Thursday, June 18, 2009

’புறக்’கணிப்பு

”ஏய் கமலா இங்கே வா!”

”இன்னா ஐயிரே?”

கடுகடுவென்ற முகத்துடன், கோபத்துடன் நின்று கொண்டிருந்தார் சிவராமன்.

அதற்கெல்லாம் அசருபவளா பால்காரி கமலா. தனது டிரேட் மார்க் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி ஒய்யாரமாய் பால் வண்டியைத் தள்ளியவாறு வந்தாள்.

”அய்ய இன்னான்னு சீக்கிரம் சொல்லு. மத்த தெருவுக்கெல்லாம் போணுமில்ல..”


முஷ்டியை மடக்கி அவள் முகத்தின் முன் நீட்டி நீட்டி கர்ஜிக்கிறார் சிவராமன்.

”இரும்புக்கம்பிய எடுத்துண்டு போனது யாரு? என் ரப்பர் செருப்பைத் தூக்கிண்டு போனது யாரு? எலிப்பொறியை இழுத்துண்டு போன...”

அலட்சியமாக அவரை இடைமறித்து,
“அய்யே நிர்த்து ஐயிரே. லூஸா நீ? இன்னாமோ அடுக்கிக்கினே போற? எனுக்கின்னா தெரியும்?”

“ஏய் கமலா.. எனக்கு நல்லாத் தெரியும். காலையில பால் போட வரச்சே ஒவ்வொருத்தர் வீட்டுலயும் ஏதாவது அபேஸ் பண்றதே வேலயா போய்டுத்து உனக்கு. உன் வண்டியக் காமி. செக் பண்ணனும்”

அவ்வளவு தான். குய்யோ முறையோ என்று பெருங்குரலெடுத்து, கதவிடுக்கில் அகப்பட்ட பெருச்சாளி மாதிரி கத்த ஆரம்பிக்கிறாள் கமலா.

தெருவில் வாக்கிங் போகிறவர்கள் ஏளனமாக அவரையும் கமலாவையும் பார்க்கிறார்கள். சிவராமனுக்கு முகம் சிவந்து அவமானமாகிப் போகிறது.

”சரி சரி, வாய மூடு. இது தான் உனக்கு கடைசி வார்னிங். இனிமே எதையாச்சும் திருடினே, காலனி செக்ரட்டரி கிட்டே கம்ப்ளெயிண்ட் பண்ணி உன்னை இந்த ஏரியா பக்கமே வர விட மாட்டேன்.” சொல்ல் விட்டு குடு குடுவென ஃப்ளாட்டுக்குள் ஓடுகிறார்.

கமலா ஆரம்பித்த ஒப்பாரியைப் பாதியிலேயே முடிக்க மனமின்றி வழியெல்லாம் புலம்பிக் கொண்டே போகிறாள்.
கமலா! அந்தத் தெருவில் முப்பது வருடங்களாகப் பால் பாக்கெட் விநியோகம் செய்பவள். கறுப்பான ஒல்லியான சிறிய உருவம். பொக்கை வாய்க்குப் பொருந்தாத கறுத்த தலைக் கேசம். குறு குறுவென்று அலையும் கண்கள், கீச்சுக் குரலில் வெடுக் வெடுக்கென்ற பேச்சு. அநாயாசச் சுறு சுறுப்பு.

அடை மழை, புயல் எதற்கும் அசர மாட்டாள். ப்ளாஸ்டிக் பை எதையாவது தலையில் போர்த்திக் கொண்டு பால் போட வந்து விடுவாள்.

அவளுக்கு இரு மகன்கள். கணவன் சீக்காளி, வீட்டோடு இருக்கிறான்.இப்படிக் கஷ்டப்பட்டுத் தன் மகன்களை நன்கு படிக்க வைத்தாள். அவர்களும் டி.எம்.இ முடித்து நல்ல வேலைக்குச் சென்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். தாயின் மீது பாசத்துடனும். ஆனாலும் கமலாவுக்குப் பால் போடுவதை நிறுத்தவும் மனமில்லை. ஹாபியான இந்த அபேஸ் குணமும் விடவில்லை!

ஆம், சிவராமன் ஒன்றும் அபாண்டமாகச் சொல்லவில்லை. அவள் வண்டியை அனாமத்தாக விட்டிருக்கும் போது அதற்குள் எட்டிப் பார்த்தவர்கள் அசந்து போவார்கள். ஓட்டைக் குடை, பிய்ந்து போன செருப்பு, துணி ஹாங்கர், சாக்கடை குத்தும் இரும்புக் கம்பி, குப்பை முறம் என்று பொதுவாக வீட்டுக்கு வெளியே போட்டு வைத்திருக்கும் உபயோகமுள்ள, அற்ற பல பொருள்களின் கண்காட்சியே பார்க்கலாம்.

இதெல்லாம் தெரிந்தும் யாரும் அந்தத் தெருவில் இது வரை பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. அவள் பால் போட வரும் விடியலில் பெரும்பாலும் யாரும் விழித்திருக்க மாட்டார்கள். இன்று சிவராமன் அவளைப் பிடிப்பதற்காகவே விழித்துக் காத்திருந்தார் போலும்.

அவர் எப்போதுமே அப்படித்தான். எல்லோரிடமும் இயல்பாகப் பழகுவார். ஆனால் கொஞ்சம் வம்பு பிடித்தவர். அந்தக் காலனியில் முதலில் குடிவந்தவர். ஒரே மகள், இரண்டு மகன்கள். எல்லோரும் திருமணமாகி வெளிநாட்டில். மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்துகிறார்.வந்த புதிதில் அந்த ஏரியா பிரௌசிங் செண்டர் ஓனர் சங்கரை முடியைப் பிய்த்துக் கொள்ளும் அளவு படுத்தி எடுத்தார்.

அப்போது அவர் வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தது. இண்டெர்னெட் வசதி இல்லை. தினமும் அங்கு சென்று விடுவார். ஒன்று மகன்களுக்கோ மகளுக்கோ மெயில் அனுப்ப, இல்லை சி.டியில் பேரக் குழந்தைகள் ஃபோட்டோ ஏதாவது காப்பி செய்ய.
”கொடுங்க ஸார், காப்பி பண்ணித் தரேன்” என்று கேட்டால் ஒப்புக்கொள்ள மாட்டார். தானே செய்ய வேண்டும், ஆனால் அவன் உதவி செய்ய வேண்டும். வயதானவர்களுகே உரிய நடுக்கமும் நிதானமுமாக ஐந்து நிமிடங்களில் முடிக்கக் கூடிய வேலைக்கு அரைமணியாக்குவார். அவன் எரிச்சலடைய, இவர் கோபமடைய, ஒரு கட்டத்தில் இவர் வருவதைப் பார்த்தாலே ஒளிந்துகொள்ள ஆரம்பித்தான் அவன்.

**********”

ஐயிரே, இன்னா, பிள்ளைங்க எல்லாம் ஊருக்குப் போயிட்டாங்களா?”
”ம்? ” எங்கோ வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவர் கமலாவின் குரல் கேட்டுத் திரும்பினார்.
“ப்ச், ஆமாம், பேசாம நானும்...” வார்த்தைகள் வெளிப்படுமுன் கண்களிலிருந்து நிறுத்தமுடியாமல் நீர் தளும்பியது. சே இவள் முன் அழுவதா என்ற சிறு சுய கண்டிப்புடன் அதை அடக்க முயன்று தோற்றார்.

பால் வண்டியை ரோட்டில் விட்டு விட்டு வந்த கமலா, ”இன்னா ஸார் இது, பச்சக் குழந்தை மாதிரி அழுதுக்கினு.. அம்மா புண்ணியவதி, சும்ங்கலியாப் போய்ச் சேந்துக்கிறா. நீ இப்படி அழுது உடம்பைக் கெடுத்துக்காதே. ஆமாம் தனியாவா கீறே? சமையலுக்கு ஆள் யார்னா வோணுமா சொல்லு..."

அவர் பிள்ளைகள் ஏன் அவரை உடன் அழைத்துச் செல்லவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால் ஏனோ அதைப் பற்றி அவள் கேட்க விரும்பவில்லை.

“அதெல்லாம் வேண்டாம் கமலா. நாளைக்கு வீட்டைக் காலி பண்ணப் போறேன். அடையாறில் ஒரு ஹோம்ல எனக்கு இடம் பாத்திருக்கான் புள்ள. அங்க போயிடுவேன். இந்த வீட்டை வாடகைக்கு விடப் போறானாம்.”

“ஓமுன்னா...?” புரியாமல் இழுத்தாள்.

ஒரு வெற்றுச் சிரிப்புடன், “முதியோர் இல்லம். அது, பெரியவன் கூப்பிடத்தான் செஞ்சான். நான் அங்க போய் அவங்களுக்குத் தொந்தரவா எப்படி? மருமகளும் வேலைக்குப் போறா. இங்கயாவது, தெரிஞ்ச ஊரு. ஆனா இவ்ளோ பெரிய வீடு என் ஒருத்தனுக்கு எதுக்கு.. அதான்..” என்று பிள்ளைகளை விட்டுக் கொடுக்காமல் ஆரம்பித்தவர், ”நீ ரொம்பக் குடுத்து வெச்சவ கமலா. ”


கமலாவின் கண்களில் நீர் சுரந்தது. மௌனமாக அவரைப் பார்த்தாள்.
”அடக் கவலைய வுடு ஐயிரே. அதெல்லாம் அங்க போனீன்னா நல்லாத் தான் இருக்கும். உனக்கென்னா, நீ தான் எங்க போனாலும் வாய் பேசியே எல்லாரோடவும் ராசியாயிடுவியே” என்று இன்னும் என்னென்னவோ பேசி அவரைக் கொஞ்சம் தேற்றினாள் கமலா.

**********


வந்த ஒரு மாதத்தில் இல்ல வாழ்க்கைக்கு ஓரளவு பழகி விட்டிருந்தார் சிவராமன். அழகான பெரிய தோட்டத்துடன் அமைந்திருந்த அந்த முதியோர் இல்லம் வசதியாகவே இருந்தது. அவருக்கு ஒத்த சிந்தனையில் சில நண்பர்கள், லைப்ரரி, டி.வி, மாலையில் பஜன்ஸ், நல்ல சாப்பாடு, வாக்கிங், இண்டெர்நெட் என்று சௌகரியத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனாலும் பழைய வாழ்க்கையின் சுவடே இல்லாமல் திடீரென்று வேரோடு எங்கோ பிடுங்கி வைத்தது மாதிரி ஒரு உணர்வு. முக்கியமாகப் பேரப்பிள்ளைகளோடு விளையாடத் தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்ற கழிவிரக்கத்தைத் தவிர்க்கவே முடியவில்லை.

”மிஸ்டர் சிவராமன், உங்களுக்கு விசிட்டர்ஸ் வந்திருக்காங்க.”
யாராக இருக்கும், இன்னும் ஒரு தடவை கூட எட்டிக் பார்க்காத உள்ளூர் உறவுக்காரர்களில் ஒவ்வொருவராக நினைத்துக் கொண்டே ரிசப்ஷனை அடைந்தவருக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை.

”நல்லாருக்கீங்களா?” வழக்கமான தனது தோரணையைத் துறந்து அந்தப் புதிய சூழலில் அவரைச் சந்திக்கும் நிலைமையால் லேசான சங்கோஜச் சிரிப்புடன் நின்றிருந்தாள் கமலா. அருகில் அவள் மகன் குமார்.

”வணக்கம் சார், ரொம்ப நாளா உங்களைப் பார்க்க வரணும்னு நினைச்சிட்டிருந்தோம். இன்னிக்குத் தான் வர முடிஞ்சுது. எப்படி இருக்கீங்க சார்?” என்று புன்னகையுடன் தான் கொண்டு வந்திருந்த பழப்பையை நீட்டினான்.


தொண்டையில் ஏதோ அடைக்க, புதிதாகப் பிறந்த ஓர் உணர்வுடன், அவனை வாரி அணைத்துக் கொண்டார் சிவராமன்.

21 comments:

rapp said...

super:):):)

மணிஜி said...
This comment has been removed by the author.
யாத்ரா said...

மனிதமும் நேசமும், ஒவ்வொரு கணத்துள்ளும் தீராத விசித்திரங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது இந்த வாழ்வு.

Deepa said...

நன்றி rapp!
நன்றி தண்டோரா!
நன்றி yathra!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல கதைங்க...

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல கதைங்க...
கதை புரிஞ்சது ஆனா
உங்கள பத்தின விளக்கம் புரியல
பெண்கள் மனச தா புரிஞ்சுக்க முடியல இப்போ என்னால அவங்கள பத்தி எழுதினதயே.....

தராசு said...

அருமையான கதை தீபா.

இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை வைத்து அதகளம் பண்ணியிருக்கிறீர்கள். முடிவு தான் நெஞ்சை தொடுகிறது.

வாழ்த்துக்கள்

Vidhya Chandrasekaran said...

நல்லா வந்திருக்கு தீபா. வாழ்த்துகள்.

மாதவராஜ் said...

கண்கலங்கிப் போனது.
சொல்ல வந்த விஷயமும், நடையும் மிக இயல்பாக கைகோர்த்து வர, அருமையாய் வந்திருக்கிறது.
பாராட்டுக்கள்.

கே.என்.சிவராமன் said...

பதிவர்களுக்கான சிறுகதை போட்டிக்கான கதையா இதை நீங்க குறிப்பிடலை :-) அதனால இந்த பின்னூட்டம்.

தப்பா நினைக்காதீங்க. கதை ஓகே. ஆனா, பிரமாதம்னு சொல்லமாட்டேன். அதேநேரத்துல சிறப்பான நல்ல கதைய உங்களால எழுத முடியும்னு இந்த 'புறக்'கணிப்பு சொல்லுது. தொடர்ந்து எழுதுங்க.

அப்புறம் மண்ட்டோ சிறுகதையோட மொழிபெயர்ப்பு என்னாச்சுங்க?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Deepa said...

நன்றி குறை ஒன்றும் இல்லை!
//உங்கள பத்தின விளக்கம் புரியல//
இது எதுக்கு??

நன்றி தமிழினி!

நன்றி தராசு!

நன்றி வித்யா!

நன்றி அங்கிள்!


நன்றி பைத்தியக்காரன் சார்!

போட்டிக்காக நிச்சயம் எழுதவில்லை. எழுதிப் பழகும் எனக்கு உங்கள் நேர்மையான விமர்சனங்கள் ரொம்பவும் அவசியம். இன்னும் சிறப்பாக உன்னால் எழுத முடியும் என்பதை விடச் சிறந்த பாராட்டு என்ன இருக்க முடியும்? :-)

மாண்டோவை இன்னும் மறக்கலியா நீங்க? அன்று நீங்கள் என்னைத் தடுத்து விட்டதாக நினைக்கிறீர்களா? :-)
அப்படி நான் நினைக்கவில்லை. கதையைத் தேர்வு செய்து விட்டேன். விரைவில் கண்டிப்பாகச் செய்கிறேன்.

கே.என்.சிவராமன் said...

//கதையைத் தேர்வு செய்து விட்டேன். விரைவில் கண்டிப்பாகச் செய்கிறேன்.//

படிக்க காத்திருக்கிறோம். பிறகு ஒரு விஷயம். அதென்ன 'சார்?' நண்பர்களை அந்த வார்த்தை சற்றே தள்ளி நிறுத்துகிறது. ப்ளிஸ் வேண்டாமே...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல நடை, முடிவு நெகிழ்ச்சி.

அருமை. தலைப்பும்.

சந்தனமுல்லை said...

கதை நல்லாருக்கு தீபா! உங்கள் விவரிப்பு காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது!

R.Gopi said...

தீபா

கதையும், அந்த எழுத்து நடையும் அருமை.......

கண்களை கலங்க வைத்த முடிவு.......... தொடர்ந்து எழுதுங்கள்............

நானும், மத்திய கிழக்கு நாடுகள் பற்றி எழுதி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்.

www.edakumadaku.blogspot.com

நீங்கள் நகைச்சுவை பிரியராக இருந்தால், என் மற்றொரு ப்ளாக் - www.jokkiri.blogspot.com வந்து பாருங்கள்.

நன்றி.

Deepa said...

நன்றி அமித்து அம்மா!
நன்றி முல்லை!
நன்றி R.Gopi!

உயிரோடை said...

நன்றாக எழுதி இருக்கின்றீர்கள் தீபா.

குறை ஒன்றும் இல்லை !!! said...

தெரியாம கேட்டுட்டேன்.
தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க ..

Unknown said...

நல்லா எழுதி இருக்கிங்க தீபா. கதை மாந்தர்களை விவரிக்கிற விதம் நல்லா வந்திருக்கு. ஆனால் வசனங்கள் கொஞ்சம் ட்ராமடிக்கா இருக்கு. கதை எப்படி போகும் எப்படி முடியும்ன்னு யூகிக்கவும் முடியுது.

சித்திரமும் கைபழக்கம் - தொடர்ந்து எழுதுங்க. நிச்சயமா இதை விட சிறப்பா உங்களால எழுத முடியும். வாழ்த்துகள்.

Deepa said...

நன்றி உயிரோடை!
நன்றி ராஜா!

குறை ஒன்றும் இல்லை!
//தெரியாம கேட்டுட்டேன்.
தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க ..//
என்னங்க இது? நீங்க சொல்றது புரியலன்னு தானே சொன்னேன்?? அதுக்கு ஏன் மன்னிப்புக் கேட்கறீங்க்? :-(

ganesh said...

நல்லா இருக்கு... தீபா, தொடருங்கள். வாழ்த்துக்கள். அச்சு ஊடகங்களுக்கும் உங்கள் படைப்புகளை அனுப்புவது நல்லது.

www.ganeshwrites.blogspot.com