Sunday, June 7, 2009

டோபா டேக் சிங்

சாதத் ஹஸன் மாண்டோவின் மிகப் புகழ் பெற்ற சிறுகதைகளில் ஒன்றான ”டோபா டேக் சிங்” திரைப்படமாக வெளிவர உள்ளது.
பான் நளின் என்ற இயக்குநர் எடுக்கவிருக்கும் இத்திரைப்படத்தில் ஆமிர் கானும் ”டைட்டானிக்” நாயகி கேட் வின்ஸ்லெட்டும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

2005 ல் இதே கதை ஆஃபியா நதானியல் என்ற பாகிஸ்தானி இயக்குநரால் குறும்படமாக வெளிவந்துள்ளது.

டோபா டேக் சிங் என்பது தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் உள்ள சிற்றூர் ஆகும். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இரண்டு நாடுகளிலும் உள்ள
மனநலம் பாதிக்கப் பட்டவர்களின் இடமாற்றம் பற்றியும் அவர்களது பார்வையில் பிரிவினையும் இடப் பெயர்ச்சியும் எவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை
நையாண்டியாகவும அதே சமயம் நெஞ்சை உருக்கும் உணர்வுகளுடனும் சொல்லும் கதை தான் டோபா டேக் சிங்.

இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் சாதத் ஹஸன் மாண்டோ. உருது எழுத்தாளர்; இன்றைய பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.
பாகிஸ்தான் பிரிவினை பற்றியும் அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த மனித வெறியாட்டங்களையும் இவர் அளவுக்கு அழுத்தமாகப் பதிவு செய்தவர் யாருமில்லை எனலாம்.

சர்ச்சைக்குரிய பல களங்களில் அநாயாசமாய் எழுதக் கூடிய இவர் சமூகத்தின் அவலங்களை இடக்கரடக்கலின்றி அப்பட்டமாகத் தோலுரித்து எழுதினார். தனது பாத்திரங்கள் எத்தன்மையினராக இருந்த போதும் அவர்களை எந்த விதப் போலிப் பூச்சுமின்றி உலவ விட்டார்.

தனது எழுத்துக்கள் பற்றி அவர் கூறுவது: ”எனது கதைகள் உங்களுக்கு அருவருப்பாக இருந்தால் அப்படிப்பட்ட அருவருப்பான சமூகத்தில் தான் வாழ்கிறீர்கள் என்று
உணருங்கள். என் கதைகளின் மூலம் உண்மையைத் தான் வெளிப்படுத்துகிறேன்”

காலீத் ஹாசன் என்பவர் இவரது கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அவற்றைப் படித்து இரவில் தூக்கம் வராமல் தவித்த நாட்கள் பல. அப்படி ஒரு ஆளுமை உண்டு அவரது எழுத்துக்களில்.

தமிழில் யாராவது இவரது படைப்புக்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.

என் மொழிபெயர்ப்பு சகிக்கும் படியாக இருப்பதாகப் பலர் ஒத்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் பதிவுலக நண்பர்களூக்காக இவரது கதை ஒன்றை மொழிபெயர்த்துப் பதிவிடுகிறேன். கூடிய விரைவில்!

Labels: , , ,

24 Comments:

At June 7, 2009 at 11:07 PM , Blogger நட்புடன் ஜமால் said...

\\என் மொழிபெயர்ப்பு சகிக்கும் படியாக இருப்பதாகப் பலர் ஒத்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் பதிவுலக நண்பர்களூக்காக இவரது கதை ஒன்றை மொழிபெயர்த்துப் பதிவிடுகிறேன். கூடிய விரைவில்!\\

காத்திருக்கின்றோம் ...

 
At June 7, 2009 at 11:23 PM , Blogger சந்தனமுல்லை said...

நல்ல எழுத்தாளரின் அறிமுகத்துக்கு நன்றி தீபா! //இவரது கதை ஒன்றை மொழிபெயர்த்துப் பதிவிடுகிறேன். கூடிய விரைவில்!// ஓக்கே!

 
At June 7, 2009 at 11:56 PM , Blogger வண்ணத்துபூச்சியார் said...

அருமையான அறிமுகத்திற்கு நன்றி தீபா.

முயற்ச்சிக்கும் வாழ்த்துகள்.

 
At June 8, 2009 at 12:00 AM , Blogger vivek said...

so many people have translated his work in tamil,i have seen a complete collection of his works in new book lands (t.nagar)ketuparunga kidaikalam ..

vivek

 
At June 8, 2009 at 12:05 AM , Blogger Deepa said...

ஜமால்!
முல்லை!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

விவேக்!
வருகைக்கும் தகவலுக்கு மிக்க நன்றி.

 
At June 8, 2009 at 12:12 AM , Blogger வித்யா said...

கதைக்காக காத்திருக்கிறோம்.

 
At June 8, 2009 at 1:59 AM , Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி தீபா

உங்கள் மொழிபெயர்ப்பு பதிவை எதிர்பார்த்து...

 
At June 8, 2009 at 4:08 AM , Blogger பைத்தியக்காரன் said...

தீபா,

'காந்தியின் உடலரசியல்' என்ற சிறு நூலின் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ராமாநுஜம் இவரது சில சிறுகதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடைகள் மற்றும் ஹிப்டுல்லாவை தமிழாக்கி தொகுத்திருக்கிறார். 'நிழல்' பதிப்பகம், இதை நூலாக வெளியிட்டிருக்கிறது. சென்னை பாரதி பதிப்பகம் அல்லது நியூ புக் லேண்ட் சென்றால் இந்த நூலை வாங்கலாம்.

தமுஎச-வின் 11வது மாநில மாநாட்டின்போது நம் பதிவுலக 'அண்ணன்' அப்துல்லா, இந்த நூலை ('நிழல்' பதிப்பகத்தில் வெளிவந்த அதே நூல்தான்) இலவசமாக சில நூறு காப்பிகள் அச்சிட்டு வந்திருந்தவர்களுக்கு கொடுத்தார்

மண்ட்டோ எழுதிய 'அங்கிள் சாமுக்கு கடிதங்களும்' தனி நூலாக வந்திருக்கிறது.

மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ள உங்களுக்கு ஒரு தகவல். மூக்கை நுழைப்பதாக தவறாக நினைக்க வேண்டாம்.

உருது மொழியில் மண்ட்டோ எழுதிய படைப்புகளை பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சில மொழிபெயர்ப்பில் சில பத்திகளே விடுபட்டிருக்கும் :-(

பலரும் காலித் ஹாசனின் ஆங்கில மொழிபெயர்ப்பையே அடிப்படையாக கொண்டு தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். இவரது ஆங்கிலம் அற்புதமானது என்றாலும் பத்திகளை விழுங்குவதில் இவர் கெட்டிக்காரர் :-) எனவே ஆங்கில மொழிபெயர்ப்புகளை சற்று எச்சரிக்கையுடன் படியுங்கள். பின் தமிழாக்கம் செய்யுங்கள்.

இதை விஷயத்தை நண்பர் ராமாநுஜம் தனது முன்னுரையில் அழகாக சொல்லியிருக்கிறார்.

250க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள மண்ட்டோவை வெறும் பிரிவினை சார்ந்த எழுத்தாளர் என்பதான ஒரு குறுகிய பார்வை இருக்கிறது.

ஆனால், மண்ட்டோ விசாலமானவர்.
இறந்தவர்களை கொச்சைப்படுத்தி அவர்களது அந்தரங்கங்களை திருடியவர் என்றும் அரசாங்கத்தால் கம்யூனிஸ்ட் என்றும், இடதுசாரி இயக்கத்தால் பிற்போக்குவாதி என்றும், ஆபாச இலக்கியம் படைத்தவர் என்றும் பலவாறாக இவர் விமர்சிக்கப்பட்டபோதும், இந்திய துணைக்கண்டத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர் இவர் என்பதில் சந்தேகமேயில்லை.

இவரது 'திற' சிறுகதையை வாசித்தால், 'மகாநதி'யில் அந்த இளம்தளிரு கொல்கத்தாவிலிருந்து வந்த பிறகு, இரவில் மனசு வெடித்து சொல்லும் 'பஸ்... பஸ்...' வசனங்களும், அதனைத் தொடர்ந்து கமலும் சுகன்யாவும் அழும் (பார்வையாளர்களாகிய நாமும்) காட்சியும் மனதில் வந்து போகும். காரணம், 'மகாநதி'யின் அந்த எபிசோட் முழுக்கவே மண்ட்டோவின் தாக்கம் இருக்கிறது.

பின்னூட்டம் நீண்டுவிட்டது. மன்னிக்கவும்.

உங்கள் மொழிபெயர்ப்பு முயற்சிக்கு வாழ்த்துகள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

 
At June 8, 2009 at 4:51 AM , Blogger Deepa said...

பைத்தியக்காரன் அவர்களுக்கு,

(உங்கள் இயற்பெயர் என்ன? இப்படி அழைக்கத் தர்ம சங்கடமாக இருக்கிறது.)

உங்கள் வருகைக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் நன்றிகள் பல.

நிறைய தகவல்களையும் பயனுள்ள கருத்துக்களையும் சொல்லி இருக்கிறீர்கள். நானும் தெளிவு படுத்த வேண்டியவை உள்ளன.

// 'நிழல்' பதிப்பகம், இதை நூலாக வெளியிட்டிருக்கிறது. சென்னை பாரதி பதிப்பகம் அல்லது நியூ புக் லேண்ட் சென்றால் இந்த நூலை வாங்கலாம்.//


//மண்ட்டோ எழுதிய 'அங்கிள் சாமுக்கு கடிதங்களும்' தனி நூலாக வந்திருக்கிறது.//

மிக்க நன்றி. ஒரு பிற மொழி ஆசிரியரை அறிமுகம் செய்யும் போது அவரது படைப்புக்களையும் சுட்டிக் காட்ட வேண்டும். தமிழில் அவரது படைப்புக்கள் வந்துள்ளனவா என்று அதனால் தான் கேட்டேன். இல்லாவிடில், (அதாவது இதற்குப் பதில் வராவிடில்) ஒரு கதையாவது மொழிபெயர்த்து வெளியிடலாம் என்று எண்ணினேன்.

உங்கள் தகவல்கள் அவர் எழுத்துக்களைப் படிக்க விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

//உருது மொழியில் மண்ட்டோ எழுதிய படைப்புகளை பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சில மொழிபெயர்ப்பில் சில பத்திகளே விடுபட்டிருக்கும் :-(//

காலித் ஹாஸன் பத்திகளை விழுங்குவதில் மட்டுமல்ல, சில வாக்கியங்களை தன் மனப்போக்கில் மாற்றவும் வல்லவர் என்று சமீபத்தில் அறிந்தேன். (நன்றி: விக்கிப்பீடியா)

//மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ள உங்களுக்கு ஒரு தகவல். மூக்கை நுழைப்பதாக தவறாக நினைக்க வேண்டாம்.//

எனக்கு உண்மையில் தமிழில் இவரது படைப்புகள் உள்ளது பற்றித் தெரியாது. நான் பிற மொழி இலக்கியங்களைப் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் படித்திருக்கிறேன்.
மொழிபெயர்ப்பு உழைப்பையும் நேரத்தையும் வாங்கும் சற்றே கடினமான செயல்.
எனினும் நண்பர்களுக்கு வாக்குக் கொடுத்த காரணத்தினால் ஒரு கதையாவது மொழியாக்கம் செய்யலாமென்று நினைக்கிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்!

 
At June 8, 2009 at 4:53 AM , Blogger "அகநாழிகை" said...

மண்ட்டோ படைப்புகள் புத்தகம் வெளிவந்திருப்பது குறித்த தகவலை பின்னூட்டத்தில் அளிக்கலாம் என்று நினைத்துக்கொண்டே வந்தால் பைத்தியக்காரன் முந்திக்கொண்டார். மண்ட்டோ மீது தமுஎச தற்போது தனிக்கவனம் செலுத்துகிறார்கள்.

நீங்களும் அவரை மொழிபெயர்க்கலாம். ஆனால் சிவராமன் கருத்துதான் எனக்கும். படைப்பினை சிதைவின்றி புரிந்து கொள்ள அவரது மொழியிலிருந்து மொழிபெயர்ப்பது சரியாயிருக்கும்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

 
At June 8, 2009 at 4:58 AM , Blogger Deepa said...

//தமுஎச-வின் 11வது மாநில மாநாட்டின்போது நம் பதிவுலக 'அண்ணன்' அப்துல்லா, இந்த நூலை ('நிழல்' பதிப்பகத்தில் வெளிவந்த அதே நூல்தான்) இலவசமாக சில நூறு காப்பிகள் அச்சிட்டு வந்திருந்தவர்களுக்கு கொடுத்தார் //

ஆஹா! அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

நன்றி வாசுதேவன் சார்!

எனக்கு உருது தெரியாது.
மேலும் நான் நூலாக வெளியிட நினைக்கவில்லையே. ஒரு பதிவாக வெளியிட்டு அறிமுகம் செய்யலாம் என்று தானே நினைத்தேன்.
அதற்குப் போய் இருவரும் மாறி மாறித் தாக்குகிறீர்களே!
இது நியாயமாங்ணா??? :-)

 
At June 8, 2009 at 5:04 AM , Blogger பைத்தியக்காரன் said...

//நண்பர்களுக்கு வாக்குக் கொடுத்த காரணத்தினால் ஒரு கதையாவது மொழியாக்கம் செய்யலாமென்று நினைக்கிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்!//

சரியா போச்சு :-) நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நண்பர்களில் நானும் ஒருவனில்லையா? :-(

அவசியம் தமிழாக்கம் செய்யுங்கள். அனைவரையும்போல் நானும் வாசிக்க ஆவலாக இருக்கிறேன். ஒரு தகவலுக்காக மட்டுமே அந்தக் குறிப்பை எழுதினேன். ஒருவேளை எங்காவது அந்தக் குறிப்பு உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.

மொழிபெயர்ப்பு என்பது பல மடங்கு உழைப்பை கோருவது. வாசிப்பில் இருக்கும் என்னால் அதை புரிந்துக் கொள்ள மட்டுமல்ல, உணரவும் முடியும். உங்களிடம் அந்த உழைப்பு அபரிதமாகவே இருக்கிறது. தொடர்ந்து மொழியாக்கம் செய்யுங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்.

அப்புறம், எனது இயற்பெயரைவிட, பைத்தியக்காரன் என்ற பெயரே எனக்கு பிடித்தமானது. காரணம், உண்மையிலேயே நான் பைத்தியக்காரன் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

 
At June 8, 2009 at 5:12 AM , Blogger Deepa said...

நன்றி பைத்தியக்காரன் அவர்களே!
:-)

(உங்கள் பெயர் சிவராமன் என்று வாசுதேவனின் பின்னூட்டத்தில் இருந்து அறிந்தேன். ஆனாலும் உங்கள் விருப்பத்தைக் கெடுக்க விரும்பவில்லை!)

நீங்கள் எந்த விதத்திலும் என்னைப் புண்படுத்தவில்லை. நான் முயற்சி செய்ய நினைத்ததன் காரணத்தைத் தெளிவு படுத்த நினைத்தேன். அவ்வளவு தான்.

நட்புடன்,
தீபா

 
At June 8, 2009 at 5:42 AM , Blogger நர்சிம் said...

நன்றி தீபா.நல்ல அறிமுகம்.

 
At June 8, 2009 at 6:01 AM , Blogger ஆ.முத்துராமலிங்கம் said...

நல்ல அறிமுகம் தந்தீர்கள்.
மொழி பெயர்த்து பதிவிடுங்கள்
படிக்கவுள்ளோம்.

 
At June 8, 2009 at 6:18 AM , Blogger Deepa said...

நன்றி அமித்து அம்மா!
நன்றி நர்சிம்!
நன்றி முத்துராமலிங்கம்!

 
At June 8, 2009 at 6:56 AM , Blogger மாதவராஜ் said...

ஆமாம், தீபா, சென்னையில் நடந்த எழுத்தாளர் சங்க மாநாட்டில் மாண்ட்டோவின் முழுத் தொகுப்பும் வெளியிடப்பட்டது. நான் உனக்குச் சொல்லவில்லையோ..

இருந்தாலும், உன் ஆர்வமும். ஈடுபாடும் முக்கியமானது.

பதிவில் பகிர்ந்திருக்கும் விஷயமும் முக்கியமானதுதான்.

நன்றி.

 
At June 8, 2009 at 7:50 AM , Blogger எம்.எம்.அப்துல்லா said...

dear deepa, kindly mail me your address. i will send the book to you at the earliest.

sorry 4 engligh :(

 
At June 8, 2009 at 8:31 AM , Blogger Deepa said...

அங்கிள்!

இல்லை, நீங்கள் சொன்னதாக ஞாபகம் இல்லை. பரவாயில்லை. அடுத்த முறை நானும் வந்து கலந்துகொள்கிறேன்.

அப்துல்லா அண்ணா!

மிக்க நன்றி. அனுப்பி வைக்கிறேன்.

 
At June 8, 2009 at 10:36 AM , Blogger Deepa said...

நன்றி வண்ணத்துபூச்சியார்!

நீங்கள் கமெண்ட் போட்ட சில நொடிகளில் மாடரேஷன் எடுத்து விட்டேன். இப்போது எதேச்சையாக மெயிலில் பார்த்தேன்.

 
At June 8, 2009 at 11:03 PM , Blogger பட்டாம்பூச்சி said...

அறிமுகத்திற்கு நன்றி தீபா.

 
At June 10, 2009 at 2:49 AM , Blogger தீஷு said...

எழுத்தாளரின் அறிமுகத்திற்கு நன்றி தீபா.. உங்களுடைய பதிவு ஒரு முறை படித்து அப்புறம் அட்ரெஸ் மறந்து விட்டேன். இப்பொழுது அம்மாக்களின் பதிவுகள் மூலம் கண்டுபிடித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள்!!!

 
At June 10, 2009 at 6:17 AM , Blogger Deepa said...

நன்றி பட்டாம்பூச்சி!

நன்றி தீ‌ஷூ!

 
At July 2, 2009 at 1:42 AM , Blogger Krishna Prabhu said...

'நிழல்' பதிப்பகம் வெளியீட்டில் மண்ட்டோவின் படைப்புக்களை பல வருடங்களுக்கு முன்பு படித்த ஞாபகம். அந்தப் பதிப்பகம் கே.கே நகரில் இருக்கிறது.

ஆனால் கதைகள் ஞாபகத்தில் இல்லை.

புத்தகத்தை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டு இருக்கும் போது யாரோ வாங்கிக் கொண்டு போனார்கள். திரும்பிவரவில்லை. மீண்டும் வாங்க வேண்டும்.

நல்ல பதிவு தீபா தொடருங்கள்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home