என் பெற்றோருக்கு சொவியத் யூனியன் மீது அப்படியொரு பக்தி இருந்தது. வீட்டில் நிறைய பேசுவார்கள் அந்நாட்டைப் பற்றி. எப்பேர்ப்பட்ட புரட்சியின் விளைவு அது என்றும், குழந்தைகளுக்கும் உழைப்பளிகளுக்கும் பெண்களுக்கும் அது எப்படி ஒரு சுவர்க்க பூமியாக விளங்குகிறதென்றும், இந்தியாவுக்கு அது எவ்வளவு உதவிகளும் நேசக்கரஙளும் நீட்டி இருக்கிறதென்றும் இப்படி நிறைய. ஒலிம்பிக்ஸில் சோவியத் யூனியன் தங்கம் வென்றால் இந்தியாவே வென்றது போல் மகிழ்வோம்.
குழந்தைகளுக்கென பெரிய பெரிய எழுத்தில், அளவில் கலர் கலராகப் படம் போட்டு கதைப் புத்தகங்கள் வெளியிட்டது சோவியத் பதிப்பகங்கள் தாம். எங்கள் பள்ளி சின்ன பள்ளி. ஆண்டு விழா, விளையாட்டு விழா என்றால் இந்தப் புத்தகங்கள் தான் நிறய பரிசாகத் தருவார்கள். (விலையும் ரொம்பக் குறைவாக இருக்கும்)
இது போதாதென்று மிஷா என்றொரு குழந்தைகள் மாத இதழ் வந்து கொண்டு இருந்தது. ஆஹா! எவ்வளவு அழகிய வெண்ணெய் போன்ற காகிததில் முழுக்க முழுக்க வண்ணப் படங்களும் கதைகளும் துணுக்குகளும், படக்கதைகளும் நிறைந்த அருமையான இதழ அது. அப்படி ஒரு குழந்தைகள் இதழை நான் இன்று வரை பார்க்கவில்லை. (உங்கள் யாருக்கேனும் நினைவிருக்கிறதா மிஷாவை?)என் அம்மா ஓராண்டு முழுதும் வந்த இதழ்களைப் பைண்டு செய்து வைத்தார்கள். அதைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.
திடீரென்று ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த போது வீடு இடி விழுந்த மாதிரி இருந்தது. சோவியத் யூனியன் உடைந்தது என்ற செய்தி பரவி இருந்தது. அந்த வயதில் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் எல்லாம் புரியவில்லை என்றாலும் (இப்போ மட்டும் என்ன வாழுதாம்)ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. சோவியத் யூனியன் என்ற அமைப்பு இனி இல்லை. ரூபிளின் மதிப்பு இந்திய ரூபாயை விடக் குறைந்து விட்டது என்பதெல்லாம் சகிக்க முடியாத சோகமாக இருந்தது. என் கனவு தேசத்துக்கு என்னவாயிற்று?
இதில் என்னால் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று உண்டென்றால் சோவியத் யூனியன் மீது அளவு கடந்த நம்பிக்கையும் மதிப்புன் வைத்திருந்த சிலர் சிறிது நாட்களிலேயே அமெரிக்கா பக்கம் சாய்ந்து விட்டது தான். உயிர் நண்பன் நோய்வாய்ப்பட்டு இறந்ததும் "அவன் இறப்பான் என்று எனக்குமுன் கூட்டியே தெரியும் அந்த அல்பாயுசை மறந்து விட்டு இந்தப் பயில்வானோடு சினேகிதம் வைத்துக் கொள்" என்று கூறுவது போல் இருந்தது சிலரின் பேச்சு. அதைத் தான் என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
மிஷா என்ற அந்தக் குட்டிக் கரடி இன்னும் என் கனவுகளில் வருகிறது. என் மகளின் மகளுடன் விளையாட வருவேன் என்று சொல்லுகிறது. :-)