Tuesday, September 8, 2009

ஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு!

இந்தப் பதிவு எழுத அழைத்த முல்லைக்கு நன்றி சொல்வதா வேண்டாமா என்று முதலில் யோசித்தேன்!
:-)

பதிவுலகம் பற்றி யோசித்த போது...

”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
என்ற குறள் நினைவுக்கு வந்தது. அதன்படி பதிவுலகம் மூலம் நான் அடைந்த நன்மைகளையும் எண்ணற்ற இனிய அனுபவங்களையும் பகிரப் போகிறேன். :-)

பிளாக்கர் என்று ஒரு விஷயத்தை 2004 இல் அறிந்தேன். அதைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது, ஆர்வமும் இருக்கவில்லை.

2006 நவம்பரில் ஆங்கிலத்தில் ஒரு பிளாக் தொடங்கினேன். அதில் அவ்வப்போது தோன்றினால் ஏதாவது கிறுக்கி வைப்பேன்.
ஒரு பப்ளிக்கான டைரி போல் இருந்தது அது.
நண்பர்கள் யாராவது படித்து விட்டு கருத்து கூறுவார்கள். ஆனாலும் விடாமல் எழுதிக் கொண்டு தான் இருந்தேன். திரட்டிகள் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது.

பின்பு செப்டம்பர் 2008 – ல் மாதவராஜ் அங்கிள் தமிழில் வலைப்பூ துவங்கினார். ஜெட் வேகத்தில் தமிழ்ப் பதிவுலகம் பற்றி எல்லா நுணுக்கங்களையும், தகவல்களையும் தெரிந்து கொண்டதோடு இந்த அசமஞ்சத்துக்கும் (நான் தான்!) தெரிவித்து உதவினார். தமிழிலும் எழுதுமாறு என்னிடம் சொல்லி வந்தார்.

அக்டோபர் மாதத்தில் நானும் தமிழில் வலைப்பூ தொடங்கி அதற்கு ”உள்ளுவதெல்லாம்” என்று முதலில் பெயரிட்டேன்.

’உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற வள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப இருக்கவேண்டும் என்று உள்ளினேன்!
பின்பு பெயர் இன்னும் எளிமையாக இருந்தால் நல்லதென்று தோன்றியதால் “சிதறல்கள்” என்று மாற்றி விட்டேன்.

முதலில் கோபி தமிழ் கன்வெர்டர் பயன்படுத்திக் கொண்டிருந்தேன் பின்பு NHM writer பற்றிச் சொன்னவரும் அங்கிள் தான். வெகு நாள் ரொம்ப எழுதாமல் படித்துக் கொண்டு மட்டும் இருந்தேன். அங்கிள் பக்கத்தில் மட்டும் பின்னூட்டம் போடுவேன்.

ஏதாவது எழுதலாம் என்று ’உட்கார்ந்து யோசித்தால்’ ஒன்றுமே தோன்றாது. யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும் போது, குருட்டு யோசனையுடன் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது (குறிப்பாகப் பாத்திரங்கள் துலக்கும் போது!) ஏதாவது தோன்றும். அதையொட்டி இதைப் பதிவு எழுதலாமே என்றும் தோன்றும். பின்பு தொடர்ந்து கொஞ்சம் குறிப்புகள் யோசித்து விட்டு நேஹா உறங்கிய பின்னோ அவள் அப்பாவிடம் விளையாடிக் கொண்டிருக்கும் போதோ கணினியைத் தட்ட வந்து விடுவேன்! சில நாள் அவளை மடியில் வைத்தபடியே.

சின்னச் சின்னக் குழந்தைகளின் அம்மாக்கள் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் மழலையையும் கவிதையாகப் பதிப்பதைப் படித்துக் கிறங்கிப் போவேன்.
அவற்றில் எல்லாம் நானும் நேஹாவைக் காண்பதால் நேஹாவைப் பற்றி தனியாக நான் அதிகம் எழுதியதில்லை.

மார்ச், ஏப்ரல் 2009 முதல் தான் முழு ஆர்வத்துடன் எழுதத் தொடங்கினேன். பின்னூட்டம் மூலமாகப் பலரும் அறிமுகமாகினர். தமிழும் தமிழை நேசிப்பவர்களும் பதிவுகள் மூலம் பரவசமானதொரு வாசிப்பனுபவத்தை அள்ளி அள்ளி வழங்குவதைப் பார்த்துப் பிரமித்தேன்; பூரித்தேன்.

பலரது பதிவுகளைப் படித்து ரசிக்கத் தொடங்கினேன். வெளிப்படையாக மனம் திறந்து என் ரசனையையும், மகிழ்ச்சியையும் பின்னுட்டமாக இடத் தொடங்கினேன். நண்பர் வட்டம் விரிந்தது.

மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு அதைப் பற்றி இந்தப் பதிவு கூட எழுதினேன்! - தூக்கம் இழுக்கும் கண்களுக்குள்

எச்சரிக்கையும் நிதானமும் வாழ்வின் எல்லா சமயங்களிலும் கடைப் பிடிக்கவேண்டும் என்பதையும்; அதுவும் பெண்களிடம் சமூகம் அதைக் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளப் பதிவுலகம் ஒரு சின்ன வாய்ப்பை வழங்கியது. அதையும் நன்றியுடனே நினைத்துப் பார்க்கிறேன்.

தாய்மையும் குழந்தை வளர்ப்பும் ஒரு அலாதியான அனுபவம் என்றாலும் புறவாழ்க்கை என்பது ரொம்பக் குறைந்து போன இந்த ஓராண்டில் என் எண்ணங்களுக்கு வடிகாலையும் சஹிருதயர்கள் பலருடன் பழகி அளவளாவும் வாய்ப்பையும் வழங்கிய பதிவுலகத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாமல் எதையாவது எழுதலாம் என்ற ஊக்கத்தைக் கொடுத்தது, (சிறுகதை என்ற பெயரில் உங்களைப் படுத்தியது உட்பட) பதிவுலகம் தான்.

அது போலவே என் பக்கத்தைத் தொடரும் அன்புள்ளங்களுக்கும் தொடர்ந்து பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தும் நெஞ்சங்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிக்க விழைகிறேன்.

தொடர்ந்து நான் இணைத்து வரும் தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் திரட்டிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என் அனுபவங்களைப் பகிர அழைத்த முல்லைக்கும் மீண்டும் என் நன்றி.

இப்போது நான் அழைக்க விரும்பும் நால்வர்:

காமராஜ் அங்கிள்
அமுதா
அமிர்தவர்ஷினி அம்மா
அய்யனார்

இத்தொடர் பதிவின் விதிமுறைகளுக்கு முல்லையின் பதிவைப் பார்க்கவும்.

21 comments:

நாஞ்சில் நாதம் said...

இந்த தலைப்பு நல்லாயிருக்கு. சின்ன வயசுல ஆறு தென் வரலாறு கூறுவது மாதிரி ஒரு கட்டுரை எழுதின ஞாபகம். :)
:)
:)
:)
:)
:)
:)
:)
:)

ஈரோடு கதிர் said...

குருட்டு யோசனையுடன் வேலை = பாத்திரங்கள் துலக்கும் போது..

இஃகிஃகி


//கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாமல் எதையாவது எழுதலாம் என்ற ஊக்கத்தைக் கொடுத்தது,//

சரியாகச் சொன்னீர்கள்

வாழ்த்துகள் தீபா

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு தீபா...! நல்ல முன்னேற்றம் என்றும் கூட தோன்றுகிறது துவக்க கால எழுத்துக்களை வாசிக்கும்போது...

Radhakrishnan said...

எழுத்து வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்த விதம் மிகவும் அருமை.

மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

இந்த வரலாறு ஒரு மாபெரும் காவியங்களாக உருவாகட்டும்.

க.பாலாசி said...

அழகான ஒரு அனுபவப்பதிவு...

கிட்டத்தட்ட எல்லோருமே ஏதாவதொரு தூண்டுகோலினால்தான் எழுதவே ஆரம்பிக்கிறோம்...உங்களது எழுத்துப்பயணமும் அதுபோலவே அமைந்துள்ளது...

நிறைய எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பகிர்வு தீபா. தயக்கமில்லாமல் எழுத முடிகிறது என்பது பதிவெழுவதன் நன்மையே. பதிவிற்கான கரு பெரும்பாலும் ஏதாவது செய்து கொண்டிருக்கும் பொழுது தோன்றுவது வேடிக்கையானதே :-)

☀நான் ஆதவன்☀ said...

அனுபவத்தை பகிர்ந்த விதம் நன்றாக இருக்கிறது :)

மாதவராஜ் said...

சுருக்கமான வரலாறு...! ஆனால் தெளிவாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

கைக்குழந்தையை வைத்துக்கொண்டு உன்னால் இவ்வளவு எழுத முடிவது எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது. இந்தக் காலங்கள் அற்புதமான அனுபவங்களாய் உனக்குள் ஓடிக்கொண்டு இருக்கும். அது வெளிப்படும்போது இன்னும் சிறப்பான எழுத்துக்கள் உன்னிடமிருந்து வெளிவரும்.

சரி... அதென்ன ஆறு தன் வரலாறு கூறுதல்...! எல்லா ஆறுகளும், வலையுலகம் என்னும் கடலில் கலப்பதாலா..!

Deepa said...

நன்றி நாஞ்சில் நாதம்!
சிரிப்பான் போட்டால் தான் நீங்கள் என்று நம்புவோம். :-) உங்களுக்கு அடையாள எண்ணே தேவையில்லை.

நன்றி கதிர்!

//இஃகிஃகி// நல்ல சிரிப்பு!

வாருங்கள் நேசமித்ரன்!
ஊக்கத்துக்கு மிக்க நன்றி

ரொம்ப நன்றி இராதாகிருஷ்ணன்!
பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள்! :)

நன்றி பாலாஜி!

நன்றி செந்தில்வேலன்!

நன்றி நான் ஆதவன்!

நன்றி அங்கிள்!

//எல்லா ஆறுகளும், வலையுலகம் என்னும் கடலில் கலப்பதாலா..!//
அப்படித்தான் இருக்க வேண்டும்! :)

சந்தனமுல்லை said...

தீபா, தெளிவாக அழகாக ஓடுகிறது ஆறு, தங்குதடையில்லாமல்! ஒன்றரை வயதுக்குழந்தையை வைத்துக்கொண்டு இவ்வளவு எழுதுவது சாதாரணம் கிடையாது!! எனது பழைய இடுகைகளின் கணக்கை நினைத்துக் கொள்கிறேன்...ஹிஹி!!தங்களது தளராத முயற்சியும், திடமும் வியக்க வைக்கிறது! you are rocking!! தொடர்ந்து எழுதுங்கள்!!

‘பதிவெழுத வந்த கதை' தான் இந்தத் தொடர் விளையாட்டின் தலைப்பு! வித்தியாசமாக இருக்கட்டுமேயென்று அதை 'ஆறு தன் வரலாறு கூறுதல்' என்று மாற்றினேன்! :-)

Deepa said...

மிக்க நன்றி முல்லை!

உங்கள் பதிவுகளில் பல சும்மாவே தொடர்பதிவு எழுதும் அளவுக்கு என்னை inspire செய்யும். நீங்களாக இதற்கு அழைத்தது கூடுதல் மகிழ்ச்சி.

அப்புறம், உங்கள் பாணியில் அழகான பெயர் மாற்றம். பதிவர்களுக்குப் பொருத்தம் தான். :-)

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல பகிர்வுங்க...

//ஏதாவது எழுதலாம் என்று ’உட்கார்ந்து யோசித்தால்’ ஒன்றுமே தோன்றாது. யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும் போது, குருட்டு யோசனையுடன் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது (குறிப்பாகப் பாத்திரங்கள் துலக்கும் போது!) ஏதாவது தோன்றும். அதையொட்டி இதைப் பதிவு எழுதலாமே என்றும் தோன்றும். //

இது எல்லாருக்கும் தோணுற உண்மையும் கூட......

Starjan (ஸ்டார்ஜன்) said...

உங்களைப் பத்தி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி

அமிர்தவர்ஷினி அம்மா said...

குருட்டு யோசனையுடன் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது (குறிப்பாகப் பாத்திரங்கள் துலக்கும் போது!) ஏதாவது தோன்றும்.

ரொம்ப எளிமையா சொல்லியிருக்கீங்க, ஆனா நீங்க எவ்வளவு அருமையா மொழிபெயர்த்து எழுதறீங்க.

அவற்றில் எல்லாம் நானும் நேஹாவைக் காண்பதால் நேஹாவைப் பற்றி தனியாக நான் அதிகம் எழுதியதில்லை.
!! :)))

அழைப்புக்கு நன்றி

Deepa said...

நன்றி அமித்து அம்மா!

ஆமாம், மொழிபெயர்ப்புக்கு மெனக்கெட்டு நேரம் ஒதுக்கித் தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Ayyanar Viswanath said...

அழைப்பிற்கு நன்றி தீபா

அமுதா said...

மிகத் தெளிவாக அழகாக கூறியுள்ளீர்கள். எனக்கு உங்கள் எழுத்து நடை, கருத்து மிகவும் பிடிக்கும். "சிதறல்கள்" என்ற பெயரும் மிகவும் ஈர்த்தது. மேலும் பல நல்ல இடுகைகளை வழங்க வாழ்த்துக்கள்

அமுதா said...

அழைப்புக்கு நன்றி. விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்...

காமராஜ் said...

அன்புக்கு நன்றி தீபா.
இன்று அதிகாலை தான் வந்தேன்.
தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு மீண்டும்
நன்றி.

தமிழ்நதி said...

மிக இயல்பான பகிர்வு. இந்தப் பதிவின் வழியாக உங்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. நிறைய எழுதுங்கள் தீபா... உங்களுக்கானது இந்தக் காலம். வெற்றிகொள்ளப்படவே காத்திருக்கிறது உலகம். குழந்தை வளர்ப்புடன் உங்களையும் கவனித்துக்கொள்வது சந்தோசமாக இருக்கிறது. சுயம் என்பதை எந்த நிலையிலும் தொலைக்காதிருப்பது மட்டுமே எங்களைப் போன்ற பெண்களின் இருப்பினைப் பலப்படுத்தும்.