"ஹலோ! என் பெயர் செல்வி. சென்னையில் ஒரு அட்வர்டைசிங் கம்பெனியில வேலை பார்க்கறேன். எனக்குக் கல்யாணம். அதுக்கு எனக்குத் தெரிஞ்சவங்க, எனக்குப் பிடிச்சவங்க எல்லாருக்கும் பத்திரிகை கொடுக்கணும். அதான் பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ல போயிட்டு இருக்கேன்.”
அடுத்த காட்சி.
செல்வி - ட்.ஷர்டும் ஜீன்ஸும் அணிந்து வயல் வரப்புகளை ரசித்தபடி சைக்கிள் ஓட்டிச் செல்கிறாள்.
பின்னணியில் “ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே...”ஆற்றங்கரையருகே அந்த சிமெண்ட் திண்டின் அருகே வருகையில் ஃப்ளாஷ் பாக்கில் ஒரு பதினான்கு வயதுச் சிறுவன் சிரித்தபடி புத்தகப்பையோடு வருவதை நினைத்துப்
பார்த்துச் சிரிக்கிறாள்.
கட்!
ரசிக்க முடியல இல்ல?
அடுத்து கேரளாவுக்கு ஒரு படகில் பயணப்படுகிறாள். முகம் இறுகுகிறது. நினைவுகள் பின்னோக்கி....
தூக்கிக் கட்டிய வேட்டியும், வெள்ளைச் சட்டையுமாக நாயர் லக்ஷ்மணனுடனான தனது காதலை ஓட்டிப் பார்க்கிறாள். அது தோல்வியடைந்ததும் அவள் மனம் நொறுங்கி ஊர் திரும்புவதும் அடுத்த ஒரு மணி நேரத்துக்குக் காட்சிகளாக...
சகிக்க முடியல இல்ல?
பின்பு சென்னையில் ஒரு பெரிய விளம்பரக் கம்பெனியில் சேருகிறாள். அங்கு திவாகர் என்னும் இனிய நண்பன் அவளுக்கு எல்லா வகையிலும் உதவிகள் செய்கிறான். தனது தாயின் மரணத்தைக் கூட மறைத்து விட்டு அவள் புகழ் பெற வேண்டும் என்று அவளுடன் மும்பைக்குச் செல்கிறான். தனது ”தோழி” வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று பாடுபடுகிறான்.
செல்வி அவனை நினைத்து நெகிழ்வாகப் பேசுகிறாள் தனது தோழியிடம்.
மனதில் ஒட்டவே இல்லை இல்ல?
ஆம்! ஆட்டோகிராஃப் எனக்கு மிகவும் பிடித்த படம். பல வகைகளில் தமிழ்
சினிமாவின் அழுக்கு ஃபார்முலாக்களை உடைத்தெறிந்து, கண்ணியமான காட்சிகள் மட்டுமே கொண்டு வெற்றி பெற முடியும் என்று நிரூபித்த படம்.
ஆனால் அதுவும் கூட ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் மட்டுமே ஒரு பெண் - அல்லது பல பெண்கள் என்ற பழைய சகதியில் சிக்குண்ட படம் தான். சரி விடுங்கள் அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல நான் செய்ய எண்ணியது.
ஒரு பெண்ணின் ஆட்டோகிராஃபை அறிந்து கொள்ள நம் எத்தனை பேருக்கு
விருப்பம், அல்லது தைரியம் இருக்கிறது?
சிறந்த பதிவுகள் எழுதி வரும் இளம் பதிவரொருவர் (பெயர் கூற விருப்பமில்ல) சிகரெட், மது, மாது தனக்கு இன்றியமையாத விஷயங்கள் என்று எழுதுகிறார். என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
இது ஒரு பெருமை என்றோ அல்லது ஒரு சராசரி மனிதனின் சாதாரண தேவைகள் தானே, இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றோ சத்தியமாக நினைக்க முடியவில்லை.
இதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு பெண்களும் இப்படியெல்லாம் பேசினால் என்ன என்று நான் சொல்ல வரவில்லை. அவ்வளவு கீழ்த்தரமாக பெண்கள் எப்போதும் இறங்க மாட்டார்கள். ஆனால் அந்தத் தைரியம் ஆண்களுக்கு எப்படி வரலாம்? அதை அவர்கள் தங்கள் பலவீனங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தலாம்? இது துரோகம் இல்லையா?
ரொம்பப் பழைய கதைகளையும், எல்லோரும் அறிந்த ஏற்றுக் கொண்ட கசப்பான உண்மைகளைத் தான் பேசுகிறேன். தெரிகிறது. ஆனால் இனி வரும் காலத்துக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய, ஆண் பெண் ஏற்றத் தாழ்வினிறி கருட்துப் பரிமாற்றங்கள் நடக்கும் பதிவுலகத்தில், இலக்கியம் மட்டுமே படைக்கும் ஒரு பதிவரிடமிருந்து இப்படி எண்ணங்கள் வெளிப்படும் போது பயமாக இருக்கிறது. யாரை நம்புவது?நான் எழுதுவது எனக்காக இல்லை. என் மகளுக்காக, அமித்துவுக்காக, பப்புவுக்காக, உங்கள் மகள்களுக்காக...
நாம் முன்பு முல்லையின் பதிவில் சொன்னதையே சொல்கிறேன், எங்களை விடுங்கள். நாளை உங்கள் மகள்களும் பேத்திகளுமாவது சுதந்திரமான, பெண்ணை மதிக்கும் சமூகத்தில் வாழ வேண்டுமென்றால்... நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது. இப்படிப்பட்ட சிந்தனைகள் (மது, மாது) நம்மை எங்கும் கொண்டு செல்லாது.
இல்லை, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெண்கள் நிலையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கமுடியாது என்று நினைப்பீர்களானால்.. என்னை மன்னியுங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதைக் குலைத்து விடாதீர்கள்.
பின் குறிப்பு 12 Jun 09: என் பதிவில் ஒரு விஷயம் தெளிவாக இல்லை என்று உணர்கிறேன். மன்னிக்கவும்!
“மது, மாது” என்று பெண்ணையும் ஒரு போகப் பொருளாகப் பார்க்கும் அந்த சொற் பயன்பாட்டுக்குத் தான் வருந்தினேன். மற்றபடி மது அருந்துபவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்ற மனப்பான்மை எனக்கு அறவே கிடையாது.
Cheers!
தீபா
54 comments:
தீபா
பதிவுலகம் என்றில்லை. எங்கு வேண்டுமானுலும், ஏதாவது ஒரு கருத்தை அழுத்தமாக பதிய முற்படுங்கள். உங்களுக்கு கிடைக்கும் இமேஜே வேறு.
\\நாளை உங்கள் மகள்களும் பேத்திகளுமாவது சுதந்திரமான, பெண்ணை மதிக்கும் சமூகத்தில் வாழ வேண்டுமென்றால்...\\
கண்டிப்பாக நேஹாவும் , பப்புவும், அமித்துவும் நாம் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென நினைத்தோமோ அதைவிட அதிக சுதந்திரத்தோடு இருப்பார்கள் என நம்புகிறேன்.
அசத்தலான, அவசியமான பதிவு.
சூப்பரா சொல்லிருக்கீங்க தீபா.
//அவ்வளவு கீழ்த்தரமாக பெண்கள் எப்போதும் இறங்க மாட்டார்கள். ஆனால் அந்தத் தைரியம் ஆண்களுக்கு எப்படி வரலாம்? அதை அவர்கள் தங்கள் பலவீனங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தலாம்? இது துரோகம் இல்லையா?//
அருமை.
//உங்கள் மகள்களும் பேத்திகளுமாவது சுதந்திரமான, பெண்ணை மதிக்கும் சமூகத்தில் வாழ வேண்டுமென்றால்//
:):):)
நல்ல பதிவு தீபா!
//நாளை உங்கள் மகள்களும் பேத்திகளுமாவது சுதந்திரமான, பெண்ணை மதிக்கும் சமூகத்தில் வாழ வேண்டுமென்றால்... நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது.//
ஆமாம், உண்மைதான்!
//இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெண்கள் நிலையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கமுடியாது என்று நினைப்பீர்களானால்.. என்னை மன்னியுங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதைக் குலைத்து விடாதீர்கள்.//
அருமை தீபா!!
அது இப்படி இருக்கு
அங்கே அப்படி இருக்கு
இவர் அப்படி செய்து விட்டார்
அவர் எப்படி செய்யலாம்
இதெல்லாம் விட்டு தள்ளுங்க சகோதரி.
பெண்களை துணையாக அல்ல இணையாக நினைப்பவர்களும் எத்தனையோ பேர் இருக்காங்க, ஆனால் அவர்களெல்லாம் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை ...
மேலும் சுதந்திரம் என்ற பதம் எந்த அளவு கோளில் பயண்படுகிறது, அல்லது சுதந்திரம் என்று எதைத்தான் சொல்றீங்க ...
என் தாயிடமோ, சகோதரியிடமோ, மனைவியிடமோ இதுவரை அப்படி ஒரு நிலை ஏற்படவில்லை அதாவது அவர்களில் சுதந்திரத்திற்கு பாதகமாக என் தந்தையோ, சகோதரர்களோ, நானோ எதுவும் செய்து விடவில்லை.
இதோ என் பெண் குழந்தை வளர்கிறார் நிச்சியம் அவர் விரும்புவது போல் வாழ வைக்க வேண்டும் என்று தான் இருக்கின்றேன். உலகின் நல்லவை கெட்டவை சொல்லி மட்டுமே கொடுத்து ...
ஆட்டோகிராஃப் நல்ல ஒரு உதாரணமாக சொல்லியிருக்கீங்க ...
சரியா, தப்பா என்ற ஆராய்ச்சிக்கு முன், அப்படி ஒரு நிலையை தாங்கள் ஏற்றுகொள்ள முடிகிறதா, இப்படித்தான் நாம் வளர்ந்து இருக்கின்றோம் ... இதில் என்ன விதமான மாற்றம் எதிர் பார்க்கின்றீர்கள்,
எல்லாம் போகட்டும், சுதந்திரம் என்று நீங்கள் (பலரும்) சொல்வது தான் என்ன ?
\\எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதைக் குலைத்து விடாதீர்கள்.\\
சர்வ நிச்சியமாக இல்லை.
வாழ்த்துகள் தங்கள் தன்னம்பிக்கைக்கு
என்ன சொல்வதென்று தெரியவில்லை.
சர்வ நிச்சியமாக ஆண் பெண் என்பது சக மற்றும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் உயிராகவே உணருதல் வேண்டும்.
வெறுமனே சுதந்திரம் இல்லை என்று புலம்பி கத்தி தீர்ப்பதை விட, மனம் விட்டு பேசி அவரவர் வகுத்து இருக்கும் சுதந்திரத்திற்கு ஒர் வடிவம் கொண்டு வரலாம்.
இது கட்டாயம் பொது நிலைப்படுத்த முடியாது, ஆள் ஆளுக்கு வித்தியாசப்படும்.
மொத்தத்தில் புரிதலுடன் கூடிய விட்டுக்கொடுத்துலடுன் கூடிய அன்பும் பாசமும் அரவனைப்பும் இருப்பின் வாழ்வு நிச்சியம் அங்களாய்ப்புகள் இல்லாமல் செல்லும்.
நன்றி Rapp!
நன்றி முல்லை!
நன்றி ஜமால்!
//எல்லாம் போகட்டும், சுதந்திரம் என்று நீங்கள் (பலரும்) சொல்வது தான் என்ன ?//
சுதந்திரம் என்றால் ஒருவரின் செயல்களுக்கும், அவரது இயல்புக்கும் முழுப்பொறுப்பும் அவரே ஏற்றுக் கொள்வது. இப்போது பெண்கள் ஆண்களால் உருவாக்கிய சமூகத்தில் அதன் செயல்பாடுகளுக்குத் தங்கள் எதிர்வினையை (reactions) வெளிப்படுத்தும் அளவுக்குச் சுதந்திரத்தோடு இருக்கிறார்கள் என்பது என் கருத்து.
நல்லா இருக்குங்க..
இன்னும் ரொம்ப காலம் ஆகும்.. :(
//இவர் அப்படி செய்து விட்டார்
அவர் எப்படி செய்யலாம்//
:-) நான் கண்டிக்கவில்லை. வருந்தினேன். அவ்வளவு தான்!
வருகைக்கு நன்றி நர்சிம். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லையா? :-)
//வருகைக்கு நன்றி நர்சிம். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லையா? :-)//
என்ன சொல்வதென்று தெரியவில்லை என்றுதான் சொன்னேன்.. தோன்றுவது நிறைய...என்னையே நான் இன்னும் திருத்திக் கொள்ளவும் என் எழுத்திலேயே தேவையற்ற வார்த்தைகளை உபயோகிக்காமல் இருக்க கற்றுக் கொள்ளும் பருவத்தில் இருப்பதனால்... என்ன சொல்வதென்று தெரியவில்லை என்று சொன்னேன்..
உங்கள் பதிவு நிறைய யோசிக்க வக்கிறது என்ற வார்த்தைகளின் வேறுபட்ட வெளிப்பாடுதான் அந்த முதல் பின்னூட்டம்.
மீண்டும் நன்றி நர்சிம்!
நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும் என்றி தான் அப்படிக் கேட்டேன்.
கையேடு!
வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி!
//ஒரு பெண்ணின் ஆட்டோகிராஃபை அறிந்து கொள்ள நம் எத்தனை பேருக்கு
விருப்பம், அல்லது தைரியம் இருக்கிறது?//
ஆண்களின் ஆட்டோகிராஃபை கைதட்டி வெற்றிபெற செய்யும் இவ்வுலகம், பெண்களின் ஆட்டோகிராஃபை முதல் பக்கத்திலேயே கிழித்து எறிந்துவிடும்!
ஆண்களின் ஆட்டோகிராஃபை கைதட்டி வெற்றிபெற செய்யும் இவ்வுலகம், பெண்களின் ஆட்டோகிராஃபை முதல் பக்கத்திலேயே கிழித்து எறிந்துவிடும்!\\
சரிதான் ...
கிழித்து எறியும் உலகத்தில் அதிகம் பெண்களே இருப்பார்கள் ...
//வித்யா said...
தீபா
பதிவுலகம் என்றில்லை. எங்கு வேண்டுமானுலும், ஏதாவது ஒரு கருத்தை அழுத்தமாக பதிய முற்படுங்கள். உங்களுக்கு கிடைக்கும் இமேஜே வேறு. //
உண்மை தான் வித்யா. இன்னும் யோசிக்க வைக்கிறீர்கள்.
உங்களுக்குச் சாட்டில் நன்றி சொன்னதால் இங்கே தவறி விட்டேன். Bear with me!
ஆட்டோகிராஃப் என்றில்லை, வெற்றி பெற்றிருக்கும் பல திரைப்படங்களின் ஆண் - பெண் பாத்திரங்களை பரஸ்பரம் மாற்றிப் போட்டுத் திரைக்கதையை யோசித்தால் எதிரே நாற்காலிகள் மட்டுமே இருக்கும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி உ.வாசுகி இந்த மாதிரி விவாதப் பொருள்கள் மீது பேசுகையில், ஒரு திரைப்படம் ஆண் செய்வதை பெண் பாத்திரம் செய்தாலும் அங்கீகரிக்கும் வண்ணம் கதை சொல்லி எடுக்கப்பட்டால்தான் முற்போக்குப் படம் என்று சொல்ல முடியும் என்று குறிப்பிடுவார். அவள் அப்படித்தான் திரைப்படத்தில் கமலஹாசன் சொந்தக் குரலிலேயே பாடியிருக்கும் கண்ர் புஷ்பங்களே என்கிற பாடலில், பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்க்கை பாராட்ட யாருமில்லை, பல பேரைச் சேரும் பரந்தாமன் தன்னைப் புகழ் பாடக் கேட்டதுண்டு இந்தப் பூமியிலே என்று வரும். இதுவும் இருக்கட்டும்.
கடந்த காலத்தின் வசந்தமாக ஆண்கள் சிலாகித்துக் கொள்ள வைத்திருக்கும் விஷயங்களாக உள்ளவற்றைக் குறித்து எதற்காகப் பதிவு என்று கேட்டிருக்கிறீர்கள். மறுக்க முடியாத, புறம் தள்ளிவிட்டுப் போக இயலாத ஒரு சங்கடமான கடந்த காலம் எல்லோரது வாழ்விலும் இருக்கும். அதை இப்போது எப்படி பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம். இப்படியுமா நான் என்றா, சே எல்லாம் ஒரு காலம் என்றா............
நீங்கள் வருத்தத்தோடு யாரைச் சுட்டுகிறீர்கள்என்பதை அறிய முடிகிறது....இருக்கட்டும். ஆனாலும், பதிவின் இறுதியில் ஒலிக்கிற நம்பிக்கை சொற்கள் உங்களிடம் உள ரீதியாகவும் ஒலிக்கவேண்டும். வாழ்த்துக்கள்.
எஸ் வி வேணுகோபாலன்
தங்களின் சிந்தனை எனக்கு புரிகிறது, எல்லா ஆண்களும் அம்மா, சகோதரிகள் என்று நிறைய பெண்களால் சூழ பட்டவர்கள்தான்! தங்களின் சிந்தனைக்காக, சில வரிகள்...
1. ஆண் இதையெல்லாம் துரோகம் என்று வகைபடுத்தவே இல்லை! துணிச்சல் உள்ளவன் அப்படி இப்படி... இல்லாதவன் நல்லவன், ஆணால்,சிந்தனையில் ஒன்றுதான்!
2. "ஆண் எங்காவது தனியாக தவறு செய்ய முடியுமா?" ஒரு பெண்ணுடன்தானே அதை செய்ய முடியும், தவறு கணக்கு ஒன்றுதான்! இல்லை ஆண்கள்தான் அதிகம் தவறு செய்கிறார்கள் என்றால், பெண் குலத்துக்கே அவமானம்!
(ஒரு பெண் பல பேர்களுடன் என்றாகிறது)
3. திருமணம் என்பது இப்பொழுது வியாபாரமாகிவிட்டது, மாப்பிள்ளை என்ன படித்திருக்கிறார், எவ்வளவு வாங்குகிறார் (சம்பளமோ, கிம்பளமோ!) சிகப்பா இருப்பாரா? சொந்த வீடா, நிறைய சகோதரிகள் இருக்கிறார்களா? கல்யாணம் ஆன உடனேயே கூப்பிட்டுட்டு போய்டுவாரா? அப்பபா... இப்படி வியாபாரத்தில் ஆரம்பிக்கும் விசயம் போரடிச்சு மது மாது வில் போய் நின்றால் தவறுதான் என்ன?
4. லாப நட்ட கணக்கு இல்லாமல் வருவதுதான் காதல்! (இந்த காலத்தில் அது சாத்தியம் இல்லை)
அப்படிபட்ட காதலில் மயங்கி கிடப்பவன், மதுவையும் நாட மாட்டான், அடுத்த மாதுவையும் தேட மாட்டான்! அந்த நம்பிக்கைகள் ஆண்களிடம் குறைந்துவிட்டது.
5. ஆணின் சராசரி திருமண வயது 32 இப்போழுது, அப்பொழுதுதான் அவன் பெண் வீட்டாரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிகிறது. கிட்டதட்ட பதினைந்து வருடம் அவன் பெண் வாசனை இல்லாமல் இருக்க வேண்டுமா? இந்த மாதிரி ஒரு மணித கொடுமையில் உழலுபவர்கள் இந்திய ஆண்கள் மட்டும்தான் உலகத்திலேயே! எந்ந நாட்டிலும் இப்படிபட்ட சோகம் இல்லை.
6. நான் முன்பு இருந்த குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறேன், எல்லா பிரச்சினைக்கும் காரணம் அந்த முறையை தடை செய்ததே! குழந்தையாய் இருக்கும்போதே உணக்கு நான் எனக்கு நீ! பெண் எண்ணங்கள் முளைக்குமுன் அவளும் தயார், இருவருக்குமே வேறு எண்ணங்கள் வருமா? இளமையில் சந்நியாச கொடுமை உண்டா? அந்த பெண்ணும் புகுந்த வீட்டில் இரண்டற கலந்துவிடுவாள், லாப நட்ட கணக்குகள் இல்லை அந்த தம்பதியிடம், அன்பு தழைக்கும், டாஸ்மாக் தேவையில்லை, விபச்சாரம் தேவையில்லை....
7. இந்த விசயத்தில் பெண்கள் தான் தீர்மாணமான முடிவை எடுக்க வேண்டும், லாப நட்டம் பார்க்க மாட்டேன், நான் விற்பனைக்கு அல்ல இப்படி பல,
பி.கு ; நர்சிமே வாய மூடிட்டு போகும்போது உனக்கு என்னான்னு யோசிச்சு போயிட்டேன், ஆனா மீசை துடிச்சுடுச்சு, // "ஆண் அளவுக்கு கீழ்த்தரமா போக மாட்டீங்களா"// ,
அட கொய்யால, எல்லாமே பெண்களால வர விணைதான்னு நினைச்சிட்டிருக்கும் போது....
:-(
முதலில் ஒரு தகவலைச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். ஆட்டோகிராப்பை விடவும், பெண்ணின் மனநிலையிலிருந்து அழுத்தமாகச் சொல்லப்பட்ட திரைப்படம் அவள் அப்படித்தான். அப்புறம் சமீபத்தில் வந்த பூ. தமிழ்த் திரையுலகத்தில் இந்த இரு படங்களுமே மிகுந்த கவனத்துக்கும், சிறப்புக்கும் உரிய படங்களாக கருதப்படுகின்றன. வணிகரீதியாக பெரும் வெற்றியடையாவிட்டாலும், அதிகமாக பேசப்பட்ட படங்களாக இருக்கின்றன. காலம் மாறிக்கொண்டு இருக்கிறது என்பதற்கான நம்பிக்கைகள் இவைகள் என நினைக்கிறேன்.
அப்புறம், நீ வருத்தப் பட்டிருக்கும், அந்தப் பதிவரின் பதில்களை நானும் படித்தேன். அவருடைய வலைப்பக்கத்தை நானும் தொடர்ந்து வாசித்து வருகிறேன், நான் மதிக்கிற பதிவர்களில் அவரும் ஒருவர்.
நீ குறிப்பிட்டு இருக்கும் விஷயம் சரியா, தவறா என்று முடிவுக்கு வரும் முன் இவ்விஷயம் குறித்து இன்னும் ஆழமாக யோசிக்கலாம் எனத் தோன்றுகிறது.
பொதுவெளியில் சொல்லப்பட்டதால், உனக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். அவரும் பெருமையாகவோ, ஆர்ப்பாட்டமாகவோ இதனைச் சொல்லவில்லை. அந்தக் கருத்துக்கள் குறித்து எந்தப் பெருமிதமும் அவருக்கு இல்லையென்பதை அந்தப் பதிவிலேயே உணர முடியும்.அவருடைய கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு ஒரு வலியும், வேதனையும் உணர முடியும் என நினைக்கிறேன். இதனால் அந்தப் பதிவருக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. சட்டென்று விமர்சித்திருக்க வேண்டாமோ, அவருடைய படைப்புகளோடு இந்தக் கருத்துக்களை பொருத்திப் பார்த்திருக்கலாமோ என்பதுதான் என் சிந்தனை. நானும், நீயும் நேசிக்கும் மகத்தான எழுத்தாளர்கள் உலகத்தின் முன்னால் தயக்கமற்று, வெளிப்படையாக இன்னும் எவ்வளவோ பேசியிருக்கிறார்கள். செய்திருக்கிறார்கள். ஆஸ்பத்திரி வராண்டாவில் வைத்து. மனைவியை அபார்ஷன் செய்யச் சொல்லி கழுத்தை நெறித்த மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிகாட்டைப் படித்தபோது நான் விக்கித்துப் போயிருக்கிறேன். ஆனால் அந்தக் கட்டுரையைப் படிக்கும்போது அவரோடு சேர்ந்து நானும் அழுதிருக்கிறேன்.
இங்கே நம் இலக்கியத்தில் பட்டினத்தார் சொல்லாததா? அது எதற்கு? ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு... என்று தமிழகத்தையே பாட வைத்து விட்டார் கவிஞர் கண்ணதாசன். அதனால் என்ன ஆனது. காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான கவிதைகளை எழுதியவரை குடிகாரக் கவிஞர் என்று சமூகம் ஏளனமாகப் பேசியதும் உண்டு. அதனால் எல்லாம் சீரழிந்துவிடாத சமூகம் ஒரு பதிவில், தனக்குப் பிடித்தமானவையாக ஒரு பதிவர் குறிப்பிட்டு விட்டதாலா சீரழிந்துவிடும்? படைப்புக்கும், படைப்பாளிக்கும் இடையிலான உறவில் சமூகத்திற்கு ஒரு தெளிவான பார்வை இருக்க வேண்டியது அவசியமாகிறது. பயமாக இருக்கிறது என்பதும், யாரை நம்புவது என்ற கேள்வியும் தேவையற்ற குழப்பங்கள்.
இன்னும் நிறைய சொல்லத் தோன்றுகிறது. நீயும் யோசிப்பாய் என நம்புகிறேன். லௌகீக வாழ்வின் அர்த்தங்களும், மரபுகளும், தனித்தன்மை மிக்கவர்களுக்கு அல்லது அசாதரணமானவர்களுக்கு சில நேரம் பிடிபடாது. அவர்களும் அடைபட மாட்டார்கள். அது மற்றவர்களுக்கு நாகரீகமற்றதாகவும், மிகப்பெரும் ப்ழிக்கும் உரியதாகவும் தோன்றுவது இயல்பே. ஆனால் அந்த இயல்புதான் சரியென்று சொல்ல முடியாது என நினைக்கிறேன்.
மிக நேர்மையானவர்கள் போல் இருந்து கொண்டு சகல கழிசடைத்தனங்களுக்கும் சொந்தக்காரர்களாய் இங்கு ஏராளம் பேர் இருக்கிறார்கள். உதாரண புருஷன் என்று வரிசை விட்டுக்கொண்டு அக்கிரமும், அசிங்கமும் செய்கிற யோக்கியசிகாமணிகள் எவ்வள்வோ பேர் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் பயமும், அவநம்பிக்கையும் வேண்டியிருக்கிறது.
ஆனால், உன்னுடைய ஒரு கேள்விக்கு மட்டும் என்னால் மௌனம்தான் சாதிக்க முடிகிறது இப்போதைக்கு. ஒரு பெண்ணால் இப்படி தன் கருத்துக்களை சுதந்திரமாக நிச்சயம் சொல்லிவிட முடியாது. அதற்கு இதைப் போல வியாக்கியானங்களும் சொல்ல முடியாது. சமூகம் பதைபதைத்து விடும்.
காலம் நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கையே தும்பிக்கை
உங்களுக்கு சாதகமா ஆட்டோகிராஃப் படத்த எடுத்து விமர்சனம் விமர்சனம் செஞ்சுடிங்க . ஏன் மத்த படங்களையும் விட்டு வைக்கணும்
படம் 1:
அஞ்சாதே படத்துல வர்ற பிரசன்னா கேரக்டர ஒரு பொண்ணு பண்ணி இருந்தா ?
சகிக்க முடியல இல்ல?
படம் 2:
சுப்ரமணியபுரம் படத்துல ஜெய்க்கு பதிலா சுவாதி தலைய ஆட்டிகிட்டு "கண்கள் இரண்டால் " பாட்டு பாடுனா ?
ரசிக்க முடியல இல்ல?
படம் 3:
பூ படத்துல ஸ்ரீகாந்த் இடத்துல பார்வதியையும் , பார்வதி இடத்துல ஸ்ரீகாந்தும் கேரக்டர் மாறி செஞ்சு இருந்தா ?
மனதில் ஒட்டவே இல்லை இல்ல?
மேலும் படிக்க
http://irumbuthirai.blogspot.com/
திரு. வேணுகோபாலன் அவர்களுக்கு,
தங்கள் வருகைக்கும் விரிவான பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நான் சுட்டிய பதிவர் வேறு. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
//அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி உ.வாசுகி இந்த மாதிரி விவாதப் பொருள்கள் மீது பேசுகையில், ஒரு திரைப்படம் ஆண் செய்வதை பெண் பாத்திரம் செய்தாலும் அங்கீகரிக்கும் வண்ணம் கதை சொல்லி எடுக்கப்பட்டால்தான் முற்போக்குப் படம் என்று சொல்ல முடியும் என்று குறிப்பிடுவார். //
ஆஹா! இது தான் நானும் சொல்ல வந்த கருத்து. மிக்க நன்றி.
நசரேயன்,
வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி!
அங்கிள்,
உங்கள் பின்னூட்டத்தை நிதானமாக்ப் படித்து முடித்தேன். நிறைய விஷய்ங்கள் தெளிவு படுத்தினீர்கள் ஆனாலும் நான் சொல்ல விரும்புவன உள்ளன. வந்து சொல்கிறேன்.
aravind!
வருகைக்கு மிக்க நன்றி. நீங்களும் கொஞ்சம் இருங்க. இதோ வர்றேன்!
நன்றி சென்ஷி!
manipaakkam!
தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி. நீங்கள் பல யதார்த்தமான உண்மைகளை மு வைத்துள்ளீர்கள் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதையும் இந்தப் பதிவையும் என்னால் பொருத்திப் பார்க்க இயலவில்லை. :-(
//அவரும் பெருமையாகவோ, ஆர்ப்பாட்டமாகவோ இதனைச் சொல்லவில்லை.//
//நானும், நீயும் நேசிக்கும் மகத்தான எழுத்தாளர்கள் உலகத்தின் முன்னால் தயக்கமற்று, வெளிப்படையாக இன்னும் எவ்வளவோ பேசியிருக்கிறார்கள். //
//அதனால் எல்லாம் சீரழிந்துவிடாத சமூகம் ஒரு பதிவில், தனக்குப் பிடித்தமானவையாக ஒரு பதிவர் குறிப்பிட்டு விட்டதாலா சீரழிந்துவிடும்? //
உண்மை தான் அங்கிள். ஆனால் நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொள்ள வில்லை. மது வருந்துவதும் உல்லாசங்களில் ஈடுபடுவதும் அவரது சொந்த விருப்பு. அதற்கெல்லாம் சட்டாம்பிள்ளைத் தனம் கொண்டாட வந்து விட்டேன் என்றா நினைத்து விட்டீர்கள்?
”மது, மாது” என்ற அந்த வார்த்தைப் பிரயோகம் தான் என்னைக் காயப்படுத்தியது. அவருக்கு மட்டுமல்ல இது. பெண்களை உல்லாசப்பொருளாகப் பார்ப்பதும் அது குறித்துக் கொஞ்சமும் குற்ற உணர்ச்சியில்லாத எல்லாருக்கும் தான்.
காலங்காலமாக நிலவி வரும் மண்ணாசை, பெண்ணாசை போன்ற பத்தாம்பசலித் தனமான பிரயோகங்களை நமது வழக்கிலிருந்து களைந்தால் தான் நமது சிந்தனைகளிலிருந்தும் களைவோம் என்று நம்பலாம்.
கண்ணதாசன் அற்புதமான கவிஞர் தான். அதற்காக அவரது கவிதைகளில் எல்லாம் முற்போக்குச் சிந்தனையும் பெண்ணியமும் (இந்த வார்த்தையே வழக்கொழியும் காலம் வர வேண்டும்) மிளிர்ந்ததாகச் சொல்ல முடியாது.
மேலும் அவர் சென்ற தலைமுறை.
இன்றைய இளைய தலைமுறைப் படைப்பாளி ஒருவரிடம் அத்தகைய சிந்தனைகளை எதிர்பார்ப்பது தவறா?
வணிகமயமாகிப் போன சமூகத்தில் சிந்திக்கவும் இலக்கியம் படைக்கவும் வெகு சிலரே உள்ளனர். அவர்களை நம்பாமல் வேறு யாரை நம்புவது என்ற என் பயம் உங்களுக்கு ஏன் புரியவில்லை?
பட்டினத்தார் சங்ககாலத்தவர். அவர் பார்வையோடு இந்தத் தலைமுறை எழுத்தாளரை ஒப்பிட வேண்டும் என்று நீங்கள் கூறுவது நியாயமா?
இதை நீங்கள் சொன்ன பின் நான் பயப்படுவதில் என்ன தவறு?
நான் அதிகமாக எதிர்பார்த்து விட்டேன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். (அப்படிச் சொல்வது யாருக்கு இழுக்கு?)
Over react செய்து விட்டேன் என்று சொல்லாதீர்கள்.
:-)
aravind!
எனக்குச் சாதகமா என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை. பெண்களுக்கும் அப்படிப் பட்ட நினைவுகள் உண்டு, அதை வெளிப்படுத்தினால் தாங்கக் கூடிய மனோ நிலை சமூகத்தில் உண்டா என்பது தான் என் கேள்வி.
அஞ்சாதே படம் நான் பார்க்க வில்லை. அதில் வரும் பிரசன்னா ஒரு மோசமான வில்லன் என்று நினைக்கிறேன். மோச்மான வில்லிகளைத் தமிழ்ப் படங்கள் காட்டியதில்லையா?
அப்புறம் ஜெய் சுவாதி.. என்னங்க நீங்க? காதலனை நினைத்து உருகி உருகி காதலி பாடும் காட்சிகள் நம் படங்களில் அதிகம்!
நான் சொன்னதை இன்னும் சரியாகப் புரிந்து கொண்டு எதிர்வினை எழுதினீர்கள் என்றால் மிகவும் மகிழ்வேன்!
நன்றி.
//ஒரு பெண்ணின் ஆட்டோகிராஃபை அறிந்து கொள்ள நம் எத்தனை பேருக்கு விருப்பம், அல்லது தைரியம் இருக்கிறது?//
மிகவும் யோசிக்கவேண்டிய கேள்வி. அதனை கேட்டு புரிந்துகொள்ளும் மனவலிமை பலருக்கு இல்லை என்றே தோன்றுகிறது.
//எங்களை விடுங்கள்//
வலி தரும் சொற்கள்.
//நாளை உங்கள் மகள்களும் பேத்திகளுமாவது சுதந்திரமான, பெண்ணை மதிக்கும் சமூகத்தில் வாழ வேண்டுமென்றால்...//
ஒவ்வொரு தனிமனிதனும் சிந்தித்து மாறினால்தான் இது நடக்கும். ஒருசில மக்களிடம் மாற்றம் வந்துள்ளது என்பதை காணலாம். எனினும், இந்த இளைய தலைமுறையிடம் மாறுபட்டு யோசித்து செயல்பட வேண்டிய கடமை அதிகம் உள்ளது.
ஒரு சிறு யோசனை. இந்த மாற்றம் வரவேண்டுமெனில் நாம் நமது வீடுகளிலிருந்து, நம் வீட்டு குழந்தைகளிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என தோன்றுகிறது. சிறு வயது முதலே சரியான பாதை காண்பித்தால் அவர்களுக்கு பெண்களை பற்றிய தவறான சிந்தனைகள் வராது என்று நம்புகின்றேன்.சமுதாயம் மாறவேண்டுமெனில் ஒவ்வோரு தனிமனிதனும் மாறவேண்டும்.
தீபா,
நல்ல பதிவு.
//பெண்ணின் ஆட்டோகிராஃபை அறிந்து கொள்ள நம் எத்தனை பேருக்கு
விருப்பம், அல்லது தைரியம் இருக்கிறது?//
சினிமாவில், விளம்பரத்தில், பார்ப்பவர்களில் எல்லாம் ஆடை விலகலை, கவர்ச்சியை ரசிக்கிற, எதிர்பார்க்கின்ற ஆணின் மனம் தன் வீடு, தன் மனைவி என்று வரும்போது மட்டும் அவர்கள் கற்புடனும், இழுத்துப் போர்த்திய ஆடையுடனும் அடக்கமாக நடந்து கொள்ள வேண்டுமென்றே நினைக்கிறான். ஆதிக்க மனோபாவமும், பெண் தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணமும், பெண்ணை போகப்பொருளாக மட்டுமே பாவிக்கும் மனமுமே இதற்கு காரணம்.
//சிறந்த பதிவுகள் எழுதி வரும் இளம் பதிவரொருவர் (பெயர் கூற விருப்பமில்ல) சிகரெட், மது, மாது தனக்கு இன்றியமையாத விஷயங்கள் என்று எழுதுகிறார். என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ரொம்ப ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இது ஒரு பெருமை என்றோ அல்லது ஒரு சராசரி மனிதனின் சாதாரண தேவைகள் தானே, இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றோ சத்தியமாக நினைக்க முடியவில்லை.//
தீபா,
நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரியும். அவனிடமும் இதைப்பற்றி பேசினேன். எல்லாம் சரியாகி விடும். உங்கள் அக்கறையான வருத்தம் நியாயமானதுதான். அன்பை சரியான நேரத்தில் பெற முடியாமல் ஏங்கிய ஒரு குழந்தையான அவன் மனம், தனிமை, விரக்தி, புத்தகம், காதல், மது என எல்லாவற்றிலும் தேடிக்கொண்டிருந்தது அதைத்தான். எழுத்தில் தன்னை அமிழ்த்துக் கொண்டதன் வாயிலாக இப்போது அவன் எழுதுவது எல்லாமே பழைய நினைவுகள் மட்டுமே. இப்போது அதெல்லாம் இல்லை என்பதையும் உங்களுக்கு கூற விரும்புகிறேன். நீங்கள் அனுப்பி, அழித்த பின்னூட்டம் மின்னஞ்சலிலும் இருந்ததால், அதை என்னிடம் பகிர்ந்து கொண்ட போதே நீங்கள் எழுதியது பற்றியும், நான் இப்படி இருந்திருக்கிறேன் என்பது குறித்தும் மிகவும் வருத்தப்பட்டான்.
//இதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு பெண்களும் இப்படியெல்லாம் பேசினால் என்ன என்று நான் சொல்ல வரவில்லை. அவ்வளவு கீழ்த்தரமாக பெண்கள் எப்போதும் இறங்க மாட்டார்கள். ஆனால் அந்தத் தைரியம் ஆண்களுக்கு எப்படி வரலாம்? அதை அவர்கள் தங்கள் பலவீனங்களுக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தலாம்? இது துரோகம் இல்லையா?//
இந்தக் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். என்றாலும் பலநேரங்களில் ஆணின் உடல்ரீதியான பலஹீனங்களை பெண்கள் தனக்குச் சாதகமாக பயன்படுத்தியும் விடுகிறார்கள். சாத்தானாக நடந்து கொள்பவர்கள் ஆண், பெண் என பேதமற்று இருக்கிறார்கள் என்பது என் எண்ணம். சுயக்கட்டுப்பாடும், ஒழுக்கமும் முக்கியம் என்று எண்ணி நடப்பவர்களாக ஆண்களும் இருக்கிறார்கள். பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் பேசும் விஷயத்தைப் பொறுத்தவரையில் ஆண்தான் அல்லது பெண்தான் கெட்டவர்கள் என்று பிரித்தறிய முடியாதபடிக்கு இருக்கிறார்கள். உள்மன வக்கிரங்கள்தான் இதற்கு காரணம். இன்னும் நிறைய பேசலாம் இதுபற்றி,
பகிர்விற்கு நன்றி.
‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்
//சிகரெட், மது, மாது தனக்கு இன்றியமையாத விஷயங்கள் என்று எழுதுகிறார். //
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போதை உண்டு. வாழ்கையை அதன் அழுத்தங்களை கடந்து செல்ல.ஏற்றுக்கொள்ள.
உலகத்துலயே மிகப்பெரிய போதை கடவுள். (இதை நீங்க ஒத்துகலன்னாலும் ஒத்துகிட்டாலும்)
யாருடைய போதையும் கீழ்மைனோ நாம்ம போதைகள் எல்லாம் புனிதம்னோ பேசுறது அவ்ளோ சரின்னு படலைங்க.
நீங்க ஒரு வகையில அந்த பதிவர் மேல அக்கரையும் காட்டி இருக்கீங்க. இருந்தும் அடுத்தவர் வடிகால்களை (dr.ramadoss மாதிரி கண்மூடித்தனமா) நாம விமர்சிக்கிறது அவ்ளோ சரியான்னு யோசிங்க
FYI: எனக்கும் எந்த 'நீங்க சொன்ன கெட்ட கீழ்தரமான' பழக்கங்கள் இல்லை. ஆனா நீங்க சொல்லதா ஒன்னு இருக்கலாம்.
அடுத்த தலைமுறை பெண்களின் சுதந்திரத்தை நீங்க தான் இதுல தடுக்கிறீங்க.
நாங்க எல்லாரும் சமம் னு தான் சொல்றோம்
கோயிலுக்கு போகும் போதும் bar க்கு போகும் போதும்.
எது சரின்னு அவுங்க முடிவுபண்ணட்டும். அப்பா,அம்மா நினைக்கிறது தான் சரி மத்ததெல்லாம் தப்புன்னு வளர்ந்து வளர்ந்து தான் இப்ப ஒரு இனமே இயந்திரமா கிடக்கு.
இதுக்கு மேல சொல்ல மனசில்ல.
உங்கள எனக்கு தெரியாது.comment போடனுமான்னு முடிவுபண்ணிக்கோங்க. என் கருத்தை உங்களுக்கு சொல்லனும்னு தோனித்து. அதை பண்ணிட்டேன்.
நான் ஒரு ஆண்.என்னை விட்டுதல்லுங்க.
நீங்க ஒரு முறை பெண்(ணிய) எழுத்தாளர் புத்தகங்களை வாசிச்சு பாருங்க.ஒரு வேலை அதுகூட உங்க மகளுக்கோ பேத்திக்கோ கண்டிப்பா பிரச்சனை உண்டாக்கலாம் (உங்க கருத்துப்படி).
//பி.கு ; நர்சிமே வாய மூடிட்டு போகும்போது உனக்கு என்னான்னு யோசிச்சு போயிட்டேன், ஆனா மீசை துடிச்சுடுச்சு, // "ஆண் அளவுக்கு கீழ்த்தரமா போக மாட்டீங்களா"// ,
அட கொய்யால, எல்லாமே பெண்களால வர விணைதான்னு நினைச்சிட்டிருக்கும் போது....//
என்னளவில் சில கொள்கைகள் இருக்கிறது நண்பா.. அதனால்தான் வாயை மூடிக்கொண்டு போய்விட்டேன்..
தனிப் பதிவரை பொதுவில் வைத்து வாதம் செய்யக் கூடாது..அக்கறை எனும் பட்சத்தில் மெயிலி இருக்கலாம்..
பொதுப் பிரச்சனை என்ற நோக்கம் என்பதால்.. இளம்பதிவர் என்ற வார்த்தைகளுக்குப் பதில் ‘பொதுவாக வலையுலகில் சிலர் அல்லது அனேகப் பதிவுகள்’ என்ற வார்த்தையை இந்தப் பதிவில் உபயோகித்திருந்தால் நிச்சயம் என் கருத்துகள் இருந்திருக்கும்..
தீபா,
பெண்ணின் சுதந்திரம் என்பது எது என்பதில் தான் பிரச்சனையே.
ஆண் என்ன செய்கிறானோ அதை பெண்ணும் செய்ய முடிந்தால் சுதந்திரம் என்கிறோமா?
எதை சமுதாயம் மறுக்கிறதோ அதை மீறுவது சுதந்திரம் என்கிறோமா?
ஆட்டோகிராப்போடு ஒப்பிட்டு பார்த்துள்ளீர்கள். நினைத்துப்பார்க்க முடிகிறதா என பலமுறை கேட்டுள்ளீர்கள். அப்படியானால், நீங்கள் சொன்னவைகள் சாத்தியப்பட்டுவிட்டால் பெண் சுதந்திரம் அடைந்து விட்டாளா?
என் வாழ்வில் என்னோடு இணைந்திருக்கும் எந்த பெண்ணும் சுதந்திரக் குறைவை உணர்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.
ஆணாகட்டும், பெண்ணாகட்டும் சுதந்திரத்திற்கு அளவுகோல் தேவை சகோதரி.
//சிகரெ, மது, மாது //
என தொடர்ந்து வந்த சொற்களின் பதப்பிரயோகம் குறித்துத்தான் உன் விமர்சனம் என்பது உன் பின்னூட்டத்தைப் பார்க்கும்போதுதான் உறைக்கிறது. காலம் காலமாக பூசிக்கொண்டிருக்கும் இந்த வழமை என்னும் சேற்றினை இப்படியான கூர்மையான பார்வைகளால்தான் சுத்தப்படுத்திக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். அதைச் சுட்டி காட்டியதற்கு நன்றி. ஏன் என்றால் எனக்கும் அந்தக் குட்டு விழுந்திருக்கிறது
படைப்பாளிக்கும், படைப்புக்குமான உறவுகள் குறித்து நான் சொல்ல வந்த விஷயத்தை நீ சரியாக புரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.
//பின் குறிப்பு 12 Jun 09: என் பதிவில் ஒரு விஷயம் தெளிவாக இல்லை என்று உணர்கிறேன். மன்னிக்கவும்! “மது, மாது” என்று பெண்ணையும் ஒரு போகப் பொருளாகப் பார்க்கும் அந்த சொற் பயன்பாட்டுக்குத் தான் வருந்தினேன். மற்றபடி மது அருந்துபவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்ற மனப்பான்மை எனக்கு அறவே கிடையாது.//
தீபா, உங்கள் கட்டுரையில் தெளிவாக குறிப்பிடாத விஷயம் இதுதான் என்பதை இன்று தோழர் மாதவராஜ் என்னுடன் பேசும் போது அறிந்து கொண்டேன். உங்கள் கருத்து சரியானதுதான். சிகரெட், மது போன்ற உயிரற்ற பொருளைப் போன்றதா உயிருள்ள பெண் என்பவளும்.
செய்தி வாசிக்கும் போது ‘பெண்களும் குழந்தைகளும் இறந்தனர்‘ என்பார்கள். இதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. பெண்களும், குழந்தைகளும் ஒன்றாகி விடுவரா என்ன ? சிந்தனையைத் தூண்டிய பதிவிற்கும், மறுபடியும் அதற்கான பின் குறிப்பை அளித்ததற்கும் நன்றி.
//Cheers!//
இதற்கொரு நன்றி.
(சரி, ஏன் அந்தப் பின்னூட்டத்தை வெளியிடவில்லை)
‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்
மணி நரேன்!
வருகைக்கும் அன்பான பகிர்வுக்கும் மிக்க நன்றி!
//சிறு வயது முதலே சரியான பாதை காண்பித்தால் அவர்களுக்கு பெண்களை பற்றிய தவறான சிந்தனைகள் வராது என்று நம்புகின்றேன்//
அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.
அகநாழிகை அவர்களுக்கு!
//அவன் எழுதுவது எல்லாமே பழைய நினைவுகள் மட்டுமே. இப்போது அதெல்லாம் இல்லை என்பதையும் உங்களுக்கு கூற விரும்புகிறேன். //
மிக்க மகிழ்ச்சி. ஆனால் நீங்களும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவரின் தனிப்பட்ட வடிகால்களையும் சந்தோஷங்களையும் விமர்சிக்கும் அளவுக்குக் குறுகிய மனப்பான்மை உடையவள் அல்ல நான்.
தயவு செய்து இன்று இட்டிருக்கும் பின் குறிப்பைப் படித்துப் பாருங்கள். அது தான் நான் சொல்ல விரும்பியது.
(ஆனால் பெண் பதிவர்களுக்கு அது இல்லாமலே புரிந்து விட்டது என்பது விந்தை தான்! இதிலிருந்து இன்னும் நிறைய புரிகிறதல்லவா?)
அவரது பதில்களை நானும் ரசித்தேன். அதற்கு நான் இட்டிருந்த பின்னூட்டம் வேடிக்கையாகத் தான். பின்பு ஏனடா வம்பு என்று நீக்கி விட்டேன். அது என் சின்னப்புள்ளத் தனங்க்ளில் ஒன்று. குறைத்துக் கொள்ள வேண்டும். புண்படுத்தி இருந்தால் மிக்க் வருந்துகிறேன்.
இராவணன் அவர்களுக்கு!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அகநாழிகைக்கு அளித்துள்ள விளக்கத்தைப் படிக்க வேண்டுகிறேன்.
கடவுள் பக்தி என்னும் போதை தான் நானும் அறவே விரும்பாத ஒன்று. மற்றவை எவ்வளவோ பரவாயில்லை!
sabash
நன்றி தராசு!
நர்சிம்!
மீள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிவுலகில் அனேகம் பேர் ஆயிரம் விதமாக எழுதுகிறார்கள். அவை எல்லாவற்றையும் நான் படிப்பதுமில்லை. அவை பற்றி எனக்குக் கவலையுமில்லை.
நான் தொடர்ந்து வாசிக்கும் பதிவுகளில் ஒன்றான, நம்பிக்கை தரக்கூடிய ஒரு நல்ல எழுத்தாளரின் பிறழ்வு வருத்தமளித்தது. அதை வெளிப்படுத்த எண்ணினேன். இனி அம்மாதிரியான வார்த்தைகளை (casual ஆகக் கூட) யாரும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதால் பதிவிட்டேன்.
மற்றபடி ஊருக்கு நாட்டாமை செய்ய எனக்குத் தகுதியோ, அனுபவமோ, விருப்பமோ எதுவும் இருப்பதாக நான் எண்ணவில்லை.
மேலும் நான் அவரைக் கண்டிக்கவோ அவமதிக்கவோ இல்லையே. அப்புறம் அவர் யாராக இருந்தால் என்ன?
மிக்க நன்றி அகநாழிகை!
வெளியிட்டு விட்டேனே?
நன்றி அங்கிள்!
படைப்பாளிக்கும் படைப்புக்குமான உறவு பற்றி நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் நான் படைப்பாளியை விமர்சிக்க வில்லை என்று இப்போது புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி. :-)
radha!
Thank you.
என் மெளனம் உடைப்பதே உங்கள் நோக்கம் என்று நினக்கிறேன் தீபா..
1.நீங்களும் அகநாழிகை வாசுவும் இங்கு செய்து கொண்டிருப்பது மிகப்பெரிய வன்முறை.
2. என்னதான் அந்தப் பதிவர் யார் என்பதை சொல்லாவிட்டாலும் எல்லோருக்கும் தெரியும்
3. தனிமனிதனின் பழக்கங்களையும் இப்பொழுது திருந்தி விட்டான் போன்ற சொற்களையும் பொதுவில் வைத்துப் பேச யார் உங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள்? அந்தப் பதிவரின் மனநிலையில் இருந்து யோசியுங்கள்.
//பதிவுலகில் அனேகம் பேர் ஆயிரம் விதமாக எழுதுகிறார்கள். அவை எல்லாவற்றையும் நான் படிப்பதுமில்லை. அவை பற்றி எனக்குக் கவலையுமில்லை.//
இந்த வார்த்தைகளை சொல்லும் நீங்கள் சமூகம் என்று லேபிளில் போடமுடியாதே?
//மேலும் நான் அவரைக் கண்டிக்கவோ அவமதிக்கவோ இல்லையே. அப்புறம் அவர் யாராக இருந்தால் என்ன?//
சத்தியமாய் எனக்கு நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பதிவரிடம் இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை..என்றாலும் பின்னூட்டங்களில் இது அவருக்கு மிகப் பெரிய அவமரியாதை அல்லது இதுவரை அவர் மீதிருந்த பிம்பம் உடைத்தெரியப்பட்டது வாசுவின் பின்னூட்டங்களால்..
//மற்றபடி ஊருக்கு நாட்டாமை செய்ய எனக்குத் தகுதியோ, அனுபவமோ, விருப்பமோ எதுவும் இருப்பதாக நான் எண்ணவில்லை. //
இந்த வரிகள் என்னை அதிகம் காயப்படுத்தியது.. ஏனெனில் நான் உங்களை அப்படிச் சொல்லவில்லை..அல்லது சொல்ல நினைக்கவில்லை.
*******
நீங்கள் கூற வந்த கருத்து மிக ஆழமானது, அர்த்தமுள்ளது. மதுவை மாதுவோடு சேர்த்துச் சொல்லி எதுகை மோனை விளையாட்டுக்கள் விளையாடியது போதும் என்பதே நீங்கள் சொல்ல வந்த கருத்து.. அதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை.
****
மாதவராஜ்ஜின் பின்னூட்டங்கள் என் கருத்தை என்னைவிட அதிகமாக பேசிவிட்டன.
*******
எந்த வார்த்தையிலாவது உங்களை புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.
*****
நர்சிம்!
//நீங்கள் கூற வந்த கருத்து மிக ஆழமானது, அர்த்தமுள்ளது. //
புரிதலுக்கு மிக்க நன்றி.
//பின்னூட்டங்களில் இது அவருக்கு மிகப் பெரிய அவமரியாதை //
நான் சிறிதும் நினைத்துப் பார்க்க வில்லை அப்படி. ஆனால் இப்பதிவையும் பின்னூட்டங்களையும் படிக்கும் ஒருவர் அப்படி நினைத்தால் கூட நான் செய்தது தவறு தான்.
பகிரங்கமாக அவரிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.
//இந்த வரிகள் என்னை அதிகம் காயப்படுத்தியது.. ஏனெனில் நான் உங்களை அப்படிச் சொல்லவில்லை..அல்லது சொல்ல நினைக்கவில்லை.//
நீங்கள் அவ்வாறு சொன்னதாகச் சொல்லவில்லை நர்சிம். நான் என்னைப் பற்றிச் சொன்னேன் அவ்வளவு தான். உங்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்.
//இந்த வார்த்தைகளை சொல்லும் நீங்கள் சமூகம் என்று லேபிளில் போடமுடியாதே?//
:-) சமூகம் என்பது இந்தப் பதிவுலகத்தில் அடங்கி விடுவதா? இல்லை சமூக அக்கறை கொண்டுள்ள ஒருவர் பதிவுலகத்தில் ஒரு பதிவு விடாமல் படிக்க வேண்டுமா?
என்ன சொல்கிறீர்கள் நர்சிம்?
தீபா, ஒரு நல்ல பதிவு - கூர்மையான கருத்துகளை கொண்ட பதிவு -ஏன் இப்படி திசைத் திருப்பப்படுவது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது?!
//மற்றபடி ஊருக்கு நாட்டாமை செய்ய எனக்குத் தகுதியோ, அனுபவமோ, விருப்பமோ எதுவும் இருப்பதாக நான் எண்ணவில்லை.
மேலும் நான் அவரைக் கண்டிக்கவோ அவமதிக்கவோ இல்லையே. அப்புறம் அவர் யாராக இருந்தால் என்ன?//
இப்படி விளக்கமளித்துக் கொண்டிருப்பது அவசியமற்றது தீபா! நீங்கள் சொல்வது போல, நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது!! ஹ்ம்ம்!!
//:-) சமூகம் என்பது இந்தப் பதிவுலகத்தில் அடங்கி விடுவதா? இல்லை சமூக அக்கறை கொண்டுள்ள ஒருவர் பதிவுலகத்தில் ஒரு பதிவு விடாமல் படிக்க வேண்டுமா?
என்ன சொல்கிறீர்கள் நர்சிம்?//
இரண்டையும் குழப்பிக் கொள்கிறீர்கள் என்பதே என் முதல் பின்னூட்டத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் வாதம்.
இது ஒரு சமூகப் பிரச்சனை.. பின் ஏன் தனிப் பதிவர் பற்றிய குறிப்புகளோடு அவர் எழுதிய சில வார்த்தைகள் பிடிக்கவில்லை என்ற முன்குறிப்போடு இதை எழுதி இருக்கவேண்டும் என்பதே என் ஆதாரக் கேள்வி...
மிக நல்ல கருத்தைச் சொல்லும் போது மிகத் தெளிவாக ஆணி அடித்தது போல் சொல்லி இருக்கவேண்டும்.. பெயர் சொல்ல விரும்ப வில்லை என்று நீங்கள் ஆரம்பிக்கும் பொழுதே வேறு திசையில் பதிவின் பயணம் மாறிவிட்டது.
பின்னூட்டங்களால் அது நான் நினைத்த திசையிலேயே பயணித்தும் விட்டது.
//மன்னியுங்கள்//
இதுக்கு நீங்க ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்..பெரிய வார்த்தை எல்லாம் எதுக்குங்க?
இன்னமும் நான் சொல்வது தவறென்றே நினைத்தீர்கள் என்றால் நீங்கள் சொல்வது சரி என்று நினைக்கிறேன்.
//சந்தனமுல்லை said...
June 12, 2009 4:20 AM
தீபா, ஒரு நல்ல பதிவு - கூர்மையான கருத்துகளை கொண்ட பதிவு -ஏன் இப்படி திசைத் திருப்பப்படுவது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது?!
//மற்றபடி ஊருக்கு நாட்டாமை செய்ய எனக்குத் தகுதியோ, அனுபவமோ, விருப்பமோ எதுவும் இருப்பதாக நான் எண்ணவில்லை.
மேலும் நான் அவரைக் கண்டிக்கவோ அவமதிக்கவோ இல்லையே. அப்புறம் அவர் யாராக இருந்தால் என்ன?//
இப்படி விளக்கமளித்துக் கொண்டிருப்பது அவசியமற்றது தீபா! நீங்கள் சொல்வது போல, நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது!! ஹ்ம்ம்!!
//
தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கோருகிறேன்... மன்னியுங்கள்.
நர்சிமின் ஆற்றாமையை தாங்கள் உணர முடியாமல் இருப்பது சற்று ஆச்சர்யம்தான்! அவர் சொல்வது சரியாகவே தோன்றுகிறது!
மாது-வை, மது போன்ற ஒரு வஸ்துவுடன் வஸ்துவாக பார்ப்பது ஒரு பிரச்சினையா? அது உண்மைதானே? எல்லா மாதுவையும் யாரும் அப்படி குறிப்பிடமாட்டார்கள்! போகபொருளாக நிறைய பெண்கள் கிடைக்கும் போது, பெண்மையை (உடல், குரல்,மாடலிங் ) காசுக்காக விற்க அவர்களே போட்டி போட்டு கொண்டு தயாராகும் காலத்தில்... இதையெல்லாம் ஒரு ஆண் குறிப்பிடுவதில் பெண்மைக்கு என்ன இழுக்கு? நீங்கள் இதற்கு பெண்களை அல்லவா சாட வேண்டும்?! பெண்மையை போற்ற சொல்லி போராடுங்கள்!
சட்டாம்பிள்ளைதனம் இல்லை என்கிறீர்கள், பெண்களுக்கு இந்த பதிவு ஆண்களை விட அதிகமாக புரிகிறது வேறேயா?
என்னை மாதிரி மரமண்டை ஆண்களுக்கும் புரிவது மாதிரி நிறைய எழுதுங்கள்!
பி.கு ; தங்களை மாதிரிதான் நிறைய பெண்களின் மன ஓட்டங்கள் இருக்கின்றது, விவாதத்திற்கு வரும் தங்களை போன்றவர்களை பாராட்ட வேண்டும்! ;)
//இப்படி விளக்கமளித்துக் கொண்டிருப்பது அவசியமற்றது தீபா! நீங்கள் சொல்வது போல, நாம் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கிறது!! ஹ்ம்ம்!!//
உங்கள் ஆச்சர்யத்தை விட பலமடங்கு ஆச்சர்யம் எனக்கு சந்தனமுல்லை.
என்னுடை பின்னூட்டங்களில் எங்காவது ஏதாவது தவறான வாதம் அல்லது பதிவைப் பற்றிய கருத்து இருக்கிறதா?
போகிறபோக்கில் ‘இப்படி விளக்கமளித்துக் கொண்டிருப்பது அவசியமற்றது’ என்று சொல்வது அதுவும் கருத்துக் கூறி பதிவின் போக்கை மாற்றவேண்டாம் என்று மவுனமாக இருந்து பின் கேள்விகளால் பதில் கூறியதற்கு...
அவர் எனக்கு அளித்த விளக்கம் அது. அதை இவ்வளவு கீழ்த்தரமாக சொன்னது மிகவும் வருந்தக் கூடியதே..
இனியெப்போதும் நீங்கள் கடந்து கொண்டிருக்கும் தூரங்களுக்கிடையில் வரப்போவதில்லை.
//அவர் எனக்கு அளித்த விளக்கம் அது. அதை இவ்வளவு கீழ்த்தரமாக சொன்னது மிகவும் வருந்தக் கூடியதே..
//
நர்சிம்!
என்ன இது? புரிந்து கொள்ளாமல் வரும் எதிர்வினைகளுக்குப் பதில் சொல்வது தேவையற்றது என்று முல்லை எனக்குச் சொல்கிறார்.
இதில் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? நீங்கள் தான் சரியாகப் புரிந்து கொண்டீர்கள் என்று சொல்லி விட்டீர்களே?
Please please stop taking things personal. அவர் யாரையும் தாக்க வேண்டுமென்று சொல்லி இருப்பதாகத் தெரியவில்லை.
எனக்கு ஒரு விசயம் மட்டும் ரொம்ப சந்தோசமாயிருக்குது. நம்ப மக்கா(எதிர்வினையாற்றுபவர்,எதிர்
வினைக்குள்ளாகுபவர், வக்காலத்து வாங்குறவங்க, எதிர்க்கிறவங்க..,அப்படின்னு எல்லோரும்)இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களேன்னும், இவ்ளோ அறிவுபூர்வமா சிந்திச்சு விவாதம் நடத்திக்கிறாங்களேன்னும், மத்தவங்கள காயப்படுத்திடக்கூடாதுன்னு அக்கறை காட்டுறதும்...பெருமையாவும் பொறாமையாவுமிருக்கு. (பொறாமை, நம்மளால ஆழமா விவாதிக்க சரக்குப் போதலையேங்கறதால)
புரிதல்களில் தவறு நிகழலாம். பேசித் தீத்துக்கலாம். எல்லாரும் நல்லவங்களா இருந்தாலும் இதுமாதிரில்லாம் வரத்தான் செய்யும்போல.
நான் எதை செய்ய(விளக்கம்) வேண்டாமென்று தீபாவிற்குச் சொன்னேனோ அதையே என்னையும் செய்ய வைக்கிறீர்கள் நர்சிம்! :-))
இப்படி தீபா உங்களுக்கும், நான் தீபாவிற்கும், நீங்கள் எனக்கும் (இப்போது நான் உங்களுக்கும்) என்று மாறி மாறி விளக்க்ம் கொடுத்துக் கொண்டு பதிவின் சாராம்சத்தை விட்டி
விலகிச் செல்கிறோமோ?!! நான் தீபாவிடம் சொல்ல வந்தது இதுதான் - நீங்கள் சொல்லியிருக்கிற கருத்தை மேலும் ஆராக்கியமான விவாதத்திற்கு/புரிதலுக்கு
கொண்டு செல்லுங்கள் என்பதே!ஏனெனில் தீபா, இடுகையில் சொல்லியிருக்கும் கருத்தைக் குறித்தான புரிதலே நமக்கு அவசியம். ஒருவேளை நான்
அளித்த பின்னூட்டம் வேறு மாதிரியான தொனியைக் கொடுத்தது என்று சொல்வீர்களானால் - நன்றி, எனது மொழி இன்னும் வளரவேண்டுமென்று
உணர்த்தியதற்கு!
நல்ல நேர்மையான பகிர்வு.தொடர்ந்த விமர்சங்களும்,விவாதங்களும் தீர்வை சரியாக சொல்லாவிட்டாலும்,தீர்வை நோக்கி அமைந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஆணாதிக்க உலகத்தில் இப்படியொரு குரலை உயர்த்தியதற்கு தீபாவிற்கு ஒரு ஷொட்டு.. சூப்பர்..
வாழ்க வளமுடன்..
......தொடரும் பின்னூட்டம்
//ஆனால் இனி வரும் காலத்துக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய, நான் எழுதுவது எனக்காக இல்லை. என் மகளுக்காக, அமித்துவுக்காக, பப்புவுக்காக, உங்கள் மகள்களுக்காக...//
தீபா,இப்ப என்ன சொல்லிட்டார் அவர் ?
இளைய தலைமுறை என்ன காமம் இல்லாமலேயே வளரப்போகிறதா?
எல்லாக்குழந்தைகளும் பெற்றோர்களின் உடல் உறவில் வந்த முத்துக்கள்தானே ? காமம் பற்றிப் பேசுவதால் என்ன தவறு?
குழந்தைகளுக்கு சோறு சாப்பிடக் கற்றுக் கொடுக்கிறோம், ***கழுவ கற்றுக் கொடுக்கிறோம்,பேச/எழுதக் கற்றுக் கொடுக்கிறோம். எல்லாம் அந்த அந்த வயதில் சொல்லிக்கொடுக்கிறோம் சரியா?
அது போல அவர்களுக்கு முறையான பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவதும் நம் கடமை. காமம் பற்றி வெளிப்படையாக பேசுபவர்கள் நல்லவர்கள் கிடையாதா?
தான் மதிக்கும் ஒருவரிடம் இருந்து (தாய், தந்தை,தாத்த,பாட்டி,ஆசிரியர்) பாலியல் கல்வி அறிமுகம் ஆகும்போது அது குழந்தைக்கு ஆரோக்கியமான ஒன்றாகவும், இயல்பான ஒன்றாகவும் இருக்கும். அதே "சரோஜாதேவி" புத்தகம் மூலம் அல்லது ஆர்வத்தில் அடுத்த் தெரு மெக்கானிக்குடன் அறிமுகம் ஆகும்போது குற்றஉணர்வும் வெறும் குறுகுறுப்புமே இருக்கும்.
*******
//இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெண்கள் நிலையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கமுடியாது என்று நினைப்பீர்களானால்.. என்னை மன்னியுங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதைக் குலைத்து விடாதீர்கள்.//
இதெல்லாம் என்ன தீபா? அவர் என்ன சொல்லிவிட்டார் அப்படி?
*****
ஆண்கள் பெண்கள் அனைவரும் நல்லவர்களே. அனைவருக்கும் காமம் உள்ளது. விகிதங்கள் மற்றும் வெளிப்படுத்தும் விதம் மாறுகிறது.பேசுவது தவறொன்றும் இல்லையே?
காமம்,உறவு பற்றிப் பேசும்போது வயது வந்தவர்களுக்கான பதிவு என்று அடையாளப்படுத்தினால் போதும்.
Very well written Deepa.
Do write more such articles........
My hearty congratulations......
தீபா,
உங்கள் பதிவுகளை இப்போது தான் வாசிக்க ஆரம்பித்து இருக்கின்றேன்.
உங்கள் ஆதங்கம் நன்றாக புரிகின்றது. நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.
ஆயினும் இந்த கருத்துகளை அந்த பதிவருக்கு தனிமடலில் பகிர்ந்திருக்கலாம்.
அடுத்த தலைமுறை மேல் அக்கரை காட்டும் அளவிற்கு வயதில் முதிர்ந்த நாம் பதிவிலும் அந்த முதிர்வை காட்ட வேண்டும்.
எங்கும் எதிலும் தனிமனித சாடல் வேண்டாமே.
இந்த கருத்தை நேற்று சொல்ல வேண்டும் என்றும் உங்களுக்கு தனிமடலில் சொல்லலாம் என்றும் நினைத்திருந்தேன். உங்கள் மடல் முகவரி என்னிடம் இல்லை. அதனால் பின்னூட்டமாக பதிவிட்டதற்கு மன்னிக்க.
நல்ல பதிவு தீபா
Post a Comment