Tuesday, June 2, 2009

அங்கிள்!

(வேறு என்ன தலைப்பு வைப்பது?)

”இனிமே அங்க போனியோ காலை உடைச்சிடுவேன்.”

”அந்த அங்கிள் கைவலிக்க வலிக்க வா வா” ன்னு கூப்பிடறார்ப்பா. நான் அவங்க வீட்டுக்குப் போயிட்டு வரேன். அந்த நான்கு வயதுச் சிறுமி அப்பாவிடம் அழுது மன்றாடுகிறாள். வழக்கமாக அவள் அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று விளையாடுவதைத் தடுக்காத அவளது அப்பா இதற்கு மட்டும் மறுக்கிறார்.


அண்ணனுடன் அங்கு ஒரு தடவை சென்ற போது அந்த அங்கிளும் அவரது வீட்டில் ஒரு ஆண்ட்டியும் (அவரது அம்மாவோ அண்ணியோ) அவளைத் தூக்கிக் கொஞ்சியதும் ஆசையோடு விளையாடியதும் நினைவுக்கு வந்தது. அழகாகப் படம் வரையும் அந்த அங்கிள் அவளை உட்கார வைத்து அப்படியே அசலாகப் படம் கூட வரைந்து தந்தாரே. இவ்வளவு நல்ல அங்கிள் வீட்டுக்குப் போகக் கூடாது என்கிறாரே அப்பா.
அந்தச் சிறுமிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அவளுடைய அங்கிள் அவளது அக்காவைக் காதலிக்கிறார். அதனால் தான் அப்பா தன்னைத் தடுக்கிறார் என்பது.

பிறகு ஒரு நாள் அவர்கள் ஊரை விட்டே போய் விட்டார்கள். மாது அங்கிள் என்றொரு ”உயர்ந்த!” அன்பு உருவம் லேசான பசுமையோடு எப்போதாவது நினைவில் வரும்.

ஐந்தாறு வருடங்களுக்குப் பின்பு அக்காவுக்குக் கல்யாணம். வீட்டில் கொஞ்ச நாளாகவே அக்கா அழுது கொண்டிருக்கிறாள். அப்பா கோபமாக இருக்கிறார். அண்ணன் அக்காவை ஏதோ கேலி செய்து வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறான். மாது என்ற பெயரும் அடிபடுகிறது. அக்கா அந்த மாது அங்கிளைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள் என்பது புரிந்தது. ஆனால் அந்த அங்கிள் தான் எப்போதோ ஊரைவிட்டுப் போய் விட்டாரே. பின்பு எப்படி? எப்படியோ மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

ஒருவழியாகத் திருமண நாளும் வந்தது. அக்கா பூரிப்பும் சந்தோஷமுமாக இருந்தாள். எளிமையாக ஆனால் சிறப்பாக நடந்த அந்தத் திருமணத்தில் சிறுமி தீபா வெகு உற்சாகமாக இருந்தாள். சரி மூன்றாம் நபரைப் போல் பேசியது போதுமென்று நினைக்கிறேன், நான் தான் அந்தச் சிறுமி!

திருமணம் முடிந்த கையோடு அக்காவும் அங்கிளும் ஊருக்குக் கிளம்பி விட்டார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அந்த ஊரில் இன்னொரு அப்பா அம்மா அவளூக்காக எப்போதும் இருக்கிறார்கள்.

அக்கா விரும்பிய போதெல்லாம், அல்லது அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் போன போதெல்லாம், “உன் மனதுக்குத் திருப்தியேற்படும் வரை இருந்து எல்லோரையும் கவனித்து விட்டு வா” என்று அவர் அக்காவை வீட்டில் விட்டுச் சென்று விடுவார். அந்த் சமயத்திலெல்லாம் ஊரில் தனியாக இருந்து வெளியில் சாப்பிட்டுக் கொண்டு... அந்தச் சிரமங்களையெல்லாம் அவர் பெரிது படுத்தியதில்லை.

அக்காவும் பெரும்பாலான பெண்களைப் போல் பிறந்த வீட்டுக்கு வந்தால் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டு வீட்டில் இருப்பவர்களை வேலை வாங்கிக் கொண்டு.. மூச்! இழுத்துப் போட்டுக் கொண்டு அனைத்து வேலைகளையும் செய்வாள். அம்மா அப்பாவுக்குப் பணிவிடை செய்வது, வீட்டை ஒழுங்கு படுத்துவது, எனக்கு உணவூட்டுவது(!), அண்ணனுக்குக் (அவளுக்குத் தம்பி) தலைக்கு எண்ணெய் தேய்த்து விடுவது, ஏங்கிப் போயிருந்த என்னைப் பிரிந்திருந்த நாட்களுக்கெல்லாம் சேர்த்து வைத்துக் கொஞ்சிக் கெடுப்பது என்று!


அக்கா வரும் நாட்களை எதிர்பார்த்தே வருடத்தின் மிச்ச நாட்களை ஓட்டுவது இன்று வரை பழக்கமாகி விட்டது. திருமணமான பின்பும் கூட. அதாவது பேசும் போது கூட “அம்மு வந்துட்டுப் போனாளே அப்போ..” , ”அம்மு வரும் போது பார்த்துக்கலாம்” - இது எங்கள் வீட்டில் எல்லாருக்குமே பொருந்தும்.


என் திருமணம் நடக்க முக்கியக் காரணமாக இருந்தவர்கள் அக்காவும் அங்கிளும் தான். அப்பாவிடம் பேசி சம்மதிக்க வைத்ததும் ஜோவின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியதும் கூட அவர்கள் தான்.


என்னிடம் காட்டிய அதே வாஞ்சையை ஜோவிடம் காட்டுவதும் ஜோவும் ”அண்ணா அண்ணியிடம்” உண்மையான பாசத்தோடு இருப்பதும் என் வாழ்வின் வரம் என்றே நினைக்கிறேன். ஆனால் இவர்கள் சேர்ந்து கொண்டால் எங்கள் தலைகள் (அக்கா, நான்) உருள்வது நிச்சயம். எனவே எச்சரிக்கையாக இருப்போம்!
இதையெல்லாம் விட, எந்தச் சந்தர்ப்பத்திலும், நான் எப்படி நடந்துகொண்ட போதிலும் “நீ ரொம்ப நல்ல பெண் தெரியுமா” என்ற அவரது வார்த்தைகள் எனது மனசாட்சியை எப்போதும் உயிர்ப்பித்துக் கொண்டிருப்பவை. அதற்காக நான் என்றென்றும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

என் மீது வேறு எவருக்கும் இல்லாத நம்பிக்கையும் கனவுகளும் அங்கிளுக்கு உண்டு என்று சில சமயம் தோன்றும். (சற்று மிகையாகவே!) அதில் எவ்வளவு நான் நிறைவேற்றுவேன் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ரொம்பவும் ஏமாற்றிவிடக் கூடாதென்று நினைத்துக் கொள்கிறேன்.

என் அன்புக்குரிய அக்காவை ஒருமையில் குறிப்பிட்டிருப்பது பற்றி விளக்கம். என்னை விட பத்து வயதுக்கு மேல் மூத்தவளாயினும் அக்கா என்று அழைப்பது அவளுக்கு அறவே பிடிக்காது. அங்கிள் என்று நான் அவரை அழைப்பதும் அக்காவின் விருப்பம் தான். மேலும் சிறு வயதில் ஒரு தாய் போல் அரவணைத்தவள், இப்போது நெருங்கிய தோழியாக ஆகிவிட்டாள். அது தான் அவளது சிறப்பம்சம். அவளது இளமையின் ரகசியமும் அது தான்!

பி.கு1: அங்கிள் என்ற படைப்பாளியும் சிந்தனாவாதியும் தொடர்ந்து பிரமிப்பூட்டிக் கொண்டு வருவதால் அவரின் அந்த முகங்களைப் பற்றி எழுத என் எழுத்துக்களுக்கு வலிமை போதாது. மன்னிக்கவும்.

பி.கு 2: அடடா! இது அங்கிளைப் பற்றிய பதிவாயிற்றே. அக்கா தவிர்க்க முடியாமல் இடையில் வந்து விட்டாள். அவர்களைப் பிரிப்பது அழகல்ல. அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். அக்கா பற்றிய தனிப்பதிவு விரைவில்.

22 comments:

சந்தனமுல்லை said...

சுவாரசியம் தீபா! நமக்கு மிக நெருங்கியவர்கள் நம்மீது வைக்கும் நம்பிக்கையே நமது பலம்! கொடுத்து வைத்தவர் நீங்கள்! :-)

ப்ரியமுடன் வசந்த் said...

நன்னாயிருந்துச்சுங்கோ......

பட்டாம்பூச்சி said...

மிக எளிமையாக ஆனால் இயல்பாக,ஆழமாக உங்கள் உறவின் சுகத்தை புரிய வைத்து விட்டீர்கள்.
மிகவும் வேண்டியவர்கள் நம்முடைய முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாக அமைவதும்,நம் மீது நம்பிக்கை வைப்பதும் நமக்கு பெருமையும் உந்துதலும் தரக்கொடியது.
உங்களுக்கு அது வாய்த்திருப்பது மகிழ்ச்சி.

Dr.Rudhran said...

beautiful

விக்னேஷ்வரி said...

நல்ல பதிவு தீபா. அவர்கள் மீது உங்களுக்கிருக்கும் பாசம் தெரிகிறது. ஆனால், அக்காவின் பழைய காதலைப் பற்றி எழுதாமல் இருந்திருக்கலாமே.

விக்னேஷ்வரி said...

எனது முந்தைய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் தீபா. அனேகமாக அக்கா திருமணம் செய்தது அவர் காதலித்த அங்கிளைத் தான் என நினைக்கிறேன்.

SK said...

ஆரம்பமே ஊகிக்க முடிந்தது.. :)

மாதவராஜ் said...

தலைப்பைப் பார்த்ததும் ஆச்சரியமாகிப் போனது.
ம்ம்ம்..
அந்தக் குட்டிப்பெண்ணிடம் பேசியதிலிருந்து காலம் எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறது!
நினைவுகளை மீட்டி விட்ட பதிவு.
எங்கள் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய பெண்ணே... சந்தோஷம்.
அம்முவிடம் காண்பிக்க வேண்டும். சாயங்காலம் வரை காத்திருக்க வேண்டும்.

Vidhya Chandrasekaran said...

அழகான பந்தங்கள். இந்தப் பூரிப்பும் சந்தோஷமும் மேலும் பொங்கிப் பெருக வாழ்த்துகள்.

நர்சிம் said...

சரளமான நடையில் சொல்லி இருக்கீங்க தீபா. பின்குறிப்பில் சொன்ன அக்கா பதிவிற்கு வெயிட்டிங்.

அகநாழிகை said...

தீபா, அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.

தோழர் மாதவராஜ் கொடுத்து வைத்தவர் என்பதோடு, உங்கள் சகோதரியும் கொடுத்து வைத்தவர் என்பது தெரிகிறது.

மாதவராஜ் பெயரை குறிப்பிட்டிருக்கலாமே.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Deepa said...

நன்றி முல்லை!ஆம் நான் கொடுத்து வைத்தவள் தான்!

வாங்க் வசந்த்! கருத்துக்கு நன்றி

ரொம்ப நன்றி பட்டாம்பூச்சி!

Thank you Doctor! :-)

ஆம் விக்னேஷ்வரி! அச்சோ அது தெளிவாகப் புரியவில்லையா என் பதிவில்?? வருகைக்கு மிக்க நன்றி.

நன்றி SK! you are really sharp.

அங்கிள்! திட்டாமல் இருந்ததற்குக் கூடுதல் நன்றி!

ரொம்ப நன்றி வித்யா!

நன்றி நர்சிம். கூடிய சீக்கிரம் பதிவிடுகிறேன். உங்கள் அக்கா பதிவின் பாதிப்பு இன்னும் மனதில்!

ரொம்ப நன்றி வாசுதேவன் சார். சொல்லாமலே உங்களுக்குப் புரிந்து விட வில்லையா? அது தான் என் நோக்கமாக இருந்தது. சொல்லி இருக்க வேண்டுமோ என்று நினைக்க வைக்கிறீர்கள்! :-)

நசரேயன் said...

அருமை.. நல்ல நடை

Anonymous said...

நல்ல பதிவு

sakthi said...

கொடுத்து வைத்தவர்கள்....

கதையின் நடை அருமை

வாழ்த்துக்கள் தீபா

முரளிகண்ணன் said...

அருமையான பதிவு. சுவராசியமான வார்த்தைகள்

மதுமிதா said...

மென்மையான உணர்வைப் பதிவு செய்திருக்கிறீர்கள். அம்முவைப் பற்றி வாசிக்கையில் மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது தீபா.

நான் மதுமிதா என்ற பெயரில் எழுதுவதற்கு முன்பு காதம்பரிப்ரியா என்ற பெயரிலும் எழுதினேன் என்ற ரகசியத்தை இப்போது இங்கே எழுத நேர்ந்துவிட்டதே.

///அழகாகப் படம் வரையும் அந்த அங்கிள் அவளை உட்கார வைத்து அப்படியே அசலாகப் படம் கூட வரைந்து தந்தாரே.///

மாது அங்கிளுக்கு ஓவியமும் வரையத் தெரியுமா தீபா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கொடுத்து வைத்தவர் நீங்கள்.

வாழ்க வளமுடன்

தேவன் மாயம் said...

பிறகு ஒரு நாள் அவர்கள் ஊரை விட்டே போய் விட்டார்கள். மாது அங்கிள் என்றொரு ”உயர்ந்த!” அன்பு உருவம் லேசான பசுமையோடு எப்போதாவது நினைவில் வரும்.///

தெளிவாக மிக அழகாக எழுதியுள்ளீர்கள். சிறுகதைப்போட்டிக்கு எழுதுங்கள்.

Unknown said...

u have shown me the other (beautiful)side of the coin.superb.

ச.தமிழ்ச்செல்வன் said...

வாசிக்க முடியாமல் பல வரிகளை கண்களில் திரையிட்ட கண்ணீர் மறைத்தது.உறவுகள் பற்றி யார் மனம் நெகிழப் பேசினாலும் தாங்க முடியாத ஏதோ ஒரு உணர்வுக்குள் போய்விட நேர்கிறது

Deepa said...

நசரேயன்!
அனானி!
sakthi!
முரளிகண்ணன்!
மதுமிதா!
அமித்து அம்மா!
தேவன்மாயம்!
anto!
தமிழ்ச்செல்வன் சார்!

வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி!