Friday, April 17, 2020

இந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை. - 1


”நான் ஏன் ஒரு இந்து அல்ல” நூலின் ஆசிரியர் இந்துத்துவப் போர்வையில் பவனிவரும் பார்ப்பனியத் தீவிரவாதத்தை தலித்தியம் மட்டுமே வலிமையாக எதிர்க்க முடியும் என்று நிறுவுகிறார்.

நேர்காணல் - யோகிந்தர் சிக்கந்த்

ஐதராபாத், கோட்டி மகளிர் கல்லூரியில் அரசியல் கற்பிக்கும் காஞ்சா அய்லயா அவர்கள் தலித்-பகுஜன் (பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர்) இயக்கங்களில் தீவிரமாக இயங்குபவர். தெலுங்கு மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் புலமை மிக்க எழுத்தாளர். இந்துத்துவத்தை, ஒரு தலித்-பகுஜன் பார்வையிலிருந்து விமர்சிக்கும் அவரது சமீபத்திய நூலான “நான் ஏன் இந்து அல்ல” மிகுந்த வரவேற்பைப் பெற்றது. யோகிந்தர் சிக்கந்துடனான இந்த நேர்காணலில், தலித்மயமாக்கல் மட்டுமே இந்துத்வப் போர்வையில் பவனிவரும் பார்ப்பனியத் தீவிரவாதத்தை வலிமையாக எதிர்க்க முடியும் என்ற தனது பார்வையில் கருத்துகளை முன்வைக்கிறார்.

யோகிந்தர் சிக்கந்த்: உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். எவ்வாறு இந்த தலித்-பகுஜன்களின் உரிமைப் போராட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்கள்?

காஞ்சா அய்லயா: ஆந்திராவிலுள்ள வாரங்கல் மாவட்டத்தின் ஒரு காட்டுப் பகுதி தான் எனது பிறப்பிடம். அந்தப் பிரதாசம் முழுவதுமே ஐதராபாத நிஜாம் மூலம் மஹபூப் ரெட்டி என்கிற வட்டார மிராசுதாருக்கு வழங்கப்பட்டிருந்தது.

எங்கள் குடும்பம் செம்மறியாடு மேய்க்கும் குரும கொல்லா சாதியைச் சேர்ந்தது. பல காலங்களுக்கு முன்பே வாரங்கல்லிலிருந்து சரியான காட்டுப் பகுதிக்குக் குடி பெயர்ந்தவர்கள். என் பாட்டி தான் கிராமத்தை அமைத்தார்கள்.   அவருக்குப் பின்பு எனது தாய் சாதித் தலைமைப் பொறுப்பை ஏற்றார்கள். 1948 காவல்துறை நடவடிக்கைக்குப் பின்பு மூன்று ஆண்டுகள் கழித்து நான் பிறந்தேன். கம்யூனிஸ்டுகள் எங்கள் பகுதியில் மிகத் தீவிரமாக இருந்த காலம் அது. தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் போது அவர்கள் எங்கள் ஊரில் இரண்டு பேரைக் கொன்றார்கள். இருவருமே பட்டேல் சாதியினர். இந்தப் போராட்டத்தினால் மகபூப் ரெட்டி நிலத்தைக் கூறு போட்டு விற்கத் தொடங்கினான். அதுவரை சொந்தமாக நிலமே இல்லாதிருந்த எங்கள் சாதியினர் சிறு சிறு துண்டு நிலங்களை வாங்கத் தொடங்கினோம். பண்ணையார் நடைமுறை கொஞ்ச கொஞ்சமாய் சிதையத் தொடங்கி இருந்த காலம் அது. பின்பு பள்ளியில் மார்க்சியவாதிகளுடன், மார்க்சிய இலக்கியத்தோடெல்லாம் தொடர்பு ஏற்பட்டு மாணவர் இயக்கங்களில் இணைந்தேன். சமூகநீதிக்கான போராட்டத்தில் அப்படித் தான் எனது பயணம் தொடங்கியது.

உங்கள் எண்ணங்களிலும் அரசியலிலும் மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியது யார் அல்லது எது?

நான் பிறந்த கிராமம் தான் என் வாழ்வில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு குழந்தையாக அந்தக் கிராமத்தில் வளர்ந்த நான் ஆடுகளின் இனப்பெருக்கம், நிலத்தை உழுவது, கயிறு திரிப்பது எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். ஆனால் மிக முக்கியமான கல்வியா என்னவென்றால் அங்கு நிலவிய பல்வேறு சாதிக்குழுக்களின் (குருமா, கப்பு, கௌடா, மடிகா) இடையிலான உறவும் வேறுபாடுகளும் தான். சாதிகளின் இயக்கம் குறித்த தனிப்பட்ட இந்த அனுபவ அறிவே எனது எல்லா எழுத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் மையமாக விளங்குகிறது.

எனது அம்மாவும் என் எண்ணங்களுக்கான பல விதைகளை ஊன்றியவர். மிகவும் திறன் வாய்ந்ததொரு வலிமையான பெண்; எங்கள் சாதித் தலைவராகவும் விளங்கியவர் அவர். தலித்-பகுஜன் குடும்பங்களில் பெண்களுக்கு முக்கியமான பங்கு இருக்கும்.
இயற்கையோடும் உற்பத்தித் திறனோடும் இயைந்த வாழ்க்கை முறையை ஒட்டி, ஒழுக்கநெறிகளை அவர்கள் தாமே தகவமைக்கிறார்கள். பார்ப்பன, சத்திரிய, பனியா இந்து சாதிகளில் இவ்வாறில்லை. அந்தக் குடும்பங்களில் பெண்கள் வயல்வெளிகளில் பணிபுரிவதில்லை. அவர்களது ஒழுக்கநெறிகள் அவர்களுக்கு வெளியிலிருந்து வந்தவை, பார்ப்பன ஏடுகளில் அதிகாரபூர்வமாய் விதிக்கப்பட்டவை.
குருமாக்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த வனக்காவல் அதிகாரிகளுக்கு எதிரான போராட்டத்தை என் அம்மா தான் முன் நின்று நடத்திச் சென்றார். அவர்களது ஆடுமாடுகளை வனப்பகுதியில் மேய்ப்பதைத் தடுக்கச் செய்தார்.
சொல்லப் போனால் அப்படியொரு போராட்டத்தில் தான் என் அம்மா இறந்து போனார். காவல்துறையினரின் அடக்குமுறையை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் ஒரு காவலரால் கொடூரமாய்த் தாக்கப்பட்டதில் இறந்தார் என் அம்மா. அப்போது அவருக்கு 46 வயது தான். என் தாயும் அவரது உரிமைப் போராட்டங்களும் என்று தெலுங்கில் அவர் குறித்த ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

அரசுக்கு எதிரான பெரிய போராட்டங்கள் மட்டுமல்ல, சாமானியர்களின் அன்றாட அல்லல்களும், எடுத்துக்காட்டாக, தன் குழந்தைகளைப் படிக்க வைக்க ஆணாதிக்கத்துக்கு எதிராகவும், விவசாயம் முதலான உற்பத்தியைப் பெருக்குவதற்கு இயற்கையோடும், பண்பாட்டு ரீதியாக சாதிக்கு எதிராகவும் ஒரு தாயின் தொடர் போராட்டங்களையும் நாம் கவனம் கொண்டே ஆக வேண்டும்.
பெரும்பாலான மார்க்சிய நூல்கள் பெரிய அளவிலான அரசியல் போராட்டங்கள், கட்சி சார்ந்த போராட்டங்கள், குறிப்பாக ஆண்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை மட்டுமே கணக்கில் எடுத்துள்ளன.

எனது எழுத்துக்களில் சாமானியர்கள், குறிப்பாகப் பெண்கள் சந்திக்க வேண்டி இருக்கும் நுட்பமான இந்தப் போராட்டங்கள் குறித்தும் பேசி இருக்கிறேன்.

தற்கால இந்துத்துவத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? தலித்-பகுஜன்களுக்கும் இந்துத்துவத்துக்கும் இடையிலான உறவு குறித்து உங்கள் கருத்து?

அண்ணல் அம்பேத்கர் சொன்னது போல், இந்துத்துவம் என்பது பார்ப்பனியமே அன்றி வேறில்லை. நீங்கள் அதனை இந்துத்துவம், ஆரிய தர்மம், சனாதன தர்மம், இந்துமதம் என்று என்ன பெயரிட்டு அழைத்தாலும் சரி, பார்ப்பனியத்துக்கும் தலித் பகுஜன்களின் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், உலகம் குறித்த பார்வைக்கும் அடிப்படையிலேயே எந்தத் தொடர்பும் கிடையாது.
ஒரே ஒரு எடுத்துக்காட்டைக் கூறுகிறேனே. என் குழந்தைப் பருவத்தில் நாங்கள் யாருமே இந்துக் கடவுள்களின் ஒரு பெயரைக் கூட அறிந்ததில்லை. பள்ளிக்குச் சென்ற போது தான்  முதன்முறையாக ராமன், விஷ்ணு ஆகிய பெயர்களை அறிந்தோம். எங்களுக்கென்று பொச்சம்மா, ஏலம்மா, வீரப்பா என்று கடவுளர்கள் இருந்தனர். இவர்களை மையப்படுத்தியே தான் எங்கள் பண்டிகைகள் இருந்தன; இந்துக் கடவுள்களை அல்ல. எங்கள் குலதெய்வ வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஆண்களும் பெண்களுமாய் நாங்கள் ஆடிப் பாடி மகிழ்வோம். ஆடுமாடுகளைப் பலியிட்டு மது குடித்துக் கொண்டாடுவோம்; இவை எல்லாம் இந்துக்களுக்கு ஒவ்வாத செயல்கள்.
எங்கள் தெய்வங்களுடனான உறவில் ஒரு கொடுக்கல் வாங்கல் பரிமாற்றமும் அது உற்பத்திச் செயல்முறைகளோடு இயைந்த நெறியோடும் இருக்கும். எடுத்துக்காட்டாக, எங்கள் தெய்வம் காட்டம்மா மெய்சாவின் பொறுப்பு குளம் கேணிகள் எல்லாம் நீர் நிறைந்தபடி அருள்வது. அவள் அதைச் செய்து விட்டால் அவளுக்கு நிறைய விலங்குகள் பலி கொடுக்கப்படும். ஏதாவது ஆண்டு குளம் கேணி எல்லாம் வற்றி விட்டால் அந்த ஆண்டு அவளுக்குப் பலி எதுவும் கிடையாது. அவளுக்கும் தலித்-பகுஜன் மக்களுக்கும் இடையிலான உறவில் இந்த உற்பத்திப் பணிகளே மையமாக விளங்கும்.

இதே போல, வீரப்பா என்பவர் குருமா மேய்ப்பர்களின் தெய்வம். ஆடுமாடுகளைக் காப்பதே அவரது பொறுப்பு. ஆடுமாடுகள் ஆரோக்கியமாக இருந்து இனப்பெருக்கம் சிறப்பாக இருந்தால் அவருக்கு நிறைய பலி கொடுக்கப்படும். நோய் நொடி தாக்கு நிறைய ஆடுமாடுகள் இறந்து போனால் பலி கிடையாது. ஆக, எங்கள் தெய்வங்களும் உற்பத்தியில் பங்கு பெறும் முக்கிய ஆளுமைகள். பார்ப்பனியக் கடவுள்களுக்கோ இப்படி எந்தப் பொறுப்பும் இல்லை. அவை வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டு சாஸ்த்திரங்களில் உறைந்து கிடக்கின்றன.

ஆகவே, தலித்-பகுஜன்களின் மதங்களும் பார்ப்பனியமும் எப்படி நேரெதிர் கோணங்களில், ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட சமய பண்பாட்டு வார்ப்புகளாய், முழுவதும் வேறுபட்ட மதங்களாய் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் பெருவாரியான தலித் சமூகங்களில் இந்துக் கடவுள்களைத் தங்கள் எதிரிகளாகக் கருதும் பண்பாடுகள் நிலவுகின்றன. ஆந்திரத்தில் மடிகர்க்கள் ஐந்து நாட்களுக்கு நீளும் ஒரு கூத்து நடத்துவார்கள். அதில் ஜம்பவண்டர் என்கிற மடிக வீரனும் பார்ப்பன பிரம்மாவும் சந்தித்து மிக நீண்ட உரையாடலை நிகழ்த்துவார்கள். விவாதத்தின் மையக்கரு மனித இனத்தின் உருவாக்கம். அனைத்து சாதிகளிலும் பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள் என்று பிரம்மா வாதிட, ஜம்பவண்டர், “இல்லை, நீ எங்கள் எதிரி” என்பார்.
பின்பு, பார்ப்பனர்கள் தனது தலையிலிருந்தும் சத்திரியர்கள் தோளிலிருந்தும், வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் பாதத்திலிருந்தும் பிறந்த கதையையும், பார்ப்பனர்களுக்கு சூத்திரர்கள் அடிமைகள் என்றும், இந்த நான்கு வர்ணங்களுக்கு வெளியே சாதியற்றவர்கள் தான் தலித்கள் என்றும் வேதம் சொல்லும் கதையைச் சொல்லுவார்.
ஆனால் ஜம்பவண்டர் இது கட்டுக் கதை என்று மறுப்பார். ’ப்ரக்ருதி’ (இயற்கை) தான் தன்னைப் படைத்ததாகவும், ‘சக்தி’ (பெண் சக்தி)யுடனான தனது இணைதலின் மூலம் பிறந்தவர்கள் தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கிற மும்மூர்த்திகளும் என்று வாதிடுவார்.
ஆனால் தன்னிடமிருந்தே பிறந்திருந்தாலும் நெறிபிறழ்ந்து போனதால் தான் மடிகர்கள் பார்ப்பனர்களைத் தங்களிடமிருந்து விலக்கியே வைத்திருப்பதாகவும் கூறுவார். பின்பு மடிகர்களின் வாழ்வு எப்படி பார்ப்பனியத்தைக் காட்டிலும் உயர்ந்தது என்பதை விளக்குகிறார். மரக்கறி உணவைக் காட்டிலும் மாட்டுக்கறி எவ்வாறு சிறந்ததென்றும், உடலுழைப்பின் மேன்மை குறித்தும், தோலினால் ஆன கைப்பொருட்கள் செய்வதும், செருப்பு தைப்பதும், அடுத்தவர் உழைப்ப அண்டிப் பிழைக்கும் கேவலமான பார்ப்பன வாழ்வை விட எவ்வளவு தூரம் உயர்ந்ததென்று வாதம் செய்வார். பிரம்மா பதிலேதும் கொடுக்க முடியாமல் தோற்றுப் போவார்.

பின்பு பிரம்மாவுக்கு என்ன ஆகும்?

அது தான் சுவாரசியம். அதாவது பாருங்கள். ஜம்பவண்டர் பிரம்மாவை வாதத்தில் வெல்கிறார்; கொலை புரிந்து அல்ல. தலித்-பகுஜன் பண்பாட்டில் எதிரியைக் கொல்வது என்பதே கிடையாது. பார்ப்பனியத்தின் மையக்கருவே எதிரியைக் கொன்று வீழ்த்துவது என்பதைத் தான் கீதை உள்ளிட்ட எந்தப் புராணக் கதையும் நமக்குத் தெளிவாக உணர்த்தும்.
எதிரியை உண்மையான அறிவார்ந்த வாதங்களினால் வெல்லும் தலித்-பகுஜன் பண்பாட்டைப் புத்தர் முதல் அம்பேத்கர் வரை நாம் காணலாம்.
எதிரியைத் தார்மீக ரீதியாக, தத்துவார்த்தமாய் உயர்ந்து நின்று வெல்ல வேண்டும் என்பதே இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

நீங்கள் சொல்லுவது என்னவென்றால், தலித்-பகுஜன் பண்பாடுகளைக் கொண்டு பார்ப்பனிய இந்துத்துவத்தைச் சிறப்பாக எதிர்க்க முடியும்; ஆனால் பார்ப்பனியம் அதனை எதிர்க்கும் எந்தக் கருத்தாகத்தையும் செரித்துத் தனதாக உரிமை கொண்டாடும் தன்மை வாய்ந்ததாயிற்றே.

வரலாற்றில் தலித்-பகுஜன்களின் சமயவழிபாட்டு முறைகள் பார்ப்பனியத்தின் தாக்கமின்றி சுதந்திரமாகச் செயல்பட்டிருந்தாலும் அவை ஒருங்கிணைத்து மையப்படுத்தப்படவில்லை; ஆவணமாக்கப் படவும் இல்லை. அந்த உள்ளூர்க் கடவுள்கள் எதுவுமே மைய நீரோட்டத்தில் புகுத்தப் படவோ அந்த மதங்களுக்குப் பொதுவான ஒரு பெயர் சூட்டப்படவோ இல்லை. ஏனென்றால் முன்பே குறிப்பிட்டதைப் போல இந்தக் கடவுளர்கல் எல்லாம் அந்தந்தப் பகுதியின் உற்பத்தி முறைகளுடனும் வாழ்க்கையுடனும் இயைந்திருந்தன. ஆனால், பார்ப்பனியம் இவ்வழிபாட்டு முறைகளில் சுத்தம், அசுத்தம், தீண்டாமை, உயர்வு தாழ்வு ஆகிய கருத்துகளைப் புகுத்தி, தலித்-பகுஜன் மக்களுக்கு இடையே கூட மாறுபாடுகளை ஏற்படத் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். இன்னொரு புறம் நமது பண்பாட்டு முறைகளை ‘அசுத்தமானவை’ என்று ஒட்டு மொத்தமாய் நிராகரிக்கிறார்கள்; அல்லது பார்ப்பனியப் படுத்தித் தமதாக்கிக் கொள்கிறார்கள்.

ஒழுங்கமைக்கப்பட்ட வேறொரு மதத்துக்கு மாறுவது ஒன்று தான் இந்தக் குழப்பத்துக்குத் தீர்வு என்று சொல்கிறீர்களா?

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் மூலம் சாதிய ஒடுக்குமுறையைச் சமூகத்தில் அமலாக்கம் செய்த பார்ப்பனிய இந்து மதத்துக்கு எதிரான போராட்டத்தில் தலித்-பகுஜன் மக்கள் பெருவாரியாக புத்த மதம், சீக்கிய மதம், இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதத்துக்கு மாறினார்கள்.
அந்த மதமாற்ற நடவடிக்கைகள் எல்லாமே சுயமரியாதையும் சமூக உரிமைகளும் பெற வேண்டி மேற்கொள்ளப்பட்ட போராட்ட வடிவங்கள் தாம். புத்தமதத் தழுவல் முழுவதுமே தலித்-பகுஜன்களின் போராட்டம் தான்.

புத்தர் சொல்வது போல், பல சிற்றாறுகள் பெரும்நதியில் கலந்து ஒன்றாவதைப் போல், பல்வேறு சாதிகளும் புத்தமதத்தில் சங்கமம் அடையும் போது வர்ணபேதமற்றுக் கடலில் கலக்கின்றன. புத்த மதத்தில் காணக் கிடைக்கும் இந்தச் சமத்துவக் கருத்துக்கு முற்றிலும் எதிரானது இந்து மதம்.
இந்து மதத்தை ஒரு எல்லாருக்குமான மதமாக, எல்லாருக்குமான சம சமூக உரிமைகள் கொண்ட மதமாகக் கருதவே முடியாது. இந்து மதம் என்பது சாதிய ஒடுக்குமுறைக்கு இன்னொரு பெயர், அவ்வளவு தான். ’இந்து மதம் ஒரு வாழ்வியல் முறை’ என்று எழுதுபவர்களுடன் எனக்குக் கடுமையான முரண்கள் உண்டு. நான் புரிந்தவரையில் தலித்-பகுஜன்களைச் சுரண்டும் ஒரு வழிமுறை தான் இந்து மதம்.
விஷயத்துக்கு வருவோம். இஸ்லாத்துக்கும் கிறித்தவத்துக்கும் மாறுவது பல தலித்-பகுஜன் மக்களுக்கு சமூக விடுதலை பெற ஒரு வழியாக இருந்தது. இடைக்கால வரலாற்றில் இஸ்லாத்தைத் தழுவுவதன் மூலம் முதன் முறையாக அரசியல் கட்டமைப்புக்குள் நுழைய சில தலித்-பகுஜன் மக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. சொல்லப் போனால் சூத்திரர்களின் எழுச்சியே இந்தக் காலகட்டத்தில் தான் நடந்தது. அக்பர் ஆட்சியில் இடஒதுக்கீடு போன்றதொரு அடிப்படையில் அடி வடக்கே ஜட் வகுப்பினருக்கும் ஆந்திரத்தில் ரெட்டி சாதியினருக்கும் நிலங்கள் ஒதுக்கப்பட்டது. அக்பருக்கு முந்தைய காலத்தில் எந்தச் சூத்திரர்களும் பெரும் நிலவுடமையாளர்களாக இருந்ததைக் காண முடியாது.

இந்து மன்னர்கள் ஆட்சி செய்த போது முற்றிலும் அக்கிரஹார அடிப்படையில் மிகப்பெரிய நிலப்பகுதிகளைப் பார்ப்பனர்களுக்கு வாரி வாரி வழங்கியதை அறியலாம். காலனி ஆட்சியின் போது மிகப்பெரியப் பொருளாதாரச் சூறையாடல் நடந்தது உண்மை தான். ஆனால் கிறித்துவ மிஷினரிகள் தலித்- பகுஜன் மக்களின் கல்விக்கும், பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கும் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறார்கள்.
இஸ்லாத்துக்கோ கிறித்தவத்துக்கோ மாறாத பல பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இன்று அல்லலுறுவதற்கு முக்கியக் காரணம், அவர்களிடையே கல்வியறிவு மேம்பட்ட ஒருவர் கூட இல்லாதது தான்.

இன்றைய காலகட்டத்தில் மதமாற்றத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், தலித்-பகுஜன் உரிமை இயக்கங்கள் அம்மக்களை அரசு அதிகாரத்தை நோக்கிச் செலுத்தி, அரசியல் ரீதியாகச் செல்வாக்கான இடங்களில் அமரவைக்கத் தவறினால், படித்த தலித்-பகுஜன் மக்கள் பெருவாரியாக மதமாற்றத்தையே தங்கள் அணிதிரட்டலுக்கும் போராட்டத்துக்குமான கருவியாகக் கையிலெடுப்பார்கள்.

இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் அரக்கமயமாக்கும் இந்துத்துவப் பரப்புரைகள் குறித்து உங்கள் கருத்து?

பார்ப்பனியத்துக்கு உண்மையான அச்சுறுத்தல் இஸ்லாமியர்களோ கிறித்தவர்களோ அல்ல, பார்ப்ப்னிய மேலாண்மையை மறுதலித்து தலித்-பகுஜன் மக்களிடையே வளர்ந்து வரும் விழிப்புணர்வு தான். ஆகவே தான் இம்மக்களின் கோப உணர்ச்சியை வஞ்சகமாய், போலியாய்க் கட்டமைக்கப் பட்ட எதிரிகளான இஸ்லாமியர் மீதும் கிறித்துவர்கள் மீதும் மடைமாற்றி விடுகிறார்கள்.

தலித்-பகுஜன் – இஸ்லாமியர்கள் ஒற்றுமை குறித்து நிறைய பேசப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

தலித்-பகுஜன் மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள், குறிப்பாக இஸ்லாமியர்களில் பெரும்பங்கான உள்நாட்டில் மதம்மாறியவர்கள் - இவர்களிடையே பண்பாட்டு ரீதியாக ஏராளமான ஒற்றுமைகள் இருப்பதை நாம் நினைவில் கொள்வது இன்றியமையாதது.
இந்துக்களுக்கு மாறாக, இவ்விரு சாராருமே மாமிசம் சாப்பிடும் பண்பாடு உடையவர்கள். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிகப் பெரிய அளவில் நமது சமூக அந்தஸ்தைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில் இது மிக முக்கியமான அம்சமாகிறது. அந்தக் கோணத்தில் பார்க்கும் போது இஸ்லாம் சமூகத்தில் சமத்துவத்தை நிறுவுகிறது. தீண்டாமை என்கிற உணர்வே மறைந்து போய் விடுகிறது.
கைகூப்பி முகமன் கூறும் இந்துக்களின் ’நமஸ்காரம்’ எனும் சிறிய விஷயத்தை எடுத்துக் கொள்வோமே. இது மிகவும் வலிமை அழுத்தமானதொரு குறியீடு. ’நான் உன்னை அடையாளம் காண்கிறேன், ஆனால் நீ என்னைத் தொடலாகாது’ என்பதைத் தான் இது குறிக்கிறது. இதற்கு மாறாக, கிறித்துவர்கள் கை குலுக்குவதன் மூலம் ஒரு தொடுகை உறவை அறிமுகம் செய்கிறார்கள். இஸ்லாமியர்களோ இன்னும் ஒரு படி மேலே போய் ஆரத்தழுவுகிறார்கள். இன்னும் கிராமப்புறங்களில் இஸ்லாமியர்கள் மட்டுமே தலித்-பகுஜன் மக்களை ஆரத் தழுவிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள்.
பார்ப்பனர்களோ பனியாக்களோ தங்களை யாரும் தொடவே அனுமதிப்பதில்லை என்பது வேறு விஷயம்.
ஆனால் பார்ப்பனியத்தின் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தலித்-பகுஜன் மக்களுக்கு, இப்படிக் கட்டித் தழுவப்படுவது என்பதே மிகப் பெரிய விடுதலையின் குறியீடாகி விடுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கும் தலித்-பகுஜன்களுக்குமிடையே ஏராளமான பகிர்தல்கள் உண்டு. ஏராளமான தலித்-பகுஜன் மக்கள் முகர்ரம் பண்டிகைகளில் கலந்து கொள்கிறார்கள்; சுஃபி  தர்காக்களுக்குச் செல்கிறார்கள். மேலும் உற்பத்தி மற்றும் விவசாயச் செயல்பாடுகளில் குடியானவர்களாகவும், விவசாயக் கூலிகளாகவும், செருப்பு தைப்பவர்களாகவும், நெசவாளர்களாகவும் தலித்-பகுஜன் மக்களும் இஸ்லாமியர்களும் ஏறக்குறைய சமமான இடத்தில் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பொதுவானதொரு பண்பாட்டில் தான் வாழ்கிறார்கள்.

ஆனால் இந்தப் பண்பாட்டு ஒற்றுமைகளும் சமத்துவங்களும் மட்டும் தலித்-பகுஜன்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே அரசியல் ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தப் போதுமானதாய் இருக்குமா?

என் கருத்து என்னவென்றால் நாம் இந்தப் பண்பாட்டு ஒற்றுமைகளை விரைந்து ஆராய்ந்து விரிவு படுத்துவதன் மூலம் தான் அதன் அடிப்படையில் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். பார்ப்பனியமும் இந்துத்துவமும் இந்த ஒற்றுமைகளை நிராகரித்து, வேறுபாடுகளை மட்டுமே தூக்கிப் பிடிக்கிறது. இதற்கு மாறாக நாம் ஒற்றுமைக்குரிய அம்சங்களின் மீது கவனம் செலுத்தி இந்த ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையின் மூலம் அரசியலில் ஒருங்கிணைக்க வேண்டும்.
பிழையான நமது மேலைநாட்டு மார்க்சியச் சிந்தனையின் வாயிலாக நாம் அரசியல் ஒற்றுமையிலிருந்து தொடங்குகிறோம். முறையான பண்பாட்டுப் பின்னணியை ஏற்படுத்தாமல் இஸ்லாமியர்களையும் தலித்-பகுஜன்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்குகிறோம். அந்த முயற்சிகள் தோல்வியுறும் போது சோர்ந்து கைவிடுகிறோம். இது சரியான முறை அல்ல. பண்பாட்டு ரீதியாகவும் உற்பத்திச் செயல்பாட்டின் ரீதியாகவும் ஒருங்கிணைக்கக் கூடிய இடங்களைக் கண்டறிந்து, தலித்-பகுஜன்களையும் இஸ்லாமியர்களையும் பொருளாதார ரீதியாகச் சமமான இடங்களை அடையக் கூடிய வழிகளை ஏற்படுத்த வேண்டும். பண்பாட்டு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டு விட்டால் தானாகவே அரசியல் ஒற்றுமை எளிதில் வசப்பட்டு விடும்.

(2 ஆம் பாகம் தொடரும்)


ஆங்கில இதழ் அவுட்லுக்குக்கு காஞ்சா அய்லயா அளித்த நேர்காணலின் தமிழாக்கம். 




 -  தீபலட்சுமி

No comments: