Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Friday, August 27, 2010

முடிவுறாத கனவு...


இன்னும் ஒரு சில ஆண்டுகள் சென்றால் நம்மிருவருக்கும் அப்போது இருந்ததைப் போல் இருமடங்கு வயதாகி இருக்கும். என்ன சொல்வது?அப்போது நாம் இருவருமே குழந்தைகள் தானோ? அந்த வயதில் இப்போது யாரையாவது பார்த்தால் குழந்தைகளாகத் தான் தோன்றுகிறார்கள். அது தானே பதின்மவயதின் பிரச்னையே. குழந்தைகளா பெரியவர்களா என்று அவர்களுக்கும் தெரிவதில்லை. புரிந்து வழிநடத்த வேண்டிய பெரியவர்களுக்கும் பல சமயம் புரிவதில்லை.

அதை விடு. உனக்கு நினைவிருக்கிறதா அந்த நாள்? ஒரு பதினெட்டு வயதுக் குழந்தையின் இதயத்தை ஒரு பதினேழு வயதுக் குழந்தை குத்திக் கிழித்த அந்த நாள். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு தான் கள்ளம் கபடமில்லாமல் அன்பு பெருகி வழிந்து கொண்டிருந்தது இரு உள்ளங்களிலும்.

நாம் ஒருவரையொருவர் பார்த்தாலே பரவசம் கொள்ளத் தொடங்கினோம். என் லேப் நோட்டில் ரீடிங் எழுதிய உன் அழகான கையெழுத்தும் நான் உனக்கு எழுதிக் கொடுத்த அசைன்மென்டும் பரஸ்பரம் விலை மதிப்பில்லாத சொத்தாகின. ந‌ட்பா, ப்ரியமா, காத‌லா, "ம்...சீக்கிர‌ம் முடிவெடு ஏதாவ‌து ஒன்று" என்று அவசரத்துக்குள் ந‌ம்மைத் த‌ள்ளிய‌து எது?

ஆளுக்கு ஒன்றாக, எப்படியும் தவறாகத் தேர்ந்தெடுத்ததில் சிதறிப் போனது அந்த அழகான நாட்கள். நாம் அதுவரை பார்த்தறிந்தவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ, இம்மாதிரியான சூழலில் மற்றவர்கள் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்குச் சொல்லப் பட்டிருந்ததோ அப்படி மாறத் தொடங்கினோம்.

நீ என்னை ஓயாமல் துரத்தத் தொடங்கினாய். நான் உன்னை விஷம் போல் வெறுக்கத் தொடங்கினேன். வெற்றிகரமாக இந்தப் பாத்திரங்களுக்குள் நாம் இயல்பாகப் பொருந்திப் போனோம். நான் உன்னை வெறுக்கவே இல்லையென்பது நிரந்தரமாய் உன்னைப் பிரிந்ததுமே புரிந்து போனது.வேறெதுவும் இல்லாவிட்டாலும் அழகான நட்பாக மலர்ந்திருக்க வேண்டிய நம் உறவைச் சிதைத்ததில் நம் பங்கு எவ்வளவு?

அப்போது அறிவில்லை, அனுபவம் இல்லை, பக்குவமும் இல்லை. ஆனால் வானம்பாடிகளாய்ச் சஞ்சரித்த அந்தப் பதின்மகாலத்தில் ஈரம் காயாத‌ மனதில் உண்டான அந்த அன்பு சுத்தமான பாலைக் கடைந்து எடுத்த முதல் அமுதம் போன்றதல்லவா? முடிவுறாத கனவாக அதன் சுவை என் நினைவலைகளில் சுழன்று கொண்டே இருக்கிறது; சில சமயம் இனிதாகவும் சில சமயம் லேசாகக் கசப்பாகவும்...

அன்பான கணவனாக, தந்தையாக உன்னை என்றாவது காண நேர்ந்தால் அந்தக் கனவு இனிதே முற்றுப் பெற்று விடும். அன்பு நண்பனே, அந்நாளை எதிர்பார்த்து...

Saturday, January 9, 2010

அம்மாவின் அலமாரி

அலமாரியை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள் அம்மா...

சேலைகள், புத்தகங்கள், சின்னச் சின்னப் பெட்டிகள், புகைப்பட ஆல்பங்கள், வாசனைத் திரவியங்கள்....ஒடி வந்த நான் சந்தோஷக் கூச்சலிட்டேன்...

அறை முழுதும் சிதறிக் கிடந்த சாமான்களில் அம்மாவின் வாசனை...

பாவாடைச் சட்டையில் பள்ளியில் நடனமாடிய அம்மாவின் படம், பூப்போட்ட புடவையில் பாட்டியின் படம், முதன் முதலில் அப்பா அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்த (இப்போது ஓடாத) கைக்கடிகாரம், எஸ்.எஸ். எல்.சி சான்றிதழ் - ஒவ்வொன்றாய்ப் பார்த்து அதிசயித்தேன்...

”கலைக்காதே.. அந்தப் பக்கம் போ...” அதட்டிக் கொண்டே அம்மா வேலையை முடித்தாள்; ஒவ்வொன்றாய் உள்ளே வைத்து அலமாரியை மூடினாள்.

சுத்தமான அறையைப் பார்த்து ஏனோ எனக்கு அழுகை வந்தது.

Friday, January 8, 2010

என் இனிய‌ மீட்ப‌ர்!

வேலி தாண்டி ஓடி விளையாடிய கல்லா மண்ணாக்கள்,
குப்புற‌க் கிட‌ந்து தரை தேயக் கிறுக்கிய சித்திரங்கள்,
"ரெட், ப்ளூ, கிரீன்..."ஆடிய ஸ்கிப்பிங் கயிறுகள்,
சோப்புத் தண்ணீர் கலக்கி ஊதிய கலர் குமிழ்கள்,
தையற்கடையில் துண்டுத் துணி பொறுக்கித் தைத்த பொம்மைச் சட்டைகள்,
தாயாகும் த‌குதி வந்ததும் இழ‌ந்த இதையெல்லாம்...
தாயான‌ பிற‌கு மீட்டெடுக்கிறேன், க‌ண்ணே உன்னாலே!

Friday, November 6, 2009

நாய்க்குட்டி!

(இது குழந்தைகளுக்கான கதை தான். பெரியவர்களும் படிக்கலாம்!)

”டேய், டேய், வேணாண்டா, பாவம் டா…”

”போம்மா, அது என் கூட எப்பிடி வெளையாடுது பாரு...”

மகேஷுக்கு ஏகக் கொண்டாட்டம் தான். அந்தச் சிறிய நாய்க்குட்டியை அவன் படுத்திய பாடுகளை அஞ்சலைக்குப் பார்க்க முடியவில்லை.

அழகான நாய் அது. வெண்பழுப்பு நிறத்தில் பளபளவென்று கருவண்டுக் கண்களோடு பொம்மை போல் இருந்தது. பள்ளி விட்டு வரும்போது எங்கிருந்தோ தூக்கிக் கொண்டு வந்திருந்தான்.

பாலை ஊத்தும்மா, சோறு போடும்மா என்று முதல் நாள் அவன் பண்ணிய அலம்பல் தாங்கவில்லை.

அதன் பிறகு மெல்ல தன் வாலை அவிழ்த்து விட்டான். சும்மாவா அந்த ஏரியாவில் அறுந்த வால் என்று பெயர் வைத்திருந்தார்கள் அவனுக்கு?

அதைத் தூக்கிக் கொண்டு போய் தண்ணி டாங்கின் மேடையில் உட்கார வைத்து விடுவான். சின்னக் குட்டியான அது இறங்க அஞ்சிச் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிப்பான்.

ஒரு துளி டூத்பேஸ்டை எடுத்து அதன் மூக்கின் மேல் வைப்பான். அது நாக்கை நீட்டி நீட்டி நக்க முயன்று சோர்ந்து தரையில் விழுந்து பிறாண்டும்.

”அம்மா, அம்மா, இங்க வந்து பாரேன்.” வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பான்.

அக்கா தூங்கிக் கொண்டு இருக்கும் போது பொத்தென்று அவள் மீது போட்டு அலறி ஓட வைப்பான்.

எவ்வளவு திட்டினாலும் அடித்தாலும் கேட்க மாட்டான்.
சில சமயம் அவனைப் பார்த்தாலே வாலைக் கால்களுக்கிடையில் ஒடுக்கிக் கொண்டு போக ஆரம்பித்தது.

அம்மாவுக்கு அதைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஆசையாக வளர்ப்பான் என்று விட்டால் அந்த வாயில்லா ஜீவனை இந்தப் பாடு படுத்துகிறானே என்று.
*******************

”மகேஷ் அம்மா!”

“யாரு?”

“நான் தாம்மா வர்ஷினி அம்மா”

“ஓ, நீங்களா, வாங்க வாங்க”

“பரவாயில்ல இருக்கட்டும். இந்த நாய்க்குட்டி ஏது?”

“அதுவா, என் பையன் தான் எங்கிருந்தோ தூக்கிட்டு வந்தான். பாடா படுத்தறான். யாராவது கேட்டா குடுத்துடலாம்னு இருக்கேன்.”

“ரொம்ப நல்லதாப் போச்சு. என் பொண்ணு இதைப் பாத்துட்டு இதே மாதிரி நாய் வேணும்னு கேட்டு அழுதா. உங்க கிட்ட கேக்கலாம்னு வந்தேன்.“

”இதையே எடுத்துக்கிட்டுப் போங்க. நல்லாயிருப்பீங்க. அந்தத் துஷ்டப்பயகிட்டேந்து தப்பிச்ச மாதிரி இருக்கும்.”

“எம்பொண்ணு ஆசையாப் பாத்துக்கும்.“ என்றபடி நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டாள் அந்த அம்மாள்.

**************

”அம்மா, மணி எங்கேம்மா?”

”ஆங்?”

“மணிம்மா, மணி நாய்க்குட்டி...எங்கேம்மா? வீட்டுக்கு வந்ததுலேர்ந்து தேடிட்டே இருக்கேன்” குரல் கம்மியது

இவனிடம் சொல்ல வேண்டாமென்று நினைத்த் அம்மா, “தெரியலடா உன் தொல்லை தாங்காம ஓடிப் போயிடுச்சு போல.”

அம்மாவை முறைத்து விட்டு வெளியில் போனான்.

இருட்டிய பின்பும் வெகு நேரம் கழித்துத் தான் திரும்பி வந்தான்.

“டேய், எங்கடா போனே? படிக்காம ஊரச்சுத்திட்டு வரியா? உங்கப்பா வரட்டும். தோலை உரிக்கச் சொல்றேன்.”
என்றவாறே திரும்பிப் பார்த்த அம்மா திடுக்கிட்டாள்.
அழுதழுது வீங்கிய முகமும் சோர்ந்து போன நடையுமாய் வந்து அமர்ந்தான் மகேஷ்.

“என்னடா கண்ணா, ஏண்டா இப்படி இருக்கே? என்ன ஆச்சு?”

“அம்மா, மணி என்னை விட்டுட்டு ஏன்மா போனான்? நான் நல்ல பையன் இல்லியா?“ என்று விசும்பியவனை அம்மா பதறி அணைத்துக் கொண்டாள்.

அழுது கொண்டே தூங்கிப் போனான் மகேஷ்.

’காலையில் அவன் எழுந்திருக்கறதுக்குள்ள வர்ஷினி அம்மா கிட்ட கெஞ்சி நாய்க்குட்டியைத் திரும்ப கொண்டாந்துடணும்’ என்று நினைத்துக் கொண்டாள் அம்மா.

இரவு இடி இடித்து மழை பெய்தது. குளிரில் சுருண்டு படுத்திருந்த மகேஷ் தூக்கத்தில் ”மணி, மணி” என்றவாறே உளறிக் கொண்டிருந்தான்.

*************

“அம்மா, அம்மா, இங்க வந்து பாரேன். யார் வந்திருக்கான்னு?”

மகேஷின் கூக்குரலைக் கேட்டு விழித்தாள் அம்மா. அதற்குள் வவ் வவ் என்று பரிச்சயமான அந்தச் செல்லக் குரலும் சேர்ந்து வந்தது.

”ராத்திரியே வந்து நம்ம வீட்டு வாசலோரமா ப்டுத்திருந்திச்சும்மா.
காலையில என்னைப் பாத்தவுடனே குஷியா வாலாட்டிக்கிட்டு வந்துடுச்சி. மழையில நல்லா நனைஞ்சிருக்கு. அதுக்கு சூடா பால் கொண்டு வாம்மா!”

“என் செல்ல மணி! பட்டு மணி” என்று உற்சாகமாய் நாயைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தவனைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா.

***********

மறு நாள்...

“அம்மா இங்கே பாரேன்...”

“மணீ....ஜம்ப்!!!”

மணி தண்ணி டாங்கின் மேடையிலிருந்து அழகாய் டைவ் அடித்து ஓடி வந்தது.

அம்மா அதிசயமாய்ப் பார்த்தாள்; சந்தோஷமாகவும்!

Monday, October 19, 2009

ஜாதீ!

அலுவலகத்தில் உணவு இடைவேளை.

"ஹேய் ஷைனி, இது கண்டா..ஈ ஓணத்தினு..." ஒன்றாய் கூடி கொஞ்சு மலையாளத்தில் அரட்டை ஒரு புறம்.

"ஹேய், இன்னிக்குத் தான்யா தெரிஞ்சுது, நம்ப பி.எம் மும் "....." தான்; க்ரேட். என‌க்கு அப்ரெய்ச‌ல் ப்ராப்ள‌ம் இல்லை! நீ தான் பாவம்!...ஹீ ஹி.. ஜ‌ஸ்t ஜோக்கிங் யார்!"


"ஹலோ! டேய், வ‌ச‌ந்த் மெயில் ப‌ண்ணிருக்கான்டா‌.. ஆன்சைட்ல‌ இன்னும் ரென்டு பேர் வேணுமாம். என்னையும் ரெக்கமென்ட் பண்ணி இருக்கான்....
ஆமாம் ம‌ச்சான், அவ‌ன் எங்காளுங்க‌ தான்."...

தெளிந்த குளத்தில் கல்லெறிந்தது போல் ஏதேதோ தோன்ற‌, தனியளாய் விடப்பட்டது போல் உணர்ந்தேன்.
நான் என்ன‌ ஜாதியில் பிற‌ந்தேன் என்று நினைவு கூர்ந்து யாரையாவ‌து அதில் தெரியுமா என்று யோசித்து முடிப்ப‌த‌ற்குள், என்மீது எனக்கே வெறுப்பு வந்து அடிநாக்கில் கசந்தது. "சீ " என்று உர‌க்க‌க் க‌த்தி விட்டேன். த‌லையை உத‌றிக் கொண்டு போய் சிங்கில் காறித் துப்பி விட்டு வ‌ந்தேன்.

"என்ன... என்ன ஆச்சு?" என்று ப‌தறினார்கள்;

"ஒண்ணுமில்ல, சாப்பாட்டில‌ முடி" என்று சிரித்தேன்.

Wednesday, August 12, 2009

பொம்மை

”ஹேய்! அருண் வாடா, உள்ள வா..”

“அம்மா, இது என் ஃப்ரெண்டு அருண். என் கூட வெளையாட வந்திருக்கான்.”

”வா தம்பி... சரி ரமேசு, பாப்பாவைப் பாத்துக்கிட்டே ரெண்டு பேரும் வெளையாடிட்டு இருங்க, நான் வேலைக்குப் போயிட்டு வந்துடறேன்.”

அந்தச் சின்ன ஓட்டு வீட்டுக்குள் தன் நண்பனை அழைத்துச் சென்றான் ரமேஷ்.

ஒரு சின்னக் கூடம், அதை ஒட்டி ஒரு சமையலறை. அதனருகே குளியலறை. அவ்வளவு தான் வீடு. கூடத்தில் தூளியில் ரமேஷின் ஒன்றரை வயது தங்கச்சிப் பாப்பா தூங்கிக் கொண்டிருந்தது.

வீட்டை வித்தியாசமாகப் பார்த்தவாறே அருண் கேட்டான் ”உங்க அப்பா எங்கடா?”

“வேலைக்கிப் போயிருக்கார்டா”

”இன்னிக்கு ஸண்டே தானடா... லீவ் இல்ல?”

“அதெல்லாம் ஆஃபிஸ்ல வேல பாக்கற உங்க அப்பாக்குத் தான். எங்க அப்பா கார்ப்பெண்டராச்சே!” சிரித்தான் ரமேஷ்.

”சரி நாம வெளையாடலாமா?”

வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்த அருணுக்கு அது கண்ணில் பட்டது.
மரத்தில் அழகாகச் செதுக்கப்பட்டு பிங்க், பச்சை என்று கண்ணைப் பறிக்கும் வர்ணங்கள் பூசப்பட்ட ஒரு வண்டி.

”என்னடா அது?”

”அதுவா! பாப்பாக்கு நடை வண்டி. எங்க அப்பாவே செஞ்சாரு. நான் கூட ஹெல்ப் பண்ணேன்.“ பெருமை பொங்கச் சொன்னான் ரமேஷ்.

ஆர்வத்துடன் அதனருகே சென்றான் அருண். தொட்டுப் பார்த்து, “நிஜம்மா உங்க அப்பாவே செஞ்சாரா.. சூப்பர்டா!” என்றான்.

இது மட்டுமில்ல, இங்க பாரு...ஷெல்பில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப்பொம்மைகளைக் காட்டினான்.

”இதெல்லாம் எங்க அம்மா செஞ்சது. அவங்களே பண்ணி சட்டையும் தெச்சுப் போட்டு விடுவாங்க. நல்லாருக்கா?”

“ரொம்ப அழகா இருக்குடா” உண்மையில் அருண் அதைப் போல் பொம்மைகளை அவன் பெற்றோர் அழைத்துச் செல்லும் எந்தக் கடையிலும் பார்த்ததில்லை.

”உனக்குப் பிடிச்சிருக்கா?”

“ரொம்ப!”

“அப்போ இந்தா, இந்த பொம்மையை எடுத்துட்டுப் போ. என்னோட கிஃப்ட்!”

“ஏய், வேனாண்டா, உங்க அம்மா வந்தாத் திட்டப் போறாங்க!”

“ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. இதை மாதிரி இன்னும் எவ்ளோ வேணும்னாலும் செஞ்சுடுவாங்க.”

கண்கள் விரிய அதை வாங்கிக் கொண்டான் அருண். “ரொம்ப தாங்க்ஸ்டா. உங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப டேலண்டட்!”

இருவரும் சிறிது நேரம் விளையாடிய பின் அருண் விடைபெற்றான்; அடுத்த ஞாயிற்றுக் கிழமை தனது வீட்டுக்கு ரமேஷை வரும்படி அழைப்பு விடுத்து விட்டு.

அடுத்த வாரம்...

“அம்மா, என் ஃப்ரெண்ட் ரமேஷ் வந்திருக்காம்மா. இது அவன் தங்கச்சி ரம்யா.”

“ஹேய் குட்டிப்பாப்பா, ஸோ ஸ்வீட். சரி எல்லாரும் இங்க ஹால்லையே விளையாடுங்க. ரூமுக்குள்ள எல்லாம் போகக் கூடாது.. அப்பா ரெஸ்ட் எடுக்கறாங்க ஒகே? மம்மி ஷாப்பிங் போயிட்டு வரேன்.” அதட்டி விட்டு வெளியே செல்ல ஆயத்தமானாள் அந்த அம்மா.

அருண் தனது விளையாட்டுப் பொருள்களை எல்லாம் கொண்டு வந்து ரமேஷை அசத்த விரும்பினான்.

”ஹேய்! இங்க பார்த்தியா, இது எங்க அப்பா சிங்கப்பூர்லருந்து வாங்கிட்டு வந்தது.”

அந்தப் பெரிய ரிமோட் கண்ட்ரோல் காரை வேகமாக இயக்கிக் காண்பித்தான் அருண்.

”நல்லா இருக்குடா. ஆனா, எங்க அம்மா வேலை செய்யற வீட்ல அந்தப் பாப்பா இதே மாதிரி வெச்சிருக்கு, பாத்திருக்கேன்.”

”அப்படியா...” சற்றே ஏமாற்றமடைந்த அருண், “இதைப் பாரு இந்த வீடியோ கேம்....இது எங்க அம்மா என்னோட பர்த்டேக்குப் பிரஸண்ட் பண்ணாங்க..”


”அட! இது கண்ணா வீட்ல நான் விளையாடி இருக்கேன். நான் தான் அவனுக்கு எல்லா லெவலும் முடிக்க ஹெல்ப் பண்ணேன். ”

”சரி விடு, இந்த பார்பி டால் செட் பாத்தியா? நான் பொண்ணா தான் பொறப்பேன்னு நெனச்சு எங்க அம்மா அந்த கலெக்‌ஷன் பூரா வாங்கி வெச்சிருக்காங்க.”

அழகழகான பார்பி என்னும் பெண் பொம்மைகள், விதவிதமான அலங்காரத்தில், டாக்டர் செட், கிட்சென் செட், என்று அதற்கேற்ற உப பொருட்களும் ஒரு தனி அலமாரியில் அடுக்கப் பட்டிருந்தன.

ரமேஷ் உண்மையிலேயே அதிசயித்தான். ”ரொம்ப அழகா இருக்குடா... இந்தப் பொம்மைக்குச் சட்டையெல்லாம் உங்க அம்மாவே தெச்சாங்களா.. சூப்பர்டா”

“அடப்போடா, இதெல்லாம் அப்படியே வாங்கினது. ரொம்ப காஸ்ட்லி. அதான் ராப்பரைப் பிரிக்காம அப்படியே ஷோகேஸ்ல வெச்சிட்டாங்க. நான் கூட வெளையாடினதே இல்ல.”

ரமேஷுக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது.

அதற்குள் அவர்கள் பின்னால் தத்தித் தத்தி வந்து விட்ட ரம்யா, அந்த பொம்மைகளைக் கை காட்டி அழத் தொடங்கினாள்.

அவளைத் தூக்கிக் கொண்ட ரமேஷ், “இந்தா பாரு, அதெல்லாம் கேக்கக் கூடாது. நல்ல பாப்பா இல்ல. நமக்கு வீட்ல பொம்மை இருக்குல்ல..” என்று சமாதானப் படுத்த ஆரம்பித்தான்.

அருணுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அந்தப் பாப்பாவுக்குப் பொம்மையைக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. அம்மாவை நினைத்துப் பயமாகவும் இருந்தது.

ஆனால் அன்று தான் ரசித்துப் பார்த்ததற்கே ரமேஷ் அவன் அம்மா செய்த பொம்மையைக் கொடுத்தனுப்பினானே.

சட்டென்று அலமாரியைத் திறந்து ஒரு பொம்மையைக் குழந்தையிடம் கொடுத்தான்.

“டேய் வேண்டாம்டா.. உங்க அம்மா திட்டுவாங்க.”

அருணுக்குச் சுருக்கென்றது. ”போடா, அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க... நீ வெச்சிக்கோடா செல்லம்” என்று பாப்பாவைக் கொஞ்சினான்.
பாப்பா அழுகையை நிறுத்து விட்டுப் பூஞ்சிரிப்புச் சிரித்தது.

********

”அருண்...எங்கே, இங்க டாக்டர் செட்ல இருந்த பார்பி எங்க காணோம்? எடுத்து விளையாடிட்டு எங்கயாச்சும் போட்டுட்டியா?”

“அம்மா.. அது வந்து... ரமேஷோட குட்டித் தங்கை அதைக் கேட்டு அழுதுச்சும்மா. அதான்.. “ என்று இழுத்தான்.

“டேய் ஃபூல்! அறிவிருக்காடா உனக்கு? அது எவ்ளோ காஸ்ட்லி தெரியுமா. ஒண்ணொண்ணும் த்ரீ ஹண்ட்ரட் பக்ஸ்! இட் வாஸ் மை ட்ரெஷர்ட் கலெக்‌ஷன்! அதை எதுக்குடா கொடுத்தே?”

“குழந்தை ரொம்ப அழுதாம்மா...”

“அழுதுச்சுன்னா நீ வெளையாடி உடைச்ச வேற ஏதாவது டாய்ஸ் கொடுத்திருக்கலாம்ல? நீ எது தந்திருந்தாலும் அவங்களுக்கு உசத்தியாத்தான் இருந்திருக்கும். ஸ்டுப்பிட்! பார்பி டாலைப் போய்..”

”அருண்..அருண்...” வாசல் பக்கம் குரல் கேட்டது.

“அம்மா, இதைக் கொண்டு கொடுத்துட்டு வரச்சொன்னாங்க ஆண்ட்டி. பாப்பா தெரியாம எடுத்துட்டு வந்துடுச்சி. நான் வரேன் ஆண்டி. வரேன் அருண்”

”ஓ, தாங்க்ஸ் பா” என்றபடி அதை வாங்கிக் கொண்டு திரும்பிய அம்மாவை அருண் பார்த்த பார்வையில் ஆயிரம் கேள்விகள் தொனித்தன. ஆனால் அது அந்த அம்மாவுக்குப் புரியுமா என்பது ஐயமே.

Friday, July 17, 2009

ஒரு சின்ன கயிறு

காடர்வில் கிராமத்தில் அன்று சந்தை நாள். குடியானவர்கள் தத்தம் மனைவியருடன் ஊர் மத்தியில் இருந்த சதுக்கத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். கடும் உழைப்பினால் முறுக்கேறி மடங்கிய அவர்களது நீண்ட கால்கள் மெல்ல மெல்ல நடை போட்டன. விறைப்பாக கஞ்சி போடப்பட்ட அவர்களது மேற்சட்டைகள் காற்றில் பலூன் போலப் புடைத்து அவர்களைத் தூக்கிச் செல்வது போன்ற பிரமையை ஏற்படுத்தின. தொலைவிலிருந்து பார்த்தால் ஒவ்வொரு பலூனிலிருந்தும் தலை, கை கால்கள் முளைத்தது போல் இருந்தது.

சிலர் மாடுகளைக் கயிறு கட்டி இழுத்து வந்தனர். அவர்களது மனைவியர் கையில் கம்புடன் அவற்றை வேகமாக நடக்கும்படி அதட்டியவாறே வந்தனர். இவர்கள் கைகளில் பெரிய பெரிய கூடைகள் வைத்திருந்தனர். அவற்றினுள்ளே இருந்து கோழிக்குஞ்சுகளும் வாத்துக்களும் தலையை நீட்டி வெளியே பார்த்தன. தங்கள் கணவன் மார்களை விட இவர்கள் உற்சாகத்துடனும் சிறு துள்ளலுடனும் நடை போட்டனர். தங்கள் மெலிந்த உடலின் மீது சின்ன சால்வையும் வெள்ளைத் தலைக் குட்டையும் அதன் மீது ஒரு தொப்பியும் அவர்கள் அணிந்திருந்தனர்.

ஒரு ட்ரக் வண்டி பலமாக ஆடிக்கொண்டே கடந்து சென்றது. அதன் உள்ளே இரு ஆண்களும் பின் புறத்தில் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். வண்டியின் ஆட்டத்தைத் தாக்குப் பிடிக்க அவள் அதன் பக்கங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

காடர்வில்லின் சந்தை நடக்கும் சதுக்கத்தில் பெரிய கூட்டம் சேர்ந்திருந்தது. மனிதர்களும் கால்நடைகளும் கலவையாக அங்கு காணப்பட்டனர். மாடுகளின் கொம்புகளும் பணக்கார விவசாயிகளின் நீளமான தொப்பிகளும் குடியானவப் பெண்களின் தலை அலங்காரங்களும் துலாம்பரமாகத் தெரிந்தன. கிறீச்சிடும் குரல்களும், நல்ல திடமான கிராமத்தானின் நெஞ்சுக்கூட்டிலிருந்து வரும் பலத்த சிரிப்பும், கட்டப்பட்ட மாடுகளின் கத்தலுமாக அங்கு பேரிரைச்சல் நிலவியது.

குதிரை லாயம், மாட்டுக் கொட்டகை, வைக்கோல் போர், வியர்வை, சாணம், என்று மனிதனோடும் அவனுடன் வாழும் மிருகங்களோடும் ஒன்றிய, அந்த எளிய கிராம மண்ணுக்கே உரிய நெடி கலந்தடித்து வீசியது.

அப்போது அங்கு மேட்டர் (maitre) ஹாஷ்கோம் என்பவர் வந்து சேர்ந்தார். மெதுவாகச் சதுக்கத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தவர் சாலையில் ஒரு சின்ன கயிறு கிடப்பதைப் பார்த்தார்.

ஒரு உண்மையான நார்மன் வாசியைப்போல சிக்கனக்காரரான அவர் பயன்பாடுள்ள எதுவுமே வீணாவதை விரும்பாமல் குனிந்து அந்தக் கயிற்றைக் கையிலெடுத்தார். வாதத்தினால் வளைந்த அவரது கால்களுக்கு அவ்வளவு குனிவதே மிகச் சிரமமாக இருந்தது. கையில் வைத்து அதைத் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருந்த போது சற்று தொலைவில் மேட்டர் மாலண்டெயின் (அவரும் கடிவாளம் செய்பவர் தான்) அவ்ரையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தார். சில நாட்களுக்கு முன்பு தான் இருவருக்கும் தொழில் ரீதியாக வாய்த்தகராறு ஏற்பட்டு பேச்சுவார்த்தை அற்றுப் போயிருந்தது.

தான் கீழே கிடக்கும் கயிறொன்றை எடுத்ததைத் தனது எதிரி பார்த்துவிட்டதால் வெட்கமடைந்த ஹாஷ்கோம் அவசரமாக அதைத் தனது சட்டைக்குள் மறைத்தார்; பின்பு காற்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார். பிறகும் கீழே தவறவிட்ட எதையோ தேடுவது போன்ற பாவனையுடன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். கால்கள் வாதத்தினால் மடங்கி வலித்தன.

சற்று நேரத்துக்கெல்லாம் இறைச்சலும் முடிவில்லா பேரங்களும் நிறைந்து பரபரப்பாக இருந்த சந்தைக்கூட்டத்தினுள் சென்று கலந்து விட்டார். பொருட்கள் வாங்க வந்த குடியானவர்களின் முகங்கள் கவலையுடனே காணப்பட்டன. திடமான முடிவெடுக்க முடியாமல், வியாபாரி ஏமாற்றிவிடுவானோ என்ற சந்தேகத்துடனே குற்றம் கண்டுபிடிக்கும் மனோ நிலையுடனே வளைய வந்தனர்.

பெண்கள் தங்கள் பெரிய கூடைகளை இறக்கி வைத்துவிட்டு அதன் முன் அப்படியே அமர்ந்து கொண்டனர். கால்கள் கட்டப்பட்டு மருண்ட பார்வையுடன் துடிதுடித்த்க் கொண்டிருந்த கோழிகளையும் வாத்துக்களையும் வெளியே எடுத்து வியாபாரம் செய்யலாயினர்.

பேரங்களைக் கேட்டுச் சலனமடையாத முகத்துடன் திடமாக விலை கூறினர், பின்பு திரும்பிச்செல்லும் வாடிக்கையாளரை ஒருவித திடீர் மனமாற்றத்துடன், “சரி தான், மேட்டர் ஆதரின்! அந்த விலைக்குக் கொடுக்கிறேன்.“ என்ற ரீதியில் கூவி அழைத்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சதுக்கம் வெறிச்சோடியது.

ஜார்டெயினின் உணவகத்தில் அந்தப் பெரிய கூடம் முழுதும் நிறைந்து மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அதன் விசாலமான முற்றத்தில் எல்லா விதமான வாகனங்களும் நின்றிருந்தன. கட்டை வண்டிகள், ட்ரக்குகள், மாட்டு வண்டிகள், அழுக்கடைந்து மஞ்சளாக, பழுதுபார்க்கப்பட்டு, ஒட்டுப் போடப்பட்டு. கைப்பிடிகள் வானை நோக்கி உயர்ந்த நிலையில் அவையும் ஓய்வெடுக்கும் நிலையில் இருந்தன.

சாப்பிடுபவர்களுக்கு எதிராகப் பெரிய குமுட்டி எரிந்து அறையை இதமாகச் சூடுபடுத்திக் கொண்டிருந்தது. அந்தக் குமுட்டியில் கோழிக் குஞ்சுகளும் புறாக்களும் ஆட்டுக்கால்களும் வாட்டப்பட்டுக் கொண்டிருந்தன. இதனால் நாவூறும் மணம் அறையெங்கும் பரவி அனைவரையும் களிப்படையச் செய்தது.

மேட்டர் ஜார்டெயினின் உணவகம் பெரும் பணக்காரர்களும் கூடி சாப்பிடும் இடமாக இருந்தது. சாப்பாட்டுத் தட்டுக்களும் ஸைடர் பானக் கோப்பைகளும் மீண்டும் மீண்டும் நிறைந்து காலியாகிக் கொண்டிருந்தன. அனைவரும் தாங்கள் அன்று வாங்கியவை விற்றவை பற்றியெல்லாம் விஸ்தாரமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
பருவம் கோதுமைப்பயிருக்கு அல்ல, பச்சைக் காய்கறிகளுக்கே சாதகமாக இருக்கிறது போன்ற நுணுக்கங்களும் அலசப்பட்டன.

திடீரென்று அக்கூடத்து வாயிலில் தண்டோரா போடப்பட்டது. உடனே பலரும் ஆர்வத்துடன் எழுந்து வாயிலுக்கு ஓடினர்.


தண்டோரா போட்டவன் தனது நடுங்கும் குரலில் தொடர்பில்லாத வாசகங்களுடன் கத்தினான். “இதனால் காடர்வில் வாழ் மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், அத்துடன் இன்று சந்தையில் கூடிய அனைவருக்கும்; பென்ஸ்வில் போகும் சாலையில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணிக்குள் ஒரு கறுப்பு லெதர் பணப்பை, ஐந்நூறு ஃப்ராங்க்குளும் சில காகிதங்களும் கொண்டது, காணாமல் போயிருக்கிறது. அதைக் கண்டு எடுத்தவர் சற்றும் தாமதிக்காமல் மேயர் அலுவலகத்திலோ, அல்லது பொருளைப் பறிகொடுத்த, மேன்வில்லைச் சேர்ந்த மேட்டர் ஃபார்ச்சூன் ஹால்புக்கொர்க்கி, அவர்களிடமோ ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இருபது ஃப்ராங்க்குகள் சன்மானம்.”

அந்த ஆள் போய்விட்டான். இன்னும் சற்று தூரத்தில் அதே தண்டோராவும் செய்தியும் மீண்டும் கேட்டன.

எல்லோரும் இதைப்பற்றிப் பேசத் தொடங்கினர். தொலைத்தவனுக்குப் பொருள் மீண்டும் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி அலசி ஆராய்ந்தனர்.

உணவு வேளை முடிந்து அனைவரும் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காவல்துறை அலுவலர் வந்து விசாரித்தார். “மேட்டர் ஹாஷ்கோம் இங்கே இருக்காரா?”

உள்ளே அமர்ந்திருந்த ஹாஷ்கோம் குரல் கொடுத்தார், “நான் இங்கே தான் இருக்கேன்.”

“மேட்டர் ஹாஷ்கோம், தயவு செஞ்சு என் கூட மேயர் அலுவலகத்துக்கு வர முடியுமா? மேயர் உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னார்.”

ஹாஷ்கோம் என்ற அந்த எளியக் குடியானவன் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தார். கையிலிருந்த பிராந்தியின் கடைசி மிடற்றை விழுங்கியபடி, முன்னெப்போதையும் விட தளர்ச்சியுடன் எழுந்து வந்தார். “வர்றேன், வர்றேன்”

மேயர் அவருக்காகக் காத்திருந்தார். அந்தப் பகுதியின் மிக முக்கியமான புள்ளி அவர். தடித்த உடலும், செருக்கும் கொண்ட அவர் டம்பமான மொழிக்கும் சொந்தக்காரர்.

“மேட்டர் ஹாஷ்கோம், இன்று காலையில் பென்ஸ்வில் செல்லும் சாலையில் நீங்கள் நின்றிருந்த போது கீழே இருந்து ஹால்புக்கொர்க்கின் பணப்பையைக் கண்டெடுத்ததாகச் சொல்லப்படுகிறீர்”

அந்தக் கிராமத்தான் வெலவெலத்துப் போனார். மேயரை நோக்கி வெறித்தபடி, “நானா? நானா? பணப்பையை எடுத்தேனா?”

“ஆமாம், நீங்க தான்.”

“என் தலை மேல சத்தியமா நான் எடுக்கலை. எனக்கு அதைப்பத்தி ஒண்ணுமே தெரியாது.”

“ஆனா நீங்க எடுத்ததைப் பாத்ததாச் சொல்றாங்களே.”

“யாரு? யாரு சொல்றாங்க?”

“மெஸ்ஸியர் மாலண்டெய்ன், கடிவாளம் செய்பவர்”

இவருக்கு இப்போது நினைவு வந்தது. கோபத்தில் முகமும் சிவந்தது.

“அட, இந்த லூஸு இதைத் தான் பார்த்தான். இதோ இந்தக் கயிறை நான் எடுத்தப்போ பாத்தான்”

பாக்கெட்டுக்குள் கைவிட்டு அந்தக் கயிற்றைத் தேடி எடுத்துக் காண்பித்தார்.

மேயர் நம்பமுடியாமல் தலையை அசைத்தார்.

“மேட்டர் ஹஷ்கோம், மெஸ்ஸியர் மேலண்டெய்ன் மாதிரி ஒரு கண்ணியமான ஆள் ஒரு கயிற்றைப் போய் பணப்பைன்னு தப்பா சொல்லுவார்னு நீங்க என்னை நம்ப வைக்க முடியாது”

ஹாஷ்கோமுக்குக் கோபம் தலைக்கேறியது. பக்கவாட்டில் திரும்பிக் காறித்துப்பிய அவர், “கடவுள் மேல் ஆணையாச் சொல்றேன். இது தான் உண்மை மேயர் ஸார். என் உயிரையே பணயம் வெச்சுச் சொல்றேன்.”

மேயர் தொடர்ந்தார். “அதை எடுத்தப்புறம் ரொம்ப நேரம் கீழே குனிஞ்சு பாத்துட்டு இருந்தீங்களாமே, ஏதாவது பண நோட்டு தவறி சிதறிடுச்சான்னு”

அந்த நல்ல மனிதனுக்கு ஆத்திரத்திலும் நடுக்கத்திலும் மூச்சடைத்தது.

“எப்படி இப்படி, எப்படி இந்த மாதிரி பொய்கள் சொல்ல முடியும், ஒரு நல்ல மனுஷனோட பெயரைக் களங்கப்படுத்த...யாரு இந்த மாதிரி செய்வாங்க”

அவர் என்ன சொல்லியும் பயனில்லை. யாரும் அவரை நம்பவில்லை. மாலண்டெய்னை அவரை நேரடியாக விசாரிக்க வைத்தனர். அப்போது இருவரும் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கடுஞ்சொற்கள் பேசிச் சண்டையிட்டனர். ஹாஷ்கோமே கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரைச் சோதனை போட்டனர். ஒன்றும் கிடைக்கவில்லை.

இறுதியாக மிகவும் குழப்பமடைந்த மேயர், அரசு தரப்பு வக்கீலைக் கலந்தாலோசித்த பின் மேற்படி விசாரணைக்கு அழைப்பதாக கூறி அவரை விடுவித்தார்.

சங்கதி ஊரெங்கும் பரவியது. மேயர் அலுவலகத்தை விட்டு வெளியேறியதுமே அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு ஆவலுடன் கேள்விகள் கேட்டுத் துளைத்தனர். ஆனால் அவர்களுக்குக் கோபமோ வெறுப்போ இல்லை. வம்பு கேட்கும் ஆவல் மட்டுமே. அவர் கயிறு கண்டெடுத்த கதையைச் சொன்னார். அவர்கள் யாரும் நம்பவில்லை. அவரைப் பார்த்துச் சிரித்தனர். அவர் தொடர்ந்து தனது நண்பர்களைக் கண்டு அதே கதையைச் சொன்னார். பார்த்தவர்களிடமெல்லாம் தன்னிலை விளக்கங்களையும் தனது நியாயங்களையும் சலிக்காமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு போனார். பாக்கெட்டுகளைத் திறந்து காண்பித்தார். “போடா லூஸுப் பயலே” என்றனர்.

யாருமே தன்னை நம்பாததால் கோபமும் விரக்தியுமடைந்த அவர் என்ன செய்வதென்றறியாமல் பிதற்றிக் கொண்டே இருந்தார்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலரை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றார். தான் கயிற்றைக் கண்டெடுத்த இடத்தைக் காண்பித்தார். திரும்பி வரும் வழியெல்லாம் தனக்கு நேர்ந்த அநியாயத்தைப் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டு வந்தார்.

மாலையில் மறுபடியும் கிராமத்துக்குள் எல்லோரிடமும் சென்று தன் மீது ஏற்பட்ட வீண்பழியைத் துடைக்க முயன்றர். எங்கு சென்றாலும் அவநம்பிக்கையே சந்தித்தார். இதனால் இரவு தூங்க முடியாமல் அவதிப்பட்டார்.

அடுத்தநாள் மதியம் ஒருமணிக்கு மிராசுதார் ஒருவனின் வேலையாள், மேரியஸ் பாமெல் என்பவன் பணப்பையைக் கண்டெடுத்து மேட்டர் ஹால்புக்கொர்க்கிடம் ஒப்படைத்து விட்டான்.

இச்செய்தியும் காட்டுத் தீ போல் பரவி ஊர்மக்கள் அனைவரையும் எட்டியது. மேட்டர் ஹாஷ்கோமிடம் முறையாகவே தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே மிகுந்த களிப்புடன் தனது சகாக்களிடம் சென்று தனது சோகக் கதையின் சந்தோஷ முடிவைப் பற்றிப் பேசலானார். வெற்றிக் களிப்பு அவர் முகத்தில் கூத்தாடியது.

“தண்டனைக்குக் கூட நான் பயப்படலை. பொய் சொல்லி வீண்பழி சுமத்திட்டாங்களேன்னு தான் ரொம்ப கஷ்டமா போச்சு. ஒரு பெரிய பொய் மூட்டையின் அடியில் அமுங்குன மாதிரி இருந்தது.”

நாளெல்லாம் தனது கதையை வருவோர் போவோரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டம் கூடும் இடமெல்லாம். ஞாயிறன்று மாதாகோயிலில், மதுக்கடையில் குடிக்க வருபவர்களிடம், என்று முகந்தெரியாதவர்களிடம் கூடச் சொல்லி மகிழ்ந்தார். அவர் மனம் இப்போது உளைச்சலற்று இருந்தது. ஆனாலும் என்னவோ ஒரு இனம்புரியா கலவரம் உள்ளே நிகழ்வது போலிருந்தது. அவர் முதுகுக்குப் பின் மக்கள் பேசுவது போல் தோன்றியது.

செவ்வாயன்று ஹாஷ்கோம் காடர்வில் சந்தைக்குச் சென்றார், முக்கியமாக தன்னைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறியத் தான்.

தனது கடையின் முன் நின்றிருந்த மாலண்டெய்ன் அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.
ஒன்றும் புரியாமல் அருகே சென்று கொண்டிருந்த குடியானவர் ஒருவரிடம் பேச்சுக் கொடுக்க முயன்றார், அவ்ரோ இவரைக் கண்டவுடன் வயிற்றில் செல்லமாகக் குத்தி விட்டு, “அடேய்! பெரிய போக்கிரி அய்யா நீர்” என்று பெரிதாகச் சிரித்தார்.

மேட்டர் ஹாஷ்கோம் பெரிதும் குழம்பினார். ஏன் தன்னைப் பார்த்து அவர் அப்படிச் சொன்னார்? வழக்கம் போல் ஜார்டெயின் உணவகத்துக்குச் சாப்பிடப் போன போது தனது கதையை மீண்டும் தொடங்கினார்.

மோன்விலியர் கிராமத்திலிருந்து வந்த குதிரைக்காரன் கத்திச் சொன்னான், “ஆமாம் ஆமாம், போதும்! உன் கயிறு கதை எங்க எல்லாருக்கும் தெரியும்”

ஹாஷ்கோம் திக்கித் திணறினார், “ஆனான் அந்தப் பணப்பை தான் கிடைச்சிடுச்சில்ல?”

அதற்கு அவன் சொன்னான், “நிறுத்துமய்யா, தொலஞ்சது ஒரு விதம், கிடைச்சது ஒரு விதம். எப்படியும் உன் கை அதில் இருக்குங்கறது நிச்சயம்.”

ஹாஷ்கோம் விக்கித்து நின்றார். அவருக்கு எல்லாம் புரிந்தது. பிடிபட்டபின் தானே அந்தப் பணப்பையை யார் மூலமாகவோ கொடுத்தனுப்பி விட்டதாக இவர்கள் எண்ணுகிறார்கள் என்று. எதிர்த்துப் பேச முயன்றார். அனைவரும் சிரிக்கத் தொட்ங்கினர். கூச்சலும் கேலியும் பொறுக்க முடியாமல் சாப்பிடாமலேயே வெளியேறினார்.

கோபமும் அவமானமும் கொப்புளிக்க, தனது புத்தி சாதுர்யத்தால் நினைத்துப் பார்க்க முடியாத கயமையின் பழிக்கு ஆளாகிவிட்டதை நினைத்து மறுகினார். அதையும் கூடப் பெருமையாகவே அவர் மீது சாத்தும் கொடிய வேடிக்கையை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கொஞ்சமும் உண்மையில்லாத அபாண்டமான அந்தப் பழியின் வலி அவரது நெஞ்சைத் துளைத்தது.

மீண்டும் தனது கதையைப் பேச ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் அதை மேலும் வளர்த்தபடி, அதிகமான உணர்ச்சிவேகத்தையும் கடுஞ்சொற்களையும் சேர்த்துக் கொண்டு பேசலானார். தனியாக இருக்கும் போது கூட பல விதமான தன்னிலை விளக்கங்களையும் என்ன சொல்லி உலகை நம்ப வைப்பது என்றுமே சிந்தித்த வண்ணம் இருந்தார். அவரது வாழ்வின் பயனே அந்தக் கயிறும் அதைச் சுற்றிய கதையும் தான் என்றானது.

”அதெல்லாம் சும்மாச் சப்பைக்கட்டு,” என்றனர் அவரது முதுகுக்குப் பின். அவர் இதை உணர்ந்தார். தனது இதயத்தையே இதற்காக நொறுக்கிக் கொண்டார். அவர்கள் கண் முன்னாலேயே மொத்தமாக உயிரும் உடலும் பழுதடைந்து கொண்டு வந்தார்.

பொழுது போகாதவர்கள் சிலர் அவரைக் கயிறு கதை சொல்லும் படி அழைப்பது வாடிக்கை ஆயிற்று. போர்முனையிலிருந்து திரும்பி வந்த முதிய சிப்பாய்களை அழைத்துக் கதை கேட்பது போல. அவர் மனம் வெதும்பினார்.

டிசம்பர் மாத இறுதியில் படுத்த படுக்கையானார்.

ஜனவரி மாதம் தொடங்கிச் சிறிது நாட்களில் மரணமடைந்தார்.
சாவுக்குப் போராடிய நிலையில் நினைவு தப்பியபோதும் அவரது குற்றமற்ற நெஞ்சம் பிதற்றிக் கொண்டே இருந்தது...”ஒரு சின்ன கயிறு, ஒரு சின்ன கயிறு தான்.. இதோ பாருங்கள் மேயர்.....”

பின் குறிப்பு: மாப்பஸான் என்ற ஃப்ரெஞ்சு எழுத்தாளரின் கதையின் தமிழாக்கம் இது.

அவரது இன்னொரு கதை இங்கே.

Tuesday, July 7, 2009

இருளும் ஒளியும்

இரவு ஒன்பதே கால் மணி. தெருவே வெறிச்சோடிக் கிடக்கிறது. வீடுகளில் டிவி சப்தம் சாப்பாட்டுத் தட்டுக்களின் சப்தம் தவிர வேறொன்றும் அதிகமாக இல்லை.

”அபி, நான் என்ன சொல்ல வரேன்னா?”
“வேண்டாம் தொல்காப்பியன்! நீங்க எதுவும்... ”

“மூனு ரூபா மிச்சமாச்சு. ஐஸ்கிரீம் சாப்டேன்! எதை வேண்டுமானாலும்...”

"The defence allocation saw Finance Minister Pranab Mukherjee increasing the pension for retired service personnel..."

"தீதி தேரா தேவர் திவானா...”

“போன காலருக்காக ஒரு அழகான பாட்டு பாத்தாச்சு இப்போ அடுத்த....”

ப்ளிஷ்! திடீரென்று நிசப்தமும் கும்மிருட்டும் சூழ்கிறது.

”அய்யோ!”

”ப்ச்! இந்த வாரத்துல இதோட எத்தனை தடவை?”

”எப்போ வருமோ..எல்லா இடத்திலயும் போயிருக்கா பாருங்க”

அரைமணி நேரம் ஆனது.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வீடுகளிலும் கேட்டுகள் திறக்கப் படுகின்றன. கைகளில் விசிறிகளுடன் புழுக்கத்தைப் போக்க முயன்ற படி...

“என்ன ஸார், ஃபோன் பண்ணீங்களா எம்.இ.எஸ்ஸுக்கு?”

“எங்கே ஸார், எங்கேஜ்டா இருக்கு. எடுத்து வெச்சிட்டான் போல.”

”கேபில் ஃபால்ட்டாம் ஸார். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆவுமாம். இப்போத்தான் பண்ணிக் கேட்டேன்.”

ஆண்கள் ஒரு குழுவாய்ச் சேர்ந்து அரசியல், சினிமா, ஈ.பி காரர்களின் மெத்தனம் என்று பல துறைகளில் அரட்டையை ஆரம்பித்தார்கள்.

வீடு கட்டுவதற்காக ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணற் குவியல் மீது அமர்ந்து கூட்டத்தைத் துவக்கினர் பெண்கள். மேற்கூரிய டாபிக்குகள் தவிர குழந்தைகளின் படிப்பு, வீட்டினரின் உடல்நிலை ஆகியவையும் விசாரிக்கப்பட்டது இங்கே!

திடீரென்று கூண்டு திறக்கப்பட்ட பறவைகள் போல் உற்சாகம் தொற்றிக் கொள்ளத் தெருவில் இறங்கிய அந்தப் பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு இரவாவது பகலாவது?

விட்ட இடத்திலிருந்து தொடங்குவது போல் மும்முரமாக விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.

மண் குவியல் மேலேறி சறுக்க ஆரம்பித்தன சில வானரங்கள்.
பாண்டிக்கட்டம் வரைந்து நொண்டியடிப்பதில் ஈடுபட்டனர் இரு சிறுமிகள்.

குறுஞ்சிரிப்புடன் தாயின் இடுப்பிலிருந்து திமிறி இறங்கி அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தவழ்ந்து வந்தது சின்னக் குழந்தை ஒன்று.

“அம்மா, பாப்பாவைப் பாரும்மா, எங்க விளையாட்டைக் கெடுக்குது. தூக்கிட்டுப் போம்மா”

“அடி கழுதை. இந்த நேரத்துல என்னடி விளையாட்டு. பாப்பாவைப் பாத்துக்க” என்று அப்போது தான் மகளைக் கவனித்த மாதிரி கட்டளையிட்டு விட்டுத் திரும்ப பேச்சில் மூழ்கினார் அந்தத் தாய்.

அதற்குள் இந்தப் பக்கம் ‘தொம்’ மென்று ஒரு அம்மாவின் மேலே வந்து குதித்தார் அவரது செல்ல வானரம்.

“பிசாசே! இந்தப் பாழாப்போன கரண்ட் போனாலும் போச்சு. நமக்கு இருக்கற எரிச்சல்ல இதுங்க தொல்லை வேற..” சலித்துக் கொண்டார்.

நிலாவொளியில் அந்தத் தெருவே ஏதோ விழாக் கோலம் பூண்டது போலிருந்தது. பேச்சுச் சத்தமும், சிரிப்புச்சத்தமும், குழந்தைகளின் கூத்துக்களும்...

டிஷ்!
அணைக்கப்படாத சில டி.விக்களின் திடீர் அலறல்கள். வீடுகளில் விளக்குகள் பளிச் பளிச் சென்று எரியத் தொடங்கின.

“ஹப்பாடா” என்ற நிம்மதிப் பெரு மூச்சுக்களும் சிரிப்புக்களும். அவரவர் வீடுகளுக்குச் செல்வதற்காக எழுந்தனர்.
தொடர்ந்து சிறுவர்களும் மனமே இல்லாமல் வீட்டை நோக்கி ஓடினர்.

“வீல்” என்ற சத்தத்துடன் பேரழுகை. ஆட்கள் புடை சூழ, ஆனந்தமாகத் தெருவில் தத்தி நடை பழகிக் கொண்டிருந்த அந்தச் குழந்தைக்கு திடீரென்று இப்படி வீட்டுக்குள் திரும்ப இஷ்டமில்லை. கத்திக் கூப்பாடு போட்டது.

செல்லம் கொஞ்சி அதை ஆற்றுப்படுத்தி உள்ளே தூக்கிச் சென்ற அம்மா கதவைச் சாத்தினார்.

தெருவில் இப்போது மீண்டும் கும்மிருட்டு. நிசப்தம்.
நிலா மட்டும் தனியாக.

Thursday, June 25, 2009

ராஜாங்கம் முடிந்தது

டிஸ்க்லெய்மர்: இது சாதத் ஹாஸன் மாண்டோவின் இன்னொரு சிறுகதையின் தமிழாக்கம்.
*****************

ராஜாங்கம் முடிந்தது

ஃபோன் மணியடித்தது. மன்மோகன் எடுத்தான். “ஹலோ 44457”.

“ஸாரி, ராங் நம்பர்” - என்றது ஒரு பெண் குரல்.

ரிசீவரை வைத்து விட்டுப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைக் கையில் எடுத்தான் மன்மோகன்.
அதை ஏற்கனவே இருபது முறையாவது படித்திருப்பான். அப்படி ஒன்றும் விசேஷமில்லை அதில்.
அந்த அறையிலிருந்த ஒரே புத்தகம் அது தான். அதிலும் கடைசிப் பக்கங்களைக் காணோம்.

ஒரு வாரமாக இந்த அலுவலக அறையில் மன்மோகன் தனியாகத் தான் இருக்கிறான். வியாபார நிமித்தம் வெளியூர் சென்றிருந்த அவனது நண்பன் ஒருவனுக்குச் சொந்தமானது இந்த அறை.

தான் ஊரில் இல்லாத போது இம்மாநகரின் ஆயிரக்கணக்கான ப்ளாட்ஃபார்ம் வாசிகளில் ஒருவனான மன்மோகனை அறையில் இருந்து பார்த்துக் கொள்ளும்படி அழைத்திருந்தான்.

மன்மோகன் பெரும்பாலும் அறையிலேயே அடைந்து கிடந்தான். அவனுக்கு ஒரு வேலையும் கிடையாது. ஊதியத்துக்காகச் செய்யும் எல்லாவகை வேலைகளையும் அவன் வெறுத்தான். அவன் மட்டும் முயன்றிருந்தால் ஏதாவது ஒரு சினிமாக் கம்பெனியில் இயக்குநராக இருக்கலாம், முன்பு இருந்தமாதிரி. ஆனால் அவனுக்கு மீண்டும் அடிமையாகும் எண்ணம் இல்லை. அவன் அமைதியானவன்; இனிமையானவன்; யாருக்கும் தீங்கு எண்ணாதவன். அவனுக்கென்று சொந்தச் செலவுகள் ஒன்றும் பெரிதாக இல்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் காலையில் ஒரு கப் டீயும் இரண்டு ரொட்டிகளும். மதியம் கொஞ்சம் கூட்டுடன் இரண்டு ரொட்டிகளும் ஒரு பாக்கெட்
சிகரெட்டுகளும் தான். அதிர்ஷ்டவசமாக இவற்றை மனமுவந்து அளிக்க அவனுக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர்.

மன்மோகனுக்குக் குடும்பமோ உறவினரோ யாரும் கிடையாது. சமயத்தில் நாட்கணக்கில் கூடச் சாப்பாடு இல்லாமல் கிடப்பான். அவன் நண்பர்களுக்குக் கூட அவ்னைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், அவன் சிறுவனாக இருந்தபோதே வீட்டை விட்டு ஓடி வந்து பம்பாயின் நடைபாதைகளிலேயே வளர்ந்தவன் என்பது தான்.
அவன் வாழ்வில் இல்லாதது ஒன்றே ஒன்று தான் - பெண்கள்.

அவன் சொல்வதுண்டு, “ஒரு பெண் என்னைக் காதலித்தால் போதும். என் வாழ்வே மாறி விடும்.”
அவன் நண்பர்கள் உடனே அவனைக் கேலி செய்வர், “ அப்போ கூட நீ வேலை செய்ய மாட்டியே”
”அப்படி ஒன்று மட்டும் நிகழ்ந்தால் எப்படி உழைக்கிறேன் என்று பாருங்கள்”

“அப்போ நீ ஏன் யாரையாவது காதலிக்கக் கூடாது?”

“ஒரு ஆண் வலிந்து போய்த் தேடுவது எப்படிக் காதலாக இருக்க முடியும்? ஒரு பெண் அவளாக என்னை விரும்ப வேண்டும்”

மதியம் ஆகிவிட்டது. உணவு வேளையும் வந்தது. திடீரென்று தொலைபேசி மணியடித்தது.

“ஹலோ 44457”

”44457?” - ஒரு பெண் குரல்.

“ஆம், சரி தான்” என்றான் மன்மோகன்.

“யார் நீங்கள்” - அந்தக் குரல் கேட்டது.

“நான் மன்மோகன்”

எதிர் முனையில் பதிலில்லை.

“நீங்கள் யாரோட பேச விரும்பறீங்க” அவன் கேட்டான்.

“உங்களோட தான்” என்றது அந்தக் குரல்.

“என்னோடயா?”

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா”

“ஐயோ, அப்படி ஒண்ணும் இல்லை”

“உங்கள் பெயர் என்ன சொன்னீங்க, மதன் மோகனா?”

“இல்ல, மன்மோகன்”

“மன்மோகன்?”

மீண்டும் அமைதி.

“என்னோட பேச விரும்பறதாச் சொன்னீங்க” - அவன் சொன்னான்.

“ஆமாம்”

“அப்போ பேசுங்க”

“எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல. நீங்க ஏதாவது சொல்லுங்களேன்.”

“ரொம்ப நல்லது. நான் ஏற்கனவே என் பெயரைச் சொல்லிட்டேன். தற்காலிகமா இந்த அலுவலகம் தான் என் வீடு. வழக்கமா இரவில் நடைபாதையில தான் தூங்குவேன். ஆனா இந்த ஒரு வாரமா இந்தப் பெரிய ஆஃபிஸ் மேஜை மேல தூங்குறேன்.”

”நடைபாதையில கொசுக் கடிக்காம இருக்க என்ன பண்ணுவீங்க. கொசுவலை பயன்படுத்துவீங்களா?”

மன்மோகன் சிரித்தான். “இதுக்குப் பதில் சொல்லறதுக்கு முன்னே நான் ஒரு விஷயம் தெளிவு படுத்திடறேன். நான் பொய் சொல்றதில்ல. நான் வருஷக்கணக்கா ப்ளாட்ஃபார்ம் தான். இந்த
ஆஃபிஸ் இப்போ இருக்கறதாலே இங்கே பொழுதைப் போக்கறேன்.”

“எப்படி?”

“இதோ இங்க ஒரு புத்தகம் இருக்கு, கடைசில கொஞ்சம் பக்கங்கள் இல்லாம. ஆனா நான் இதை ஒரு இருபது தடவை படிச்சிட்டேன். என்னைக்காவது மீதிப் பக்கங்கள் கிடைக்கறப்போ
தெரிஞ்சிக்குவேன், அந்தக் காதலர்கள் ஒண்ணு சேர்ந்தாங்களா இல்லியான்னு.”

“ரொம்ப சுவாரசியமான ஆளாத் தெரியறீங்க” என்றது அந்தக் குரல்.

“சும்மா சொல்லாதீங்க”

“நீங்க என்ன பண்றீங்க?”

“பண்றேன்னா?”

“அதாவது என்ன தொழில் உங்களுக்கு?”

“தொழிலா? ஒண்ணுமில்ல. வேலையே இல்லாதவனுக்கு என்ன தொழில் இருக்கப் போகுது?
ஆனா உங்க கேள்விக்குப் பதில் சொல்லணுமின்னா பகல் பூரா ஊரச் சுத்திட்டு ராத்திரி தூங்கறது தான் என் தொழில்.”

“உங்க வாழ்க்கை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”

“இருங்க, இந்த ஒரு கேள்வியை நான் என்னையே கேட்டுக்கிட்டதில்ல. இப்ப் நீங்க கேட்டதால என் கிட்ட நானே முதல் தடவையா கேட்கறேன். என் வாழ்க்கை எனக்குப் பிடிச்சிருக்கா?”

“என்ன பதில்?”

“ம். எந்தப் பதிலும் இல்லை. ஆனா இப்படியே ரொம்ப காலமா நான் வாழ்ந்துட்டு இருக்கறதால எனக்கு இது பிடிச்சிருக்குன்னு தான் எடுத்துக்கணும்”

தொடர்ந்து எதிர்முனையில் சிரிப்பொலி.

“நீங்க ரொம்ப அழகா சிரிக்கறீங்க”, என்றான் மன்மோகன்.

”நன்றி” - அந்தக் குரல் சற்றுக் கூச்சத்துடன் ஒலித்தது. அழைப்பும் துண்டிக்கப்பட்டது.

வெகு நேரம் ரிசீவரைக் கையிலேயே வைத்துக்கொண்டு தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டிருந்தான் மன்மோகன்.

அடுத்த நாள் காலை எட்டுமணிக்குத் தொலைபேசி மீண்டும் அடித்தது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவன் சப்தம் கேட்டு விழித்தான். கொட்டாவி விட்டவாறே ரிசீவரை எடுத்தான்.

”ஹலோ, 44457”

“குட் மார்னிங், மன்மோகன் சார்”

“குட் மார்னிங், ஓ! நீங்களா. குட் மார்னிங்”

“தூங்கிக்கிட்டு இருந்தீங்களா?”

“ஆமாம். ஒண்ணு தெரியுமா, நான் இங்க வந்து நல்லாக் கெட்டுப் போயிட்டேன். திரும்பவும் ப்ளாட்ஃபார்முக்குப் போனதும் அவஸ்தைப் படப்போறேன்.”

“ஏன்?”

“ஏன்னா நடைபாதையில தூங்கினா காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துடணும்”

அவள் சிரித்தாள்.

”நீங்க நேத்திக்கு திடுதிப்னு கட் பண்ணிட்டுப் போயிட்டீங்க”

“ஆமாம், நீங்க ஏன் நான் அழகா சிரிக்கறேன்னு சொன்னீங்க?”

“இது என்ன கேள்வி! அழகா இருக்கறதைப் பாராட்டக் கூடாதா என்ன?”

“கூடாது”

“இப்படி எல்லாம் சட்டதிட்டம் போடக்கூடாது. நான் எப்போவுமே சட்டதிட்டங்களை ஏத்துக்கறது கிடையாது. நீங்க சிரிச்சா, நீங்க அழகா சிரிக்கறீங்கன்னு நான் சொல்லத்தான் செய்வேன்.”

“அப்படின்னா நான் ஃபோனைக் கட் பண்ணப் போறேன்”

“உங்க இஷ்டம்”

“நான் சங்கடப்படறது பத்தி உங்களுக்குக் கவலை இல்லையா?”

“முதல்ல நான் சங்கடப்படறது பத்தி நான் கவலைப்படணும். அதாவது நீங்க சிரிக்கும் போது நீங்க அழகா சிரிக்கறீங்கன்னு நான் சொல்லாட்டி என் நல்ல ரசனைக்கு நான் துரோகம் செய்யறதா அர்த்தம்.“

சற்று நேரம் அமைதி. பின் திரும்பவும் அந்தக் குரல், “ ஸாரி, என் வேலைக்காரி கிட்ட பேசிட்டு இருந்தேன். அப்போ உங்க நல்ல ரசனை பத்தி சொல்லிட்டு இருந்தீங்க. உங்களுக்கு வேற என்ன ரசனை எல்லாம் உண்டு?”

“அப்படின்னா?”

“அதாவது, வேறு என்ன பொழுது போக்கு, விருப்பம்? சுருக்கமாச் சொல்லணும்னா உங்களுக்கு என்ன தான் செய்யப் பிடிக்கும்?”

மன்மோகன் சிரித்தான். “ஒண்ணும் பெரிசா இல்ல, ஆனா எனக்கு புகைப்படம் எடுக்கப் பிடிக்கும்; கொஞ்சம்”

“அது ரொம்ப நல்ல ஹாபியாச்சே”

“அது நல்லதா கெட்டதான்னு எல்லாம் நான் யோசிச்சதில்ல”

“உங்க கிட்ட நல்ல காமிரா இருக்கணுமே”

“என் கிட்ட காமிரால்லாம் இல்ல. எப்போவாவது தேவைப்பட்டா யார் கிட்டயாச்சும் இரவல் வாங்குவேன். ஆனா என்னைக்காவது பணம் சம்பாதிச்சா சொந்தமா வாங்கணும்னு நினைக்கிற காமிரா ஒண்ணு இருக்கு”

”என்ன காமிரா அது”

”எக்ஸாக்டா. அது ஒரு ரிஃப்லெக்ஸ் காமிரா. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

சற்று அமைதி. “நான் ஒண்ணு யோசிச்சிட்டு இருந்தேன்”

“என்ன?”

“நீங்க என் பேரும் கேக்கல, ஃபோன் நம்பரும் கேக்கலியே”

“எனக்குக் கேக்கணும்னு தோணலை”

“ஏனோ?”

“உங்க பெயர் என்னவா இருந்தா என்ன? உங்க கிட்ட என் நம்பர் இருக்கு. அது போதும். நான் உங்களுக்கு ஃபோன் பண்ணனும்னு உங்களுக்குத் தோணினா நிச்சயம் உங்க பெயரையும் நம்பரையும் எனக்குத் தருவீங்கன்னு நம்பறேன்.

“இல்ல, மாட்டேன்”

“உங்க இஷ்டம். நானா கேக்கப் போறதில்ல”

“நீங்க ரொம்ப வித்தியாசமானவர்”

”உண்மை தான்”

மீண்டும் சற்று அமைதி.

“திரும்பவும் யோசிச்சிட்டு இருந்தியா?” அவன் கேட்டான்.

“ஆமாம், ஆனா என்ன யோசிக்கிறதுன்னே எனக்குத் தெரியல.”

“அப்போ ஃபோனை வெச்சிடுங்களேன். அப்புறம் பேசலாம்”

“நீங்க ரொம்பத் திமிர் பிடிச்சவர், நான் வெக்கிறேன்.” அந்தக் குரலில் சற்றுக் கோபம் தெரிந்தது.

மன்மோகன் சிரித்துக் கொண்டே ரிசீவரை வைத்தான். முகத்தைக் கழுவி, உடையணிந்து கொண்டு வெளியில் புறப்படத் தயாரான போது மீண்டும் மணியடித்தது; எடுத்தான். “44457”

“மிஸ்டர் மன்மோகன்” என்றது அந்தக் குரல்.

“என்ன, சொல்லுங்கள்”

“வந்து, எனக்குக் கோபம் போயிடுச்சுன்னு சொல்ல வந்தேன்”

“ரொம்ப சந்தோஷம்”

“நான் சாப்பிட்டுட்டு இருக்கும் போது தோணிச்சு. உங்க கிட்ட கோபிச்சுக்கறது சரியில்லன்னு? நீங்க சாப்பிட்டிங்களா?”

“இல்லை, அதுக்குத்தான் கிளம்பிட்டிருந்தேன், நீங்க ஃபோன் பண்ணும் போது”

“ஓ, அப்படின்னா நான் உங்களைத் தடுக்கலை. போயிட்டு வாங்க”

“எனக்கொண்ணும் அவசரமில்ல. ஏன்னா என் கிட்ட சுத்தமா காசில்ல. அதனால் இன்னிக்குக் காலையில சாப்பாடு ஒண்ணும் கிடைக்காதுன்னு நினைக்கிறேன்.”

“ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? உங்களை நீங்களே வருத்திக்கறதுல என்ன சந்தோஷம்?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. நான் இப்படியே வாழ்ந்து பழகிட்டேன்”

“உங்களுக்கு நான் ஏதாவது பணம் அனுப்பட்டுமா?”

“நீங்க விரும்பினா. எனக்குப் படியளக்கற எத்தனையோ நல்ல நண்பர்களில் நீங்களும் சேர்ந்துடுவீங்க”

“அப்படின்னா நான் அனுப்பமாட்டேன்”

“உங்க இஷ்டம்”

“நான் ஃபோனை வைக்கிறேன்”

“சரி”

மன்மோகன் ஃபோனை வைத்துவிட்டு வெளியில் போனான். மாலை வெகு நேரம் கழித்து அறைக்குத் திரும்பினான். நாள் முழுதும் தன்னை அழைக்கும் அந்தக் குரலுக்குச் சொந்தமானவளைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். அவள் இளமையாகவும் படித்தவளாகவும் தோன்றினாள். அவள் தான் எவ்வளவு அழகாகச் சிரிக்கிறாள். இரவு பதினோரு மணிக்கு மீண்டும் தொலைபேசி ஒலித்தது.

“ஹலோ”

“மிஸ்டர் மன்மோகன்”

“நான் தான் பேசறேன்”

“நான் நாள் பூரா உங்களுக்குப் ஃபோன் பண்ணிட்டு இருந்தேன். எங்கே இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா?”

“எனக்கு வேலைன்னு ஒண்ணும் இல்லாட்டியும் நான் செய்ய விரும்பற காரியங்கள் சிலது இருக்கு”

“என்னது அது?”

“ஊர் சுத்தறது”

“எப்போ திரும்பி வந்தீங்க?”

“ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி”

“நான் ஃபோன் பண்ணும் போது என்ன பண்ணிட்டிருந்தீங்க”

“மேஜை மேல படுத்து நீ எப்படி இருப்பேன்னு கற்பனை பண்ணிட்டிருந்தேன். ஆனா உன் குரலுக்கு மேல எனக்குக் கற்பனைக்கு என்ன இருக்கு?”

“கற்பனை பண்ண முடிஞ்சுதா?”

“இல்ல”

“முயற்சி பண்ணாதீங்க. ஏன்னா நான் ரொம்ப அவலட்சணமா இருப்பேன்.”

“அப்படின்னா தயவு செய்து ஃபோனை வெச்சிடு. எனக்கு அவலட்சணங்கள் பிடிக்காது”

“அப்படியா சங்கதி. நான் ரொம்ப அழகு, போதுமா. நீங்க வெறுப்பை வளர்த்துக்கறதை நான் விரும்பல.”

வெகு நேரம் இருவரும் பேசவில்லை. பின்பு மன்மோகன் கேட்டான். “என்ன மறுபடியும் யோசிச்சிட்டு இருந்தியா?”

“இல்ல, உங்களை ஒண்ணு கேட்க இருந்தேன்”

“நல்லா யோசனை பண்ணிட்டுக் கேள்”

“நான் உங்களுக்காகப் பாடவா?”

“ஓ!”

”சரி, இருங்க!”

தொண்டையைச் செருமிக் கொண்டு மிகவும் மெல்லிய மிருதுவான குரலில் அவனுக்காக ஒரு பாட்டுப் பாடினாள் அவள்.

“ரொம்ப அழகா இருந்தது”

“நன்றி” - சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

இரவெல்லாம் அவள் குரலைப் பற்றியே கனவு கண்டான் அவன். வழக்கத்தை விட முன்னதாக எழுந்து அவளது அழைப்புக்காகக் காத்திருந்தான். ஆனால் அவள் அழைக்கவில்லை.
பொறுமையிழந்து அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். மேஜை மீது படுத்து இருபது முறை படித்து முடித்த அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். படித்து முடித்தான். நாள் முழுதும் கழிந்தது. மாலை சுமார் ஏழு மணிக்குத் தொலைபேசி அழைத்தது. ஓடிச் சென்று எடுத்தான்.

“யாரது”

”நான் தான்”

“எங்கே போயிருந்தே நாள் பூரா” - வெடுக்கென்று கேட்டான்.

“ஏன்?” அந்தக் குரல் நடுங்கியது.

“நான் காத்துக்கிட்டே இருந்தேன். கையில காசிருந்தும் நான் இன்னிக்கு பூரா சாப்பிடப் போகல.”

”நான் எனக்கு எப்போ தோணுதோ அப்போ தானே ஃபோன் பண்ணுவேன். நீங்க..”

மன்மோகன் அவசரமாக மறித்தான். “இங்க பாரு, ஒண்ணு இந்த வேலையை இத்தோட நிறுத்திக்கோ, இல்ல எப்போ ஃபோன் பண்ணுவேன்னு எனக்குச் சொல்லு. என்னால இப்படிக் காத்துக் கிடக்க முடியாது”

“இன்னிக்கு நடந்ததுக்கு மன்னிச்சுக்கோங்க. நாளையிலிருந்து காலைலயும் சாய்ந்திரமும் தவறாம ஃபோன் பண்றேன்.”

“ரொம்ப நல்லது”

“நான் நினைக்கவே இல்ல, நீங்க இப்படி...”

“என்னால் எதுக்கும் காத்திருக்க முடியாது. அப்படி முடியாம போகும் போது என்னை நானே தண்டிச்சுக்கறேன்.”

”எப்படி?”

”நீ ஃபோன் பண்ணல. நான் வெளிய போயிருக்கணும்; ஆனா நான் போகல. “

“நான் வேணும்னே தான் ஃபோன் பண்ணாம இருந்தேன்”

“ஏன்?”

“நீங்க என்னை மிஸ் பண்றீங்களான்னு பார்க்கத் தான்”

“நீ ரொம்பக் குறும்புக் காரி. சரி இப்போ ஃபோனை வை. நான் போய் சாப்பிடணும்.”

“எப்போ திரும்பி வருவீங்க?”

“அரைமணி நேரத்துல.”

அரைமணி நேரம் கழித்து அவன் திரும்பினான். அவள் ஃபோன் செய்தாள். வெகு நேரம் இருவரும் பேசினார்கள். அவன் அவளை அதே பாடலை மீண்டும் பாடச் சொன்னான். அவளும் சிரித்துக் கொண்டே பாடினாள்.

இப்போது அவள் தவறாமல் காலையும் மாலையும் அவனை அழைக்க ஆரம்பித்தாள். சில நேரம் மணிக்கணக்காய்ப் பேசுவார்கள். ஆனால் இதுவரை மன்மோகன் அவள் பெயரையும் கேட்கவில்லை. அவள் நம்பரையும் அறிந்துகொள்ளவில்லை. ஆரம்பத்தில் அவளது முகத்தைக் கற்பனை செய்ய முயன்று தோற்றுப் போனானே. இப்போது அது கூட அவனுக்குத் தேவைப்படவில்லை. அவள் குரல் தான் அவனுக்கு எல்லாமே. அவளது முகம், ஆன்மா, உடல் அனைத்தும். ஒரு நாள் அவள் கேட்டாள், “மோகன் என் பெயரைக் கூட நீ கேட்கலியே ஏன்?”

“ஏன்னா என்னைப் பொறுத்தவரைக்கும் உன் குரல் தான் உன் பெயர்”

இன்னொரு நாள் கேட்டாள், “மோகன், நீ யாரையாவது காதலிச்சிருக்கியா?”

“இல்லை”

“ஏன்?”

அவன் சோகமானான். “இதற்குப் பதில் சொல்றதுக்கு நான் என் வாழ்க்கையின் குப்பைகளை எல்லாம் கிளற வேண்டி இருக்கும். கடைசியில் ஒண்ணுமே மிஞ்சாம போனால் எனக்கு ரொம்பக் வருத்தமா இருக்கும்”

“அப்படின்னா வேண்டாம், விட்டுடு.”

ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரு நாள் மோகனின் நண்பனிடமிருந்து கடிதம் வந்தது. போன வேலை முடிந்ததாகவும் அடுத்த வாரம் ஊர் திரும்புவதாகவும் எழுதி இருந்தான். அன்று மாலை அவள் ஃபோன் செய்த போது அவன் சொன்னான், “என் ராஜாங்கம் முடியப் போகிறது.”

“ஏன்?”

”என் நண்பன் திரும்பி வரப் போறான்”

“உனக்கு வேற நண்பர்கள் இல்லையா? அவங்க கிட்ட ஃபோன் இருக்குமே”

“உண்மை தான். ஆனால் அவங்க நம்பரெல்லாம் நான் உனக்குத் தர மாட்டேன்”

“ஏன்?”

“வேறு யாரும் உன் குரலைக் கேட்கறதை நான் விரும்பலை”

“ஏன்”

“நான் ரொம்பப் பொறாமைக்காரன்னு வெச்சிக்கோயேன்”

“என்ன செய்றது சொல்லு?”

“நீயே சொல்லு”

“உன் ராஜாங்கம் முடியற நாளன்னிக்கு நான் என்னோட ஃபோன் நம்பரை உனக்குத் தருவேன்”

அவனுள் கவிந்திருந்த கவலை சட்டென்று மறைந்தது. அவன் மீண்டும் அவளைக் கற்பனையில்
காண முயன்றான்; ஆனால் முடியவில்லை. அவள் குரல் மட்டுமே ஒலித்தது. இன்னும் சில
நாட்களுக்குப் பின் அவளை நேரிலேயே காணலாம் என்று நம்பிக்கை கொண்டான். அந்தக் கணத்தின் மகத்துவத்தை அவனால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை.

மறு நாள் அவள் அழைத்த போது அவன் சொன்னான், “நான் உன்னைக் காண வேண்டும் என்று ரொம்ப ஆவலாக இருக்கிறேன்”

“ஏன்?”

“என் ராஜாங்கம் முடியற அன்னிக்கு உன் நம்பரைத் தர்றதாச் சொன்னியே”

”ஆமாம்”

“அப்படினா, நீ இருக்கிற இடத்தையும் எனக்குச் சொல்லுவே இல்ல? எனக்கு உன்னைப் பார்க்கணும்”

“நீ எப்போ விரும்பினாலும் என்னைப் பார்க்கலாம். இன்னிக்கே கூட”

“இல்லை, இன்னிக்கு வேண்டாம். நான் நல்லா உடுத்திட்டிருக்கும் போது உன்னைச் சந்திக்க விரும்புகிறேன். என் நண்பன் ஒருத்தன் கிட்ட நல்ல டிரெஸ் கேட்டிருக்கிறேன்.”

“நீ ஒரு குழந்தை மாதிரி இருக்கே. நாம சந்திக்கும் போது உனக்கு நான் ஒரு பரிசு தருவேன்.”

“உன்னைச் சந்திக்கிறதை விட உலகத்துல வேறு என்ன பரிசு இருக்க முடியும் எனக்கு?”

“நான் உனக்காக ஒரு எக்ஸாக்டா காமிரா வாங்கி வெச்சிருக்கேன்!”

“ஓ!”

“ஆனால் ஒன்று. நீ என்னைப் படமெடுக்கணும்!”

“அது உன்னைப் பார்த்த பிறகு நான் முடிவு செய்றேன்!”

“இன்னும் இரண்டு நாள் நான் உனக்கு ஃபோன் பண்ண மாட்டேன்”

“ஏன்?”

“நான் என் குடும்பத்தோட வெளியூர் போறேன். இரண்டே நாள் தான்.”

மன்மோகன் அன்று அறையை விட்டு வெளியில் செல்லவில்லை. மறுநாள் காலை காய்ச்சல்
வந்தது போல் உணர்ந்தான். முதலில் அவளுடன் பேசாததனால் வந்த உளச் சோர்வு
என்றெண்ணினான். மதியத்துக்குள் உடல் அனலாகக் காயத் தொடங்கியது. அவன் கண்கள்
தீப்பற்றியது போல் எரிந்தன. மேஜை மீது கவிழ்ந்து படுத்தான். தாகமாய் எடுத்தது. நாளெல்லாம்
தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். நெஞ்சின் மீது என்னவோ பாரமாக அழுத்தியது.
அடுத்தநாள் ஒரேயடியாகச் சோர்வடைந்தான். அவனால் மூச்சு விட இயலவில்லை. நெஞ்சு மிகவும் வலித்தது.

ஜுர வேகத்தில் அவனுக்கு நினைவு தப்பிப் போனது. ஃபோனை எடுத்துப் பேச ஆரம்பித்தான்.
அவள் குரலைக் கேட்டுக் கொண்டே இருந்தான். மாலை ஆகும் போது அவனது உடல் மேலும் மோசமடைந்தது. அவன் மண்டைக்குள் ஆயிரமாயிரம் குரல்களும் ஆயிரமாயிரம் டெலிஃபோன் மணிகளும் ஒலித்த வண்ணம் இருந்தன. மூச்சிறைத்தது.

மெய்யாகவே ஃபோன் அடித்தபோது அவனுக்குக் கேட்கவில்லை. வெகு நேரம் மணியடித்துக் கொண்டிருந்தது. திடீரென்று தெளிந்த மணிச்சத்தம் கேட்டது. தட்டுத் தடுமாறி எழுந்தான்.
நடுங்கும் கரங்களால் சுவரைப் பிடித்தபடி வந்து ரிசீவரை எடுத்தான். மரம் போல் காய்ந்திருந்த உதட்டை நாவால் ஈரப்படுத்த முயன்றான்.

“ஹலோ”

”ஹலோ மோகன்” - அவள் தான் பேசினாள்.

“நான் மோகன் தான்” அவன் குரல் நழுவியது

“எனக்கு நீ பேசறது கேட்கலை”

அவன் ஏதோ சொல்ல முயன்றான், ஆனால் அவன் குரல் தொண்டையிலேயே அடைத்துக் கொண்டது.

அவள் சொன்னாள், “நாங்க சீக்கிரமே திரும்பிட்டோம். ரொம்ப நேரமா உனக்கு ஃபோன் பண்ணிட்டிருக்கேன். எங்கே போயிருந்தே?”

மன்மோகனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது.

”ஏதாவது பிரச்னையா?” அவள் கேட்டாள்.

மிகவும் சிரமப்பட்டு அவன் சொன்னான், “என் ராஜாங்கம் இன்னிக்கு முடியப் போகுது.”

அவன் வாயிலிருந்து மெல்லிய கோடாக இரத்தம் வழிந்து அவன் தாடையைத் தாண்டி அவன் கழுத்தை நனைத்தது.

அவள் சொன்னாள் ”என் நம்பரைக் குறிச்சுக்கோ. 50314, 50314. காலையில என்னைக் கூப்பிடு. நான் இப்போ போகணும்” - சொல்லிவிட்டு அவள் அழைப்பைத் துண்டித்தாள்.

அவன் வாயிலிருந்து இரத்தம் கொப்புளிக்க, அந்தப் ஃபோனின் மீது அவன் தலை சரிந்தது.

Wednesday, June 24, 2009

சாலையோரமாய்....

Disclaimer: இது சாதத் ஹஸன் மாண்டோவின் சிறுகதைகளில் ஒன்று. அவரைப் பற்றி எனது முந்தைய பதிவு இங்கே. பாகிஸ்தான் பிரிவினை பற்றியே அதிகமாக எழுதியவர் என்ற கணிப்பை மாற்றுவதற்காகவே இச்சிறுகதையைத் தேர்ந்தெடுத்தேன். என் மொழி அவரது கதையின் வலிமையைக் குறைத்திருப்பின், அறிந்தவர்கள் மன்னிப்பீர்களாக.
*************

சாலையோரமாய்....

ஆம்! இதே பருவ காலம் தான் அப்போதும். வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே. குதூகலமானதொரு கனவைப் போல் வெயில் இதமாகக் காய்ந்து கொண்டிருந்தது. மனதை மயக்கும் மண்ணின் வாசம் என் நெஞ்சமெல்லாம் பொங்கி எழ, அவன் அருகில் கிடந்த நான் துடிக்கும் என் ஆவியை அவனுக்குச் சமர்ப்பித்தேன்.

அவன் சொன்னான்: “என் வாழ்வில் இதுவரை இருந்து வந்த பெருங்குறையை நீ நிவர்த்தி செய்து விட்டாய். அற்புதமான இந்தப் பொழுது என்னுள்ளே இருந்த வெற்றிடத்தைப் போக்கி பெரும் நிறைவை ஏற்படுத்தி இருக்கிறது. உன் காதல் மட்டும் இல்லாது போயிருந்தால் என் வாழ்வு சூன்யமாக இருந்திருக்கும், அல்லது அரைகுறையாக. உனக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பேன், நீ இன்று என்னை முழு மனிதனாக்கிவிட்டாய். இனி உன் தேவை எனக்கு இருக்காது என்றே தோன்றுகிறது.

அவன் சென்று விட்டான், திரும்ப வரவே மாட்டான் எனும்படியாக.

நான் அழுதேன். எனக்கு ஒரு பதில் சொல்லி விட்டுப் போகும்படி இறைஞ்சினேன் அவனை.
எப்படி நான் உனக்கு வேண்டாதவளாகிப் போனேன்? என் உயிரும் உடலும் உன் காதலுக்காக ஏங்கித் தீயில் எரிகிறதே? உன் வெறுமையைப் போக்கியதாக நீ சொல்லும் அதே அற்புதக் கணங்கள் என் ஆன்மாவில் மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கிச் சென்று விட்டனவே!

அவன் சொல்லி இருந்தான். “உன்னுடன் நான் பகிர்ந்த இந்தப் பொழுதில் உன் உயிரின் அணுக்கள் என்னை சேர்ந்து என்னை பரிபூரணம் அடையச் செய்து விட்டன. நம் உறவு திட்டமிட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டது.”

இந்தக் குரூரமான வார்த்தைகள் என் மேல் கல்லெறிந்தது போலிருந்தன. நான் கதறியழுதேன். புலம்பினேன். ஆனால் அவன் மனம் கல்லாகி விட்டிருந்தது. நான் அவனிடம் சொன்னேன்.
“உன்னை முழுமையடையச் செய்ததாக நீ சொல்லும் அந்த உயிர் அணுக்கள் என் உடலுக்குச் சொந்தமல்லவா? நான உனக்கு அதைக் கொடுத்தேன். ஆனால் அத்துடன் நம் உறவு முடிந்து விடுமா என்ன? என்னிடம் விட்டுச் சென்ற உன் உயிருக்கும் உனக்குமான பிணைப்பை அறுத்து விட முடியுமா?

நீ முழுமை அடைந்தாய். ஆனால் என்னைப் பலவீனமாக்கி விட்டாயே? ஐயோ! உன்னைக் கடவுள் போல வணங்கினேனே!

அவன் சொன்னான், “மடலவிழ்ந்த மலர்களில் அமர்ந்து தேனருந்தும் வண்டுகள் ஒரு போதும் அந்த மலர்களை இருப்பிடமாக்கிக் கொள்வதில்லை, அவற்றின் மனக்கசப்பைப் போக்குவதுமில்லை.
ஆண்டவனே வணக்கத்துக்குரியவன். அவன் எதையும் வணங்குவதற்கில்லை. அவன் மாபெரும் சூன்யத்துடன் புணர்ந்து இவ்வுலகைப் படைத்தான். உடனே அச்சூன்யவெளி அற்றுப் போனது. பிரசவம் முடிந்ததும் தாய் இறந்து போனாள்.

பெண்ணால் அழ முடியும். வாதம் செய்ய முடியாது. அவளது மிகப்பெரும் வாதமும் ஆயுதமும் அவளது கண்ணீர் தான். கண்களில் பொங்கிவரும் கண்ணீருடன் நான் சொன்னேன், “என்னைப் பார், நான் கண்ணீர் சிந்துகிறேன். நீ போய்த்தான் ஆக வேண்டுமென்றால், உன் கைக்குட்டையில் இக்கண்ணீர்த் துளிகளைச் சுற்றி எடுத்துக் கொண்டு போய் எங்காவது தகனம்
செய்துவிடு. அடுத்த முறை நான் அழும் போது அவற்றின் நினைவு வரும். என் கண்ணீருக்கு உரிய இறுதி அஞ்சலி உன்னால் செலுத்தப்பட்டது என்ற உணர்வில் திருப்தியடைவேன். எனக்காக, என் மகிழ்ச்சிக்காக இச் சிறு செயலைச் செய்வாயா?’

அவன் சொன்னான், “ நான் ஏற்கெனவே உனக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட்டேன். அதுவரை கானல் நீர் போல் இருந்த உன் வாழ்வில் மிக உன்னதமான இன்பத்தை நான் வந்ததால் நீ அடைந்தாய்.
அந்த நினைவில் உன்னால் உன் வாழ்நாளின் மிச்சத்தைக் கழிக்க முடியாதா? நான் முழுமையடைந்ததால் நீ முழுமையற்றுப் போனதாகச் சொல்கிறாயே? முழுமையற்ற நிலை தான் வாழ்வு தொடர்வதற்கான உந்துசக்தியல்லவா? நான் ஆண். இன்று நீ என்னை முழுமையாக்கினாய். நாளை அது வேறொரு பெண்ணாக இருக்கும். இதே இன்பத்தைப் பல கோடி முறை பெற்று அனுபவிக்கும் படியாக நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன். நீ நிரப்பிய வெற்றிடம் மறுபடியும் உருவாகும் போது அதை நிரப்ப வேறு யாராவது இருப்பார்கள்.

நான் அழுதுகொண்டே இருந்தேன்.

”அந்த மகத்தான பொழுது என் கையில் பிடித்து வைத்த தண்ணீர் போல வடிந்து போய் விட்டதே.

ஐயோ! ஏன் நான் அந்த மாய வலையில் கட்டுப்படச் சம்மதித்தேன்? கட்டுக்கடங்காமல் துடிதுடித்துக் கொண்டிருந்த என் ஆத்மாவைச் சிறையில் அடைத்துவிட்டேனே. ஆம் அந்தப் பரவசத்தை விளக்க வார்த்தைகளே இல்லை தான்! நாங்கள் இரண்டறத் தழுவிக் கிடந்தது ஒரு கனவு போலவே இருக்கிறது. ஆம் அது ஒரு விபத்து தான். ஆனால் அந்த விபத்திலிருந்து கொஞ்சமும் சேதமில்லாமல் முழுமையாக அவன் வெளியேறிச் சென்று விட்டான், என்னை சேதப்படுத்தி உடைத்துவிட்டு. ஏன் நான் அவனுக்கு வேண்டாதவளாகிப் போனேன்? அவன் மீது எனக்குள்ள ஆசை என் உடலையும் ஆவியையும் ஒரு சேரத் தீ வைத்து எரிக்கும் போது?

என் சக்தியை நான் அவனுக்குக் கொடுத்து விட்டேன். நாங்கள் இரண்டு மேகங்கள் போல இருந்தோம். ஒன்று கடும் மழையுடன் சூல் கொண்டு; இன்னொன்று பேரிடியையும் மின்னலையும்
வெட்டி விட்டு மறைந்து விட்டது. என்ன விதமான நீதி இது? இயற்கையின் நியதியா? அல்லது இறைவனின் நியதியா?

ஆம், இதையெல்லாம் நான் யோசித்தேன்.

இரு ஆன்மாக்கள் சந்தித்துக் கொண்ட பின் ஒ்று சாகாவரம் பெற்று விலகிச் செல்கிறது. இரு ஆன்மாக்கள் இணையும் போது பிரபஞ்சம் எனும் புள்ளியில் இரண்டும் ஒருமித்துக் கலந்துவிட வேண்டாமா?

ஆம்! இதே பருவ காலம் தான் அப்போதும். வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே. குதூகலமானதொரு கனவைப் போல் வெயில் இதமாகக் காய்ந்து கொண்டிருந்தது. மனதை மயக்கும் மண்ணின் வாசம் என் நெஞ்சமெல்லாம் பொங்கி எழ, அவன் அருகில் கிடந்த நான் துடிக்கும் என் ஆவியை அவனுக்குச் சமர்ப்பித்தேன்.

அவன் இங்கே இல்லை. அந்த மின்னல் தற்போது வேறு மழை மேகங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கக் கூடும். முழுமை அடைந்ததாகச் சொல்லி என்னை விட்டு விலகியவன் அவன். ஒரு பாம்பைப் போல் என்னக் கடித்தவுடன் நகர்ந்து சென்று விட்டான். ஆனால் இது என்ன? என் அடிவயிற்றில் என்னவோ புதிதாகத் துடிக்கிறதே. நான் முழுமை பெறுவதற்கான ஆரம்பமா இது?

இல்லை. இருக்க முடியாது. இது என் கையில் இருக்கிறது. ஆனால் ஏன் என் உடலின் வெற்றிடங்கள் நிரம்பி வருகின்றன? என்ன விதமான குப்பை இந்தப் பாழ் உடம்பை நிறைக்கிறது?
என்ன விந்தையான உணர்ச்சிகள் என் நரம்புகளில் ஓடுகின்றன? ஏன் நான் என் மொத்த ஆவியையும் திரட்டி என் வயிற்றில் இருக்கும் அந்தச் சின்ன உயிருடன் கலந்து விடத் துடிக்கிறேன்? மூழ்கும் எனது வாழக்கைக் கப்பல் எந்தப் பெருங்கடலில் உயிர்பெற்றுக் கரை சேரப் போகிறது?

என் உடலில் பற்றி எரியும் தீயில் பால் கொதிப்பதை உணர்கிறேன். வரப்போகும் அந்த விருந்தாளி யார்? யாருக்காக என் இதயம் இரத்தம் சிந்தி மென்மையான படுக்கைகள் நெய்து
கொண்டிருக்கிறது? என் மனக்கண்ணும் பல்லாயிரம் வண்ணங்களில் நூல் நூற்றுக் கண்ணைப் பறிக்கும் ஆடைகள் தைத்து அழகு பார்க்கிறதே!

யாருக்காக என் மேனி பொன் வண்ணமாக மாறி வருகிறது?

ஆம்! இதே பருவ காலம் தான் அப்போதும். வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே. ஆனால் ஏன் அந்த வானம் இப்போது என் வயிற்றின்
மீது வந்து குடை பிடிக்கிறது? ஏன் அவன் கண்களின் நீலம் என் உடலில் இரத்தமாகச் சீறிப் பாய்கிறது?

ஏன் என் உருண்ட தனங்கள் கோயில் கோபுரங்களைப் போல் புனிதமாகக் கூம்பி நிற்கின்றன?

இல்லை! இந்நிகழ்வுகளில் யாதொரு புனிதமும் இல்லை. இக்கோபுரங்களை நான் நொறுக்கி விடப் போகிறேன். வேண்டாத விருந்தாளிக்காக விருந்து சமைத்துக் கொண்டிருக்கும் என்
உடலின் நெருப்பை நான் நீரூற்றி அணைக்கப் போகிறேன். அந்த வண்ண வண்ண நூல்களைச் சிக்கலாக்கிப் பிய்த்தெறியப் போகிறேன்.

ஆம்! இதே பருவ காலம் தான் அப்போதும். வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே. ஆனால் ஏன் அவன் சுவடே மறைந்து விட்ட அந்த
இடங்களையும் பொழுதுகளையும் மீண்டும் மீண்டும் நினைவு கூர்கிறேன்? ஆனால் இது என்ன புதுச் சுவடு என் வயிற்றினுள்? ஒரு சின்னஞ்சிறு பாதமா? உண்மைதானா?

இல்லை நான் அதை அழிக்கப் போகிறேன். இது என்னைப் பீடித்திருக்கும் புற்று நோய். தீராப்பழி.

ஆனால் ஏன் அமுதினும் இனிய மருந்தாக என் காயங்களை ஆற்றுகிறது? எந்தக் காயத்தை ஆற்ற வந்த மருந்து இது? அவன் விட்டுச் சென்ற காயத்தையா?

இல்லை நான் பிறவி எடுத்தது முதல் சுமந்து வந்திருக்கும் காயத்தை. என் கருவறையில் எப்போதும் மறைமுகமாக இருந்து வந்துள்ள காயம் அது.

ஹீம். கருவறை. என்ன அது. வேண்டாத வெறும் மண்கலம் தான் அது. அதைச் சுக்கு நூறாக்க உடைத்தெறியப் போகிறேன்.

ஆனால் என் செவிகளில் குரல்கள் ஒலிக்கின்றன. இவ்வுலகம் ஒரு நாற்சந்தி. அதன் நடுவில் உன் மண்கலத்தை உடைக்காதே. உன்னை நோக்கி விரல்கள் நீட்டப்படும்.

ஆம் இவ்வுலகம் ஒரு நாற்சந்தி தான். அவன் என்னை முடிவில்லாத இரு வீதிகளின் இடையே விட்டு சென்றுவிட்டான், கண்ணீரை மட்டுமே தந்து விட்டு.

ஒரு கண்ணீர்த்துளி நழுவி என் சிப்பியில் விழுந்து முத்தாகி இருக்கிறது. யாரை அலங்கரிக்க?
இந்தச் சிப்பி திறந்து முத்து வெளிவரும் போதும் தான் விரல்கள் நீட்டப்படும் என்னை நோக்கி.
வெறும் விரல்கள் அல்ல. அவை பாம்புகளாக மாறி இந்த முத்தைக் கடித்து விஷமேற்றப் பார்க்கும்.

வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே.
ஐயோ! அது இற்று வீழக் கூடாதா இப்போது? எந்தத் தூண்கள் அதைத் தாங்கி நிற்கின்றன?
பிரளயம் வந்து இப்பூமியின் ஆதாரத்தையே அசைக்கக் கூடாதா? ஏன் அந்த வானம் என் தலை மீது குடையாக ஆதரவளிக்கிறது?

எனக்கு வியர்த்து விறுவிறுக்கிறது. என் உடலின் சகல துவாரங்களும் திறக்கின்றன. எங்கும்
தீப்பற்றி எரிகிறது. என் கலத்தில் பொன் உருக்கப்படுகிறது. தீ நாக்குகள் அதைத் தழுவத் தழுவ எரிமலைக் குழம்பாகப் பொன் உருகி வழிகிறது. அவன் கண்களின் நீல நிறம் என் நரம்புகளில் பாய்ந்தோடுகிறது. எங்கோ மணியடிக்கும் சப்தம். யாரோ ஓடி வந்து கதவடைக்கிறார்கள்.

அது வரும் நேரமாகிவிட்டது.

என் கண்களில் தூக்கத்தில் களைத்திருக்கின்றன. நீலவானம் அழுக்கடைந்தாகி விட்டது. சற்று நேரத்தில் இடிந்து வீழும்!

யாருடைய அழுகுரல் அது? தயவு செய்து அதை நிறுத்துங்கள். என் நெஞ்சில் சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது.

என் மடி காத்திருக்கிறது. என் கரங்கள் அதைத் தழுவிக்கொள்ள நீள்கின்றன. என் உடலின் வெப்பத்தில் பால் காய்ந்து கொதித்துக் கொண்டிருக்கிறது. என் உருண்ட தனங்கள் கிண்ணங்களாக மாறியுள்ளன. என் உயிரை என்னிடம் கொண்டுவாருங்கள். இதமாக என் மடியில் கிடத்துங்கள்.

இல்லை. அதை என்னிடமிருந்து பறித்து விடாதீர்கள். எங்கே கொண்டு போகிறீர்கள்?

வேண்டாம். கடவுள் பெயரால் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

விரல்கள்..விரல்கள்..நீட்டட்டும் அவர்கள். எனக்குக் கவலை இல்லை. உலகம் நாற்சந்தியாகவே இருக்கட்டும் என் மண்கலத்தைத் தைரியமாக நான் அங்கு நின்று உடைப்பேன்.

என் வாழ்க்கை நாசமாகி விடுமா? போகட்டும். என் உயிர்ச்சதையை என்னிடம் தாருங்கள். என் ஆன்மாவை என்னிடமிருந்து பறிக்காதீர்கள். அது எனக்கு எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். என்னை முழுமையடையச் செய்த அந்த மாயக் கணங்கள் செய்த அற்புதக் கனி அது. இதுவல்லவோ என் பிறவிப்பயன்?

நம்பிக்கை இல்லாவிடில் இதோ என் காலி வயிற்றைக் கேளுங்கள். பால் நிரம்பி வழியும் என் தனங்களைக் கேளுங்கள். என் உடலின் ஒவ்வோர் அணுவும் இசைக்கும் தாலாட்டினைக்
கேளுங்கள். தொட்டிலாக ஆடத் துடிக்கும் என் கரங்களைக் கேளுங்கள்.

குற்றம் சாட்ட நீளும் விரல்கள் நீண்டு விட்டுப் போகட்டும். அவற்றை வெட்டி எடுத்து என் காதுகளை அடைத்துக் கொள்ளுவேன்; நானும் ஊமையாகி விடுவேன்; குருடும் ஆகிவிடுவேன்.
இந்தச் சின்னஞ்சிறு சிசு என்னை அறிந்து கொள்ளும். என் விரல்கலால் தடவி நான் அதை அறிந்து கொள்வதைப் போலவே.

உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். அதைக் கொண்டு சென்றுவிடாதீர்கள்.

என் பாற்செம்பைக் கவிழ்த்துக் கொட்டிவிடாதீர்கள். என் குருதியால் நான் நெய்த பட்டு மெத்தைக்குத் தீ வைத்து விடாதீர்கள். தொட்டிலாக ஆடும் என் கரங்களை வெட்டி விடாதீர்கள்.
அமுதகானமாக ஒலிக்கும் அந்த அழுகுரல் என் காதுக்கெட்டாதபடி செய்துவிடாதீர்கள்.

அதை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள்.

லாகூர், 21 ஜனவரி

புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையொன்றை இன்று போலிசார் சாலையோரத்தில் கண்டெடுத்தனர்.
அதன் பிஞ்சு உடல் ஈரத்துணியால் போர்த்தப்பட்டு, குளிரிலும் பசியிலும் இறந்து போகவேண்டும் என்ற திட்டத்தோடு கிடத்தப்பட்டிருந்தது. ஆனால் குழந்தை என்னவோ நலமுடன் பிழைத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதன் கண்கள் அழகிய நீல நிறமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, June 18, 2009

’புறக்’கணிப்பு

”ஏய் கமலா இங்கே வா!”

”இன்னா ஐயிரே?”

கடுகடுவென்ற முகத்துடன், கோபத்துடன் நின்று கொண்டிருந்தார் சிவராமன்.

அதற்கெல்லாம் அசருபவளா பால்காரி கமலா. தனது டிரேட் மார்க் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி ஒய்யாரமாய் பால் வண்டியைத் தள்ளியவாறு வந்தாள்.

”அய்ய இன்னான்னு சீக்கிரம் சொல்லு. மத்த தெருவுக்கெல்லாம் போணுமில்ல..”


முஷ்டியை மடக்கி அவள் முகத்தின் முன் நீட்டி நீட்டி கர்ஜிக்கிறார் சிவராமன்.

”இரும்புக்கம்பிய எடுத்துண்டு போனது யாரு? என் ரப்பர் செருப்பைத் தூக்கிண்டு போனது யாரு? எலிப்பொறியை இழுத்துண்டு போன...”

அலட்சியமாக அவரை இடைமறித்து,
“அய்யே நிர்த்து ஐயிரே. லூஸா நீ? இன்னாமோ அடுக்கிக்கினே போற? எனுக்கின்னா தெரியும்?”

“ஏய் கமலா.. எனக்கு நல்லாத் தெரியும். காலையில பால் போட வரச்சே ஒவ்வொருத்தர் வீட்டுலயும் ஏதாவது அபேஸ் பண்றதே வேலயா போய்டுத்து உனக்கு. உன் வண்டியக் காமி. செக் பண்ணனும்”

அவ்வளவு தான். குய்யோ முறையோ என்று பெருங்குரலெடுத்து, கதவிடுக்கில் அகப்பட்ட பெருச்சாளி மாதிரி கத்த ஆரம்பிக்கிறாள் கமலா.

தெருவில் வாக்கிங் போகிறவர்கள் ஏளனமாக அவரையும் கமலாவையும் பார்க்கிறார்கள். சிவராமனுக்கு முகம் சிவந்து அவமானமாகிப் போகிறது.

”சரி சரி, வாய மூடு. இது தான் உனக்கு கடைசி வார்னிங். இனிமே எதையாச்சும் திருடினே, காலனி செக்ரட்டரி கிட்டே கம்ப்ளெயிண்ட் பண்ணி உன்னை இந்த ஏரியா பக்கமே வர விட மாட்டேன்.” சொல்ல் விட்டு குடு குடுவென ஃப்ளாட்டுக்குள் ஓடுகிறார்.

கமலா ஆரம்பித்த ஒப்பாரியைப் பாதியிலேயே முடிக்க மனமின்றி வழியெல்லாம் புலம்பிக் கொண்டே போகிறாள்.
கமலா! அந்தத் தெருவில் முப்பது வருடங்களாகப் பால் பாக்கெட் விநியோகம் செய்பவள். கறுப்பான ஒல்லியான சிறிய உருவம். பொக்கை வாய்க்குப் பொருந்தாத கறுத்த தலைக் கேசம். குறு குறுவென்று அலையும் கண்கள், கீச்சுக் குரலில் வெடுக் வெடுக்கென்ற பேச்சு. அநாயாசச் சுறு சுறுப்பு.

அடை மழை, புயல் எதற்கும் அசர மாட்டாள். ப்ளாஸ்டிக் பை எதையாவது தலையில் போர்த்திக் கொண்டு பால் போட வந்து விடுவாள்.

அவளுக்கு இரு மகன்கள். கணவன் சீக்காளி, வீட்டோடு இருக்கிறான்.இப்படிக் கஷ்டப்பட்டுத் தன் மகன்களை நன்கு படிக்க வைத்தாள். அவர்களும் டி.எம்.இ முடித்து நல்ல வேலைக்குச் சென்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். தாயின் மீது பாசத்துடனும். ஆனாலும் கமலாவுக்குப் பால் போடுவதை நிறுத்தவும் மனமில்லை. ஹாபியான இந்த அபேஸ் குணமும் விடவில்லை!

ஆம், சிவராமன் ஒன்றும் அபாண்டமாகச் சொல்லவில்லை. அவள் வண்டியை அனாமத்தாக விட்டிருக்கும் போது அதற்குள் எட்டிப் பார்த்தவர்கள் அசந்து போவார்கள். ஓட்டைக் குடை, பிய்ந்து போன செருப்பு, துணி ஹாங்கர், சாக்கடை குத்தும் இரும்புக் கம்பி, குப்பை முறம் என்று பொதுவாக வீட்டுக்கு வெளியே போட்டு வைத்திருக்கும் உபயோகமுள்ள, அற்ற பல பொருள்களின் கண்காட்சியே பார்க்கலாம்.

இதெல்லாம் தெரிந்தும் யாரும் அந்தத் தெருவில் இது வரை பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. அவள் பால் போட வரும் விடியலில் பெரும்பாலும் யாரும் விழித்திருக்க மாட்டார்கள். இன்று சிவராமன் அவளைப் பிடிப்பதற்காகவே விழித்துக் காத்திருந்தார் போலும்.

அவர் எப்போதுமே அப்படித்தான். எல்லோரிடமும் இயல்பாகப் பழகுவார். ஆனால் கொஞ்சம் வம்பு பிடித்தவர். அந்தக் காலனியில் முதலில் குடிவந்தவர். ஒரே மகள், இரண்டு மகன்கள். எல்லோரும் திருமணமாகி வெளிநாட்டில். மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்துகிறார்.வந்த புதிதில் அந்த ஏரியா பிரௌசிங் செண்டர் ஓனர் சங்கரை முடியைப் பிய்த்துக் கொள்ளும் அளவு படுத்தி எடுத்தார்.

அப்போது அவர் வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தது. இண்டெர்னெட் வசதி இல்லை. தினமும் அங்கு சென்று விடுவார். ஒன்று மகன்களுக்கோ மகளுக்கோ மெயில் அனுப்ப, இல்லை சி.டியில் பேரக் குழந்தைகள் ஃபோட்டோ ஏதாவது காப்பி செய்ய.
”கொடுங்க ஸார், காப்பி பண்ணித் தரேன்” என்று கேட்டால் ஒப்புக்கொள்ள மாட்டார். தானே செய்ய வேண்டும், ஆனால் அவன் உதவி செய்ய வேண்டும். வயதானவர்களுகே உரிய நடுக்கமும் நிதானமுமாக ஐந்து நிமிடங்களில் முடிக்கக் கூடிய வேலைக்கு அரைமணியாக்குவார். அவன் எரிச்சலடைய, இவர் கோபமடைய, ஒரு கட்டத்தில் இவர் வருவதைப் பார்த்தாலே ஒளிந்துகொள்ள ஆரம்பித்தான் அவன்.

**********”

ஐயிரே, இன்னா, பிள்ளைங்க எல்லாம் ஊருக்குப் போயிட்டாங்களா?”
”ம்? ” எங்கோ வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவர் கமலாவின் குரல் கேட்டுத் திரும்பினார்.
“ப்ச், ஆமாம், பேசாம நானும்...” வார்த்தைகள் வெளிப்படுமுன் கண்களிலிருந்து நிறுத்தமுடியாமல் நீர் தளும்பியது. சே இவள் முன் அழுவதா என்ற சிறு சுய கண்டிப்புடன் அதை அடக்க முயன்று தோற்றார்.

பால் வண்டியை ரோட்டில் விட்டு விட்டு வந்த கமலா, ”இன்னா ஸார் இது, பச்சக் குழந்தை மாதிரி அழுதுக்கினு.. அம்மா புண்ணியவதி, சும்ங்கலியாப் போய்ச் சேந்துக்கிறா. நீ இப்படி அழுது உடம்பைக் கெடுத்துக்காதே. ஆமாம் தனியாவா கீறே? சமையலுக்கு ஆள் யார்னா வோணுமா சொல்லு..."

அவர் பிள்ளைகள் ஏன் அவரை உடன் அழைத்துச் செல்லவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால் ஏனோ அதைப் பற்றி அவள் கேட்க விரும்பவில்லை.

“அதெல்லாம் வேண்டாம் கமலா. நாளைக்கு வீட்டைக் காலி பண்ணப் போறேன். அடையாறில் ஒரு ஹோம்ல எனக்கு இடம் பாத்திருக்கான் புள்ள. அங்க போயிடுவேன். இந்த வீட்டை வாடகைக்கு விடப் போறானாம்.”

“ஓமுன்னா...?” புரியாமல் இழுத்தாள்.

ஒரு வெற்றுச் சிரிப்புடன், “முதியோர் இல்லம். அது, பெரியவன் கூப்பிடத்தான் செஞ்சான். நான் அங்க போய் அவங்களுக்குத் தொந்தரவா எப்படி? மருமகளும் வேலைக்குப் போறா. இங்கயாவது, தெரிஞ்ச ஊரு. ஆனா இவ்ளோ பெரிய வீடு என் ஒருத்தனுக்கு எதுக்கு.. அதான்..” என்று பிள்ளைகளை விட்டுக் கொடுக்காமல் ஆரம்பித்தவர், ”நீ ரொம்பக் குடுத்து வெச்சவ கமலா. ”


கமலாவின் கண்களில் நீர் சுரந்தது. மௌனமாக அவரைப் பார்த்தாள்.
”அடக் கவலைய வுடு ஐயிரே. அதெல்லாம் அங்க போனீன்னா நல்லாத் தான் இருக்கும். உனக்கென்னா, நீ தான் எங்க போனாலும் வாய் பேசியே எல்லாரோடவும் ராசியாயிடுவியே” என்று இன்னும் என்னென்னவோ பேசி அவரைக் கொஞ்சம் தேற்றினாள் கமலா.

**********


வந்த ஒரு மாதத்தில் இல்ல வாழ்க்கைக்கு ஓரளவு பழகி விட்டிருந்தார் சிவராமன். அழகான பெரிய தோட்டத்துடன் அமைந்திருந்த அந்த முதியோர் இல்லம் வசதியாகவே இருந்தது. அவருக்கு ஒத்த சிந்தனையில் சில நண்பர்கள், லைப்ரரி, டி.வி, மாலையில் பஜன்ஸ், நல்ல சாப்பாடு, வாக்கிங், இண்டெர்நெட் என்று சௌகரியத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனாலும் பழைய வாழ்க்கையின் சுவடே இல்லாமல் திடீரென்று வேரோடு எங்கோ பிடுங்கி வைத்தது மாதிரி ஒரு உணர்வு. முக்கியமாகப் பேரப்பிள்ளைகளோடு விளையாடத் தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்ற கழிவிரக்கத்தைத் தவிர்க்கவே முடியவில்லை.

”மிஸ்டர் சிவராமன், உங்களுக்கு விசிட்டர்ஸ் வந்திருக்காங்க.”
யாராக இருக்கும், இன்னும் ஒரு தடவை கூட எட்டிக் பார்க்காத உள்ளூர் உறவுக்காரர்களில் ஒவ்வொருவராக நினைத்துக் கொண்டே ரிசப்ஷனை அடைந்தவருக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை.

”நல்லாருக்கீங்களா?” வழக்கமான தனது தோரணையைத் துறந்து அந்தப் புதிய சூழலில் அவரைச் சந்திக்கும் நிலைமையால் லேசான சங்கோஜச் சிரிப்புடன் நின்றிருந்தாள் கமலா. அருகில் அவள் மகன் குமார்.

”வணக்கம் சார், ரொம்ப நாளா உங்களைப் பார்க்க வரணும்னு நினைச்சிட்டிருந்தோம். இன்னிக்குத் தான் வர முடிஞ்சுது. எப்படி இருக்கீங்க சார்?” என்று புன்னகையுடன் தான் கொண்டு வந்திருந்த பழப்பையை நீட்டினான்.


தொண்டையில் ஏதோ அடைக்க, புதிதாகப் பிறந்த ஓர் உணர்வுடன், அவனை வாரி அணைத்துக் கொண்டார் சிவராமன்.