Sense of humor!
சிரிக்கச் சிரிக்கப் பேசுவதும் எழுதுவதும் ஒரு அலாதியான கலை. வெகு சிலருக்கே இலகுவாகக் கைவரும் இக்கலையை நான் வெகுவாக ரசிக்கிறேன்.
இதில் பலவகைகள் உண்டு. சிரிக்க வைக்க வேண்டும் என்று வலிந்து வார்த்தைகளையும் பாவனைகளையும் வரவழைத்துக் கொண்டு சிலர் பேசுவார்கள்; எழுதுவார்கள். முதலில் ஒரிரு முறை சிர்ப்பு வரும். பிறகு சலித்து விடும். (தொழில் ரீதியான சிரிப்பாளர்கள் விதிவிலக்கு! )
நாம் சிரிக்கும் வரை அது நகைச்சுவையாக இருந்தது என்ற உணர்வே இல்லாமல் சிலர் அடிக்கும் கமென்டுகளே என்னைப் பெரிதும் கவர்கின்றன. இத்தகையவ்ர்கள் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சீரியஸாகவே ஏதாவது பேசினாலும் நமக்குச் சட்டென்று சிரிப்பு வந்து விடும். இயல்பான இப்படிப்பட்ட நகைச்சுவை தான் என் சாய்ஸ்.
நகைச்சுவை உணர்வு என்றால் சிரிக்க வைப்பது மட்டுமே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சிலருக்குச் சிரிக்க வைப்பதில் ஆர்வம் இருக்கும். அடுத்தவர் பேச்சை ரசித்துச் சிரிக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வே கிடையாது என்பேன். அத்தகையவர்களைக் கண்டால் பெரும்பாலும் ஒதுங்கி விடுவேன்.
தனக்குச் சிரிக்க வைக்கத் தெரியாவிட்டாலும் அடுத்தவர் பேச்சில் மகிழ்ந்து ரசித்துச் சிரிப்பது, ஒரு சூழ்நிலையில் உள்ள நகைச்சுவையை முதலில் கண்டுப்பிடிப்பதும் தான் sense of humor என்பதன் உண்மையான பொருள். பிறரைத் தவிர்த்து தன்னைத் தானே கிண்டலடிப்பது தான் இதில் மிக முக்கியமான அம்சம்.
எந்த ஒரு பிரச்னையையும் பதட்டமில்லாமல் இலகுவாகக் கையாள்வது, எதிராளி கோபத்தைக் கக்கினாலும் அசராமல் எள்ளலுடன் பதிலிறுப்பது, அப்படி ஒரு பதிலைக் கேட்டவுடன் சட்டென்று கோபம் மறந்து சிரித்து விடுவது, இது எல்லாமே நகைச்சுவை உணர்வில் அடங்கும்.
காலை நேர அவசரத்தில் சின்னச் சின்ன சிடுசிடுப்புக்களுக்கிடையில் மின்னல் கீற்றுப் போல ஏதோ ஒரு வார்த்தையும் பாவனையும் சட்டென்று சிரிப்பை வரவழைத்து மனதை லேசாக்கிவிடும். அந்த நேரம், அந்தச் சிரிப்பு மட்டும் வரா விட்டால் நாளெல்லாம் ஒரு உறுத்தல் மனதில் இருந்து எல்லா வேலைகளையுமே பாதிக்கக் கூடும்.
இந்த ஒரு அம்சம் தான் என்னைப் பொறுத்தவரை மணவாழ்க்கையில் மிக மிக முக்கியமானது. To be able to laugh at yourself and make the other person laugh. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நையாண்டி செய்யலாம். உண்மையான அன்பு என்னும் அஸ்திவாரம் இருக்கும் போது மற்றவர் மனது புண்படும் அபாயமே இருக்காது.
அந்த நையாண்டியில் அன்பு இருக்கும், மறைமுகமான பெருமை இருக்கும், அன்பில் மொத்தமாக சரணடைந்ததன் குறிப்பும் இருக்கும்.
கோபமாக ஏதாவது முனகி விட்டாலும் கூட, கடைசியில் ஏதாவது வேடிக்கையாய்ப் பேசிவிட்டு "என் சோகக் கதையைக் கேட்டா மட்டும் எப்படிப் பொங்கிப் பொங்கிச் சிரிப்பு வருது பாரு இவளுக்கு!" என்ற வார்த்தைகளுக்குப் பின் உண்மையிலேயே சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். அதன் பின் எங்கே கோபப்பட?
ஜோவும் நானும் சண்டை போட்டு விட்டு ஒருவரோடு ஒருவர் பேசாமல் டிவி பார்த்துக் கொண்டிருப்போம். வடிவேலு காமெடி சீன் அல்லது சூழலுக்குப் பொருத்தமாக ஏதேனும் வசனம் வந்தால், யார் முதலில் சிரிப்பது என்ற சொலலாத போட்டி நடக்கும். பெரும்பாலும் நான் தான் தோற்று விடுவேன். அதில் இருவருக்குமே வெற்றி தான்.
"உள்ளதிலேயே ரோஷங்கெட்ட உறவுன்னா அது புருஷன் பொண்டாட்டி உறவு தான்" என்று வேதாந்தத்துடன் சமாதானமடைந்த நாட்கள் ஏராளம்!
பி.கு: இப்படி சிரிப்பாய்ச் சிரிக்கும் போது, ரொம்பப் புரிந்தது போல் கைதட்டிக் கொண்டு, உடம்பையே ஆட்டிக் கொண்டு நேஹாவும் அழகாய்ச் சேர்ந்து கொள்கிறாள்.
அவ நல்லாப் பேச ஆரம்ப்பிக்கும் போது இருக்கு எங்களுக்கு
:-)