Thursday, June 25, 2009

ராஜாங்கம் முடிந்தது

டிஸ்க்லெய்மர்: இது சாதத் ஹாஸன் மாண்டோவின் இன்னொரு சிறுகதையின் தமிழாக்கம்.
*****************

ராஜாங்கம் முடிந்தது

ஃபோன் மணியடித்தது. மன்மோகன் எடுத்தான். “ஹலோ 44457”.

“ஸாரி, ராங் நம்பர்” - என்றது ஒரு பெண் குரல்.

ரிசீவரை வைத்து விட்டுப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைக் கையில் எடுத்தான் மன்மோகன்.
அதை ஏற்கனவே இருபது முறையாவது படித்திருப்பான். அப்படி ஒன்றும் விசேஷமில்லை அதில்.
அந்த அறையிலிருந்த ஒரே புத்தகம் அது தான். அதிலும் கடைசிப் பக்கங்களைக் காணோம்.

ஒரு வாரமாக இந்த அலுவலக அறையில் மன்மோகன் தனியாகத் தான் இருக்கிறான். வியாபார நிமித்தம் வெளியூர் சென்றிருந்த அவனது நண்பன் ஒருவனுக்குச் சொந்தமானது இந்த அறை.

தான் ஊரில் இல்லாத போது இம்மாநகரின் ஆயிரக்கணக்கான ப்ளாட்ஃபார்ம் வாசிகளில் ஒருவனான மன்மோகனை அறையில் இருந்து பார்த்துக் கொள்ளும்படி அழைத்திருந்தான்.

மன்மோகன் பெரும்பாலும் அறையிலேயே அடைந்து கிடந்தான். அவனுக்கு ஒரு வேலையும் கிடையாது. ஊதியத்துக்காகச் செய்யும் எல்லாவகை வேலைகளையும் அவன் வெறுத்தான். அவன் மட்டும் முயன்றிருந்தால் ஏதாவது ஒரு சினிமாக் கம்பெனியில் இயக்குநராக இருக்கலாம், முன்பு இருந்தமாதிரி. ஆனால் அவனுக்கு மீண்டும் அடிமையாகும் எண்ணம் இல்லை. அவன் அமைதியானவன்; இனிமையானவன்; யாருக்கும் தீங்கு எண்ணாதவன். அவனுக்கென்று சொந்தச் செலவுகள் ஒன்றும் பெரிதாக இல்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் காலையில் ஒரு கப் டீயும் இரண்டு ரொட்டிகளும். மதியம் கொஞ்சம் கூட்டுடன் இரண்டு ரொட்டிகளும் ஒரு பாக்கெட்
சிகரெட்டுகளும் தான். அதிர்ஷ்டவசமாக இவற்றை மனமுவந்து அளிக்க அவனுக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர்.

மன்மோகனுக்குக் குடும்பமோ உறவினரோ யாரும் கிடையாது. சமயத்தில் நாட்கணக்கில் கூடச் சாப்பாடு இல்லாமல் கிடப்பான். அவன் நண்பர்களுக்குக் கூட அவ்னைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், அவன் சிறுவனாக இருந்தபோதே வீட்டை விட்டு ஓடி வந்து பம்பாயின் நடைபாதைகளிலேயே வளர்ந்தவன் என்பது தான்.
அவன் வாழ்வில் இல்லாதது ஒன்றே ஒன்று தான் - பெண்கள்.

அவன் சொல்வதுண்டு, “ஒரு பெண் என்னைக் காதலித்தால் போதும். என் வாழ்வே மாறி விடும்.”
அவன் நண்பர்கள் உடனே அவனைக் கேலி செய்வர், “ அப்போ கூட நீ வேலை செய்ய மாட்டியே”
”அப்படி ஒன்று மட்டும் நிகழ்ந்தால் எப்படி உழைக்கிறேன் என்று பாருங்கள்”

“அப்போ நீ ஏன் யாரையாவது காதலிக்கக் கூடாது?”

“ஒரு ஆண் வலிந்து போய்த் தேடுவது எப்படிக் காதலாக இருக்க முடியும்? ஒரு பெண் அவளாக என்னை விரும்ப வேண்டும்”

மதியம் ஆகிவிட்டது. உணவு வேளையும் வந்தது. திடீரென்று தொலைபேசி மணியடித்தது.

“ஹலோ 44457”

”44457?” - ஒரு பெண் குரல்.

“ஆம், சரி தான்” என்றான் மன்மோகன்.

“யார் நீங்கள்” - அந்தக் குரல் கேட்டது.

“நான் மன்மோகன்”

எதிர் முனையில் பதிலில்லை.

“நீங்கள் யாரோட பேச விரும்பறீங்க” அவன் கேட்டான்.

“உங்களோட தான்” என்றது அந்தக் குரல்.

“என்னோடயா?”

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா”

“ஐயோ, அப்படி ஒண்ணும் இல்லை”

“உங்கள் பெயர் என்ன சொன்னீங்க, மதன் மோகனா?”

“இல்ல, மன்மோகன்”

“மன்மோகன்?”

மீண்டும் அமைதி.

“என்னோட பேச விரும்பறதாச் சொன்னீங்க” - அவன் சொன்னான்.

“ஆமாம்”

“அப்போ பேசுங்க”

“எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல. நீங்க ஏதாவது சொல்லுங்களேன்.”

“ரொம்ப நல்லது. நான் ஏற்கனவே என் பெயரைச் சொல்லிட்டேன். தற்காலிகமா இந்த அலுவலகம் தான் என் வீடு. வழக்கமா இரவில் நடைபாதையில தான் தூங்குவேன். ஆனா இந்த ஒரு வாரமா இந்தப் பெரிய ஆஃபிஸ் மேஜை மேல தூங்குறேன்.”

”நடைபாதையில கொசுக் கடிக்காம இருக்க என்ன பண்ணுவீங்க. கொசுவலை பயன்படுத்துவீங்களா?”

மன்மோகன் சிரித்தான். “இதுக்குப் பதில் சொல்லறதுக்கு முன்னே நான் ஒரு விஷயம் தெளிவு படுத்திடறேன். நான் பொய் சொல்றதில்ல. நான் வருஷக்கணக்கா ப்ளாட்ஃபார்ம் தான். இந்த
ஆஃபிஸ் இப்போ இருக்கறதாலே இங்கே பொழுதைப் போக்கறேன்.”

“எப்படி?”

“இதோ இங்க ஒரு புத்தகம் இருக்கு, கடைசில கொஞ்சம் பக்கங்கள் இல்லாம. ஆனா நான் இதை ஒரு இருபது தடவை படிச்சிட்டேன். என்னைக்காவது மீதிப் பக்கங்கள் கிடைக்கறப்போ
தெரிஞ்சிக்குவேன், அந்தக் காதலர்கள் ஒண்ணு சேர்ந்தாங்களா இல்லியான்னு.”

“ரொம்ப சுவாரசியமான ஆளாத் தெரியறீங்க” என்றது அந்தக் குரல்.

“சும்மா சொல்லாதீங்க”

“நீங்க என்ன பண்றீங்க?”

“பண்றேன்னா?”

“அதாவது என்ன தொழில் உங்களுக்கு?”

“தொழிலா? ஒண்ணுமில்ல. வேலையே இல்லாதவனுக்கு என்ன தொழில் இருக்கப் போகுது?
ஆனா உங்க கேள்விக்குப் பதில் சொல்லணுமின்னா பகல் பூரா ஊரச் சுத்திட்டு ராத்திரி தூங்கறது தான் என் தொழில்.”

“உங்க வாழ்க்கை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”

“இருங்க, இந்த ஒரு கேள்வியை நான் என்னையே கேட்டுக்கிட்டதில்ல. இப்ப் நீங்க கேட்டதால என் கிட்ட நானே முதல் தடவையா கேட்கறேன். என் வாழ்க்கை எனக்குப் பிடிச்சிருக்கா?”

“என்ன பதில்?”

“ம். எந்தப் பதிலும் இல்லை. ஆனா இப்படியே ரொம்ப காலமா நான் வாழ்ந்துட்டு இருக்கறதால எனக்கு இது பிடிச்சிருக்குன்னு தான் எடுத்துக்கணும்”

தொடர்ந்து எதிர்முனையில் சிரிப்பொலி.

“நீங்க ரொம்ப அழகா சிரிக்கறீங்க”, என்றான் மன்மோகன்.

”நன்றி” - அந்தக் குரல் சற்றுக் கூச்சத்துடன் ஒலித்தது. அழைப்பும் துண்டிக்கப்பட்டது.

வெகு நேரம் ரிசீவரைக் கையிலேயே வைத்துக்கொண்டு தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டிருந்தான் மன்மோகன்.

அடுத்த நாள் காலை எட்டுமணிக்குத் தொலைபேசி மீண்டும் அடித்தது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவன் சப்தம் கேட்டு விழித்தான். கொட்டாவி விட்டவாறே ரிசீவரை எடுத்தான்.

”ஹலோ, 44457”

“குட் மார்னிங், மன்மோகன் சார்”

“குட் மார்னிங், ஓ! நீங்களா. குட் மார்னிங்”

“தூங்கிக்கிட்டு இருந்தீங்களா?”

“ஆமாம். ஒண்ணு தெரியுமா, நான் இங்க வந்து நல்லாக் கெட்டுப் போயிட்டேன். திரும்பவும் ப்ளாட்ஃபார்முக்குப் போனதும் அவஸ்தைப் படப்போறேன்.”

“ஏன்?”

“ஏன்னா நடைபாதையில தூங்கினா காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துடணும்”

அவள் சிரித்தாள்.

”நீங்க நேத்திக்கு திடுதிப்னு கட் பண்ணிட்டுப் போயிட்டீங்க”

“ஆமாம், நீங்க ஏன் நான் அழகா சிரிக்கறேன்னு சொன்னீங்க?”

“இது என்ன கேள்வி! அழகா இருக்கறதைப் பாராட்டக் கூடாதா என்ன?”

“கூடாது”

“இப்படி எல்லாம் சட்டதிட்டம் போடக்கூடாது. நான் எப்போவுமே சட்டதிட்டங்களை ஏத்துக்கறது கிடையாது. நீங்க சிரிச்சா, நீங்க அழகா சிரிக்கறீங்கன்னு நான் சொல்லத்தான் செய்வேன்.”

“அப்படின்னா நான் ஃபோனைக் கட் பண்ணப் போறேன்”

“உங்க இஷ்டம்”

“நான் சங்கடப்படறது பத்தி உங்களுக்குக் கவலை இல்லையா?”

“முதல்ல நான் சங்கடப்படறது பத்தி நான் கவலைப்படணும். அதாவது நீங்க சிரிக்கும் போது நீங்க அழகா சிரிக்கறீங்கன்னு நான் சொல்லாட்டி என் நல்ல ரசனைக்கு நான் துரோகம் செய்யறதா அர்த்தம்.“

சற்று நேரம் அமைதி. பின் திரும்பவும் அந்தக் குரல், “ ஸாரி, என் வேலைக்காரி கிட்ட பேசிட்டு இருந்தேன். அப்போ உங்க நல்ல ரசனை பத்தி சொல்லிட்டு இருந்தீங்க. உங்களுக்கு வேற என்ன ரசனை எல்லாம் உண்டு?”

“அப்படின்னா?”

“அதாவது, வேறு என்ன பொழுது போக்கு, விருப்பம்? சுருக்கமாச் சொல்லணும்னா உங்களுக்கு என்ன தான் செய்யப் பிடிக்கும்?”

மன்மோகன் சிரித்தான். “ஒண்ணும் பெரிசா இல்ல, ஆனா எனக்கு புகைப்படம் எடுக்கப் பிடிக்கும்; கொஞ்சம்”

“அது ரொம்ப நல்ல ஹாபியாச்சே”

“அது நல்லதா கெட்டதான்னு எல்லாம் நான் யோசிச்சதில்ல”

“உங்க கிட்ட நல்ல காமிரா இருக்கணுமே”

“என் கிட்ட காமிரால்லாம் இல்ல. எப்போவாவது தேவைப்பட்டா யார் கிட்டயாச்சும் இரவல் வாங்குவேன். ஆனா என்னைக்காவது பணம் சம்பாதிச்சா சொந்தமா வாங்கணும்னு நினைக்கிற காமிரா ஒண்ணு இருக்கு”

”என்ன காமிரா அது”

”எக்ஸாக்டா. அது ஒரு ரிஃப்லெக்ஸ் காமிரா. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

சற்று அமைதி. “நான் ஒண்ணு யோசிச்சிட்டு இருந்தேன்”

“என்ன?”

“நீங்க என் பேரும் கேக்கல, ஃபோன் நம்பரும் கேக்கலியே”

“எனக்குக் கேக்கணும்னு தோணலை”

“ஏனோ?”

“உங்க பெயர் என்னவா இருந்தா என்ன? உங்க கிட்ட என் நம்பர் இருக்கு. அது போதும். நான் உங்களுக்கு ஃபோன் பண்ணனும்னு உங்களுக்குத் தோணினா நிச்சயம் உங்க பெயரையும் நம்பரையும் எனக்குத் தருவீங்கன்னு நம்பறேன்.

“இல்ல, மாட்டேன்”

“உங்க இஷ்டம். நானா கேக்கப் போறதில்ல”

“நீங்க ரொம்ப வித்தியாசமானவர்”

”உண்மை தான்”

மீண்டும் சற்று அமைதி.

“திரும்பவும் யோசிச்சிட்டு இருந்தியா?” அவன் கேட்டான்.

“ஆமாம், ஆனா என்ன யோசிக்கிறதுன்னே எனக்குத் தெரியல.”

“அப்போ ஃபோனை வெச்சிடுங்களேன். அப்புறம் பேசலாம்”

“நீங்க ரொம்பத் திமிர் பிடிச்சவர், நான் வெக்கிறேன்.” அந்தக் குரலில் சற்றுக் கோபம் தெரிந்தது.

மன்மோகன் சிரித்துக் கொண்டே ரிசீவரை வைத்தான். முகத்தைக் கழுவி, உடையணிந்து கொண்டு வெளியில் புறப்படத் தயாரான போது மீண்டும் மணியடித்தது; எடுத்தான். “44457”

“மிஸ்டர் மன்மோகன்” என்றது அந்தக் குரல்.

“என்ன, சொல்லுங்கள்”

“வந்து, எனக்குக் கோபம் போயிடுச்சுன்னு சொல்ல வந்தேன்”

“ரொம்ப சந்தோஷம்”

“நான் சாப்பிட்டுட்டு இருக்கும் போது தோணிச்சு. உங்க கிட்ட கோபிச்சுக்கறது சரியில்லன்னு? நீங்க சாப்பிட்டிங்களா?”

“இல்லை, அதுக்குத்தான் கிளம்பிட்டிருந்தேன், நீங்க ஃபோன் பண்ணும் போது”

“ஓ, அப்படின்னா நான் உங்களைத் தடுக்கலை. போயிட்டு வாங்க”

“எனக்கொண்ணும் அவசரமில்ல. ஏன்னா என் கிட்ட சுத்தமா காசில்ல. அதனால் இன்னிக்குக் காலையில சாப்பாடு ஒண்ணும் கிடைக்காதுன்னு நினைக்கிறேன்.”

“ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? உங்களை நீங்களே வருத்திக்கறதுல என்ன சந்தோஷம்?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. நான் இப்படியே வாழ்ந்து பழகிட்டேன்”

“உங்களுக்கு நான் ஏதாவது பணம் அனுப்பட்டுமா?”

“நீங்க விரும்பினா. எனக்குப் படியளக்கற எத்தனையோ நல்ல நண்பர்களில் நீங்களும் சேர்ந்துடுவீங்க”

“அப்படின்னா நான் அனுப்பமாட்டேன்”

“உங்க இஷ்டம்”

“நான் ஃபோனை வைக்கிறேன்”

“சரி”

மன்மோகன் ஃபோனை வைத்துவிட்டு வெளியில் போனான். மாலை வெகு நேரம் கழித்து அறைக்குத் திரும்பினான். நாள் முழுதும் தன்னை அழைக்கும் அந்தக் குரலுக்குச் சொந்தமானவளைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். அவள் இளமையாகவும் படித்தவளாகவும் தோன்றினாள். அவள் தான் எவ்வளவு அழகாகச் சிரிக்கிறாள். இரவு பதினோரு மணிக்கு மீண்டும் தொலைபேசி ஒலித்தது.

“ஹலோ”

“மிஸ்டர் மன்மோகன்”

“நான் தான் பேசறேன்”

“நான் நாள் பூரா உங்களுக்குப் ஃபோன் பண்ணிட்டு இருந்தேன். எங்கே இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா?”

“எனக்கு வேலைன்னு ஒண்ணும் இல்லாட்டியும் நான் செய்ய விரும்பற காரியங்கள் சிலது இருக்கு”

“என்னது அது?”

“ஊர் சுத்தறது”

“எப்போ திரும்பி வந்தீங்க?”

“ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி”

“நான் ஃபோன் பண்ணும் போது என்ன பண்ணிட்டிருந்தீங்க”

“மேஜை மேல படுத்து நீ எப்படி இருப்பேன்னு கற்பனை பண்ணிட்டிருந்தேன். ஆனா உன் குரலுக்கு மேல எனக்குக் கற்பனைக்கு என்ன இருக்கு?”

“கற்பனை பண்ண முடிஞ்சுதா?”

“இல்ல”

“முயற்சி பண்ணாதீங்க. ஏன்னா நான் ரொம்ப அவலட்சணமா இருப்பேன்.”

“அப்படின்னா தயவு செய்து ஃபோனை வெச்சிடு. எனக்கு அவலட்சணங்கள் பிடிக்காது”

“அப்படியா சங்கதி. நான் ரொம்ப அழகு, போதுமா. நீங்க வெறுப்பை வளர்த்துக்கறதை நான் விரும்பல.”

வெகு நேரம் இருவரும் பேசவில்லை. பின்பு மன்மோகன் கேட்டான். “என்ன மறுபடியும் யோசிச்சிட்டு இருந்தியா?”

“இல்ல, உங்களை ஒண்ணு கேட்க இருந்தேன்”

“நல்லா யோசனை பண்ணிட்டுக் கேள்”

“நான் உங்களுக்காகப் பாடவா?”

“ஓ!”

”சரி, இருங்க!”

தொண்டையைச் செருமிக் கொண்டு மிகவும் மெல்லிய மிருதுவான குரலில் அவனுக்காக ஒரு பாட்டுப் பாடினாள் அவள்.

“ரொம்ப அழகா இருந்தது”

“நன்றி” - சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

இரவெல்லாம் அவள் குரலைப் பற்றியே கனவு கண்டான் அவன். வழக்கத்தை விட முன்னதாக எழுந்து அவளது அழைப்புக்காகக் காத்திருந்தான். ஆனால் அவள் அழைக்கவில்லை.
பொறுமையிழந்து அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். மேஜை மீது படுத்து இருபது முறை படித்து முடித்த அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். படித்து முடித்தான். நாள் முழுதும் கழிந்தது. மாலை சுமார் ஏழு மணிக்குத் தொலைபேசி அழைத்தது. ஓடிச் சென்று எடுத்தான்.

“யாரது”

”நான் தான்”

“எங்கே போயிருந்தே நாள் பூரா” - வெடுக்கென்று கேட்டான்.

“ஏன்?” அந்தக் குரல் நடுங்கியது.

“நான் காத்துக்கிட்டே இருந்தேன். கையில காசிருந்தும் நான் இன்னிக்கு பூரா சாப்பிடப் போகல.”

”நான் எனக்கு எப்போ தோணுதோ அப்போ தானே ஃபோன் பண்ணுவேன். நீங்க..”

மன்மோகன் அவசரமாக மறித்தான். “இங்க பாரு, ஒண்ணு இந்த வேலையை இத்தோட நிறுத்திக்கோ, இல்ல எப்போ ஃபோன் பண்ணுவேன்னு எனக்குச் சொல்லு. என்னால இப்படிக் காத்துக் கிடக்க முடியாது”

“இன்னிக்கு நடந்ததுக்கு மன்னிச்சுக்கோங்க. நாளையிலிருந்து காலைலயும் சாய்ந்திரமும் தவறாம ஃபோன் பண்றேன்.”

“ரொம்ப நல்லது”

“நான் நினைக்கவே இல்ல, நீங்க இப்படி...”

“என்னால் எதுக்கும் காத்திருக்க முடியாது. அப்படி முடியாம போகும் போது என்னை நானே தண்டிச்சுக்கறேன்.”

”எப்படி?”

”நீ ஃபோன் பண்ணல. நான் வெளிய போயிருக்கணும்; ஆனா நான் போகல. “

“நான் வேணும்னே தான் ஃபோன் பண்ணாம இருந்தேன்”

“ஏன்?”

“நீங்க என்னை மிஸ் பண்றீங்களான்னு பார்க்கத் தான்”

“நீ ரொம்பக் குறும்புக் காரி. சரி இப்போ ஃபோனை வை. நான் போய் சாப்பிடணும்.”

“எப்போ திரும்பி வருவீங்க?”

“அரைமணி நேரத்துல.”

அரைமணி நேரம் கழித்து அவன் திரும்பினான். அவள் ஃபோன் செய்தாள். வெகு நேரம் இருவரும் பேசினார்கள். அவன் அவளை அதே பாடலை மீண்டும் பாடச் சொன்னான். அவளும் சிரித்துக் கொண்டே பாடினாள்.

இப்போது அவள் தவறாமல் காலையும் மாலையும் அவனை அழைக்க ஆரம்பித்தாள். சில நேரம் மணிக்கணக்காய்ப் பேசுவார்கள். ஆனால் இதுவரை மன்மோகன் அவள் பெயரையும் கேட்கவில்லை. அவள் நம்பரையும் அறிந்துகொள்ளவில்லை. ஆரம்பத்தில் அவளது முகத்தைக் கற்பனை செய்ய முயன்று தோற்றுப் போனானே. இப்போது அது கூட அவனுக்குத் தேவைப்படவில்லை. அவள் குரல் தான் அவனுக்கு எல்லாமே. அவளது முகம், ஆன்மா, உடல் அனைத்தும். ஒரு நாள் அவள் கேட்டாள், “மோகன் என் பெயரைக் கூட நீ கேட்கலியே ஏன்?”

“ஏன்னா என்னைப் பொறுத்தவரைக்கும் உன் குரல் தான் உன் பெயர்”

இன்னொரு நாள் கேட்டாள், “மோகன், நீ யாரையாவது காதலிச்சிருக்கியா?”

“இல்லை”

“ஏன்?”

அவன் சோகமானான். “இதற்குப் பதில் சொல்றதுக்கு நான் என் வாழ்க்கையின் குப்பைகளை எல்லாம் கிளற வேண்டி இருக்கும். கடைசியில் ஒண்ணுமே மிஞ்சாம போனால் எனக்கு ரொம்பக் வருத்தமா இருக்கும்”

“அப்படின்னா வேண்டாம், விட்டுடு.”

ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரு நாள் மோகனின் நண்பனிடமிருந்து கடிதம் வந்தது. போன வேலை முடிந்ததாகவும் அடுத்த வாரம் ஊர் திரும்புவதாகவும் எழுதி இருந்தான். அன்று மாலை அவள் ஃபோன் செய்த போது அவன் சொன்னான், “என் ராஜாங்கம் முடியப் போகிறது.”

“ஏன்?”

”என் நண்பன் திரும்பி வரப் போறான்”

“உனக்கு வேற நண்பர்கள் இல்லையா? அவங்க கிட்ட ஃபோன் இருக்குமே”

“உண்மை தான். ஆனால் அவங்க நம்பரெல்லாம் நான் உனக்குத் தர மாட்டேன்”

“ஏன்?”

“வேறு யாரும் உன் குரலைக் கேட்கறதை நான் விரும்பலை”

“ஏன்”

“நான் ரொம்பப் பொறாமைக்காரன்னு வெச்சிக்கோயேன்”

“என்ன செய்றது சொல்லு?”

“நீயே சொல்லு”

“உன் ராஜாங்கம் முடியற நாளன்னிக்கு நான் என்னோட ஃபோன் நம்பரை உனக்குத் தருவேன்”

அவனுள் கவிந்திருந்த கவலை சட்டென்று மறைந்தது. அவன் மீண்டும் அவளைக் கற்பனையில்
காண முயன்றான்; ஆனால் முடியவில்லை. அவள் குரல் மட்டுமே ஒலித்தது. இன்னும் சில
நாட்களுக்குப் பின் அவளை நேரிலேயே காணலாம் என்று நம்பிக்கை கொண்டான். அந்தக் கணத்தின் மகத்துவத்தை அவனால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை.

மறு நாள் அவள் அழைத்த போது அவன் சொன்னான், “நான் உன்னைக் காண வேண்டும் என்று ரொம்ப ஆவலாக இருக்கிறேன்”

“ஏன்?”

“என் ராஜாங்கம் முடியற அன்னிக்கு உன் நம்பரைத் தர்றதாச் சொன்னியே”

”ஆமாம்”

“அப்படினா, நீ இருக்கிற இடத்தையும் எனக்குச் சொல்லுவே இல்ல? எனக்கு உன்னைப் பார்க்கணும்”

“நீ எப்போ விரும்பினாலும் என்னைப் பார்க்கலாம். இன்னிக்கே கூட”

“இல்லை, இன்னிக்கு வேண்டாம். நான் நல்லா உடுத்திட்டிருக்கும் போது உன்னைச் சந்திக்க விரும்புகிறேன். என் நண்பன் ஒருத்தன் கிட்ட நல்ல டிரெஸ் கேட்டிருக்கிறேன்.”

“நீ ஒரு குழந்தை மாதிரி இருக்கே. நாம சந்திக்கும் போது உனக்கு நான் ஒரு பரிசு தருவேன்.”

“உன்னைச் சந்திக்கிறதை விட உலகத்துல வேறு என்ன பரிசு இருக்க முடியும் எனக்கு?”

“நான் உனக்காக ஒரு எக்ஸாக்டா காமிரா வாங்கி வெச்சிருக்கேன்!”

“ஓ!”

“ஆனால் ஒன்று. நீ என்னைப் படமெடுக்கணும்!”

“அது உன்னைப் பார்த்த பிறகு நான் முடிவு செய்றேன்!”

“இன்னும் இரண்டு நாள் நான் உனக்கு ஃபோன் பண்ண மாட்டேன்”

“ஏன்?”

“நான் என் குடும்பத்தோட வெளியூர் போறேன். இரண்டே நாள் தான்.”

மன்மோகன் அன்று அறையை விட்டு வெளியில் செல்லவில்லை. மறுநாள் காலை காய்ச்சல்
வந்தது போல் உணர்ந்தான். முதலில் அவளுடன் பேசாததனால் வந்த உளச் சோர்வு
என்றெண்ணினான். மதியத்துக்குள் உடல் அனலாகக் காயத் தொடங்கியது. அவன் கண்கள்
தீப்பற்றியது போல் எரிந்தன. மேஜை மீது கவிழ்ந்து படுத்தான். தாகமாய் எடுத்தது. நாளெல்லாம்
தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். நெஞ்சின் மீது என்னவோ பாரமாக அழுத்தியது.
அடுத்தநாள் ஒரேயடியாகச் சோர்வடைந்தான். அவனால் மூச்சு விட இயலவில்லை. நெஞ்சு மிகவும் வலித்தது.

ஜுர வேகத்தில் அவனுக்கு நினைவு தப்பிப் போனது. ஃபோனை எடுத்துப் பேச ஆரம்பித்தான்.
அவள் குரலைக் கேட்டுக் கொண்டே இருந்தான். மாலை ஆகும் போது அவனது உடல் மேலும் மோசமடைந்தது. அவன் மண்டைக்குள் ஆயிரமாயிரம் குரல்களும் ஆயிரமாயிரம் டெலிஃபோன் மணிகளும் ஒலித்த வண்ணம் இருந்தன. மூச்சிறைத்தது.

மெய்யாகவே ஃபோன் அடித்தபோது அவனுக்குக் கேட்கவில்லை. வெகு நேரம் மணியடித்துக் கொண்டிருந்தது. திடீரென்று தெளிந்த மணிச்சத்தம் கேட்டது. தட்டுத் தடுமாறி எழுந்தான்.
நடுங்கும் கரங்களால் சுவரைப் பிடித்தபடி வந்து ரிசீவரை எடுத்தான். மரம் போல் காய்ந்திருந்த உதட்டை நாவால் ஈரப்படுத்த முயன்றான்.

“ஹலோ”

”ஹலோ மோகன்” - அவள் தான் பேசினாள்.

“நான் மோகன் தான்” அவன் குரல் நழுவியது

“எனக்கு நீ பேசறது கேட்கலை”

அவன் ஏதோ சொல்ல முயன்றான், ஆனால் அவன் குரல் தொண்டையிலேயே அடைத்துக் கொண்டது.

அவள் சொன்னாள், “நாங்க சீக்கிரமே திரும்பிட்டோம். ரொம்ப நேரமா உனக்கு ஃபோன் பண்ணிட்டிருக்கேன். எங்கே போயிருந்தே?”

மன்மோகனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது.

”ஏதாவது பிரச்னையா?” அவள் கேட்டாள்.

மிகவும் சிரமப்பட்டு அவன் சொன்னான், “என் ராஜாங்கம் இன்னிக்கு முடியப் போகுது.”

அவன் வாயிலிருந்து மெல்லிய கோடாக இரத்தம் வழிந்து அவன் தாடையைத் தாண்டி அவன் கழுத்தை நனைத்தது.

அவள் சொன்னாள் ”என் நம்பரைக் குறிச்சுக்கோ. 50314, 50314. காலையில என்னைக் கூப்பிடு. நான் இப்போ போகணும்” - சொல்லிவிட்டு அவள் அழைப்பைத் துண்டித்தாள்.

அவன் வாயிலிருந்து இரத்தம் கொப்புளிக்க, அந்தப் ஃபோனின் மீது அவன் தலை சரிந்தது.

25 comments:

கே.என்.சிவராமன் said...

எக்ஸலண்ட்...

சென்ற கதைக்கும், இந்தக் கதைக்குமான வித்தியாசம், மண்ட்டோவின் படைப்பு ஆளுமையை மட்டுமல்ல, உங்கள் தமிழாக்க உழைப்பின் உயரத்தையும் காட்டுகிறது.

தொடர்ந்து உங்களை பாதித்த பிற மொழி சிறுகதைகளை மொழிபெயர்த்து, எங்களுக்கு வாசிக்கத் தாருங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மாண்டோவின் இந்தக் கதையை ரொம்ப காலம் முன்பு வாசித்த நினைவிருக்கிறது (காலச்சுவடு சிறப்பிதழ்?).

இது நீங்கள் மொழிபெயர்த்ததா...? நன்றாகச் செய்திருக்கிறீர்கள்.

Ayyanar Viswanath said...

அருள் எழிலன் இந்த கதைய
ஒரு ராஜாங்கத்தின் முடிவில் னு குறும்படமாக்கி இருக்கார்.

மொழிபெயர்ப்பு குறித்து பிறகு விரிவா..

வாழ்த்துக்களும் அன்பும்..

Vidhoosh said...

ரொம்ப அற்புதமா மொழி பெயர்த்திருக்கீங்க தீபா. வாழ்த்துக்கள். :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப அருமையா மொழிபெயர்த்திருக்கீங்க.

உங்களின் மொழிபெயர்ப்பு முயற்சி + உழைப்பு தொடர விழைகிறேன்.

butterfly Surya said...

அருமை தீபா.

வாழ்த்துகள்.

rapp said...

super:):):)

Deepa said...

நன்றி பைத்தியக்காரன்!

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்!

நன்றி அய்யனார்!
அந்தக் குறும்படம் எங்கு கிடைக்கும். இணையத்தில் இருந்தால் லிங்க் கிடைக்குமா?

நன்றி vidhoosh!

நன்றி அமித்து அம்மா!

நன்றி Surya!

நன்றி rapp!

கே.என்.சிவராமன் said...

//அப்படியா? அந்தக் குறும்படம் எங்கு கிடைக்கும். //

ஆர்வமுள்ளவர்கள் அருள் எழிலனை தொடர்பு கொள்ளலாம். அவரது மொபைல் எண்: 9444139983 (அவரது சம்மந்தத்துடனேயே எண்ணை தருகிறேன்)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Dr.Rudhran said...

very good again.. i suggest you try more authors... and expecting a book by this year end. if you wish illustrating will be my pleasure

சந்தனமுல்லை said...

நல்லா இருக்கு தீபா! வாழ்த்துகள்..கலக்குங்க! :-)

Deepa said...

Dr. Rudhran!
That's a great honor you've conferred upon me. Thank you so much.

But believe me, my writings have a long way to go before that great moment comes, (if at all)!

Thank you Mullai!
:-)

Vidhya Chandrasekaran said...

நல்லா இருக்கு தீபா. வாழ்த்துகள்:)

Deepa said...

நன்றி வித்யா!
:-)

மாதவராஜ் said...

அடேயப்பா....!

யூனியன் ஆபிஸ்ல இன்னிக்கு தொடர்ந்து வேலை. இப்போதான் படிக்க முடிஞ்சுது. ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எல்லோரும் உன்னைப் பாராட்டுவதைப் பார்க்கும்போது பெருமையாகவும் இருக்கிறது.

இந்தக் கதையை நானும் படித்திருக்கிறேன். உன் மொழிபெயர்ப்பு அற்புதமாக இருக்கிறது. எழுத்தின் நுட்பங்கள் உனக்கு பிடிபட்டுவிட்டதாகவே நினைக்கிறேன். வளர்ந்துகொண்டே இருக்கிறாய். வாழ்த்துக்கள்.

Deepa said...

நன்றி அங்கிள்!
:-)

ராம்.CM said...

அருமை.தமிழாக்கத்துடன் அழகாக சொல்லியுள்ளீர்கள்.

sikkandar said...

arumaiyana kathai........... vithiyasamana mudivu....

vaazthukkal

சிராப்பள்ளி பாலா said...

சிதறிய சிதறல்கள் அனைத்தும் முத்துக்கள் – வாழ்த்துக்கள்.

Deepa said...

நன்றி ராம்!
நன்றி சிக்கந்தர்!
நன்றி பாலா!

Rajalakshmi Pakkirisamy said...

Good One :) :) :)

Ramki said...

Deeps!

Very good, friend! I second Dr. Rudran's suggestion.

Deepa said...

Ramki!
Thank you so much
:-)

யாத்ரா said...

மிக நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள், அருமை, கதை என்னை மிகவும் பாதித்து விட்டது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இந்த படைப்பின் ஜீவன், மொழிபெயர்ப்பில் இன்னும் மெருகேறியிருப்பதைப் போலிருக்கிறது, வழமையான மொழிபெயர்ப்புகளை இனங்கண்டு விடலாம்,ஆனால் இந்தக் கதையில் மொழிபெயர்ப்பை வாசிக்கிறேன் என்ற உணர்வே இல்லை. நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போன்றேயிருக்கிறது. நல்ல கதைகளை மொழிபெயர்த்து வாசிக்க கிடைக்கச் செய்வதற்கு மிக்க நன்றி.

Deepa said...

நன்றி யாத்ரா!