Saturday, April 18, 2020

இந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா


தலித்-பகுஜன் மக்களின் ஆன்மிக உணர்வுக்கு இந்த முயற்சிகளில் என்ன பங்கு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

முதலில், பார்ப்பனியம் மிகவும் அச்சுறுத்துவது தலித்-பகுஜன் மக்களின் அரசியல் ரீதியான சவால்களை விட அவர்களது எண்ணவோட்டமே ஆகும். எத்தனை ஏகலவ்யர்களையும் சம்புகர்களையும் வேண்டுமானால் பார்ப்பனியம் நயவஞ்சகமாய்த் திரிக்கவோ கொல்லவோ பார்ப்பனியத்தால் முடியும்; ஆனால் அம்பேத்கரின் சிந்தனையை எதிர்கொள்ள ஒருபோதும் முடியாது. என்னைச் சதி செய்து கொன்று விட முடியும் ஆனால் “நான் ஏன் இந்து அல்ல” என்கிற எனது நூலை பார்ப்பனியத்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இந்தப் பண்பாட்டுத் தளத்தில் தான் தலித்-பகுஜன் அறிவாளர்கள் செய்யக் கூடிய பணி ஏராளமாய் இருக்கிறது.
பார்ப்பனியத்தினின்று முற்றிலும் மாறுபட்டு, உற்பத்தியோடும் பொருளாதாரத்தோடும், உழைப்பின் மேன்மையோடும் பிணைந்த நமது வரலாறுகள், பண்பாடுகள், பாரம்பரியங்கள், சமயங்கள், அறிவு அமைப்புகள் யாவற்றையும் நாம் மீட்டெடுத்துப் புத்துயிர் கொடுக்க வேண்டும்.  

ஆனால் நீங்கள் தலித்-பகுஜன் பாரம்பரியங்கள் மாறாமல் உறைந்து விட்டது போல் கருதுகிறீர்களோ? அவை அனைத்தும் பார்ப்பனியத்துக்குப் பலியாகி இருக்குமே.

இரண்டு புறமும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். பல்வேறு பார்ப்பனிய வழிபாட்டு முறைகள் தலித்மயமாக்கப் பட்டிருப்பது பற்றி எதுவும் எழுதப்படவில்லை.
எடுத்துக்காட்டாக, விநாயகர் சதுர்த்தி கொண்டாடாங்கள் ஒரு காலத்தில் பார்ப்பனப் பூசாரியைச் சுற்றி மட்டுமே நடக்கும். ஆனால் இக்காலத்தில் விநாயகர் ஊர்வலத்தைப் பெரிதும் கொண்டாடுபவர்கள் தலித்-பகுஜன் மக்கள் தாம். மேலும் இந்த விழா தற்போது பாரம்பரிய பார்ப்பனிய ரீதியில் நடப்பதே இல்லை.  தலித்மயமாக்கப்பட்ட விநாயகர் திருவிழாக்களில் ஆடல், பாடல், குடி, சினிமாப்பாட்டு எல்லாம் இடம் பெற்று விட்டன.

இன்னொரு எடுத்துக்காட்டாக, சில தலித்-பகுஜன் மக்கள் கோயில்களில் சம்ஸ்கிருதத்துக்குப் பதிலாக மக்களின் வட்டார மொழியிலேயே வழிபாடுகள் அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதில் எத்தனை மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், பார்ப்பனியத்தை அதன் அமைப்புக்குள்ளேயே சென்று எதிர்க்கும் ஒரு வழி தான் இது. இப்படியான தலித்மயமாக்கல் வழிகளின் மூலம் தாம் பார்ப்பனியத்தைத் தகர்த்தெறிய முடியும்.

இந்தத் தலித்மயமாக்கல் எல்லாத் தளங்களிலும் நிகழ்வதாகக் கருதுகிறீர்களா?

ஆம், எல்லாப் புறங்களிலும் தலித்மயமாக்கல் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு பார்ப்பன மருத்துவர் தலித் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முன்வருவதும், பார்ப்பனப் பெண் ஒருவர் தனது கணவரை மணமுறிவு செய்து விட்டுப் பொதுவெளியில் குடிப்பதும் புகைப்பதும், கணவரை இழந்த பார்ப்பனப் பெண் மறுமணம் புரிவதும், எல்லாமே தலித்மயமாக்கலின் விளைவுகள் தாம்.
குடிப்பதும் புகைப்பதும் மறுமணம் புரிவதும் பார்ப்பனப் பெண்களுக்குப் பிரச்னையாக இருப்பதைப் போல் எப்போதும் தலித்-பகுஜன் பெண்களுக்கு இருந்ததில்லை என்பதை  நினைவில் கொள்ள வேண்டும். ஆக இதெல்லாம் தலித்மயமாக்கல் தான்.

எம்.என்.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பார்ப்பனிய சமூகவியலாளர்கள் இந்தியா சமஸ்கிருதமயமாகிறது என்கிற பரப்புரையைச் செய்வதன் மூலம் பார்ப்பனிய ஆதிக்கத்தை வலிமையாக்க முயல்கிறார்கள். ஆனால் பார்ப்பனப் பெண்களிடம் திடீரென்று அதிகரித்திருக்கும் இந்தக் குடி புகை பழக்கத்தைப் பற்றி நாங்கள் கேட்ட போது அது மேலைநாட்டு அதிக்கம் என்று பதிலளித்தார்கள். ஆனால் அது நிச்சயம் தலித்மயமாக்கல் தான். ஆனால் அவர்கள் நிச்சயம் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனென்றால் தலித்-பகுஜன் மக்களிடமிருந்து மற்றவர்கள் வாழ்வு முறைகளைக் கற்கிறார்கள் என்பதை அங்கீகரிக்க அவர்கள் தயாரில்லை.

எனது கருத்து மிக எளிமையானது. இந்தியா தலித்மயமாகிக் கொண்டு வருகிறது என்பதைச் சொல்லிக் கொண்டே இருந்தால் பார்ப்பனியம் தானாகவே செத்து ஒழிந்து விடும். ஆனால் இந்தியா இந்துமயமானது என்று கூவிக் கொண்டே இருந்தால் பார்ப்பனியம் வலிமை பெறும். பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இந்தியா இந்துமயமாகிறது என்கிற கருத்தைத் திணிக்க ஏகப்பட்ட நூல்கள் எழுதப்பட்டன. ஆனால் 1956இல் இலட்சக்கணக்கான தலித் மக்கள்  புத்தமதத்தைத் தழுவிய போது இந்த வரலாற்றாளர்களும் சமூகவியலாளர்களும் எங்கு போயினர்?
இந்தியா புத்தமயமாகிறது என்றோ தலித்மயமாகிறது என்றோ அவர்கள் அப்போது ஏன் சொல்லவில்லை? அப்படிச் சொல்லத் தலைப்பட்டிருந்தால் இன்று வரலாறு முற்றிலும் வேறு மாதிரி ஆகியிருக்கும். ஆகவே தான் கூறுகிறேன். வரலாற்றை தலித்கள் பார்வையில் இருந்து எழுதுங்கள். இந்துமயமும் பார்ப்பனியமும் வரலாற்று ரீதியாகப் பயனற்றவை, நமது சமூக அமைப்பை அழுத்திக் கொண்டிருந்க்கும் தேவையற்ற சுமைகள், உழைப்பு முதலான அனைத்துச் சுரண்டல்களையும் நியாயப்படுத்தும் கருவிகள்.
மாறாக தலித்மயமாக்கல் என்பது வரலாற்று ரீதியாக உற்பத்தியையும் பொருளாதார மேம்பாட்டையும் மையமாகக் கொண்டது, படைப்பாற்றல் நிறைந்தது; ஆக்கபூர்வமானது; உழைப்பின் மேன்மையில் வேரூன்றியது.

தலித்-பகுஜன்களை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டு இந்திய வரலாற்றைத் திருத்தி எழுதும் செயல்திட்டத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நேர்மையாகச் சொல்லப் போனால், ‘சோக காவியமாக’ தலித்-பகுஜன் மக்களுக்குப் பார்ப்பனியத்தால் நேர்ந்த ஒடுக்குமுறையையும் சிரமங்களையும் மட்டும் விவரித்து  எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை; அந்த விவரங்களை முற்றிலும் ஒதுக்குவதற்கு இல்லை என்றாலும் கூட. ஆனால் நம் அழுகுரல் அதிகமாகும் போது எதிரிகள் நம்மை அடிப்பதில் வீரியம் காட்டுவார்கள். எதிரியை வீழ்த்துவதற்கு அவர்களை விமர்சித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது; அது நாம் எப்படிச் செயல்பட் வேண்டுமெ என்று நமது எதிரியையே தீர்மானிக்க விடும்படி ஆகிவிடும். அவர்களது விதிகளின் படியே நாம் ஆடிக் கொண்டிருக்க நேரிட்டால் இறுதியாக நாம் வெற்றியடைய முடியாது.

ஆகவே, வரலாற்று ரீதியாய் நாம் அவதிக்குள்ளான ஒடுக்குமுறைகளையும் இந்து பாசிசத்தின் பயங்கரங்களிலும் மட்டுமே உழன்று கொண்டிருக்காமல் தலித்மயமாக்கலில் கவனத்தைச் செலுத்துவோம். அப்படியாக கருத்தாடலுக்கும், விவாதங்களுக்கமான களத்தை நாம் தீர்மானிப்போம். செயலாற்ற ஏதுவாகவும் சிறந்ததுமானதொரு தலித்-பகுஜன் வாழ்வு முறையை நாம் ஏற்படுத்தி வழங்க வேண்டும். அப்படிச் செய்யாமல் சும்மா பார்ப்பனியத்தை விமர்சிக்கிறோம் என்று  அவர்களது சுலோகங்களை மேற்கோள் காட்டி அதில் குறைகளைச் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தால், அவர்கள் மாறாக ஏதாவதொரு சுலோகத்தைக் காட்டி நம் வாதத்தை முறியடித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் தலித் பார்வையிலிருந்து கருத்துகளை முன்வைத்தால் நீங்கள் சொல்லவருவதை முறியடிக்க அவர்களிடம் வார்த்தைகளே இருக்காது. இந்தப் பணிக்கு மையப்பொருளே தலித்-பகுஜன் வரலாற்றை மீட்டு எழுதுவது தான். எடுத்துக்காட்டாக, அவர்களது உற்பத்தி முறைகள், அறிவு அமைப்புகள், பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் தலித்-பகுஜன் மக்களின் அளப்பரிய பங்கு, மேலும் ஆன்மிக ரீதியாகவும் ஆணை விடப் பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உயர்வான இடம் ஆகியவை.
சதியும் வரதட்சணையும் வரலாற்று ரீதியாக இந்துக்களின் பிரச்னையாக இருந்ததே ஒழிய ஒரு போதும் நம்முடையதாக இல்லை. ஆகவே இந்தப் புதிய வரலாறு தலித் பெருமையுடன் எழுதி வெளியிடப்பட வேண்டும்.

நமது இன்னல்களுக்கெல்லாம் தீர்வு தலித்மயமாக்கல் தானே ஒழிய இந்துமயமாக்கல் அல்ல என்பதை ஆணித்தரமாக நிறுவ வேண்டும். பார்ப்பனியத்தைப் போல் எழுதிவைத்த ஏடுகள் மூலமாக அல்ல, நிதர்சன வாழ்விலிருந்து நாம் எடுத்துக்காட்டுகளோடு, மனிதவளத்தோடும் மனிதத்தோடும் இதை நாம் செய்ய முடியும். தலித்மயமாக்கலை உயர்ந்த மாற்றாக வழங்காமல் நாம் இந்தப் போரை வெல்ல முடியாது.
புத்தரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரது முக்கியமான பங்களிப்பு பார்ப்பனியத்தின் மீதான விமர்சனம் அல்ல. பார்ப்பனியச் சாதிய சமூகத்தைக் காட்டிலும் உயர்ந்த மாற்றாக சங்கம் மீதான நம்பிக்கையுள்ள, சமத்துவச் சமூகத்தை நிறுவியது தான். அவரது மேன்மை பார்ப்பனியத்தை விமர்சித்ததில் அல்ல, அதைக் காட்டிலும் பன்மடங்கு மேலோங்கிய பொதுவுடமைச் சமூகத்துக்கான வழியைக் காட்டியது தான் என்று கருதுகிறேன்.

இம்மாதிரி முயற்சிகளில் நீங்கள் எதுவும் ஈடுபட்டிருக்கிறீர்களா?

என் எழுத்துகள் எல்லாவற்றிலும் இதனை நீங்கள் காணலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் தோல் பொருட்கள் தயார் செய்யும் மடிகர்களை விஞ்ஞானிகளாகக் குறிப்பிட்டு நான் எழுதிய கட்டுரையும், மடிகா தலித்துகள் குறித்த உற்பத்தி வீரர்கள் என்கிற இன்னொரு கட்டுரையும்.
தற்போது குறிப்பிட்ட சில பழங்குடியினர் மற்றும் தலித்-பகுஜன் மக்களின் பல்வேறு கண்டுபிடிப்புகள் குறித்த ஒரு புத்தகத்துக்கான பணியில் ஈடுபட்டிருக்கிறேன். தலித்-பகுஜன் அறிவார்ந்த அமைப்புகள் குறித்து அறிந்து கொள்ள ஏராளம் இருக்கிறது. இந்தியாவின் தொழில்வளர்ச்சியின் ஆரம்பவிதைகளை லேன்கேஷையரில் அல்லாது, மிருகங்கலில் தோலைச் செருப்பாக்கும் முறையைக் கண்டு பிடித்த மடிகர் சமூகத்திடமும் சவரக்கத்தியைக் கண்டுபிடித்த நமது நாவிதர்களிடமும் இருந்ததை நாம் கண்டறிய முடியும்.  

இறுதியாக ஒரு கேள்வி. ஏன் உங்கள் நூலுக்கு ‘நான் ஏன் ஒரு இந்து அல்ல’ என்று தலைப்பு வைத்தீர்கள். அதற்கான வரவேற்பு எவ்வாறு இருந்தது?
இந்துத்துவப் பரப்புரைக்கு எதிராக இந்துக்கள் என்றே அறியப்படும் தலித்-பகுஜன் மக்களுக்கு மிக வலிமையானதொரு முழக்கம் தேவைப்படுவதை நான் உணர்ந்தேன். வரவேற்பு என்று பார்த்தால் தலித்-பகுஜன்களுக்கு அந்த நூல் மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தது. எதிர்பார்த்தபடியே ஆசாரப் பார்ப்பனர்களுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஊட்டியது; சில சோஷலிசப் பார்ப்பனர்களுக்கும் கூட. அதுவும் கூட எனக்கு வியப்பளிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் கார்ல் மார்க்ஸைப் படிக்கும் அதே ஊக்கத்தோடு வேதங்களையும் படிப்பவர்கள் – இல்லை, ஊன்றிப் படிப்பவர்கள் அல்ல, ஓதுபவர்கள்.  
ஆனால் தமிழ்நாட்டிலிருந்து சில பார்ப்பனர்கள் எனக்கு எழுதியது என்னவென்றால், அவர்கள் பெரியாரை நிறைய படித்திருந்ததாகவும், பெரியார் பார்ப்பனர்களை நிறைய விமர்சித்திருந்தாலும், எங்கே தவறிழைத்தனர் என்பதைத் தெளிவுறச் சுட்டிக் காட்டவில்லை என்றும், ’ஏன் நான் ஒரு இந்து அல்ல’ வைப் படித்த பிறகு தங்களது மதத்திலும் பண்பாட்டிலும் எங்கே தவறு இருக்கிறது என்றும் மாற்றங்களுக்கான அவசியம் குறித்தும் புரிந்து கொண்டதாகக் குறிப்பிட்டார்கள்.

No comments: