Monday, August 1, 2011

நேஹாவுடனான அவர்களின் நேரம்

நேற்று காலை உண‌வுக்கு ரொட்டி வாங்க வழக்கமாய்ச் செல்லும் க்ரேஸ் அங்காடிக்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்தவுடன் அங்கு வேலை பார்க்கும் இரண்டு பெண்கள் ஓடி வந்தார்கள். அடுத்த நொடி அவர்கள் முகங்களில் பெருத்த ஏமாற்றம். "நேஹா வரலியா? நேஹாவை ஏங்க்கா கூட்டிட்டு வர்ல? அவளைப் பாத்து ஒருமாசம் இருக்கும், இல்ல?"

அதற்குள் கடைக்குப் பின்னாலிருந்து மேலும் இரு பெண்கள் வந்து அதே போல் கேட்டு விட்டுப் போனார்கள். முதலில் பார்த்த பெண் தொடர்ந்தார்: "சனி ஞாயிறாச்சும் நேஹாவைக் கூட்டிட்டு வாங்கக்கா.. நேத்திக்குச் சாப்பிடும் போது கூட அவளைப் பத்தித் தான் பேசிட்டு இருந்தோம். அவ வந்துட்டுப் போனா அன்னிக்கு நாள் கொஞ்சம் நல்லா இருக்கு, இல்லாட்டி எங்களுக்கு இங்கே பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கும்" என்றாள்.

என‌க்கு ஏனோ க‌ண்ணில் ச‌ட்டென நீர் கோத்துக் கொண்ட‌து. வீட்டுக்கு விரைந்துவிட்டேன்.

"ஹை! பாப்பா உன் பேர் என்ன‌?...பாப்பா ட்ரெஸ் ந‌ல்லாருக்கே..த‌லை தான் கொஞ்ச‌ம் க‌லைஞ்சிருக்கு."

"போ! உன் த‌ல‌ தான் ந‌ல்லாவேல்ல‌..." என்று அவர்கள் எதிர்பாராமல் நேஹா சொன்ன‌தை அடுத்து அங்கே பலத்த சிரிப்பு. அது முதல் அவள் அந்தப் பெண்களுட‌ன் ந‌ட்பாகினாள். அங்கு போனாலே அவ‌ர்க‌ள் முறை வைத்துக் கொண்டு வ‌ந்து தூக்கிச் சென்று விடுவார்க‌ள். அவ‌ர்க‌ளுக்குள் போட்டி வேறு. ஏனென்றால் வேலையை விட்டு விட்டு ரொம்ப‌ நேர‌ம் ஒரு குழ‌ந்தையுட‌ன் விளையாடிக் கொண்டிருக்க‌ முடியாதே.

இத‌ற்கிடையில் என்ன‌ ச‌த்த‌ம் என்று பார்க்க‌ வ‌ந்த‌ சூப்ப‌ர்வைஸ‌ர் பெண்ம‌ணியையும் "ஹேய் நேஹா, இங்க‌பாரு மேட‌ம் கூட‌ உன் ஃபேன் ஆகிட்டாங்க‌" என்று க‌லாய்த்த‌ப‌டி சூழ‌லைச் ச‌க‌ஜ‌மாக்கி விடுவார்க‌ள்.

இது நேஹா என்ற என் குழந்தையைப் பற்றிய பெருமைக்காகச் சொல்லவில்லை. ஒரு மூன்றுவயதுக் குழந்தையின் பத்துநிமட வரவுக்காகவும் பேச்சுக்காகவும் இந்த அளவு ஏங்கிப் போகும் அளவுக்கு அவர்களின் வேலை இயந்திரகதியாகவும் சோர்வளிப்பதாகவும் இருக்கிறதா?

உட்காரவோ அலைபேசவோ கூட‌ அனுமதியில்லாமல், "அரிசி எங்கே புளி எங்கே, டாய்லெட் கிளீனர் இருக்கா" போன்ற‌ அலுப்பூட்டும் கேள்விக‌ளையே இட‌மும் வ‌ல‌மும் ச‌ந்தித்த‌ப‌டி இருக்கும் அந்த‌ப் பெண்கள் எப்போதாவது வ‌ந்து வ‌ம்பிழுக்கும் ப‌ரிச்ச‌ய‌மான‌ குழ‌ந்தையின் வ‌ர‌வை ஆவ‌லுட‌ன் எதிர்பார்ப்ப‌தில் ஆச்ச‌ரிய‌மென்ன‌ இருக்க‌ முடியும்?

மாலையில் மென‌க்கெட்டு ஒரு ப‌ட்டிய‌ல் த‌யாரித்து, 'இதெல்லாம் இன்னிக்கே வேணும்' என்று ஜோவுடன் நேஹாவைக் க‌டைக்கு அனுப்பிவைத்தேன்.

Saturday, July 9, 2011

வாத்தும் மீனும்...

குட்டை வற்றி மூச்சு முட்டியது
வெளியேறிய வாத்துக்கோ
கரையின் வெம்மை பொசுக்கியது
நீரின்றியமையாத‌ மீனோ
சேற்றுக்குள் அமுங்கிய‌து
வட்டமிடும் கழுகுக்கும் மீன்பிடி வலைகளுக்கும்
இரண்டுமே இரையல்ல, உயிர் தானென்பது புரியுமா?

Monday, June 13, 2011

குல்மோஹர் பூவும் தென்னங்குறும்பியும்

அது கிராமமெல்லாம் இல்லை. சென்னை நகரம் தான். ஆனால்...

"அனு, அனு, அனூஊஊ"

"ஏ அனும்மா...தீபா விளிக்கின்னு."

"அனு, அனு, அனூஊஊ!"

"ஏ..தோ வரேன்பா இரு"

"சீக்கிரம் வா விளையாடலாம்!"

ஓடி வ‌ந்த‌ அனு வீட்டுக் கேட்டையெல்லாம் ஒரு பொருட்டாக‌ ம‌திக்க‌வில்லை. இரு வீடுகளுக்கிடையே பேருக்கு இருந்த‌ க‌ம்பி வேலியின் பெரிய‌ ஓட்டை வ‌ழியே நுழைந்து இந்த‌ப்ப‌க்க‌ம் வ‌ந்து விட்டாள். (காம்பவுண்ட் சுவர்களெல்லாம் அரிது அப்போது.)

"கேக் ப‌ண்ணி விளையாட‌லாமா?"

"ஓ!"

"சரி போய் ஒரு ச‌ர்ட்டை எடுத்துட்டு வா!"

"ச‌ட்டையா அது எதுக்கு?, ம்...ச‌ரி" வேக‌மாக‌ உள்ளே ஓடியவள் வீட்டில் அம்மாவைப் பிடுங்கி ஒரு ப‌ழைய‌ ச‌ட்டையைக் கொண்டு வ‌ருகிறாள்.

"அய்யோ! ச‌ர்ட்டை, ச‌ர்ட்டை...தேங்காய் உடைச்சா கிடைக்குமே..."

"ஓ! கொட்டாங்குச்சியா? அப்ப‌டிச் சொல்ல‌ வேண்டிய‌து தானே?"

ஒரு வ‌ழியாக‌க் கொட்டாங்குச்சி ஒன்றைத் தேடி, வீட்டு முன்புறம் க‌ளிம‌ண்ணில் த‌ண்ணீர் ஊற்றிக் குழைத்துக் கொட்டாங்குச்சி அச்சைக் கொண்டு வித‌விதமாய்க் கேக்குக‌ள். பின்பு அதில் கனகாம்பரம், ந‌ந்தியாவ‌ட்டைப் பூ கொண்டு அல‌ங்கார‌ங்க‌ள். தீக்குச்சி தான் மெழுகுவர்த்தி. வீட்டு வ‌ராந்தா பூரா க‌ளிம‌ண் திட்டாக‌ அழுக்கு. அவர்கள் உடைக‌ளிலும் தான்.

ச‌மைய‌ல் ப‌ண்ண‌லாமா? க‌ளிம‌ண் சாத‌ம், கூழாங்க‌ல் பிரியாணி, ப‌ச்சை இலை காய்க‌றிகள், செங்க‌ல் பொடி அரைத்துக் குழ‌ம்பு. இந்த‌ச் செங்க‌ல்பொடியை ம‌ட்டும் நாளெல்லாம் அரைத்துக் கொண்டிருப்பார்கள். யார் அதிக‌ம் அரைக்கிறார்க‌ள் என்று போட்டி வேறு.

எங்கிருந்தோ வ‌ந்து விடுவார்க‌ள் த‌ம்பி வான‌ர‌ங்க‌ள். "நாங்க‌ சாப்பிட்டுப் பாக்கிறோம்... நிஜ‌மாக‌வே வாயில் வைத்துச் சுவைத்துத் "அய்யோஒ தூ தூ" என்று துப்புவார்க‌ள். இத‌ற்கு அப்படி ஒரு சிரிப்பு, துர‌த்திக் கொண்டு அடிக்க‌ ஓடுவ‌து...

அடிபட்ட அணிலொன்றைப் பிடித்துக் கொண்டு வந்து அதைப் படுத்திய பாடு. "அதை விட்டுடுங்கடா, பாவம்" ன்னு எவ்வளவு சொன்னாலும் கேட்கவில்லை. இங்க்ஃபில்லரில் அதற்குப் பாலூட்டுவது, பழம் கொடுப்பது என்று இவர்களின் உற்சாக வைத்தியத்தில் அது விரைவில் குணமாகி ஓடிப் போய்விட்டது.

கிண‌ற்ற‌டியில் அடிமுத‌ல் கிளைக‌ள் ப‌ர‌ப்பி நின்ற‌ கொய்யா மர‌ம். அனு நிஜ‌மாக‌வே ந‌ன்றாக‌ ம‌ர‌மேறுவாள். ஆளுக்கொரு கிளையில் அம‌ர்ந்து கொண்டு ஏதாவ‌து விளையாட்டு.

பாண்டிக் க‌ட்ட‌ம் போட்டு நொண்டிய‌டித்து விளையாடுவ‌து. பாண்டிச்சில்லுக்கு ஒரு அஞ்சாறு சில்லு வைத்திருப்பது. அவ‌ர‌வ‌ர் அதிர்ஷ்ட‌ச் சில்லு கொண்டு தான் விளையாடுவ‌து.

குல்மோஹ‌ர் பூக்க‌ளின் மொட்டுக்க‌ளை உரித்து அந்த‌ இத‌ழ்க‌ளை ஐந்து விர‌ல்க‌ளிலும் ந‌க‌ம் போல் ஒட்டிக் கொள்வ‌து... (ச‌ரியாக‌ ஐந்து இத‌ழ்க‌ள் தான் இருக்கும் அதில்) ஆஹா!

தென்ன‌ங்குறும்பியில் ஈர்க் குச்சி குத்தி வ‌ண்டி, ப‌ம்ப‌ர‌ம், செய்வ‌து அதையே ஸ்ட்ராவாக‌ வைத்து இள‌நீர் விற்ப‌து...

இதெல்லாம் விரைவில் போரடித்து விடும். அப்புறம் இருக்கவே இருக்கு ஓடிப் பிடித்து விளையாடுவதில் ஓராயிரம் வகைகள். கண்ணா மூச்சி, கல்லா மண்ணா, லாக் அன்ட் கீ, நொண்டியடிப்பது, காலைத் தொட்டுப் பிடிப்பது, சங்கிலியாகச் சேர்த்துக் கொண்டி பிடித்து விளையாடுவது ...ஒவ்வொரு விளையாட்டிலும் எத்தனை வகைகள்?
ஊரிலிருந்து வருபவர்கள் "இதை நாங்க‌ எப்ப‌டி விளையாடுவோம் தெரியுமா" என்று ஆர‌ம்பித்துச் சொல்லிக் கொடுப்ப‌து அந்த‌ப் புதிய‌வ‌ருக்கு இருக்கும் வ‌ர‌வேற்பைப் பொறுத்து ஏற்றுக் கொள்ள‌வோ நிராக‌ரிக்க‌வோ ப‌டும்!

கண்ணாமூச்சி என்றால் கையில் மண் குவித்து அதில் ஒரு பூவையோ கல்லையோ நட்டு வைத்து, அவர் கண்ணைமூடி வீட்டைச் சுற்றிச் சுற்றி எங்கெங்கோ அழைத்துச் சென்று ஒரு இடத்தில் மண்ணைக் கொட்டச் சொல்ல வேண்டும். பின்பு மீண்டும் கண்ணைமூடி அழைத்து வந்து வேறோரிடத்தில் விட்டு விட வேண்டும். இப்போது மண்ணைக் கொட்டிய இடத்தைக் கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும். (இது நாங்கள் அதிகம் விளையாடாத, என‌க்கு ரொம்ப‌ப் பிடித்த‌ விளையாட்டு!)

உட்கார்ந்து விளையாடுவதென்றால் க‌ருங்க‌ல் பொறுக்கி, சிமென்டுத் த‌ரையில் ஓர‌த்தையெல்லாம் தேய்த்து ம‌ழ‌ம‌ழ‌வென்றாக்கி, அஞ்சு க‌ல் விளையாடுவ‌து...
குச்சிக‌ளைப் பொறுக்கிக் க‌லைத்துப் போட்டு அசையாம‌ல் எடுப்பது.

இது தவிர கதைகள் சொல்லி மகிழ்வது. விளையாட்டுகளில் பின் த‌யங்கினாலும் அம்புலிமாமா, ரத்னபாலா என்று க‌தைப் புத்தகங்கள் அதிகம் படிப்பவர்களுக்குத் மவுசு கூடுவது இப்போது தான்! :-)


ஆச்சு, பொழுதாகி விட்ட‌து. குளிக்க‌ வேண்டும். கிண‌ற்றடிக்குப் போய்க் க‌யிற்று வாளியைத் தொப்பென்று கிண‌ற்றில் போட்டு, 'ப்ளக்' என்ற‌ ச‌த்த‌த்துட‌ன் வாளி நிர‌ம்புகிற‌து. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க‌ க‌யிற்றை இழுப்ப‌த‌ற்குள் உள்ள‌ங்கை சிவ‌ந்து வ‌லிக்கிற‌து. வாளியைக் கைப்பிடித்து இழுத்து மேலே கொட்டிக் கொள்ளும் போது...ஆஹா!

குழந்தைகளின் பாத‌ங்க‌ளிலும் கைந‌க‌ங்க‌ளில் உறைந்து போன‌ க‌ளிமண் க‌ரைந்து வெளியேறுவ‌தைப் பார்த்துக் கொண்டே அந்திச் சூரிய‌ன் விடைபெறுகிற‌து.

இன்று...

இருந்த கொஞ்சம் க‌ல்லும் ம‌ண்ணும் கான்க்ரீட் க‌ல‌வையில் சேர‌ப் போய்விட்ட‌ன‌. ம‌ர‌ங்க‌ள் எல்லாம் ஃப்ளாட்டுக‌ள் க‌ட்ட‌ வ‌ழிவிட்டு பூமிக்குள் ப‌துங்கி ம‌க்கிவிட்டன. கூடுக‌ட்ட‌க் குச்சிக‌ளில்லாம‌ல் குருவிக‌ளே காணாம‌ல் போய்விட்ட‌ன‌.

அனுவுக்கு இருமகள்கள். தீபாவுக்கும் அப்படியே. இருவரும் இன்றும் அருகருகே தான் வசிக்கிறார்கள். குழ‌ந்தைகள் டிஸ்க‌வ‌ரி சான‌லில் "அணிலையும் குல்மோஹ‌ர் பூவையும் க‌ண்டு "இது என்னம்மா?" என்று அதிச‌யித்துக் கொண்டிருக்கிறார்க‌ள்.
(பி.கு: அலுவலகத்தில் இருந்தபோது நேஹா நினைவு வந்தது. கொஞ்ச நேரம் டிவி பார்த்த பிறகு பாட்டியுடன் ஏதாவது கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருப்பாள். அப்போது தோன்றியது, இதே வயதில் நம்ம என்ன பண்ணிட்டிருந்தோம்?)

Friday, June 10, 2011

எம்.எஃப்.ஹுஸைன்


இந்தப் பெயர் முதலில் தெரியவந்தது 1995 இல் ஹம் ஆப்கே ஹை கோன் ஹிந்தித் திரைப்படம் வெளிவந்தபோது தான். குமுதமோ விகடனோ நினைவில்லை, அதில் இந்த எண்பது வயது ஓவியர் மாதுரியின் தீவிர ரசிகராக அந்தப் படத்தை நாற்பது தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறார் என்றும், கூட்டம் கூட்டமாக இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு தியேட்டர்களில் அந்தப் படத்தைக் கண்டு மகிழ்கிறார் என்றும் எழுதி இருந்தார்கள். கூடவே அந்தப் படத்தில் மாதுரி வரும் காட்சிகளை அவர் வரைந்திருந்த ஓவியங்களையும் வெளியிட்டிருந்தார்கள். வேடிக்கையாக இருந்தது.

ஹூம்...அப்ப‌டி ஒரு கோமாளியாக‌ ம‌ட்டும் அவ‌ர் இருந்திருந்தால் அவ‌ரை இந்நாடு ம‌தித்திருக்கும். விள‌ம்ப‌ர‌ப்பிரிய‌ராக‌ ம‌ட்டுமே அவ‌ர் இருந்திருந்தால் அவ‌ருக்குப் பேரும் புக‌ழும் கிடைத்திருக்கும்.

அர‌சிய‌லில் சேர்ந்து கோடிக் க‌ணக்காய் ஊழ‌ல் செய்திருந்தால் கூட‌ திஹார் ஜெயிலில் ச‌க‌ல‌ வ‌ச‌திக‌ளுட‌ன் கூடிய‌ சொகுசு அறை கிடைத்திருக்கும்.

த‌லித் பெண்க‌ளைக் கிராம‌த்தோடு சென்று க‌ற்ப‌ழித்துக் கொன்றிருந்தால் கூட‌ நீதிம‌ன்ற‌ம் ஆயுள் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ மேலும் கீழும் யோசித்திருக்கும்.

அவ்வளவு ஏன், குஜராத்தைப் பிணக்காடாக்கிய‌ 'நரவேட்டை'மோடியைக் க‌ட‌வுளாக உருவகித்து வ‌ரைந்திருந்தால் (நிர்வாண‌மாகவே‌) அவரைக் கொண்டாடி ர‌த‌யாத்திரை எடுத்திருப்பார்க‌ளே?

ஆனால் எய்ட்ஸே அண்டாத‌ இப்புனித‌ தேச‌த்தில், பச்சிளம் பெண் குழ‌ந்தைகளுக்குக் கூடப் ப‌ரிபூர‌ண‌ பாதுகாப்பு சுத‌ந்திர‌மும் இருக்கும் இப்புண்ணிய‌ பூமியில் கோயில் சிற்ப‌ங்க‌ளில் காணாத‌ நிர்வாண‌த்தை, நீல‌ப்ப‌ட‌ங்க‌ளில் இல்லாத‌ ஆபாச‌த்தை வ‌ரைந்துவிட்டாரே!
உருவ‌ம‌ற்ற, உயிர‌ற்ற, க‌ற்ப‌னைப் பாத்திரத்தை (ஆம், க‌ட‌வுள் தான்) நிர்வாண‌மாக 'அவர்' வ‌ரைய‌லாமா? அவ‌ர் 'வேறு' அல்ல‌வா? 100 வயதை எட்டப் போகும் ஒரு க‌‌லைஞ‌னுக்குச் சொந்த‌ம‌ண்ணில் உயிர்விட‌க்கூட‌ அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து வேத‌னைய‌ளிக்கிற‌து.

காவிக் க‌றைப‌டிந்த‌ கோர‌ப்ப‌ற்க‌ளின் நிழ‌ல் க‌விந்து கிட‌க்கிற‌து இம்ம‌ண்ணின் மீது.

ஆழ்ந்த‌ அஞ்ச‌லிக‌ள்.

Thursday, May 26, 2011

நேஹா நேரம்!

"நேஹா, தண்ணி குடிச்சிட்டு டம்ளரை இப்படி தூக்கிப் போடற? இது என்ன பழக்கம்?"

கண்களைச் சிமிட்டித் தலையை ஆட்டி "நல்லப் பழக்கம்"

என்னது?

"ஹிஹி...கெட்டப்பழக்கம்மா"

மாடி வீட்டு ஆன்டிக்கு காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரது மகனிடம் அவர் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த நேஹா அமைதியாக எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் போனதும், கவலை தோய்ந்த முகத்துடன்,
"அம்மா, ஆன்ட்டிக்கு என்னம்மா ஆச்சு?"
"கால்ல அடிபட்டிருக்குடா"
"ரொம்ப‌ வ‌லிக்குமா?"
"ஆமாண்டா, க‌ட்டு போட்டு ஊசி போடுவாங்க‌, ச‌ரியாயிடும்"
"இப்ப‌ எங்க‌ இருக்காங்க‌?"
"ஹாஸ்பிட‌ல்ல‌.."
"ம்...ஹாஸ்டபல் பேர் என்ன? நாம போயிப் பாக்கலாமா?"
:)

ந‌ல்ல‌ மூடில் இருந்தால், அவ‌ளைச் செய்ய‌க் கூடாது என்று த‌டுத்து வைத்திருக்கும் வேலைக‌ளை நாம் செய்யும் போது,
"என‌க்கு இப்ப‌ தெரியாதும்மா, பெரிய‌ பொண்ணான‌வுட‌னே நானும் செய்வேன்." என்று சொல்லிக் கொள்கிறாள். இதில் ஸ்கூட்ட‌ர் ஓட்டுவ‌து, க‌த்தியை உபயோகிப்ப‌து, குழ‌ந்தையை குளிப்பாட்டுவது உட்ப‌ட‌ ப‌ல‌ அட‌க்க‌ம்.

அலுவ‌ல‌க‌த்துக்குக்க் கிள‌ம்பும் போது கேட்ட‌ருகே நின்று கொண்டு இருந்தாள். ஹெல்மெட்டை ம‌ற‌ந்து விட்டு மீண்டும் ஓடி வ‌ந்தேன். அய்யோ குழ‌ந்தை நாம் திரும்பி வ‌ந்து விட்ட‌தாக‌ ஏமாந்து விட‌ப் போகிற‌தே என்ற பயம் வேறு. ஆனால் "ஹெல்மெட் ம‌ற‌ந்துட்டியாம்மா? ஹையோ ஹையோ! என்ற‌ப‌டி ஓடிச் சென்று எடுத்து வ‌ந்ததுட‌ன் "போட்டுக்கிட்டுப் போம்மா, விழுந்துடப் போகுது!"

பெரிய‌வ‌ர்க‌ளுக்கெல்லாம் ம‌ரியாதை கொடுத்துப் பேசுவ‌து என்ற‌ பேச்சே இல்லை. :‍( (உண்மையில் ரொம்ப‌க் க‌வ‌லையாக‌ இருக்கிற‌து என‌க்கு.)

ஆனால் ஒன்ப‌து வ‌ய‌தாகும் என் அக்கா ம‌க‌னை, "நிகில‌ண்ணா, இங்கே உட்காருங்க" என்ப‌தும், அவ‌னை யாராவ‌து அத‌ட்டினால் அவ‌ர்க‌ளுக்கு வ‌சை மாரி பொழிவ‌தும் தாங்க‌ முடிய‌வில்லை.
ஆனால் ஒரு முறை அவனை அத‌ட்டிக் கொண்டிருந்த‌ அவ‌ன‌து அக்காவை எதிர்த்து ஏதோ சொன்னான். உட‌னே இவ‌ள்,
"டேய் நிகில், ம‌ரியாதையாப் பேசுடா."

ஒரு நாள் பக்கத்து ஃப்ளாட் காரரிடம் ஏதோ பேசச் சென்றிருந்தார் ஜோ. உண்மையில் எனக்குத் தெரியவில்லை. "அப்பா எங்கே" என்று கேட்டவளிடம், "தெரியாதுடா, பக்கத்துல தான் எங்கயாச்சும் போயிருப்பாரு. என் கிட்ட சொல்லிட்டுப் போகல" என்று தான் சொன்னேன்.

ஜோ உள்ளே நுழைந்தது தான் தாமதம், "அப்பா! ஏன்பா அம்மாவை விட்டுட்டுப் போனீங்க. கூடக் கூட்டிட்டுப் போலாம்ல? பாவம் அம்மா!" இந்தப் பில்டப்பெல்லாம் நான் சொல்லித் தரவில்லை என்று ஜோவை நம்ப வைக்கப் படாத பாடு பட்டேன்.

அவளுக்குப் பிடித்த பாடல்களை மனப்பாடம் ஆகும் வரை என்னைப் பாடச் சொல்லிக் கேட்கிறாள். ஓரளவு வார்த்தைகளும் ராகமும் பிடிபட்டவுடன், "நீ பாடாதேம்மா, நானே பாடறேன்!" என்று சொல்லி விட்டு என்னை விட நன்றாகவே பாடுகிறாள். So her claim is justified. :)

Monday, May 16, 2011

மீட்சி

சரியாய் வரவில்லை என்று கசக்கி எறிந்த கவிதை ஒன்று
ஏதோ சிந்தனையின் இடையினிலே இடறியது
செதுக்காத சொற்கள், சமனில்லா வரிகள்...
முற்றுப் பெறவில்லை, முடியவும் வழியில்லை
ஆனாலும்...
எழுத வைத்த கணம் வந்து மின்னல் போல் வெட்டியது
சுருக்கங்கள் நீவி எடுத்து நினைவடுக்கில் சேமித்தேன்.

Friday, April 15, 2011

சின்ன‌க் குயிலுக்கு...

என் இனிய சின்னக் குயில் சித்ராவுக்கு இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கக் கூடாது. எப்போதும் குழந்தை போலச் சிரித்துக் கொண்டிருக்கும் அவரது முகம் இப்போது எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. குழ‌ந்தைக‌ளுக்கான‌ பொருட்க‌ள் விற்கும் க‌டையொன்றில் "பாடகி சித்ரா எங்க‌ள் வாடிக்கையாள‌ர்" என்று சொன்னதால் அந்த‌ப் ப‌க்க‌ம் செல்லும் போதெல்லாம் அவ‌ர் வ‌ந்திருக்கிறாரா என்று எட்டிப் பார்ப்பேன். 'அவ‌ர் குழ‌ந்தையை அழைத்துக் கொண்டு வ‌ரும் போது என‌க்குத் தெரிவியுங்கள்' என்று கூட‌ அந்த‌க் க‌டைக்கார‌ரிட‌ம் சொல்லி வைத்திருந்தேன். அந்த‌ அள‌வுக்குச் சித்ராவைப் பிடிக்கும். இசை என்னும் ச‌ஞ்சீவி அவரது துய‌ரை மாற்றட்டும். வேறெதுவும் சொல்ல‌ என‌க்குத் தோன்ற‌வில்லை.