Friday, November 12, 2010

மாமாவின் பிறந்தநாள் விருந்து!

நான் ஒன்பதாவது படிக்கும் போது எங்கள் பள்ளியில் நடந்த ஒரு குழந்தைகள் தினத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா. ஆம், வித்தியாசம் தான். வழக்கமாக குழந்தைகள் தினமென்றால், விடுமுறை இருக்கும். முதல் நாளே மூன்று மணிக்கு மைதானத்தில் கூடுவோம். பெரிய வகுப்பு பிள்ளைகள் யாரேனும் நேருவைப் பற்றி ஆசிரியர் எழுதிக் கொடுத்ததை மனனம் செய்து மைக்கின் முன் ஒப்பிப்பார்கள். மூன்று நான்கு சமர்த்துப் பெண்கள் சேர்ந்திசை பாடுவார்கள். பின்பு தலைமை ஆசிரியையின் உரையுடன் இனிப்புகள் வழங்கப்பட்டு, ஜனகண மண பாடி முடித்து கேட் திறக்கப்பட்டவுடன் "ஹேப்பி சில்ரன்ஸ் டே, ஹேப்பி சில்ரன்ஸ் டே" என்று கத்தியபடி வெளியே ஓடிவிடுவோம்.

ஆனால் மேற்சொன்ன வருடம் எங்கள் பள்ளியில் "ஏழைகளுக்கு உணவளிக்கும் விழாவாக" நடத்த ஆசைப்பட்டார் எங்கள் பள்ளித் தாளாளர். அதற்கு Poor feeding என்று பெயரும் வழங்கி வந்தது. அதற்குக் காரணம் எங்களுக்குப் பின்னாளில் தான் புரிந்தது. தாளாளரின் மகள் தான் பள்ளியை நிர்வகித்து வந்தார். அவர் அந்த ஆண்டோடு வெளிநாட்டுக்குச் சென்று புதிய வாழ்க்கை தொடங்கும் திட்டத்திலிருந்ததால் போகும் முன் ஏதாவது 'நல்ல காரியம்' செய்யவோ அல்லது கிடைத்த நல்ல வாழ்க்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலோ இதைச் செய்ய முன்வந்திருக்கிறார் என்பது.

முதல் நாள் மாலை, ஒன்பதாவது பத்தாவது படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் சிலருடன் அருகில் இருந்த குடிசைப் பகுதிக்குச் சென்றோம்.
அங்கு ஒவ்வொரு குடிசையாகச் சென்று குழந்தைகள் இருக்கிறார்களா என்று விசாரித்து அவர்களைக் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டோம்.

பள்ளியை ஒட்டியே இருந்தாலும் அந்தக் குடிசைப் பகுதிக்குள் அதுவரை நாங்கள் சென்றதே இல்லை. சொல்லவே வேண்டாம் மழைக்காலத்தில் சென்னையில் அப்படிப்பட்ட பகுதிகள் எப்படி இருக்குமென்று.
வெள்ளை ஷூக்கள் அழுக்காகிறதே என்ற பெருங்கவலையுடனும் ஒரு வித அசூசையுடனும் சென்று குழந்தைகளை அழைத்தோம்.

அங்கிருப்பவர்களிடம் நாங்கள் பேசியது அதை விடக் கொடுமையான ஜோக்.

வயதான கிழவி ஒருவர் குடிசையில்:
"எங்க ஸ்கூல்ல குழந்தைகள் தினவிழா. உங்க வீட்டுக் குழந்தைகளை அனுப்பி வைங்க."

"குழந்தைகள் தினம்னா?"

"நேரு பிறந்த நாள்."

"நேருவா, ....ஆங்! சரி சரி."

"வரோங்க..."

"சரி, அவருக்கு எப்போ ஓட்டுப் போடனும்?"

ஙேஏஏஏஏஏஎ!!!

சில குடிசைகளில் படித்த இளைஞர்கள் இருந்தார்கள்.

"சில்ரன்ஸ் டேவாப்பா, கண்டிப்பா அனுப்பி வைக்கிறோம்" என்று வறுமையில் இருந்தாலும், அறிவிலும் நாகரிகத்திலும் யாருக்கும் குறைந்தவர்களல்ல என்று காட்டிக் கொள்ள முனைந்த அவர்களிடம் பேசும் போது அந்தப் "புவர் ஃஃபீடிங்" என்ற வார்த்தை ஏனோ மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.

முதலில் சந்தித்த அந்த மூதாட்டியைப் போல் வெகுளித்தனமாய்க் கேள்வி கேட்ட பெரியவர்களையும் குழந்தைகளையும் அதட்டி அடக்குவதையும் அவர்களுக்கு நேரு, குழந்தைகள் தினம் ஆகிய ஆகப் பெரும் விஷயங்களை விளக்கும் பொறுப்பையும் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். நாங்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தோம். ஆம், அங்கிருந்த பெரும்பாலான குழந்தைகளுக்குத் தங்கள் நேரு மாமாவைத் தெரிந்திருக்கவில்லை.

அடுத்த நாளும் வந்தது. எல்லோருக்கும் உணவு பரிமாறுவது எங்கள் வேலை தான். இரண்டு இட்லி, ஒரு வடை, சட்னி, சாம்பார், ஒரு வாழைப்பழம். இது தான் மெனு. இட்லி இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் பரிமாறக் கூடாது என்றும் சட்னி சாம்பார் எவ்வளவு வேண்டுமானாலும் ஊற்றலாம் என்றும் எங்களுக்கு அறிவுரைக்கப்பட்டது. பிறகு கூட வந்த பெரியவர்களுக்கு வேட்டி சேலை வழங்கும் வைபவம் ஆகியவை புகைப்படப் பதிவுடன் இனிதே நடந்தேறியது. (பள்ளி ஆண்டிறுதி அறிக்கையில் இவை அனைத்தும் பெருமையோடு வாசிக்கப்பட்டது. ) இவ்வாறாகத் தங்கள் உள்ளம் கவர்ந்த நேருமாமாவின் பிறந்த நாளை அக்குழந்தைகள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வீடு திரும்பினர்.

12 comments:

எல் கே said...

நல்ல நினைவுகள். இதுபோல் விசேஷ தினத்தில் மட்டுமன்றி அடிக்கடி இவ்வாறு நடக்க வேண்டும். அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு , இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும்

Prabu M said...

அடடா.... அழகான நினைவுகளை மிக அழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்...
ச்சே... ஸ்கூலுக்குப் பக்கத்தில்தான் இவர்களும் இருக்கிறார்கள் ஆனால் எவ்ளோ தூரம் பாருங்க... இதுதான் நம்ம நாட்டோட சாபக்கேடு...

கிறுக்கன் said...

நெகிழ்சி தரும் நினைவுகள்...அருமை!!!!!

மாதவராஜ் said...

இப்படித்தான் நமது தேசத்தின் இன்னொரு பெரும்பகுதி இருக்கிறது. அதன் ஒரு சிறுதுளியைக் காண்பித்திருக்கிறாய்.

Jagannathan said...

ஒரு சீனப் பழமொழி நினைவுக்கு வருகிறது "Give a man a fish and you feed him for a day. Teach a man to fish and you feed him for a lifetime" பசியில் இருப்பவனுக்கு உணவு கொடுப்பதைவிட அவனுக்கு அந்த உணவை எப்படி ஈட்டுவது என்று சொல்லிக் கொடுப்பது மிகவும் சிறந்தது.

'பரிவை' சே.குமார் said...

நெகிழ்சி தரும் நினைவுகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.நல்ல நினைவுகள்

ponraj said...

நல்ல நினைவுகள்.

அருமை!

era.thangapandian said...

நல்ல பதிவு

vimalanperali said...

பிறந்ததினங்கள் வந்து போவது சரி.எங்களுக்கு என்ன என்பதுதான் அவர்களது அடிப்படைக் கேள்வியாக உள்ளது.

pichaikaaran said...

நல்ல பதிவு

Anonymous said...

நெகிழும் நினைவு ... அருமை ...
தொடருங்கள்