Monday, June 29, 2009

அம்மா எழுதிய பாட்டு!

ஆரா அமுதே அருமருந்தே

அம்பிகையே அருள் மீனாட்சி

காரார் குழலி கருங்கண்ணி

களி நடமிடுவாய் என் மனதில்!


சீரார் பொன்னே சிறப்பே புகழே

சிந்தை இனிக்கும் சிவசக்தி

பேரார் பெரியோர் போற்றும் அழகி

எழில் நடமிடுவாய் என் மனதில்!


தேனே பாலே கற்கண்டே

திகட்டாச் சுவையே திரவியமே

மானே மணியே மரகதமே

மகிழ் நடமிடுவாய் என் மனதில்!

வானே வயிரக் குன்றே ஒளியே

வளர் புகழுடையாய் மீனாட்சி

கோனே கொடியே கோபுர விளக்கே

குதி நடமிடுவாய் என் மனதில்!


பூவே பூவின் மணமே பொறையே

புகழ் வளமுடையாய் மீனாட்சி

தாயே சேயே தவழ்வெண் ணிலவே

தனி நடமிடுவாய் என் மனதில்!


இது என் அம்மா நான் குழந்தையாக இருந்த போது என்னைத் தொட்டிலில் இட்டுப் பாடிய பாடல். அவர்களே இயற்றியது. நேஹா வயிற்றில் இருக்கும் போது இப்பாடல் வரிகளைக் கேட்டு எழுதிக் கொண்டேன். அவள் பிறந்தது முதல் தூங்க வைக்க இந்தப் பாடல் தான் அதிகமாகப் பாடுவது.

மிக எளிய வார்த்தைகள் தான். ஆனால் நானும் இளவயதில் கேட்டுக் கண்ணயர்ந்த பாடல் என்பதாலோ, அந்த வார்த்தைகளில் ஒரு இனம் புரியாத மன அமைதி கிட்டுவதினாலோ தெரியாது, நேஹா இதன் மூன்றாவது சரணத்துக்குள் சொக்கி விழுந்து விடுவாள்!

அம்மா ரொம்ப் சென்டிமென்டல் எல்லாம் கிடையாது. ஆனால் சில மாதங்களுக்கு முன் என் வீட்டில் வந்து தங்கி இருந்த போது நான் இப்பாடலைப் பாடி நேஹாவைத் தூங்க வைப்பது பார்த்து அவர்கள் முகத்தில் தெரிந்த பூரிப்பு! ரொம்ப ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தார்கள்.


கிட்டத் தட்ட ”நீலக்கடலின் ஓரத்தில்” என்ற பழைய பாட்டின் மெட்டில் பாடவேண்டும். கொஞ்சம் மெட்டு இடிக்கும் போது உங்கள் வசதிக்கேற்ப வார்த்தைகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். :-)

10 comments:

சந்தனமுல்லை said...

ஆகா...அப்படியே பாடி வலையேற்றியிருக்கலாமே..;-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அந்த வார்த்தைகளில் ஒரு இனம் புரியாத மன அமைதி கிட்டுவதினாலோ தெரியாது, //

அந்த பாடல் வரிகளை மெதுவாக தொடர்ந்து படித்துக்கொண்டே வரும்போதே ஒரு மாதிரி அமைதியான தொனி தான் வருகிறது, மனதிலும் அப்படித்தான் தோன்றுகிறது.

சந்தோஷமா இருக்கு படிக்க, கேட்க எப்படி இருக்குதுன்னு நேஹா கிட்ட தான் கேட்கணும் :)-

Vidhoosh said...

//கிட்டத் தட்ட ”நீலக்கடலின் ஓரத்தில்” என்ற பழைய பாட்டின் மெட்டில் பாடவேண்டும். //
அப்படியே பாடியும் காட்டி இருந்தால் ரொம்ப சுலபமாக இருந்திருக்கும் .
நல்லா இருக்கு தீபா.

Deepa said...

நன்றி முல்லை!
நன்றி அமித்து அம்மா!
நன்றி விதூஷ்!

//சந்தனமுல்லை said...
ஆகா...அப்படியே பாடி வலையேற்றியிருக்கலாமே..;-)//

ஏதோ கொஞ்சம் நல்ல ஆத்மாக்கள் என் ப்ளாக் பக்கம் வந்துக்கிட்டு இருக்காங்க. அவங்களையும் விரட்டிடச் சொல்றீங்களா? :-))

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு. நேஹா தூங்கினா சரி:)

Rajalakshmi Pakkirisamy said...

//
சந்தோஷமா இருக்கு படிக்க, கேட்க எப்படி இருக்குதுன்னு நேஹா கிட்ட தான் கேட்கணும் :)-//

he he he

மாதவராஜ் said...

சந்தோஷமாய் இருக்கிறது. நல்ல காரியம் செய்திருக்கிறாய்...

யாத்ரா said...

மிகவும் நெகிழ்வாயிருக்கிறது.

Deepa said...

நன்றி வித்யா!
நன்றி இராஜலட்சுமி!
நன்றி அங்கிள்!
நன்றி யாத்ரா!

rapp said...

//ஆகா...அப்படியே பாடி வலையேற்றியிருக்கலாமே..;-)//

பாருங்க இவங்க குசும்ப, நேஹாவோட கூட்டு சேர்ந்து, உங்கள நக்கலடிக்க பிளான் போடறாங்கப் போலருக்கு:):):)

என்னுடைய கவி வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, நான் இதைக் குறித்து கருத்துக் கூறாமல் இருப்பதே, ஹி ஹி, அனைவருக்கும் நலம் என்பதால், அப்டியே அப்பீட்டாகிறேன்