Sunday, October 24, 2010
என்ன கொடுமை ஸார் இது?
இந்துக்கள் நம்புவதாலேயே ராமர் பிறந்த இடமென்று அறிவித்தது.
இப்போது மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விடுவார்கள் என்று பயந்து வரதட்சணை கொடுத்தால் அது குற்றமல்ல என்கிறது. இதில் எது மிகப்பெரிய அபத்தம் என்று பட்டிமன்றமே நடத்தலாம் போல.
இதே நிலை தொடர்ந்தால் என்ன ஆவது? யோசித்துப் பார்க்கலாமா?
1. கொலை மிரட்டலுக்குப் பணிந்து லஞ்சம் கொடுக்கலாம்.
2. ஆட்டோ அனுப்புவேன் என்று அச்சுறுத்தினால் கஞ்சா கடத்தலாம்
3. அட, உன் பிள்ளைக்கு ஸ்கூலில் அட்மிஷன் கிடையாது என்று பயமுறுத்தினால் ஊழலுக்குத் துணை போகலாம்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாமே?
வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற சட்டமே எழுத்தளவில் தான் இருக்கிறது. அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கே நமது பலவீனமான சமுதாயத்தால் முடியவில்லை. ஏற்கெனவே ஆயிரம் ஓட்டை உடைசல்கள் இருக்கும் சட்டத்தை இப்படி நெளித்து விட்டால் என்ன ஆவது?
Thursday, October 21, 2010
XX, XY and A,B,C,D... தொடர்பதிவு
பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதில் எனக்கு இரண்டு கருத்தே கிடையாது. மேலும், 'அது சரி தான். அதற்காக அவர்கள் வீட்டுக் கடமைகளை மறுத்துவிடக் கூடாது. வீட்டிலிருந்தபடியே காளான் வளர்க்கலாம், ஊறுகாய் போடலாம், கன்ஸல்டிங் செய்யலாம். நாளெல்லாம் வீட்டை மறந்து வேலையில் இருந்தால் வீடும் குழந்தைகளும் என்னவாகும்?' என்ற வாதத்திலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.
பெண்களின் வாழ்க்கையைத் திருமணம் என்ற சூதாட்டத்தை நம்பிப் பலியாக்குவதைத் தடுக்கும் ஒரே வழி அவர்களைச் சொந்தக் கால்களில் நிற்க வைப்பது தான். அது எப்படி என்பது அவர்கள் விருப்பத்துக்கேற்ற விஷயம். அதில் தலையிட்டு 'நீ இது தான் செய்யணும் செய்யக் கூடாதுன்னு' சொல்வதெல்லாம் அதிகப் பிரசங்கித் தனம். அப்படிப் பேசுவதாக இருந்தால் யாரும் பி.டி. உஷாவைப் பற்றியும் சுனிதா வில்லியம்ஸைப் பற்றியும் வாய் திறக்கக் கூடாது!
ஆனால் பெண்கள் வேலைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கும் மற்ற எல்லா அகக்காரணிகளையும் புறக்காரணிகளையும் நீக்கிவிட்டாலும் குழந்தைப் பேறும் வளர்ப்பும் பெரும் சவாலாக நிற்பதை மறுக்க முடியாது. இது ஏதோ பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட handicap போல் பார்ப்பது தான் இதற்குக் காரணம்.
எதுடா சாக்கு, கொஞ்சம் முளைத்த சிறகை வெட்டலாம் என்பது போல் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு வரும் பெண்களை மீண்டும் கொண்டு போய்ப் பொந்துகளில் அடைக்கத் தான் இது மிகவும் சக்திவாய்ந்த விஷயமாகப் பலராலும் பயன்படுத்தப்படுகிறது.
தன் குழந்தைகளைப் பற்றி ஒரு தாய்க்கு இல்லாத அக்கறை யாருக்கு இருக்க முடியும்? பத்து மாதம் படாத பாடு பட்டுச் சுமந்து தரும் பொக்கிஷத்துக்குத் தங்கள் இனிஷியலை மட்டும் பந்தாவாக வைத்துக் கொள்ளும் ஆண்கள் இனியாவது அதற்கு முழுத் தகுதியுடையவர்களாக உங்களை ஆக்கிக் கொள்ளுங்களேன்!
யோசித்துப் பாருங்கள், வீட்டுக்கு வருமானம் ஈட்டுவதில் பெண்களும் பங்கெடுக்கத் தொடங்கிப் பல தலைமுறைகள் ஆகிவிட்டன. ஆனால் இன்று வரை எத்தனை ஆண்கள் மனமுவந்து வீட்டுப் பொறுப்பில் பங்கெடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்?
உங்களுக்கு மிக முக்கியமான குழந்தைச் செல்வத்தை ஈட்டித் தருவதில் பெரும்பங்கு ஆற்றுவது பெண்கள் தான். அதற்காக அவர்களை நீங்கள் கொண்டாட வேண்டுமா அல்லது அதையே காரணம் காட்டி அவர்கள் வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமா?
("அவளை யாரு வேலைக்குப் போகச் சொல்றா? அதுக்கு அவசியமே இல்ல. திமிரெடுத்துப் போனா, கஷ்டப்பட வேண்டியது தான்." என்று சொல்பவர்களுக்கு என்ன சொல்வது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. நல்ல பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! :D )
வேலைக்குச் செல்வதில் உள்ள சுதந்திரத்தையும் தன்மதிப்பையும் உணர்ந்த பெண்கள், அதில் திருமணத்துக்குப் பிறகு அதிருப்தி அடைகிறார்கள், வீட்டிலிருக்கும் பெண்களைப் பார்த்து ஏங்குகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் அதிகப்படியான பொறுப்புகளை வீட்டிலும் சுமக்க வேண்டி வருவதும், கொஞ்சமும் ஒத்துழைப்பு அளிக்காத (ஆணாதிக்க) குடும்பச் சூழலும் தானே ஒழிய வேறெதுவும் இல்லை.
குழந்தை பிறந்து சில காலம் வரை தாயின் அதிகபட்சக் கவனம் அதற்குத் தேவைப்படுவது உண்மை தான். ஆனால் பிறகு தாய் தந்தை இருவருமே குழந்தை நலனில் பங்கெடுக்க வேண்டும். இந்த மனப்பான்மை மாறாதவரை மணமுறிவுகள் அதிகரிப்பதும் குடும்ப அமைதி குலைவதும் தடுக்க முடியாத ஒன்றாகிவிடும். எச்சரிக்கை! இந்தப் போக்கால் பாதிக்கப்படப் போவது பெண்கள் மட்டுமல்ல.
நம் குழந்தைகள் நலன் என்பது வீட்டுக்குள் பெண் என்பவள் மட்டுமே சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம் அல்ல; அது ஒரு சமூகம் சார்ந்த நலனாகப் பார்க்கும் காலம் வந்தாலொழிய பெண் சுதந்திரம் அடைய அவளது தாய்மை உணர்வே தடையாக இருக்கும் (பரிதாப) நிலை தொடரத்தான் செய்யும்.
உதாரணமாக, பெண்களுக்கு சரிசமமான வேலை வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்குக்ம் ஐடி கம்பென்கிகளையும், ஐடி பார்க்குகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். பல்லாயிரம் சதுர அடிப்பரப்பில் புட் கோர்ட்டுகள், ஜிம்கள், பார்லர்கள், காஃபி ஷாப்புகள் என்று வசதிகள் நிறைந்திருக்கும் (வீட்டுக்கே போக வேண்டாம். இளைப்பாறி விட்டு வந்து வேலையைத் தொடருங்கள்!!) எத்தனை பார்க்குகளில் குழந்தைகள் காப்பகங்கள் இருக்கின்றன? இந்த நடைமுறை வசதி ஏற்பட்டால் குழந்தைகளைக் காட்டிப் பெண்களின் வேலைக்கும் சுதந்திரத்துக்கும் தடை போட முடியாது. அப்பாவும் அம்மாவும் முறை வைத்து அலுவலகத்துக்குப் பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு செல்லலாம்!
ஆனால் புகை பிடிக்கக் கூடத் தனிக் கூடங்கள் அமைக்கும் கரிசனம் காப்பகங்கள் அமைக்க ஏன் இருப்பதில்லை? There is no human face in this industrialization. It's all just a facade. (ஓகே ஓகே!. எனக்குத் தெரியாத ஏரியாவுக்குள்ள நான் ரொம்பப் போகல.)
ஆக, இது சமூகப் பிரச்னையாக இல்லாமல் தனிப்பட்ட பிரச்னையாகவே பார்க்கப்படுவதால் அவரவர் மனதிற்கேற்ற முடிவுகளைத் தான் எடுக்க வேண்டி வருகிறது.
இங்கு முல்லை சொன்னதை மீண்டும் நினைவு கூர்கிறேன். //வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.// நிச்சயமாக.
ஆகவே இன்றைய இரண்டுங்கெட்டான் சூழலில் சிக்கித் தவிக்கும் சராசரிப் பெண் என்ற முறையில் நிறைய காம்ப்ரமைஸ் செய்தாலும், முடிந்தவரை கலகம் செய்து போராடி எனக்குப் பிடித்ததைச் செய்து கொண்டு வருவதே என்னாலான புரட்சி!
இதற்கு மேல் எனக்கு இதைப் பற்றித் தெளிவாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. மற்றவர்களின் இடுகைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Monday, October 18, 2010
ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம்!
நேஹாவை நேற்று பள்ளியில் சேர்த்து விட்டு வந்தோம்.சென்ற மாதமே சேர்த்துவிட விரும்பினேன். ஆனால் அடுத்தமாதம் விஜயதசமியோடு தான் சேர்க்கை நடக்கும் என்று சொல்லி விட்டார்கள்.அவளும் ஒரு மாதமாக அந்தப் பள்ளியின் பெயரைக் கூறிச் சேரப்போவதாக எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருப்பாள்.
நேற்றுப் போய் பணம் கட்டி விட்டு அவர்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் பூர்த்தி செய்து, சொன்ன விதிமுறைகளுக்கெல்லாம் சிறிது நேரம் மண்டையை ஆட்டிக் கொண்டிருந்து விட்ட பின் குழந்தைகளையும் பெற்றோரையும் ஆக்டிவிட்டி ரூமுக்கு அழைத்துச் சென்றார்கள்.
நான்கு பேர் அமரக்கூடிய தாழ்வான மேஜை நாற்காலிகள் ஆங்காங்கே போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோரையும் ஒரு மேஜையைச் சுற்றி அமரச் செய்து, வண்ணம் தீட்டும் புத்தகம் ஒன்றைக் கொடுத்து வர்ணம் தீட்டச் சொன்னார்கள்.
சில குழந்தைகள் சமர்த்தாகச் செய்ய ஆரம்பித்தன. நேஹா வயதுடைய ஒரு சிறுமி அழகாக கோடுகளுக்குள் சொன்னபடி தீட்டிக் கொண்டிருந்தாள்.
நேஹா என்ன செய்யப் போகிறாள் என்று ஆர்வமும் படபடப்பும் வந்தது எனக்கு. அவளை அழைத்து அமரச் சொல்லித் தேடினேன். பார்த்தால், அங்கு கரும்பலகையருகே நின்று கொண்டு சாக்பீஸால் கிறுக்கிக் கொண்டிருந்தாள். யார் கூப்பிட்டாலும் வரவே இல்லை. அழைப்பவர்களுக்கு சரமாரியான வசவு வேறு. :(
அவளைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த இன்னொரு சிறுவனும் எழுந்து போய் கிறுக்கத் தொடங்கி விட்டான். அவனிடம், "நீ ஏ எழுது, நான் பி எழுதறேன். ஏய், இந்தப் பக்கம் இல்ல, அங்க போய் எழுது" என்று கட்டளைகள் தூள் பறந்தன. " ஆசிரியை எவ்வளவு அன்புடன் அழைத்தும் "ம் வரமாட்டேன்.. போ!" எங்கள் மேஜைஅருகே வரவும் இல்லை அந்தப் புத்தகத்தைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. என்ன வளர்த்திருக்கிறார்கள் என்று நினைத்திருப்பார்களோ? :-(
கொஞ்ச நேரம் கழித்து வந்தாள். அவளாகவே கூட இருந்த சிறுமியைப் பார்த்து "உன் பேர் என்ன, என் பேர் நேஹா" என்றாள். பொதுவாக அங்கிருந்த குழந்தைகளுடன் பேசவும் விளையாடவும் விரும்பினாள். பெரியவர்களை மதிக்கவே இல்லை. தர்மசங்கடத்துடன் அழைத்து வந்தோம். அவள் அப்பா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக்குத் தான் இவள் எப்படிப் பள்ளியில் ஒழுங்காக இருப்பாளா, டோட்டோ சான் மாதிரி விரட்டப்பட்டு விடுவாளா என்றெல்லாம் விபரீதக் கற்பனை வளர்ந்தது.
இன்று முதல் நாள். காலையில் எழுப்பிக் குளிக்க வைத்து, எப்படியோ ஒரு தோசை சாப்பிட வைத்து அழைத்துச் சென்றோம். புறப்படும் முன் அவளுக்கு வாங்கி இருந்த பை, ஸ்னாக்ஸ் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்தாயிற்றா என்று நூறு முறை கேட்டுச் செக் செய்து கொண்டாள்.
அந்தத் தெருவுக்குள் நுழையும் போதே பிஞ்சுகளின் அழுகுரல்கள் காதைக் கிழித்தன. அந்தப் பெரிய கறுப்பு கேட்டுக்கு இந்தப் பக்கம் ஒரு நான்கைந்து அம்மாக்கள் தவிப்புடன் நின்று கேட்டில் இருந்த சின்ன இடைவெளி வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்திலெல்லாம் கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் தர்மசங்கடம், கொஞ்சம் வேதனை,அதையும் மீறி சேய்ப்பறவைக்கு முதல் சிறகு முளைத்து விட்ட ஒரு வகையான ஏக்கம் கலந்த நிம்மதி என்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உணர்ச்சிக் கலவை தென்பட்டது. எனக்கும் தான்!
நேஹாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றோம். அங்கு கண்ட காட்சி!மூன்று ஆசிரியர்கள், மூன்று காப்பாளர்கள், அனைவரும் இடுப்பிலொன்றும் கையிலொன்றுமாய் அழும் குழந்தைகளைச் சமாதானப்படுத்தும் பிரம்மபிரயத்தனத்தில் இருந்தார்கள். குழந்தைகளைவிட இவர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அதுவரை அழாதவள் எங்கே இந்தக் களேபரத்தைப் பார்த்து அழத்தொடங்கிவிடுவாளோ என்று பயந்தேன்.
அதற்குள் அவளை வந்து வாங்கிக் கொண்ட ஆசிரியை 'குழந்தையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வேகமாக வெளியே சென்று விடுங்கள்' என்று எங்களைக் கிட்டத் தட்ட கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவைத் தாழிட்டுவிட்டார்கள். ஏனென்றால் லேசாகக் கதவு திறந்தாலும் பட்டாம்பூச்சிகள் வெளியே பறந்து விடத் தயாராக இருந்தன.
ஆனாலும் பட்டாம்பூச்சிகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிய பெரிய திறந்தவெளியும் காற்றோட்டமான கூடங்களும் அங்கு இருந்தததால் (ஏசி இல்லை!) எனக்கு அந்தப் பள்ளி பிடித்துத் தான் இருந்தது.
முதல் ஒரு வாரம் ஒரு மணிநேரம் மட்டும் விட்டு விட்டு வந்து அழைத்துச் செல்லச் சொல்லி இருந்தார்கள். நான் அலுவலகம் செல்லும் போது என்னைப் பிரிந்து இருந்து பழக்கம் தான் என்பதால் அவள் அழமாட்டாள் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் முதல் முறை முன்பின் அறியாதாவர்களிடம் விட்டு வந்ததால் கொஞ்சம் ஒரு மாதிரியாகவும் இருந்தது.
பத்தரை மணிக்கு நாங்கள் (நாளை முதல் அவளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரப்போகும் அகிலா அக்காவும் நானும்) சென்ற போது பெரும்பாலான பிள்ளைகள் அழைத்துச் செல்லப் பட்டு இருந்தார்கள். "நேஹா எங்கே" என்று கேட்ட போது, சிரித்துக் கொண்டே வ்ந்த ஒரு ஆசிரியா, "நேஹா அழவே இல்லை. ரொம்ப எஞ்சாய் பண்ணினா. என்ன, அவளுக்கு நீங்க குடுத்த் ஸ்ந்னாக்ஸைத் தவிர எல்லார் ஸ்னாக்ஸையும் வாங்கிச் சாப்பிட்டா." என்றார். அசடு வழிந்து கொண்டே "ஹி ஹீ." என்றேன்.மனதிற்குள் "அதுக்குள்ளே மானததை வாங்கிட்டாளே...வாடி, உனக்கு இருக்கு" என்று கறுவிக் கொண்டேன்.
புதுவிதமாய் ஒரு அனுபவம் வாய்த்த சந்தோஷத்துடன் வெளியே வந்தவள்எங்களைப் பார்த்தவுடன் ஓடியெல்லாம் வரவில்லை. வழக்கம் போல் "என்ன வாயின்ட்டு வந்துக்கே" என்றாள். பின், "ஜூலா கொஞ்ச நேரம் வெளையாடிட்டு வரேன்" என்று வெளியிலிருந்த் ஊஞ்சலிலும் சீசாவிலும் அமர்ந்து விளையாடினாள். அங்கிருந்து அழைத்து வரத்தான் கொஞ்சம் பாடுபட்டோம்.
இன்று இப்படி. இனி வரும் நாட்கள் எப்படியோ! அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும். யாரையும் தொந்தரவு செய்து புகார் வாங்காமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசையாக இருக்கிறது.
Tuesday, October 12, 2010
நான் தம்மடிக்கிற ஸ்டைலப் பாத்து...
ரோட்டோரமாக வெட்டியாக நின்று போகிற வருகிற பெண்களைக் கவர்வதற்காகப் பிலிம் காட்டுவார்களே, அதுவல்ல. சீரியஸாக ஏதாவது வேலை செய்து கொண்டே, (அல்லது புத்தகம் படித்துக் கொண்டு, எழுதிக் கொண்டு) சிகரெட் பிடிப்பதைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும்.
வீட்டில் மோட்டார் ரிப்பேர் பார்க்க, ப்ளம்பிங் வேலை செய்ய ஒருவர் வருவார். அவர் வாயில் எப்போதும் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும். வேலையினூடே சிகரெட்டைத் தன் அசிஸ்டென்டிடம் கொடுத்து விட்டு, அவ்வப்போது திரும்பிப் பார்க்காமல் கை நீட்டி வாங்கிக் கொள்வார். அந்தச் செய்கையை ஏனோ ரொம்ப ரசித்திருக்கிறேன்.
என் வீட்டில் எல்லா ஆண்களுமே (except Joe) இந்த விஷயத்தில் கெட்டுக் குட்டிச் சுவரான தண்ணி தெளிச்சு விட்ட கேஸ்கள் தான். அதுவும் நம் அபிமானப் பதிவர் இருக்கிறாரே, ஆண்டு தோறும் கடமை தவறாமல் என் அக்காவின் பிறந்த நாளன்று இந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்துவார்!
அப்பா சிகரெட்டாகப் பிடித்துப் பார்த்ததில்லை. பைப்பில் புகையிலை போட்டுப் பிடிப்பார். ஆனால் எனக்கு பைப்பை விட விரல்களினூடே மெல்லிசாய்ப் புகை கசியும் சிகரெட் மீது தான் ஈர்ப்பு!
வளர்ந்ததும் பெண்ணாகி விடுவோம், நமக்கென்று வேறு வரையறைகள் இருக்கும் என்றெல்லாம் உணராத பருவம் அது. சயின்டிஸ்டாக வேண்டும் என்ற கனவு இருந்த போது கூட, தாடியும் கண்ணாடியுமாக என்னை உருவப்படுத்திப் பார்த்துக் கொண்ட ஞாபகம் வருகிறது! அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் நாமும் சிகரெட் பிடிக்கலாம் என்றே கனவு கண்டு கொண்டிருந்தேன்.
கல்லூரியில் எப்போதும் ரேனால்ட்ஸ் பேனாவை வாயில் வைத்து ஸ்டைல் காட்டிக் கொண்டிருந்த எனக்கு, ஒரு பிறந்த நாளன்று நண்பர்கள் சிகரெட்டும் திப்பெட்டியும் பரிசளித்ததும், நானும் வீம்புக்கு வகுப்பறையிலேயே அதைப் பற்ற வைத்ததும் பயந்து அவர்கள் ஓட்டமெடுத்ததும் நினைவுக்கு வருகிறது. ஆனால் எனக்குச் சரியாகப் பிடிக்கத் தெரியவில்லை. கசக்கி எறிந்து விட்டேன்.
பிறகு அறிவு கொஞ்சம் வளர்ந்த பின், சிகரெட்டால் விளையும் கேடுகள், சீர் குலைந்த குடும்பங்கள், முக்கியமாய்ச் சதா சிகரெட் பிடித்து டிபி வந்து இறந்த எத்தனையோ பேரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு சிகரெட் மீது தீரா வெறுப்பு வந்தது உண்மை. குடிப்பதை விட மோசமாகவும் வேகமாகவும் ஆட்கொள்ளும் பழக்கம் இது என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
இருந்தாலும் புகையிலைக்குப் பதிலாக, வேறேதாவது, புகையாக உடலுள்ளே சென்றால் நன்மை அளிக்கக் கூடிய மூலிகை சிகரெட் தயாரிக்கலாம் தானே?அப்படி சிகரெட்டுகள் வரும் நாளில் பெண்கள் கூட ஸ்டைலாகப் புகை பிடித்துக் கொண்டு பாடலாம்..."நான் தம்மடிக்கிற ஸ்டைலப் பாத்து தனசேகர் விரும்புச்சு..."
Tuesday, October 5, 2010
எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
----------------------------------------------
ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.
தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''
படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!
ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...
வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?
நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.
மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?
ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.
சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.
படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.
தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!
"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!
- சமஸ்