Sunday, February 27, 2011
What's (not) in a name?!
Friday, August 13, 2010
ஆண்டுவிழா அனுபவங்கள் - தொடர்பதிவு
நண்பரொருவர் தன் அலுவலகத்தில் நடைபெற்ற ஆண்டுவிழாக் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கேட்கவே உற்சாகமாக இருந்தது. தொடர்ந்து நினைவலைகள் என் பள்ளி நாட்களின் ஆண்டுவிழா அனுபவங்களை நோக்கிச் சென்றது. ஹார்மோனியம் தபேலாவுடன் திரைமறைவில் பின்னணி இசைக்குழுவினர், திரை மூடும் திறக்கும் தருணங்கள், மேடைக்குப் பின் நிகழ்ச்சிக்காகக் காத்திருந்த நிமிடங்கள்...
இப்போதெல்லாம் பள்ளிகளில் ஆண்டுவிழா என்ற சாக்கில் பெரிய மண்டபங்களை வாடகைக்கு எடுப்பது, செலவுக்கெல்லாம் மாணவர்களிடமே நிதி வசூலிப்பது, கண்ட கண்ட சினிமாப் பாடல்களை ஓடவிட்டுப் பிள்ளைகளை இடுப்பை நெளித்து ஆடவிடுவது, என்று தொடங்கி இருக்கிறார்கள்.
எங்கள் பள்ளி சின்னப் பள்ளி தான். மைதானமும் சிறியது தான். ஆனாலும் அங்கு நடந்த ஆண்டு விழாக்கள் மிகவும் சிறப்பாகவே இருந்தன். அங்கு படித்த மாணவியான எனக்கும் ஒவ்வொரு ஆண்டு விழாவும் பசுமையாக நினைவிலிருக்கிறது என்பதைத்தவிர வேறென்ன சான்று வேண்டும் இதற்கு?
நிகழ்ச்சிகளும் தரமாக இருந்தன. சினிமாப்பாடல்களுக்கும் நடனம் ஆடி இருக்கிறோம். ஆனால் அந்தந்த நேரத்து ஹிட்பாடல்களுக்குக் குத்தாட்டம் போடுவது போலல்ல. நல்ல கருத்துள்ள பாடல்களுக்கு மட்டுமே.
பள்ளியில் எப்போதும் பிப்ரவரி மார்ச் மாதத்தில் தான் ஆண்டுவிழா நடத்துவார்கள். அனேகமாக மூன்றாம் பருவத் தேர்வுக்கு முன்பாக.அதற்குப் பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே களைகட்டத் தொடங்கி விடும். நடனம், நாடகம், சேர்ந்திசை என்று நிகழ்ச்சிகள் திட்டமிட்டு அதற்கேற்ப பிள்ளைகளைத் தேர்வு செய்வார்கள். எதிலும் சேர்க்காத பிள்ளைகள் வருந்தத் தேவையில்லை. அவர்கள் விழா இறுதியில் பாடப்படும் சேர்ந்திசையில் சேர்க்கப்பட்டு அதற்கும் பயிற்சி நடக்கும். வெள்ளை உடையில் கையில் மெழுகு வர்த்தி வைத்துக் கொண்டு பாடும் அந்த நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்தது தான்.
விழாவை விட அதிகம் குதூகலம் தருவது அதற்கு முன் பயிற்சி நடக்கும் நாட்கள் தான். வகுப்புகள் பெரும்பாலும் நடக்காது. சில வகுப்புகளில் ஒத்திகைக்காக வேண்டி பெஞ்சுகளையெலாம் சுவரோரமாக நகர்த்தி வைத்திருப்பார்கள். அதனால் அந்த வகுப்புகள் மரத்தடியில் நடக்கும். ஜாலி!
நம்முடைய நிகழ்ச்சிக்கான பயிற்சி முடிந்தாலும் பெரிய க்ளாஸ் மாணவர்கள் போடும் நாடகம், நடனம் இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பது; "ஒதெல்லோ ட்ராமால யாசீன் அண்ணா சூப்பரா நடிக்கிறார். அவருக்குத் தான் இந்த தடவை பெஸ்ட் ஆக்டர் ப்ரைஸ்..." "இல்லல்ல எப்பவும் போல ப்ரின்ஸியோட ஃபேவரிட் அஜிதாவுக்குத் தான் குடுப்பாங்க பாரேன்!" அப்பொவே சிலருக்குப் பாலிடிக்ஸ் எல்லாம் புரிந்திருந்தது எப்படி?
பெரிய க்ளாஸ் பிள்ளைகளின் நாடகங்களில் வரும் வசனத்தை எல்லாம் நாமும் அதே போல் சொல்லிப் பார்த்து மகிழ்வது; சரியாக நடிக்காதவர்களை டீச்சர்கள் திட்டும் போது வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பது; அந்த அண்ணாக்களும் அக்காக்களும் ந்ம்மை, "வெளிய வா வெச்சுக்கரேன்" என்பது போல் முறைப்பது! ஆஹா!
எப்படியோ, எதற்குத் தான் அவ்வளவு உற்சாகமோ?வீட்டுக்கு வந்தாலும் இதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பது. விழாவுக்கு முதல்நாள் தூக்கமே வராது!
நான் முதல் வகுப்பு படிக்கும் போது சின்ட்ரெல்லா நாடகத்தில் சின்ட்ரெல்லாவைச் சுற்றி ஆடும் கூட்டத்தில் ஒரு பெண்ணாக இருந்தேன். என் தோழி தான் சின்ட்ரெல்லா. அவளுக்குத் தங்க நிறத்தில் முழு நீள கவுன். எங்களுக்கெல்லாம் வயலட் நிறத்தில் ஃப்ரில் வைத்த ஃப்ராக்.
வேறுபாடெல்லாம் தெரியாமல் எல்லாமே எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது! ஆனால் கூட ஆடிய பையனுடன் எனக்கு ஆகாது என்பதால் அவனுடன் கை கோத்து ஆடுவது வெறுப்பாக இருந்தது!
பின்பு இரண்டாம் வகுப்பில் ஜப்பான் நடனம். 'லவ் இன் டோக்யோ' இந்திப் படத்தில் வரும் சய்னோரா பாடலுக்கு ஆடினோம். நான் நன்றாக ஆடினாலும் தலையைக் குனிந்து கொண்டு, சிரிக்காமல் உம்மென்று இருப்பேன். அதனால் முதல்வரிசையில் நின்றிருந்த என்னை இரண்டாம் வரிசைக்கு அனுப்பி விட்டார்கள். அப்பாடாவென்று அதன்பின் நிமிர்ந்து பார்த்துச் சிரித்து ஆடினேன். டீச்சருக்குத் தான் பல்ப்!
ஐந்தாம் வகுப்பில் தான் செம காமெடி. ஆங்கில ஆசிரியர், தமிழ் ஆசிரியர் இருவருமே அவரவர் நாடகத்தில் என்னைச் சேர்த்து விட்டார்கள். தமிழ் நாடகத்தில் 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற கதையில் வரும் புலவர்களில் ஒரு வேடம்.
ஆங்கில நாடகத்தில் சொதப்பி விட்டேன். ஒரு விடுதியில் வேலைக்காரன் வேடம்; ராஜா வரப்போகிறார்; விடுதியை ஒழுங்காகச் சுத்தம் செய்து வை என்று எஜமானர்கள் மிரட்டி விட்டுப் போவார்கள். மாறுவேடத்தில் வந்த ராஜாவையே வேலைக்கு அமர்த்தி ஏவுவது, பின் எஜமானார்கள் வந்து அதிர்ச்சியடைவது, ஆனால் மன்னரோ வேலை செய்வது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் அந்த வேலைக்காரனைப் பாராட்டிப் பரிசு கொடுப்பது என்றும் முடிய வேண்டும். இதில் மன்னரை மேசைக்கு அடியில் சுத்தம் செய்ய விட்டு மற்ற இடங்களைச் சுத்தம் செய்வது போல் நான் நடிக்க வேண்டும்.
நாடகம் நடைபெறும் நாள் வரை மேசை வைத்து ஒத்திகை நடக்கவில்லை. அதனால் என்ன ஏதென்று புரியாமல் நான் மேசைக்கு அடியில் சென்று புகுந்து கொண்டேன். அங்கிருந்து எழுந்து எழுந்து வந்து வசனம் பேசிக் கொண்டிருந்தேன். பார்வையாளர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
நாடகம் முடிந்ததும் டீச்சரிடம் செம டோஸ். ஆனால் அவர் என்னை ரொம்பத் திட்டாமல் தமிழாசிரியர் ஆறுதல் கூறி அணைத்துச் சென்று விட்டார். பின்னே, அவங்களோட தமிழ் நாடகமாவது சொதப்பாம இருக்கணுமே! அதில் ஒழுங்காக நடித்தேன். ஆனாலும் அந்த ஆங்கில நாடகத்தைச் சொதப்பியதை நினைத்தால் இன்றும் வெட்கமாக இருக்கிறது!
ஏழாவது படிக்கும் போது கரகாட்டக்காரன் படப்பாடலுக்கு நான்கு பேர் கரகாட்டம் ஆடினோம். யாரோ ஒருவர் கரகங்கள் கொண்டுவந்து தலையில் வைத்துக் கயிற்றினால் தாடைக்குக் கீழ் இறுக்கக் கட்டிவிட்டார். ரொம்பவே வலித்தது. தலையை அப்படி இப்படி அசைக்கக் கூடாதென்று விட்டார். என் தோழி ஜோதி மற்றும் இருவரும் சமர்த்தாக வைத்துக் கொண்டனர். நமக்குத் தான் அர்த்தமில்லாமல் எந்த அசௌகரியத்தையும் கொஞ்சநேரம் கூடத் தாங்கிக் கொள்ள முடியாதே. 'என்ன இது விழாமல் இருக்க லேசாக் கட்டினா போதாதா' என்று நைஸாக முடிச்சைத் தளர்த்தி விட்டுக் கொண்டேன். அதன் விளைவு நிகழ்ச்சி முடிந்து படங்கள் பார்க்கும் போது தெரிந்தது. என்னுடைய கரகம் மட்டும் பைசா கோபுரம் போல் ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்று கொண்டிருந்தது!
பத்தாம் வகுப்பில் ஒரு பிராமணக் குடும்பத்தை ஒட்டி நடக்கும் நாடகத்தில் என்னைக் கதையின் நாயகியாக (மடிசார் கட்டி மாமியாக) நடிக்க வைத்தார் நாடகத்தின் ஆசிரியை. எனக்கு என்ன ஆச்சரியமென்றால் அந்தப் பாஷையை இயல்பாகவே நன்றாகப் பேசக் கூடிய மாணவிகள் இருக்கையில் என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது தான். ஆனால் யாருமே, என்னுடன் படித்த பிராமணவகுப்பைச் சேர்ந்த தோழிகள், ஆசிரியர்கள் உட்பட இதற்கு மாற்றுக் கருத்தே தெரிவிக்காததுடன் நான் நன்றாகப் பேசி நடித்ததாகவும் பாராட்டினார்கள். என்னால் மறக்க முடியாத அனுபவம் அது.
ஆண்டு விழாவென்றால் அதிகம் எதிர்பார்க்கிற இன்னொரு விஷயம் பரிசளிப்பு. மேடையில் நமது பேர் வாசிக்கப்படுவதும் கரகோஷத்துக்கிடையில் மேடையேறிச் சென்று சிறப்பு விருந்தினரின் புன்னகையோடு பரிசை (புத்த்கங்கள் தான்) வாங்குவதும் படபடப்பான தருணங்கள்.
வாங்கி இருக்கைக்கு வந்த பின் அம்மா மற்றும் அக்காவின் கொஞ்சல்களுக்கிடையில் அது என்ன புத்தகம் என்று பிரித்துப் பார்ப்பது அதை விட ஆனந்தம்!
பள்ளியில் பேச்சு, கட்டுரை (ஆங்கிலம், தமிழ், ஹிந்தி) பாட்டு, நடனம், ஓவியம், மாறுவேடம், மற்றும் வினாடிவினா ஆகிய போட்டிகள் நடக்கும்.இதில் பேச்சு, கட்டுரை, பாட்டு, ஓவியம் இவற்றுள் எதிலாவது இரண்டு மூன்று பரிசுகள் கிடைத்து விடும். 'உனக்கு எத்தனை ப்ரைஸ் எனக்கு எத்தனை' என்று என் தோழி ஜோதிக்கும் எனக்கும் எண்ணிக்கையில் போட்டி துவங்கும். ஒரு முறை அவளை விட எனக்கு ஒரு பரிசு கூடுதலாகி நான் முன்னணியில் இருந்தேன். தலை கொள்ளாத பெருமை தான். வேறென்ன எனக்கு ஒரு புத்தகம் அதிகமாகக் கிடைக்குமே!
ஆனால் ஒரு விஷயத்தை நான் மறந்து விட்டேன்! 'ஜெனரல் ப்ரொஃபிஷியென்சி' என்ற பிரிவில், அதாவது ஆண்டு முழுதும் வகுப்பில் முதல்மாணவியாக வந்ததற்குப் பெரிய பரிசு அறிவிக்கப்படும். அந்தவகையில் அந்த ஒரு பிரிவிலேயே அவளுக்கு நான்கைந்து புத்தகங்கள் வழங்கப்பட்டன. வந்து என்னிடம் காட்டிச் சிரித்தபோது ஆஹா, வடை போச்சே என்றிருந்தது!
ஹூம்! அதெல்லாம் ஒரு காலம். கள்ளம் கபடமில்லாமல் சுற்றித் திரிந்த அந்தக் காலங்களை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தாவது அத்தகைய இதயத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி தான் இந்தக் கொசுவத்திகள். கொசுவத்தி அணையாமல் மீண்டும் பற்ற வைக்க இவர்களை அழைக்கிறேன்.
ஹுஸைனம்மா - இவரது இயல்பான நகைச்சுவை எழுத்தை வெகுவாக ரசிக்கிறேன். இவரது 'சப்பாத்தி டேஸ்' படித்துவிட்டீர்களா?
அம்பிகா - இப்பவே இவ்ளோ சேட்டைக்காரியா இருக்க்ற இவங்க பள்ளிக் காலத்துல எப்படி இருந்திருப்பாங்க? எழுதுங்கக்கா உங்கள் பள்ளி ஆண்டு விழா அனுபவங்களை.
ஸ்ரீஅகிலா - பதிவுலகில் நம்பிக்கை தரும் புதுவரவு. இவரது பள்ளிக்கால நினைவுகளை அசைப்போடச் சொல்வோமா. வாம்மா மின்னல்!
சந்தனமுல்லை - அழுத்தமான சமூக விஷயங்களுக்கு மட்டுமல்ல, அழகான நினைவலைகளை எழுதுவதிலும் என் டாப் ஃபேவரிட் இவர்தான். வாங்க மேடம். வந்து சுத்துங்க!
வெறும்பய - இப்போது தான் இவரைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இயக்குநர் டங்கன் பற்றி அருமையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். புட்டு சமைத்த கதையை எழுதிய விதம் சுவாரசியம். இப்பதிவினையும் அதே போல் சுவாரசியமாகத் தொடர்வார் என்று நம்புகிறேன்.
ஜோ ஆனந்த் - இவரையும் இப்போது தான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். இவர் எழுதும் விஷயங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. குழந்தைகளை அடிக்காதீர்கள் என்ற இவரது இடுகை மிகவும் முக்கியமானது.
பி.கு. 1: விளையாட்டுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் என்பதால் விளையாட்டு விழாவைப் பற்றி எழுதவில்லை. விருப்பமுள்ளவர்கள் அதையும் எழுதலாம்.
பி.கு. 2: பதிவு கொஞ்சம் நீ....ளம்; பொறுத்தருள்க.
Tuesday, July 27, 2010
மீண்டும் ஒரு சொ.க, சோ.க!
வெ.இராதாகிருஷ்ணன் அவர்களின் அன்பான அழைப்பைத் தட்டமுடியாமல் இந்த இடர்... சாரி தொடர்பதிவை எழுதுகிறேன். பொறுத்துக் கொள்ளவும்!
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
தீபா தான்.(ஆனால் ஆங்கிலத்திலும் ஒரு பதிவு வைத்திருப்பதால் Deepa என்றே வைத்திருக்கிறேன்.)
2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அது தான் உண்மையான பெயர்.
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
இந்தக் கதையை ஏற்கெனவே இங்கே எழுதி இருக்கிறேன். விருப்பப்பட்டால் படித்துப் பார்க்கவும்.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலம் என்ற வார்த்தை எனக்கு அலர்ஜி! அதனால் 'அதிகம் பேர் படிக்க வேண்டுமென்று' தமிழ்மணம், தமிழிஷ் திரட்டிகளில் இணைத்து வருகிறேன். இப்போது பஸ் மற்றும் ட்விட்டர்களிலும் சுட்டி வைக்கிறேன்.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நிறைய. அனுபவங்களை அசைபோடுவதே ஒரு அலாதியான அனுபவம் தானே!
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பொழுது போக்குக்காக, எழுத்துப் பயிற்சிக்காக, மனதில் தோன்றுவதைக் கொட்டித் தீர்ப்பதற்காக, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக என்று நிறைய காரணங்களைக் கூறலாம்.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
காழ்ப்புணர்ச்சி, அகங்காரம், சுயமோகம், வக்கிரம் வெளிப்படும் எழுத்துக்கள், பெண்களைக் கேவலப்படுத்தும் (நகைச்சுவை என்ற பெயரில் கூட) எழுத்துக்கள், மனசாட்சியை அடகு வைத்து விட்டுச் சுயநலத்துக்காக எழுதப்படும் / ஆதரிக்கப்படும் எழுத்துக்கள் கண்மண் தெரியாமல் கோபம் ஏற்படுத்துகின்றன. ஆனால் இப்போது நிதானம் பழகிவருகிறேன்.(அதற்காக அத்தகைய எழுத்துக்களை ஏற்க மனம் பழகிவிட்டதாக அர்த்தமில்லை!)
பொறாமை - இது நிறைய பேர் மேல உண்டு. அலட்டாமல் ஆர்ப்பாட்டமில்லாமல், எழுத்தில் செறிவோடும் கருத்தில் நேர்மையோடும் எழுதும் எல்லார் மீதும் மதிப்பு கலந்த பொறாமை உண்டு. அர்த்தம் மிக்க நையாண்டிகள் செய்வோரின் நகைச்சுவை உணர்ச்சி மீதும்.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதல் பாராட்டு, குட்டு எல்லாமே மாதவராஜ் அங்கிள் தான். அவரைத் தவிர, என் முதல் சில இடுகைகளை எடுத்துப் பார்த்தால் ரேகா ராகவன், மதுமிதா, புதுகை அப்துல்லா, ஆயில்யன், தேவன்மாயம் ஆகியோர் பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தி இருக்கின்றனர். அவர்களுக்கு இந்தக் கேள்வியைப் பயன்படுத்தி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
சாரி, இதுவே அவசியமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். இதுக்கு மேல என்னைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு என்ன ஆகப்போகுது? இவ்ளோ தாங்க!
ரொம்ப நன்றி.
பி.கு: இந்தத் தொடரில், என்னுடைய இந்த இடுகையைத் தான் மொக்கை என்று குறிப்பிட்டிருக்கிறேன். தொடரையே அல்ல. :)
Sunday, July 25, 2010
போபால் - மறக்கக் கூடாத துரோகம்
Friday, May 21, 2010
யாதெனின் யாதெனின் நீங்கியான்...
விரும்பியதும் கிடைத்ததும்
படிப்பு மற்றும் வேலை விஷயத்தில் நான் என்ன விரும்பினேன்? ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்று கனவு கண்டேன். அண்டவெளியில் கோடிக்கணக்கான காலக்ஸிக்களும் கிரகங்களும் இருப்பதாகவும் பூமியை விடப் பன்மடங்கு பெரிதான கோளங்கள் சுற்றுவதாகவும் அறிந்த போது ஏற்பட்ட பிரமிப்பு அந்த ஆசையைத் தோற்றுவித்தது. நிலவில் கால் பதியாமல் மிதந்து செல்லும் ஆராய்ச்சியாளர்களை டிவியில் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்திருக்கிறேன்.
டாக்டர், எஞ்சினியர், வெளிநாடு கனவெல்லாம் பெரிதாக இருக்கவில்லை.
பள்ளி இறுதி வகுப்புகளில் படிக்கும் போது, கணினிக் கல்வி ஏதாவது கற்று ஒரு நல்ல கம்பெனியில் ஓரளவு கௌரவமான சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான் யதார்த்தமான ஆசையாக இருந்தது.
ஆனால் உள்ளுக்குள் வேறு கனவுகளும் இருந்தன. இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும். விட்டுப் போன பாட்டுப் பயிற்சியை மீண்டும் தொடங்கி மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணற்ற கனவுகள் இருந்தன.
ஆனால் அவற்றை நிறைவேற்றப் போதுமான முயற்சியும் உத்வேகமும் ஏனோ இல்லாமல் போனது. கல்லூரியில் பேராசிரியர்களே கூட "உனக்கு கேம்பஸ்ல வேலை கிடைக்காட்டிக் கூட கவலை இல்லம்மா. நீ நிச்சயம் பாடகி ஆயிடலாம்" என்ற ரேஞ்சுக்கு ஏற்றி வைத்திருந்தார்கள். ஆனால் எனக்கு என் ஸ்டான்டர்டு தெரிந்திருந்தது. இசையில் உயரங்களை எட்ட வேண்டுமானால் குரல் மட்டும் போதாது; பல ஆண்டுகள் தொடர்ந்த முறையான உழைப்பும் பயிற்சியும் வேண்டும்.
"பெர்ஃபார்மன்ஸ்" என்பது ஹாபியாக இருக்கும் போது கிடைக்கும் தன்னிறைவும் கௌரவமும் தொழிலாக ஏற்றுக் கொள்ளும் போது கிடைக்குமா என்று ஒரு பயமும் தயக்கமும் வேறு என் மனதைக் கட்டிப் போட்டது.
நாம் பாடுவது நமக்காகவும் நம் அன்புக்குரியவர்களுக்காகவும் மட்டும் இருந்தால் போதுமே என்ற எண்ணமும் என்னை அந்தப் பாதையில் அடியெடுத்து வைக்க விடாமல் தடுத்து விட்டது. போயிருந்தாலும் வெற்றி கிடைத்திருக்கும் என்பது நிச்சயமல்லவே. :)
நல்ல இசையை ரசிக்கவும் அனுபவிக்கவும் நம்மால் இயல்கிறது என்பதே எவ்வளவு பெரிய சந்தோஷம் என்ற ஞானம் இப்போது வந்திருக்கிறது. வேலை முடிந்து வந்து சூப்பர் சிங்கர் ஜூனியரில் குட்டீஸ் பாடுவதைக் கேட்டால் மெய்மறந்து போகிறது. மன இறுக்கத்தை வெகுவாகத் தளர்த்த வல்லது அந்த நிகழ்ச்சி. சில குறைகளை நிவர்த்தி செய்தால் இன்னும் சிறப்பாக அமையும்.
இன்னொரு விஷயம் விரும்பியும் நடக்காமல் போனது பேராசிரியை ஆக வேண்டும் என்பது. சிவில் பொறியியல் படித்து முடித்த போது எஞ்சினியராக வேலை பார்ப்பதை விடக் கல்லூரியில் பேராசிரியையாகவே விரும்பினேன்.
ஆறுமாதம் பாலிடெக்னிக்கில் வேலை பார்த்த போது அந்த அனுபவம் அலாதியாக இருந்தது. நாங்கள் படித்த போது முட்டி மோதிப் பயின்ற எஞ்சினியரிங் ட்ராயிங்கை மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
அதற்கு முந்தைய செமஸ்டர் வரை பாதிக்கும் மேல் தோல்வியுற்ற அப்பாடத்தில் அனைத்து மாணவர்களும் பிள்ளைகளும் 80க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து முழுத் தேர்ச்சியடைந்ததும் சீனியர் பேராசிரியைகள் வியந்து பாராட்டியதும் மறக்க முடியாத நினைவுகள். நல்ல வேலை கிடைக்கவில்லையே என்ற குறையை மறக்கடித்துப் புதுத்தெம்பூட்டிய பருவம் அது.
ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் சிவிலுக்கு ரொம்பவும் மதிப்பு இல்லாததால் கல்லூரிகளிலும் பேராசிரியை வேலை வாய்ப்புகள் இருக்கவில்லை. அதனால் கணனித் துறைக்குத் தடம் மாறிய கதையை ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். (கற்றது சிவில்)
பாட்டைத் தொலைத்ததை விடவும் ஏமாற்றம் ஆசிரியர் துறையைத் தவற விட்டது தான். இப்போது வேலை செய்யும் இடங்களில் ஜூனியர்களுக்குப் பயிற்சி கொடுப்பது போன்ற பலரும் விரும்பாத வேலைகளை அதனால் தான் விரும்பிச் செய்கிறேனோ என்னவோ.
வேலை, சம்பளம், பதவி இதிலெல்லாம் பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாததாலும், கொஞ்சம் 'பேக்கு' என்று அறியப்பட்டாலும் என் மனதின் சந்தோஷமும் நிம்மதியும் எதில் இருக்கிறது என்பதில் எனக்குத் தெளிவு இருப்பதாலும், நான் விரும்பியவையே எனக்குக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானவை அன்பும் நட்பும்.
மேலும் நாம் விரும்பியதெல்லாம் கிடைத்து விடாமலிருப்பதும் ஒரு வரம் தான்! என் அம்மா சொல்லி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த குறளை இங்கு நினைவு கூர்வதை அவசியமெனக் கருதுகிறேன்.
"யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்"
எதையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்று வருந்துகிறோமோ அவற்றுடன் சேர்ந்து வரும் துன்பங்களையும் நாம் இழக்கிறோம் என்று உணர்ந்து நிம்மதியுற வேண்டும். (இது எனது படு சுமாரான விளக்கம். பொறுத்தருள்க!)
Friday, April 9, 2010
எலிஃபென்ட் சாமியும் தாடி தாத்தாவும்
அவளது அம்மாச்சி (என் மாமியார்) பேசுவதைக் கேட்பது போலவே இருக்கும் பாவமும், பெரியமனுஷத்தனமும்.
அவள் பேசியதையெல்லாம் எழுத வேண்டுமென்றால் தனிப்பதிவே போட வேண்டும். முன்பொரு முறை போட்டும் இருக்கிறேன். இப்போது விஷயம் அதுவல்ல.
கடவுள் பக்தி அதிகம் உள்ள என் மாமியார் அவளுக்கு நிறைய ஜெபங்களூம் தோத்திரங்களும் சொல்லிக் கொடுத்திருந்தார். மேலும் "தற்குறிப்பேற்ற அணி" யாகக் குழந்தைக்கு இயற்கையிலேயே கடவுள் பக்தி அதிகம் எனவும் சொல்லி மகிழ்வது அவர்கள் வழக்கம்.
ஒரு நாள் எல்லாரும் அமர்ந்திருக்கத் தான் சொல்லிக் கொடுத்த ஜெபங்களையெல்லாம் வரிசையாகச் சொல்லச் சொன்னார்கள். அவள் அழகாக மழலைக் குரலில் சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாரும் ரசித்துக் கொண்டிருந்தோம். அத்தை மட்டும் கண்கள் மூடி ஜெபிக்கவே தொடங்கி விட்டார்கள். இறுதியாக "மன்மதராசா மன்மதராசா..." என்று அதே சிரத்தையுடன் குழந்தை பாடவும் பதறிப் போய் அதை அதட்டி உட்கார வைத்தார்கள்.
எல்லாருக்கும் சிரிப்புத் தாங்க வில்லை. சுட்டித் தனமான குழந்தை எதைச் சொல்லிக் கொடுத்தாலும் பார்த்தாலும் பிடித்துக் கொண்டு அழகாகச் சொல்கிறது. அதன் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுங்கள் என்று சமாதானப் படுத்தினோம்.
நான் குழந்தையாக இருந்த போதும் இப்படித் தான் அண்ணனும் அக்காவும் சொல்கிறார்கள் என்று ஆவேசத்துடன் நானும் கந்தர் சஷ்டிக் கவசம் முழ்தும் கஷ்டப்பட்டு வாசித்து முடிப்பேன். என் அம்மாவும் "பொண்ணுக்கு என்ன பக்தி" என்று மகிழ்ந்திருக்கக் கூடும். பக்த துருவ மார்க்கண்டேயன் படம் பார்த்து விட்டு வந்த போதோ, ஞாயிற்றுக் கிழமை வீட்டில் "கந்தன் கருணை" பார்த்த போதோ பக்தி பீறிட்டு மனதில் எழுந்ததை நானும் உணர்ந்திருக்கிறேன்.
அது மட்டுமல்ல, மூன்றாவது படிக்கும் போது புனித வெள்ளியனறு "தேவ மைந்தன் போகின்றான்" பாட்டை ஒளியும் ஒலியும் இல் பார்த்து விட்டுக் கதறிக் கதறி அழுததும் அதற்காக அண்ணனும் அக்காவும் என்னை ஓட்டித் தள்ளியதும் நான் மறக்க விரும்பும் தர்மசங்கடங்கள்.
வீட்டில் பெரிதாகப் பூசை, விரதம் என்றெல்லாம் எதுவும் இல்லை. அமாவாசை, கிருத்திகை, சஷ்டி இத்யாதிகள் பார்க்கும் வழக்கமெல்லாம் அம்மாவுக்கு இருந்ததில்லை. மாலையில் தினமும் சாமி விளக்கேற்றுவார்கள்.பண்டிகைகள் வந்தால் சாமி படங்களுக்குப் பூ போட்டு, படையல் வைத்துக் கற்பூரம் காட்டுவார்கள். சனிக்கிழமைகளில் காக்காவுக்குச் சாதம் வைப்பார்கள். அவ்வளவு தான்.
நானும் பெரிதாகப் பக்தி என்றும் இல்லாமல், நாத்திகமென்றும் இல்லாமல் கோயிலுக்கெல்லாம் போய் வந்து கொண்டு தானிருந்தேன்.எங்கள் கல்லூரிக்கருகிலும் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அதற்குப் பேரே செமஸ்டர் பிள்ளையார் கோயில். ஏனென்றால் மற்ற நேரங்களில் காத்தாடும் அந்தக் கோவிலில் செமஸ்டர் சமயம் கால் வைக்க முடியாத் அளவு கூட்டம் அம்மும்.
அதே போல் மார்கழி மாதங்களில் காலையில் ஐந்து மணிக்குப் போனால் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் தொன்னையில் தருவார்கள். ஓரிரு முறை சென்று வாங்கியதாக ஞாபகம். (காலை உணவுக்கு மெஸ்ஸுக்குப் போய் அழ வேண்டாமே!)
ரொம்ப எரிச்சல் வந்தது எதனாலென்றால் கூட்டம்; ஜன நெருக்கடி. விசேஷ நாட்களில் கோவில் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேன்.
பூசாரிகளின் அதட்டலும் அர்ச்சனைத் தட்டுகளில் போடப்படும் காசுக்கேற்ப தரும் மரியாதையும், பொது வழி சிறப்பு வழி என்று பிரித்து வைத்து ரகவாரியாகப் பிசினஸ் செய்வதும் கோவில் வழிபாடுகள் மீது முதல் அவநம்பிக்கை ஏற்படச்செய்தது.
கடவுள் பக்தி அதிகமிருக்கும் சிலர் (எம்மதமாக இருந்தாலும்) பேசுவதில் ஒரு மேட்டிமைத் தனமும் Self righteousness ம் இருப்பதையும் உணர முடிந்தது. (சிறு வயதில் இப்படிப் பேசுபவர்களைப் பார்த்தால் ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றும். நாம் இப்படியெல்லாம் சாமி கும்பிடுவதில்லையே, நமக்கு இந்த அளவு பக்தி இல்லையே என்று.)
எனக்கொரு தோழி இருந்தாள். நன்றாகப் படித்து நல்ல வேலையிலும் இருந்தாள். வயதும் அப்போது இருபத்திரண்டோ மூன்றோ தான். கல்யாணமாகவில்லை என்று அவளை அவள் பெற்றோர் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை. 'வெள்ளிக் கிழமையா? ஒரே வேளை சாப்பிட்டு விரதம் இரு. திங்கட்கிழமையா? சோமவார விரதம் இரு. அஞ்சு விரல்லயும் அதிர்ஷ்டக் கல் மோதிரம் மாட்டு. பிரதோஷமா? சாயங்காலம் வேலை முடிஞ்சு எவ்ளோ நேரமானாலும் சரி, கோவிலுக்குப் போயிட்டு வா.'
பிரதோஷமென்றால் சிவன் கோவிலில் கூட்டம் கேட்கவே வேண்டாம். கூட்டத்தில் சென்று இடிபட்டு நசுங்கி, அதன் பின் பஸ் பிடித்து வீட்டுக்குச் செல்வதற்குள் அவள் விழி பிதுங்கி விடும். ஒரே ஒரு நாள் அவளுக்காகத் துணைக்குச் சென்று படாத பாடு பட்டேன்.
இது போன்ற சம்பவங்களால் பொதுவாக சம்பிரதாயங்கள் மீதும், வழிபாடுகளின் மீதும் கொஞ்ச கொஞ்சமாக அசிரத்தை ஏற்பட ஆரம்பித்தது. கடவுள் பக்திக்கும் மதவெறிக்கும் இடையே பெரிதாக வேறுபாடில்லை என்று மதக்கலவரங்களும் கொடூரங்களும் நம்ப வைத்தன. (இது என் ஆழமான நம்பிக்கை அவ்வளவு தான்.)
மேலும், "நட்ட கல்லைத் தெய்வமென்று..." போன்ற பாடல்களும், அபு பென் ஆதம் கதைகளும், முற்போக்குச் சிந்தனையுள்ளவர்கள் பேச்சிலும் எழுத்திலும் (மதமென்பது மக்களுக்குக் கொடுக்கப் பட்ட அபினி) நாட்டமேற்பட்டதும் கூடக் காரணமாக இருக்கலாம்.
ஓஷோவின் discource களையும் ஆவலுடன் கேட்க ஆரம்பித்திருந்தேன். போதாதா? Life is a better word than God என்ற அவரது வாசகம் மனதில் ஆழமாகப் பதிந்தது.
ஒன்று, இதையெல்லாம் நம்ப வேண்டும். இல்லை கடவுளை நம்ப வேண்டும். இரண்டுக்கும் இடையில் இருக்க முடியாது என்று தீர்மானம் ஏற்பட்டது.
கோவிலுக்குப் போவதில்லை. சாமி கும்பிடுவது என்றொரு வழக்கம் என்றுமே ஒழுங்காக இருந்ததில்லை. இதனாலெல்லாம் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான் திருமணம் செய்து கொண்டது வேற்று மதத்தவரை. அவரும் என்னைப் போலவே தான்; மதச் சம்பிரதாயங்களுக்கும் கற்பிக்கப்பட்ட புனிதங்களுக்கும் பின்னால் இருக்கும் போலித் தனங்களை உணர்ந்து வெறுத்தவர். இருவரும் எந்த வழிபாட்டுத் தலத்துக்கும் செல்வதில்லை. எல்லாப் பண்டிகைகளையும் எந்தவிதமான பூசை வழிபாடுகள் இல்லாமலும் கொண்டாடப் பழகி விட்டோம். இருந்தாலும் திருமணமான பின்பு சில சம்பிரதாயங்களுக்கு உட்படவேண்டி இருந்தது. பிறகு இருதரப்பினரும் எங்களைப் பற்றிப் புரிந்து கொண்டு விட்டார்கள். வருத்தம் தான் ஆனாலும் எங்கள் சுதந்திரத்தில் பெரிதாகத் தலையிடுவதில்லை.
நான் மிகவும் மதிப்பவர்கள் நிறைய பேர், அறிவிலும் தெளிவிலும் பன்மடங்கு உயர்ந்திருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருப்பதையும் காண்கிறேன். கடவுள் மறுப்பு என்பது அறிவார்ந்த செயலென்றால் உலகில் மிகப்பெரிய அறிவாளிகள் அனைவரும் நாத்திகர்கள் அல்லவே! வாழ்க்கையில் புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று. நான் கொண்டிருப்பது கடவுள் மறுப்பு என்பதை விடக் கடவுள் வழிபாட்டு மறுப்பு. இது என்னளவில் சரி. அவ்வளவு தான்.
கடவுள் நம்பிக்கை என்பதையெல்லாம் தாண்டி சில பழக்கங்களை (திருமணமானவர்கள் வீட்டுக்கு வந்து விடை பெறும் போது குங்குமம் கொடுப்பது, இளம் பெண்கள் இருக்கும் வீட்டுக்குப் பூ வாங்கிச் செல்வது) போன்றவற்றை விட மனமில்லை; விடுவதாகவும் இல்லை! அவையெல்லாம் காரணமே இல்லாமல் பிடித்துத் தான் இருக்கின்றன.
நேஹாவும் மிகச் சுதந்திரமாகத் திரிகிறாள். இயேசு படத்தைப் பார்த்தால் "தாத்தா தாடி" என்றும் பிள்ளையார் படத்தைப் பார்த்தால் "எலிஃபென்ட்" என்றும் சொல்கிறாள். தாத்தா பாட்டிகள் "அப்படிச் சொல்லக் கூடாது... சாமி சொல்லு" என்று சொன்னாலும் நாங்கள் தடுப்பதில்லை. நம்மை விட நிச்சயம் அறிவும் தெளிவுடனும் இருக்கப் போகும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அவள் தனது விருப்பத்தைத் தானே தேர்வு செய்யட்டுமே. அப்படி என்ன பெரிய விஷயம் இது?
எல்லாருக்குள்ளும் ஏதாவது சமயம் இப்படி ஒரு மனப்போராட்டம் வந்திருக்கலாம்; அல்லது இவ்விதமான குழப்பங்களுக்கெல்லாம் இடமில்லாத வகையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கலாம். என்னவாக இருப்பினும் அவர்கள் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன்.
அவ்விதம் நான் அழைக்க விரும்புவது:
அண்ணாமலையான்
தமிழ்நதி
நாஸியா
மயில் விஜி
சந்தனமுல்லை
ராகவன்
Wednesday, January 20, 2010
சாலையோரம் - தொடர் இடுகை
நான் ஸ்கூட்டி ஓட்டத் தொடங்கி சில ஆண்டுகள் தான் ஆகின்றன. யார் புண்ணியமோ இது வரை (touch wood!) சுவாரசியமாக எதுவும் நிகழவில்லை.
ஆனால் அதற்கு முன் சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது தான் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பெல்லும் ப்ரேக்கும் இல்லாமல் ஓட்டிச் சென்றது அப்போது தானே?
உண்மையில் சைக்கிள் ஓட்டுவது ஒரு தனி சுகானுபவம். முதன் முதலில் பேலன்ஸ் கிடைத்த அந்தத் தருணத்தை மறக்க முடியுமா. கோணல் மாணலாகச் ஓட்டித் திரிந்து நேராக ஒட்டவே சில நாட்கள் ஆகும்.
அப்புறம் சில காலம் காலில் இறக்கை முளைத்தது போல் ஒரு உணர்வு. நாளெல்லாம் சைக்கிள் ஓட்டித் திரிந்தாலும் அலுக்கவே அலுக்காது; ஆசையும் தீராது. அப்படி ஒரு ஆசை ஸ்கூட்டி ஓட்ட ஆரம்பித்த போது ஏற்படவே இல்லை. (பெட்ரோல் விரயமாகுமே என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்!)
ஒன்பதாவது படிக்கும் போது தான் எனக்கென சைக்கிள் கிடைத்தது. அப்பாவுக்கு என்னைச் சைக்கிளில் பள்ளிக்கு அனுப்ப ரொம்பப் பயம். கொஞ்ச நாள் கூடவே இன்னொரு சைக்கிளில் மோகனை அனுப்பி வைத்தார் (அய்யோ!)
பிறகு முதன் முதலில் தனியாக நான் சைக்கிளில் புறப்பட, வாசலில் நின்று வழியனுப்பினார் அப்பா. நேரே சாலையை அடைத்து நான்கு பேர் சைக்கிளில். விடாமல் நான் பெல்லடித்தும் அவர்கள் நகரவில்லை. அப்பா வேறு நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாரே, என்ற டென்ஷனில் ப்ரேக் பிடிக்க மறந்து போய் இடித்து விட்டேன். கீழே விழுந்து இடது கண்ணின் கீழ் பலத்த அடி. ரொம்ப நாள் கறுப்புத் திட்டாக இருந்தது.
அதற்கு மேல் வீட்டில் திட்டும் நன்றாக விழுந்தது. “பெல்லடிச்சா உடனே நகந்துடுவானுங்களா. லூசு!”
சின்னச் சின்னதாய் இப்படி நிறைய சம்பவங்கள். டபிள்ஸ் அடிக்கத் தொடங்கிய போது பின்னால் அமர்ந்திருப்பவளைத் தள்ளி விட்டு நாம் மட்டும் சைக்கிளை பேலன்ஸ் செய்து நின்றிருப்பது உட்பட.
ஆனால் ஹைலைட்டாக ஒன்று 2001 ல் நடந்தது. இரவு ஏழரைக்கு மேல் லைப்ரரிக்குக் கிளம்பிய என்னை அம்மா வேண்டாமென்று தடுத்தார். “பக்கத்துல தானே, தோ வந்துடுவேன்மா” என்று கிளம்பினேன். திரும்பி வரும் போது வே....கமாக க்ராஸ் செய்து வலது பக்கம் திரும்பினேன். டமால்! இரண்டு நிமிடம் கழித்து நினைவு வந்த போது நடைபாதையில் அமர்ந்திருந்தேன். சுற்றிலும் யார் யாரோ. பயந்து வெளிறிப்போய் மங்கலாக ஒரு முகம் முன்னால் தெரிகிறது. “ஸாரி, ஸாரி” என்று பிதற்றியவாறு. அவன் தான் எதிர்த்திசையில் வேகமாக பைக்கில் வந்து இடித்திருக்கிறான் என்று புரிந்தது.
தாங்க முடியாமல் இடது பக்கம் மண்டை வலித்தது.
“ஹேய்... காதுலெந்து இரத்தம் வழியுதுப்பா” - ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஸாரி என்ற அந்தப் பையன், “வாங்க உங்களை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போறேன். ” என்று அதே தெருவிலிருந்த ஈ.என்.டி. ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான்.
ஒ.பி பெட்டில் படுத்திருந்த நான் வலி தாங்காமல் பயங்கரமாகக் கத்தினேன். என்ன ஆகி விட்டதோ என்று பயம் வேறு. வீட்டு டெலிஃபோன் நம்பரைச் சொன்னேன். சில நிமிடங்களில் என் அண்ணன் வந்தான். வலி குறைய ஊசி போடப்பட்டு அங்கிருந்து பெஸ்ட் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லச் சொன்னார்கள். மண்டையை ஸ்கேன் செய்யச் சொல்லி.
ஸ்கேன் ரிப்போர்டில் தெரிந்து விட்டது. ஒன்றுமில்லை என்று! (தெரியும் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று), பிரச்னை ஒன்றும் இல்லை என்று தெரிந்தது!
அந்தப் பையன் குடித்திருந்ததாகவும் அவன் மீது நடவடிக்கை எடுக்கலாமென்றும் டாக்டர் சொன்னார். ஆனால் அப்பாவுக்கு அவனைப் பார்த்துப் பரிதாபமாக இருந்தது. மேலும் ஓடி விடாமல் என்னை உரிய நேரத்தில் சிகிச்சைக்கும் அழைத்துச் சென்றானே. அதனால் வேண்டாமென்று விட்டு விட்டார்.
அடுத்த இரு நாட்கள் விடுப்பெடுத்து ஓய்விலிருந்தேன். அலுவலகம் சென்ற இரண்டாம் நாள், முகத்தின் இடது பக்கம் அசைக்கவே முடியவில்லை. பேசுவதோ சாப்பிடுவதோ, ஏன் வாய்க் கொப்பளிப்பதோ கூட முடியவில்லை. அந்தப் பக்கக் கண்ணைச் சிமிட்டவும் முடியாமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. எல்லாரும் ரொம்பப் பயந்து போனார்கள். ஆனால் பிஸியோதெரபிஸ்ட் நண்பர் ஒருவர், பயப்படத் தேவையில்லை எனவும், இரத்தம் உறைந்து முகத்தின் நரம்பின் மீது அழுத்துவதால் ஏற்பட்ட தற்காலிகக் கோளாறு தான் என்றும் சொன்னார். சூயிங்கம் மெல்லுவது விரைந்த பலனைத் தருமென்றார். அதன்படியே ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் பிரச்னை எதுவுமில்லாமல் முடிந்தது. ஆனால் என் ஆசை சைக்கிள் மட்டும் அப்பளம் போல் நொறுங்கி விட்டது.
ஆனால் இந்தச் சம்பவம் எனக்கு சாலை பாதுகாப்பு விதிகள் பற்றியும், வேகம் விவேகம் அல்ல என்பதையும் அழுத்தமாக உணர்த்தி விட்டது. ஹெல்மெட் அணியாமல் வண்டியை எடுப்பதுமில்லை. 30க்கு மேல் வேகமாகச் செல்வதுமில்லை. சிக்னலில் கோட்டைத் தாண்டி நிற்பதுமில்லை.
இருந்தாலும் எப்போதும் மனதில் ஒரு பயம் இருந்து கொண்டு தானிருக்கிறது. அது தேவை தான்.
வாகன ஓட்டிகளுக்கு நான் சொல்ல விரும்புவது இது ஒன்று தான். நம் மீது தவ்றே இல்லை என்று வாதிடுவது முட்டாள் தனம். It may not be your fault, but it's your accident. அதனால் மற்றவர்களின் தவறுக்கும் தயாராக இருங்கள்.
வேகம் வேண்டவே வேண்டாம். தரமான ஹெல்மெட் அணிவது மிக முக்கியம்.
ஆம்புலன்ஸ், போலிஸ் வண்டிகள் தவிர மற்ற வாகனங்கள் எல்லாம் 30 - 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லாதவாறு வடிவமைத்தால் என்ன?
இப்போது நான் அழைக்க விரும்பும் நால்வர்:
அமுதா
விதூஷ்
சங்கவி
அண்ணாமலையான் - இவரை அழைக்க நினைத்தேன். ஆனால் இவர் ஏற்கனவே சாலை பாதுகாப்பு பற்றி எழுதிய இடுகை இங்கே. விரும்பினால் இன்னும் எழுதுங்கள், அண்ணாமலையான்!
Sunday, November 1, 2009
பிடித்தவர்; பிடிக்காதவர் - தொடர் விளையாட்டு
பிடித்தவர் பிடிக்காதவர் தலைப்பில் எழுதச் சொல்லி அழைத்திருக்கிறார் மாதவராஜ் அங்கிள்.
அவரே சொல்லி இருப்பது போல் இது ஒரு குழந்தைத் தனமான விளையாட்டுத் தான். ஆனால் குழந்தைத் தனங்களை மீட்டெடுக்கும் எந்த ஒரு செயலுமே எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் என்னைக் கேட்ட போது உடனே சம்மதித்து விட்டேன்!
ஒருவரைப் பிடிக்கக் கூடப் பெரிதாகக் காரணம் இல்லாமல் போகலாம். ஆனால் பிடிக்காமல் போக நிச்சயம் மனதிற்குள்ளாவது ஆழ்ந்த காரணம் இருக்கும்.
அதைச் சொல்ல வைப்பது தான் இந்த விளையாட்டின் வெற்றி.
எனக்குப் பொதுவாக strong likes and dislikes உண்டு.
(But no preconceived prejudices. And I definitely do not hate anybody in cold blood. :-) )
பிரபலங்களைப் பொறுத்தவரை strong likes and dislikes கிடையாது. மனதில் உடனே தோன்றுபவர்களைத் தான் இங்கே எழுதுகிறேன். உதாரணமாக நான் ரொம்ப மதிக்கின்ற, என்றுமே பிடித்த நடிகை என்று யோசித்தால் மனோரமா தான். ஆனால் சட்டென்று தமன்னாவின் துறுதுறு முகம் வருகிறது. அதனால் இப்போதைக்குத் தமன்னா தான்!
1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: பெருந்தலைவர் காமராஜர்.
பிடிக்காதவர்: சுப்ரமணியம் சுவாமி
2. எழுத்தாளர்
பிடித்தவர்: தமிழ்ச்செல்வன்
பிடிக்காதவர்: தேவிபாலா (தெரியாமல் சில கதைகள் படித்துத் தலைவலியில் அவஸ்தைப் பட்டிருக்கிறேன்)
3. கவிஞர்:
பிடித்தவர்: பாரதியார்
பிடிக்காதவர்: வாலி
4. இயக்குனர்:
பிடித்தவர்: பாலுமகேந்திரா
பிடிக்காதவர்: எஸ் பி முத்துராமன்
5. நடிகர்:
பிடித்தவர்: விக்ரம்
பிடிக்காதவர்: அஜீத்
6. நடிகை:
பிடித்தவர்: தமன்னா
பிடிக்காதவர்: த்ரிஷா
7 . இசையமைப்பாளர்:
பிடித்தவர்: How to name him? The one and only maestro!
பிடிக்காதவர்: இந்த நகை ஸ்டாண்ட் மாதிரி ஒருவர் வருவாரே சில்க் ஜிப்பா எல்லாம் போட்டுக் கொண்டு, (சங்கர்) கணேஷ்
8. பாடகர்:
பிடித்தவர்: ஹரிசரண்
பிடிக்காதவர்: ஷங்கர் மகாதேவன்
9. பாடகி:
பிடித்தவர்: என்றும் என்றென்றும், குரலிலும் குழந்தைச் சிரிப்பிலும் வசியப்படுத்தும் சித்ரா.. சித்ரா... சித்ரா
பிடிக்காதவர்: அனுராதா ஸ்ரீராம்
10. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: கிரிக்கெட் ஆடாத அனைத்து விளையாட்டுக் காரர்களும்
பிடிக்காதவர்: கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அனைவரும்! :)
ஆட்டத்தைத் தொடர நான் அன்புடன் அழைப்பது:
பி.கு: மன்னிக்கவும். விதிகளை எழுத மறந்து விட்டேன். விதிமுறைகளுக்குத் தொடரின் முதல் பதிவைப் பார்க்கவும்.