிற ஐம்பது வயதுப் பெண்மணியைச் சந்திக்கிறார்.அவர் வாழ்வில் எத்தனை இட்லிகள் தோசைகள், அடைகள் சுட்டிருப்பார் என்பதைக் கணக்குப் போட்டு மலைக்கிறார்.
மேலும், இவர் படித்தவர் என்பதால் சற்றே மரியாதையுடன் பேசும் அந்த வீட்டுக் குடும்பத் தலைவன் தன் மனைவியிடம் இவர் சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருப்பது கண்டு வியந்து "இவ கூட என்ன பேசிட்டிருக்கீங்க? இவளுக்கு ஒன்றும் தெரியாது, மீன் கொளம்பு வேணா நல்லா ஆக்குவா" என்கிறார்.
இன்னொரு வீட்டில் இதே கதை. ஆனால் இங்கு ஓர் இளம் பெண். அவளுக்கும் வீட்டில் சோறு சமைப்பது, சகோதரர்களின் துணிகளைத் துவைத்துக் காப்பது, கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளில் கதைகள் படிப்பது என்பதைத் தவிர வேறு உலகம் தெரியாது. தெருவில் காலை வீசி நடக்க வேண்டும் என்பதே அவளுக்கு இருக்கும் ரகசியக் கனவாக இருக்கிறது.
திருமணம் செய்து கொண்டால் கணவனுடன் நாலு இடங்களுக்குச் செல்லும் பாக்கியம் கிடைக்கும் என்பதற்காகவே திருமணத்தை எதிர்நோக்கி நிற்கிறாள் இந்தப் பெண். என்ன, தன்னை மணந்து கொள்ளப் போகிறவன் நல்லவனாக இருக்க வேண்டும்; அதாவது கை நீட்டி அடிக்கக் கூடாது என்று மட்டும் விரும்புகிறாள்.
இரண்டு தலைமுறைகள் தாண்டியும் பெண்கள் நிலை சிறிதும் மாறவில்லை என்பதை அழகாகச் சொல்கிறது இந்தக் கதை.
'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு ராஜஸ்தானி குடும்பம். பல அறைகள் கொண்ட விசாலமான அந்த வீட்டில் சமையலறை மட்டும் ஓர் இருண்ட மூலையில்.
வாயில் நீரூற வைக்கும் பலவிதமான பதார்த்தங்கள் நாள் தோறும் தயாராகிற, விருந்திர்னர்கள் வந்தால் தேனீருடன் நிறுத்தாமல் உபசரிக்கப் பலவிதமான பண்டங்கள் தயாரிக்கப்படுகிற அந்த வீட்டின் சமையலறையில் எரிவது ஒரு பூஜ்யம் வாட் விளக்கு. பாத்திரங்கள் தேய்க்கச் சரியான தொட்டி இல்லை. வெளிச்சமோ காற்றோ புக சரியான சாளரம் இல்லை.
இதில் தான் அந்தக் குடும்பத்தலைவியான ஜீஜீ தனது ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டுள்ளாள். அவளது மருமகள்களும் விடுமுறைக்கு வரும் நாட்களில் அங்கேயே அடைந்து கிடக்க வேண்டி வருகிறது.
கடைசி மருமகளான மீனாட்சி தான் அந்தச் சமையலறையின் கேடான நிலையைப் பற்றி முதல் முறை அக்குடுமப்த்த் தலைவர் பப்பாஜியிடம் வாய் திறக்கிறாள். இது வீட்டினரிடையே மிகப் பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் மாற்றங்கள் ஏதும் நடைபெறவில்லை. அது அந்த வீட்டுப் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற அமைதியான அடக்குமுறை என்பது தெளிவாகப் புலனாகிறது.
உல்லாசப்பயணம் போகலாமென்று முடிவு செய்த நாளன்று வீட்டுப் பெண்கள் அத்தனை பேரும் அந்த வெக்கையான சமையலறையில் அதிகாலை நான்கு மணி முதல் கடுமையாக வேலை செய்ய வேண்டி வருகிறது. இருபது பேருக்கு நூறு பூரிகள், சான்ட்விச்சுகள், தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது தவிர குழந்தைகளுக்குப் பால் பாட்டில்கள், மாலை பக்கோடா சாப்பிடுவதற்கும் அடுப்பு, அரிந்த வெங்காயம், எண்ணெய், என்று எடுத்து கொள்ள வேண்டி வருகிறது. குழந்தைகளை எழுப்பிக் குளிக்க வைத்துக் கிளப்புவதும் பெண்கள் வேலை தான்.
இடையே இவர்கள் சத்தத்தால் தூக்கம் கலைகிற ஆண்கள் போடும் அதட்டலால், ரகசியமாகவே பேசிக் கொண்டு வேலையில் ஈடுபடுகிறார்கள். எல்லா மருமகள்களும் படித்தவர்கள் என்பதும் இருவர் நல்ல வேலையில் இருப்பவர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கணவனை இழந்தவர்களுக்கு மாமிசம் உணவும் இனிப்பு வகைகளும் மறுக்கப்படுவது அங்கே மரபென்பதால் படி ஜீஜீ என்கிற வயதான பெண்மணி சில நாள் தன்மீது பெண்தெய்வம் அம்பை வந்து விட்டதாகச் 'சாமியாடி'த் தான் விரும்பும் உணவு மற்றும் மதுவகைகளைக் கேட்டு உண்பது ஒரு சோக நாடகம்.
இறுதியில் உடல் நிலை மோசமடைந்த நிலையில் படுத்திருக்கும் ஜீஜீ தான் திருமணமாகி வந்த புதிதில் இந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற எவ்வளவு கடுமையாக உழைத்தாள் என்பதையும் அலங்காரமும் சமையலறை ஆதிக்கமும் தான் வீட்டில் பெண்களுக்கு மரியாதை ஏற்படுத்துபவை என்று தன் தாய் சொன்னதை சத்தியவாக்காக ஏற்றுக் கொண்டு ஒரு நாளைக்கு முன்னூறு பூரிகள் சுட்டதையும் ஐந்து கிலோ கோதுமை மாவு பிசைந்ததையும், அதைக் கண்டு அவள் கணவன் பூரித்து "நீ நல்ல உழைப்பாளி" என்று மகிழ்ந்ததையும் மீனாட்சியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.
ஆனால் தன் முதல் மகன் சின்னஞ்சிறுவனாக இருந்தபோது மாடியிலிருந்து விழுந்து இறந்த போதிலும் அந்தக் கொடூரமான நேரத்திலும் சமையலறையில் நுழைந்து பாதியில் விட்ட பூரிக்களைப் பொரித்தெடுத்ததைச் சொல்லும் போது மீனாட்சிக்கு மட்டுமல்ல நமக்கும் அங்கமெல்லாம் அதிர்கிறது.
பெண்கள் தங்கள் ராஜ்ஜியமென்று வரித்துக் கொண்டவை எதுவுமே அவர்களுடையதல்ல, அதனால் அவர்களுக்கு யாதொரு சிறப்புமல்ல என்பதை அழுத்தமாக நிறுவுகிறது இக்கதை.
இக்கதையைப் படிக்கும் போது இப்போதிருக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், பெரும்பாலான நடுத்தர வர்க்க வீடுகளில் சமையலறைகள் அவ்வளவு மோசமாக இல்லை. வெளிச்சமும் காற்றோட்டமும், எளிதில் சுத்தம் செய்ய்க்கூடிய மேடைகளுமாய் நன்றாகத் தான் இருக்கின்றன. ஆனாலும் சமையலறை ராஜ்ஜியத்தைப் பெண்கள் தங்கள் ஏகபோகப் பெருமையாகக் கருதும் மனப்போக்கு மட்டும் மாறிவிட்டதா என்ன?
நூற்குறிப்பு: வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. எழுத்தாளர் : அம்பை. க்ரியா வெளியீடு, இரண்டாம் பதிப்பு: 1998, விலை: ரூ. 60, பிரிவு: சிறுகதைகள்.